அத்தியாயம் 1

Bommi Novels | 12 May 2026 | Share

இயற்கை எழில் கொஞ்சும் அழகான கிராமம். அக்கிராமத்தின் பெயர் பூஞ்சோலை. பூஞ்சோலை கிராமத்தை இயற்கை வளங்கள் நிறைந்து சொர்க்கம் எனலாம். 
அழகான மலைகள், மலையில் இருந்து வரும் அருவிகள், நீர்வீழ்ச்சி, பச்சை பசேலேன காட்சி அளிக்கும் வயல்கள், நீர்நிலைகள், சாலை ஓரங்கள் முழுவதும் இயற்கை காற்றினை தரும் மரங்கள்.. பறவைகளின் கீச் கீச் சத்தம், அவ்வூரில் வசிக்கும் மழலை செல்வங்களின் கொஞ்சும் மொழிகள், வயல் வேலையில் ஈடுபடும் ஆண்கள், பெண்களின் பேச்சு குரல்கள். ரம்மியமான இயற்கை சூழல்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நகரத்தில் வாசிப்பவர்களை விட தங்கள் திறமைகளை நவீன டெக்னாலஜிகள் மூலம் வளர்த்து கொண்டு இயற்கை சூழல் அழியாமல் தங்களது கிராமத்தினை பேணி பாதுகாத்து வருகின்றனர். (கற்பனை)
அதிகாலை ஐந்து மணியளவில் பெண்கள் அனைவரும் எழுந்து  வாசல் தெளித்து கோலம் இட்டு தங்களது அன்றாட வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அதே வேளையில் அவ்வூரில் உள்ள மூன்று தளங்களை கொண்ட மிகப்பெரிய அரண்மனையில் ஒரு சிறிய அறையில் தரையில் இருந்த ஒரு போர்வையில் சோர்வாக தூங்கி கொண்டிருந்தாள் பதினெட்டு வயதே ஆன இளம் மங்கை. அவளே நம் கதையின் நாயகி பூவிதழினி.
அழகான வட்ட முகம், அடர்த்தியான வில் போன்ற புருவம், நீளமான கார்மேக கூந்தல், ஆளை மயக்கும் காந்த விழிகள், சிறிய மூக்கு, அதில் ஒற்றை கல் பதித்த முக்குத்தி, சிரித்தால் குழி விழும் கன்னங்கள், லிப்ஸ்டிக் போடாமல் சிவந்திருக்கும் இதழ்கள், சுண்டினால் இரத்தம் வரும் வெள்ளை நிறந்தழகி. மேக்கப் போடாமலே இயற்கை நிறம்.
பூவிதழினி மட்டுமே எல்லா வேலைகளும் செய்ய வேண்டும்.. வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் சிறிது ஒய்வின்றி வேலை செய்ய வேண்டும்… மதியம் மட்டுமே எந்த தொந்தரவும் இல்லாமல் அவளால் சாப்பிட முடியும்.. காலை, இரவு இரண்டு நேர உணவு  உண்ண விடாமல் சில நாட்கள் பட்டினி போடுவர். வேலைக்காரர்கள் பலர் அரண்மனையில் இருந்தாலும் அதிக வேலைகளை செய்ய வைத்து பூவிதழினியை கொடுமை படுத்துவர்.
பூஞ்சோலை ஊரில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்கள் வைதேகி, முகுந்தன் தம்பதியினர்.
இருவருக்கும் உறவு என்று சொல்ல யாரும் இல்லை… சிறுவயதிலேயே தங்களது குடும்பத்தை இழந்தவர்கள். 
பள்ளி படிப்பு முடியும் வரை  வெவ்வேறு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தனர்.
முகுந்தனுக்கு வைதேகியை விட நான்கு வயது அதிகம்.
தனது பள்ளி படிப்பு முடிந்ததும் பார்ட் டைம் வேலை பார்த்து கல்லூரியில் படித்தான்.
வைதேகி பள்ளி படிப்பு முடிந்த பிறகு பார்ட் டைம் வேலை பார்த்தே கல்லூரியில் படித்தாள்.  
வைதேகி, முகுந்தன் இருவரும் பார்ட் டைம் வேலை பார்க்கும் இடத்தில் சந்தித்து காதலிக்க ஆரம்பித்தனர். 
அதன் பிறகு முகுந்தன், வைதேகி இருவரும் திருமணம் செய்து கொண்டு முகுந்தனின் சொந்த ஊரான பூஞ்சோலைக்கு வந்து அவனது குடும்ப சொத்தில் இருவரும் விவசாயம் செய்தும், சில சிறு தொழில்கள் செய்தும் படிப்படியாக முன்னேறி தொழிலை விரிவுப்படுத்தி செல்வ செழிப்பினை ஏற்படுத்தினர்.
வைதேகி, முகுந்தன் இருவரும் ஒருவருக்கொருவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கின்றனர்.
இவர்களின் காதலுக்கு அடையாளமாக பிறந்தவளே பூவிதழினி. 
ஆனால் அரண்மனையின் ஒரே செல்வ மகள் இப்போது அதே அரண்மனையில் வேலைக்காரியாக வாழ்ந்து நிறைய கொடுமைகளை அனுபவிக்கிறாள்.
பூவிதழினியின் இடத்தில் வைதேகி, முகுந்தனின் மகளாக இருப்பவள் சுமித்ரா.
முகுந்தன், வைதேகி இருவரின் இளவரசி பூவிதழினி எதற்க்காக வேலைக்காரி ஆக்கப்பட்டு  கொடுமைகள் அனுபவித்து கொண்டு வாழ்கிறாள் மற்றும் அவளின் இடத்தில் சுமித்ரா எதற்க்காக இளவரசியாக வாழ்கிறாள் என்பதற்கான காரணத்தை பற்றியும் அடுத்தடுத்து அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.
பூவிதழினி சோர்வாக தூங்குவதை கெடுக்கவே பூவின் அறைக்கு வந்தாள் ஒரு ராட்சசி. அவள் அரண்மனையில் பல ஆண்டுகளாக வேலை செய்யும் வேலைக்காரி ராஜீ.
அவள் அரண்மனையில் பல ஆண்டுகளாக வேலை செய்தாளா என்பது கேள்வி குறியே.. வேலை செய்தாள் என்பதை விட வேலை செய்வதை போல் நடித்து அரண்மனையில் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறாள் என்பதே உண்மை.
ராஜீயை பற்றி அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். 
பூவிதழினி சோர்வாக தூங்குவதை பார்த்து கோபமடைந்தவள் நேராக குளியல் அறைக்கு சென்று ஒரு வாளி நிறைய குளிர்ந்த நீரை எடுத்து வந்து பூவின் மீது சிறிதும் இரக்கம் இல்லாமல் ஊற்றினாள்.
குளிர்ந்த நீர் பட்டதும் தூக்கம் கலைந்து அடித்து பதறி எழுந்தாள் இதழ்.

லேட்டாக தூங்கியதின் விளைவாக கண் எரிச்சல் ஏற்பட்டது. எனினும் கண்ணை கசக்கி கொண்டு எதிரில் தன்னை முறைத்து கொண்டு நிற்பவரை பார்த்து தூக்க கலக்கத்தில் “அம்மா” என்று அழைத்தாள்.
ஆம் அவளே பூவிதழினியின் வளர்ப்பு அன்னை. ஆனால் அவள் மீது சிறிதும் பாசம் இல்லாமல் அவளை கொடுமை செய்து ரசிக்கும் இரக்கமற்ற ராட்சசி.
அதில் கோபமடைந்த ராஜீ பளார் என இதழின் கன்னத்தில் அறைந்தாள்.
“ஏய் சனியனே … உன்கிட்ட எவ்வளவு தடவை சொல்லிருக்கேன் நீ என்னை அம்மான்னு கூப்பிட கூடாதுன்னு.. மேடம்னு கூப்பிடுன்னு.. ராசி கெட்டவளே.. இன்னொரு முறை அம்மான்னு கூப்பிட்ட நடக்கிறதே வேற” என்று கோபமாக திட்டி எச்சரித்தாள்.
உடனே இதழ் கண்கள் கலங்க தழுதழுத்த குரலில் சாரி மேடம் என்று கூறி விட்டு மெதுவாக எழுந்து தனது துணிகளை எடுத்து கொண்டு அறையில் இருக்கும்  பாத்ரூம் நோக்கி சென்றாள். 
அவள் செல்வதை பார்த்த ராஜீ, “ஏய் சீக்கிரம் குளிச்சிட்டு எல்லா வேலையும் முடி.. ஒரு வேலை பண்ண லேட்டானாலும் நீ இன்னைக்கு காலேஜ் போக முடியாது.. வேலை முடிக்காம காலேஜ் போலாம்னு மட்டும் யோசிக்காத எவ்வளவு நேரம் ஆனாலும் வேலை எல்லாம் முடிச்சிட்டு தான் காலேஜ் போகணும்”  என்று தெனாவட்டாக கூறி விட்டு சென்றவள் தனது அறைக்கு சென்று அங்கிருந்த இரு கட்டிலை சேர்த்து போடப்பட்டிருந்த ஆடம்பரமான கட்டிலின் மெத்தையில் ஏறி படுத்து நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள் ராட்சசி.
இங்கே இதழினியோ, பாத்ரூம் சென்று காலை கடன்களை முடித்து வேகமாக குளித்து தாவணி காட்டி கொண்டு ஈரமான கூந்தலை சரியாக துவட்டாமல் இரு புறமும் சிறிது முடி எடுத்து கிளிப் வைத்தாள்.
வேகமாக அறையை விட்டு வெளியே வந்து அரண்மனையில் முன் பக்கம் சுத்தம் செய்து வாசல் தெளித்து வேகமாக கோலம் இட்டாள்.
அதன் பிறகு வேகமாக சமையறை சென்றவள், கிட்சனை சுத்தம் செய்து உணவு தயாரிக்க ஆரம்பித்தாள்.
காலை உணவிற்கு இட்லி செய்வதற்கு, பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்து இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி அடுப்பில் வைத்தாள்.
சட்னி வைக்க தேங்காய் எடுத்து துருவி மிக்சியில் தேவையான பொருட்கள் சேர்த்து அரைத்து தாளித்து ஒரு பாத்திரத்தில் வைத்தாள்.
சாம்பார் செய்ய வேகமாக காய்கறிகள் வெட்டி குக்கரில் சாம்பார் தயார் செய்ய வைத்தாள்.
பின்னர் வேக வைத்த இட்லியை எடுத்து தண்ணீர் தெளித்து ஹாட் பாக்ஸ்சில் வைத்து மூடி வைத்தாள்.
சில நிமிடங்களில் சாம்பார் தயாரானது அதையும் அதற்க்குரிய பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்தாள்.
கிட்சனில் இருந்து வெளியே வந்தவள் அரண்மனையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
மூன்று தளங்களை சுத்தம் செய்யவே அதிக நேரம் ஆனது.
காலையில் இருந்து வேலை செய்ய ஆரம்பித்தும் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் வேலை  செய்கிறாள்.
அதன் பிறகு மீண்டும் கிட்சனுக்கு வந்து கையினை கழுவி சுத்தம் செய்து விட்டு அனைவருக்கும் டீ போட ஆரம்பித்தாள்.
பிரிட்ஜில் இருந்து பால் எடுத்து பால் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து டீ தூள், சீனி போட்டு டீ தயாரித்து வடிகட்டி நான்கு கப்பில் ஊற்றி எடுத்து கொண்டு கிட்சனை விட்டு வெளியே வந்தாள்.
பூவிதழினி கிட்சனை விட்டு வெளியே வரும் போது ஹாலில் அமர்ந்திருந்தார் முகுந்தன்.
பூவிதழினியை எதிர் பார்த்து காத்திருந்தார் போலும்.. அவளை பார்த்ததும் அவரின் முகம் பிரகாசம் அடைந்து மென்புன்னகை தோன்றியது.

அரண்மனையில் பூவிதழினி மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர் முகுந்தன் மட்டுமே.. அவர் அரண்மனையில் இருக்கும் நேரங்களில் யாராலும் இதழினியை கொடுமை செய்ய இயலாது. ஆனால் சில சமயங்களில் அவர் எதிரிலேயே அவளை கொடுமை படுத்துவர். 
அவளை அனைவரும் பட்டினி போட்டாலும் அவர் இருக்கும் நேரங்களில் யாருக்கும் தெரியாமல் சாப்பிட வைப்பர்.. இது பற்றி வைதேகிக்கு தெரிந்தாலும் கண்டு கொள்ள மாட்டார். ஆனாலும் பூவிதழினியை கொடுமை செய்வதை மட்டும் வைதேகி நிறுத்த மாட்டார். முகுந்தன் நிறைய முறை அவரிடம் இதழினியை கொடுமை படுத்த கூடாது என்று கூறியும் கேட்காமல் அவளை கொடுமைப்படுத்துவது மட்டுமின்றி வார்த்தைகளால் வதைத்து கொண்டிருக்கிறார். இப்போது செய்யும் செயல்கள், கொட்டும் வார்த்தைகள் அனைத்தையும் நினைத்து எதிர் காலத்தில் துடிக்க போகிறார், பூவிதழினியின் மொத்த வெறுப்பையும் சம்பாதிக்க போகிறார் என்பதனை பற்றி அறியாமல்….
அவரும் பூவிதழினியை கொடுமையான சித்ரவதை வாழ்க்கையில் இருந்து காப்பாற்ற வேண்டி கல்லூரி படிப்பிற்காக வெளியூரில் உள்ள மிகப்பெரிய கல்லூரியில் மகளின் திறமைக்கு கிடைத்த சீட்டினை வைத்து அவளை அக்கல்லூரிக்கு அனுப்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.
ஆனால் அவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியே. 
பூவிதழினி படிக்க செல்லும் கல்லூரியை பற்றி அறிந்த சுமித்ரா பொறாமையினால் அடம்பிடித்து பூவிதழினிக்கு பதிலாக சுமித்ரா அக்கல்லூரிக்கு சென்றாள்.
கல்லூரியில் சென்று படிப்பதாக கூறி அனைவரையும் ஏமாற்றி ஊர் சுற்றி கொண்டிருந்தாள்.
பூவிதழினி பூஞ்சோலைக்கு அருகில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறாள். பள்ளி, கல்லூரி அனைத்திலும் பூவிதழினியே முதல் மதிப்பெண் எடுப்பாள்.
கிட்சனில் இருந்து வெளியே வந்த பூவிதழினியை பார்த்து, “குட் மார்னிங் அம்மு” என்றார் முகுந்தன்.
உடனே பூவிதழினியும் சிரித்து கொண்டே அவரது அருகில் சென்று “குட் மார்னிங் சார்” என்று கூற வந்தவள் முகுந்தன் முறைத்த முறைப்பில் “குட்  மார்னிங் பா “ என்று மெதுவாக கூறினாள்.
அவள் கூறியதை கேட்டவர் மகளின் தலையில் கை வைத்து பாசமாக வருடினார். 
அப்போதே அவள் கன்னம் சிவந்திருப்பதை பார்த்தார்.. அவரின் கண்கள் கலங்கி போனது.
அடித்தவரின் மீது அளவு கடந்த கோபம் உண்டானது.
ஆனால் அவர்களிடம் தனது கோபத்தை காட்ட முடியாத தனது நிலைமையை நினைத்து தன் மீதே வெறுப்பு கொண்டார். தனது மகளை பாதுகாப்பாக ஒருவனிடம் ஒப்படைப்பதற்க்காக மட்டுமே இப்பொழுது பொறுமையாக இருக்கிறார்.
இவரின் கோபமும் ஒரு நாள் வெளிப்படும்.. அன்று அவரின் கோபத்தை பூவிதழினியை கொடுமை செய்தவர்கள் தாங்குவார்களா..?? என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பூவிதழினியின் கொடுமையான சிறை வாழ்க்கையில் இருந்து அவளை காக்கவே வருவான் ஒரு ரட்சகன்….

தொடரும்….. 🥺💔



இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.