அல்லி 40
ஏற்காடு
இனியாவும் வாசுதேவனும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஃபாரன்ஸிக் ரிப்போர்ட் வந்திருந்தது. அதையே நம்ப மாட்டாமல் புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா. வாசுதேவனும் தன் பங்கிற்கு அதை வாங்கி ஒருமுறை புரட்டிப் பார்த்து விட்டார், மாற்றமே இல்லாமல் திரும்ப திரும்ப அதையே தான் சொல்லியது ரிப்போர்ட்.
“நீங்க எத்தனை தடவை திருப்பிப் பார்த்தாலும் அதுல இருக்கற அத்தனையும் சத்தியமான உண்மைகள் தான் மேடம். அந்த சேலையில இருந்து கிடைச்சது மொத்தம் மூணு எவிடென்ஸ். ரெண்டு கைரேகையும், ஒரு ப்ளட் சாம்பிளும். அதுல ஒரு கைரேகை தென்றலோடது, மத்த கைரேகையும் அந்த ப்ளட் சாம்பிளும் ஒருத்தரோடது தான். அந்த ஒருத்தர் ஒரு பொண்ணு… ஆனா அது தென்றல் கிடையாது. விச் மீன்ஸ், அன்னைக்கு அங்க தென்றல் கூட இன்னொரு பொண்ணும் இருந்திருக்கணும். மே பீ, அது நீங்க தேடற அந்த ஆரக்ஷாவா கூட இருக்கலாம்…”
“என்ன மேடம், அப்படின்னா தென்றல் கூடவே சேர்ந்து தான் ஆரக்ஷாவும் காணாம போய் இருக்காளா..? அவளைப் பத்தி யாரும் கம்ப்ளைன்டும் பதிவு பண்ணல. அவங்க இருந்த வீட்டுக்கு வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டர் போனப்போ அங்க யாரும் இருக்கலன்னும் சொல்லறாங்க. அந்த பொண்ணு வீட்டுக்காரங்க என்ன மாயாஜால வித்தையா காட்டிட்டு இருக்காங்க மேடம்..? ரொம்ப தலைவலி புடிச்ச கேஸா இருக்கு…”
“தலைவலி புடிச்ச கேஸ் தான் வாசு சார்… ஆனா அதுல இருக்கற லூப் ஹால்ஸ கண்டுபிடிச்சு குற்றவாளியை ஃபைன்ட் அவுட் பண்ணி கூண்டுல ஏத்தறதுல தான் நம்மளோட திறமை இருக்கு… அப்போ தான் மத்தவங்களும் குற்றம் செய்யறதுக்கு பயப்படுவாங்க…”
“சரி தான் மேடம்…”
“ம்ம்… பை த வே, சீலன் சார் உங்க கிட்ட நேத்து கொண்டு வந்து ஒரு ஃபோன் குடுத்தமே, அதோட ஸ்டேடஸ் எந்த அளவுல இருக்கு..?”
“அந்த அனலைஸிஸ் தான் போய்க்கிட்டு இருக்கு மேடம்… அந்த ஃபோன்ல மெமரி சிப் எதுவும் இல்லை… எல்லாமே ஃபோன் மெமரில தான் சேவ் ஆகி இருக்கு… அதனால இன்னும் சில எக்ஸ்பர்ட்ஸ் கூட சேர்ந்து அதை அனலைஸிஸ் பண்ணிட்டு இருக்கோம். மோஸ்ட்லி இன்னைக்கு உங்களுக்கு யூஸ்ஃபுல்லான தகவல்கள் கிடைக்குறதுக்கு நிறைய சான்ஸஸ் இருக்கு…”
“ரொம்ப நன்றி சார்… அடுத்து ஏதாவது லீட் கிடைச்சுதுன்னா உங்களை அப்ரோச் பண்றோம்… உங்க சப்போர்ட் ரொம்ப பெரிய ஹெல்ப் எங்களுக்கு…”
“கண்டிப்பா மேடம்… எங்களால முடிஞ்ச எல்லா சப்போர்டயும் உங்களுக்கு குடுக்க நானும் என் டீமும் தயாரா இருக்கோம்…”
புன்னகையாலேயே அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டு எழுந்தாள் இனியா. மனம் முழுக்க எத்தனை எத்தனையோ கேள்விகளும், அனுமானங்களும் நிறைந்து கிடந்தன..!
✯✯✯✯✯✯
இனியாவும் வாசுதேவனும் பயணித்துக் கொண்டிருந்த கார் ஏற்காட்டின் பிரதான வீதியில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வாசுதேவன் இனியாவிடம் ஏதோ கேட்க வந்த நேரம், சரியாக அவரது மொபைல் அழைக்க காரை சற்று ஒதுக்குப் புறமாக நிறுத்தி விட்டு அழைப்பை ஏற்றார் அவர். சரியாக பத்து நிமிடங்கள் கழித்து ஃபோனை வைத்தவரது முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
“என்னாச்சு வாசு சார், ஆர் யூ ஆல் ரைட்..?”
“இல்ல மேடம்… போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து தான் கால் பண்ணாங்க… நாம தேடிட்டு இருக்கோம்ல ஆரக்ஷா..? அவளோட பேரு ஆரக்ஷா இல்லையாம்… அவ பேருல இருக்கற ஆதார் கார்ட், ஸ்கூல்லயும் சரி வெளிலயும் சரி தன்னைப் பத்தி அவ குடுத்திருக்கற டீடெய்ல்ஸ், அது மட்டுமில்லாம அவளோட ஃபேமிலி பத்தின டீடெய்ல்ஸ் அத்தனையும் பொய்னு சொல்லி கண்டுபிடிச்சிருக்காங்க…”
“வாட்..?”
“ஆமா மேடம்… எனக்கு தெரிஞ்சு அவ ஏதோ தப்பான ஆளா இருக்கணும். அவ மூலமா தான் அப்பாவியான தென்றலுக்கு ஏதோ பிரச்சினை வந்திருக்கணும்… கிட்டத்தட்ட தென்றல் காணாம போன நாள்ல இருந்து ஆரக்ஷா ஸ்கூலுக்கு வரல இல்லையா..? பொய்யான டீடெய்ல்ஸ் குடுத்து நம்மள எல்லாம் முட்டாளாக்க பாக்கறாளா அவ..? சீக்கிரம் அவளோட பிரச்சினைக்கு ஒரு என்ட் கார்ட் போடணும் மேடம்…”
“உணர்ச்சி வசப்படாதீங்க வாசு சார்… நம்ம நாட்டுல செக்கியூரிட்டி டைட்டா இருக்கற இடங்கள் தவிர மத்த இடங்கள்ல போலியான ஆதார் கார்ட் யூஸ் பண்ணறது அவ்ளோ கஷ்டம் கிடையாது. நம்ம பேங்க்ல போய் க்ராஸ் செக் பண்ணும் போது தான் அவங்க பேருல அக்கவுண்ட் எதுவும் இல்லைன்னு தெரிய வந்துச்சு நமக்கு… போலி ஆதார் யூஸ் பண்ணி அக்கவுண்ட் க்ரியேட் பண்ணவும் முடியாது… ஏன்னா ஆன்லைன் வெரிபிக்கேஷன் எல்லாம் போலி ஆதார் வச்சு பாஸ் பண்ண முடியாது. ஒருவேளை, இந்த சிஸ்டம் அப்டேட் ஆகறதுக்கு முன்னாடி அவங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி இருந்தா, சும்மா வெரிபிகேஷனுக்கு மாத்திரம் ஆதார் கார்ட் பாத்திருக்காங்கன்னா ஏமாத்தி இருக்க வாய்ப்பு இருக்கு… இவங்க அப்படி எதுவும் பண்ணல… இவங்களோட மோட்டீவ் என்ன, எதுக்காக இவ்வளவு தூரம் நாடகமாடி இருக்காங்கன்னு நாம தான் சார் கண்டுபிடிக்கணும். தென்றல் கேஸ், ஆரக்ஷா கேஸ் இது ரெண்டுலயும் எந்த இடத்துல எல்லாம் நமக்கு நூல் கிடைக்குதோ அந்த இடத்தை எல்லாம் நம்ம கெட்டியா பிடிச்சுக்கலாம்… அந்த பாதையில பயணிக்கும் போது கண்டிப்பா ஏதோ ஒரு இடத்துல ரெண்டும் கனெக்ட் ஆகும்… அங்க தான் நம்ம தேடலுக்கான பதிலும் கிடைக்கும்… லெட் அஸ் ட்ரை…”
“ஷ்யூர் மேடம்…”
✯✯✯✯✯✯
அத்திப்பட்டு
சூழ இருந்த ஊர் மக்களுக்கு மத்தியில், வானை நோக்கி தீ நாக்குகள் நீண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக தயாராகிக் கொண்டிருந்தது ஓம குண்டம். முதன்மை பொறுப்பை நீலகண்டன் ஏற்றிருக்க, அவருடன் இணைந்து உதவியாளராக இயங்கிக் கொண்டிருந்தார் அஸ்வத்தாமன். கொஞ்சம் கொஞ்சமாக தீ மட்டுக்கு வந்து, முழுதாக அணைந்து புகை வெளி வர ஆரம்பித்தது.
“ஓமப் பெரும் புகை உள் எழும் நுண்புகை” என்பதற்கேற்ப, அந்த புகையினுள் சிவனை காண முயற்சி செய்து கொண்டிருந்தனர் இருவரும்.
முன்னர் உமைபாலன் (அஸ்வத்தாமன் குறி கேட்க அழைத்திருந்த பெரியவர்) செய்தது போலவே, ஒன்று பெரியதும் மற்றையது சிறியதுமாக இரு குடங்களை எடுத்து அவற்றிற்கு தனித்தனி மாலைகள் அணிவித்து, பின்னர் இரண்டையும் சேர்த்து ஒரு பூணூலால் தொடுத்திருந்தார் நீலகண்டன்.
“எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க, இந்த ரெண்டு குடத்துல பெரிய குடத்தை சிவனாகவும், சின்ன குடத்தை சக்தியாகவும் உருவகிச்சு தான் நம்ம இந்த வழிபாட்டை மேற்கொள்ள போறோம்... நாங்க இங்க இருந்து வெளிய போன காலப்பகுதியில நிறையவே துயரமான சம்பவங்கள் நடந்து போச்சுன்னு இங்க வந்து தான் தெரிஞ்சுக்கிட்டோம். இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு கேட்டா, நம்ம ஊருக்குள்ள எந்த தெய்வமும் உயிரோட்டமா இல்லைன்னும், யாரோ ஒருத்தர் அத்தனை தெய்வத்தையும் கட்டுப்படுத்தி பூஜை செஞ்சிருக்கதாவும் எங்களுக்கு தெரிய வந்துச்சு… நானோ அல்லது அஸ்வத்தாமனோ பரம்பரை பூசாரிகள் கிடையாது. அதனால சில விசயங்களை கத்துட்டு வர்றதுக்கு எங்களுக்கு ரொம்ப நாள் ஆகிடுச்சு…” என்றிடவே, வயதானவர் ஒருவர் இடைமறித்தார்.
“ஐயா, அப்படின்னா ஊருக்குள்ள எந்த கெட்டசக்தியோட நடமாட்டமும் இல்லைன்னு சொல்றீங்களா..?”
“நிச்சயமா இல்லை… சாமியோட நடமாட்டம் குறைஞ்சுட்டதால அதோட துர்பலனா நிறைய துர்மரணங்கள் நடந்து போச்சு… அதுக்கு என்ன மாதிரியான பூஜை பண்ணணும், எந்த மாதிரியான மந்திர உச்சாடனம் இருக்கணும் எங்கிறதை தான் நாங்க கத்துட்டு வந்திருக்கோம். இந்த முறையிலான பூஜை புனஸ்காரங்களை ஒரு மண்டலத்துக்கு அதாவது நாற்பத்தெட்டு நாளுக்கு தொடர்ந்து செஞ்சுட்டு வந்தோம்ன்னா கட்டுக்குள்ள இருக்கற அத்தனை சாமியும் வெளியில வந்துடும்… அதோட இந்த பிரச்சினைக்கு காரண கர்த்தா ஆனவங்களுக்கு தகுந்த தண்டனையையும் அதுவே வழங்கிடும்… அதுக்கப்புறம் நம்ம வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமா இயல்பு நிலைக்கு திரும்பிடும்…”
“எதிர் கருத்து தெரிவிக்கிறதுக்கு மன்னிக்கணும் ஐயா… என் மனைவி விஜயா இறந்த அன்னைக்கு ஒரு கருப்பு அமானுஷ்ய உருவத்தை நான் என் ரெண்டு கண்ணால பாத்தேன். அது மட்டுமில்லாம காருண்யா வீட்டு சிசிடிவில அது பதிஞ்சும் இருக்கு… கூடவே, அல்லியும் ரெண்டு மூணு தடவை பெரியாத்தா உருவத்தை பாத்ததா சொல்றா… இத்தனைக்குப் பிறகும் இங்க எந்த கெட்ட சக்தியும் இல்லைன்னு நம்மளால நம்பிட்டு இருக்க முடியாதே..?” என தன் பக்க நியாயத்தை விளக்கினார் சித்தார்த்தன்.
“நீங்க சொல்றது சரிதான் சித்தார்த்தன் ஐயா… நாங்க வெளியூருக்கு போய் கத்துக்கிட்ட இடத்துல என்ன சொன்னாங்கன்னா, இந்த மாதிரி யாராவது இறக்கப் போறாங்கன்னா அதை எச்சரிக்கை செய்யற விதமா சில அசமாத்தமான நடமாட்டங்கள் இருக்க வாய்ப்பு இருக்காம்… கூடவே, நம்மள விட்டு உயிர் நீங்கி போற உறவுகளோட ஆத்மா குறிப்பிட்ட காலம் வரைக்கும் இந்த உலகத்துக்கும் ஆத்ம உலகத்துக்கும் இடையில சிறைப்பட்டு இருக்குமாம்… அப்படி இருக்கற காலகட்டத்துல அவங்க நேசிச்ச உறவுகள்கிட்ட அந்த ஆத்மாக்கள் வந்து போறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம்னு சொன்னாங்க… ஆனா இவையெல்லாம் உயிர் போக வைக்கிற அளவுக்கு சக்தி வாய்ந்தது கிடையாது… இதைத் தவிர இன்னும் நிறைய விசயங்கள் சொன்னாங்க… ஆனா நீங்க சொல்றதுக்கு சம்பந்தப்பட்டதா இந்த விசயங்கள் இருக்கிறதால இதை சொல்றோம்…”
அரைகுறை மனதுடன் தலையாட்டி வைத்தவர்களுக்கு, உள்ளுக்குள் தீராத குழப்பங்கள் ஆயிரம் இருந்தன. ஆனாலும் நாற்பத்தெட்டு நாட்களில் ஒரு முடிவு தெரிந்து விடும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றி விட்டதென்னமோ உண்மை. அதுவரைக்கும் மாலை நேரத்தில் யாரும் வெளியில் வராமல் பார்த்துக் கொள்வதென சங்கல்பம் செய்து கொண்டார்கள். இந்த இரு பூசாரிகளதும் வருகை அல்லி மனதிலும் ஒரு உறுதியை கொண்டு வந்திருந்தது.
முதல் நாள் அவள் பெரியாத்தாவை பார்த்ததாக சொன்னது பரிசுத்தமான பொய்..! தானே இந்த உயிரிழப்புகளுக்கான உண்மைக் காரணியை கண்டுபிடிக்க முனைந்தது தான் அவள் வெளியில் வரக் காரணம். இதன் மூலம் தனது குற்ற உணர்ச்சியில் இருந்தும் வெளிவந்து விடலாம் என்றது தான் அவளது எண்ணம். கூடவே, அல்லியையோ ரத்னாவையோ அந்த அமானுஷ்யம் கொல்லாததற்கு ஏதேனும் பிரத்தியேக காரணம் இருக்கும் என ரத்னா சொன்னதை, அல்லியின் மனம் ஆழ நம்பியது தான் அவளுக்கு இந்த வரட்டு தைரியத்தை கொடுத்திருந்தது.
ஆனாலும் முந்தைய தின இரவில் அவர்கள் அறிந்திராத இன்னும் ஒரு காரணி இல்லா விட்டிருந்தால், அன்று காவு போயிருக்க கூடிய ஓர் உயிர் அல்லியினது தான் என்பது யாருக்கும் தெரியாமலேயே அத்திப்பட்டு மர்மமாக மறைந்து போனது..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.