அல்லி 46
யார் இருக்கிறார்களோ இல்லையோ சட்டம் அது பாட்டிற்கு தன் கடமையை செய்து கொண்டு தான் இருந்தது. அதன்படி, நீலாம்பரியினதும் வந்தனாவினதும் கடமைகளை முடித்த கையோடு, அத்திப்பட்டு ஊர் மக்களின் இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கு மருத்துவ குழாம் ஒன்று ஆஜராகி இருந்தது. சில ஏற்பாடுகளின் பின்னர் வேக வேகமாக, அதே நேரம் நிதானமாக தம் கடமையை செய்ய ஆரம்பித்திருந்தனர் அக் குழுவினர்.
இன்னொரு பக்கம் அன்பழகனின் வழக்கு விசாரணை நீதிமன்றிற்கு வந்திருந்தது. பூங்குன்றன் இறக்கும் தருவாயில் அன்பழகனுக்கு கைப்பேசியில் அழைத்திருந்ததும், அவர் இறந்த நேரத்தில் அன்பழகன் தன் மனைவி மகன் விவகாரமாக வெளியூர் வைத்தியசாலையில் நின்றிருந்ததும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டதால் அவரை தண்டனை இன்றி, அதே நேரம் க்ரைம் சீனை பாதுகாக்காமல் போனதால் ஒரு சிறு தொகை அபராதத்துடன் விடுதலை செய்திருந்தது நீதிமன்றம்.
அன்றைய தினம் மூன்றாம் நாள் பூஜையும் இனிது நிறைவேறி இருக்க, அன்றைய இரவும் அத்திப்பட்டு மக்களுக்கு தூங்காத இரவாகித்தான் போனது.
அடுத்த நாள் காலை எட்டு மணியளவில் ஏற்காட்டில் இருந்து புறப்பட்டிருந்தனர் இனியா, வாசுதேவன், ரிஷிகேஷ் மூவரும். ரிஷிகேஷ் தன்னுடன் சில பொருட்களை எடுத்து வர வேண்டி இருந்ததால், தமது காரை விடுத்து வேன் ஒன்றை ஒழுங்குபடுத்தி அதில் மூவரும் பயணித்துக் கொண்டிருந்தனர். முதல் நாள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டிராத போதும், அந்த அமானுஷ்யத்தை அடக்குவதைப் பார்க்கும் ஆவலில் அவர்களுடன் இணைந்திருந்தார் வாசுதேவன். ஆனால் அவ்வளவாக எதுவும் பேசும் நிலையில் அவர் இல்லை. இனியாவும் ரிஷிகேஷும் மாறி மாறி வேனை செலுத்தி அத்திப்பட்டுக்குள் நுழையும் போது நேரம் சரியாக ஒரு மணியைத் தொட்டிருந்தது. ஏற்கனவே இவர்கள் வருவதாக சொல்லி இருந்ததால் நுழைவாயிலில் நின்றே அவர்களை அழைத்துச் சென்றார் அத்திப்பட்டு போலீஸ் உத்தியோகத்தர் மார்க்கண்டேயன்.
“ரொம்ப நன்றி மேடம் எங்களுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்து உதவி பண்றதுக்கு…”
“உங்களுக்கு உண்மையா உதவி பண்ணப் போறது ரிஷி சார் தான்… அவருக்கு தான் நீங்க நன்றி சொல்லணும் சார்…”
“ரொம்ப நன்றி சார்…” என்ற மார்க்கண்டேயரின் உணர்வு பூர்வமான வார்த்தைகளை, சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் ரிஷிகேஷ் .
“சார், உங்களுக்கு வசதின்னா ரிஷி சார் இப்பவே வேலையை ஆரம்பிச்சுடுவாங்க…”
“ஷ்யூர் மேடம்… உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நாங்க தாராளமா செய்ய தயாரா இருக்கோம்… சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் சாரும் இன்னைக்கு காலையிலேயே வேலைக்கு ஜாய்ன் பண்ணிட்டாங்க… அதனால இனி ஸ்டேஷன் பொறுப்பை சாரும் மத்தவங்களும் பாத்துப்பாங்க… நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணற வேலையை பாத்துக்கறேன்…”
“ஓஓ… இன்ஸ்பெக்டர் பூங்குன்றனோட மர்டர் கேஸ்ல அவரை சஸ்பெக்ட் பண்ணாங்க இல்ல..?”
“ஆமா மேடம்… ஆனா அன்பு சார் ரொம்ப பாவம் மேடம்… பூங்குன்றன் சார் கூட ரொம்ப க்ளோஸ் அவர்… அதுதான் அவரோட இழப்ப இவரால தாங்க முடியல…” என ஆரம்பித்து அன்பழகனின் கேஸ் ஹிஸ்டரியை சொல்லி முடித்தார் மார்க்கண்டேயன்.
“ஓஓ… அப்படின்னா ஒண்ணு மாத்தி ஒரு பிரச்சினை ஓடிக்கிட்டே தான் இருக்கு இங்கேயும்…”
“அதே தான் மேடம்… இப்போ போதாக்குறைக்கு புதுசா வேற ஒரு நோய் பரவுதுன்னு சொல்றாங்க… அது இனி எப்போ நம்மகிட்ட வரப் போகுதுன்னு தெரியல…”
“நோ சார்… நாம எதை ஈர்க்கிறோமோ அதுவும் நம்மளை ஈர்த்துட்டு இருக்கும்னு சொல்வாங்க… நீங்க அந்த நோய் பரவுற விசயத்தை யோசிக்காதீங்க… அதுக்கு சக்ஸஸ்ஃபுல்லா மருந்து கண்டுபிடிக்கறத பத்தி வேணும்னா யோசிங்க… நீங்க இந்த அமானுஷ்ய சக்திக்கு முடிவு கட்டுறத பத்தி தீவிரமா யோசிச்சு இருப்பீங்க தானே..? அது தான் நம்மளை இங்க கொண்டு வந்து, நம்ம மூலமா ரிஷி சாரை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கு… அதே மாதிரி ஒரு கேஸ்ல நானும் வாசு சாரும் இப்போ இன்வால்வ் ஆகி டீல் பண்ணிக்கிட்டு இருக்கோம்… வாசு சார் ஒரு தடவை என்கிட்ட கேட்டாரு, “எப்படி மேடம் இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நம்பிக்கையை கை விடாம இருக்கீங்கன்னு..?” அதுக்கு பதிலும் இதுவே தான்… யூனிவர்சல் எனர்ஜி மூலமா நம்மளுக்கு, நாம தேடிட்டு இருக்கற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்னு நான் நம்பறேன்…”
“சூப்பர் மேடம்… ‘என்னடா, நேத்து ஒரு அமானுஷ்ய உருவம் மூலமா அந்தளவுக்கு அஃபெக்டான ஒரு பர்ஸன் இன்னைக்கு திரும்பவும் இங்க வந்து நிக்கறாங்களே’ அப்படீன்னு யோசிச்சேன்… ஆனா உங்கள மாதிரி ஒரு சப்போர்ட் கூடவே இருந்தா அத தாண்டின ஒரு பாஸிட்டிவ் வைப் வேற இருக்காது மேடம்… அதனால தான் சார் முழுமையா உங்களை நம்பி இங்க வந்திருக்கார்…”
“ம்ம்… பை த வே, நம்ம வர்க்க ஸ்டார்ட் பண்ணிடலாமா..?”
“ஷ்யூர் மேடம்…”
“எனக்கு ஒரு தனி கார் அரேஞ்ச் பண்ணி குடுக்க முடியுமா சார்..? வேலையை ஸ்டார்ட் பண்ணறதுக்கு முன்னாடி இந்த ஊரை ஒரு தடவை சுத்திப் பாத்துட்டு வரலாம்னு நினைக்கறேன்…”என்றார் ரிஷிகேஷ் மார்க்கண்டேயனிடம்.
“இதோ சார்…” என்றவர், அத்திப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து விடயத்தை சொல்ல பத்து நிமிடங்களில் ரிஷிகேஷுக்கு கார் வந்து சேர்ந்தது. அதில் ஏறி அமர்ந்து கொண்டவர் அத்திப்பட்டை ஒரு சுற்று சுற்றி வந்தார்.
“உங்க கிராமத்துல சாமியோட நடமாட்டம் ரொம்ப கம்மியா இருக்கே சார்..?” என்றார் காரில் இருந்து இறங்கி வந்து கொண்டே மார்க்கண்டேயனைப் பார்த்து.
“ஆமா சார்… அப்படித்தான் எங்க ஊர் பூசாரிங்க ரெண்டு பேரும் சொன்னாங்க… அதுக்காக இப்போ பூஜையும் பண்ணிட்டு இருக்காங்க…”
“ஓஓ… அப்புறம் இந்த ஊரோட ஒதுக்குப்புறமா முட்கள்லாம் அடர்ந்து வளர்ந்து ஒரு பாதை இருக்கே..? அந்தப் பாதை எந்த இடத்துல முடிவடையுது..?”
“அந்தப் பாதையை கேக்கறீங்களா சார்… முன்னாடி அந்தப் பக்கமா ஒரு பெரிய வீடு இருந்திச்சு… ரொம்ப காலத்துக்கு முன்னமே அந்த வீட்டுல இருந்தவங்க ஊரை விட்டு வெளியேறிட்டாங்க… அதுக்கப்புறமா அந்த வீட்டை யாரும் கவனிக்காம விட்டதுனால அப்படியே தூர்ந்து போயிடுச்சு… முந்தாநாள் ராத்திரி இனியா மேடமும் சாரும் கூட அந்தப் பாதையால தான் ஊருக்குள்ள வந்திருக்காங்க… அதுதான் எப்படின்னு எங்க யாருக்குமே தெரியல…”
“இல்ல சார், நாங்க வரும்போதும் அந்த இடம் முட்புதரா தான் இருந்திச்சு… ஆனா அந்தப் பாதையில எந்தப் பிரச்சினையும் இல்லாம கார் ஓட்டிட்டு வரக்கூடிய அளவுக்கு ஸ்பேஸ் இருக்கு… நைட்டுங்கறதால கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் ஹெட்லைட் வெளிச்சத்துல அந்தப் பாதையில வர்றதுக்கு எங்களுக்கு எந்த சிரமமும் இருக்கல…” என்றாள் இனியா தன் பங்கிற்கு.
“அந்த இடம் ஃபுல்லா ஏதோ ஒரு நெகட்டிவிட்டி இருக்கு… நீங்க சொல்றத பாத்தா ரொம்ப வருஷமா அந்த இடம் ஆள் நடமாட்டமே இல்லாம இருக்கற மாதிரி தெரியுது… பொதுவா நாற்பத்தைஞ்சு நாளுக்கு மேல ஒரு வீட்டுக்கு எந்த வெளிச்சமும் வராம இருந்தா அந்த இடத்துக்கு அமானுஷ்யம் குடியேறும்னு சொல்லுவாங்க… அந்த மாதிரியான நெகட்டிவிட்டியா இருக்கறதுக்கும் வாய்ப்பு இருக்கு… சீக்கிரம் அந்த இடத்தை கிளியர் பண்ணி அந்த வீடு இருந்த இடத்துக்கு சாந்தி செய்யப் பாருங்க சார்…” என்றார் ரிஷிகேஷ்.
“ஆனா சார்…” என இழுத்த இனியா தானே தொடர்ந்தாள்.
“அந்த இடத்துல ஆள் நடமாட்டம் இல்லாத மாதிரி தெரியலையே..? நானும் வாசு சாரும் அந்தப் பாதையால வந்தப்போ அந்த இடத்துல இன்னொரு வண்டியோட தடத்தை நான் பாத்தேன்… அப்போ அது ஆள் நடமாட்டம் இல்லாத இடம்னு எனக்கு தெரியாததுனால பெருசா யோசிக்கல… ஆனா நீங்க இப்ப பேசிக்கிறத பாத்தா அது கொஞ்சம் வித்தியாசமா படுது எனக்கு…”
அதற்கு மார்க்கண்டேயன் ஏதோ பதில் சொல்ல வர, அதற்குள் அவருக்கு அன்பழகனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ… சொல்லுங்க சார்…”
“சார், கொஞ்சம் அலர்ட்டா இருங்க… அத்திப்பட்டுக்குள்ள ஏதாவது வித்தியாசமான விசயம் நடந்திருக்கான்னு விசாரிச்சுட்டு இருந்தீங்க இல்ல..? அதுல புதுசா ஒரு தகவல் கிடைச்சிருக்கு… என்னனா இப்போ ஒரு மாசத்துக்குள்ள ஒரு லாரி ஒண்ணு அத்திப்பட்டுக்குள்ள வந்திருக்கு… டைம் எக்ஸாட்டா தெரியலன்னு சொன்னாங்க, ஆனா அதிகாலை இரண்டு மணியில இருந்து நாலு மணிக்குள்ள இருக்கும்னு சொல்றாங்க…”
“அப்படியா சார்..? யார் சார் அதை பார்த்தது… அவங்க நேரத்தோடவே நம்மளுக்கு இன்ஃபர்ம் பண்ணி இருந்தா நம்மால ஏதும் பண்ண முடியுமான்னு பாத்திருக்கலாம்…”
“இல்ல சார்… வழமையாவே நம்ம ஊருக்குள்ள லாரி வர்றது வழமை தான்… ஏன்னா ஊருக்குள்ள புதுசா லைப்ரரி கட்ட ஆரம்பிச்சதுல மண்ணை லாரி தானே ஏத்திட்டு வருது… இந்த லாரியை ஏன் ஸ்பெஸிஃபிக்கா சொல்றாங்கன்னா அது வந்த நேரம் ஸ்ட்ரேஞ்ச் ங்கிறதால தான்… இப்ப கூட அதுல ஏதாச்சும் வில்லங்கம் இருக்குன்னு நம்மளால உறுதியா சொல்ல முடியாது. ஆனா இதுல ஒரு விசயம் இருக்கு… இந்த ஒரு மாசத்துக்குள்ள வேற யாருமே எந்த லாரியையும் பார்க்கல… வந்த லாரி திரும்பி போன மாதிரியும் தகவல் இல்லை…”
“அப்படீன்னா நம்ம அத்திப்பட்டுக்குள்ள தேடிப் பார்த்தாலே அந்த வண்டி கிடைச்சுடுமா சார்..? இல்லன்னா வண்டி திரும்பி போனதை அவங்க கவனிக்காம இருந்திருப்பாங்களா..?”
“கவனிக்காம இருக்கறதுக்கு வாய்ப்பு இல்லையாம் சார்… ஏன்னா அந்த வண்டி வந்ததை நேர்ல பாத்தது மூணு பேராம்… அந்த மூணு பேருமே ஒரு… ஆறரை ஏழு மணி வரை ஏதோ காரணத்துக்காக அத்திப்பட்டு வாசல் வரைக்கும் நின்னிருக்காங்க… அப்ப வரைக்கும் அந்த வண்டி திரும்பல… ஊருக்குள்ள இருந்த மத்த யாரும் கூட அந்த வண்டியை பாக்கல… அதனால மோஸ்ட்லி அந்த வண்டி ஊருக்குள்ள இருக்கறதுக்கு தான் சான்ஸ் இருக்கு… இன்னுமொரு முக்கியமான விசயம் கூட இருக்கு சார்…”
“இதை விடவா சார்..? சொல்லுங்க…”
“அந்த வண்டியைப் பாத்த மூணு பேருமே இப்ப உயிரோட இல்லை…”
“வாட்.. யாரு சார் அவங்க..?”
“ஒண்ணு அத்திப்பட்டு மக்கள் அத்தனை பேரும் தெய்வமா பாத்த சீதா மகாலக்ஷ்மி… ரெண்டாவது வந்தனா… மூணாவது விஜயா…”
“மை காட், அப்படின்னா இது கண்டிப்பா மனுஷங்க யாரோ செய்யற வேலை தான் சார்… இந்த அமானுஷ்யமான விசயத்தை ஏதோ ஒரு விதத்துல க்ரியேட் பண்ணி பூச்சாண்டி காட்டுறாங்க… நம்மள திசை திருப்பி விடப் பாக்குறாங்க சார்…”
தொடர்ந்தும் சில நிமிடங்கள் பேசி விட்டு வந்த மார்க்கண்டேயனை பார்த்து புன்னகைத்தார் ரிஷிகேஷ்.
“உங்க ஆப்போசிட்ல என்ன பேசினாங்கன்னு எனக்கு தெரியாது சார்… ஆனா நீங்க பேசினதை நான் தாராளமாவே கேட்டேன்… இங்க மனுஷங்க ஏதாச்சு டபுள்கேம் ஆடுறாங்களானு எனக்கு தெரியல… ஆனா இந்த அத்திப்பட்டு காத்துல அமானுஷ்ய வாடை கலந்து தான் இருக்கு… அது யாரோட ஆத்மா, எதனால இறந்தாங்க, எதுக்காக இப்படி ஆத்மாவா அலைஞ்சு பழிவாங்கறாங்க எங்கிற மொத்த விசயத்தையும் இன்னைக்கு நான் உங்களுக்கு சொல்றேன்… ப்ளீஸ் கோ-ஆப்பரேட் வித் மீ…” என்ற ரிஷிகேஷை இனம்புரியாத உணர்வுடன் பார்த்தார் மார்க்கண்டேயன்.
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.