அல்லி 45
அத்திப்பட்டு
“ஹே திரும்பவும் யாரோ கத்தற சத்தம் கேக்குது… இது மனுஷங்க குரல் மாதிரில்ல இருக்கு..?” என்றாள் அல்லி பதற்றம் அடைந்தவளாக.
அதற்கு ரத்னா பதில் சொல்ல முன்னரே, “ஐயையோ யாராவது வாங்களேன்… கடவுளே நான் என்ன பண்ணுவேன்…” என்றொரு குரல் உச்சஸ்தாயியில் ஒலிக்க, “அது நம்ம நீலாம்பரி ஆன்டியோட குரல் மாதிரி இருக்கு டி…” என்றாள் அல்லி.
“ஆமா க்கா எனக்கும் அப்படித்தான் தோணுது… இரு நான் ஃபோன் பண்ணி பாக்கிறேன்…”
ரத்னா கைப்பேசியை எடுப்பதற்காக நகர, ஜன்னலில் இருந்த திரைச்சீலையை மெல்ல விலக்கி வெளியே பார்த்தாள் அல்லி. தெருவிளக்கின் மெல்லிய ஒளியில் யாரோ ஒரு பெண் முதுகுப் புறம் காட்டி அமர்ந்திருந்தது போல் இருந்தது அவளுக்கு. ‘இந்த நேரத்துல யாரு இங்க..?’ என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் தோளில் ஒரு கை படர, பயந்து போய் விசுக்கென்று திரும்பிய அல்லியைப் பார்த்து மிரண்டு தான் போனாள் முன்னின்ற ரத்னா.
“ஹே சாரி சாரி டி… ஏதோ யோசனைல நின்னுட்டிருந்தேன்… நீ சட்டுனு தொடவும் ரொம்ப பயந்துட்டேன்… ஆமா, உனக்கு என்னாச்சு… முகமே சரியில்லை..?”
“நீலாம்பரி ஆன்டியோட பொண்ணு வந்தனா இறந்துட்டாளாம் டி…”
“வாட்..? நம்ம வந்தனாவா… அவ சின்னப் பொண்ணு டி… போன வருஷம் தானே இருபத்தியோராவது பர்த்டே கொண்டாடினாங்க… இப்போ திடீர்னு என்னாச்சாம் அவளுக்கு..?”
“தென்றல் தான்…” என்று விட்டு தலைகுனிந்தாள் ரத்னா.
“தென்றலா..?”
“ஆமா… நீலாம்பரி ஆன்டி வேலை அசதியில நேரத்துக்கே தூக்கத்துக்கு போய்ட்டாங்களாம்… இவ கொஞ்சம் முன்னாடி பாத் ரூம்க்கு குளிக்கப் போய் இருக்கா போல… திடீர்னு அம்மான்னு அலர்ற சத்தம் கேட்டு இவங்க திடுக்குன்னு எழும்பி பார்த்திருக்காங்க… சட்டுனு எதுவும் புரியலை அவங்களுக்கு… கொஞ்ச நேரம் கழிச்சு தான் தூக்க கலக்கம் போய் வந்தனாவை கூப்பிட்டு பாத்திருக்காங்க… அவ சைலண்டா இருக்கவும் தான் வீட்டுக்குள்ள தேடிப் பாத்துட்டு அப்புறம் வெளிய இருந்த பாத்ரூமுக்கு போய் பாத்திருக்காங்க… அங்க தான் அவளை…”
“…”
“கை வே..ற, கால் வே..ற, தலை வேற முண்டம் வேறயா கிடக்கிறாளாம் டி அவ…” என்ற ரத்னா அத்தனை நேரமாய் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகையை அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழ ஆரம்பித்தாள். அல்லிக்கோ என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் திக் பிரம்மை பிடித்துப் போய் நின்றிருந்தாள்.
✯✯✯✯✯✯
சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த மகிழுந்து திடீரென வேகம் குறையவும், இனியாவைத் திரும்பி கேள்வியாய் பார்த்தார் வாசுதேவன்.
“முன்னாடி போலீஸ் சென்ட்ரி போட்டிருக்காங்க சார், டாக்கியூமெண்ட்ஸ் செக் பண்ணறாங்க போல… இருங்க வரேன்…” என்றவள், மகிழுந்தை ஓரம் கட்டி வாகனப் பத்திரங்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.
அவள் இறங்கியதும் அருகே ஓடி வந்து சல்யூட் அடித்தார் ஒரு போலீஸ் ஆபீஸர்.
“மேடம், நீங்க மிஸஸ் இனியா தானே..?”
“ஆமா சார்… நீங்க..?” என இழுத்தாள் இனியா.
“நான் அத்திப்பட்டு கிராமத்துல வேலை பாக்கற ஒரு போலீஸ் ஆபீஸர் மேடம்… எங்க கிராமத்துக்குள்ள நடக்கற சில அமானுஷ்யமான விசயங்களை கண்டுபிடிக்கறதுக்காக ஊருக்குள்ள கேமரா ஃபிக்ஸ் பண்ணி இருந்தோம்… அப்படித்தான் இன்னைக்கு நடந்த எல்லா விசயத்தையும் எங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற மானிட்டர்ல பாத்திருக்காங்க… அதான் மேடம் உங்ககிட்ட உதவி கேட்க சொல்லி எனக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குடுத்தாங்க…”
“என்ன உதவி..?”
“உங்களுக்கு எப்படி மேடம் எதுவும் ஆகாமப் போச்சு..? இதுவரைக்கும் அந்த ஆத்மாவ யாரும் கண்ணால பார்த்தது இல்லை… பாத்தவங்க யாரும் உயிரோடயும் இல்லை… ஆனா உங்களால எப்படி மேடம் அது கிட்ட இருந்து தப்பிக்க முடிஞ்சுது..? நீங்க அதைப் பத்தி சொன்னா எங்க ஊரு மக்களை நாங்க காப்பாத்த வசதியா இருக்கும் மேடம்…”
“கண்டிப்பா சார்… நீங்க கேக்கலன்னா கூட உங்க ஸ்டேஷன்ல பர்மிஷன் கேட்டு நான் இதைப் பண்ணி இருப்பேன் தான்… எனக்கு எப்படி எதுவும் ஆகாம இருக்குன்னு சொல்லறதுக்கான அனுமதி இப்போ எனக்கு மறுக்கப்பட்டிருக்கு சார்… கூடிய சீக்கிரம் நீங்களுமே எல்லாம் தெரிஞ்சுப்பீங்க… இது என் கான்டாக்ட் டீடெய்ல்ஸ்… இதை வச்சுக்கோங்க, ஏதாச்சும் அவசரம்னா எனக்கு கால் பண்ணுங்க… வாசு சார் ரொம்ப பயந்து போய் இருக்காங்க… நான் ஊருக்கு போயிட்டு நாளைக்கு உங்ககிட்ட பேசறேன்…” என தனது கார்டை அவரிடம் தந்தாள் இனியா.
“ரொம்ப நன்றிங்க மேடம்…”
✯✯✯✯✯✯
மெல்ல மெல்ல தன்னிலைக்கு வரப் பெற்ற அல்லி, ஏதோ ஞாபகம் வந்தவளாக சட்டென மீண்டும் ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். இப்போது அங்கே யாரும் இல்லாமல் போய் அந்த இடமே வெறிச்சோடிப் போய் இருந்தது.
“இந்த நேரத்துல நீலாம்பரி ஆன்டி வீட்டுக்கு நானும் நீயும் தனியா எப்படி டி போக முடியும்..? கலா ஆன்டிக்கு போன் போட்டு, விசயத்தை சொல்லி என்ன பண்ணலாம்னு கேட்டுப்பார்… நம்மளுக்கு கேட்ட அலறல் சத்தம் அவங்களுக்கும் கேட்டிருக்கும் தானே..?”
“ம்ம்…” என்ற ரத்னா, நொடியில் அவருக்கு அழைத்தும் விட்டாள். சில நிமிடங்கள் கழித்து வந்தவள், “அவங்களுக்கும் சத்தம் கேட்டுச்சாம்… நான் விசயத்தை சொல்லவும் ரொம்ப பயந்து போயிட்டாங்க… ஆனா இப்ப போனா என்னாகும்னு தெரியாததுனால விடிஞ்சதுக்கு அப்பறமா போலாம்னு சொன்னாங்க…”
“அதுவரைக்கும் நீலாம்பரி ஆன்டிக்கு துணையா யாரு இருப்பாங்க..? அவங்க ஹஸ்பன்ட் இறந்ததுக்கு அப்புறம் அவங்களுக்கு எல்லாமா இருந்தவ வந்தனா தான்… இப்ப அவளும் இல்லைன்னா அவங்க வாழ்க்கையே நரகமாகிடுமே..?”
“ஊப்ஸ்… அது அவங்களோட விதி அல்லி… நினைக்கும் போது ரொம்ப வருத்தமா தான் இருக்கு… என்ன பண்ண..?”
இப்படியாக அத்திப்பட்டின் ஒவ்வொரு வீட்டில் இருந்த ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமான சம்பாஷணையுடன் அந்த நாள் முடிந்திருந்தது. அடுத்த நாள் காலை நான்கு மணிக்கே அல்லியும் ரத்னாவும் எழுந்து, பக்கத்து வீட்டு கலா ஆன்டியையும் அழைத்துக் கொண்டு நீலாம்பரி வீட்டுக்கு விரைந்திருந்தனர். அதற்கு முன்னரே அங்கு ஒரு பெரும் கூட்டம் கூடி விட்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து எழுந்த அழுகை ஓலம் கரையாத கல்லையும் கரைத்து விடக் கூடும், ஆனால் முழுமையாக சாத்தானாக மாறி இருந்த தென்றலின் மனதை அசைக்க போதுமானதாக இல்லைப் போலும். இன்றும் அடுத்த அப்பாவியின் உயிரைப் பறிக்க அவள் வருவாள் தான்.
நேரத்துடனேயே அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்திருந்ததால் அரச வைத்தியர் ஒருவரும் அங்கு வந்து வந்தனாவின் போஸ்ட் மோர்ட்ட வேலைகளை ஆரம்பித்து இருந்தார். யாரும் எதிர்பார்த்திராத துக்க நிகழ்வாக, நீலாம்பரியையும் வெறும் உடலாகத் தான் மீட்க முடிந்திருந்தது. ஒற்றை சொந்தமாக இருந்த மகள், தன்னை முற்றிலும் துறந்து சென்றிருந்த துக்கத்தை தாளாமல் தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்திருந்தார் அவர். சொற்ப நேரத்தில் காவல் துறையும் அங்கு ஆஜராகி இருந்தது. அவர்களின் வழமையான நடைமுறைகளை முடித்துக் கொண்டு இரு உடல்களையும் புதைக்கச் சொல்லி அனுமதி வழங்கி இருந்தார்கள் போலீஸ் உத்தியோகத்தர்கள்.
ஒரு பக்கம் உடன் இருந்த இரு உயிர்களின் பிரிவைத் தாங்க முடியாமல் ஊரார் அழுது கொண்டிருக்க, இதற்கு என்ன முடிவு செய்வதென்றே தெரியாமல் கல்லாய் சமைந்திருந்தாள் அல்லி. ஒருவேளை அவள் புதைத்திருந்த தென்றலின் உடலை எடுத்து தகனம் செய்து விட்டால் இந்த பிரச்சினைக்கு எல்லாம் தீர்வு கண்டு விடலாமோ என்ற எண்ணம் மனதினோரம் வந்து போனது.
✯✯✯✯✯✯
அத்திப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓர் அழைப்பு வர, ரிசீவரை எடுத்து அழைப்பை ஏற்றார் மார்க்கண்டேயன்.
“ஹலோ சார், நான் இனியா பேசறேன்…” என்ற குரலைத் தொடர்ந்து சட்டென அவரது உடல் மொழியில் பவ்யம் தொற்றிக் கொண்டது.
“சொல்லுங்க மேடம்…”
“சார், உங்க ஸ்டேஷன்ல இருந்து என்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டிருந்தாங்க…”
“ஆமா மேடம்… தெரியும், சொல்லுங்க…”
“நான் என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தர் கிட்ட பேசினேன்… சொல்லப் போனா நான் நேத்து உயிர் பிழைச்சதுக்கு காரணமும் அவர் தான்… பராநார்மல் சைக்காலஜி ஸ்பெஷலிஸ்ட் மிஸ்டர் ரிஷிகேஷ் தான் அவரு…”
“மேடம் ரிஷிகேஷ் சாரா.. அவரு ரொம்ப பெரிய ஆளுல்ல… அவர் உயிரோட இருக்காருன்னே எங்க யாருக்கும் தெரியாது மேடம்… அவரா எங்களுக்கு உதவி செய்யப் போறாரு..?”
“ஆமா சார்… சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால அவருக்கு இந்த நிலைமை வந்துடிச்சு… கடவுளோட அனுக்கிரகத்தால அவரு நம்மளுக்கு உதவி பண்ணறேன்னு ஒத்துக்கிட்டிருக்காரு… நாளைக்கு மதியமே நானும், வாசு சாரும், ரிஷிகேஷ் சாரும் அங்க வரோம்…”
“வாங்க மேடம், வாங்க மேடம்… நேத்து கூட எங்க ஊருல ஒரு உயிர் போயிடுச்சு மேடம்… கேமராவில அந்த உருவம் அவங்க வீட்டுக்கு போறது வரை பார்த்தாலும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில நின்னோம் மேடம் நாங்க… ஒரு சின்னப் பொண்ணு அநியாயமா செத்துப் போயிட்டா… அந்த துக்கம் தாங்க முடியாம அவளோட அம்மாவும் சூசைட் பண்ணிட்டாங்களாம் மேடம்… கொஞ்சம் முன்னாடி தான் ஸ்டேஷனுக்கு இன்ஃபர்மேஷன் வந்துச்சு… நீங்க வந்தா தான் இதை சரிப்படுத்த முடியும்… கூடவே இன்னைக்கும் நாளைக்கும் அத்திப்பட்டுக்குள்ள ப்ளட் கலெக்ட் பண்ணற ப்ரொஸீஜர் போய்க்கிட்டு இருக்கும். ஆனா அது மார்னிங் தான்… நீங்க மதியம் வந்தா கரெக்டா இருக்கும் மேடம்…”
“நேத்தும் ரெண்டு பேர் இறந்துட்டாங்களா..?” என இழுத்தவள், “சீக்கிரம் வந்துடறோம் சார்… ப்ளட் கலெக்ட் பண்ணற ப்ரொஸீஜர துரிதப்படுத்த சொல்லி கவர்மென்ட் ஆர்டர் வந்திருக்கு… நீங்க ஃபர்ஸ்ட் அதை முடிச்சுடுங்க… நாங்க நாளைக்கு மார்னிங் கிளம்பி மதியம் போல ரீச் ஆகிடுவோம்…” என்றாள் தைரியமூட்டும் விதமாக.
“ரொம்ப நன்றிங்க மேடம்…”
ஒருவாறு கெஞ்சி சமாளித்து ரிஷிகேஷை ஒப்புவிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி இருந்தது இனியாவுக்கு. அவரும் எத்தனையோ மறுதலிப்பின் பின் இனியாவும் வாசுதேவனும் கூட அதன் மூலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்களுக்காக மாத்திரம் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். என்னதான் அந்த அப்பாவி மக்களுக்காக தன்னலம் கருதாமல் இனியா உதவ முன் வந்திருந்தாலும், மறுநாள் தான் அவளது வழக்குக்கு தேவையான ஆணிவேரே வெளிவரப் போகிறது என்பது தெரியாமல் தென்றலின் சிந்தனையில் மூழ்கி இருந்தாள் அவள்..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.