Episode 38

ஶ்ரீ துர்க்கா | 06 Mar 2026 | Share

அல்லி 38

ஏற்காடு

“இப்போ எதுக்கு சார் இவ்வளோ எமோஷனலா பிஹேவ் பண்ணறீங்க..?” 

சிவபுருஷோத்தமனின் செய்கையில் துளிர்த்து விட்டிருந்த சிறு கோபத்துடன் கேட்டார் வாசுதேவன். 

“சாரி சார்…‌ உங்களை அவமதிச்சு நடக்கணும்னு இல்லை… அந்த குழாய்க்கிணத்தை திறந்தத என்னால ஏத்துக்கவே முடியல சார்… நீங்க சொல்லற அந்த கெட்ட வாடை வர்றதுக்கு காரணம் அந்த மூலிகை மருந்துகள் மாத்திரம் கிடையாது மேடம்… அது ஒரு விதமான நெகட்டிவ் எனர்ஜியோட வருகை… கண்டிப்பா, அத திறந்த அந்த ஆளுக்கு ஏதாவது விபரீதமா நடந்திருக்கணும். ஒண்ணு அவங்க உயிரோட இருக்கறதுக்கு வாய்ப்பு இல்லை, அப்படி இல்லன்னா சாவை நேர்ல பாத்துட்டு மயிரிழையில திரும்பி வந்திருப்பாங்க… இந்த ரெண்டுல ஒண்ணு கட்டாயம் நடந்திருக்கும். அந்த சர்வீஸ் ஃபிட்டை திறந்தவங்க இப்போ உயிரோட இருக்காங்களா..?”

அவர் சொல்வதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் வாசுதேவனைத் திரும்பி பார்த்தாள் இனியா. அவளுடைய செய்கையின் அர்த்தம் புரிந்தவராக தன் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். 

“ஃபாரன்ஸிக் ஆபீஸர் சத்யசீலன் சார் நல்லா இருக்கார் மேடம்… அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை… ஆனாலும் அந்த சர்வீஸ் ஃபிட்டை ஃபர்ஸ்ட் திறந்தது அவரு கிடையாதே, அதை முதல்ல திறந்த அந்த பர்சன் எப்படி இருக்காங்கன்னு நம்மளுக்கு தெரியாது இல்ல மேடம்..?”

“அதப் பத்தி தான் சார் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்… ஒருவேளை, தென்றல் அந்த சர்வீஸ் ஃபிட்டை ஃபர்ஸ்ட் திறந்திருந்தாலும் இவங்க சொல்ற அந்த நெகட்டிவ் எனர்ஜி சைட் கரெக்டா இருக்கு, இல்லையா..? ஆனா தென்றல் க்ளவுஸ் போட்டுட்டு அதை திறந்திருக்க வாய்ப்பில்லை… கில்லர் ஆர் கிட்னாப்பர் அதை திறந்திருந்தா அவங்களுக்கு என்னாச்சுனும் தெரியல…”

“அதான் மேடம்… ஒரே குழப்பமா இருக்கு இந்த கேஸ்ல… எந்த ஒரு பிடிமானமுமே இல்லாம போய்க்கிட்டு இருக்கு…”

“பிடிமானம் இருக்கு வாசு சார்… நான் அதைப் பத்தி டீடெய்லா உங்களுக்கு சொல்றேன்… இப்போ டிப்பார்ட்மென்ட கான்டாக்ட் பண்ணி சில விசயங்களை கிளியர் பண்ணிக்க வேண்டியது இருக்கு…” என்றவள், பூசாரி சிவபுருஷோத்தமனுக்கு நன்றி கூறிக் கொண்டு எழுந்தாள்.

அங்கிருந்து கிளம்பி சில நிமிடங்கள் கரைந்ததும், இனியாவிடம் ஆரம்பித்தார் வாசுதேவன்.

“என்ன மேடம், இந்த கேஸ்ல பிடிமானம் இருக்குன்னு சொன்னீங்க..? அது என்னனு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன் மேடம்…”

“ம்ம்… தென்றலோட சேலைல இருந்து இரண்டு ஃபிங்கர் பிரின்ட்ஸ் கிடைச்சிருக்கு இல்ல..? அதை அனலைஸிஸ் பண்ணிட்டு இருக்காங்க… ஒண்ணு தென்றலோடதுன்னு நமக்கு தெரிஞ்சது தான்… அடுத்தது யாரோடதுன்னு தான் ஒவ்வொரு க்ரிமினல்ஸோடவும் மேட்ச் பண்ணி பாத்துட்டிருக்காங்க… அடுத்து தென்றலோட சேலைல இருந்த ப்ளட் சாம்பிள்ஸ்… அதோட ரிப்போர்ட் நாளைக்கு மதியம் நம்ம கைல இருக்கும்… சோ அதுக்கு கொஞ்சம் நம்ம வெய்ட் பண்ணி தான் பாக்கணும்…”

“சரி தான் மேடம்… அப்புறம் டிப்பார்ட்மென்ட்ல ஏதோ பேசணும்னு சொன்னீங்களே..?”

“ஆமா சார்… அந்த சர்வீஸ் ஃபிட்டை தரோவா செக் பண்ணணும்… ரீசனே இல்லாம அவ்ளோ காலமா மூடி இருந்த குழாய்க்கிணத்தை சும்மா திறந்திருக்க வாய்ப்பு கிடையாது இல்ல..? கண்டிப்பா நம்மளுக்கு தேவையான ஏதாவது க்ளூ அதுக்குள்ள இருந்து கிடைக்கும்னு என்னோட இன்டியூஷன் சொல்லுது… அதனால டிப்பார்ட்மென்ட்ல பேசி ஆளுங்களை வரவழைச்சு அந்த சர்வீஸ் ஃபிட்டை க்ளீன் பண்ண சொல்லலாம்னு இருக்கேன்…”

“சூப்பர் மேடம்… கண்டிப்பா நமக்கு யூஸ்ஃபுல்லான தகவல் ஏதாவது அங்க இருந்து கிடைக்கும்…” என்ற வாசுதேவனின் முகத்தில் நம்பிக்கையும் உறுதியும் சுடர் விட்டிருந்தது..!

                        ✯✯✯✯✯✯

அத்திப்பட்டு

“தாமரை அம்மா கிட்ட பேசிட்டேன் ரத்னா…”

என்ற அல்லியின் முகத்தில் ஏகத்துக்கும் குழப்பம் நிறைந்து கிடந்தது. 

“என்ன சொன்னாங்க, அந்த செய்ன் அவங்ககிட்ட இல்லையாமா..?”

“இல்லை… அந்த செய்னை அவங்க ரொம்ப பத்திரமா வச்சிருக்காங்களாம்… ஃபோட்டோ கூட போட்டாங்க எனக்கு… நான் குடுத்த ஒரு பொருளை அவங்க எப்படி தொலைப்பாங்கன்னு கேக்கறாங்க… எனக்கு தான் ஒண்ணுமே புரியல…”

“அந்த செய்னை பத்தி வேற யாருக்காவது சொல்லி இருக்காங்களாமா..? இல்லன்னா அதைப் பத்தி யாராவது ஆர்வமா விசாரிச்சாங்களான்னு கேட்டு பாத்தியா..?”

“நான் கேக்கல… ஆனா, நிறையப் பேர் அந்த செய்ன் ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாங்களாம். நாலஞ்சு பேர் அந்த செய்னை எங்க வாங்கினாங்கன்னு கூட கேட்டதா சொன்னாங்க…‌ ஆனா அதுல யாருமே வயசுப் பொண்ணுங்கன்னு சொல்லல… கூடுதலா ஆன்டி ஏஜ்ல இருக்கற பர்ஸன்ஸ் தான் அந்த செய்ன் பத்தி விசாரிச்சிருக்காங்க…”

“ஓஓ… எங்க, தாமரை அம்மா அனுப்பிச்ச அந்த போட்டோவை ஒருக்கா காமி…” என்ற ரத்னா அவர் அனுப்பி இருந்த செய்னையும், தென்றல் கழுத்தில் இருந்த செய்னையும் ஒப்பிட்டு பார்க்க இரண்டும் ஒரு அச்சில் வார்த்ததைப் போல ஒரே மாதிரியாக இருந்தது.

“ரெண்டுமே ஒரே மாதிரி இருக்குல்ல..? சொல்லப்போனா இது ரெண்டு செய்னா இல்லன்னா ஒரே செய்ன் தானானு ரொம்பவே குழப்பமா இருக்கு எனக்கு… இதை ஆராய்ச்சி பண்ணறதால ஏதாச்சும் பிரயோசனம் இருக்கும்னு நினைக்கறியா நீ..?” என்றாள் அல்லி நம்பிக்கை அற்றவளாய்.

“உண்மையை சொல்லணும்னா தெரியல… ஆனா நம்மளுக்கும், இறந்து போன அந்தப் பொண்ணுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்குமோனு எனக்குள்ள ஒரு சந்தேகம். ஏன்னா, அவ தான் இங்க ஆன்மாவா அலைஞ்சுட்டு இருக்கா… அவ கண்ணுல தட்டுப்படற அத்தனை பேரையும் கொன்னுடறா… ஆனா என்னையோ உன்னையோ அவ எதுவும் பண்ணல இல்ல..? அதுக்கு என்ன காரணம்னு தான் புரியல எனக்கு…”

“நீயும் என்னை குழப்பாத ரத்னா… ஏற்கனவே எல்லாத்தையும் யோசிச்சு தலை வெடிக்கற மாதிரி இருக்கு… என்னால தான் இதெல்லாம்னு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு… இதெல்லாம் சரியானா கூட இந்த குற்ற உணர்ச்சில இருந்து என்னால வெளிய வர முடியுமானு தெரியல… இதெல்லாம் இவ்வளோ தூரம் வரும்னு சத்தியமா எனக்கு தெரியாது டி… அப்படியே பிரச்சினை வந்தாலும் எனக்கும் பெரியாத்தாவுக்கும் தான் வரும், ரெண்டு பேரும் சேர்ந்து ஃபேஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்… ஆனா இப்போ யார் யாரோலாம் என்னால சாகறாங்க… இந்த பாவத்தை எல்லாம் காசிக்கு போனாக் கூட கரைக்க முடியாது ரத்னா…” என்றவள் உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள்.

                     ✯✯✯✯✯✯

ஏற்காடு 

‘கலைமகள் கலைக்கூடம்’ பள்ளியின் பின் அமைந்திருந்த குழாய்க் கிணற்றுக்கு அருகே நின்றிருந்தனர் இனியாவும் வாசுதேவனும். அவர்களுடன் இன்னும் மூவரும் இணைந்திருந்தனர். தேவைப்பட்டால் மாத்திரம் ஃபாரன்ஸிக் உதவியை நாடிக் கொள்ளலாம் என நினைத்தவள், மரியாதை நிமித்தம் சத்யசீலனுக்கும் தகவல் சொல்லி வைத்திருந்தாள். 

அவளது அனுமதியுடன், கையுறையை அணிந்து கொண்டு அந்த சர்வீஸ் ஃபிட்டினை திறந்தனர் அவர்கள். முதல் இருந்த அளவிற்கு இல்லா விட்டாலும் சற்று அளவுக்கு அதிகமாகத் தான் இருந்தது துர்நாற்றம். 

“பூசாரி ஐயா சிவபுருஷோத்தமன் சொன்ன மாதிரி இந்த நெகட்டிவ் எனர்ஜியோட வருகையை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மேடம்..?”

“உண்மையை சொல்லணும்னா நான் அதை முழுசா நம்பறேன் சார். பட் இங்க அது உண்மையா பொய்யான்னு எனக்கு தெரியல… அது இந்த கேஸோட பாத் வே ல தான் தெரியும் நமக்கு…”

“நீங்க அவ்வளோ ஆணித்தரமா அதை நம்பறதுக்கு ஏதாவது ஸ்பெஸிபிக் ரீசன் இருக்கா மேடம்..?”

“ஆமா சார்… இது வெறும் நம்பிக்கை மட்டும் கிடையாது, நான் கண்ணால கண்ட உண்மை… நான் சூப்பர் நேச்சுரல் பவரை நேர்ல பாத்திருக்கேன் சார்…”

“வாட்..? என்ன மேடம் சொல்லறீங்க… நீங்க நெகட்டிவ் எனர்ஜியை நேர்ல பார்த்திருக்கீங்களா… என்னால நம்பவே முடியல மேடம்…”

“என்னாலயும் நம்ப முடியாமத் தான் இருந்திச்சு சார் ஒரு காலத்துல… பட் அன்னைக்கு அந்த ஒரு சம்பவம் என்னோட வாழ்க்கையில நினைச்சுப் பாக்கவே முடியாத எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்திச்சு… எனக்கு மட்டும் இல்ல… நம்ம பராநார்மல் சைக்காலஜி எக்ஸ்பர்ட் ரிஷிகேஷ் சார் இருக்காருல்ல..? இந்தியாவிலேயே நம்பர் ஒன்னா இருந்த அவரை அந்த ஸ்ட்ரீமை (stream) விட்டே ஒதுங்க வச்சதும் அந்த இன்சிடன்ட் தான்… அதுக்கு அப்புறம் அவர் யார்கிட்டவும் சொல்லாம கொள்ளாம ஏற்காட்டுக்கு வந்து செட்டில் ஆகிட்டார். இதெல்லாம் அவருக்கு நெருங்கிய சில சொந்தங்களுக்கு மட்டும் தான் தெரியும்… அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவரோட ஃபீல்டுக்கு நிறையப் பேர் வரவும், அவரோட பெயர் லிஸ்டுல இருந்து இறங்கி இறங்கி அப்புறம் காணாமலே போய்டுச்சு…”

“ஆனா நம்மளுக்கு இந்த கேஸ்ல எந்த எதிர்ப்பும் காட்டாம அவர் உதவ முன் வந்தாரே மேடம்..?”

“ஆமா சார்… அந்த இன்சிடென்டுக்கு அப்பறம் ரிஷிகேஷ் சார் பர்ஸனலா என்கூட ரொம்ப க்ளோஸ் ஆனாங்க… அதனால தான் இந்த கேஸ்ல எந்த மறுப்பும் தெரிவிக்காம ஹெல்ப் பண்ண முன்னுக்கு வந்தாங்க…”

‘அப்படி என்ன தான் மேடம் நடந்துச்சு அந்த இன்சிடென்ட்ல… ரிஷிகேஷ் சார் இந்த ஃபீல்டுல இருந்து விலகிக்கற அளவுக்குன்னா விசயம் ரொம்ப பெருசா தான் நடந்திருக்கணும்… அதை கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா..?’ 

மனதில் நினைத்ததை வார்த்தைகளில் கொண்டு வாசுதேவன் கேட்க வர, சரியாக அந்த நேரத்தில் இனியாவுக்கு மொபைலில் அழைப்பு வந்தது.

“எக்ஸ்கியூஸ் மீ சார்…” என அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு சற்று தள்ளி நடந்து வந்தவள், திரையைப் பார்க்க கமிஷ்னர் ராகவேந்திரா தான் அழைத்திருந்தார். 

“குட் ஈவ்னிங் சார், சொல்லுங்க…”

“குட் ஈவ்னிங் மிஸஸ் இனியா… கேஸ் இப்போ எந்த கட்டத்துல இருக்கு..? குழாய் கிணத்தை சுத்தப்படுத்தி அதுக்குள்ள ஏதாவது ஆதாரம் ஒளிஞ்சு இருக்கான்னு கண்டுபிடிக்கற ப்ராஸஸ்ல ஏதாவது லீட் கிடைச்சுதா..?”

“அந்த ப்ரொஸீஜர் தான் சார் இப்போ போய்க்கிட்டு இருக்கு…‌ நான் முன்னாடியே உங்களுக்கு ரிப்போர்ட் பண்ண மாதிரி இந்த இடத்துல அமானுஷ்ய நடமாட்டம் இருக்குங்கறத மக்கள் ஆணித்தரமா நம்பறாங்க… அதனால இந்த சர்வீஸ் ஃபிட்டை க்ளீன் பண்ணறதுக்கு கூட ரொம்ப ஸ்ட்ரகிள் பண்ணி தான் ஆளுங்கள கூப்பிட வேண்டியதா போச்சு…”

“ஓஓ… அவ்வளோ பிரச்சினை இருக்கா அந்த இடத்துல..? கவனம், ஏதாவது லீட் கிடைச்சிருக்கான்னு தெரிஞ்சுக்க தான் கால் பண்ணேன் ம்மா…‌ ஆஸ் யூஷூவல் வேலை முடிஞ்சதுக்கப்பறம் நீங்க ரிப்போர்ட் பண்ணிட்டீங்கன்னா சரி…”

“ஷ்யூர் சார்…” என்றவள் அழைப்பை முடித்துக் கொண்டு வாசுதேவனிடம் வந்தாள்.‌ 

“கமிஷ்னர் சார் தான் கூப்பிட்டிருந்தார் வாசு சார். கேஸோட ஸ்டேடஸ் பத்தி கேட்டார்… சொன்னேன்…”

“ஓஓ… ஓகே மேடம்…” என்றவர், தொடர்ந்து ரிஷிகேஷ் சம்பந்தப்பட்ட விடயத்தை கேட்பதற்குள், “மேடம் இங்க பாருங்க…” என் கத்தி இனியாவை அழைத்தார் சர்வீஸ் ஃபிட்டை துப்புரவு படுத்திக் கொண்டிருந்த ஒரு ஊழியர். 

“என்னாச்சு..?” என்றபடியே இனியாவும்‌ வாசுதேவனும் அங்கு விரைய, அவர்கள் சேகரித்திருந்த அழுக்கோடு அழுக்காய் வெளிவந்திருந்தது கைப்பேசி..!

                    ✯✯✯✯✯✯

                                 – அல்லி மலரும்…

    No comments yet.