Episode 6

ஶ்ரீ துர்க்கா | 03 Dec 2025 | Share

அல்லி 6

சைரன் ஒலி கேட்ட மாத்திரத்தில் தூக்கிவாரிப் போட்டது அல்லிக்கு. அவர்களது வீடு இருந்த பகுதி சற்று உட்புறமானது தான். அதற்குள் போலீஸ் ஜீப் வருவது மிக மிக அரிது. மீறி வருகிறார்கள் என்றால், கட்டாயம் ஏதாவது விவகாரமாக தான் இருக்கும்‌. ஒரு வேளை, காலையில் தாம் செய்து விட்ட காரியம் அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ..? என நினைத்த மாத்திரத்தில் அல்லியின் உயிர் அவளிடத்தில் இல்லை. 

சைரன் ஒலி கேட்பதும், பின் கொஞ்ச நேரம் அமைதியாய் இருப்பதும், பின்னர் மீண்டும் கேட்பதுமாக இருக்க, வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வாழ்க்கை வெறுத்தது அல்லிக்கு. நல்ல வேளையாக பெரியாத்தா, அல்லி இருந்த தைரியத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்ததால், இது எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. இல்லா விட்டால் அவரே நடந்து முடிந்திருந்த அத்தனையையும் வாக்குமூலமாக இந்த போலீஸ்காரர்களிடம் ஒப்புவித்திருப்பார்.

“ஏன்டீ, போலீஸ் வண்டி சத்தம் கேக்குது… நம்ம வீட்டுக்கு தான் வர்றாங்க போல… நீ கொலை கிலை ஏதாவது பண்ணிட்டு, பொணத்த பொதைச்சு கிதைச்சு வச்சுட்டியா என்ன..?” என்று ரத்னா விளையாட்டாய்க் கேட்கவே, வியர்த்து விறுவிறுத்துப் போனது அல்லிக்கு. 

“பெரியாத்தா தான் படுத்திருக்குது இல்ல..? மூடிட்டுப் போய் வேலையைப் பாரு ரத்னா…” என அவளில் எரிந்து விழ, “நான் விளையாட்டா தானே கேட்டேன்… சத்தமா கூட கேக்கல… இன்னிக்கு ஃபுல்லா என்மேல எரிஞ்சு விழுந்துட்டே இருக்க…” என்றபடியே முகத்தை முக்கால் முழத்துக்கு தூக்கிக் கொண்டு திரும்பினாள் ரத்னா. அவளைப் பார்க்கவும் பாவமாகத் தான் இருந்தது அல்லிக்கு. தவறை இவர்கள் செய்து விட்டு, அவள் மேல் கோபத்தைக் காட்டிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்..?

அவள் சிந்தித்தபடியே இருக்க, போலீஸ் ஜீப் வந்து அவர்களது வாசலில் நின்றது. 

“அக்கா..! போலீஸ்காரங்க வந்திருக்காங்கடி…” என்றபடியே அல்லியிடம் ஓடி வந்தாள் ரத்னா.

“பயப்பிடாத, நான் பாத்துக்கிறேன்… நீ என்கூட வந்தா மட்டும் போதும்…” என்றவள், ரத்னாவையும் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வரவும், போலீஸ் அதிகாரி ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களது கேட்டை தாண்டி வரவும் சரியாக இருந்தது. 

“வணக்கம்மா… நான் இன்ஸ்பெக்டர் பூங்குன்றன்…” என்றவருக்கு கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கலாம். பதிலுக்கு தானும் வணக்கம் தெரிவித்து, அவரை உள்ளே அழைத்தாள் அல்லி. அவர் பேசிய தொனியில் இருந்தே, தங்களுடன் தொடர்பான சம்பவத்தின் பேரில் சந்தேகம் கொண்டு வரவில்லை என்று தெரிந்து போயிற்று அல்லிக்கு. அதனால் கொஞ்சமே கொஞ்சம் இயல்பு நிலையில் இருக்க முடிந்தது அவளால். 

உள்ளே வரச் சொன்ன அல்லியின் அழைப்பை மென்மையாக மறுத்தவர், நேரே விடயத்திற்கு வந்தார். 

“நாங்க ஒரு முக்கியமான விசயத்துக்காக தான் வந்திருக்கோம் ம்மா… எல்லாருக்கும் அறியத் தர வேண்டியதிருக்கு… அதனால தான் உள்ள வர முடியல… சாரி…”

“ஓஓ… பரவாயில்லைங்க சார்… சொல்லுங்க…”

“ம்ம்…” என்றவர், தன் மொபைலில் எதையோ தட்டிப் பார்த்து விட்டு, சட்டென்று அந்த புகைப்படத்தை அல்லியின் முன் நீட்டினார். அதில் அழகாக சிரித்தபடி போஸ் கொடுத்து கொண்டிருந்தாள் காலையில் அவர்கள் சமாதி கட்டிய அந்த இளம் பெண்..!

இதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை அல்லி. இதயம் வெளியே வந்து விடுமளவிற்கு தாறுமாறாகத் துடித்தது. எவ்வளவு முயன்றும், அவளால் இயல்பாய் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே முடியவில்லை. பெரிய பெரிய மூச்சுகளாக அவள் எடுத்து விட, “அக்கா என்னாச்சுடி..?” என்றபடி அவளைத் தாங்கிப் பிடித்து, நெஞ்சை நீவி விட்டாள் ரத்னா. 

“என்னாச்சு..?” என்ற பூங்குன்றனுக்கு, அல்லியின் இந்தப் பதற்றத்திற்கான காரணம் பிடிபடவே இல்லை. 

“அக்காக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை சார்… வீசிங் ப்ராப்ளம் இருக்கு… இன்னைக்கு மழை பெஞ்சுதில்ல..? இந்த நிலத்துல ரொம்ப நேரம் வெறுங்கால்லயே நின்னுட்டிருக்கதால உடம்புல குளிர் ஏறிட்டுன்னு நினைக்கிறேன்…” என்ற ரத்னா, மெல்ல அல்லியைத் தாங்கலாகப் பிடித்து வந்து அவள் வழமையாகப் பயன்படுத்தும் இன்ஹேலரை கொடுக்க, அதை வாங்கி இரண்டு பஃப்களை எடுத்த பின்னர் தான் ஓரளவு ஆசுவாசமாக மூச்சு விட முடிந்தது அல்லிக்கு. 

எப்போதும் இந்த ஆஸ்துமாவை நினைத்து அவள் எரிச்சல் படாத நாளே கிடையாது. ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது சற்று குறைந்திருந்தாலும், எப்போதாவது அவளுக்கு வீசிங் வருவது வழக்கம் தான். முதல்முறையாக இன்று தான் அந்த ஆஸ்துமா அவளுக்கு வரமானதை உணர்ந்து கொண்டாள் அல்லி. உண்மையில் அவளுக்கு மூச்சு வாங்கியது அந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து தான். நல்ல வேளையாக ரத்னாவே ஒரு காரணத்தை ஊகித்து, அதை பிசிரில்லாமல் சொல்லி இருக்க, அது நம்பும் படியாகத்தான் இருந்தது பூங்குன்றனுக்கு. 

“சாரி ம்மா… உங்க உடல்நிலை தெரியாம கஷ்டப்படுத்திட்டேன்… உங்களோட நம்பர் குடுங்க… நானே கான்டாக்ட் பண்ணி பேசுறேன்…” என்றவர், நம்பரை வாங்கிக் கொண்டு நகர்ந்த பின்னர் தான் அல்லிக்கு முழுமையாக உடல்நிலை சீரானது‌. ஆனால், அவர் பேச வந்த விடயத்தை பேசி முடிக்காமலே சென்றது, ‘இது இத்துடன் முடியப் போவதில்லை..’ என்பதை அவளுக்கு மீண்டும் ஒரு முறை அழுத்தமாக சொன்னது..!

                   ✯✯✯✯✯

தழைய தழைய புடைவை கட்டி ஒயிலாய் நடந்து வந்து கொண்டிருந்த தென்றலையே இமைக்காது பார்த்திருந்தான் எழில். இன்னும் சொற்ப நேரம் தான், அவள் அவனுக்கானவள் என்ற அந்தஸ்தை முழுமையாக அடைந்து விடுவாள். பார்த்து பார்த்து காதல் செய்த உறவு, இன்னும் கொஞ்ச நேரத்தில் கைகூடப் போகிறது என்ற பரவசம் எழிலனுக்கு. 

சடங்குகள் சம்பிரதாயங்கள் முடித்து, ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’ என்ற ஐயரின் வாசகத்தோடு, உற்றார் உறவினர் அனைவரதும் வாழ்த்துகளுடன் மூன்று முடிச்சிட்டு தென்றலைத் தன்னவளாக்கிக் கொண்டான் எழிலன். தென்றலின் உணர்வுகளையோ சொல்லவே தேவை இல்லை, இறக்கை இல்லாமலே பறந்து கொண்டிருந்தாள் அவள். எழில்-தென்றல் இருவர் வாழ்விலுமே மறக்க முடியாத பொக்கிஷ நாளாகிப் போனது அது..!

விருந்து, கேளிக்கை கொண்டாட்டம் என கல்யாண வீடே களைகட்டி இருக்க, சற்று தள்ளி சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் தெய்வேந்திரன். அருகில் அவர் மனைவி தெய்வீகா.

“மாப்பிள்ளை கிட்ட எப்படிங்க சொல்லப் போறோம்..?” 

யோசனையாய் கேட்ட மனைவியிடம், தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி சமாளித்தார் தெய்வேந்திரன். இருந்தாலும் அவருக்கும் கொஞ்சம் யோசனையாக தான் இருந்தது.

“என்ன சம்பந்தி ஐயா கலக்கமா உக்காந்திருக்கீங்க..? ஏதாவது பிரச்சனையா…” என்றபடியே அருகில் வந்து, தெய்வீகாவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் நீலாம்பரி, எழிலனின் அன்னை.

“வந்து ம்மா…” என தெய்வேந்திரன் தயக்கமாய் இழுக்க, ‘ம்கும்… இந்த லட்சணத்தில தான் எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்னு சொன்னாராக்கும்…’ என மனதினுள் மறுகியபடியே, நீலாம்பரியிடம் ஆரம்பித்தார் தெய்வீகா.

“எல்லாம் நல்ல விசயம் தான்மா… சாந்தி முகூர்த்தத்துக்கு, ஒரு தடவ ஜோசியரை பாத்து நல்ல நேரமா குறிச்சுக்கிட்டோம்னா நல்லதுன்னு யோசிச்சோம்… அதான் உங்களையும் ஒரு தடவ கலந்துக்கிட்டு பண்ணலாம்னு…’

“அடடா… அதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க..? உங்க குடும்ப ஜோசியர் கிட்டவே ஜாதகத்தை குடுத்து பாக்க சொல்லிடலாம்… நான் கூட உங்க முகத்தை பாத்துட்டு ஏதோ பிரச்சினையோன்னு நினைச்சுட்டேன்…”

“ச்சே ச்சே… அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா…”

“அப்படீன்னா சரி… நான் விருந்த கொஞ்சம் கவனிச்சுட்டு இருந்தேன்… என்ன ஏதுன்னு பாத்துட்டு வரேன்… இங்க வந்த எல்லாரோட வயிறும் மனசும் நிறைஞ்சு போகணும்…” என்றபடியே எழுந்து கொண்டார் நீலாம்பரி.

அவர் அப்பால் நகர்ந்த மறுகணமே, இங்கு தெய்வீகாவைப் பார்த்து “ஏன்டீ மறைச்ச..?” என்றார் தெய்வேந்திரன்.

“இதுல சம்பந்தப்பட்டிருக்கிறது அவங்களும் தான்ங்க… இப்படி ஒரு பிரச்சினை நம்ம பொண்ணுக்கு இருக்குன்னு தெரிஞ்சா ரொம்ப பயந்து போயிடுவாங்க… அது தென்றலுக்கும் நல்லதில்லை, நம்ம மாப்பிள்ளைக்கும் நல்லதில்லை. அதனால தான் சொல்லல… நம்ம தென்றலோட ஜனன ஜாதகப்படி அவ இருபத்தாறு வயசு கடந்துட்டான்னா எந்தப் பிரச்சினையும் இல்லாம நிம்மதியா இருப்பான்னு சொல்லி இருக்காங்க… இப்ப அவளுக்கு இருபத்தாறாவது வயசு நடந்துட்டு இருக்கு… கடவுளேன்னு அவ நல்லபடியா இந்த வயச கடந்துட்ட பிறகு, குழந்தைங்கிற விசயத்தை பத்தி நம்ம யோசிக்கலாம்னு நம்ம ஜோசியர் ஐயா சொல்லி இருக்கார்… இதெல்லாம் நம்ம சம்பந்தி வீட்டுல சொல்லி அவங்கள குழப்புறத விட, சம்பிரதாயம் மாதிரி சொல்லி அவங்கள சமாளிக்கிறது பெட்டர்னு தோணுச்சு… அதான்…”

“கெட்டிக்காரி தான் தெய்வா நீ… இந்த யோசனை எனக்கு வராமப் போயிடுச்சு பாரு…”

“உங்களுக்கு எப்படி வரும்..? ‘எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்’னு சொல்லிட்டு, அவங்கள பாத்ததும் பம்புன ஆளு தானே நீங்க…” என்று சொல்லிக் காட்டிய பின் தான் கொஞ்சமாவது மனது ஓய்ந்தது தெய்வீகாவிற்கு.

“நான் என்ன பண்ணறது..?” என ஆரம்பித்த தெய்வேந்திரன், மனைவியின் பார்வையில் கப்சிப் என அடங்கிக் கொண்டார். 

திருமணம், தெய்வேந்திரன் எதிர்பார்த்ததை விட மேலாகவே சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. ஒரு மாதிரி, நீலாம்பரியிடம் சொல்லி சாந்தி முகூர்த்தத்தை நல்ல நாள் பார்த்து வைத்துக் கொள்ளலாம் என எழிலனிடமும் தெரிவித்தாயிற்று. உண்மையை சொல்லப் போனால் எழிலனுக்கு அதில் பூரண சம்மதம் தான். தூரத்தில் இருந்தே தென்றலைப் பார்த்து பழகி இருந்தவனுக்கு, அவளுடனே இருந்து அவளுக்கு திகட்ட திகட்ட காதலைத் தந்து, தம்மை மறந்த நிலையில் இணைய வேண்டும் என்பதே பேரவா ஆக இருந்தது அவனுக்கு. ஆனால் தென்றலுக்கு, அவர்களது காதலை இன்னும் முழுமையாக்கக் கூடிய மகவை இப்போதே பெற்றெடுக்க வேண்டும் என்ற ஆசை. யார் எதை விரும்பி இருந்தாலும், விதி என்னமோ எழிலனின் பக்கம் தான் நின்று கொண்டது. 

தென்றலுக்கு இருபத்தாறு வயது முடிந்த பின்னர் தான் மற்றையதைப் பற்றி சிந்திக்க முடியும் என அவர்களது குடும்ப ஜோசியர் கறாராக சொல்லி விட, பரிகாரம் பூஜை என்று எதற்குமே இடமில்லாமல் போனது அங்கே. தென்றலுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருப்பது அவளது தாயையும் தந்தையையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது, தென்றலுக்கும் தான். 

விடியல் பொழுது கடந்து, மாலை கவிந்து, இரவாகி விட்ட பின்னரும் கூட உறவினர்கள் வரப்போக தான் இருந்தார்கள்‌. கிட்டத்தட்ட இரவு பத்தரை மணி வாக்கில் ஓரளவு ஓய்வுக்கு வந்து, நெருங்கிய உறவினர்கள் ஒருசிலர் மாத்திரம் வீட்டில் தங்கிக் கொண்டார்கள். தென்றலும் எழிலனும் படுக்கைக்கு செல்ல பதினொரு மணி ஆகிற்று. முந்தைய தினத்தில் இருந்து இருவருக்கும் நித்திரை இல்லாததால், அசதியிலேயே ஆழ்ந்து உறங்கிப் போனார்கள் இருவரும். 

கனவா, கற்பனையா அல்லது நிஜமா எனப் பிரித்தறிய முடியாத ஒரு சூழலில் நின்று கொண்டிருந்தாள் தென்றல். சுற்றிலும் மயான அமைதி நிலவியிருக்க, சட்டென யாரோ கடந்து போனது போல் இருந்தது அவளுக்கு. பயந்து போய் ஈரடி பின்னோக்கி எடுத்து வைத்தவள், நிமிர்ந்து பார்க்க அவள் முன்னால் கரும்புகையாய் ஏதோ நின்றிருந்தது. என்னவென உணர்ந்து அவள் கத்த வாயைத் திறக்கும் முன்னரே, நொடி நேரத்தில் அந்த கரும்புகை அவளை சூழ்ந்து கொள்ள, தன்னிலை இழந்து மயங்கிச் சரிந்தாள் தென்றல்..!

                          – அல்லி மலரும்…

    No comments yet.