அல்லி 4
அந்த வீதியே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. தென்றல், சற்றுப் பெரிய வீட்டுப் பிள்ளை. அதே நேரம் அவர்கள் வீட்டுக்கு ஒரே ஒரு பிள்ளையும் அவள் தான் என்பதால் அவளது திருமணத்தை விலாசமாக செய்ய தீர்மானித்திருந்தார் தெய்வேந்திரன், தென்றலின் தந்தை. போன மாதமே ஆரம்பித்திருந்த வேலை இன்னும் முடிந்தபாடில்லை. அதோ இதோ என்று இழுத்து இழுத்து, இன்னும் பத்து நாட்களில் திருமணம் என்ற நிலைக்கு வந்திருந்தது. எழிலனும் தென்றலும் நச்சரித்து நச்சரித்தே முகூர்த்த தினத்தை முன்கூட்டியதாகப் பார்த்திருந்தார்கள்.
அந்தத் தெருவிலேயே பெரிய வீடு தென்றலது தான். வீதியின் தொடக்கத்தில் நின்று பார்த்தாலே அவர்கள் வீட்டு முகப்பு தெரியும். அந்த அளவுக்கு பெரிய வீடு அது. கூடவே, எத்தனையோ பேருக்கு தெய்வேந்திரன் பாரபட்சம் பாராமல் நிறைய உதவிகளும் செய்திருந்ததால் அத்தனை பேரும் ஒன்றாய் இன்று தென்றல் வீட்டில் தான் குழுமி இருந்தார்கள். வீடே கல்யாணக் களை கட்டி இருக்க, சொந்தபந்தங்களின் வருகை அதனை இன்னும் நிறைவாக்கி இருந்தது.
“ஏன்டா… ஒரு மாதிரி நினைச்ச காரியத்தை சாதிச்சுட்ட இல்ல..?”
வாசல் கம்பத்தில் அலங்காரமாக மாட்டப் பட்டிருந்த மின் விளக்கின் ஒளியை ரசித்தபடியே, பால்கனியில் நின்று எழிலுடன் கைப்பேசியில் வளவளத்துக் கொண்டிருந்தாள் தென்றல். கம்பத்து மின்விளக்கிற்கு நேர் மேலே நின்று, அதற்குப் போட்டியாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது நட்சத்திரமொன்று.
“ஆமாமா… சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கு மட்டும் தான் ஆசை… உனக்கு கிடையாது பாரு..?” வேண்டுமென்றே அவளை சீண்டினான் எழில்.
அதற்கு வாய்விட்டே சிரித்தவள், “உன்னோட ஜில்லு இங்க என்ன பண்ணுது சொல்லு..?” என்றாள் ரைமிங்காய்.
“வேற என்ன பண்ணப் போகுது புதுசா… அதுக்குத் தான் கல்யாணம் ஆகப் போகுதுல்ல..? வீட்டுல இழுத்துப் போட்டு வேலை செய்ய தாராளமா ஆளுங்க இருப்பாங்க… அதனால வேலை எல்லாத்தையும் அவங்க கிட்ட அம்போனு விட்டுட்டு, இது குஷியா பால்கனில நின்னு எதையாவது வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கும்…” என்றான் எழில் அவளைப் புரிந்தவனாக.
“ஹே கரெக்டா சொல்லிட்டடா என் தங்கப்புள்ள…” என இங்கு துள்ளிக் குதித்தாள் தென்றல். உண்மைக்கும் தென்றல் மீதான எழிலனின் புரிதல், அவளின் பெற்றோர்களின் புரிதலுக்கும் அப்பாற்பட்டது தான்.
“ஐயே… உன்னை நான் கழுவி ஊத்திட்டு இருக்கேன்டி… கொஞ்சமாச்சும் பொறுப்பா இருக்கியா பாரு…”
“ம்ம்… இங்க என்ன தெரியுது தெரியுமா..?”
அவன் கேட்ட கேள்வியைக் கண்டே கொள்ளாமல், தான் சொல்ல வந்த கதையிலேயே குறியாய் நின்றாள் தென்றல்.
“அதானே... திருந்த மாட்டியே நீ… சரி சொல்லும், சொல்லித் தொலையும்… அங்கே என்ன தெரிகிறது..?”
“நீ நார்மல் வர்ஸன்ல பேசு… அப்போ தான் சொல்லுவேன்…”
“சரி டி… சொல்லுடி… அங்க என்ன தான்டி தெரியுது..?”
“வார்த்தைக்கு வார்த்தை ‘டீ’ போட்ற… போ என்னை மதிக்கவே மாட்டேங்கற நீ…”
“ம்மா… என்ன தான் ம்மா தெரியுது அங்க..? சொல்லும்மா…”
“ஹான்… இப்படி பாசமா கேட்டா சொல்லப் போறேன்… இங்க என்ன இருக்கு தெரியுமா..? கலர் கலரா எல்.ஈ.டி லைட் போட்டு ஜோடனை பண்ணி இருக்காங்க… கல்யாணத்தன்னைக்கு ரோஜா பெட்டலால நம்ம பேர் எழுதறதுக்கு பிளானிங்கோட அவுட் லைன் போட்டுட்டு இருக்காங்க… நம்ம வீட்டு வாசல் இருக்கு ல்ல..?”
“ம்ம்…”
“அதுல பெருசா ஒரு கம்பம் நட்டு வச்சிருக்காங்க… அந்தக் கம்பத்துல ஃபிக்ஸ் பண்ணி இருக்கிற, ஒரே ஒரு லைட்டு வெளிச்சத்திலயே நம்ம வீதி ஃபுல்லா ஜொலிக்குது… அப்படியே நிமிர்ந்து மேல பாத்தாக்கா… ஒரு நட்சத்திரம்… கண்ண சிமிட்டி சிமிட்டி என்னை வான்னு கூப்பிட்ற மாதிரியே இருக்கு… பாரேன்… அந்த நடசத்திரத்துக்கு கூட எழிலனோட பொண்டாட்டி தான் கேக்குது…”
“கேக்கும்டி கேக்கும்... அப்படியே வந்து, எட்டி ஒரு உதை விட்டேன்னு வையேன்… பால்கனில இருந்து உங்க வீட்டு முத்தத்துக்கு காத்துலயே பறந்து வந்து சேந்துடுவ நீ…”
“உனக்கு பொறாமைடா… வீட்டுக்கு வர்ற கிளிங்க கூட என்னோட தான் வந்து விளையாடுது… எங்க வீட்டுப் பூனையும் கூட என்னோட கால தான் சுத்தி வருது… தோட்டத்துக்கு வர்ற வண்ணத்துப்பூச்சி கூட என்னைப் பூ ன்னு நினைச்சுக்கிட்டு வந்து தேன் குடிக்குது…”
“ஆத்தாடி… இந்தக் குழந்தைப் பிள்ளையை வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே… ஏன்மா பரதேவத, உன் பக்கத்துல யாரும் இருக்காங்களா..?”
“இல்லையே… நான் சோலோவா நின்னு தான் பர்ஃபாமன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்… ஒரு வேளை, என் கண்ணுக்கு தெரியாம… அருவமா ஏதாவது என் பக்கத்துல நின்னுட்டிருக்கா என்னன்னு தெரியல…” என்று விளையாட்டாய்த் தான் சொன்னாள் என்றாலும், சற்று பயம் பெருகி உடல் சிலிர்க்கத் தான் செய்தது அவளுக்கு. அவசரமாய் சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றி, ஏதாவது தென்படுகிறதா எனப் பார்த்துக் கொண்டாள் அவள்.
“நீயாவே சொல்லிட்டு… இப்ப நீயே பயந்துக்கிட்டு அக்கம் பக்கத்தில ஏதாவது காத்து கருப்பு இருக்கான்னு தேடிப் பாத்திருப்பியே..?”
“எப்படிடா தெரியும்..?”
“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன்டி… இன்னைக்கு நேத்தா உன்கூட பழகறேன் நான்… நாலு வருஷ லவ்வுனா சும்மாவா..?”
“சரி தான்… இப்படின்னா, அதுவும் நம்ம வீட்டுல இவ்வளோ சீக்கிரம் ஓகே சொல்லிடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, ஒரு வருஷத்துலயே நம்ம லவ் பத்தி வீட்டுல சொல்லி இருக்கலாம்… இல்ல எழில்..?”
“ம்ம்… ஆனா, இப்போ தானே நம்ம லவ் இன்னும் இன்னும் ஸ்ட்ராங்க் ஆகி இருக்கு… அப்பவே சொல்லி இருந்தா, இப்போ நமக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கும்… நம்மளுக்கான டைம் ரொம்ப கம்மி ஆகி இருக்கும்ல..?”
“அதுவும் சரிதான்… ஆமா, எதுக்கு கேட்ட அக்கம் பக்கத்துல யாராவது இருக்காங்களான்னு..?”
“நீ உன்னை அறியாமலேயே அடெல்ட் கான்டென்டா பேசிட்டிருக்கியே… அதைக் கேட்டு இந்த சின்னப் பையன யாராவது தப்பா நினைச்சுக்க போறாங்களேன்னு தான் கேட்டேன்…”
“நான் அப்படி எதுவும் பேசலயே..?” எத சொல்லற நீ..?”
“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன்… சரி, நீ சாப்பிட்டியா..?” என்று பேச்சை திசை திருப்பினான் எழில்.
“ம்ம்.. சாப்பிட்டேனே…” என்றவள், மீண்டும் அந்த நட்சத்திரத்தில் லயித்துப் போனாள்.
✯✯✯✯✯
“பாரேன்… நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன், இவ என்னடான்னா பொரிச்ச மீனை பூனை பாத்த மாதிரி என்னைப் பாத்துட்டிருக்கா…” என அல்லியின் ரியாக்ஷனுக்கு அர்த்தமே புரியாமல் பேசிக் கொண்டிருந்தாள் ரத்னா. வழமை போல் என்றால், இந்த கனவை சொன்னதற்கே காறித் துப்பி இருப்பாள் அல்லி. ஆனால் இன்றோ நிலைமை வேறாயிற்றே..? அதுவுமில்லாமல் அவளும் பெரியாத்தாவுமாய் கொண்டு சென்ற துணி மூட்டை பற்றி வேறு சொல்கிறாளே இவள்… அதன் பின்னரும் எப்படி இதை வெறும் கனவென்று எடுத்துக் கொள்ள முடியும் அவளால்..?
“அப்புறம் என்னாச்சு ரத்னா..?” என அல்லி சீரியஸாக கேட்டதே ரத்னாவுக்கு ஆச்சரியம் தான். அது கொஞ்சம் பிடித்திருந்தது என்று கூட சொல்லலாம்.
“ஏன்டீ… அவதான் தேவை இல்லாம ஏதோ புலம்பறான்னா, நீ வேற அத சுவாரஸியமா கேட்டுக்கிட்டு இருக்க..? கிளம்புடி முதல்ல இங்க இருந்து…”
என்று தீபா திட்டத் தான் அப்படி ஒருவள் இங்கு இருப்பதே நினைவுக்கு வந்தது அல்லிக்கு.
“ஹான்… இல்..லடி… சின்னப் பொண்ணு ல்ல..? அதான் கனவு கினவு கண்டு பயந்து போயிருப்பாளேன்னு…”
“ஆமாமா… அவ சின்னப் பொண்ணு தான்… ரொம்ப பயந்திருக்கப் போறா… எதுக்கும் நீ தூக்கிக்கிட்டே திரி அவள… வேணும்னா முந்தானைல கூட முடிஞ்சு வச்சுக்கோ, இன்னும் சேஃபா இருப்பா… நல்ல அக்கா… நல்ல தங்கச்சி… ரெண்டு பேரும் கதை பேசி முடிச்சுட்டு ஆறுதலா கிளம்பி வாங்க… நான் பசங்கள கூட்டிக்கிட்டு இல்லத்துக்கு கிளம்பறேன்…”
என்றவள், பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அவள் சென்ற கையோடே, ரத்னா விட்ட இடத்தில் மீண்டும் பிடித்துக் கொண்டாள் அல்லி.
“அப்புறம் என்னாச்சு ரத்னா..?”
‘ஏதோ சரியில்லை’ என திடமாகப் புரிந்து கொண்டவள், அதைப் பற்றி அல்லியிடம் எதுவும் கேட்டுக் கொள்ளாமலேயே தொடர்ந்தாள்.
“நீயும் பெரியாத்தாவும் அந்த மூட்டையை ரொம்ப கஷ்டப்பட்டு தூக்கிக்கிட்டு உள்ள வர்றீங்க… முன் வராந்தாவ கடந்து வர்ற வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை… ஆனா நீங்க ஹால கடக்கிறப்போ ஏதோ கொஞ்சம் ப்ளட் மாதிரி அந்த இடத்துல பட்டுச்சு… நீயும் ஆத்தாவும் பயத்துல அந்த மூட்டையைக் கீழ போட்டுட்டீங்க… அதுக்கப்புறம் ஆஞ்சநேய சாமியோட வால் இருக்குல்ல..? அது நீண்டு வந்து அந்த மூட்டையை கெட்டியாப் பிடிச்சுக்குது... அதனால மூட்டை நகர மாட்டேன்னு அப்படியே நிக்குது…”
“….”
“நீயும் ஆத்தாவும் ஆஞ்சநேய சாமிய கும்பிட்டு, ஏதோ சொல்றீங்க… அந்த வால் தன்னாலேயே தளர்த்தப்பட்டு மறுபடியும் இயல்பு நிலைக்கு வந்திடுச்சு… அதுக்கப்புறம் நீயும் ஆத்தாவும் அந்த மூட்டையை இழுக்கறீங்க… ஹாலை கடந்து பின் தோட்டத்துக்கு கொண்டு போறீங்க…”
அதற்கு மேல் அல்லி என்னதான் பேச முடியும்..? ரத்னா தான் அத்தனையையும் கண்ணால் கண்டவள் போல் தெளிவாகவே சொல்கிறாளே..?
“ஆனா உனக்கு ஒண்ணு தெரியுமா..? முன்னாடி ஒரு உருவம் வீட்டுக்கு வெளியே நின்னுட்டு இருந்திச்சு இல்ல..? அந்த உருவம் இப்போ ஹாலுக்குள்ள வருது… நம்ம பிரதிஷ்டை செஞ்சு வச்ச சாமிங்கள பாத்து ஏளனமா சிரிக்குது… அப்படியே பின் தோட்டத்துக்கு வருது… நீ நம்ம பலா மரத்துக்கு கீழ தோண்டி வச்சுருந்த குழிக்குள்ள அந்த துணியை பொதைக்கிற… திடீர்னு நம்ம பலா மரத்துல இருந்து ரெண்டு கண் திறந்து, அதுல இருந்து ரத்தம் வழிய… உன்னையும் பெரியாத்தாவையும் கொலை வெறியோட முறைக்குது…”
“…”
“அப்புறம் என்னாச்சுன்னு தெரியல… ரொம்ப பயந்ததுனாலயோ என்னமோ எனக்கு முழிப்பு தட்டிடுச்சு… எந்திரிச்சுட்டேன்… அவ்வளவு தான்… கனவு தான்னாலும் எனக்கு மனசு கேக்கல… அதான் இல்லத்துக்கு போயிட்டு, அப்படியே கோவிலுக்கு வந்தேன்… இப்ப தான் மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு…”
“ம்ம்…”
“உனக்கு என்னாச்சு..? நீ ஏன் ஒரு மாதிரி இருக்க..?”
“நானும் ஒரு கனவு கண்டேன்… கொஞ்சம் சரியில்லாத கனவு தான்… பெரியாத்தாவும் மனசு ஓகே இல்லன்னு சொல்லுச்சு… அதான்… உன்னையும் காணோம்னு சொல்லவும் ரொம்ப பயந்துட்டேன் நான்…”
“அட அது தானா..? நான் கூட என்னென்னவோ யோசிச்சு பயந்து போயிட்டேன்…” என்ற ரத்னா, உண்மைக்கும் அல்லியின் இந்தப் பதிலில் சற்று சமாதானம் அடைந்திருந்தாள் தான்.
“ம்ம்…”
“எத்தனை மணிக்கு பெரியாத்தா வீட்டுக்கு வருவ..?”
“இப்பவே ஓகே தான்… தாமரை அம்மா கிட்ட சொல்லிட்டு வந்திடறேன்…”
“சரி…”
மீண்டும் விவேகானந்தர் இல்லத்திற்கு வந்து தாமரை அம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருவரும் பெரியாத்தாவின் வீட்டை நோக்கி புறப்பட்டு விட்டார்கள், அங்கு புதிதாக முளைத்திருந்த ஆபத்தை அறியாமல்..!
– அல்லி மலரும்…
No comments yet.