அல்லி 43
அத்திப்பட்டு
மாலை ஆறு மணியுடனேயே ஊர் அடங்கி இருந்தது. இதோ, நகர்ந்து நகர்ந்து இப்போது எட்டரை மணியும் ஆகி விட்டிருந்தது. வழமையாக என்றால், பொழுது போகாமல் இருந்தால் அக்கம் பக்கத்தில் கூட சென்று அரட்டை அடித்து விட்டு வருவார்கள் பெரியாத்தா, அல்லி, ரத்னா மூவரும். பெரியாத்தா இறந்த காலத்தில் இருந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதே வெகுவாக குறைந்து போய் இருந்தது. இனி அதற்கு வாய்ப்பும் இல்லை. ஊரில் இருந்த மற்றவர்களுடன் முகம் கொடுத்து பேசவே வெட்கமாக இருந்தது அல்லிக்கு. இன்றுடன் இரண்டாம் நாள் பூஜையும் நிறைவடைந்து இருந்தது.
கட்டிலில் படுத்திருந்தபடியே தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்த அல்லியை உசுப்பினாள் ரத்னா.
“இந்த ஐயாமாருங்க சொன்ன மாதிரி நம்ம ஊருக்குள்ள எந்த அமானுஷ்யமும் இல்லைன்னு நினைக்கிறியா அல்லி நீ..?”
“அப்படி மத்தவங்க வேணா நினைக்கலாம் ரத்னா, நான் நினைக்க முடியாது. ஏன்னா நான் பெரியாத்தாவை நேர்ல பாத்திருக்கேன்… அவங்க உக்கிரத்தை பாத்திருக்கேன்… இதை எல்லாம் வெறும் கதையா காதால மட்டும் கேள்விப்பட்டவங்க ஆயிரம் சொல்லுவாங்க… ஆனா நேர்ல அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட தார்ப்பரியம் புரியும்… நீயும் நானும் அந்த தென்றலோட ட்ரெஸ் நம்மளோட வீட்டுக்குள்ள இருக்கும் போதே பாத்தோம் இல்ல..? அதுவும் அவ இறந்து கொஞ்ச நாள் ஆனதுக்கு அப்புறமா… அதைத் தாண்டி ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா நம்மளால..?”
“ம்ம்… அல்லி, நம்ம கொஞ்ச காலம் வெளிய எங்கேயாவது போய் தங்கிட்டு வரலாமா..? உன்னோட வீட்டுக்குனாலும் ஓகே… இல்லன்னா விவேகானந்தர் இல்லத்துக்கு போய் தங்கிறதுன்னாலும் ஓகே. ஒரு மன மாற்றத்துக்காகத் தான் கேட்கிறேன்…”
“சரிம்மா… என்ன ஒண்ணு, எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணமா இருந்துக்கிட்டு நானே ஓடி ஒளியறது தான் சங்கடமா இருக்கு எனக்கு…”
“இல்ல… ஒரு வாரமோ பத்து நாளோ ஒரு ஸ்ட்ரேஞ்சுக்காக போயிட்டு வரலாம்… மத்தபடி நம்ம இங்கேயே இருக்கலாம்… என்ன ஆகிறதுன்னாலும் எனக்கும் உனக்கும் சேர்த்தே ஆகட்டும்…” என்ற ரத்னாவை இறுகக் கட்டிக் கொண்டாள் அல்லி.
மறுநாள் தாமரை அம்மாவிடம் சொல்லி விட்டு இல்லத்திற்கு சென்று ஒரு வாரம் தங்கி விட்டு வரலாம் என்றும், பூஜையில் மட்டும் கலந்து கொள்ள தினமும் வந்து செல்வதாகவும் ஏகமனதாக தீர்மானித்துக் கொண்டனர் இருவரும்.
✯✯✯✯✯✯
காரை இனியா செலுத்திக் கொண்டிருக்க, அருகில் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார் வாசுதேவன். முன்னாள் இன்ஸ்பெக்டர் சரவணகுன்றன் வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து நிலைத்திருந்த மெளனத்தை இப்போது தான் கலைத்தாள் இனியா.
“என்ன சார் தீவிரமா எதையோ யோசிச்சுட்டு இருக்கீங்க..?”
“இந்த தென்றலோட விசயம் தான் மேடம் ஒரே குழப்பமா இருக்கு… அவ யோசனை ஒரு பக்கம்னா இந்த ஆரக்ஷாவோட யோசனை அதை தாண்டியும் ஓடிக்கிட்டு இருக்கு…”
“சரி தான்…”
“சரவணகுன்றன் சார் சொன்ன மாதிரி, அந்த ஃபாரன்ஸிக் ஆபீஸர் ஜானகிராமன் எதையும் கண்டுபிடிச்சிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறீங்களா மேடம் நீங்க..?”
“கண்டிப்பா இல்லை சார்… ஏதோ ஒரு விசயம் இருக்கு… அவர் எதையும் கண்டுபிடிக்காத வருத்தத்துல இருந்தாருன்னு தோணல எனக்கு… ஏதோ ஒண்ணு அவருக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா என்னவோ ஒரு காரணத்தால அதை வெளிய கொண்டு வர அவரால முடியல… அது தான் அவரை ரொம்ப பாதிப்புக்குள்ளாக்கி இருக்கு… இது என்னோட கணிப்புங்கறத தாண்டி, எழுபது சதவீதம் இப்படி இருக்கிறதுக்கான சான்ஸ் அதிகம்னு தோணுது சார்… நீங்க என்ன நினைக்கிறீங்க இதைப் பத்தி..?”
“என்னோட மனசுல என்ன ஓடிக்கிட்டு இருக்கோ அது அத்தனையும் நீங்க வார்த்தையால சொன்ன மாதிரி இருக்கு மேடம்… நானும் அதையே தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். மே பீ அவர் கண்டுபிடிச்ச எதையும் வெளிய சொல்லக் கூடாதுன்னு யாராவது அவரை மிரட்டி இருக்கலாம், அவரோட ஃபேமிலியை வச்சு ப்ளாக் மெயில் பண்ணி இருக்கவும் வாய்ப்புகள் இருக்கு…”
“ம்ம்… ஸ்டேஷனுக்கு போய் முதல் வேலையா அந்த கேஸ் ஃபைலை ரீ-ஓப்பன் (reopen) பண்ணி பாக்கலாம் சார்… அதுல ஜானகிராமன் சாரோட கான்டாக்ட் டீடெயில்ஸ் இருக்கும்… அதை எடுத்து அவங்க ஃபேமிலிக்கு கால் பண்ணி பாத்தோம்னா அவங்களுக்கு இதைப் பத்தி எதாவது தெரிஞ்சிருக்கா, ஜானகிராமன் சார் ஏதாவது சொல்லி இருக்காரான்னு தெரிஞ்சுக்க வசதியா இருக்கும் நமக்கு…”
“கண்டிப்பா மேடம்… கூடவே அந்த இடத்துல செத்துப்போனவங்களோட லிஸ்டயும் எடுத்துக்கணும் நம்ம…”
“ஆமா… அப்புறம் வாசு சார்…” என ஏதோ சொல்ல வந்த இனியா, அவரது ஃபோனில் போட்டிருந்த மேப் காட்டிய டிரெக்ஷனைப் பார்த்து, சொல்ல வந்த விடயத்தைப் பாதியிலேயே நிறுத்தினாள்.
“என்னாச்சு மேடம்..?”
“சார் இங்க பாருங்க… கூகுள் மேப்ல இன்னொரு டிரெக்ஷனும் காட்டுது… இந்த பாதையால போனா ஒருமணி நேரம் முன்னாடியே போய்டலாம்னு நினைக்கிறேன்… ஷார்ட் கட்டா இருக்கு…”
“அட ஆமா மேடம்… ஷார்ட் கட் ஒண்ணு காட்டுது தான்… ஆனா நம்ம இங்க வரும் போது கூகுள் மேப் இந்தப் பாதையை சஜெஸ்ட் பண்ணினதா ஞாபகம் இல்லையே எனக்கு..?”
“தெரியல சார்… சிலவேளை அந்த டைம்ல பாதையை க்ளோஸ் பண்ணி வச்சிருந்தாக் கூட ரூட் காட்டி இருக்காதுன்னு நினைக்கறேன்… இப்போ இந்த ரூட்ல போய் பாக்கலாமா..?”
“சரி மேடம்…”
தொடர்ந்து வந்த பாதையில் இடது பக்கமாக காரை திருப்பினாள் இனியா. வாசுதேவன், சரவணகுன்றன் சொல்லி இருந்த தகவல்களை மனதுக்குள் மீட்டுக் கொண்டிருந்தார்.
“அப்புறம் சார், ஆரக்ஷா கேஸ்ல அந்த ஆனந்தனை விசாரிக்க ரெண்டு போலீஸ்காரவங்கள அனுப்பிச்சோம் இல்ல… அவங்க ஏதாவது தகவல் சொன்னாங்களா..?”
“அந்த இடத்துல ஆனந்தன்னு யாருமே இல்லையாம் மேடம்… அந்த சர்ச்ல கூட போய் விசாரிச்சு இருக்காங்க… ப்ரேயர்க்கும் ஆனந்தன் எங்கிற பேருல யாரும் வர்றதில்லைன்னு சொல்லி இருக்காங்க…”
“ஓஓ… அப்படின்னா அந்த பர்சனும் ஃபேக்கா..?”
“ஆமா மேடம்… ஆனா இத்தனைக்குப் பிறகும் இந்த கேஸ்ல கொஞ்சம் கூட மனம் தளராம எப்படி உங்களால இவ்வளவு கான்ஃபிடன்டா இருக்க முடியுதுன்னு தான் எனக்கு புரியவே இல்லை மேடம்…”
“அது வாசு சார், …” என இனியா ஏதோ சொல்ல ஆரம்பிக்கையில், சட்டென ‘ஹக்…’ என்று ஒரு குலுக்கலுடன் நின்று போனது கார்.
“என்னாச்சு மேடம், எனி ப்ராப்ளம்..?” என்றார் வாசுதேவன் கண்ணாடி வழியே எட்டி முன் வீதியைப் பார்த்தபடி.
“ப்ராப்ளம் எதுவும் இல்லை சார்… கார் தான் கொஞ்சம் மக்கர் பண்ணுதுன்னு நினைக்கிறேன்…” என்றபடியே மீண்டும் காரை ஸ்டார்ட் செய்ய, அது ‘அசைவேனா..?’ என அடம் பிடித்தது.
“இருங்க மேடம், நான் என்னனு பாக்கிறேன்…” என்ற வாசுதேவன் காரிலிருந்து இறங்கி முன்புறமாக சுற்றிக் கொண்டு இனியா இருந்த இருக்கைக்கு வர, அவள் அடுத்த இருக்கைக்கு மாறி அவருக்கு வழி விட்டாள். காரை வாசுதேவனும் ஒருமுறை ஸ்டார்ட் செய்து பார்த்தார். ஆனால் பலன் என்னமோ பூஜ்ஜியமாகத் தான் இருந்தது.
“ப்யூலும் இருக்கே… திடீருனு என்னாச்சு..?” என தனக்குள் பேசியபடியே, “நீங்க கார்லயே இருங்க மேடம்…” என்றுவிட்டு இறங்கி, போனட்டை (Bonnet) திறந்து லூஸ் கனெக்ஷன் ஏதாவது ஆகி இருக்கிறதா என ஆராய்ந்தார் வாசுதேவன். அவரைத் தனியே விட்டு விட்டு காரில் இருக்க மனமில்லாததால், “என்னாச்சு சார்..?” என்று கொண்டே இறங்கி அவர் அருகில் வந்தாள் இனியா.
“தெரியல மேடம்… எல்லாம் சரியா இருக்கற மாதிரித் தான் இருக்கு… அப்புறம் ஏன் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது..? இதுவரைக்கும் எப்பவுமே இப்படி பாதி வழியில நின்னதில்ல…” என்றவர் மீண்டும் ஏதோ தனக்கு தெரிந்த எல்லாம் செய்து பார்த்து விட்டு காரை ஸ்டார்ட் செய்ய, இப்போதும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
“டைம் என்னாச்சு மேடம்..?”
“பத்து மணி ஆச்சு சார்…” என்றாள் இனியாவும் தனது கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தபடியே.
“ஓஓ… இப்போ இங்க மெக்கானிக் ஷெட் எதுவும் திறந்து இருக்குமா தெரியலையே… ஆள் நடமாட்டமும் எதுவும் இல்லாம இருக்கு… இஃப் யூ டோன்ட் மைன்ட், என் ஃபோனை கொஞ்சம் எடுத்து தர்றீங்களா மேடம்..?”
“ஷ்யூர் சார்…”
இனியா அலைபேசியை எடுத்துக் கொடுக்க, தனக்கு தெரிந்த மெக்கானிக் ஒருவருக்கு கால் செய்ய வாசுதேவன் அழைப்பு விடுக்கப் போன சமயத்தில், அத்தனை நேரமாக ஒளிர்ந்து கொண்டிருந்த அத்தனை தெரு விளக்குகளும் அணைந்து அணைந்து ஒளிர ஆரம்பித்தன. உடன் அருகில் ஓடி வந்தாள் இனியா.
“என்னாச்சு சார்..?”
“அதான் தெரியல மேடம்…” என்றார் வாசுதேவன் விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்குகளைப் பார்த்தபடியே.
“சம்திங் ஸ்ட்ரேஞ்ச்…” என் இனியா சொன்ன விநாடியில் அனைத்து மின்குமிழ்களும் சேவை நிறுத்தம் செய்து கொள்ள, சட்டென இருள் சூழ்ந்து கொண்டது அவ்விடத்தை. கூடவே ஓர் அமானுஷ்ய அமைதியும் அங்கு ஆக்கிரமித்துக் கொண்டது. அத்தனை நேரம் ஒளிர்ந்து கொண்டிருந்த காரின் பார்க்கிங் லைட்டும் அணைந்து போனது தான் இன்னும் ஆச்சரியம்.
நடப்பது எதையும் புரியாதவராகவே, தனது மொபைல் லைட்டை ஆன் செய்து காரில் இருந்த மின்சூளை (Torch) எடுத்து வந்து ஒளிரச் செய்தார் வாசுதேவன்.
“என்ன மேடம், ஏதோ ஒண்ணு சரியில்லாத உணர்வா இருக்கு…” என்றபடியே இரு அடிகள் முன்னோக்கி நகர்ந்த வாசுதேவனின் அருகில் வேகமாக அணுகி வந்தாள் இனியா.
இத்தனை காலமாக கிட்டவும் நெருங்கியிராதவள் திடீரென அப்படி நடந்து கொள்ளவும் சற்றே தடுமாறி, “எ..ன்ன மேடம்… ஆர் யூ ஓகே..?” என்றார் வாசுதேவன் நடுங்கலாக.
“சட்டுனு திரும்பி பாக்காதீங்க சார்… நம்ம பின்னாடி ஏதோ ஒண்ணு நிக்குது…” என்றாள் இனியா மெல்லிய குரலில்.
“ஏதோ ஒண்ணா.. யாராவது நம்மள ஃபாலோ பண்ணுறாங்கன்னு சொல்றீங்களா மேடம்..?”
“இல்லை சார்… இது சம்திங் ஸ்ட்ரேஞ்ச்… மனுஷங்க மாதிரி இல்லை…”
“என்ன மேடம் என்னென்னமோ சொல்றீங்க..? மனுஷங்க இல்ல அப்படீன்னா அது என்ன பேயா..?”
“நிஜமாவே பேய் தான் வாசு சார்… இப்ப எல்லாம் விளக்கமா சொல்ல முடியாது… என்ன ஆனாலும் என்னை விட்டு விலகி மட்டும் போய்டாதீங்க…” என இனியா சொல்லச் சொல்லவே,
“மே..ட..ம்..” என நா தழுதழுக்க அழைத்த வாசுதேவன், தான் ஏற்கனவே ஆன் செய்திருந்த மேப்பில் அந்த இடத்தின் பெயரைக் காட்ட, அது ‘அத்திப்பட்டு..!”
ஷார்ட் கட் என்கிற பெயரில் லாவகமாக அத்திப்பட்டுக்குள் காரைத் திருப்பி இருந்தாள் நம் இனியா..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.