தமிழ் செல்வி பி.ஏ பி.எட்..!

Ival Minmini | 29 Mar 2026 | Share

எல்லோருக்கும் தெரிய அவர் காது படவே பேச ஆரம்பித்துவிட்டனர். அது அவருக்கும் அசிங்கமாகத்தான் இருந்தது முதலில் ஆனால் அதை விட பெரும் துயரம் ஒன்று அவரை உள்ளுக்குள் இருந்து அறித்தது இன்று!. ஆம், அன்று நல்லா இருந்த தன் கடைசி மகன் திடிரென மூத்தவளின் தாவணியையும் இளையவளின் வளையல்களையும் எடுத்து போட்டுக் கொண்டு அழகு பார்த்ததை இன்னமும் அவரால் மறக்க முடியவில்லை. வந்த அதிர்ச்சியிலும் ஆற்றாமையிலும் அவனை காய்ச்சல் வருமளவிற்கு அடித்ததை நினைத்தால் அவர் மனம் இப்போதும் கசக்கிறது. அது நடந்து எப்படியும் ஏழெட்டு வருசம் இருக்கும். தன் மனைவி அம்பிகா மூன்றாவதாய் மகனை பெற்ற போதே சொர்க்கத்தை சேர்ந்து விட்டாள் என அவருக்கு ஒரு நினைப்பு. எப்பாடுபட்டாவது இந்த மூனு பிள்ளைகளையும் நல்லா வளர்த்து நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டுமென மறு கல்யாணத்தைப் பற்றி செல்வம் நினைத்ததே இல்லை. அவருக்கு அவரின் பிள்ளைகள் தான் உலகம். பிள்ளைகளுக்கும் அப்படி தான். சின்ன வயதிலிருந்தே தன் அக்காக்களின் அரவணைப்பில் வளர்ந்தவன் தமிழ் செல்வன். அதனால தான் அப்படி நடந்துக்கிட்டான் என முழுதாய் நம்பினார் செல்வம். அந்த சம்பவத்திற்கு பிறகு அவனை படிக்க வேறு ஊரு, தங்க ஆண்கள் மட்டுமே இருக்கும் ஹாஸ்டல் என தன் மனதை கல்லாக்கிக் கொண்டு அவனை சேர்த்து விட்டார். அந்த நாளை அவரால் மறக்கவே முடியாது. தமிழ் செல்வனிடம் ஒருவார்த்தை சொல்லாமல் அழைத்து சென்று சேர்த்துவிட்டு அவர் திரும்பிய போது அவன் “அப்பா… நா இனி அப்படி பண்ண மாட்டேன்ப்பா… சாரிப்பா…. என்ன இங்க விடாதப்பா… ப்ளிஸ்ப்பா…” என அவன் அன்று உடைந்து அலறியது அவர் காதுகளில் இன்றும் கேட்கும். சரியாக ஒரு மாதம் முடிய அவனை விட்ட இடத்தில் இருந்து ஒரு அழைப்பு “சார்… உங்க… பையன்… ஸ்கூலேர்ந்து ஹாஸ்டல் வரல சார்… எங்க போனானே தெரியல எல்லா எடத்துலையும் தேடிட்டோம்… ஃபோலிஸ் கம்ப்ளைன்டும் குடுத்துட்டோம்!” அப்போது அவருக்கு உள்ளுக்குள் பதறியதை வெளியில் திரியும் காற்று கூட அறிந்திருக்காது. பின் எங்கெங்கோ தேட அவன் கிடைக்கவே இல்லை. காலம் மெது மெதுவாய் கடக்க தன் இரு மகள்களுக்கும் நல்லபடியாக கல்யாணத்தை செய்து வைத்தார் செல்வம். திடிரென அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. “அப்பா!” என பழக்கப்படாத ஆண்மை கலந்த பெண் குரல். முதலில் யாரென யோசித்தார் பின் அது தன் மகன் தமிழ் தான் என தெரிய அழைப்பை துண்டித்தார். அது அவன்மீது உள்ள கோபமா வருத்தமா இல்லை தவிப்பா… என்னவென்றே அவரால் வரையிருக்க முடிய வில்லை. பின் ஊர் வாயில் விழ விசயம் எல்லோருக்கும் தெரிய தொடங்கியது. ஏற்கனவே நிம்மதியில்லாமல் இருந்தவருக்கு இது ஒரு பாரமாய் சேர்ந்துவிட்டது. அவன் பேசி ஒரு ஆறு மாதம் சென்றிருக்கும். திடிரென முழுதாய் பெண்ணாக பார்பதற்கு அப்படியே அம்பிகா போல் மாறியிருந்தான். வீட்டுக்கு வந்திருந்தான். ஒரு வழியாக அடையாளம் கண்டுக் கொண்டு வீட்டுக்குள் விடாமல் வாசலிலையே திட்டி துரத்தி விட்டார் செல்வம். அதற்கு பின் அவன் வரவே இல்லை. இன்று காலை அவன் மீண்டும் ஒரே ஒரு கடிதம் அனுப்பியிருந்தான். அதில்…

அன்புள்ள அப்பா,

  

 உங்கள் மகன் இல்லை மூன்றவது மகள் தமிழ் செல்வி எழுதிக்கொள்வது. என்னை மன்னிச்சிடுங்கப்பா… உங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு மகனா உங்க பக்கத்துல இருந்து என்னால உங்கள பாத்துக்க முடியல. நான் இப்படி மாறினது உங்களுக்கு பிடிக்கலன்னு எனக்கு புரியது ஆனா இது என் கைல இல்லையேப்பா! உடலளவுல ஆணாகவும் மனசளவுல பெண்ணாவும் அந்த ஆண்டவன் என் தலைல எழுதிட்டான். இதுல என் தப்பு என்ன இருக்குப்பா…? உங்களுக்கு ஒரு விசயம் சொல்லட்டுமா? நீங்க என்ன அந்த ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டு போன அப்பறம் என்ன நடந்துச்சுன்னு தெரியுமா? அங்க இருத்த மத்த பசங்க என்ன வித்தியாசமா பார்த்தாங்க… என்னோட வலிமையான மத்த பசங்க… அப்பறம் அங்க இருந்த…வார்டன் எல்லாரும் என்கிட்ட தப்பா நடந்துகிட்டாங்கப்பா…. நிரைய நாள் நான் தூங்காம பயத்துலையே அழுதுட்டு இருந்துருக்கேன். அவங்க அப்படி நடந்துகிட்டப்பல்லாம் அவ்ளோ வலிக்கும் உங்க கிட்ட இதெல்லாம் சொல்லனும் நினைச்சு தான் தினமும் ஹாஸ்டல்ல இருந்து கால் பண்ணுவேன்… ஆனா நீங்க ஒரு தடவ கூட எடுத்ததில்லையேப்பா…. பின்ன வேற வழியில்லாம தான் அங்கிருந்து ஓடினேன்… அப்புறமும் ரொம்ப கஷ்டப்பட்டேன்ப்பா… அப்பதான் என்ன மாதிரியே இருக்குற வள்ளி அம்மாவ பாத்தேன். அவங்க தான் என்ன கூட்டு போய் பத்தரமா பாத்து படிக்க வச்சாங்க…அவங்க உதவியால இப்ப முழுசா பெண்ணா மாறி நிக்குறேன் அதோட இப்ப நான் பி.ஏ பி.எட் தமிழ் லிட்.., முடிச்சுட்டு TNPSC க்கு பிரிப்பேர் பண்றேன்ப்பா. இத சொல்லி உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கதான்ப்பா அன்னைக்கு வந்தேன். மத்தபடி மறுபடியும் உங்க கூட சேர்ந்து வாழுற குடுப்பினையான வாழ்க்கைய தேடிலாம் நான் வரலப்பா! முக்கியமா நீங்க எனக்கு குடுத்த அந்த வாழ்க்கைக்கு நன்றிப்பா! என‌ முடித்திருந்தாள் தமிழ் செல்வி. அதை படித்தவரின் கண்கள் கலங்கியிருந்தன. பின் எப்படியாவது தன் மகளிடம் பேச வேண்டுமென நினைத்தார். ஒருவழியாக அவளின் அழைப்பு எண்ணை கண்டுபிடித்து அழைப்பு விடுக்க முதல் ஒலியிலே எடுக்கப்பட்டது. இவர் அமைதியாக இருந்தார். அந்த பக்கமும் அமைதியாகவே இருக்க… “என்ன மன்னிச்சுடு மா!” என அவர் கண் கலங்க சொன்னார் செல்வம். அந்த பக்கத்தில் இருந்து ஒரே ஓரு கண்ணீர் துளியில் அவள் அனுபவித்த மொத்த பாவத்தையும், அவள் கடந்த வந்த துயரங்களையும் முழுதாய் மன்னித்தாள் தமிழ் செல்வி பி.ஏ பி.எட்

                               ***முற்றும்***

© மின்மினி 

    No comments yet.