அல்லி 7
“இங்க பாரு அல்லி… அந்த இன்ஸ்பெக்டர் சார் என்னோட நம்பர் வாங்கிட்டு போனாங்க இல்ல..? இந்த ஃபோட்டோல இருக்கிற அக்காவ மூணு நாளா காணமாம்… எங்கேயாச்சு பாத்திருக்கீங்களான்னு கேட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்காங்க… அந்த அக்காவோட பேரு அட்ரஸ்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வாட்ஸப் பண்ணறேன்னு சொல்லி இருக்காங்க…”
“ம்ம்…”
“என்ன அசால்டா ம்ம் கொட்டிட்டு இருக்க..? நம்ம ஏரியால இருக்கிறவங்க… பக்கத்து ஏரியாவுல இருக்கிறவங்க எல்லாரையும் சேர்த்து வாட்ஸப் க்ரூப்ல ஆட் பண்ணி இந்த மெசேஜை ஷேர் பண்ணி இருக்காங்கன்னா விசயம் எவ்ளோ சீரியஸ்னு தெரிஞ்சுக்கோ…” என ரத்னா சொன்னது தான் தாமதம், பகீரென்றது அல்லிக்கு. அந்த போலீஸ் உத்தியோகத்தர் ரத்னாவுக்கு மாத்திரம் தான் மெசேஜில் விடயத்தை சொல்லி இருக்கிறார் என்று அவள் நினைத்திருக்க, அவரோ எல்லோருக்கும் இதைத் தெரியப்படுத்தி இருக்கிறார் என்றால் விடயம் அவ்வளவு சாதாரணமானதில்லை என புரிந்து போயிற்று அவளுக்கு.
“என்னடீ, நான் பேச பேச பேசாம இருக்க..? ஒரு பொண்ணு காணாம போயிருக்கா அல்லி… அவளும் நம்மள மாதிரி ஒருத்தி தானே..? யாராவது ரேப் பண்ணி இருப்பாங்களா, கொலை பண்ணி இருப்பாங்களா… இல்லன்னா அந்தப் பொண்ண வேற ஏதாவது சித்திரவதை பண்ணி இருப்பாங்களான்னு நினைச்சு நினைச்சு தவிச்சு போய் இருக்கேன் நான்… அதுல பாதியாவது உனக்கு இருக்கா..? எப்படி இவ்ளோ அலட்சியமா இருக்க முடியுது உன்னால..?”
“எனக்கு அந்தப் பொண்ண தெரியாது ரத்னா… யாரோ ஒரு பொண்ணுக்காக என்னோட மனச கஷ்டப்படுத்தி நான் என்ன பண்ண..? எல்லாரும் அவங்கவங்க வருத்தத்தை ஒரே மாதிரி எக்ஸ்பிரஸ் பண்ணிக்க மாட்டாங்க… அந்தப் பொண்ணு எப்படி இருக்காங்கற கவலை எனக்குமே இருக்கு தான்… ஆனா அதுக்காக என்னையே இழந்து அவளைப் பத்தி யோசிச்சுட்டிருக்கிற அளவுக்கு நான் இல்லை… நீ அதை தான் பண்ணிட்டு இருக்க… முதல்ல இந்த ஓவர் எமோஷனல் ஆகிறத விட்டு கொஞ்சம் வெளில வரப் பாரு… அப்பறம் ஒரு முக்கியமான விசயம்… இந்த மாதிரியான தகவல்களை ஆத்தா காதுக்கு கொண்டு போகாத… பாவம், வயசான காலத்துல அதுக்கும் கஷ்டம்…” என்றபடியே எழுந்து கொண்டாள் அல்லி.
“சப்போஸ் இந்தப் பொண்ணோட இடத்துல நான் இருந்திருந்தாலும் கூட நீ இப்படி தான், எனக்கென்னனு விட்டேத்தியா இருந்திருப்பியா அல்லி..? என்னை மாதிரித் தானே அந்தப் பொண்ணும்..?”
“லூசு மாதிரி பேசாத ரத்னா… ஆமா… உன்னை மாதிரித் தான் அந்தப் பொண்ணும்… ஆனா அது நீ கிடையாதுங்கிறது தான் நிஜம்… அந்தப் பொண்ணு இடத்துல நீ இருந்திருந்தா, இப்போ இந்த கேஸ்ல நான் எந்த இடத்துல இருந்திருப்பேன்னு உனக்கு நல்லாவே தெரியும்… சும்மா இதையும் அதையும் யோசிச்சு குழப்பிக்காத…”
இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போதே, அருகில் கடைக்கு சென்றிருந்த பெரியாத்தா, வீட்டுக்கு திரும்பி விட்டிருந்தார். அல்லி தான், ஒரு மன மாற்றத்திற்காக அவரை வெளியே அனுப்பி வைத்திருந்தாள்.
“என்னங்கடி, அக்காளும் தங்கச்சியும் காலங்காத்தாலயே ஆரம்பிச்சுட்டீங்களா..?” என்றவருக்கு, “ஆமா ஆத்தா… இவளுக்கு ஞாயித்துக் கிழமையும் இல்லத்துல வகுப்பு வைக்க சொல்லி கூப்பிட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். நிக்கறது ஒரு நாளு, அதுக்குள்ளயும் என்னை ஒறண்ட இழுத்திட்டிருக்கா பாரு…” என்றவள், பெரியாத்தாவையும் இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள். நல்ல வேளையாக, அல்லி காட்டிய கண் ஜாடையைப் புரிந்து கொண்டு ரத்னா அவரிடம் எதையும் உளறி வைக்கவில்லை.
பெரியாத்தாவிடம் இதை மறைத்து வைப்பது பெரிய விடயம் இல்லை, இந்த வழக்கில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பது தான் பெரிய விடயம். போலீஸ் டிப்பார்ட்மென்ட் இந்தப் பெண் விவகாரத்தில் காட்டும் அக்கறை மலைக்க வைத்தது அல்லியை. ‘ஒருவேளை அவள் பெரிய இடத்துப் பெண்ணாக இருப்பாளோ..?’ என்றும் எண்ணத் தோன்றியது. கடினப்பட்டு அந்தப் பெண்ணின் முகத்தைத் தனக்குள் நினைவுபடுத்திப் பார்த்தாள் அல்லி. ஆனாலும் அதை வைத்து அந்தப் பெண்ணை எடை போட முடியவில்லை அவளால்.
பெரியாத்தாவிற்கும் ரத்னாவுக்கும் பால் போட்டு கொடுத்தவள், சமையல் வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டாள். இங்கு, குரூப்பில் வந்திருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ரத்னாவின் கண்கள், எதையோ கண்டுவிட்ட பிரம்மிப்பில் அதிர்ச்சியில் விரிந்தன..!
✯✯✯✯✯
“எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் சாமி… தயவு செஞ்சு என் பையனை காப்பாத்துங்க… டாக்டர்மாரை நம்பி, கடவுளை நம்பி… இப்ப எல்லாருமே கை விட்ட இடத்துல கடைசியா உங்கள நம்பி வந்திருக்கேன் நான்… என்னைக் கை விட்டுடாதீங்க ஐயா…” கையெடுத்து கும்பிட்டு அழுதார் சிவசாமி.
“இது ரொம்ப பெரிய விவகாரம் சார்… நீங்க எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணுவீங்க சரி, ஆனா நாளை பின்ன ஒரு பிரச்சினைன்னு வந்தா நான் என்ன பண்ணுவேன்..?” என்றார் சிவசாமியின் முன் நின்றிருந்த ஜெயபாலன்.
“ஐயா..! உங்க கால்லயே விழறேன்… தயவு செஞ்சு முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க… எனக்கு இருக்கிறது ஒரே பையன், அவனை காப்பாத்தி குடுத்துடுங்க சாமி… உங்களுக்கு காலம் முழுக்க நான் அடிமையா இருக்கேன்…” என்றபடி நிஜமாகவே காலில் விழுந்து விட்ட சிவசாமியை தூக்கி நிறுத்தினார் ஜெயபாலன்.
“இவ்வளவு தூரம் நீங்க கெஞ்சி கேக்கிறதால நான் உங்களுக்கு உதவி பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்… உங்க பிரச்சினை என்னனு தெளிவா சொல்லுங்க எனக்கு… நீங்க என்ன பண்ணணும்னு நான் சொல்றேன். அதுபடி செஞ்சீங்கன்னா உங்க பையனை காப்பாத்திடலாம்…”
ஜெயபாலன் கூறிய அந்த இறுதி வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, அந்த உத்வேகத்தில் சொல்ல ஆரம்பித்தார் சிவசாமி.
✯✯✯✯✯
நேரம் நள்ளிரவைத் தாண்டி இருந்தது.
“ஐயையோ… நான் என்ன பண்ணுவேன்… இந்தக் கொடுமையை வந்து பாருங்களேன்… ஊருக்கே குல சாமி மாதிரி இருந்த நம்ம கோமாதாவுக்கு இப்படியா ஆகணும்..?”
என்ற கதறலைக் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தார் பெரியாத்தா. அருகில் அல்லியும் ரத்னாவும் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தார்கள். ரத்னாவை இந் நேரத்திற்கு எழுப்பினால் பயந்து விடுவாள் எனத் தெரிந்ததால் அவளை விடுத்து அல்லியை எழுப்பினார் அவர்.
“ப்ச் என்னாத்தா..?” என்று அரைத் தூக்கத்தில் கேட்டவளை அடித்து எழுப்பி உட்கார வைத்தார் அவர்.
“ஏன்டீ… நம்ம சீதா மகாலக்ஷ்மிக்கு ஏதோ பிரச்சினை போலடி… இப்பதான் சித்ரா வீட்டுப் பக்கம் அழுது குழறி சத்தம் கேட்டுச்சு… ரத்னா தூங்கட்டும், நம்ம என்ன ஏதுன்னு ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடுவோம்…” என்றவர் எழும்ப எத்தனிக்க, அவரை அடக்கி அமர்த்தினாள் அல்லி.
“ஆத்தா, கொஞ்ச நேரம் சும்மா இரு… தூக்கக் கலக்கத்துல எதையாவது உளறாத… முந்த நாத்துல இருந்து உனக்கு சரியா தூக்கம் இல்லை…” என மேலும் பேசப் போனவளை இடைவெட்டியது அந்த கதறல் சத்தம்.
“கேட்டேல்ல..? நான் தூக்க கலக்கத்துல உளறல… நிஜமாவே நம்ம லக்ஷ்மிக்கு ஏதோ பிரச்சினை…” என கலங்கியபடி மீண்டும் எழப் போனவரை, திரும்பவும் தடுத்து நிறுத்தினாள் அல்லி.
“பரபரக்காத ஆத்தா… நம்மளுக்கு இப்போதைக்கு இந்த விசயம் தெரியாத மாதிரியே இருக்கட்டும்… அவங்க கத்துன உடனே போனோம்னா அந்த டைம்ல நாம தூங்காம என்ன பண்ணிட்டு இருந்தோம்னு கூட கேள்வி வர வாய்ப்பிருக்கு… நம்மளே இவ்ளோ பிரச்சினையை வச்சுக்கிட்டு ஊருக்காக வரிஞ்சு கட்டிட்டு போய் நிக்கிறது சரியா வராது… கொஞ்சம் அமைதியா இரு… நான் சொல்றப்ப போலாம்…”
“ஆனா… பிரச்சினை நம்ம லக்ஷ்மிக்கு டி… ஊரைக் காக்குற குல தெய்வத்தோட அம்சமா தானே நம்ம அவள பாத்தோம்… இந்த நேரத்துல அங்க போகலன்னா எப்படி..?”
“பிரச்சினை நம்ம லக்ஷ்மிக்கு மட்டும் இல்ல ஆத்தா, நம்மளுக்குமே தான்… அங்க போக வேணாம்னு சொல்லல, நான் சொல்றப்போ போலாம்னு தான் சொல்லறேன்…”
“என்னமோ போ…” என ஆத்தா விட்டேற்றியாய் சொன்ன நேரம், மீண்டும் அங்கிருந்து அழுகுரல் கேட்க, “இப்போ போலாம் ஆத்தா, வா…” என்று அவரைக் கைபிடித்து அழைத்துச் சென்றாள் அல்லி. அவர்கள் சித்ரா வீட்டிற்கு சென்றிருந்த நேரம், வீட்டுக்கு முன்னே ஒரே கூட்டமாக கூடி இருந்தது. அல்லி எதிர்பார்த்ததும் இதைத் தானே..? எல்லோருக்கும் முதலாவதாக அவள் சென்று நின்றிருந்தால், “அவ்வளவு நேரம் தூங்காம என்ன பண்ணிட்டு இருந்த..?” என்று கேள்வி வரும். வழமையாக என்றால் அது சாதாரணமான கேள்வி தான், ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் சூழ்நிலையில் அதற்கு இடம் தர வேண்டாமே என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
இன்னும் ஒரு கேள்விக்கும் அங்கே இடமிருந்தது தான். வழமையாக ஆத்தா வீட்டில் தூங்காத அல்லி, இந்த மூன்று நாட்களாக அங்கேயே நிற்பதற்கான காரணம் என்ன..? என்பதே அது. இரு தினங்களுக்கு முன்னர் பெய்திருந்த மழையில் பெரியாத்தாவுக்கு காய்ச்சல் கண்டு விட்டிருந்ததால், அவரைக் கவனித்துக் கொள்வதற்காக நின்றிருப்பதாக ரத்னாவுக்கு கூறி இருந்த காரணத்தையே இங்கும் தயாராக வைத்திருந்தாள் அல்லி. ஆனால் அவள் பயந்ததற்கு மாறாக, அவர்கள் யாரும் அவளை எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவளைக் கண்டு கொள்ளும் மன நிலையில் அங்கு யாரும் இல்லை என்பதே உண்மை.
எல்லோர் முகங்களும் வாடிப் போய் இருக்க, கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே சென்ற பெரியாத்தாவும் அல்லியும் அந்த சம்பவத்தை கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. வாயில் ரத்தம் ரத்தமாய் கக்கி இருக்க, அந்த இரத்த வெள்ளத்தின் மத்தியில் உயிரற்ற உடலாய் சரிந்திருந்தது கோமாதா.
“ஐயோ எங்க குல சாமி..!” என்று பெரியாத்தா பெருங் குரலெடுத்துக் கத்த, அந்த அழுகை அங்கிருந்த மற்றைய முகங்களையும் தொற்றிக் கொண்டது. வீடே ஓலமிட்டு அழ, அல்லி மட்டும் விதி விலக்கா என்ன..?
அவர்களது ஊருக்குள் பசு மாடுகள் வளர்ப்பது மிகவும் குறைவு. ஏதோ ஒரு காலத்தில், பட்டி பட்டியாய் நின்றிருந்த மாடுகள் திடீரென்று ஏற்பட்ட பெருமழையில் அழிந்ததிலிருந்து பெரும்பாலும் அங்கு பசு மாடுகளை வளர்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், பசு மாடு என்பது குல சாமி போன்றது. அதற்கு ஒரு அழிவென்றால், அது ஊருக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது அவர்களின் நம்பிக்கை. அதன் பின்னர் தொட்டம் தொட்டமாக ஓரிரு வீடுகளில் மாடு வளர்ப்பு இருக்க, அவர்களில் மூத்தவள் தான் சீதா மகாலக்ஷ்மி. அவளுக்கு இந்தப் பெயர் வைத்ததே பெரியாத்தா தான். அல்லிக்கும் ரத்னாவுக்கும் கூட செல்லப் பிள்ளை அவள். ஊருக்குள் எந்தக் கோவிலில் விசேஷம் என்றாலும், அந்த சாமியின் ஊர்வலம் ஒரு முறை என்றாலும் லக்ஷ்மியின் மேல் வைத்து நடைபெறும். அதற்கு ஏற்ற மாதிரி அவளைப் பழக்கப்படுத்தி இருந்தார்கள். அப்படிப்பட்ட லக்ஷ்மியை இன்று இந்தக் கோலத்தில் பார்த்தால் யாருக்குத் தான் மனம் கலங்காது..?
வழமையாக என்றால் அந்த அழுகுரலைக் கேட்டு முதல் ஆளாய் முன் நின்றிருப்பாள் அல்லி. ஆனால், இரு தினங்களுக்கு முன்னர் நடந்திருந்த சம்பவம் அவளது இயல்பையே முற்றாக மாற்றி இருந்தது. மனதிற்குள் மானசீகமாக லக்ஷ்மியிடம் மன்னிப்பு கேட்டும் மனது ஆறவே இல்லை அவளுக்கு. சடங்குகள் சம்பிரதாயங்கள் முடிந்து, லக்ஷ்மியை இறுதி ஊர்வலம் அனுப்பி வைப்பதற்குள் ரத்னாவும் அங்கே வந்து சேர்ந்திருக்க, மீண்டும் ஒரு ஒப்பாரி எழுந்து அடங்கியது.
அந்த நாள் அவர்களது ஊருக்கே கருப்பு நாளாகிப் போக, அங்கிருந்து வந்து விட்ட பின்னரும் கூட அல்லியின் அழுகை அடங்கியபாடில்லை.
“இதுலாம் நாம செஞ்ச பாவம் தான்… அது நம்ம லக்ஷ்மியை வந்து பிடிச்சிருக்கு ஆத்தா… அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை… நேத்து கூட சித்ராம்மா வீட்டுப் பக்கமா போனப்போ பாத்தேன்… வழமையா என்னைப் பாத்தா… ‘ம்மா..’ ன்னு கத்துவா… நேத்து என்னைப் பாத்ததும் வெடுக்குன்னு முகத்தை திருப்பிக்கிட்டா… இன்னைக்கு கூட அவளுக்கு ஒரு பிரச்சினைன்னதும் நான் போய் பாக்கல இல்ல… ரொம்ப சுயநலவாதியா மாறிட்டேன் நான்… எனக்கு தெரியும்… இது இதோட நிக்கப் போறதில்லை… இதெல்லாம் முந்த நாள்ல இருந்தே ஆரம்பிச்சிடிச்சு…” என்றபடி அல்லி கதறி அழ, “முந்த நாள் என்னாச்சு க்கா..?” எனக் கேட்டபடியே பெரியாத்தாவையும், அல்லியையும் புரியாமல் பார்த்திருந்தாள் ரத்னா.
– அல்லி மலரும்…
No comments yet.