அத்தியாயம் – 5

நித்யா பாலசுப்ரமணியன் | 11 Dec 2025 | Share

எல்லாம் நல்ல முறையில் போய்க் கொண்டிருக்க தொழில் தொடங்குவதற்கு நல்ல நேரமும் குறித்திருக்க ஆதித்யவர்மரோ ” நீ முதல கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறமா தனியா தொழில் தொடங்கு. கல்யாணம் பண்ணிக்காம நீ தொழில் தொடங்க முடியாது. அதுக்கு நான் சம்மதிக்கவும் மாட்டேன். என்னோட பேச்சை மீறி இங்க எதுவும் நடக்கவும் நடக்காது. அப்படி கல்யாணம் வேண்டாம்னா நீ வர்மா என்டர்பிரைசஸ்ல தான் இருக்கனும். உனக்கு மூனு மாசம் டைம் ” என சொல்லிவிட இவனுக்கு திருமணமாக வேண்டும் என்ற ஆசையில் அம்மா, அப்பா, பாட்டி, தங்கை எவருமே இவனுக்கென்று உறுதுணையாக இருக்காமல் எல்லோரும் தாத்தாவின் கட்சியில் சேர்ந்து விட இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

நீலா இருந்த இருக்கின்ற மனதில் இன்னொரு பெண்ணை அவனால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. திருமணம் என்ற ஒன்றே வேண்டாம் என எண்ணியிருந்த அவனிடம் திருமணம் செய்து கொண்டால் தான் உன் விருப்பப்படி தொழில் தொடங்க முடியும் என சொன்னதும் அதற்கு அம்மாவும் பாட்டியும் கூட ஒத்துழைத்தது இவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

‘ தாம் உண்மையாய் நேசிப்பவர்கள் கூட நம் மனதை புரிந்து கொள்ளாமல் போனால் எப்படி ‘ என எண்ணி வருந்தினான்.

” இன்னும் எத்தனை நாள் தான் நடந்து முடிஞ்சு போனதையே நினைச்சுகிட்டு இப்படியே இருப்ப… எங்களுக்கும் உனக்கு திருமணமாகனும்னு ஆசை இருக்காதா… உன் அம்மாவுக்கும் நீ சந்தோஷமா வாழ்றத பார்க்கனும்ற ஏக்கம் இருக்காதா… நீ தொழில் தொடங்கி நல்லா வளர்ந்து வரனும்ற ஆசையோட நீ உன் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கனும்ற ஆசையும் எங்களுக்கு இருக்கிறதே கண்ணா….. அதை நீ எங்களுக்காக செய்துக்க கூடாதா…..” என ஏதேதோ பேசி அவன் மனதை மாற்ற முற்பட்டார்.

‘ தன் சந்தோஷத்துக்கு இல்லைனாலும் தன் அம்மாவுக்காகவும் தன்னோட பாட்டிக்காகவும் தான் ஒரு பெண்ணை திருமணம் செஞ்சு தான் ஆகணும் போல… என்ன செய்றது எதுவும் தோணலையே… ‘ என குழப்பத்தில் இருந்தவன் வீட்டிற்கு செல்வதை தவிர்த்து விட்டு வெளியிலேயே சுற்றித் திரிந்தான்.

என்ன முடிவு எடுப்பானோ… சம்மதிப்பானா… பெண் பார்க்கலாமா… என்ற எதிர்பார்ப்புடன் அன்னை பார்க்கும் பார்வை மனதை வதைக்க ” நல்ல முடிவா எடு நந்தன். எல்லோரோட சந்தோஷமும் உன்னோட கைல தான் இருக்கு ” என பாட்டி சொல்வதையும் கேட்க முடியாமல் தனிமையை நாடினான்.

ஒரு மாதம் ஓடி விட்டது.

இவனோ அடுத்து என்ன செய்வது என எத்தனை முறை யோசித்தும் எந்த பதிலும் கிடைக்காமல் தவித்தான்.

அப்படி ஒரு நாள் யோசனையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது தான் வேதாவை சந்தித்தான். அவளுக்கு உதவி செய்யும் வேளையிலும் கூட அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டே தான் இருந்தான்.

அஜையிடம் ஏதேனும் ஐடியா இருந்தா சொல்லும் படி கேட்டிருந்தவன், நீண்ட யோசனைக்கு பின் அவன் கூறியது சற்று அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தாலும் அப்போதைக்கு அது நல்ல ஐடியாவாகவே இவனுக்கு தோன்றியது.

” ஒரு வருடம் மட்டும் திருமணம் பந்தத்தில் இருக்க வேண்டும். பின் விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்து இட்டு விட்டு அடுத்து எந்த தொடர்பும் இல்லாமல் சென்று விட வேண்டும் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட பணத்தை முன்பணம் ஆகவும் பின் ஒரு வருடம் கழித்து கணிசமாக ஒரு தொகையை தருவதாக பேசி ஏதேனும் ஒரு பெண்ணை தேடி பிடிக்கலாம் ” எனக் கூற இது தவறு என மனதில் பட்டாலும் வேறு வழியில்லாமல் அதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தான்.

‘ எந்தப் பெண் ஒத்துப்பா இப்படி ஒரு திருமண பந்தத்திற்கு…. ‘ என மனதிற்குள்ளேயே குழம்பி தெளிவு கிடைக்காமல் இருந்தவன் வேதாவிடம் கேட்கலாம் என எண்ணினான்.

‘ அவளுக்கு இப்போதைக்கு பணம் அவசியம். அப்படிப்பட்ட சூழலில் அவள் இதற்கு சம்மதிக்க வாய்ப்பு அதிகம். அதுவும் சின்ன பெண்ணாக இருக்கிறாள் இவளால் எதுவும் தொந்தரவும் வரப்போவதில்லை ‘ என மனதில் தோன்றியதோடு ‘ வேறு பெண்ணை தேடி விளக்கம் கொடுத்து சம்மதம் வாங்கி என்று நடப்பது எல்லாம்…. இதற்கு ஒரே வழி வேதாவிடம் கேட்பது தான் ‘ என மனதில் பட அவளிடம் கேட்டான்.

எல்லாவற்றையும் முழுதாய் தெரிந்து கொண்ட பின் பதில் கூற சொன்னவன் தன் நிலைமையை அவளுக்கு எடுத்துக் கூறினான்.

அனைத்தையும் கேட்ட வேதாவுக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை.

‘ அம்மாவுக்கு உடனே ஆபரேஷன் செய்தாக வேண்டும். பணம் இப்போ அவசியம் வேண்டும். ஆனால் எப்படி ஒரு வருடம் மட்டும் மனைவியாக இருக்க முடியும். அம்மாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். அவர்களுக்கு தெரியாமல் எப்படி ஒரு வருடம் சமாளிப்பது ‘ என யோசித்தவள் ‘ எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம். இப்போதைக்கு அம்மா உடல் நலம் பெறுவது தான் முக்கியம். எப்போதோ நடக்கப் போவதை எண்ணிக் கொண்டிருந்தால் இப்போது நடக்க வேண்டியது எப்படி நடக்கும். பணத்திற்காக யார் யார் கிட்டயோ கேடாச்சு. நமக்கு உதவினு கேட்டதும் ஓடி வந்து செய்யவும் யாரும் இல்லை. அப்படி இருக்கும் போது கடவுளா அமைச்சு தந்த வாய்ப்பை ஏன் விடனும். இதை நழுவ விட்டுட்டு வருத்த பட வேண்டாம். சம்மதம்னு சொல்லிடலாம் ‘ என எண்ணியவளாய் அவனிடம் சம்மதம் தெரிவித்தாள்.

அவள் சம்மதிப்பாள் என அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.

‘ கிராமத்திலிருந்து வந்த பெண் போல் இருக்கும் அவள் தனது கோரிக்கையை தெரிந்து கொண்ட பின் எங்கே தன்னை தவறாக நினைத்து விடுவாளோ… ஏதேனும் திட்டச் செய்வாளோ இல்ல கேவலமாக எண்ணுவாளோ…. ‘ என ஏதேதோ நினைத்திருந்தவன் அவள் சம்மதம் என சொன்னதும் நம்ப முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அங்கே ஓர் அமைதி நிலவியது.

பின் அவனே பேச தொடங்கினான்.

” இங்க பாரு வேதா… நீ இதை ஒத்துக்கிட்டே ஆகணும்னு கட்டாயம் இல்ல. உன் மனசுக்கு என்ன படுதோ அதை செய்யலாம். உன்னோட சூழ்நிலையை நான் எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிறதா மட்டும் நினைச்சுடாத….. உன்கிட்ட உதவி கேட்கலாம்னு தோணுச்சு அதான் கேட்டேன். உனக்கு உதவி செய்றது என்னோட பொறுப்பு….. ” என பேச அவளோ மிகவும் மெதுவாக ஆனால் உறுதியாக சொன்னாள் ” எனக்கு இதுல முழு சம்மதம். எனக்கு உதவி செய்றேன்னு சொன்னீங்க பதிலுக்கு நானும் உங்களுக்கு உதவியா இருக்குறதுல எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ஆனால் உடனே என்னால சென்னைக்கு வர முடியாது. என்னோட அம்மாவுக்கு ஆபரேஷன் முடிஞ்சு கொஞ்சம் உடம்பு தேறனும். அப்புறம் தான் என்னால மத்த விஷயங்களை பத்தி யோசிக்க முடியும் ” என சொன்னாள்.

சொல்லி முடித்தவள், அவன் புருவங்களில் முடிச்சு விழுவதை பார்த்ததும் ” நீங்க என்ன நம்பலாம். நான் பணத்தை வாங்கிகிட்டு ஏமாத்திடுவேன்னு நினைச்சிடாதீங்க. சொன்ன சொல்ல எப்போதும் காப்பாற்றுவேன். அதனால என்ன நீங்க முழுசா நம்பலாம். உங்க பிரண்ட் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொன்னீங்க. ஆனா அம்மாவ சென்னை கூப்பிட்டு வந்தா அவங்க உடம்பு இந்த புது இடத்துக்கு ஒத்து போறதுக்கு டைம் ஆகும். அதனால ஊரிலேயே ஆப்ரேஷன் பண்ணிட்டு பின்ன எங்க வீட்டிலேயே அம்மாவை விட்டுட்டு வந்துடறேன். எனக்கே இந்த ஊர் புதுசு. அதனால அம்மாவையும் கூப்பிட்டு வந்தா சரிப்பட்டு வராது. அம்மா அங்க ஊரிலேயே இருந்தா அவுங்க உடம்பும் கொஞ்சம் சீக்கிரம் சரியாகும். நானும் ஏதாச்சும் காரணம் சொல்லிட்டு இங்க வந்துடலாம் அதான்…… ” என அவள் கூற இவன் மனதிற்கும் அது சரி என பட அவளிடம் ” சரி ” எனக் கூறினான்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.