அத்தியாயம் – 15

நித்யா பாலசுப்ரமணியன் | 23 Dec 2025 | Share

இருவரும் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பிரகாரம் சுற்றி விட்டு சிறிது நேரம் அங்கு அமரலாம் என அமர்ந்தனர்.

நந்தன் கோயிலின் உள்ளே நுழைந்ததில் இருந்து ஏதோ யோசனையாய் இருப்பது போல் தோன்றிலும் கேட்டால் எதுவும் தப்பா எடுத்துக் கொள்வானோ என இவளும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

ஏனோ அவளுக்கு அவன் தன் தலையில் வைத்திருக்கும் பூவை முறைத்து பார்ப்பது போல் தோன்றியது.

திடீரென்று நீலாவின் நினைவு வர ஏனோ வேதாவின் தலையில் இருந்த மல்லியை வெறுத்து பார்த்தவன் எழுந்து நடக்கத் தொடங்கினான்.

இவளுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘ ஓ பூ பிடிக்கல போல ‘ என எண்ணியவள் தலையில் இருந்த பூவை மனமே இல்லாமல் எடுத்து அங்கிருந்த குப்பை போடும் இடத்தில் போட்டவள் அவன் பின்னே நடந்தாள்.

அவளுக்கு மல்லி மிகவும் பிடிக்கும். அப்பா அம்மாவிற்கு வாங்கித் தரும் போதெல்லாம் தனக்கும் தன் கூந்தலின் நீளம் வரை வேண்டும் என வாங்கி சூட்டி கொள்வாள்.

கோயிலை விட்டு வெளியே வந்தவன் காரில் ஏறி அமர அவளும் ஏறி அமர்ந்தாள்.

பூவின் வாசம் ரொம்பவே குறைந்திருப்பது தெரியவும் திரும்பிப் பார்த்தவன் அவள் தலையில் பூ இல்லை என்றதும் ‘ நாம் அப்படி வெறுத்து பார்த்து இருக்கக் கூடாதோ ‘ என எண்ணியவனாய் காரை எடுத்தான்.

ஒரு மாதம் விரைந்து ஓடியது.

அவனது தொழிலும் நன்கு முன்னேறி கொண்டு போகத் தொடங்கியது.

அலுவலகம் பக்கத்திலேயே வீடும் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ வீடு கிடைத்ததும் தனியாக சென்று விட்டால் பரவாயில்லை. சும்மா எல்லாருக்காகவும் சிரிச்சு பேசுறதும், அம்மா வேற சும்மா இருக்காம எதையாவது அவளுக்கு ஊட்டி விடுனு கொடுக்கிறதும், வர்ஷா படுத்தற பாடும் தாங்க முடியல ‘ என எண்ணினான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை –

மூன்று பேர் அமரும் சோஃபாவில் ஒரு ஓரம் நந்தன் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க ‘ மறு பக்கம் அமர்ந்தாள் அத்தை ஏதேனும் நினைக்கக் கூடும் ‘ என எண்ணியவள் அவன் அமர்ந்திருந்த சோஃபாவின் மறு ஓரம் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க வர்ஷா இடமே இல்லாதது போல் ” தள்ளி உட்காரு வேதா ” என அவளை நந்தன் அருகே தள்ளி அமர வைத்து விட்டு அமர அவள் விளையாடிக் கொண்டு இடித்து தள்ளிவிட்டு அமர்ந்ததில் வேதாவின் தோள் நந்தன் மேல் இடிக்க கால்களும் உரசிக் கொள்ள இவன் வேறு வழி இல்லாமல் இருக்க போன் அடிக்க அட்டென்ட் செய்வது போல் எழுந்து போனான்.

ஹாஸ்பிடலில் இருந்து தான் அழைப்பு வந்திருந்தது.

வேதநாயகிக்கு நினைவு திரும்பி விட்டதாக கூற உடனே அனைவரும் அவரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு கிளம்பினர்.

முதலில் ஆதித்யவர்மன் போய் பார்த்துவிட்டு வர பின்பு ரவிவர்மனும் சுபத்ராவும் போய் பார்க்க அதன் பின்பு நந்தனும் வேதாவும் போகலாம் என எண்ணும் போது ” அவர்கள் ரொம்ப அசதியா இருக்காங்க. ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்க நாளைக்கு பார்க்கலாம் ” என டாக்டர் சொல்ல ” ஓகே டாக்டர் ” என்றவன் பாட்டியின் உடல் நலம் பற்றி விசாரித்து விட்டு வீட்டிற்கு கிளம்ப வேதாவோடு ஒட்டிக் கொண்டு வர்ஷாவும் கிளம்பினாள்.

ஆதித்யவர்மன் அங்கேயே இருப்பதாக சொல்லிவிட ரவிவர்மனும் சுபத்ராவும் வீட்டிற்கு கிளம்பினர்.

வீட்டிற்கு வந்தவன் வேலை இருப்பதாக சொல்லி விட்டு அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டான்.

வேலை செய்து கொண்டிருந்தவன் மறுநாள் வேதவள்ளியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் போகலாம் பாட்டியைப் பார்க்க என எண்ணியவன் அவளிடம் சொல்லலாம் என அறைக்குள் நுழைந்தான்.

அவளோ படுத்திருந்தாள்.

‘ என்ன இது ஆறு மணி தானே ஆகுது. அதுக்குள்ள படுத்திட்டா. அப்படி தூங்கமாட்டாளே ‘ என எண்ணியவனாய் அவள் அருகே போக அவள் முகம் மிகவும் சோர்ந்து போய் ஏதோ வலியில் அவள் அவஸ்தையுடன் படுத்து இருப்பது போல் தெரியவும் ” வேதா ” என மெதுவாக அவளை அழைத்தான். அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. மெதுவாக அவள் தோளை தொட்டு எழுப்ப கண் திறந்தவள் எழுந்து அமர முயல ” பரவாயில்ல படுத்துக்கோ. என்ன பண்ணுது உடம்புக்கு…. ” என கேட்க ” ஒன்னும் இல்லை ” என அவள் கூற ” இவ்வளவு டயர்டா இருக்க ஒன்னும் இல்லன்னு சொல்ற ” என அவன் மீண்டும் கேட்க ” அது வந்து… ” என அவள் இழுக்க ” சொல்லு வேதா என்ன ஆச்சு ” என அவன் விடாமல் கேட்க ” ஸ்டொமக் பெயின் தான் வேற ஒன்னும் இல்ல. ஃபஸ்ட் டே அப்படி தான் இருக்கும். ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும் ” என சொல்ல ” ஓ… ம்… ” என்றவன் கீழே சென்று ஹாட் வாட்டர் பேக் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.

வயிற்றின் மேல் வைத்துக் கொள்ளும் படி அவன் கொடுக்க அதை வாங்கி வைத்துக் கொண்டவள் சற்று இதமாக இருப்பதாய் உணர ” தேங்க்ஸ் ” என சொன்னாள்.

பின் சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கி விட்டாள்.

‘ இரவு உணவிற்கு இருவரும் கீழே வரவில்லையே ‘ என சுபத்ரா மேலே சென்று பார்க்கலாம் என சென்றவர் அறை கதவை தட்ட எந்த பதிலும் இல்லை என்றதும் கதவை திறக்க, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே பெட்டில் சாய்ந்து தூங்கியிருந்தான்.

இருவரும் தூங்குவதை பார்த்த சுபத்ரா சிரித்துக் கொண்டே லைட்டை ஆஃப் பண்ணி விட்டு கீழே சென்றார்.

வலியில் தூங்கியவளோ பாதி இராத்திரியில் பசியால் ஏழ அவளிடம் அசைவு ஏற்படவும் அவனுக்கும் விழிப்பு வந்தது.

” என்னாச்சு வேதா என்ன வேணும் ” என கேட்டுக் கொண்டே எழுந்தவன் லைட் ஆன் செய்ய ” பசிக்குது அதான் ” என மெதுவாக பதில் சொல்ல ” இரு நான் போய் சாப்பிட என்ன இருக்குன்னு பார்த்து எடுத்துட்டு வரேன் ” எனக் கூறியவன் அவள் ” பரவாயில்லை நானே போய் பார்த்துக்கிறேன் ” என சொன்னதை காதில் வாங்காமல் கீழே போனான்.

ஹார்ட் பேக்கில் இட்லியும் பக்கத்திலேயே ஒரு கிண்ணத்தில் கார சட்னியும் இரண்டு பேருக்கும் சாப்பிடுவதற்கு சுபத்ரா எடுத்து வைத்து விட்டு போய் இருப்பதை பார்த்தான்.

மனதிற்குள் தாயின் பாசத்தை எண்ணி சிரித்துக் கொண்டவன் ஒரு தட்டில் இட்லி சட்னி வைத்து எடுத்துக் கொண்டு ஒரு வாட்டர் பாட்டில் தண்ணியையும் எடுத்துக் கொண்டு மேலே போனான்.

தண்ணீர் குடிக்க வந்த சுபத்ராவின் கண்களில் இது பட தவறவில்லை.

” எப்படியோ அவன் மனசுக்கு பிடிச்சவளா கிடச்சிருக்கா ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் ” என மனதிற்குள் வேண்டிக் கொண்டவரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அறைக்குள் வந்தவன் அவளிடம் தட்டை கொடுக்க ” நீங்க சாப்பிட்டீங்களா ” என அவள் கேட்க ” எனக்கு பசிக்காம இருந்தது தூக்கம் வந்ததால தூங்கிட்டேன். இப்போ சாப்பிட்டா எனக்கு செட் ஆகாது. நான் பழம் ஏதாச்சும் சாப்பிட்டுகிறேன். நீ சாப்பிடு…. ” எனக் கூற ” ம்…. ” என தலையசைத்தவள் சாப்பிட்டு முடித்தாள்.

கீழே கொண்டு வைக்கப் போகலாம் என எழுந்தவளை தடுத்தவன் ” காலைல வச்சுக்கலாம் படு ” என சொல்லிவிட சரி என அவளும் படுத்து கொண்டாள்.

இரண்டு நாட்கள் ஓடியது.

இவனும் வீடு தேடி எதுவும் மனதிற்கு பிடிக்காமல் போக அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது ஆதித்யவர்மன் திருமண பரிசு எனக் கூறி வீட்டு பத்திரம் ஒன்றைத் தர நந்தன் மறுத்தான். அதற்கு அவரும் ” இது உனக்கு மட்டும் ஆன பரிசு இல்ல. வேதாக்கும் உரியது. இந்த வீட்டோட மருமகளுக்கும் ஆனது. இதை வேண்டாம்னு நீ எப்படி சொல்லலாம் ” என கூறியவர் அந்த வீடு அலுவலகம் பக்கத்திலேயே இருப்பதையும் குறிப்பிட்டார்.

” நீ உன் விருப்பம் போல உன்னுடைய மனைவியை கூப்பிட்டு தனி குடித்தனம் போகலாம் எப்ப நாளும் உன் விருப்பம் போல ” என கூறி முடிக்க ‘ வீடு தேடி தேடி ஒன்னும் கிடைக்கிற மாதிரி இல்லை. இன்னும் எத்தனை நாள் இங்க இருக்க முடியும். இங்கு இருக்கிறத விட அங்கேயே போயிடலாமே…. கொஞ்சம் சுதந்திரமா இருக்கலாம் ‘ என எண்ணியவனாய் ” சரி ” என கூறியவன் பத்திரத்தை வாங்கிக் கொண்டான்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.