R Indhumathi | 07 Dec 2025 | Division: காதல் | Share
மாலைக் காற்று மெதுவாக அலுவலக கட்டிடத்தைக் சுற்றி வீசியது. வேலை முடிந்தவுடன் எல்லோரும் வீட்டை நோக்கி விரைந்து நடந்தார்கள். ஆனால் அந்த பெரிய அலுவலகத்தில் இன்னும் இருவருக்கு மட்டும் வேலை முடிவதற்கான அவசரம் தெரியவில்லை. அவள் தாரிணி. புதியதாக வேலைக்கு சேர்ந்த இளம் பெண். அமைதியாக பேசுவாள், ஆனால் உள்ளுக்குள் கனவுகளாலும் பயத்தாலும் நிரம்பியவள். அவன் ஆத்ரேல். அலுவலகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் நேர்மையான மேற்பார்வையாளர். முகத்தில் எப்போதும் ஒரு எளிமையான சிரிப்பு இருந்தாலும், கண்களில் மட்டும் மறைக்கப்பட்ட வலி தெரிந்தது. அந்த நாள் தாரிணி சில கோப்புகளை அச்சிட முயன்றபோது, அச்சுப்பொறி திடீரென்று நின்றுவிட்டது. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் ஆத்ரேலின் அறைக்குச் சென்றாள். “சார்… அச்சுப்பொறி செயல்படவில்லை,” என்றாள் அவள் மெதுவாக. ஆத்ரேல் தலை தூக்கி அவளைப் பார்த்தான். “பரவாயில்லை… நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு இது முதல் வாரம். கவலைப்பட வேண்டாம்,” என்றான் அவன் ஒரு அமைதியான சிரிப்புடன். அவன் எழுந்து அச்சுப்பொறியைப் பார்க்கும்போது, தாரிணி அவனை கவனமாகக் கவனித்தாள். அவன் ஒவ்வொரு முறை தன் முடியைத்தழுவுவது… அவன் கவனம் செலுத்தும் விதம்… அவன் சத்தமில்லாத ஆனால் நம்பிக்கை தரும் குரல்… எல்லாமே அவள் மனதுக்குள் தெரியாமல் ஒரு இனிய உணர்வை விதைத்தது. “செட்டாயிற்று,” என்று சொன்னவுடன் அவர் பக்கத்தில் இருந்த கோப்பை எடுக்க அவள் குனிந்தாள். அதே நேரத்தில் ஆத்ரேலும் கோப்பை எடுக்க முயன்றான். இருவரின் விரல்கள் தற்செயலாக ஒன்றுடன் ஒன்று தொட்ட அந்த ஒரு சிறிய நொடி… தாரிணியின் உள்ளங்கையில் மின்னல் ஓடியது போல உணர்ந்தாள். இதயம் திடீரென்று வேகம் பிடித்தது. ஆத்ரேலும் அந்த தொட்டு உணர்ந்தான். ஆனால் அவன் வெளிப்படையாக எதுவும் காட்டவில்லை. “கவனமா இருங்க,” என்று மட்டும் சொன்னான். அவள் அறையில் இருந்து வெளியே வந்தபோது கூட, அந்த ஒரு தொட்டு அவளுடைய கன்னங்களுக்கு சிவப்பைக் கொடுத்தது. அவள் மனசு அவளிடம் கேட்டது: “ஏன் அவனை ... பார்த்தவுடனே இதயமெல்லாம் இப்படி துள்ளுது?” அதே நேரத்தில் ஆத்ரேலின் மனசும் அவன் கேள்வியைக் கேட்டது: “இந்த பெண்ணின் கண்களில் ஏதோ அமைதி… நீண்ட நாட்களுக்கு பிறகு இதயம் சற்று சுலபமாயிருக்கிறது…” ஆனால் உடனே அவன் தன்னையே அடக்கிக்கொண்டான். “இது சரியானதல்ல… என் கடந்த காலம் இன்னும் என்னை விட்டு போகவில்லை.” மறுநாள் தாரிணி காபி எடுக்க நின்றிருந்தாள். காபி இயந்திரம் மெதுவாக இருந்தது. அவள் சிறிது சோர்வுடன் நின்றபோது பின்னால் இருந்து ஓர் அமைதியான குரல்“நீங்கள் சர்க்கரை சேர்ப்பீர்களா?” அவள் திரும்பிப் பார்த்தாள். அவர் ஆத்ரேல். “ஒரு கரண்டி போதும் சார்,” என்றாள் அவள். ஆத்ரேல் இரண்டு காபிகளை தயாரித்து ஒன்றை அவளிடம் கொடுத்தான். “புதியவர்கள் வேலைச்சூழலுக்கு பழக நேரம் எடுக்கும். உதவி வேண்டும்னா சொல்லுங்க. நான் இருக்கேன்,” என்றான். அவன் சொன்ன “நான் இருக்கேன்” என்ற ஒரு வரி கூட தாரிணியின் மனதில் ஒரு நிம்மதியையும், தெரியாத ஒரு பாதுகாப்பையும் அளித்தது. அவன் சென்றபின் தாரிணியின் உள்ளம் கேட்டது: “அவன் ஏன் இவ்வளவு அக்கறையா பேசுறான்?” அதே நேரத்தில் தனது அறைக்குள் சென்ற ஆத்ரேல் ஜன்னலருகே நின்று காபி குடித்தான். அவன் கண்களில் ஒரு மறைந்த சிரிப்பு. “அவளோட சிரிப்பு மனசுக்கு சாந்தி… ஆனால் இது சரியான நேரமா? நான் இதிலே விழக்கூடாதே…” லிப்ட் தருணம் அந்த மாலையில் இருவரும் ஒரே நேரத்தில் லிப்ட் முன் வந்தார்கள். லிப்ட் திறந்தது. உள்ளே இருவரே. தாரிணி சிறிய குரலில் சொன்னாள், “சார்… நேர்முகத் தேர்வு நாளே உங்களை பார்த்தேன். அந்த நாள் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு பெரிய தைரியம் தந்தது.” ஆத்ரேல் ஆச்சரியப்பட்டான். “எந்த வரி?” என்றான். அவள் சொன்னாள்: “காலம் சரியான மனிதர்களை நமக்கு கொண்டு வரும்… காரணத்தைச் சொல்லாமல்.” அவன் அந்த வரியை கேட்டதும் ஒரு நொடி முழுக்க அமைதியாக நின்றான். அவன் மனதில் பழைய நினைவுகள் கசிந்தன. ஆனால் வெளியே எதுவும் காட்டவில்லை. அதே நேரத்தில் லிப்ட் திடீரென நின்றது. அவள் பயந்து ஆத்ரேலைப் பார்த்தாள். அவன் அமைதியாக, “பயப்பட வேண்டாம்… நான் இருக்கேன்,” என்றான். அந்த ஒரு வார்த்தைதான் அவள் உள்ளத்தை முழுவதும் சாந்தப்படுத்தியது. சில நிமிடங்களில் லிப்ட் மீண்டும் திறந்தது. இருவரும் வெளியே வந்தாலும், இருவரின் உள்ளமும் ஒன்றையே கேட்டது: “இந்த அணுக்கம் என்ன? இதில் ஏதோ புதுமையா இருக்குதே…” அன்றிரவு தொலைபேசியை சத்தமில்லாமல் வைத்திருந்த தாரிணி, திடீரென ஒரு அறிவிப்பைப் பார்த்தாள். அதை பார்த்தவுடன் அவள் கண்களில் ஒரு இனிய அதிர்ச்சி. அது ஆத்ரேலின் செய்தி: “வீடு பாதுகாப்பாக அடைந்தீர்களா?” அந்த ஒரு வரி… அவள் இதயத்தில் புதிதாக ஏதோ மலர வைத்தது. Read more