Episode 44

ஶ்ரீ துர்க்கா | 12 Mar 2026 | Share

அல்லி 44

அத்திப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. 

“யாரு சார் இவங்க, ஒருத்தர் போலீஸ் ட்ரெஸ்ல வேற இருக்காரு..?‌ பக்கத்துல ஒரு பொண்ணு வேற இருக்கா… காலம் கிடக்கிற கிடப்புல ராத்திரி நேரத்துல பொம்பள புள்ளயக் கூப்பிட்டுக்கிட்டு இப்படி திரியலாமா..? அத்திப்பட்டு நுழைவாயிலுக்கு கொஞ்சம் தள்ளி போலீஸ் சென்ட்ரி போட்டிருக்கோம் இல்ல, அதைத் தாண்டி எப்படி இவங்க உள்ள வந்தாங்க..?”

“இவங்க என்ட்ரன்ஸ் வழியா வரல சார்… பின்னாடி வழியா தான் வந்தாங்க… இதோ இதுல ஒரு பாதை தெரியுது இல்ல..? அந்த பாதையில தான் அவங்க கார் வந்து ஏறிச்சு…”

“இதுல ஒரு பாதை இருக்கா என்ன..? மெய்ன் என்ட்ரன்ஸ் தவிர மத்த வழியெல்லாம் காடுனு தானே அங்கயெல்லாம் கேமரா ஃபிக்ஸ் பண்ணாம விட்டோம்… இது என்ன புது தலைவலியா இருக்கு…”

“சார், சார்… அங்க பாருங்க அவங்க பின்னாடி ஏதோ ஒண்ணு வெள்ளை வெளேருன்னு நின்னுட்டு இருக்கு..?”

“ஏன் சார், அதையே நீங்க இப்ப தான் பாக்கறீங்களா..? எனக்கு தெரிஞ்சு நாளைக்கு இவங்க டெத் நியூஸ் தான் எல்லா சேனல்லயும் வரும்னு நினைக்கிறேன்… ச்சே, எல்லாம் இருட்டா இருக்கிறதால எதுவும் சரியா தெரிய வேற மாட்டேங்குது… இந்த ஜெயராம் சார் எங்க போனார் இந்த நேரத்துல..?”

“கமிஷ்னர் சாருக்கு தகவல் சொல்லப் போயிருக்கார்… ஃபோன்ல அவரு கிட்ட தான் பேசிட்டு இருந்தார்…”

“ஓஓ…‌ சார் அங்க பாருங்க…” என பரபரப்பாக ஒரு போலீஸ் அதிகாரி, கேமரா‌ ஒன்றை சுட்டிக் காட்டிய அதே நேரத்தில் இங்கு,

கருகருவென கருமை நிறத்தில் மாறி இருந்த அந்த உருவம் கடுகதியில் வந்து இன்ஸ்பெக்டர் வாசுதேவனை கொத்தாகப் பிடித்துத் தூக்க, வேகமாகப் பாய்ந்து அவரது சட்டையைப்‌ பிடித்து இழுத்தாள் இனியா. திடீரென நடந்த இந்த சம்பவத்தில் ஆடிப்போன வாசுதேவன், பயத்தில் “மேடம் மேடம்…” என கத்த, “சார் பயப்படாதீங்க… நான் இருக்கற வரைக்கும் அதால உங்கள எதுவுமே பண்ண முடியாது… என்ன ஆனாலும் என் கையை மட்டும் விட்டுடாதீங்க…” என்றவள் சட்டென்று அவர் கரங்களைப் பற்றிக் கொண்டாள். அவர்கள் இருவரையும் அசைக்கக் கூட முடியாத அந்த உருவம், இயலாமையின் வெளிப்பாடாக  “ஆஆஆ”வென‌ அத்திப்பட்டே அதிரும் படி அலறி விட்டு, நொடியில் மறைந்து போனது. 

சட்டென கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள் அல்லி. 

“ரத்னா, உனக்கும் அந்த சத்தம் கேட்டுச்சா..?”

“ஆமா க்கா… அது தா..ன்னு நினைக்கிறேன்…” என்ற ரத்னாவுக்கு பயத்தில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“நான் என்னனு பாக்கிறேன்…” என விடுவிடுவென நடக்கப் போனவளின் கையைப் பிடித்து நிறுத்தினாள் ரத்னா. 

“நீ பைத்தியமா, இல்லன்னா பைத்தியம் மாதிரி நடிக்கிறியா..? ப்ச், இது எவ்வளவு பிரச்சினையான விசயம்னு தெரிஞ்சும்‌ வெளிய போறன்னு சொல்லற… அறிவிருக்கா அல்லி உனக்கு..?”

“என்னால தானே எல்லா…”

“ஷட் அப்… உன்னால இங்க யாரும் சாகல… எவன் அந்த பொணத்தை கொண்டு வந்து இந்த வாசல்ல போட்டுட்டு போனானோ அவனால தான் எல்லாரும் சாகறாங்க… இப்ப கூட அது ஏன் இப்படி கத்துதுன்னு தெரியல… யாரையாவது வெளியில வரவழைக்கிறதுக்காக கூட இருக்கலாம்… லூசு மாதிரி போய் அது கைல சாகப் போறியா நீ..?”

“வந்து… வெளில யாருக்கு என்னனு தெரியலையே..?”

“யாருக்கு என்னனாலும்‌ அது அவங்கவங்க பிரச்சினை… யாரையும் வீட்டை விட்டு வெளிய வர கூடாதுன்னு சொல்லியும், அவங்க வெளிய வந்து அது கையால சாகறாங்கன்னா அது அவங்களோட தப்பு… நீ பேசாம படு…” என்றவள் வேகமாகச் சென்று கதவைப் பூட்டி திறப்பை எடுத்துக் கொண்டு வந்து தன்னிடத்தில் வைத்துக் கொண்டாள்.

                    ✯✯✯✯✯✯

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தார் வாசுதேவன். உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

“உங்களுக்கு ஒண்ணும் ஆகல சார்… நீங்க நல்லா இருக்கீங்க… பதட்டப்படாதீங்க… ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… நிதானமா மூச்சை உள்ளே எடுத்து வெளிய விடுங்க…” என வாசுதேவனை தேற்றி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் இனியா.

சொற்ப நேரத்திற்குள் அணைந்திருந்த அத்தனை மின் விளக்குகளும் மீண்டும் ஒளிர ஆரம்பித்திருந்தன. நடந்து முடிந்த அத்தனையையும் கேமராவில் பார்த்துக் கொண்டிருந்த போலீஸார் அத்தனை பேருக்கும் ஆச்சரியம் மேலோங்கி இருந்தது. 

“எப்படி சார், எப்படி அவங்களுக்கு எதுவுமே ஆகாமப் போச்சு..? அந்தப் பொண்ணு கிட்ட என்னமோ இருக்கு சார்… அவளைப் பாத்தா சாதாரணப்பட்டவளா தெரியல…”

“சாதாரணப்பட்டவ இல்லை தான் சார்… ஷீ இஸ் மிஸஸ் இனியா வில்லியம்ஸ் ஃப்ரம் க்ரைம் பிராஞ்ச்…” என்ற ஜெயராம் இன்டர்நெட்டில் இருந்து அவருக்கு கிடைத்த அந்த புகைப்படத்தை, முன்னின்ற போலீஸ் அதிகாரியிடம் நீட்டினார். 

“ஓஓ… நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை சார்… நம்ம இன்ஸ்பெக்டர் பூங்குன்றன் சார் இருக்காங்க இல்ல..? அவங்க அப்பாவோட வீட்டை பத்தி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரிச்சதா கார்த்தி சார் சொல்லிட்டு இருந்தார். ஒருவேளை அங்க போய்ட்டு தான் இவங்க வழி மாறி இங்க வந்துட்டாங்களா தெரியல…”

“இருக்கலாம் சார்… நாளைக்கு காலைல முதல் வேலையா, இவங்களோட கார் வந்த பாதையை அனலைஸிஸ் பண்ணி பாக்கணும்… அந்தப் பக்கம் ஒரு பாதை இருக்கிறது எப்படி சார் நமக்கு தெரியாம போச்சு..?”

“எனக்கும் தெரியல சார்…”

“எனக்கு தெரியும் சார்…” என பின்னிருந்து ஒரு குரல் கேட்க, அங்கே இன்னொரு போலீஸ் அதிகாரியான மார்க்கண்டேயன் நின்றிருந்தார்.

“எப்படி சார் தெரியும் உங்களுக்கு… அப்படின்னா ஏன் அந்த பாதைக்கு கேமரா ஃபிக்ஸ் பண்ணல..?”

“ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி புழக்கத்துல இருந்த பாதை தான் சார் அது… கிட்டத்தட்ட அந்த பாதையை மூடி இப்போ இருபது வருஷத்துக்கு மேல ஆச்சுன்னு அன்பழகன் சார் சொன்னாங்க எனக்கு…”

“எதனால அந்த பாதையை மூடினாங்களாம்..?”

“அந்த பாதையோட முடிவுல ஒரு வீடு இருந்திச்சாம் சார்… அத்திப்பட்டுலயே பெரிய வீடு அது தானாம்… அங்க புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேர் தான் இருந்தாங்களாம்… முதல்ல அந்த புருஷன் நல்லவனா தான் இருந்தானாம்… பொண்டாட்டிய நல்லா பாத்துக்கிட்டானாம்… அப்புறம் அந்த அம்மா மாசமாகி இருக்காங்க போல… குழந்தையும் நல்லபடியா பொறந்திருக்கு… ஒருநாள் அந்தம்மா கேரி பேக்ல பிள்ளையை தூக்கிட்டு வெளியே போயிருந்தப்போ அவங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி இருக்கு… பிள்ளை ஸ்பாட் அவுட்டாம்… அந்தம்மா தான் ரொம்ப நாள் ஐசி யுனிட்ல இருந்து அப்புறம் குணமாகி வந்திருக்கு… அதுக்குள்ள அந்தப் புருஷன் சேரக்கூடாத சேர்க்கை எல்லாம் சேர்ந்து குடி வெறின்னு ஆரம்பிச்சுட்டானாம்…‌ அந்த அம்மாவையும் ரொம்ப கொடுமைப் படுத்தி இருக்கான்… காலப் போக்கில அவனோட அராஜகம் ஊருக்குள்ள தலைகாட்டவும், அவனை அடிச்சு ஊரை விட்டு துரத்தி இருக்காங்க… அவன் இல்லாத ஊருல தானும் இருக்க மாட்டேன்னு சொல்லி அந்த அம்மாவும் ஊரை விட்டு போயிருக்கு… அதுக்கப்புறம் அந்த வீட்டுப் பக்கம் யாரும் போகலையாம்‌ சார்… கொஞ்சம் கொஞ்சமா வீடு தூர்ந்து, அந்த இடமும் மரஞ்செடின்னு வளர்ந்து காடு மாதிரி ஆகிடிச்சாம்… இது செவி வழியா வந்த கதைன்னு அன்பழகன் சார் சொன்னாங்க… உண்மை பொய் தெரியல சார்…”

“என்ன சார் சொல்றீங்க..? ரொம்ப நாளா வெளிச்சம் இல்லாத வீடுகள்ல அமானுஷ்யம் குடிபுகும்னு சொல்வாங்க… ஒருவேளை இந்த உருவமும் அங்க இருந்து தான் வந்திருக்குமோ..?” என தனது ஊகத்தை வெளிப்படுத்தினார் கார்த்தி.

“அப்படி இருக்காதுன்னு எனக்கு தோணுது சார்… அப்படி அது தான் காரணம்னா அது ஏன் சார் இருபது வருஷத்துக்கு அப்பறமா வரணும்..? இது வேற ஏதோ பிரச்சினைன்னு தான் என்னோட இன்டியூஷன் சொல்லுது…” என்றார் மார்க்கண்டேயன் அதை மறுதலிக்கும் முகமாக. 

“சார் ஒரு விசயம் தெரியுமா..?” என்றபடியே அங்கு வந்து சேர்ந்தார் இன்னொரு போலீஸ் உத்தியோகத்தர்.

“என்னாச்சு..?”

“ஏதோ புது நோய் ஒண்ணு வேகமா பரவிட்டு வருதாம்… கொரோனாவோட அப்டேட்டட் வர்ஸனாம்…”

“எதே, அப்டேட்டட் வர்ஸனா..? சரியா போச்சு…”

“அப்படித் தான் சார் சொன்னாங்க டாக்டர் தாமோதரன் சார்… அதனால நாளைக்கு அத்திப்பட்டுல இருக்கற அத்தனை பேரோட ப்ளட் சாம்பிளும் கலெக்ட் பண்ணறதுக்கு ஒரு முகாம் அரேஞ்ச் பண்ணறாங்களாம்… அவங்களோட நர்ஸிங் ஸ்டாஃபே ஒவ்வொரு வீடாக போய் ப்ளட் சாம்பிள் கலெக்ட் பண்ணிட்டு வந்துடுவாங்களாம்‌… காலைல எட்டு மணியில இருந்து பதினொரு மணிக்குள்ள எல்லாரும் அவெய்லபிளா இருக்கணுமாம்… எல்லா மக்களுக்கும் இதை இன்ஃபர்ம் பண்ணி விட சொன்னாங்க…”

“இது என்ன சார் புது தலைவலியா இருக்கு… இப்ப இவங்க ப்ளட் சாம்பிள் கலெக்ட் பண்ணணும்னு என்ன அவசியம் வந்துச்சாம்..? எங்களோட நிலைமை என்னனு அவங்களுக்கே தெரியும் தானே..?”

“நானும் கேட்டேன் சார்… சில டிஎன்ஏ வகைகள் சில விதமான கிருமிகளை தாங்குறதுக்கோ, கொல்லுறதுக்கோ  அல்லது அந்த கிருமிகளை உடம்பில அண்ட விடாத அளவுக்கோ பவர்ஃபுல்லா இருக்குமாம்… அதை கண்டுபிடிச்சா அதுல இருந்து ஏதாவது மருந்து தயாரிக்க முடியுமான்னு டெஸ்ட் பண்ணி பாக்கறாங்களாம்… இது வேர்ல்டு ஒய்டா நடக்கற விசயம்னு சொன்னாங்க… அமெரிக்கா, சீனா லாம் ரொம்ப நாள் முன்னாடியே அந்த ஸ்டெப்ஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டதா சொன்னாரு…”

“இருக்கற சோதனை போதாதுன்னு இது வேறயா..? சரி நம்ம வேலை ஜஸ்ட் இன்ஃபர்ம் பண்ணறது தானே..? நாளைக்கு காலைல எல்லாருக்கும் தகவல் சொல்லிடலாம்…”

“சரி சார்…”

என இவர்கள் பேசிக் கொண்டிருக்க, “சார் இங்க பாருங்க… அந்த மேடமும் சாரும் திரும்பவும் கார்ல ஏறி கிளம்பறாங்க…” என்றார் பதைபதைப்பாய் ஒருவர். 

“ஆமா சார்… அவங்க எப்படியும் அத்திப்பட்டு நுழைவாயிலை கடந்து தான் வெளிய போவாங்க… அங்க நம்ம செனட்ரி இருக்கு இல்ல..? அவங்க கிட்ட ஆல்ரெடி தகவல் சொல்லியாச்சு… மீதத்தை அவங்க பாத்துப்பாங்க…”

தலைமை என்ற ஒன்று இல்லா விட்டாலும் அவர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவுக்கு தமது கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள்.

இனியாவின் கார் அத்திப்பட்டு நுழைவாயிலை கடந்து வெளியேறிய அதே நேரத்தில், அத்திப்பட்டின் மூலையில் இருந்த ஒரு வீட்டில் இருந்து “ஓஓஓ”வென்ற ஓலம் ஒன்று  எழ ஆரம்பித்திருந்தது..!

                 ✯✯✯✯✯✯

                                -‌ அல்லி மலரும்…

    No comments yet.