Episode 9

ஶ்ரீ துர்க்கா | 11 Dec 2025 | Share

அல்லி 9

அத்திப்பட்டு 

“வாட்ஸப் குரூப் ஓப்பன் பண்ணி நியூஸ் ஷேர் பண்ணினீங்களே… எனி அப்டேட்ஸ் அன்பழகன்..?”

கேட்டபடியே தன் முன் வந்து நின்ற இன்ஸ்பெக்டர் பூங்குன்றனைப் பார்த்து விறைப்புக்கு வந்து சல்யூட் அடித்தார் அன்பழகன்.

“இதுவரைக்கும் நம்ம ஏரியால யாருமே அவங்கள தெரிஞ்ச மாதிரி சொல்லல சார்… ஏதாவது நியூஸ் அப்டேட்ஸ் இருக்குன்னா உடனே உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன்…”

“ம்ம்… இந்த கேஸ்ல நம்மளுக்கு அவ்வளவு ப்ரஷர் கிடையாது… ஏன்னா அந்தப் பொண்ணு நம்ம ரீஜன் கிடையாது. ஆனாலும் கடத்தல் விவகாரங்கிறதால எல்லா ஏரியாவிலயும் சொல்லி அலர்ட் பண்ணி இருக்காங்க… நம்மளால முடிஞ்சளவுக்கு நம்மளும் கொஞ்சம் எஃபர்ட் போட்டு பாக்கலாம்… மத்தபடி, பென்டிங்ல இருக்கிற நம்மளோட கேஸஸ்ல மெய்னா ஃபோகஸ் பண்ணுவோம்… இந்த கேஸ ஒரு மனிதாபிமானத்துக்காக மட்டும் ஓரளவுக்கு கான்சன்ட்ரேட் பண்ணுவோம்… வேற இடமே கிடைக்காம, நம்ம ஏரியாவில அந்தப் பொண்ண கடத்திட்டு வந்து வச்சிருப்பாங்கன்னு எனக்குன்னா தோணல…”

அசட்டையாய் தோள்களைக் குலுக்கினார் பூங்குன்றன்.

“எனக்கும் அதே தாட் தான் சார்… மத்த கேஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணுற அளவுக்கு இந்த கேஸுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரல… அதே நேரம் ஒரு அலர்ட் இருக்கணுங்கறதுக்காக நம்ம ரீஜன்ல இருக்க எல்லா வீடுகளுக்கும் வாட்ஸப்பிலயும் தகவல் சொல்லி வச்சிருக்கேன்…”

“சரி… நாம நம்மளோட கேஸஸ்ல சின்சியரா வர்க் பண்ணுவோம்… ஏதாவது தகவல் கிடைச்சா மட்டும், இந்த கேஸ்ல ஃபர்தரா இன்வால்வ் ஆகலாம்…”

“சரிங்க சார்…”

                    ✯✯✯✯✯

கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழிந்திருந்தன. முழுமையாக இல்லா விட்டாலும், காவல்துறையினரின் தலையீடு அவ்வளவாக இல்லாததால் அல்லியும் பெரியாத்தாவும் கொஞ்சமே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தார்கள்.  இதனால் வழமை போலவே அல்லி, பெரியாத்தா வீட்டில் தங்காமல் தன் வீட்டுக்கு சென்று வருவதென்று முடிவானது. இதில் பெரியாத்தாவுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என்றாலும், அவளையும் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க பிரியப்படவில்லை அவர்.

சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்து இல்லத்தில் வளர்ந்தவள் அல்லி. அனாதைப் பிணமாக ரோட்டோரத்தில் கிடந்திருக்க வேண்டியவளை, தனது பொறுப்பின் கீழ் விவேகானந்தர் இல்லத்தில் சேர்த்துக் கொண்டவர் தாமரைச்செல்வி. அதனாலேயே அல்லி மேல் தனிப்பிரியம் அவருக்கு. அல்லிக்கும் அவர் மேல் அதீத அன்பு உண்டு தான், ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்வது குறைவு. அதே நேரம், அவருக்கு தேவையான சந்தர்ப்பத்தில் முதல் ஆளாய் அவர் முன் நின்றிருப்பாள் அவள். ரத்னாவும் அதே இல்லத்தில் அல்லி போல் வளர்ந்த ஒரு பெண் தான். அப்போதெல்லாம் அவர்களுக்குள் அவ்வளவு பழக்கம் கிடையாது‌. பெரியாத்தா வீட்டிற்கு வேலை செய்ய வந்த போதுதான் அல்லிக்கும் ரத்னாவுக்குமான உறவு ஆத்மார்த்தமாய் ஆரம்பித்து ஆழமாய் வேரூன்றிப் போனது. இப்போது பெரியாத்தாவிற்கு இருவரும் பேரப்பிள்ளைகளாகிப் போனார்கள்.

அல்லிக்கு தாமரைச்செல்வி பரிசாய் கொடுத்திருந்த தோட்ட வீடு ஒன்று உண்டு. பெரியாத்தா வீட்டிலிருந்து கிளம்பினால், அங்குதான் தங்கிக் கொள்வாள் அவள். தோட்டத்துக்கு மரங்களையும் பராமரித்து, வீட்டையும் சுத்தப்படுத்தி, இரவு உணவையும் முடித்துக் கொண்டால் அத்துடன் அந்தப் பொழுது சரி. தனியாய் தான் அங்கு இருக்கிறாள் என்றாலும், அக்கம் பக்கத்தில் சனப்புழக்கம் அதிகம் என்பதால் அவ்வளவாய் அங்கு தங்க பயந்ததில்லை அல்லி. ஆனால் வழமைக்கு மாறாக இன்று ஏதோ ஒரு பயம் அவளைக் கவ்விப் பிடித்திருந்தது உண்மை.

கிட்டத்தட்ட ஒரு வார காலமாக இங்கு வந்திருக்கவில்லை அல்லி. வீடு அந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கவில்லை என்றாலும், தோட்டத்து பயிர்கள் எல்லாம் வாடி வதங்கி தான் நின்றிருந்தன. அல்லிக்கு இந்த மரங்கள் எல்லாம் குழந்தை மாதிரி. பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வாள் அவள். அப்படிப்பட்டவள், இந்த ஒரு வார காலமாக தங்களை கண்டே கொள்ளாதது அவர்களுக்குமே வருத்தம் தான் போலும். தாயைக் காணாத சேயாய் தலை கவிழ்ந்து நின்றிருந்தனர். 

மோட்டாரை ஆன் செய்து பயிர்களுக்கு நீர் இறைத்தவளது மனம் மாத்திரம் பெரியாத்தா வீட்டிலேயே நிலைத்திருந்தது‌. இத்தனை நாள் அவள் இருந்த தைரியத்தில் இருவரும் நிம்மதியாக துயில் கொண்டார்கள் தான். ஆனால் இன்று என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

ஏதேதோ சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவள், சட்டென யாரோ பின்னால் நிற்பது போல் தோன்ற வெடுக்கென திரும்பினாள். ஆனால் அங்கு யாரும் நின்றிருப்பதற்கான அறிகுறியே இல்லை. இத்தனை நாள் வரையில் இல்லாத புதுவித உணர்வொன்று பாடாய் படுத்தியது அல்லியை. தன்னைத் தவிர யாரோ ஒருவர் தன்னுடனேயே இருப்பது போல் கொஞ்ச நாளாகவே தோன்றிக் கொண்டு தான் இருக்கிறது அவளுக்கு. ஆனால் அது உண்மையா பொய்யா என்று தான் தெரியவில்லை. ‘இந்த நிலை தன் எதிரிக்கு கூட வந்து விடக் கூடாது’ என நினைத்தபோது தன்னாலேயே கண்களை நிறைத்தது கண்ணீர். இத்தனை பலவீனமாக அவள் இருந்ததே இல்லை. யாரிடமாவது எல்லாவற்றையும் சொல்லி மனது விட்டு கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவளுக்கென்று இருப்பது பெரியாத்தாவும் ரத்னாவும் தான். இவளது அழுகை அவர்களைப் பலவீனமாக்கி விடும் என்பதால் அவர்களிடம் அவ்வளவாக எதையும் காட்டிக் கொள்ள பிரியப் படவில்லை அவள்.

தோட்டத்திற்கு நீர் இறைத்து முடித்த பின் குளித்துக் கொண்டு வந்தவள், சாமியறைக்குள் நுழைந்தாள். வழமையாக விளக்கேற்றி வழிபடும் போது ஏற்படும் நிம்மதியும் நிறைவும் இன்று இல்லை. கடவுளே தூரமாகிப் போன உணர்வு அவளுக்கு. இப்படி ஒரு தவறை செய்திருக்கவே கூடாதென்று மீண்டும் உரக்க கதறியது மனது..!

                   ✯✯✯✯✯

நேரம் நள்ளிரவைத் தொட்டு விட்டிருந்தது. பெரியாத்தா உறங்கி விட்டிருக்க, ரத்னாவுக்கோ பொட்டுக்கு கூட தூக்கம் வரவில்லை. பெரியாத்தாவிற்கு தன்னுடைய அறையைத் தவிர வேறு எங்கும் சரியாக தூக்கம் வராதென்று சொல்லி விட்டதால், ரத்னாவும் அவருக்கு துணையாக அவரது ரூமுக்கே வந்து விட்டாள். அதிலெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த பலா மரம் தான் அவளுக்கு பிரச்சினை. தோட்டத்திலிருந்து ஏதோ உறுமுவது போல் சத்தம் கேட்பது போல் இருந்தது ரத்னாவுக்கு. பயத்தில் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டாள் அவள்.

தன்னாலேயே கைப்பேசியை எடுத்தவள் கேலரியில் சேவ் ஆகியிருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தை எடுத்துப் பார்க்க, சடாரென்று இறங்கியது இடி ஒன்று. சரியாக பலா மரத்திற்கு சற்று தள்ளி நின்றிருந்த தென்னை மரத்தில் அது இறங்கியிருக்க கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது அந்த தென்னை மரம். பயத்தில் ரத்னா ஃபோனை‌ நழுவ விட்டிருக்க, நொடியில் மின்சாரமும் துண்டித்து போனது. இத்தனை கலவரத்திலும் பொட்டுக்கு கூட உறக்கம் கலையாமல் படுத்திருந்த பெரியாத்தா, உலகின் எட்டாவது அதிசயமாக தெரிந்தார் அவளுக்கு..!

திடீரென வெட்டிய மின்னல் ஒளியில், பெரியாத்தா அருகில் யாரோ அமர்ந்திருப்பது போல் தெரிய, பயத்தில் உடல் உதறிக் கொள்ள ஆரம்பித்தது ரத்னாவுக்கு. இன்று தான் தனக்கு இறுதி நாள் என முடிவே செய்து கொண்டாள் ரத்னா.

தூங்காத இரவாக கழிந்திருந்த பொழுது மெல்ல மெல்ல விடிய ஆரம்பிக்க, வழக்கம் போல் அதிகாலை வேளையிலேயே வீட்டுக்கு வந்திருந்தாள் அல்லி. வழமை போல் அல்லாமல், வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும் போதே அசூயை உணர்வு அவளுக்கு. உள்ளே வந்து பார்த்தால் ஒரு மூலையில் தலைவிரி கோலமாக உட்கார்ந்திருந்தாள் ரத்னா. அந்த நிலையில் அவளைப் பார்த்தவுடன் பதறிப் போனாள் அல்லி. ஓடி வந்து அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள், “என்..னாச்சு ரத்னா… ஏன் இ..ப்படி என்னமோ மாதிரி உட்கார்ந்திருக்க..?” என்றாள் தட்டுத் தடுமாறி.

பதிலேதும் பேசாமல் ரத்னா கை நீட்டி காட்ட, அந்த திசையில் பார்த்தாள் அல்லி. அங்கு பெரியாத்தா ஒருக்களித்து படுத்திருக்க, கலக்கமாய் ரத்னாவை ஏறிட்டவள் மெல்ல எழுந்தாள். பெரியாத்தா அருகில் சென்று அவரை எழுப்ப அவரது உடலோ பிடிமானமின்றி தளர்ந்தது. கண்களில் நிரம்பி விட்ட நீருடன் “ஆத்தா…” என அவரை உசுப்பியவள், இயலாமையாய் ரத்னாவைப் பார்க்க சத்தமாய் அழ ஆரம்பித்திருந்தாள் அவள்.

சற்று நேரம் கழித்தே சம்பவம் அல்லிக்கு உறைக்க, பெரியாத்தாவின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவள் “ஆத்தா…” என உலுக்கியபடியே உடைந்து அழ ஆரம்பித்தாள். இருவரதும் அழுகை பெரும் ஓலமாய் எழ ஆரம்பிக்க, சொற்ப நேரத்தில் கூட்டம் கூடி விட்டது அங்கே. அல்லியும் ரத்னாவும் அழுகையிலேயே கரைந்து கொண்டிருக்க, ஆத்தாவின் இறுதி யாத்திரைக்கு தேவையான அத்தனை பொறுப்புகளையும் சொந்த பந்தமே ஏற்று பார்த்துக் கொண்டார்கள். கிராமத்தில் வாழ்பவர்களுக்கு இது ஒரு கொடுப்பனவு தான். இத்தகைய நேரத்தில் எல்லாம், தம் வீட்டு பிரச்சினை போல் பொறுப்பெடுத்து பார்த்துக் கொள்ள அக்கம்பக்கத்து உறவுகள் சில இருக்கும். கூடவே, பெரியாத்தா ஊருக்குள் கொஞ்சம் செல்வாக்கான ஆள் என்பதால் அவரிடம் கை நீட்டி உதவி பெற்றிருந்த கூட்டமும் அவருக்கான கடமைகளை தாமும் பகிர்ந்து கொண்டது. 

முழுதாக மூன்றரை மணி நேரம் கடந்திருந்த நிலையில் பெரியாத்தாவின் இறுதிப் பயணம் ஆரம்பமானது. இனி அவரைப் பார்க்கவே போவதில்லை என நினைக்க நினைக்க ஆறவே இல்லை அல்லிக்கு. அல்லியின் திருமணத்தை பார்ப்பதற்கு அத்தனை ஆசை அவருக்கு. வரன் கூட அவர் தான் பார்த்துக் கொண்டிருந்தார். பெரியாத்தாவிற்கு குழந்தைகள் இல்லை. கணவரும் காலம் சென்ற பிறகு அவருக்கென வாழ்வில் இருந்த பிடிமானம் என்றால் அது அல்லியும் ரத்னாவும் தான். மூத்தவளை அடுத்து இளையவளுக்கும் மணம் முடித்து விட்டால், இரண்டு பேர் வழியாகவும் பூட்டப் பிள்ளைகளை கண்டுவிட்ட நிறைவுடன் இறைவனிடம் சென்று விடலாம் என அப்படி ஒரு அவா அவருக்கு. ஆனால் நடுவில் இப்படி ஒரு பிரச்சினை வந்து, ஆளையே முடக்கிப் போடும் என்று அவர்கள் மூவருமே நினைத்திருக்கவில்லை.

ஆண்கள் அனைவரும் பெரியாத்தாவின் இறுதிக் கடமைகளை செய்வதற்கு சென்று விட்டிருக்க, பெண்கள் கூட்டம் மாத்திரம் இங்கு அமர்ந்து தமக்குள் சலசலக்க ஆரம்பித்திருந்தது. 

“நம்ம கோமாதா இருக்கால்லடி… அவளுக்கு ஆத்தா மேல அம்புட்டு பாசம்… ஆத்தா தானே அவளுக்கு சீதா மகாலக்ஷ்மின்னு பேரு வச்சது..? ஆத்தாக்கும் சீதான்னா உசுரு… அவ இறந்தது தான் ஆத்தாவால தாங்கிக்க முடியல போல… அன்னைக்கே மலைச்சு போய் தான் நின்னுட்டு இருந்திச்சு… அப்படியே அவ நினைப்பிலேயே ஆத்தாவும் போய் சேர்ந்திடுச்சு…” என கமலா ஆரம்பித்து வைக்க, பேச்சு வளர்ந்தது.

“ஆத்தாவே போய் சேர்ந்திடுச்சோ, இல்லன்னா நம்ம குலசாமியா பாக்கற கோமாதா தான் ஆத்தாவ இஷ்டப்பட்டு கூப்பிட்டுக்கிச்சோ என்னமோ…” 

“அப்படி இருக்காதுடி… நம்ம லக்ஷ்மிக்கு ஆத்தான்னா உசுரு… பெரியாத்தா இன்னும் நூறு வருஷம் நல்லா வாழணும்னு தான் அவ நினைச்சிருப்பாளே தவிர, ஆத்தாவ அவகிட்ட கூப்பிட்டுக்க நினைச்சிருக்க மாட்டா…”

“ஆமாமா… நீ சொல்றதும் கரெக்டு தான்… நம்ம கோமாதா அப்படி பண்ணாது… நம்ம லக்ஷ்மி சனிக்கிழமை செத்திருந்தா கூட இவங்க பேசுறதுல ஒரு நியாயம் இருக்கும்… ஏன்னா ‘சனிப் பொணம் தனிப் போகாது..’ ன்னு சொல்லுவாங்க… இங்க அப்படி எதுவும் இல்லையே..?” என இன்னொருவரான செண்பா சொன்ன பிறகும் அவர்களது உரையாடல் தொடரத் தான் செய்தது. ஆனால் அவர்களது உரையாடலை எதேச்சையாக காதில் வாங்கிய அல்லியின் மனது அவர் சொன்ன அந்த பழமொழியிலேயே நிலைத்துப் போயிற்று . 

‘சனிப் பொணம் தனிப் போகாது…’ 

ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பெரியாத்தா வீட்டுக்கு வந்த போது தான் அவள் அந்த பெண்ணின் உடலைக் கண்டிருந்தாள். அவளின் கணக்குப்படி அந்தப் பெண் இறந்து குறைந்தது ஆறேழு மணி நேரமாவது ஆகி இருக்கும். அவள் அந்தப் பிணத்தைக் காணும் போது விடிகாலை மூன்றில் இருந்து நான்கு மணிக்குள் இருக்கும். எப்படி கணக்குப் பார்த்தாலும் அந்தப் பெண் இறந்தது ஒரு சனிக்கிழமை..!

                               – அல்லி மலரும்…

    No comments yet.