Rani Govindh | 04 Nov 2025
“உனக்கு இன்னுமாம்மா புரியல, இதெல்லாமே பக்கா ப்ளான், உன்ன அவமானபடுத்த ஒரு கூட்டம் போட்ட திட்டம் தான்
இதெல்லாம்”
இதை கேட்டதும் இளமதி அதிர்ச்சியாக அவரை நிமிர்ந்து
பார்த்தாள்.
“ஆமாம்மா, உன்ன பழிவாங்க எவனோ இவ்ளோ பெரிய வேலை பார்த்திருக்கான், அவன் திட்டத்துக்கு
எங்க ஸ்டேஷன்ல இருக்கவங்க கூட ஆடறாங்க,
அது தெரியாம நீ அவசரப்பட்டு அந்த ஆள் கூட போய் உன் வாழ்க்கைய தொலைச்சிட்டியே”
“என்ன சார் சொல்றீங்க, யாரோட, எத பத்தி சொல்றீங்க”
“அதான் உனக்கு உதவி செய்றேன்னு கூட்டிட்டு போனானே, அவனும் அவங்க ஆளு தான், மாடலுக்கு
நிக்கறதுக்குன்னு உன்ன கூட்டிட்டு போனது
எதுக்கு தெரியுமா, அத சொல்லவே
என் நாக்கு கூசுது”
“என்னன்னு சொல்லுங்க சார், எனக்கு பயத்துல மூச்சு கூட விட முடியல”
“நான் உண்மைய சொன்னா நீ என்ன ஆவயோன்னு பயமா இருக்கும்மா, இந்த உண்மைய சொல்ல
அப்போவே முயற்சி பண்ணேன், ஆனா நான்
வெளிய வரதுக்குள்ள நீ அந்த ஆள் கூட வண்டில ஏறி போய்ட்ட, என்னால எதுவும் பண்ண முடியல, ஆனா நீ போனதுக்கு பிறகு தான் இவங்களோட திட்டமே எனக்கு
முழுசா தெரிஞ்சது, இப்படி ஒரு
கொடுமைய ஒரு அப்பாவி பொண்ணுக்கு பண்றாங்களே, இது தெரிஞ்சும் என்னால ஒன்னும் பண்ண முடியலையேன்னு என்
மனசே ஒடிஞ்சி போய்டுச்சி,
இப்போதைக்கு இந்த உண்மைய உன்கிட்ட சொல்றது மட்டும் தான் என்னால பண்ண முடிஞ்சதும்மா, மனச திடபடுத்திகிட்டு
கேளு. உன்ன மாடலிங்க்கு நிக்க வைக்க கூட்டிட்டு போகலம்மா, உன்ன அணு அணுவா சித்திரவதை பண்ணரத அங்க இருந்து தான்
ஆரம்பிச்சிருக்கானுங்க, அதுக்கும்
மேல, அந்த
கோலத்துல உன்ன வீடியோ எடுத்து வச்சி அத காட்டியே உன்ன தினமும் சித்திரவதை பண்ண
போறாங்களாம், அதுக்கு மேல.. அதுக்கு மேல அவனுங்க பண்ண போறதெல்லாம் என் வாயால சொல்ல
முடியாது, ஆக மொத்தம்
உன்ன பணம் வாங்கிட்டு வர சொன்னதெல்லாம் சும்மா தான், அவங்க டார்கெட் உன் தங்கச்சி இல்ல, நீ தான்”
அவர் சொன்னதை எல்லாம் கேட்டதும் இளமதியின் மனதில் புயல்
வீச துவங்கியது. அந்த டார்ச் ஒளியில் அந்த கோலத்தில் தன்னை அவ்வளவு நேரம் நிற்க
வைத்தது இதற்காக தானா, அதை நினைக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
ஒருவன் பார்க்கவே கூசி போனவள் ஏட்டு சொன்னது போல் நடந்தால், அதை நினைக்கும் போதே
அவள் உடலெல்லாம் நெருப்பில் எரிவது போல் இருந்தது. அடுத்த நொடி அவள் ஒரு
முடிவுக்கு வந்து விட்டாள்.
கண்ணீரை துடைத்து கொண்டவள் “அவங்க டார்கெட் நான் தான
சார், அப்போ
இன்னைக்கே என் தங்கச்சிய விட்ருவாங்க தானே”
அவள் இப்படி கேட்டதும் ஏட்டுவிற்கே கண்கள் கலங்கியது.
அவரால் எதுவும் பேச முடியவில்லை. இந்நேரம் வீடியோ அவர்கள் கைக்கு போயிருக்கும், இதற்கு மேல் அவரால்
மட்டும் என்ன செய்ய முடியும்.
“யாராவது பெரிய ஆளுங்கள உனக்கு தெரியுமாம்மா, அப்படி யாராவது
தெரிஞ்சா அவங்க மூலமா பேசி பார்க்கலாம்”
அதை கேட்டு அவள் விரக்தியாக புன்னகைத்தாள்.
“இவ்ளோ தூரம் என்ன பழி வாங்க துடிக்கற அந்த பெரிய மனுஷன்
யாருன்னே எனக்கு தெரியலையே சார், எனக்கு வேற யார தெரிய போகுது, நீங்க இந்த உண்மைய சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார், இனி என் விதிப்படி
நடக்கட்டும், நான்
ஸ்டேஷனுக்கு போறேன்”
அவர் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவள் வேக நடை போட்டு
ஸ்டேஷனுக்கு சென்று விட்டாள். அந்நேரம் இன்ஸ்பெக்டரும் வந்து விட்டான். நேராக
ஸ்டேஷன் உள்ளே சென்றவள் எந்த உண்மையும் அறியாதவள் போல் அவன் முன்னால் போய்
நின்றாள். ஆனால் அவள் முகத்தில் அசட்டு தைரியம் இருந்தது.
“சொன்ன மாதிரி எட்டு லட்சத்தோட வந்த திமிருல நிக்கறயா? என்ன பண்றது, பாக்க லட்சணமா
இருக்கல்ல, அதான் நீ
போனதும் எவனோ தூக்கி கொடுத்திருக்கான்”
என்னவோ இந்த திட்டத்திற்கு பின்னால் தனக்கு எந்த
சம்மந்தமும் இல்லாதது போல் இன்ஸ்பெக்டர் பேசினான். இளமதி எந்த ரியாக்ஷனும்
இல்லாமல் நின்று கொண்டிருக்க “இந்த ஏட்டு எங்கயா போனான்” என்று கேட்டு கொண்டே
இன்ஸ்பெக்டர் கண்களால் ஸ்டேஷனை ஆராய்ந்து கொண்டிருக்க ஏட்டு ப்ளாஸ்கோடு உள்ளே
வந்தார்.
“யோவ் எங்கயா போன”
“சூடா டீ வாங்க போனேன் சார்”
“ஆமா இதெல்லாம் நல்லா பண்ணு, போய் லாக்கப்ப திறந்து அந்த பொண்ண கூட்டிட்டு வா”
“சரிங்க சார்”
ஏட்டு வெண்ணிலாவை அழைத்து வர அவளோ இளமதியை பார்த்ததும்
ஓடி வந்து கட்டி பிடித்து கொண்டாள்.
“அக்கா, அக்கா.. நான் எதுவும் பண்ணலக்கா” என்று தேம்பி தேம்பி அழுதாள்.
“ஏய், வாய மூடு, இங்க உன்ன
என்ன கொடுமையா படுத்தினோம், ஜாலியா தான
லாக்கப்குள்ள உட்கார்ந்திருந்த, எதுக்கு இப்படி அழுது ட்ராமா பண்ணிட்டு இருக்க, இதுக்கு மேல சத்தம் வந்தது அக்கா தங்கச்சி ரெண்டு
பேரையும் உள்ள வச்சிருவேன்”
இன்ஸ்பெக்டர் மிரட்டியதும் வெண்ணிலா பயத்தில் அழுகையை
அடக்கி கொண்டு அமைதியானாள்.
“என்ன அப்படியே நிக்கற, ஜீப்ல வந்து வீட்ல விடுவோம்னு நினைப்பா, கிளம்புங்க”
இன்ஸ்பெக்டர் கத்தியதும் ஜெர்க் ஆன இளமதி அவருக்கு
பின்னால் நின்று கொண்டிருந்த ஏட்டை பார்க்க அவர் கிளம்புங்க என்பதை போல் கண் ஜாடை
காட்டினார். இளமதி வெண்ணிலாவை அழைத்து கொண்டு ஸ்டேஷனில் இருந்து சோர்வாக வெளியே
வந்து கொண்டிருந்தாள். ஸ்டேஷன் வாசலில் ஆட்டோ டிரைவரும் நின்று கொண்டிருக்க, அவள் இன்னும் சில
அடிகள் நடந்தால் ஆட்டோவிற்கு போய் விடலாம், அந்த நிலையில் ஸ்டேஷன் உள்ளே இருந்து si ஓடி வந்தான்.
“நில்லுங்க, சார் உங்கள கூப்டறாரு”
இளமதி பயந்து போய் நிற்க “சைன் போடாம வந்துட்ட, அதுக்கு தான்
கூப்டறாரு, உன் தங்கச்சி கூட வேண்டாம், நீ மட்டும் வந்தா போதும்” என்று கூறவும் வெண்ணிலாவை ஆட்டோவில் உட்கார
சொல்லி விட்டு இளமதி siஐயோடு
வந்தாள். Si உள்ளே
சென்று விட அவன் பின்னால் வந்த இளமதியிடம் ஏட்டு “திரும்ப ஏன்மா வந்த, முதல்ல இங்க இருந்து
ஓடு” என்று மெல்லிய குரலில் கூறி விட்டு க்ராஸ் செய்து போனார். அவர் கூறியதை
வைத்தே எதோ தப்பாக இருக்கிறது என்று புரிந்து கொண்ட இளமதி ஸ்டேஷனில் இருந்து
வெளியே ஓட முயற்சி செய்ய அதை கவனித்த இன்ஸ்பெக்டர் ஓடி வந்து அவள் தலைமுடியை
பிடித்து தரதரவென உள்ளே இழுத்து கொண்டு போனான்.
“எங்கடி ஓடற, என்ன எனக்கே விளையாட்டு காட்டறயா, ஆமா நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா, ரெண்டு மணி நேரத்துல
எட்டு லட்சத்தோட வந்து நிக்கற, சொல்லுடி எவன்டி உனக்கு பணம் கொடுத்தது”
ஏட்டு சொன்னபடி இதெல்லாம் அவர்கள் திட்டம் தானே, பணம் கொடுத்ததே அவர்கள்
ஆள் தானே, எதற்காக
இப்படி கேட்டு கொண்டிருக்கிறான் என்று இளமதிக்கு ஒன்றும் புரியவில்லை.
“நீங்க என்ன கேக்கறீங்க எனக்கு ஒன்னும் புரியல சார்”
“என்னது புரியலையா, இப்போ புரியும்டீ” அவள் கன்னத்தில் ஒரு அறை விட அறை
விழுந்த வேகத்தில் இளமதி வலி தாங்க முடியாமல் டேபிளின் மீது இடித்து கொண்டு கீழே
விழுந்தாள், அதில் அவள்
நெற்றியில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது, அப்பொழுதும் விடாமல் திரும்ப இழுத்து இன்னொரு
அறை வைக்க அவளுக்கு தலையே சுற்றுவது போல் ஆனது.
“ஏண்டி, இந்நேரத்துக்கு எவனயோ மயக்கி எட்டு லட்சத்த வாங்கிட்டு வரேன்னா நீ
லேசுபட்டவளா இருக்க முடியாது, ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி அப்பாவி வேஷம் போடுறயா, ஸ்டேஷன்ல வச்சி காட்ற
விதத்துல காட்டினா தன்னால உண்மைய கக்குவ, யோவ் ஏட்டு இவள லாக்கப்ல போடு, கோமதிய உடனே வர சொல்லு
”
அதை கேட்டதும் ஏட்டு முகம் பதட்டமானது.
“கோமதியா, அவ பொம்பளையே இல்லையே, அவ வந்தா இந்த பொண்ண என்ன பாடு படுத்துவாளோ” என்று பதறி போனார்.
“சார், அது வந்து.. நான் வேணும்னா என்னனு கேட்டு சொல்றேன் சார், கோமதி வேண்டாம்”
“என்னையா, காத்து அந்த பக்கமா வீசுது, இவ உன்னையும் மயக்கிட்டாளா? அவ்ளோ பெரிய அழகியா இவ, என்ன திவா, எவளுக்கும் மயங்காத ஏட்டயே மயக்கிருக்கான்னா நாமளும்
ஒரு ட்ரையல் பார்த்துருவோமா?”
Si திவாகரை
பார்த்து கேட்ட இன்ஸ்பெக்டர் கேவலமாக
சிரிப்பு சிரித்தான், இளமதியோ
அவன் அடித்த அடியில் அறை மயக்கத்தில் அங்கு நடப்பது புரிந்தும் புரியாததுமாக
தடுமாறி கொண்டு நின்றாள்.
ஏட்டுவுக்கு அடுத்து என்ன பேசுவது என்றே தெரியவில்லை, அவளோடு தன்னை இணைத்து
பேசுவது அவர் மனதை ஊசியால் குத்துவது போல் வருத்தியது. இவர்களிடம் இருந்து இளமதியை
தன்னால் காப்பாற்ற முடியாது என்று மட்டும் அவருக்கு புரிந்தது. அவர் மௌனமாக
நின்றார்.
“யோவ் என்ன, நீ நிக்கறத பார்த்தா ட்ரையலுக்கு நானும் வரேன்னு சொல்லுவ போல, இந்த வயசுல உனக்கு
பொம்பள சோக்கு கேக்குதா, வேணும்னா
சொல்லு, எங்களுக்கு
அப்புறம் ஒரு சான்ஸ் தரோம், என்ன திவா
சொல்ற”
இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு திவாகரனோ தலையை சொறிந்தபடி
சிரித்தான். இதை எல்லாம் கேட்ட இளமதிக்கு பற்றி கொண்டு வந்தது, ஆனால் எதிர்த்து பேச
கூட அவளுக்கு தெம்பிருக்கவில்லை. அவள் கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் அனிச்சையாக
வந்து கொண்டிருந்தது. இதற்கு மேல் விட்டால் இவர்கள் இன்னும் மோசமாக நடந்து கொள்ள
தானே காரணம் ஆகி விடுவோம் என்று ஏட்டு அவளை கைத்தாங்கலாக லாக்கப்பிற்கு அழைத்து
போனார்.
இளமதிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றும்
புரியவில்லை, ஏற்கனவே
அவள் தன் மானத்தை இழந்த வேதனையில் உயிரை விட்டு விடும் முடிவுக்கு வந்து விட்டாள், வீட்டிற்கு போனதும்
அந்த முடிவை தான் செயலபடுத்த போகிறாள், ஆனால் அதற்கு கூட விடாமல், போனவளை திரும்பவும் அழைத்து வந்து எதற்கு இப்படி சித்திரவதை செய்கிறார்கள்
என்று அவளுக்கு புரியவில்லை.
அவளை லாக்கப்பிற்குள் போட்டு பூட்டிய ஏட்டு தன்னால் இனி உதவ
முடியாது என்பது போல பார்வை பார்த்து விட்டு சோகமாக சென்று விட இளமதி மனம் துடி
துடித்து போனது. அடுத்து அவளுக்கு அங்கு என்ன விபரீதம் வேண்டுமானாலும் நடக்கலாம், அதில் இருந்து அவள்
எப்படி தப்பிக்க போகிறாள்? யார் அவளை
காப்பாற்ற போகிறார்கள்.
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
No comments yet.