அல்லி 5
அல்லியும் ரத்னாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்த போது மழை முற்றிலுமாய் ஓய்ந்து விட்டிருந்தது.
“இங்க மழை பெஞ்சுதா என்ன..?” என ஆச்சரியமாக கேட்டபடியே அல்லியின் ஸ்கூட்டியில் இருந்து இறங்கினாள் ரத்னா.
“ம்ம்… நல்ல மழை… உன்ன பிக்கப் பண்ண வரும்போது நானுமே ரெய்ன் கோர்ட் லாம் போட்டுக்கிட்டு தான் வந்தேன்… ஆனா அங்க துளி கூட மழை இல்லை…”
“ம்ம்… பெரியாத்தா எங்க போச்சு..? சத்தத்தையே காணோம்…” என்று கேட்டபடியே உள் நுழைந்தாள் ரத்னா. வழமையாக என்றால், பெரியாத்தா வானொலியில் கேட்கும் பாடல்கள் வாசலில் வரும் போதே காதில் நாரசாரமாக ஒலிக்கும். ஆனால் இன்று, எல்லாமுமே அமைதியாக இருந்தது.
“ஆமாடி… வழமையா பழைய பாட்டு ஏதாவது கேட்டுட்டு இருக்கும்… இன்னைக்கு எதையுமே காணோம்..?” என எதுவும் தெரியாதவள் மாதிரியே சொன்னாள் அல்லி. அதே நேரம், பெரியாத்தாவைக் கண்ட பின் தான் ஆறும் என்றது மனது. இருவரும் சத்தமாய் அழைத்தபடியே உள்ளே செல்ல, அங்கு பெரியாத்தா இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
“எந்த நேரத்துல கானாங்குருவின்னு பேரு வச்சாங்களோ தெரியல, இந்த ஆத்தா காணாம காணாம போயிட்டு இருக்கு… ஏம்மா, கானாங்குருவி..! கொஞ்சம் வெளிய வந்து உன் திருமுகத்த காட்டும்மா…” என்று சத்தமாய்க் கத்தியபடியே ஒவ்வொரு அறையாய்த் தேடினாள் ரத்னா. அல்லிக்கு தான் உள்ளுக்குள் மனது படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. தன்னிச்சையாய் வெளியே சென்று, அந்தப் பலாமரத்தை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு திரும்பப் போனவள், சட்டென்று நின்றாள். அந்த பலா மரத்திற்கு அடியில் வெள்ளையாய் ஏதோ ஒன்று அமர்ந்திருந்தது. மழை பெய்து மப்பு கட்டி இருந்ததால், அது யாரென்று சரியாக கிரகிக்க முடியவில்லை அல்லியால்.
ரத்னா, இத்தனை நேரம் தேடியும் பெரியாத்தாவைக் காணக் கிடைக்காததால் தனது மொபைலை எடுத்து அவருக்கு அழைத்துக் கொண்டிருப்பது தெரிய, அவளிடம் சத்தமே காட்டாமல் பின் வாசல் வழியாக தோட்டத்திற்கு இறங்கி, அந்த உருவத்தை நோக்கி பயத்துடனே நடக்கலானாள் அல்லி. சற்று நெருங்கி செல்ல செல்ல தான், அங்கு அமர்ந்திருப்பது பெரியாத்தா என்றே தெரிந்தது அல்லிக்கு. அவர் அமர்ந்திருந்த தோரணை வேறு பயத்தைக் கொடுக்க, தயங்கித் தயங்கி அவருக்கு அருகில் வந்தவள், அவரது தோளைத் தொட வெடுக்கென்று திருப்பினார் பெரியாத்தா. அவர் திரும்பிய திரும்பலில் ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது அல்லிக்கு.
சட்டென எழுந்து கொண்டவர், “அல்லி… பயமா இருக்குடி…” என்று கலங்கியபடியே அவளை அணைத்துக் கொண்டார்.
அவரது குரலைக் கேட்ட பிறகு தான் அல்லிக்கு மூச்சே வந்தது. ஆசுவாசமாய் அவரது முதுகைத் தடவி விட்டவள், “என்னாச்சு ஆத்தா..?” என்றாள் கனிவாய்.
“நீ என்னை விட்டுட்டு போனதுல இருந்து இங்க எதுவுமே சரி இல்லை அல்லி… ஏதேதோ சத்தம்லாம் கேட்டுட்டு இருக்கு… திடீர்னு குடலைப் புடுங்கற அளவுக்கு கெட்ட வாடை கூட வந்திச்சு… எனக்கு எதுவுமே சரியாப் படல… பேசாம இந்தப் பொணத்த போலீஸ்ல ஒப்படைச்சுடலாம்டி… இத இங்க பொதைச்சதுக்கப்புறம் தான் எல்லாமே தாறுமாறா நடக்குது… நீ போலீஸுக்கு ஃபோன் பண்ணு அல்லி…”
“ப்ச் ஆத்தா… என்ன, நினைச்சு நினைச்சு கல்யாணம் முடிச்சுட்டு இருக்கியா நீ..? இப்ப போய் போலீஸ் கீலிஸுனு பேசிட்டு இருக்க… காலங்காத்தாலயே கேட்டேன்ல..? அப்பவே சரின்னு சொல்லித் தொலைச்சிருக்க வேண்டியது தானே..? முன்னாடின்னா கூட போலீஸ் எங்களோட பக்கம் கொஞ்சமாச்சு சாஃப்ட் கார்னர்ல யோசிச்சிருப்பாங்க… இப்ப போய் நின்னோம்னா, கன்ஃபர்மா நீயும் நானும் ஜெயில்ல களி திங்க வேண்டியது தான்… இங்க பாரு ஆத்தா, இன்னைக்கு நம்ம எதிர்பார்க்காத எத்தனையோ விசயங்கள் நடந்து முடிஞ்சிடிச்சு தான்… இன்னும் நாலு நாள் கடந்திடிச்சுன்னா இப்படி ஒரு விசயம் நடந்ததுங்கிறதே நம்மளுக்கு மறந்து போய்டும்… நீ முதல்ல உள்ள வா… எதுக்கு இப்போ இங்க வந்து உக்காந்திருக்க..?”
“நானா வரல…”
“அப்பறம்..?”
“யாரோ கூட்டிட்டு வந்தாங்க… யாருன்னு தெரியல…”
“ப்ச், எதையாவது சொல்லி என்னை பயமுறுத்திட்டே இருக்காத ஆத்தா… இதையெல்லாம் ரத்னாட்ட தயவு செஞ்சு உளறித் தொலைச்சுடாத… நீ ரொம்ப குழம்பி போய் இருக்க… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தீன்னா சரி ஆகிடும்… நான் உன் கூட இருக்கேன், நீ கொஞ்ச நேரம் படுத்து தூங்கு… ரத்னா வந்திருக்கா… அவ சமைக்கட்டும் மதியத்துக்கு…”
“ரத்னா வந்துட்டாளா..?”
“ம்ம்… நான் தான் கையோட கூட்டிட்டு வந்தேன்… நீ காலைல சாப்பிட்டியா இல்லையா..? ரொம்ப சோர்ந்து போய் இருக்க…”
“மூணு இடியாப்பம் சாப்பிட்டேன்… அதுக்கு மேல இறங்கல…”
“இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணு… ஹெல்த்கு நல்லது…”
“திட்டாதடி… நானே ரொம்ப டயர்டா இருக்கேன்…” பேசியபடியே வீட்டினுள் வந்திருந்தார்கள் இருவரும்.
“என்னடி தோட்டத்தில இருந்து கூட்டிட்டு வர்ற ஆத்தாவ… இந்த மழைக்கு பிறகும் வெளிய போய் இருந்துட்டு வரியா ஆத்தா நீ..? ஏற்கனவே பீனிசம் இருக்கு உனக்கு… எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்ட இல்ல…” என ரத்னாவும் அவள் பாட்டுக்கு வைது வைக்க, பெரியாத்தா பாடு தான் திண்டாட்டமாகிப் போனது. அல்லி தான் இருவரையும் ஓரளவு சமாளித்து விட்டு பெரியாத்தாவை தூங்க வைக்க, அவர் உறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்களது வீட்டிற்கு சற்று தூரத்தில் கேட்டது போலீஸ் ஜீப் சைரன் ஒலி..!
✯✯✯✯✯
ரோஜாப்பூ இதழ்களைக் கொண்டு ஜோடனையாய் எழுதப்பட்டிருந்தது எழிலனதும் தென்றலதும் பெயர்கள். ‘பேரெழிலன் வெட்ஸ் இளந்தென்றல்’ என்ற வாசகத்தை ஒரு முந்நூறு முறையாவது பார்த்து பார்த்து மனதில் பதித்திருப்பாள் தென்றல்.
முன்பெல்லாம் இந்த பெயருக்காகவே சண்டை வரும் அவர்கள் வீட்டில். தேடிப் பார்த்து, பத்தாம் பழசாக ஒரு பெயரை வைத்ததாக அடிக்கடி வாய்த்தகராறு வரும் தெய்வேந்திரனுக்கும் அவளுக்கும். ஆனால் அந்தப் பெயரின் மகிமையை எழில் சொல்லித் தான் உணர்ந்து கொண்டாள் அவள். எழிலுக்கு தென்றலிடம் முதலில் பிடித்ததே அவளுடைய பெயர் தானாம். அதன் பின்னரும் அவள் தகப்பனுடன் மல்லுக் கட்டுவாளா என்ன..? அன்றிலிருந்து தெய்வேந்திரன் தெய்வமாகிப் போனார் அவளுக்கு.
எல்லோருக்கும் அவள் தென்றல் தான், ஆனால் எழில் அவளைத் தென்றல் என்று அழைப்பது மாத்திரம் தனித்துவமாகத் தோன்றும் அவளுக்கு. எழிலிடத்தில் லயித்திருந்தவள், அப்படியே அவர்களது முதல் சந்திப்பு நினைவுக்கு வர மெல்லியதாய் சிரித்துக் கொண்டாள்.
“ஏஏ தென்றலு… எத்தனை தடவடி கூப்பிட்றது உன்னை..?” என்றபடி பொளீரென்று அவள் முதுகில் ஒரு அடி வைத்தாள் நக்ஷத்திரா.
“ஹே நட்டு… நீ எப்ப டீ அமெரிக்காவில இருந்து இந்தியாவுக்கு வந்த… சொல்லவே இல்லை பாத்தியா என்கிட்ட..?”
பல வருடங்கள் கழித்து தோழியைக் கண்டுவிட்ட கிளுகிளுப்பில், ஒரு கிலோ சந்தோஷம் ஏறிப் போனது தென்றலுக்கு.
“நட்டு குட்டுன்ன அவ்ளோ தான் சொல்லிட்டேன்… என்னை நக்ஷு ன்னு ஸ்டைலா கூப்பிடுடி… ஆமா, உன்னை மேக் அப் பண்றதுக்கு பாத்துட்டு இருக்காங்க அங்க… நீ என்னடான்னா, ராத்திரி ரெண்டு மணிக்கு வீட்டு வாசல்ல நின்னு மனுசன கனவு கண்டுட்டு இருக்க…”
“ஆத்தாடி… நேரம் ரெண்டு மணி ஆகிடுச்சா..? காத்து கருப்பு உலாவுற இந்த நேரத்துல தான் இங்க நின்னு வாய் பாத்துட்டு இருக்கேனா நான்..? ஆமா… நான் இங்க எப்படி வந்தேன்… யாரு என்னை வாசலுக்கு கூட்டிட்டு வந்தா..?” என தென்றல் அம்னீஷியா பேஷன்ட் போல் பேச, “ப்ச் வந்து சேருடி… ஆ ஊன்னா அப்படியே நடிப்ப போடுவா இவ…” என அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் நக்ஷத்திரா.
“ஏங்க, இங்க பாருங்க தென்றல் வந்துட்டா… ஏன்டீ, என்னடி ஆச்சு உனக்கு.. எங்கடி போன..?” என்று தேமே என்று நின்று கொண்டிருந்த தெய்வேந்திரனையும் சுரண்டி விட்டுக் கொண்டு, தென்றலிடம் பாய்ந்தார் தெய்வீகா. தென்றலின் அன்னை அவர்.
“இல்லம்மா… வாசல்ல தான் நின்னுட்டு இருந்தேன்…”
“கொஞ்சமாச்சும் கூறு இருக்காடி உனக்கு..? கல்யாணம் ஆகப் போற பொம்பளப் புள்ள காலங்காத்தால எந்திரிச்சு போய் வாசல்ல நின்று வாய் பாத்துட்டு வந்திருக்க… வாடி, முதல்ல உனக்கு சுத்தி போட்டுட்டு தான் மத்த வேலை பாக்கணும்…” என்றவர், நக்ஷத்திராவிடம் சொல்லிக் கொண்டு தென்றலை விறுவிறு என்று இழுத்துக் கொண்டு சென்றார்.
“சும்மா சும்மா என்னை திட்டாதம்மா… நாளைல இருந்து இன்னொரு வீட்டுக்கு போய் வாழப் போற பொண்ண இப்படியா திட்டுவ நீ..?” என சிணுங்கிக் கொண்டே, தாயாரின் இழுப்புக்கு இசைந்து கொடுத்தபடி சென்றாள் தென்றல். வேறு ஏதேனும் சொல்லி இருந்தால், வாயிலேயே இரண்டு கொடுத்திருப்பார். ஆனால் மகள் தான் உணர்வுபூர்வமாய்த் தாக்குதல் நடாத்தி விட்டாளே..?
தென்றலுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து, தாய்க்கும் தந்தைக்கும் இதே நினைவு தான். ஒரே மகளாய், செல்லப் பிள்ளையாய் வளர்த்து விட்டிருந்தவளை இன்று இன்னொருவர் வீட்டிற்கு தன்னந்தனியே அனுப்புவதென்றால் அந்த வேதனை வார்த்தைகளில் வடித்து விட முடியாதது தானே..? அதற்காக பெண் பிள்ளையை வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருக்க முடியுமா என்ன..?
எதுவும் பேசாமல் தெய்வீகா முன்னோக்கி செல்ல, அவர் தென்றலைப் பிடித்திருந்த பிடி மாத்திரம் கொஞ்சம் தளர்ந்திருந்தது. மூன்று செத்தலையும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து எடுத்துக் கையில் வைத்துக் கொண்டவர், அவளை சுற்றி மூன்று முறை ஆரத்தி போல் காட்டி விட்டு, அவள் மூன்று முறை அதனுள் துப்பியதும் வீட்டு வாசலில் மூலையாய் கொண்டு சென்று அதை எரித்து விட்டு வந்தார்.
அன்னையின் முகமாற்றத்தைக் கண்டு கொண்ட தென்றலுக்கு தான் ஒரு மாதிரியாக ஆகி விட்டது. அவர்களைத் தள்ளி இருப்பது என்பது அவளுக்குமே முடியாத காரியம் தான். ஆனால் இது தான் நியதி என்றாகி விட்ட பிறகு அவளும் தான் என்ன செய்து விட முடியும்..?
செத்தல் எரித்து விட்டு வந்த தெய்வீகாவின் முகம் கலவரமாய் இருந்தது. முன்னர் வேதனையில் வாடியிருந்த முகம் இப்போது பயத்தில் வாடியிருந்தது.
“என்னாச்சும்மா..?” என்றாள் தென்றல் அவசரமாய் அவரிடத்தில் சென்று.
“என்..ன என்னா..ச்சு..? தனியா போய் திருஷ்டி எரிச்சுட்டு வர்றதுக்குள்ளவே அவ்வளவு பயமா இருக்கு என..க்கு… நீ என்னடான்னா இந்த நேரத்துல அங்க நின்னு கனவு கண்டுட்டு இருந்திருக்க… சீக்கிரமே குளிச்சுட்டு சாமி கும்பிட்டு வா… உனக்கு மேக்கப் பண்ணிக்கலாம்… நேரம் போயிட்டே இருக்கு…” என்றவர் தென்றலை இழுத்துச் சென்று குளியலறையில் தள்ளி கதவைச் சாத்தினார்.
அவள் திரும்பி வருவதற்குள் தன் கணவரிடம் ஓடி வந்தவர், “என்னங்க..?” என்றார் பதற்றமாய் தெய்வேந்திரனிடம். நல்ல வேளையாக தெய்வேந்திரன் தனியாக நின்றிருந்ததால் அவர்களை யாரும் கவனிக்கவில்லை.
“என்னாச்சு தெய்வா… எதுக்கு இப்படி பேயைப் பாத்த மாதிரி பயந்துக்கிட்டு ஓடி வர்ற..?”
“நிஜமாவே பாத்துட்டேன் ங்க…” என்றார் பதற்றத்தில் நா தந்தி அடிக்க தெய்வீகா.
“என்..ன பா..த்த…?”
“கரு..ப்பா… புகையா… ஏதோ ஒண்ணு… நம்ம வீட்டு..க்கு கொஞ்ச..ம் தள்ளி நின்..னு…”
“வாட்… அப்போ உனக்கும் அது தெரிஞ்சுதா..?” என்ற தெய்வேந்திரனை அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார் தெய்வீகா.
– அல்லி மலரும்…
No comments yet.