Episode 41

ஶ்ரீ துர்க்கா | 09 Mar 2026 | Share

அல்லி 41

அத்திப்பட்டு 

முதலாம் நாள் பூஜை இனிதே நிறைவு பெற்றிருந்தது.‌ மாலை நான்கு மணிக்கு எல்லாம் பூஜையை முடித்து மக்களை வீட்டுக்கு அனுப்பி இருந்தனர் நீலகண்டனும் அஸ்வத்தாமனும். 

அதே நேரம் அத்திப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று ரிசீவரை காதில் வைத்தார் போலீஸ் ஆபீஸர் ஜெயராம்‌‌. மறுமுனையில் ஒலித்த குரலைக் கேட்டதும் சட்டென அவரது குரல் பணிவைத் தத்தெடுத்துக் கொண்டது.

“சொல்லுங்க சார்…”

“சப்இன்ஸ்பெக்டர் அன்பழகனை பூங்குன்றன் சாரோட கேஸ் விசயமா விசாரணைக்கு கூப்பிட்டு இருந்தாங்க இல்ல..? அதுல ஜனரஞ்சன் சார் குடுத்திருந்த ஆதாரங்களை வச்சு அவரை கைது பண்ணி விசாரிக்க சொல்லி கோர்ட் ஆர்டர் வந்திருக்கு… நீங்க ரெண்டு பேர் சேர்ந்து, பூங்குன்றன் சார் இறந்த அன்னைக்கு அவர் ஹாஸ்பிடல்ல இருந்தாருங்கறதுக்கான சிசிடிவி பூட்டேஜ் எடுத்துட்டு, முடிஞ்சா அங்க வர்க் பண்ற ஸ்டாப் ரெண்டு பேரோட வாய்ஸ் ரெக்கார்டும் எடுத்துட்டு வந்துடுங்க…”

“சரிங்க சார்…”

“ம்ம்… அங்க நிலவரம் என்ன மாதிரி இருக்கு..?”

“அதே சிட்ஜுவேஷன்ல தான் போய்க்கிட்டு இருக்கு சார்… ஊருக்குள்ள இருந்த ரெண்டு பூசாரிங்க வந்து ஏதோ பூஜை பண்ணி எல்லாத்தையும் சரி பண்ணறதா சொல்லி இருக்காங்க… அவங்க ஒரு பக்கம் அவங்க வேலையை பாத்தாலும், நாங்க நம்ம சைட்ல இங்க எல்லா இடத்துலயும் கேமரா ஃபிக்ஸ் பண்ணி கண்காணிச்சுட்டு இருக்கோம்… மாலை ஆறு மணிக்கு மேல யாரும் வெளிய வரக்கூடாதுன்னு தடை உத்தரவும் போட்டிருக்கோம் சார்…”

“சரி… ஒரு பொண்ணோட வீட்டுல சிசிடிவி செக் பண்ணி சம்திங் அப்நார்மலா இருக்குன்னு சொல்லி வீடியோலாம் காமிச்சீங்களே..? ஏதோ ஒரு பொண்ணோட ஆத்மா தான் இதுக்கு எல்லாம் காரணம்னு சொன்னாங்க… நானும் அந்த பூட்டேஜ் பாத்தேன்… அதுக்கு அப்புறம் அத பத்தி எந்த ஆக்ஷனும் எடுக்கலயா..?”

“இல்ல சார்… வந்து, பூங்குன்றன் சாரும் அதுக்கப்புறம் தான் இறந்தாங்க… அப்படியே ஹெட் கான்ஸ்டபிள்…”

“கம் ஆன்… நீங்க எல்லாம் போலீஸ் உத்தியோகம் பாக்கறீங்க… இப்படி இர்ரெஸ்பான்ஸிபிளா பதில் சொல்லலாமா..? அத்திப்பட்டுக்குள்ள இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிற காலப்பகுதிக்கு கிட்டவா எந்த இளம் பெண்ணாவது காணாம போய் இருக்காங்களா..?”

“இல்ல சார்… ஆன் த ரெக்கார்ட்டும் சரி, ஆஃப் தி ரெக்கார்ட் நாங்க போய் விசாரிச்சு பாத்ததுலயும் சரி… அப்படி ஒரு விசயம் நடக்கல… இப்ப இந்த பிரச்சினை ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் போய்ட்டும் வந்து இருக்கோம் சார்… எந்த வீட்டுலயும் யாரும் காணாம போனதா தகவல் இல்லை…”

“சரி… குறிப்பிட்ட இந்த காலப்பகுதிக்குள்ள யாராவது இளம் பொண்ணுங்க இறந்த மாதிரி ஏதாவது ரெக்கார்ட் இருக்கா..?”

“இல்ல சார்… அப்படியும் எதுவும் இல்லை…”

“இந்தப் பிரச்சினை இப்போ ஒரு… பதினைஞ்சு இருபது நாளுக்குள்ள ஆரம்பிச்சதா இருக்குமா..?”

“ஆமா சார்… பதினைஞ்சு நாள் கூட இருக்காது… ஒரு வாரமோ பத்து நாளோ தான் இருக்கும்…”

“சரி… கொஞ்சம் அதிகமா யோசிச்சு இந்த ஒரு மாச காலத்தை எடுத்துக்கலாம்… இந்த ஒரு மாத காலத்துக்குள்ள அத்திப்பட்டுக்குள்ள என்னென்ன விசயங்கள் வித்தியாசமா நடந்திச்சுன்னு தீர விசாரணை பண்ணுங்க… கண்டிப்பா ஏதாவது பிடிமானம் நம்மளுக்கு கிடைக்கும்…”

“சரிங்க சார்…”

“ம்ம்… சில விசயங்களை நாங்க சொல்லாம நீங்களா உணர்ந்து செய்யற பக்குவத்தை வளத்துக்கோங்க சார்…”

“சாரி சார்…”

“ம்ம்… எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் ரிப்போர்ட் சப்மிட் பண்ணுங்க மிஸ்டர் ஜெயராம்…”

“ஷ்யூர் சார்…”

“ம்ம்… இன்னொரு விசயம் உங்களுக்கு சொல்லணும்… ஆனா அது சந்தோஷமான விசயமா இல்லன்னா கஷ்டமான விசயமான்னு தெரியல எனக்கு…” 

“என்னாச்சு சார்..?”

“பூங்குன்றன் சாருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம்…”

அதைக் கேட்டு என்ன சொல்வதென்றே தெரியாமல் மரத்துப் போன மனதுடன் நின்றிருந்தார் ஜெயராம். 

“சரி மிஸ்டர் ஜெயராம்… நம்ம இந்த கேஸ ஒரு முடிவுக்கு கொண்டு வர்றது தான், நம்ம தரப்பில இருந்து இறந்து போன அத்தனை பேருக்கும் நம்ம தரக் கூடிய நியாயமா இருக்கும்… ஹோப் யூ அன்டர்ஸ்டான்ட்…” என்றதோடு இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்க, இன்னும் நடுக்கம் குறையவில்லை ஜெயராமிற்கு. ஒருவேளை அன்பழகனோ, ஹெட் கான்ஸ்டபிள் ஜெயந்தனோ அங்கு இருந்திருந்தால் அவர்களை சரியாக வழி நடத்தியிருக்கக் கூடும்… சில ஆளுமைப் பண்புகளை தாமாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டார் அவர். கூடவே பூங்குன்றனது குழந்தை விவகாரம் வேறு மனதைப் பிசைந்தது.

“யார் சார் ஃபோன்ல, அப்படியே ஸ்தம்பிச்சு போய் நிக்கறீங்க..?” என கேட்டபடியே அங்கு வந்தார் இன்னொரு ஆஃபீஸரான சுகிர்.

“கமிஷ்னர் சார் கால் பண்ணார்…”

“கமிஷ்னரா..?”

“ஆமா சார்…” என்றவர், அத்தனை தகவல்களையும் அவரிடம் பகிர்ந்திருந்தார். 

“நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு சார்… பூங்குன்றன் சார் எப்ப பார்த்தாலும் குழந்தை பத்தி பேசிட்டே இருப்பாருல்ல..?”

“ம்ம்… நம்மளோட ஒண்ணு மண்ணா திரிஞ்ச அவங்க எல்லாரும் இப்போ மண்ணோட மண்ணா புதைஞ்சு போய் இருக்கிறத நினைச்சாலே என்னவோ பண்ணுது சார்…”

“கமிஷ்னர் சார் சொல்றதும் கரெக்ட் தான் சார்… நம்ம இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர்றது தான் இறந்து போன அத்தனை பேருக்கும் நம்ம தரக் கூடிய நியாயமான பதிலா இருக்கும்… அப்படின்னா நானும் சானுஜன் சாரும் இன்னைக்கே போய் அன்பழகன் சாருக்கான ஃபேவரேஷனை பாக்க ஆரம்பிக்கிறோம்… நீங்க அத்திப்பட்டுக்குள்ள விசாரணையை ஆரம்பிங்க… அன்பழகன் சாரோட எவிடென்ஸ கலெக்ட் பண்ணிட்டு வந்து நாங்களும் உங்க கூட ஜாய்ன் பண்ணிக்கிறோம்…”

“சரிங்க சார்…”

                    ✯✯✯✯✯✯

ஏற்காடு 

காலை வேளையிலேயே அவர்களை வரச்சொல்லி இருந்தார் சத்யசீலன். அதனால் இன்று முதல் வேலையாக இங்கு தான் வந்திருந்தார்கள் இனியாவும் வாசுதேவனும். தமக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சத்யசீலனையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன இரு சோடி விழிகளும். அதற்கு மேலும் அவர்களை காத்திருக்க வைக்காது தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தார் சத்யசீலன்.

“இது நம்ம எதிர்பார்த்த மாதிரியே தென்றலோட ஃபோன் தான் மேடம்… காணாம போன அன்னைக்கு மதியம் மூணு மணி வாக்குல தென்றல் எழிலுக்கு கால் பண்ணி இருக்கா… ஆனா அன்ஃபார்ச்சுனேட்லி கால் கனெக்ட் ஆகாமலேயே கட் ஆகி இருக்கு… மே பீ சிக்னல் இஸ்யூவா இருந்திருக்கலாம்‌. அத தவிர இதுல யூஸ்ஃபுல்லா எந்த தகவலுமே இருக்கற மாதிரி தெரியல… டெக்னாலஜி எக்ஸ்பர்ட்ஸ் கிட்டவும் நல்லா விசாரிச்சுக்கிட்டோம் மேடம்… கூடவே தமிழ்நாட்டுலயே நம்பர் ஒன்னா இருக்கற ஃபாரன்ஸிக் ஆபீஸர் ஜனரஞ்சன் சார் கிட்டவும் வீடியோ கால்ல கன்சல்ட் பண்ணி பாத்தோம்… ஏதாவது அவசியம் இருந்தா அவரை நேர்ல போய் மீட் பண்ணிக்கலாம் மேடம்… இதுல இன்னொரு விசயம் இருக்கு… தென்றலோட ஃபோன்ல இருந்து மெமரி கார்ட யாராவது எடுத்துட்டு, அவளோட ஃபோனை மாத்திரம் டிஸ்போஸ் பண்ணி இருக்கலாம்… ஏன்னா மெமரி கார்ட நம்ம ட்ராக் பண்ணி லொக்கேஷன் கண்டுபிடிக்க முடியாது…”

“ஓஓ…”

“ம்ம்… பட், இந்த ஆப்ஷனுக்கு சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி மேடம்… தென்றல் மெமரி கார்ட் யூஸ் பண்ணுறதுக்கான சான்ஸ் அவ்ளோவா இல்லை… ஏன்னா அவ ஃபோன்ல 256GB ஸ்பேஸ் இருக்கு… நான் ஒரு ஆப்ஷனா தான் உங்களுக்கு இந்த தகவலை தெரிவிச்சேன். அதோட ஆதார பூர்வமாவும் மெமரி கார்ட் அதுல இருந்த மாதிரி எந்த டீடெய்ல்ஸும் இல்லை…”

“ம்ம்… எதுவுமே இல்லாத ஃபோனை எதுக்கு தண்ணில தூக்கிப் போட்டு மூடி மறைக்கணும்..?” வாய்விட்டு கேட்டபடியே தலையை தேய்த்துக் கொண்டாள் இனியா. கூடவே அந்த ஃபோனுக்கான கால் ஹிஸ்டரி மற்றும் டேட்டாவையும் சத்யசீலனிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.

வாசுதேவனும் இனியாவும் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தனர். இருவர் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது ஒரே விடயம் தான். தென்றலின் சேலையில் இருந்த இரத்தம், வெளியேறி இருந்ததாக சொல்லப்பட்டிருந்த நேர இடைவெளிக்கு கொஞ்சம் முன்னராக தான் எழிலுக்கு அழைத்திருந்தாள் தென்றல். ஏதோ ஆபத்து வரப்போவதை முன்கூட்டியே உணர்ந்து தான் தென்றல் எழிலுக்கு அழைத்திருக்க வேண்டும் என இருவரும் ஆலோசித்து கொண்டார்கள்.

“மேடம், ஆரக்ஷாவோட போட்டோவையும், அவங்க அப்பாவோட போட்டோவையும், தென்றலோட போட்டோவையும் பப்ளிக்கா போஸ்ட் பண்ணி, அவங்கள எந்த இடத்துல பார்த்தாலும் உடனே எங்களுக்கு கால் பண்ண சொல்லி அனௌன்ஸ்மென்ட் குடுத்துடலாமா..?”

“குடுத்தா அது எஃபெக்டிவ் தான் வாசு சார்… ஆனா பிரச்சினை என்னனா, தென்றலோ அல்லது ஆரக்ஷவோ இன்னும் உயிரோட தான் இருக்காங்கன்னா, நம்ம போட்ற இந்த போஸ்ட் கூட அவங்களுக்கு எமனா அமைஞ்சிடலாம்… கிட்னாப்பர் அதுக்கப்புறம், தான் மாட்டிக்கக் கூடாதுன்னு கூட அவங்களை கொல்லறதுக்கு வாய்ப்பு இருக்கு…”

“ஆனா ஆரக்ஷாவோ இல்லன்னா தென்றலோ இப்போ உயிரோட இருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா மேடம்..?”

“கூடுதலா வாய்ப்பு இல்லை சார்… ஆனா இதெல்லாம் நம்மளோட அனுமானம் தானே..? அது மட்டுமில்லாம, தென்றலோட சேலையில இருந்த ப்ளட் சாம்பிள் ஆரக்ஷாவோடதுங்கறது கூட நம்ம எடுகோள் தானே..?”

“சரி தான் மேடம்… எனக்கு என்ன மனசுக்குள்ள ஓடுதுன்னா தென்றல் ஃபோன்ல எதுவுமே இல்லன்னா அதை தூக்கிப் போட்டிருந்தாலே போதுமே… எதுக்கு அதை அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த சர்வீஸ் ஃபிட்டுல போடணும்..? அதுவுமில்லாம தென்றலோட சேலை மாத்திரம் தான் அங்க இருக்கு… அவளோட ப்ளட் சாம்பிளோ வேற எதுவுமோ அங்க இல்லை…‌ அப்படின்னா அவளுக்கு என்னாகி இருக்கும்..?”

“அதையே தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன் சார்…” என்றவாறே தன் கண்களை மூடிக் கொண்டு நெற்றியை தேய்த்தாள் இனியா. ஆரம்பத்திலிருந்து நடந்த அத்தனை விடயங்களையும் மறுபடியும் ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டவள், திரும்பி வாசுதேவனை பார்த்தாள். 

“சார், ஸ்கூல் பின்னால நடந்த பிரச்சினை எல்லாத்தையும் இன்வெஸ்டிகேட் பண்ணினது சரவணகுன்றன் அப்படின்னு ஒரு இன்ஸ்பெக்டர் தானே..? அவங்க கிட்ட விசாரணை நடத்தினா நம்மளுக்கு யூஸ்புல்லா ஏதாவது தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு… அத்திப்பட்டு போலீஸ் ஸ்டேஷனை கான்டாக்ட் பண்ணி இன்ஸ்பெக்டர் பூங்குன்றனை லைன்ல வர சொல்லி பேசிப்பாருங்க… அவர்கிட்ட சரவணகுன்றன் சாரோட அட்ரஸ் கேட்டா நம்ம டைரக்டா அவங்க வீட்டுக்கே போய் விசாரிச்சுக்கலாம்…”

“சரிங்க மேடம்…” என்றவர், அதை செயலாற்றவும் தொடங்கி இருந்தார்.

மெல்ல மெல்ல அல்லியை நோக்கி நகர ஆரம்பித்திருந்தனர் இனியாவும் வாசுதேவனும்..!

                    ‌‌ ✯✯✯✯✯✯

                                  – அல்லி மலரும்…

    No comments yet.