பாகம் -6
அர்ஜூன் வருவதை பார்த்த ஹர்ஷிதா பால்கனியில் அமர்ந்து இருந்தவள் எழுந்து கலங்கிய தன் கண்களைத் துடைத்துக் கொண்டே,
“வாங்க மாமா” என்றாள்.
“ஹர்ஷிதா அழறியா? என்னாச்சு இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையா?”
“அய்யோ மாமா, தப்பா நினைச்சுக்காதீங்க. யமுனா அத்தையும், ராமு மாமாவும் திட்டிட்டு போனதை நினைச்சு அழறேன்.
வேலன் மாமாவை சின்ன வயசுல இருந்தே பார்க்கிறேன். அவரை போய் நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது? எனக்கு வேலன் மாமாவை பிடிக்கும் அதுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அடுத்தவங்க மனசு எப்படி கஷ்டப் படும்ன்னு யோசிக்காமலேயே அவங்க சுயநலத்திற்காக எல்லாம் பேசிட்டு போயிடறாங்க” என்று சொல்லி கண் கலங்கினாள்.
அர்ஜூனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ரஞ்சனியை காதலிப்பதை பற்றி பேச வந்தவன் பேசாமலே நின்றான்.
அதற்க்குள் காஃபி கொண்டு வந்தனர் விஜயாவும் லக்ஷ்மியும்.
அதை குடித்து விட்டு கிளம்பினான் அர்ஜூன்.
“வரேன் அத்தை, வரேன் அத்தை. எதாவது ஹெல்ப் வேணும்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க. பை ஹர்ஷிதா” என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்.
“பை மாமா” என்று சொல்லி விட்டு தன் ஃபோனில் அர்ஜூன் நம்பரை அர்ஜூன் மாமா என்று ஸ்டோர் செய்தாள் இருபக்கமும் இரண்டு ஹார்ட் எமோஜிகளைப் போட்டு.
வெளியே வந்தவன் தன் தம்பி அவினாஷூக்கு கால் செய்தான்.
ஸ்விச்சிடு ஆஃப் என்று வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போனான். ஒரு முடிவுக்கு வந்தவன் தன் காதலி ரஞ்சனிக்கு கால் செய்தான்.
அவினாஷ் மாலை ஃபோனை ஆன் செய்தவுடன் அர்ஜூன் கால் செய்த மெஸேஜ் வந்தது. அவன் திரும்ப அழைத்தான் ஆனால் லைன் கிடைக்கவில்லை. இரவு டிரெயின் ஏறி சென்னைக்கு வந்துகொண்டிருந்தான் அவினாஷ்.
ஞாயிற்றுக்கிழமை காலை,
ராஜகோபால் வீட்டில் அலங்காரங்கள் பூ, தோரணங்கள் கட்டி மிக அழகாக இருந்தது. ஹர்ஷிதாவின் தோழியான கேத்தரின் மிக அழகாக அவளை அலங்கரித்து விட்டாள். பியூட்டிஷியன் கோர்ஸ் முடித்து விட்டு பார்ட் டைம் ஜாபாக பிரைடல் மேக்கப் செய்கிறாள் கேத்தரின்.
தங்கப் பதுமை போல அழகாக இருந்தாள் நம் ஹீரோயின் ஹர்ஷிதா.
அவினாஷ் தன் வீட்டிற்கு சென்றான். நிர்மலா அவனை பார்த்ததும்,
“சீக்கிரமா ரெடியாகி வாடா” என்றாள்.
“சரிம்மா நீங்க கவலைப் படாதீங்க ஐந்து நிமிஷத்துல நான் ரெடி ஆயிடுவேன். அதுசரி மாப்பிளை சார் எங்கே?”
“அவன் ரெடியாகி ஏதோ முக்கியமான வேலை இருக்கு, நான் நேரா மாமா வீட்டுக்கு வந்திடறேன்னு சொல்லிவிட்டு போயிருக்கான்”
“ஆனாலும் உங்க பையனோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை மா. பாவம் அந்த மாரியாத்தா”
“ஏய், நீ இனிமேலும் அப்படி எல்லாம் பேசின அவ்வளவு தான். மரியாதையா அண்ணின்னு கூப்பிடனும்”
“ஹூம் சரி சரி” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு பத்து நிமிடத்தில் ரெடியாகி வந்தான் அவினாஷ்.
“தாத்தா எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான் அவினாஷ்.
“இப்போ கொஞ்சம் பரவாயில்லை பா” என்றார் பாண்டியராஜன்.
அனைவரும் காரில் ஏறிக் கிளம்பினார்கள்.
“அம்மா எல்லாம் எடுத்துக்கிட்டீங்களா?”
“ஆமாம் நிர்மலா. எதுவும் மறக்கவில்லையே?” என்றார் சிவராமன்.
“நிச்சயப் புடவை, நகை, வரிசை பொருட்கள் முக்கியமானது எல்லாம் எடுத்து வச்சிட்டேங்க” என்றாள் நிர்மலா.
ராஜகோபால் வீட்டை அடைந்தனர்.
மிக பிரமாண்டமாக அலங்காரம் செய்து இருந்தனர்.
“நிச்சயதார்த்தமா இல்ல கல்யாணமா மா?” என்றான் அவினாஷ் நிர்மலாவின் காதருகில்.
“டேய், சும்மா இரு டா. ஒரே பொண்ணு அதனால கிராண்டா செய்யறாங்க” என்றாள் நிர்மலா.
உள்ளே சென்று அனைத்து வரிசை தட்டுகளையும் அடுக்கி வைத்தனர். 51 தட்டுகளில் சீர் வரிசை செய்தனர் சிவராமன் குடும்பத்தினர்.
“அம்மா என்னம்மா இது, இவ்வளவு தட்டு?”
“ஆமாம் டா, நாமும் நல்லா செய்வோம்ன்னு காட்டனும் இல்ல?”
“அப்போ மத்தவங்க பார்த்து பெருமை பேசத்தான் இதெல்லாம் செய்றீங்களா?”
“யெப்பா, கொஞ்ச நேரம் வாயை மூடிக்கொண்டு சும்மா இரு” என்றாள் நிர்மலா.
“இப்போ புரியுது அம்மா, அன்னைக்கு நீங்க ஏன் அப்பா உங்களுக்கு வாங்கி கொடுத்த கோல்டு செயினை ஹர்ஷிதாவுக்கு போட்டீங்கன்னு?”
“என்னடா சொல்ற?”
“ஆமாம், மருமகள் என்ற பெயரில் அவளை வீட்டுக்கு கூட்டி வரும்போது நீங்க போட்ட செயினும் வந்திடும், அது இல்லாம அத்தை வீட்டுல போடுற நகைகளும் வந்திடும். அதானே?”
“அடப்பாவி, விட்டா போலீஸ் ஸ்டேஷன் போயி வரதட்சணை கேட்கிறோம்னு சொல்லி நீயே கம்ப்ளெயிண்ட் கொடுத்திடுவ போல”
“எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் போகனும்? அப்பா கிட்ட சொன்னாலே போதாதா?”
“டேய், உன்னை” என்று சிரித்தக் கொண்டே அவனை அடிக்க வந்தாள் நிர்மலா.
அப்போது எதிரே வந்தார் வேணுகோபால்.
“எங்க அர்ஜூனை காணோம்?” என்று கேட்டார்.
“இப்போ வந்திடுவான் மச்சான். ரொம்ப முக்கியமான வேலை இருக்குன்னு ஆஃபீஸூக்கு போயிருக்கான். இங்கேயே ஸ்டிரெயிட்டா வந்திடுவான்”
“ஓ அப்படியா, சரி சரி” என்றார் வேணுகோபால்.
இருப்பினும் மனதிற்குள் ‘இன்னைக்கு லீவு நாள் தான?’ என்று நினைத்து கொண்டார்.
அப்போது அழகோவியமாய் ஹர்ஷிதா வந்து அந்த சேரில் அமர்ந்தாள். அப்போது அவள் முகத்தை பார்த்த அவினாஷ் ஒரு நிமிடம் கண் இமைக்க மறந்தான்.
‘ ஹர்ஷிதாவா இது? மாரியாத்தாவா இது?’ என்று நினைத்தவன் சுயநினைவுக்கு வந்து.
‘அச்சச்சோ இப்போ நம்ம அண்ணியாகப் போறா. ஸோ நோ டிஃப்ரெண்ட் ஃபீலிங்க்ஸ்’ என்று நினைத்து கொண்டான்.
பின்னர் அவளருகில் சென்று,
“ஹாய், என்னை நியாபகம் இருக்கா?” என்றான்.
“வாங்க, அதெப்படி மறப்பேன் உங்களை. என்னை பார்த்து பயந்து என் பக்கத்தில ஃபோட்டோவுக்கு கூட நிக்காம போனீங்களே அவினாஷ் மாமா. அன்னைக்கு நைட்டு எனக்கு தூக்கமே வரவில்லை. அப்புறம் என் ஃபேஸை கண்ணாடில பார்த்து நானே பயந்துட்டேன். அப்புறம் நீங்க பயந்தது தப்பே இல்லைன்னு தோணுச்சு”
“இல்ல அப்படி இல்ல. நான் யாரையும் அப்படி பார்த்தில்லையா அதான்”
ஹர்ஷிதா மாமா என்று கூப்பிட்டதும் ஏதோ போல இருந்தது அவினாஷூக்கு.
“பரவாயில்ல, நான் கோச்சிக்கல” என்று சொல்லி சிரித்தாள்.
சிரிக்கும் போது இன்னும் அழகாக இருந்தாள்.
“ஓகே பை” என்று சொல்லி விட்டு திரும்பியவனை.
“ஒரு நிமிஷம் அவினாஷ் மாமா” என்றாள்.
‘ மறுபடியும் மறுபடியும் மாமா என்று கூப்பிடுகிறாளே?’ என்று நினைத்து கொண்டான்.
திரும்பி நின்றான்.
“இப்போ என் கூட நின்று ஃபோட்டோ எடுத்துப்பீங்களா?”
“ஹாங், கண்டிப்பா” என்று சொல்லி விட்டு தன் ஃபோனை எடுத்து அவள் அருகே சென்று அவள் பக்கத்தில் நின்று ஒரு செல்ஃபி எடுத்தான்.
அங்கே இருந்த ஃபோட்டோகிராஃபர் அவர்கள் இருவரையும் சேர்த்து ஃபோட்டோ எடுத்தார்.
இரண்டாவது செல்ஃபி ஃபோட்டோவை எடுத்து கொண்டிருந்த அவினாஷ் கேமராவில் அவள் கண்கள் விரிந்ததை பார்த்து திரும்பி அவளைப் பார்த்தான்.
அவள் கண்கள் சொருகி மயங்கி கீழே விழப் போனவளை தன் ஃபோனை கீழே போட்டு விட்டு அவளைத் தாங்கிப் பிடித்தான்.
அவள் எதை பார்த்து அப்படி மயங்கி விழுந்தாள் என்று பார்த்த அவினாஷ் அதிர்ச்சியானான்.
எதிரே அர்ஜூன் மாலையும் கழுத்துமாக ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு எதிரே நின்றிருந்தான்.
அதைப் பார்த்த நிர்மலா தலையில் அடித்து கொண்டு அழுதாள்.
ராஜகோபால் வேணுகோபால் விஜயா மற்றும் லக்ஷ்மி அதிர்ச்சியாக நின்றனர்.
சிவராமன் அர்ஜூனின் சட்டை பிடித்து உளுக்கி
“என்ன காரியம் டா பண்ணிருக்க?” என்று சொல்லி அழுதார்.
“அப்பா, பிளீஸ் என்னை மன்னிச்சிடுங்க. நானும் இவளும் ரொம்ப வருஷமா லவ் பண்றோம். தீடீர்ன்னு நீங்க ஹர்ஷிதாவை கல்யாணம் பண்ணிக்க சொன்னதும் எனக்கு என்ன செய்வதுன்னு தெரியல”
“அடப்பாவி, உன்னோட விருப்பத்தை கேட்டுட்டு தான எல்லாம் பண்ணோம்”
“நான் எப்போ சம்மதம்ன்னு சொன்னேன்”
சிவராமன் நிர்மலாவை திரும்பி பார்க்க,
“அடேய் நீ வேண்டாம்ன்னு எப்போ டா சொன்ன?”
“அம்மா, நான் சரின்னு கூட சொல்லலியே?
தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை ன்னு அவரு பேரன் கல்யாணத்தை பார்க்கனும்னு சொல்லி நீங்களே முடிவு பண்ணிட்டீங்க”
“என்னடா, இப்படி எல்லாம் பேசற? எனக்கு தலையே சுற்றுது”
“அம்மா, அப்பா அப்புறம் இங்க இருக்கிறவங்க எல்லார் கிட்டேயும் சொல்றேன். விருப்பம் இல்லாம ஒரு பொண்ணு கூட வாழ முடியாது. நான் மன்னிப்பு கேட்கனும்ன்னா அது ஹர்ஷிதா கிட்ட மட்டும் தான்”
“நான் நேத்தே அவ கிட்ட சொல்லி இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திடலாம்ன்னு தான் வந்தேன். ஆனா அத்தை வீட்ல நடந்த வேற பிரச்சனையால என்னால சொல்ல முடியாம போச்சு”
மயக்கம் தெளிந்து கண்கள் கலங்க அமர்ந்து இருந்தவளின் முன்னே சென்று,
“ஸாரி ஹர்ஷிதா” என்றான்.
விஜயா மற்றும் வேணுகோபால் முன் சென்று நின்று,
“யாரு புரிஞ்சிக்கலைன்னாலும் நீங்க ரெண்டு பேரும் நல்லா புரிஞ்சிக்குவீங்க. இதே மாதிரி தான நீங்களும் உங்களோட நிச்சயத்தார்தம் அன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னீங்க?” என்றான்.
கண்களில் நீர் வழிய அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் விஜயா.
“வா போகலாம்” என்று ரஞ்சனி கையை பிடித்து கொண்டு கிளம்பினான் அர்ஜூன்.
“டேய், நில்லுடா” என்று கத்தினார் ராஜகோபால்.
திரும்பி பார்த்தான் அர்ஜூன்.
“அன்னைக்கு என் தம்பி பண்ணிட்டான்னு இன்னைக்கு நீ பழிவாங்கறீயா?”
“அச்சச்சோ மாமா, ஏன் இப்படி எல்லாம் தப்பா யோசிக்கறீங்க? அப்படி எல்லாம் இல்லை”
“மாமா கீமான்னு சொன்ன பல்லை தட்டி கைல கொடுத்திடுவேன். எந்த வகைல மாமா. அதான் எங்க பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்ட இல்ல. இதோட உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்குமான உறவு அறுந்து போச்சு. தயவு செஞ்சு எல்லாரும் கிளம்புங்க” என்று கைக்கூப்பி சொன்னார் ராஜகோபால்.
விஜயாவும் ஹர்ஷிதாவும் அழுதுகொண்டே இருந்தனர்.
அவினாஷூக்கு கண்களில் நீர் வழிந்தோடியது. தன் அண்ணன் அர்ஜூன் மேல் கோபம் வந்தது.
அனைவரும் வெளியே செல்லத் தயாராகினர்.
“எல்லா தட்டையும் எடுத்துகிட்டு போங்க” என்று கத்தினார் ராஜகோபால்.
சிவராமன் சொந்த பந்தங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு தட்டை எடுத்து கொண்டு நடந்தனர்.
தன் அம்மாவுடன் கைத் தாங்களாக நடந்த அவினாஷ்,
“அம்மா ஒரு நிமிஷம்” என்று சொல்லி திரும்பிச் சென்றான்.
ஹர்ஷிதா மயங்கி விழும் போது அவளை பிடிக்க தன் ஃபோனை கீழே போட்டான் அதை எடுக்க செல்கிறான் என்று நினைத்து நின்றுக் கொண்டிருந்தாள் நிர்மலா.
ஹர்ஷிதாவின் அருகில் சென்ற அவினாஷ்,
அனைவர் முன்னிலையிலும்.
“ஹர்ஷிதா, ஐ லவ் யூ. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?” என்றான்.
“மாமா” என்று அதிர்ச்சியாகி நின்றாள் ஹர்ஷிதா .
“ஒண்ணும் அவசரம் இல்லை. நீ மெதுவா யோசிச்சு சொல்லு. நான் உன்னை கருணைனால லவ் பண்றேன்னு சொல்லல. உன்னை உண்மையாவே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பை” என்று சொல்லி விட்டு தன் ஃபோனை எடுத்து கொண்டு கிளம்பினான்.
அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.
“இப்போ தான் ஒட்டும் இல்ல உறவும் இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். என்ன அண்ணும் தம்பியும் டிராமா பண்றீங்களா?”
“மாமா, உங்க பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன். ஆனா இப்போ இல்ல நான் வேலைல சேர்ந்து என் பொண்டாட்டியை பார்த்துக்கிற அளவுக்கு சம்பாதிச்ச உடனே வந்து பொண்ணு கேட்கிறேன்” என்றான் அவினாஷ்.
“இப்போ தான் மாமான்னு கூப்பிடாத ன்னு சொன்னேன்”
“அச்சோ மாமா, அண்ணன் உங்க பொண்ணு ஹர்ஷிதாவை வேண்டாம்ன்னு சொன்னான். அதனால நீங்க மாமான்னு கூப்பிடாத ன்னு சொன்னீங்க. ஆனா நான் தான் உங்க பொண்ணு வேணும்னு சொல்றேனே?” என்று சொன்னான் அவினாஷ்.
“டேய், இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின அவ்வளவு தான். போங்கடா வெளியே” என்று கத்தினார் ராஜகோபால்.
“அண்ணா பிளீஸ்” என்று சொல்லி அவரை சமாதானம் செய்ய நினைத்தார் வேணுகோபால்.
பிறகு சிவராமனிடம் வந்து கைக்கூப்பி,
“பிளீஸ் கிளம்புங்க” என்றார் வேணுகோபால்.
“ஸாரி மச்சான்” என்று சொல்லி விட்டு கண்கள் கலங்க தன் மனைவி நிர்மலாவின் கைகளை பிடித்து கொண்டு அவினாஷையும் பிடித்து கொண்டு வெளியே சென்றனர்.
அர்ஜூன் மற்றும் ரஞ்சனியும் அவர்களுடன் வெளியே சென்றனர்.
சொந்தக்காரர்கள் அனைவரும் கிளம்பினார்கள். சொந்தக்காரர்களில் ஒருவர் ராமுவுக்கு ஃபோன் செய்து நடந்ததை கூற ராமு சந்தோஷத்தில் இருந்தார். தன் மனைவி யமுனா மற்றும் வேலனை அழைத்து நடந்ததை கூற
யமுனாவால் சந்தோஷப் பட முடியவில்லை இருப்பினும் தன் மகனுக்கு ஒரு வாய்ப்பு கடவுள் தந்ததாக நினைத்து கொண்டாள்.
ஹர்ஷிதா ரூமிற்கு சென்று,
‘அர்ஜூனை நினைத்து அழுவதா? இல்லை அவினாஷை நினைத்து சந்தோஷப்படுவதா?’ என்ற சிந்தனையில் இருந்தாள்.
No comments yet.