வேலுவின் வீடு தீக்கு இரையாகி முற்றிலும் எரிந்து சாம்பாலாகி இருக்க எரிந்த வீட்டிற்கு முன் வேலு வசுந்திராவின் சடலம் வெள்ளை துணியால் மூடி வைக்கபட்டிருந்தது..
சுற்றிலும் உறவினர்கள் ஊர்க்காரர்கள் அழுதபடி நின்றிருந்தனர்.
அப்பொழுது கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து ஜமீன்தார் ஆளவந்தானும் ரத்தினதேவியும் இறங்க முன்னாடி இருந்து அசோகனும் இறங்கினான்…
அவரை பார்த்ததும் கூட்டத்தில் “ஜமீன்தார் ஐயா வந்துட்டாரு…”என்று சலசலப்பு ஏற்பட்டது…
ரத்தினதேவிக்கு வெள்ளை துணியால் மூடி வைக்கப்பட்ட சடலங்களை பார்த்ததும் கண்கள் கலங்கி விட்டது.. அவரும் ஒரு தாய்யல்லவா…
“அம்மா…”என்று எங்கு சென்றாலும் தனக்கு துணையாக பாதுகாப்பாய் வரும் வேலுவை நினைத்து பார்த்தார்..
அவர் முகத்தில் மட்டும்தான் வருத்தம் தெரிந்தது.. ஆளவந்தான் அசோகன் இருவரும் இறுகிய கல்லாய் நின்றிருந்தனர்..
ஒருவனை அழைத்து ஆளவந்தான் “என்னாச்சு?…”என்று விசாரிக்க
“யாரோ வேணும்ன்னுதான் ஐயா இதை பண்ணிருக்காங்க… நைட் தூங்கிட்டு இருக்கும்போது கொளுத்தி இருக்காங்க…”என அவன் அழுதுகொண்டே சொல்ல
ரத்தினதேவி “குழந்தை..மதுமதிக்கு என்னாச்சு?…”என பதட்டத்துடன் கேட்க சற்று தள்ளி ஒரு பெண்மணி கையில் இருந்த மதுமதி அழுதாள்.
குழந்தை அழும் சத்தத்தில் ரத்தினதேவி அருகில் செல்ல அந்த பெண்மணி அழுதபடி “அவங்க குழந்தைதான்ம்மா…குழந்தையா மட்டும் வெளில கொண்டு வந்து வச்சுட்டு வீட்டை கொளுத்தி இருக்காங்க… பச்சை மண்ணும்மா அழுதுட்டே இருக்கா…”என்றார்.
ரத்தினதேவி அழும் மதியை அவரிடம் இருந்து வாங்கினார்..
“உன் வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னு நினைச்சனே இப்படி ஆகிடுச்சே…”என சொல்லிக்கொண்டவர் அழும் குழந்தையை சமாதானம் செய்தபடி ஆளவந்தான் அருகில் சென்றார்
“அசோக் பணத்தை கொடு…”என ஆளவந்தான் சொல்ல அசோக் ஒரு கட்டு பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அதை வாங்கி “இதை வச்சு இவங்களுக்கு நல்லபடியா காரியம் பண்ணுங்க… இப்படி ஒரு காரியத்தை பண்ணுவங்கள சும்மா விட முடியாது போலீஸ்ல ஜமீன் சார்பா கம்பளைண்ட் கொடுக்கறோம்…”என்றார்..
ரத்தினதேவி “என்னங்க இந்த குழந்தை?…”என கேட்க
ஆளவந்தான் அந்த குழந்தையை பார்த்தவன் “அப்பா அம்மா இல்ல நெருங்குன சொந்தக்காரங்களும் இல்ல…வேலு அவனோட குடும்பம்மே நம்ம ஜமின்ல வேலை பார்த்தவங்க இந்த குழந்தையும் ஜமீன்லயே வளரட்டும்…”என சொல்ல ரத்தினதேவி முகம் மலர்ந்தது..
வேலு வசுந்திராவின் இறுதி சடங்கை செய்ய சொல்லிவிட்டு மதுமதி இனி தங்களின் பொறுப்பு என்று சொல்லி அவளை ஜமீன் பங்களாவுக்கு அழைத்து சென்றனர்.
பங்களாவுக்கு சென்றதும் மதியை வளர்க்கும் பொறுப்பு அங்கு வேலை செய்யும் ஒரு வேலைக்கார பெண்ணுக்கு வழங்கப்பட்டது.
அர்ச்சனாவுக்கு மதி வருகை பிடிக்கவில்லை… அதைப்பற்றி அவள் அசோகன் ஆளவந்தானிடம் பேசிய பொழுது இருவரும் “வேலைக்காரியா இந்த ஜமீன்ல வளர போறா இதுல உனக்கென்ன பிரச்சனை…”என்று சொல்லிவிட்டனர்..
அவர்கள் எதிர்த்து எதுவும் பேச முடியாததால் அர்ச்சனாவும் விட்டுவிட்டாள்..
மித்ரனுக்கு மதியை பிடித்துவிட அவனும் சரி லேகாவின் மகன் நந்தனும் சரி மதியுடன்தான் விளையாடுவார்கள்.
அது லேகாவுக்கு பிடிக்கவில்லை…தன் மகனை மட்டும் அவள் கண்டித்தாள்..
“அது வேலைக்காரி குழந்தை… உனக்குதான் உன்னோட பாப்பா இருக்கால்ல அவகூட விளையாடு…”என சொல்ல
நந்தன் தான் தொட்டாலே சிணுங்கி இல்லையென்றால் அழும் தங்கச்சி இசையை பார்த்து முகம் சுழித்தவன் “அம்மா இந்த பாப்பா அழுதுட்டே இருக்கா அந்த பாப்பாதான் கியூட்டு… அழகா சிரிக்கிறா…”என சொல்வான்.
அவன் அப்படியென்றால் மித்ரன் ரத்தினதேவியிடம் “பாட்டி இது என்னோட பாப்பாதான…”என்று சொல்வான்.. அதற்கு ரத்தினதேவி ‘இல்ல…”என சொன்னாள் கத்தி அழுவான்..
அதற்காகவே அவன் கேட்கும் பொழுது ரத்தினதேவி “ம்ம் ஆமா உன்னோட பாப்பாதான்…”என்று சொல்லிவிடுவார்…
மதி அந்த ஜமீனுக்கு வந்து சில நாட்கள் ஆகிவிட மித்ரன் நந்தா எப்பொழுதும் மதிகூடவே விளையாடவும் அர்ச்சனா “என் பையன் செழியன்தான் சமத்து… ஜமீன் வாரிசுன்னா அவன்தான் இப்போவே அவனுக்கு தகுதி தராதரம் எல்லாம் நல்லா தெரியுது…”என பெருமையாக சொல்வாள்..
ஆனால் உண்மை என்னவென்றால் அர்ச்சனாதான் செழியனை மதி பக்கம் அனுப்ப மாட்டாள்… மதியிடம் மட்டுமில்லை மித்ரன் நந்தா இசை என்று யாரிடனும் பழகவிட மாட்டாள்…
அன்று..
மதியை பார்த்து கொள்ளும் கண்ணம்மா வேலை இருக்கவும் அவளை அப்படியே சமையல்கட்டில் கீழே தரையில் படுக்க வைத்துவிட்டு அவளுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டாள்..
மித்ரன் நந்தா இருவரும் வெளியில் விளையாடி கொண்டிருந்தனர்..
திடீரென மதி அழதொடங்கிவிட்டாள்.. அந்த வழியாக பணியாட்கள் எல்லாரும் செல்வதும் வருவதும்மாக இருந்தனர் ஆனால் அவளை யாரும் எடுக்கவில்லை…
செழியன் பந்தை தூக்கி போட்டு பிடித்தபடி மெதுவாக நடந்து வந்தவன் குழந்தை அழும் சத்தம் கேட்கவும் சுற்றி முற்றியும் திரும்பி பார்த்தவன் பின் சமையல்கட்டிற்கு சென்று பார்த்தான்..
மதியை இதுவரை அவன் பார்த்ததே இல்லை… குட்டி குழந்தையாய் இருந்தவளை பார்த்ததும் அவனுக்கு பிடித்துவிட அவனே இரண்டு வயதான சிறுவன் அழும் மதியை எப்படி சமாதானம் செய்ய வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை..
“பாப்பு… பாப்பு…”அவன் அவள் முன் கையை ஆட்ட அழுது கொண்டிருந்த மதி கண்களை உருட்டி பார்த்தாள்..
அவன் மறுபடியும் கைகளால் முகத்தை மூடி பின் திறந்து தன் அம்மா தனக்கு விளையாட்டு காட்டுவது போல் காட்ட மதி சிரித்தாள்..
அவள் சிரிப்பு செழியனை கவர்ந்தது… அவன் தொடர்ந்து அவளுக்கு விளையாட்டு காட்ட அப்பொழுது விளையாடி முடித்து உள்ளே வந்தனர் மித்ரனும் நந்தாவும்…
வந்தவர்கள் நேராக மதியை பார்க்கதான் ஓடியவர்கள் மதி பக்கத்தில் அமர்ந்து செழியன் விளையாட்டு காட்டி கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்கள் முகம் மாறியது…
இருவரும் கோபம் கொண்டனர்… அது மதியுடன் செழியன் விளையாடுகிறானே என்று வந்த கோபம்…
செழியனை அவர்கள் இருவருக்கும் ரொம்ப பிடிக்கும்…அவனுடன் விளையாட அவ்வளவு ஆசை ஆனால் அர்ச்சனா அவனை விளையாட அனுமதிக்க மாட்டாள் அவனும் வரமாட்டான்.
தங்களுடன் விளையாடதவன் இப்பொழுது மதியுடன் விளையாடுவதை பார்த்ததும் அவர்கள் கோபம் மதி மீது திரும்பியது… இவ்வளவு நாள் அவர்களும் மதியுடன் விளையாடி கொண்டிருந்தார்கள் என்பதை மறந்தனர்.
எல்லாருமே விவரம் தெரியாத சிறுவர்கள் என்பதால் பொறாமையும் கோபமும் கொண்டனர்.
“செழியா அந்த பாப்பாகூட விளையாடறான்.. அந்த பாப்பா வேணா…”என மித்ரன் சொல்ல நந்தாவும் “ம்ம் அந்த வேலை பாப்பா வேண்டாம்…”என்று மழலை மொழியில் பாதி மட்டுமே புரியும்படி சொன்னவன் மித்ரன் சொன்னதற்கு தலையாட்டினான்..
அதன்பின் அவர்கள் மதியுடன் விளையாடவில்லை.. செழியன் மட்டும் அர்ச்சனாவிற்கு தெரியாமல் மதியுடன் விளையாடுவான்..
தன் மகனே மதியுடன் விளையாடுவது தெரியாமல் அர்ச்சனா மித்ரனிடம் “மித்து கண்ணா அந்த பாப்பா கூட எல்லாம் நீ விளையாடகூடாது.. அது வேலைக்கார பாப்பா…”என சொல்லி அவனை மதி பக்கம் செல்லாமல் பார்த்து கொண்டாள்..
தினமும் அவளும் எதாவது செய்து ஆளவந்தானிடம் மித்ரனை மாட்டிவிடலாம் என்று திட்டம் போட்டாள்.. ஆனால் அது எதுவும் நடக்கவில்லை… எதாவது ஒரு விதத்தில் மித்ரன் தப்பித்துகொண்டே இருந்தான்.
சில சமயங்களில் அவன் ஆளவந்தானின் கோபத்திற்கு ஆளாகும் பொழுது ரத்தினதேவி வந்து அவனை காப்பாற்றி விடுவார்
இப்படியே நாட்கள் சென்று வருடங்களும் செல்ல ஏழு வருடங்கள் கண்ணிமைக்குக்கும் நேரத்தில் கடந்துவிட்டது..
அன்று..
ஜமீன் வீட்டு முதல் வாரிசான ஜீவ மித்ரனின் பத்தாவது பிறந்தநாள்…
ஜமீன் பங்களாவே அதை சிறப்பாக கொண்டாடினர்…மித்ரன் பெயரின் கோவிலில் பூஜைகள் நடைபெற ரத்தினதேவி ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்..
பக்கத்து ஊர் ஜமீன்களில் இருந்து எல்லாம் ஜமீன்தார்கள் குடும்பம் வந்தனர்..
இன்று மித்ரனின் பிறந்தநாள் மட்டுமில்லை இன்றுதான் அவனை அந்த ஜமீனின் அடுத்த வாரிசாக அறிவிக்க போகிறார்கள்.
காலம் காலமாக அவர்கள் கடைபிடிக்கும்படி வழக்கம்…ஜமீனின் முதல் ஆண் வாரிசின் பத்தாவது பிறந்தநாளிள் ஜமீன் வாரிசாக அறிவிக்கபட்டு வாரிசுக்கு உரிமையான ஜமீன் மோதிரத்தை போட்டு விடுவார்கள்..
என்னதான் ஆளவந்தானுக்கு மித்ரனை பிடிக்கவில்லை என்றாலும் அவனை இந்த ஜமீனின் வாரிசாகதான் பார்க்கிறார்… அவனுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை முழுமையாக கொடுக்க வேண்டும் என்று எல்லா ஏற்பாடுகளையும் பிரமான்டம்மாய் ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தார்..
ஆளவந்தான் கம்பீரமாய் சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க அவருக்கு முன்னாடி அர்ச்சனாவும் சற்று தள்ளி அசோகனும் நின்றிருந்தான்.
“மாமா என்னால கேட்காம இருக்க முடியல… நீங்க மித்ரனை எதுக்கு வாரிசா அறிவிக்கறீங்க…அவன் பூபதி மாமா பையன்தான் நான் ஒத்துக்கறேன் ஆனா அவன் உடம்பில அந்த பொண்ணு நந்தினி ரத்தமும் ஓடுதுல்ல…ஜமீன் வாரிசுன்னா ரத்தத்திலகூட முழுமையான ஜமீன் வம்சம் தொடரனும்ல…செழியன்தான தகுதியானவன்… இந்த ஜமீனுக்குன்னு ஒரு பொறுப்பு எல்லாம் இருக்குல்ல…”என சொல்ல
அவள் பேச பேச ஆளவந்தான் முகம் கோபத்தில் சிவந்தது…
“போதும் நிறுத்து அர்ச்சனா..”என்றவர் கோபக்குரலில் அர்ச்சனா உடல் நடுங்கிவிட்டார்
“மாமா…”
கையை உயர்த்தி அவளை பேச வேண்டாம் என்று சொன்னவர் “மித்ரன் பூபதியோட பையன்…பூபதி எனக்கு அப்பறம் ஜமீன் வாரிசா இருக்க வேண்டியவன் ஆனா அவன் அந்த பொண்ணை கல்யாணம் பன்றதுக்காக அதை விட்டு கொடுத்தான் இப்போ அவன் இல்ல அவனுக்கு கிடைக்க வேண்டியது அவனோட பையனுக்கு கிடைக்கணும்… முறைப்படியா பார்த்தாலும் மித்ரன்தான் இந்த ஜமீனோட அடுத்த தலைமுறையோட முதல் ஆண்வாரிசு… அவன் உடம்புல எந்த ரத்தம் ஓடுறதுங்கிறது எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல என் பையன் வாரிசு அவன்… எனக்கு அதுதான் முக்கியம்..”என அவர் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம்மாய் சொல்ல அர்ச்சனா அதிர்ந்துவிட்டாள்…
“இதுக்கு மேல நீ இதைப்பத்தி பேசக்கூடாது….”என அவர் விரல் நீட்டி எச்சரிக்க அசோகன் “மன்னிச்சிடுங்கப்பா.. அர்ச்சனா இனி இந்த மாதிரி பேசமாட்டா…”என்றவன் அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றிருந்தவளை கைபிடித்து அங்கிருந்து அழைத்து சென்றான்..
தங்களுடைய அறைக்கு அவளை இழுத்து சென்ற அசோகன் உள்ளே சென்றதும் அவளை விடுவித்து கதவை லாக் செய்தவன் அவள் பக்கம் திரும்பினான்.
தான் நினைத்தது நடக்காத கோபத்தில் அர்ச்சனா அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் தள்ளிவிட்டு உடைக்க அசோகன் தடுக்க பார்த்தான்
ம்ம்ஹும் அவனை வெறி பிடித்தவள் போல் தள்ளிவிட்டவள் “இல்ல அந்த மித்ரனை ஜமீன் வாரிசாக நான் விடமாட்டேன்.. நடக்ககூடாது அவனுக்கு வாரிசு மோதிரத்தை போடக்கூடாது…. என் பையன் செழியன்தான் வாரிசா இருக்கனும்…”என கத்த
தன் மனைவி என்ன சொன்னாலும் அதை தட்டாமல் செய்யும் அசோகன் “இன்னும் கொஞ்ச நேரத்தில அவனை ஜமீன் வாரிசா அறிவிச்சுடுவாங்க… இனி என்ன பண்ண முடியும்…”என கேட்க
அர்ச்சனா முகம் இறுக “முடியும்… என்னால தடுக்க முடியும்… என் பையன் செழியனை ஜமீன் வாரிசாக்கறதுக்காக நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன்..”என்றாள் அழுத்தம்மாய்..
இவளின் கோபத்திற்கு யார் பலியாக போகிறார்களோ…
No comments yet.