Episode 39

ஶ்ரீ துர்க்கா | 07 Mar 2026 | Share

அல்லி 39 

ஏற்காடு 

“மேடம், நாம தேடிட்டு இருந்த தென்றலோட மொபைல் தான் இதுனு நினைக்கறேன்…”

“எனக்கும் அப்படித்தான் சார் தோணுது… இந்த ஃபோனை ரெக்கவர் பண்ணி ஃபாரன்ஸிக் லாப்ல செக் பண்ணக் குடுத்தா ஏதாவது தகவல்கள் நம்மளுக்கு கிடைக்க கூடும்…‌ சாதாரணமா சிம்மை கழட்டி கூட வீசி இருக்கலாம்… ஆனா இந்த கிணத்தை திறந்து உள்ள போட்ற அளவுக்கு இருக்குன்னா கண்டிப்பா அந்த ஃபோன்ல ஏதாவது ரெக்கார்ட்ஸ் இருக்கணும். லெட் அஸ் ட்ரை…”

“ஷ்யூர் மேடம்…”

துரிதகதியில் அதனை செயல்படுத்தியவர்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே ஃபாரன்ஸிக் ஆஃபீஸர் சத்தியசீலனுக்கு தகவல் சொல்லிவிட்டு அவரைப் பார்க்க கிளம்பி விட்டிருந்தார்கள்.

                     ✯✯✯✯✯✯

அத்திப்பட்டு 

மெல்ல மெல்லமாக மாலை மங்கி இருள் கவியத் தொடங்கி இருந்தது. மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியில் வரக் கூடாது என்று வலுக்கட்டாயமாக தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. காலையிலேயே ஜெயந்தனையும் அவர் குழுவில் இறந்து போய் இருந்த அத்தனை பேரையும் அடக்கம் செய்திருந்தார்கள். தேவைப்பட்டால் ரீ-போஸ்ட்மோர்ட்டம் செய்வதற்கு ஏதுவாக பூங்குன்றனைப் போல் இவர்களையும் புதைக்கச் சொல்லித்தான் ஆர்டர் வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமுலுக்கு வந்த நடைமுறை தான் ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியில் நடமாடக் கூடாது என்பது. கூடவே, ஊருக்குள் இருந்த அத்தனை இடங்களும் நன்றாக புலப்படும் வண்ணம் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தி இருந்தார்கள்‌. 

அத்திப்பட்டின் சூழ இருந்த மூன்று திசைகளிலும் காடு போல் செடி கொடிகள் வளர்ந்திருக்க, ஒரு திசை மாத்திரம் நுழை வாயிலாகவும் அதற்கு அப்புறம் அடுத்த கிராமத்தின் ஆரம்பமாகவும் இருந்தது. இதனால் அத்திப்பட்டு ஊரை ஒட்டுமொத்தமாக கண்காணிக்கும் வகையில் மினிசைஸ் கேமராக்களை முடிந்தளவுக்கு அதிகமாகவே ஆங்காங்கே நாட்டி வைத்திருந்தனர் காவல்துறையினர்.‌ அதிலிருந்து வரும் காட்சிப்படங்களை, போலீஸ் ஸ்டேஷனிலேயே இரண்டு பெரிய மானிட்டர்களில் நான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரித்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். 

பின்னிரவை நெருங்கி இருந்த நேரத்தில் அத்திப்பட்டு மொத்தமும் நிசப்தத்தில் மூழ்கி இருக்க, தன்னருகே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ரத்னாவை வெறித்துக் கொண்டிருந்தாள் அல்லி. நன்றாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள், ஆனாலும் தான் இல்லாது போனால் ரத்னா தனித்து விடுவாளே என்ற பயம் அவள் மனதை ஆழமாய்க் கவ்விப் பிடித்திருந்தது. அத்திப்பட்டு மக்கள் அவளை அப்படியே விட்டுவிட மாட்டார்கள் என்று தெரியும், ஆனாலும் அல்லி அளவுக்கு அன்பை தர முடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான் தோன்றியது.‌ ஆழ இழுத்து பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவள் மெல்ல எழுந்து அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தாள். 

கூடத்தை தாண்டி முன் வராந்தாவிற்கு வந்தவள், வாசலைத் தாண்டி தரைக்கு இறங்கி கேட்டிற்கு வந்தாள். ஓசைப்படாமல் படலையை திறந்து கொண்டு வெளியேற, இங்கே படபடப்பாக கத்தினார் ஒரு போலீஸ் ஆபீஸர்.

“சார், இந்த கேமராவை பாருங்க சார்… அந்தப் பொண்ணு அல்லி, நம்ம போட்ட சட்டத்தை மீறி வெளிய வந்துட்டு இருக்கா…”

“ஆமா சார்… ப்ச் படிச்ச பொண்ணுங்கன்னு பாத்தா இப்படி அடிமுட்டாளுங்களா இருக்கு… போகட்டும், போய் அந்த பேய் கையால சாகட்டும்…” என இயலாமையில் பற்களை கடித்தார் இன்னொருவர். 

“என்ன‌ சார் பண்ணறது, ஒருவேளை அந்த பேய் வந்துட்டா..?”

“எவ்வளோ விசயம் நடந்திருக்குன்னு அந்தப் பொண்ணுக்குமே தெரியும் சார்…‌ எல்லாருக்கும் ஸ்ட்ரிக்டா காலைல சொன்னதுக்கு அப்புறமும் இந்தப் பொண்ணு இப்படி பண்ணுதுன்னா முகில் சார் சொன்ன மாதிரி அந்தப் பொண்ணுக்கு என்னானா நமக்கு என்னனு இருக்க வேண்டியது தான்…”

“பேசாம அந்த ரத்னா பொண்ணு இருக்கா ல்ல..? அவங்களுக்கு கூப்பிட்டு தகவல் சொல்லிடலாமா… எனக்கு தெரிஞ்சு அந்தப் பொண்ணு தூங்கினதுக்கு அப்புறம் தான் இந்தப் பொண்ணு கிளம்பி வந்திருக்கணும்…”

“அப்படி கால் பண்ணி சொன்னா அந்தப் பொண்ணும் வெளிய வரும் சார்… அது அவங்களுக்கும் ஆபத்தாகிடும்…”

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக பேசிய வண்ணம் இருக்க, இங்கு இலக்கின்றி சுற்றும் முற்றும் பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தாள் அல்லி. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் நடந்திருப்பாள், திடீரென்று தோள்பட்டையை ஏதோ ஒன்று உரச சட்டென தூக்கி வாரிப் போட்டு திரும்பினாள் அவள்.

எதிர்பார்த்ததற்கு மாறாக, பதற்றத்தோடு கண்டன பார்வையால் அவளை முறைத்தபடி அங்குமிங்கும் பார்த்தார் முன் நின்றிருந்த வேதா. அவரைப் பார்த்து அதிர்ச்சி உற்றவளாக, “என்னாச்சு ம்மா, இந்த நேரம் யாரைத் தேடி இங்க வந்தீங்க நீங்க..?” என்றவளுக்கு பதற்றத்தில் BP ஏறிக் கொண்டிருந்தது. அந்த பதற்றத்தில், தென்றலால் வேறு யாருக்கேனும் எந்த கெடுதலும் வந்திருக்க கூடாதே என்ற அக்கறையும் மிதமிஞ்சி இருந்தது. 

“நான் இங்க யாரையும் தேடி வரல… நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருக்க..? சீக்கிரம் வீட்டுக்குள்ள வா…” என்றவர் தரதரவென அவளை இழுத்துக் கொண்டு, அருகில் இருந்த தன் வீட்டுக்கு ஓடினார். 

அதே நேரம் அத்திப்பட்டு கிராமத்தின் நுழைவாயிலில் கால் வைத்தார்கள் வெளியூர் சென்றிருந்த அஸ்வத்தாமனும், நீலகண்டனும்.

                ✯✯✯✯✯✯

பொழுது புலர்ந்திருந்தது. காலையிலேயே வேதா வீட்டிற்கு முன் வந்து நின்றிருந்தது போலீஸ் ஜீப். அதிலிருந்து கீழே இறங்கினார் ஒரு போலீஸ் உத்தியோகத்தர். ஏற்கனவே இதை எதிர்பார்த்து இருந்தாலும் அல்லி வேதா இருவருக்குமே பதறியது. 

வந்திருந்தவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. 

“நான் ஜெயராம், போலீஸ்…” என்றவர் தனது ஐடியை எடுத்துக் காட்டிவிட்டு இடைவெளி விடாமல் தொடர்ந்தார். 

“என்னம்மா அல்லி, நாங்க சொல்லற எதையும் கேக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்க போல..?”

“ஐயையோ… அப்படிலாம் இல்லைங்க சார்…”

“அப்புறம்..? அவ்வளோ சொல்லியும் நேத்து நைட் எதுக்கு நீ வெளிய வந்த..?”

“வந்..து சார், நேத்து நைட்டு… நான் பெரியாத்தாவோட உருவத்தை பாத்தேன் சார்… ஜன்னல் பக்கத்துல நின்னு என்னை வெளியே வர சொல்லி கை காட்டுச்சு… எனக்கு அது மட்டும் தான் சார் தெரியும், அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனே தெரியல… வேதா ஆன்டி வந்து என்னை தொடறப்போ தான் சுயநினைவுக்கு வந்து பாத்தா வெளியில நின்னுட்டு இருக்கேன்… யாரையோ தேடுன மாதிரி சுத்தும் முத்தும் பாத்துட்டு இருந்தேனாம்… சத்தியமா நான் எப்படி அங்க வந்தேன், என்ன ஆச்சுன்னு எதுவும் தெரியாது சார் எனக்கு…”

அவளை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் நடுத்தர பார்வை ஒன்றை அவளை நோக்கி வீசினார் ஜெயராம். ‘ஒருவேளை, ஊருக்குள் அத்தனை பேரையும் காவு வாங்கும் அந்த ஆத்மா பெரியாத்தாவாக இருக்குமோ..?’ என்றும் ஒரு கணம் எண்ணத் தோன்றியது.

“ஓஓ… அந்த நேரத்துல கரெக்டா நீங்க எப்படி அங்க வந்தீங்கம்மா, உங்களயும் யாரும் ஜன்னல் பக்கத்துல நின்னு வர சொல்லி கை காமிச்சாங்களா என்ன..? என வேதாவை பார்த்து கேட்டவரின் குரலில் ஏகத்துக்கும் கேலி இருந்தது. 

“சார் இல்ல சார்… நான் நேரத்தோடவே படுத்துட்டேன்… திடீருன்னு ஏதோ கெட்ட கனவு… அதுதான் கண்ணு 

முழிச்சு பாத்தேன்… மனசுக்கு ஏதோ சரியில்லாம பட்டதால, சும்மா வீட்டுக்குள்ளார நடந்துட்டு இருக்கும் போது தான் இந்தப் பொண்ணு சுத்தும் முத்தும் பாத்து பயந்துட்டே போறத பாத்தேன்… அதான் சட்டுன்னு போய் அவளை கூட்டிட்டு ஓடியாந்தேன் சார்…”

“ம்மா, நீங்க சொல்லற கதைலாம் உண்மையா பொய்யானு எனக்கு தெரியல… ஆனா விசாரணைலயோ இல்லன்னா வேற ஏதாவது விதத்துலயோ நீங்க சொன்னது பொய்னு தெரிஞ்சுது…” என்றவர் விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய பகீரென்றது வேதாவுக்கு. ஆனால் அல்லியை அது அந்தளவு தூரம் பாதித்ததாக தெரியவில்லை. உயிரையே துச்சமாக நினைத்து களத்தில் இறங்கி விட்டவளுக்கு, வேறு எந்த பயமும் ஓரளவுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தவில்லை.

ஜெயராம் வெளியேறியது தான் தாமதம், பாய்ந்து கொண்டு உள்ளே ஓடி வந்தாள் ரத்னா. 

“நல்ல வேளை நான் எந்திரிக்கிறதுக்கு முன்னாடியே வேதாம்மா வீட்டுல இருக்கிற விசயத்தை சொல்லிட்ட… இல்லன்னா அவ்ளோ தான், பயத்துலயே செத்திருப்பேன்…” என்றவள் திக்கென நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள்.

“என்னாச்சு..?” என அல்லி பதற்றமாக கேட்க, “நேத்து நைட்டு முழுக்க நான் தனியா தான் அந்த வீட்டுல இருந்திருக்கேன்… அதை நினைச்சா இப்ப தான் பக்குனு இருக்கு அல்லி. நல்ல வேளை இடையில நித்திரை கலையல…”

“ம்ம்… நீ விடிஞ்சதும் என்னை பாக்க கிளம்பி வந்த வேகத்துலயே புரியுது எவ்ளோ நல்லா தூங்கி இருக்கன்னு… இன்னும் கொஞ்சம் ஆற அமர பொறுமையா வந்திருக்காதயேன்..?”

“ஹே நிஜமா சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன் டி… உனக்கு விசயம் தெரியுமா..? நம்ம பாலா அண்ணனோட டீக்கடையில ஒரே கூட்டம்… விசயம் என்னன்னு கேளேன்…”என்றவள் அல்லி கேட்பதற்கும் இடமளிக்காமல் தானே தொடர்ந்தாள். 

“வெளியூருக்கு போயிருந்த நீலகண்டன் ஐயாவும் அஸ்வத்தாமன் ஐயாவும் திரும்பி வந்துட்டாங்களாம். ஆனா அவங்க என்ன சொல்லி இருக்காங்கன்னா, நம்ம ஊருக்குள்ள எந்த கெட்ட சக்தியும் இல்லைன்னும் இதெல்லாம் மனுஷன் பண்ணற தில்லாலங்கடி வேலைன்னும் சொல்லி இருக்காங்களாம்… அது மட்டுமில்லாம நம்ம ஊருக்குள்ள இருக்கற சாமி அத்தனையும் கட்டுக்குள்ள இருக்குன்னும், இன்னைக்கு பொழுது சாயறதுக்குள்ள பெருசா ஒரு யாகம் பண்ணி அத்தனை தெய்வத்தையும் கட்டவிழ்க்கிறதுக்கான நடவடிக்கைகள்ல ஈடுபட போறதாவும் சொல்லி இருக்காங்களாம்… அநேகமாக இன்னையோட நம்ம அத்திப்பட்டுக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கும்னு நினைக்கிறேன்…” என்றிட வேதா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால் அல்லியோ அந்த உருவத்தையும் பெரியாத்தாவையும் நேரில் பார்த்தது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். 

“என்ன அல்லி யோசிக்கிற..?” என்றார் வேதா அவளை கலைக்கும் முகமாக. 

“இல்ல ஆன்டி, நான் தான் எங்க பெரியாத்தாவை அவங்க இறந்ததுக்கு அப்புறமும் நேர்ல பாத்திருக்கனே..? அப்புறம் எப்படி இதெல்லாம் வெறும் மனுஷங்களோட செயற்பாடா இருக்க முடியும்..?”

“அப்படி நீ பார்த்தது உங்க பெரியாத்தாவா இல்லாம இருக்கலாம் இல்ல..? அது கூட யாரோ ஒருத்தனோட சதி வேலையா கூட இருக்கலாமே…”

“அப்படின்னா‌ இது ஆத்மாவோட வேலை இல்லைன்னு சொல்றீங்களா..?”

“அப்படித்தான் எனக்கு தோணுது… இதெல்லாம் யாரோ ஒருத்தன் உருவாக்குற மாயை மாதிரி தான் இருக்கு… மத்தபடி ஆத்மாங்கிறது உண்மையா இருக்கலாம், ஆனா கொலை செய்யற அளவுக்குலாம் அதுக்கு சக்தி கிடையாதுங்கிறது தான்‌ என்னோட எண்ணம். உடலை விட்டு உயிர் போனதுக்கப்புறம் எங்க இருந்து அந்த அளவுக்கு சக்தி கிடைக்கப் போகுது..?”

“நீங்க சொல்றதும் ஒரு விதத்துல சரியா தான் இருக்கு… அப்படின்னா இந்த செய்வினை சூனியம் ஏவல் இதெல்லாம் உண்மை தானே..? அதே மாதிரி ஏன் இதுவும் உண்மையா இருக்க கூடாது..?” என ரத்னா கேட்க, அந்த வார்த்தைகளில் சட்டென பயங்கரமாக மாறிப்போனது வேதாவின் முகம்..!

                    ✯✯✯✯✯✯

                                – அல்லி மலரும்…

    No comments yet.