பாகம்-10

Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | Share

பாகம் -10


ரூமுக்கு சென்றார் ராஜகோபால்.

பின்னால் சென்ற லக்ஷ்மி


“நில்லுங்க” என்றாள்.


“என்னடி, நீ என்ன கேட்கப்போற?”


“நம்ம ஹர்ஷிக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட உங்களுக்கு நாகரீகம் தெரியலையே?”


“ஏய், போதும் போயிடு. நானே கடுப்புல இருக்கேன்”


“என்னங்க கடுப்பு உங்களுக்கு? பையன் அப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தது அவங்களுக்கு மட்டும் அவமானம் இல்லையா?”


“அது அவங்க தலையெழுத்து. நம்ம ஹர்ஷிதாவையும் நம்ம குடும்பத்தையும் அசிங்க படுத்தி இருக்காங்க அவங்களை மன்னிக்க சொல்றியா?”


“அர்ஜூன் பண்ணின தப்புக்கு அவனோட அப்பா அம்மா என்ன பண்ணாங்க?”


“அவனை ஒழுங்கா வளர்கல இல்ல?

முன்னாடியே வீட்டுக்கு வந்து பேசாம, இப்படி நிச்சயம் அன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னானே?”


“அப்படியா? அவன் செஞ்சது தப்புன்னா உங்க தம்பி பண்ணினதும் தப்புதான். அர்ஜூனை வளர்த்த அவனோட அப்பா அம்மா தப்பானவங்கன்னா? உங்க தம்பியை வளர்த்த நீங்களும் தப்பானவர் தான்”


“என்னடி ஓவரா பேசிக்கிட்டே போற? எங்களை அவங்க கூட கம்பேர் பண்ணாதே”


“உண்மையை சொன்னால் இப்படி தான் கோவம் வரும். நிதானமாக நீங்களே யோசிச்சு பாருங்க. பெத்தவங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்காங்க. ஆனா நீங்க ஏன் இவ்வளவு கோபப்படறீங்க. உங்களை விட ஹர்ஷிதா மேல உரிமை உள்ளவங்க அவங்க தான். அதை ஞாபகத்தில வையுங்க” என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள் லக்ஷ்மி.


ஹர்ஷிதாவை சமாதானம் செய்து கொண்டு இருந்தாள் கேத்தரின்.


உள்ளே சென்ற லக்ஷ்மி கேத்தரினிடம்,


“அம்மாடி நீ காலேஜூக்கு கிளம்பு மா. உனக்கு டைம் ஆகப் போகுது” 


“இல்ல ஆன்டி அது ஒண்ணும் பிரச்சினை இல்லை. பரவாயில்லை”


“கேத்தரின் வெயிட் பண்ணு நானும் வரேன்” என்று சொல்லி தன் பேகை எடுத்தாள் ஹர்ஷிதா.


உள்ளே வந்த விஜயா ஹர்ஷிதாவிடம் சென்று


“ஹர்ஷி, சாரி டி”


“அம்மா, உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்க ஸாரி சொல்ல வேண்டிய அவசியமில்லை”


“என்ன இருந்தாலும் நான் உன்னை அடிச்சிருக்கக் கூடாது” என்றாள் விஜயா.


“ஆமாம் விஜயா. நீ அடித்திருக்க்கூடாது. ஹர்ஷி மேல எந்த தப்பும் இல்லை”


“இல்ல பெரியம்மா, நான் பண்ணினது தப்புதான். பெரியப்பா எந்த அளவுக்கு ஹர்ட்டா ஆயிருந்தாருன்னா. எப்பவுமே சிரித்த முகத்தோடு இருப்பவருக்கு, எதிரியை கூட வரவேற்கும் குணம் கொண்டவருக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கும் சொல்லுங்க? அந்த கோபம் அதிகமா ஆகி மறுபடியும் உறவுகளுக்குள் விரிசல் வரக்கூடாதுன்னு தான் பெரியவங்க நீங்க எல்லாரும் இருக்கும் போது நான் பேசினேன். சின்ன பொண்ணு நான் பேசினா அதனால அவங்க மேல இருந்த கோபம் என் மேல திரும்பிடும். இதனால பிரச்சினை பெரிசா ஆகாதுன்னு தோணுச்சு”


“அம்மாடி ஹர்ஷிதா, எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கிற? என் கண்ணு” என்று அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள் லக்ஷ்மி.


விஜயாவிற்கு ‘தன் மகள் எப்படி யோசித்திருக்கிறாள்?’ என்று நினைத்து பெருமை கொண்டாள். அவளும் ஹர்ஷிதாவை கட்டி அணைத்து அவளுடைய நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.


“சரி சரி, ரெண்டு பேரும் விடுங்க. எனக்கு காலேஜூக்கு டைம் ஆயிடிச்சு” என்று சொல்லி விட்டு தன் புத்தகங்களை எடுத்து வைத்து கொண்டு கிளம்பினாள்.


“அப்புறம் அம்மா பெரியம்மா, சொல்ல மறந்திட்டேன். நேத்து அவினாஷ் மாமா கிட்ட பேசிட்டேன்”


“ஆமாம் டி, நானே உன்னை கேட்கனும்ன்னு நினைச்சேன். நேத்து நீங்க வரவே லேட் ஆயிடுச்சு. அப்புறம் இன்னைக்கு காலைல இப்படி ஆயிடிச்சு” என்றாள் விஜயா.


“சரி சரி அதை விடு விஜயா. என்ன சொன்னான் அவினாஷ். நீ என்ன சொன்ன?” என்றாள் லக்ஷ்மி.


“அம்மா பெரியம்மா நல்லா கேட்டுக்கோங்க. நானும் அவினாஷ் மாமாவும் லவ் பண்றோம். உங்க எல்லாரோட சம்மதத்தோடு தான் எங்க கல்யாணம் நடக்கும். பை” என்று சொல்லி விட்டு கேத்தரினுடன் கிளம்பி காலேஜ் சென்றாள் ஹர்ஷிதா.


சென்ற அவளையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்தனர் விஜயா மற்றும் லக்ஷ்மி.


**************


வீட்டுக்கு சென்ற பிறகும் அழுதுகொண்டே இருந்தாள் நிர்மலா.


அவளருகில் அமர்ந்த சிவராமன். அவள் தோளை தொட்டு,


“நிர்மலா, நீ அழறதால நம்ம பட்ட அவமானம் சரியாக போறதில்லை”


“ஏங்க நம்ம பசங்க ஏன் இப்படி செய்தாங்க” என்று சொல்லி அழுதாள்.


“முடிஞ்சதை பேசி எந்த பலனும் இல்லை”


“மனசு கேட்கலைங்க, பாவம் அந்த பொண்ணு ஹர்ஷிதா நமக்கு சப்போர்ட் பண்ணி பேசி, திட்டு அடி வாங்கினா”


“ஹூம், கொஞ்ச நாள்ல சரியாயிடும். நீ கவலைப்படாதே. நான் கிளம்பவா டியூட்டிக்கு டைம் ஆகுது. ஹாஸ்பிடலுக்கு போய் அப்பாவை பார்த்துட்டு அப்படியே கிளம்பறேன்” என்றார் சிவராமன்.


“சரிங்க ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு.


“கோமதி அக்கா” என்று நிர்மலா கூப்பிட்டாள்.


“சொல்லுமா” என்றார் அவள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி.


“அக்கா, சமையல் முடிச்சிட்டீங்கன்னா சுந்தரம் அண்ணா கிட்ட கொடுத்து ஹாஸ்பிடல்ல மாமாவுக்கு கொடுத்து விட்டு வரச் சொல்லுங்க. இவரு ஹாஸ்பிட்டல் போறாரு. அப்படியே சுந்தரம் அண்ணாவும் போய் இறங்கிப்பாரு இல்ல?”


“சரிம்மா ரெடியா தான் இருக்கு” என்று டிபன் பாக்ஸில் போட்டு கூடையில் வைத்து எடுத்து வந்தாள் கோமதி.


“சுந்தரம் அண்ணா” என்றாள் நிர்மலா.


“சொல்லுங்க மா”


“அண்ணா இந்த சாப்பாட்டை மாமாவுக்கு கொடுத்து விட்டு அவர் சாப்பிட்ட அப்புறம் எடுத்துக்கிட்டு வாங்க. இவர் கூட போயிட்டு வரும் போது ஆட்டோவில் வந்திடுங்க. மாமா கிட்ட நான் சாயந்திரம் வந்து பார்க்கிறேன்னு சொல்லுங்க” என்றாள். 


அவர் கையில் இருநூறு ரூபாய் நோட்டை கொடுத்தாள்.


“சரிங்க மா” என்று சொல்லி கிளம்பினார் வேலையாள் சுந்தரம்.


“அண்ணா, எதாவது காஃபி டீ குடிச்சிட்டு வாங்க” என்றாள்.


“சரிம்மா” என்று சொல்லி விட்டு சிவராமனுடன் பைக்கில் ஏறி கிளம்பினார் சுந்தரம்.


அவர்கள் சென்றதும் உள்ளே வந்தாள் நிர்மலா. அவளுடைய ஃபோன் அடித்தது.


ஃபோனை எடுத்தாள். 


“அம்மா”


“அவினாஷ்”


“அம்மா நீங்க கூட என் மேல கோபமா இருக்கீங்களா?”


“என்னடா நீங்க ரெண்டு பேரும் இப்படி பண்ணிட்டீங்களே?”


“அம்மா அதை விடுங்க. நீங்களும் அதே சொல்லாதீங்க. நான் உங்க கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்னு உங்களுக்கே தெரியும் இல்ல” என்று சொல்லி விட்டு முன்னாள் இரவு நடந்த மொத்தத்தையும் கூறினான்.


“என்னடா சொல்ற? ஹர்ஷிதாவும் உன்னை லவ் பண்றாளா? ஒரே நாள்ல எப்படி டா?”


“அம்மா, லவ் வர ஒரு நொடி போதும்”


“யப்பா, சினிமா டயலாக் எல்லாம் என் கிட்ட சொல்லாத. சரி ஹர்ஷிதாவோட அப்பா ஒத்துக்கிட்டாலும் அவ பெரியப்பா ஒத்துக்க மாட்டார் போல”


“ஏன் மா?”


“நாங்க உங்க ரெண்டு பேர் சார்பாக மன்னிப்பு கேட்க அத்தை வீட்டுக்கு போனோம்” என்று அங்கு நடந்தவற்றை கூறினாள் நிர்மலா.


‘தன் அப்பா அம்மாவுக்காக அடி வாங்கியிருக்கிறாளே?’ என்று ஒரு நிமிஷம் கண்கள் கலங்கினான் அவினாஷ்.


“நீங்க சொன்ன மாதிரி ஹர்ஷிதா உங்களோட மருமகள் தான். ஆனா அந்த அதிர்ஷ்டசாலி பையன் நான் தான்” என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தான் அவினாஷ்.


அவன் ஃபோனை வைத்ததும், நிர்மலாவின் ஃபோன் மறுபடியும் அடித்தது.


ஏதோ நம்பரிலிருந்து கால் வந்தது ஃபோனை எடுத்து


“ஹலோ” என்றார் நிர்மலா .


“நான் ரஞ்சனி பேசறேன்”


“ரஞ்சனியா? யாரு தெரியலையே?”


“நான் உங்க மருமகள், அர்ஜூனோட ஒயிஃப்”


*********************


அவினாஷ் ஹர்ஷிதாவிற்கு கால் செய்தான்.


“ஹலோ மாமா” என்றாள்.


“செல்லம்” என்றான்.


“சொல்லுங்க மாமா”


“ஐ லவ் யூ ஸோ மச் டி செல்லம்”


“என்ன மாமா காலைலியே ஒரே ரோமேன்டிக் மூட்ல இருக்கீங்க போல?” என்று சொல்லி சிரித்தாள்.


“அத்தை அடிச்சது ரொம்ப வலிக்குதா?”


“ஓ, தெரிஞ்சிடிச்சா? கேமரா எதாவது என் வீட்ல ஃபிக்ஸ் பண்ணியிருக்கீங்களா?”


“விளையாடாத டி செல்லம். எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு”


“எனக்கு வலிக்கல, யாரு மேலேயும் கோவம் வருத்தம் எதுவும் இல்லை. பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தான் நான் பேசினேன். அதே மாதிரி நடந்துச்சு” என்றாள் ஹர்ஷிதா.


“உண்மையிலேயே நீ ஒரு ஜீனியஸ் தான்”


“தேங்க்ஸ் மாமா, என்னை ரொம்ப புகழாதீங்க”


“ஆனா நிறைய அரியர்ஸ் வச்சிருக்கன்னு கேள்விப்பட்டேன்” என்று சொல்லி விட்டு சிரித்தான்.


“மாமா” என்று பொய் கோபம் கொண்டவளாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.


“சரி சரி சும்மா தான் சொன்னேன்”


“ஓகே மாமா பை. நான் காலேஜ் ரீச் ஆயிட்டேன்”


“ஓகே டி செல்லம். பை” என்றான் அவினாஷ்.


*****************


“என்னங்க, நான் எங்க அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வரவா?” என்று தன் கணவன் ராமுவிடம் கேட்டாள் யமுனா.


“உனக்கு என்ன பயித்தியமா? நம்மளை அவமான படுத்தி அனுப்பியிருக்காங்க. இதுவரைக்கும் ஒரு ஃபோன் கூட இல்லை. அங்க போகனும்ன்னு கேட்குற” என்று கத்தினார் ராமு.


“அப்பா, அம்மா சொல்றது கரெக்ட் தான். நாம இப்போ போனோம்ன்னா நம்ம மேல ஒரு மரியாதை வரும்”  


“எப்படி சொல்ற?”


“ஆமாம் அப்பா. நம்ம என்னதான் அவங்கள கஷ்டப் படுத்துற மாதிரி பேசியிருந்தாலும், ‘நமக்கு ஒரு கஷ்டம்னு தெரிஞ்ச உடனே வந்து நிக்கிறாங்களே இவங்க தான் நம்ம உண்மையான சொந்தக்காரங்க’ என்று மாமாங்க ரெண்டு பேரும் நினைப்பாங்க. நம்மளை இதுக்கு மேல யார் கிட்டேயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க” என்றான் வேலன்.


ஒரு நிமிடம் யோசித்தவர்,

“ ஹூம் நீ சொல்றது கரெக்ட் தான்” என்றார்.


“ஆனா அப்பா நீங்க மட்டும் உங்க கெத்தை விட்டுக்கொடுக்காதீங்க. நீங்க எப்பவும் போல இருங்க”


“எனக்கேத்த புள்ளை டா நீ, சரி நீயும் உங்க அம்மாவும் போய் பார்த்து விட்டு வாங்க. ஆனா ஒண்ணு ரொம்பவும் ஒட்டிக்காதீங்க ரொம்பவும் வெட்டிக்காதீங்க”


“சரிப்பா” என்றான் வேலன்.


யமுனா மற்றும் வேலன் இருவரும் ராஜகோபால் வீட்டுக்கு சென்றனர்.


லக்ஷ்மி மற்றும் விஜயா யமுனாவை பார்த்து கண்கள் கலங்கினார்கள்.


“யமுனா” என்று கூறி லக்ஷ்மி கட்டி அணைத்து கொண்டாள்.


“அண்ணி” என்று விஜயாவும் யமுனாவை கட்டிக்கொண்டாள்.


“அண்ணா வேலைக்கு போயிட்டாறா? தம்பி?”


“ரெண்டு பேரும் போயிட்டாங்க”


“உண்மையிலேயே ஹர்ஷிதா நிச்சயம் நின்னதுல எனக்கு ரொம்ப வருத்தம் தான் அண்ணி. வேலனை ஹர்ஷிதாவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க ஆசைப் பட்டது என்னவோ உண்மைதான். அதுக்காக அவளுக்கு பிடிக்கலைன்னா கட்டாய படுத்துற எண்ணம் எனக்கில்லை அண்ணி”


“தெரியாதா யமுனா. நீ அவளோட அத்தை ஆச்சே? அவளுக்கு ஒரு கஷ்டம் ன்னா அது உனக்கும் தான்”


“ஹர்ஷிதா எங்கே?”


“காலேஜ் போயிருக்கா. இருங்க அண்ணி நான் காஃபி கொண்டு வரேன்” என்று சொல்லி விட்டு கிட்சனுக்கு சென்றாள் விஜயா.


அவள் உள்ளே சென்றதும்,


“ஆமாம் அண்ணி, அந்த அர்ஜூனோட தம்பி. அவன் பேரு என்ன?”


“அவினாஷ்” என்றாள் லக்ஷ்மி.


“அவன் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் நம்ம ஹர்ஷியை லவ் பண்றேன்னு சொன்னானேமே?”


“ஆமாம். அந்த பையனுக்கு உண்மையாவே தைரியம் தான். அவன் மனசுல பட்டதை உடனே சொல்லிட்டான். யாரு என்ன நினைப்பாங்க? சொல்லலாமா? வேண்டாமா? ன்னு எதுவும் யோசிக்கலை”


“அந்த பசங்க ரெண்டு பேருமே சரியில்லை அண்ணி. விஜயா முன்னாடி சொன்னா சங்கடபடுவாங்கன்னு தான் சொல்லல” என்றாள் யமுனா.


“இல்ல யமுனா, அவினாஷ் நல்ல பையன் தான். இல்லன்னா நம்ம ஹர்ஷி அவனை லவ் பண்றேன்னு எங்க கிட்டேயே சொல்லுவாளா?” என்று யமுனா நினைத்து வந்த காரியம் நடக்காது என்பதை பூடகமாக சொல்லிவிட்டாள் லக்ஷ்மி.


“என்ன அண்ணி சொல்றீங்க?” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.


“ஆமாம், அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்க”


“என்ன அண்ணி அவங்க ரெண்டு பேரும் பார்த்து ரெண்டு நாள் கூட ஆகலையே?”


“யமுனா, நீ சினிமா எல்லாம் பார்க்கிறது இல்ல? இரண்டு நாள் இல்ல இரண்டு நொடில லவ் வந்திடுது. அதுவும் இல்லாம அது அவ ரத்தத்திலேயே ஊறி இருக்கு. நானும் உங்க அண்ணனும் லவ் மேரேஜ். வேணு தம்பியும் விஜயாவும் லவ் மேரேஜ். அதுவும் இல்லாம அவளுக்கு லவ் மேரேஜ் தான் நடக்கும்ன்னு ஜோசியர் சொன்னதா உங்க அண்ணன் சொன்னாரு. நான் இன்னும் விஜயாவுக்கு கூட இந்த விஷயத்தை சொல்லல” என்றாள்.


இதை எல்லாம் கேட்ட யமுனாவுக்கு தலை சுற்றுவது போல இருந்தது.


“அண்ணாவும் வேணுவும் ஒத்துக்கிட்டாங்களா?”


“இன்னும் இல்லை, ஆனா ஹர்ஷிதா பத்தி உனக்கு தெரியாதா? எப்படியும் சம்மதம் வாங்கிடுவா” 


“சரி, நாங்க கிளம்பறோம்” என்றாள் சற்று கோபமாக.


“இரு யமுனா, விஜயா காஃபி எடுத்துக்கிட்டு வருவா. குடிச்சிட்டு போ”


“இல்ல வேண்டாம் அண்ணி. ஒரு வேலை இருக்கு. அதை மறந்திட்டேன்”


“ஓ, அப்படியா? சரி சரி. போயிட்டு வா”


விஜயா கிட்ட சொல்லிடுங்க,


“சரி நான் சொல்லிக்கிறேன். நீ கிளம்பு”


இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வேலனுக்கு கடுப்பாக இருந்தது. 


“அம்மா, நான் கடைக்கு போறேன். நீங்க ஆட்டோவில வீட்டுக்கு போங்க” என்று சொல்லி விட்டு கிளம்பினான்.


வழியில் ஒரு டீ கடையில் நிறுத்தி மூன்று சிகரெட்டுகளை ஊதி தள்ளினான்.


பின்னர் தன் பைக்கை எடுத்துக் கொண்டு ஹர்ஷிதாவின் காலேஜூக்கு சென்றான்.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.