அல்லி 37
ஏற்காடு
“சரவணகுன்றன் சாரை கடைசியா எங்க பாத்தீங்க..?”
தலைமை ஆசிரியரை கேட்டுக் கொண்டிருந்தாள் இனியா.
“இங்க தான் மேடம்… எங்க ஸ்கூலுக்கு எப்பவாச்சு அவர் டொனேஷன் குடுக்க வருவாரு… அப்படித்தான் ரெண்டு மாசம் முன்னாடி அவரை பாத்தேன்…”
“அவரோட அட்ரஸ் தெரியுமா உங்களுக்கு..?”
“அட்ரஸ்..?” என யோசித்தவாறு தலையைச் சொறிந்தவர், “அட்ரஸ் தெரியல மேடம்… ஆனா அவரோட பையன் ஏதோ ஒரு கிராமத்துல, அந்த கிராமத்து பேரு கூட ஏதோ பழத்தோட பேரு மாதிரி ஆரம்பிக்கும்… ஹான் அத்திப்பட்டு… அத்திப்பட்டுன்னு ஒரு கிராமத்துல இன்ஸ்பெக்டரா வர்க் பண்ணறதா சொன்னாரு…”
“சரிங்க சார்… ரொம்ப நன்றி உங்க தகவல்களுக்கு…” என்றபடி எழப் போனவளை, அவசர அவசரமாக இடைமறித்தார் தலைமை ஆசிரியர்.
“மேடம், அந்த கேட் பத்தி கேட்டீங்க இல்ல, அதப் பத்தி உங்களுக்கு யாரு சொன்னாங்க..? அந்த கேட்டை திறந்து உள்ள எல்லாம் போய்டாதீங்க மேடம்… அப்படியே போனாலும் அந்த குழாய்க்கிணத்தை மாத்திரம் திறந்துடாதீங்க…”
“ஏன் அப்படி சொல்றீங்க..?”
புருவங்கள் நெரிபட கேட்டாள் இனியா.
“செத்துப்போன அத்தனை பேரோட ஆத்மாவும் அந்தக் கிணத்துக்குள்ள தூங்கிட்டு இருக்கிறதா எங்க ஊருல ஒரு நம்பிக்கை இருக்கு மேடம்… எத்தனையோ மந்திரங்களுக்கும், எத்தனையோ உயிர்களோட இரத்தத்துக்கும் மத்தியில அந்த ஆத்மாக்கள் உறங்கிட்டு இருக்கும்னும், தெரிஞ்சோ தெரியாமலோ அந்தக் கிணத்தை யாராவது திறந்துட்டா அது பெரிய பிரச்சினைகளுக்கு காரணமா அமைஞ்சிடும்னும் அப்போ பூஜை பண்ணி குழாய்க்கிணத்தோட சர்வீஸ் ஃபிட்டை மூடின பூசாரி ஐயா சொன்னாங்க… அதான்…”
“ஓஓ… அந்த பூசாரி ஐயாவோட கான்டாக்ட் டீடெய்ல்ஸ் எனக்கு வேணுமே..?” என்றபடி தன் லேசர் பார்வையால் அவரைத் துளைத்த இனியாவை இயலாமையாய் நோக்கியவர்,
“மேடம் நான் சொன்னதெல்லாம் நீங்க விளையாட்டா எடுத்துக்கறீங்கன்னு நினைக்கறேன்… நம்மளை மிஞ்சின நல்ல சக்திகளும் கெட்ட சக்திகளும் இந்த உலகத்துல இருக்குங்கிறது தான் நிஜம். நான் அந்த பூசாரி ஐயாவோட அட்ரஸ் தரேன்… அங்க போய் அவரை பார்த்தீங்கன்னா உங்களுக்கு நிறைய விசயம் புரிய வாய்ப்பிருக்கு…” என்றார்.
“சரிங்க சார்… உங்க உதவிக்கு ரொம்ப நன்றி… இந்த ஊர்க்காரர் தான்னு சொல்றீங்க, ஆனா அந்த காட்டுப்பகுதியை போலீஸ் டேக் ஓவர் பண்ணி க்ரைம்சீனா அறிவிச்சது உங்களுக்கு தெரியாம இருக்கிறது தான் ஆச்சரியமான விசயம்…” என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காது, அந்த பூசாரியின் விலாசத்தை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
✯✯✯✯✯✯
அத்திப்பட்டு
பெரியாத்தா வீட்டில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தலை மேல் கைவைத்து அமர்ந்திருந்தாள் அல்லி. சுற்றி இருந்த அத்தனையும் சூனியமாகிப் போய் விட்ட உணர்வு அவளுக்கு. இதோ, இந்த ரத்னா மாத்திரம் இல்லை என்றால் என்றோ மரித்துப் போய் இருக்கக் கூடியவள் தான். செய்து விட்ட தவறு பெரியது என்று தெரியும், ஆனால் இத்தனை பெரியதாக இருக்கும் என அவள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.
“அல்லி…!” என அவளை அழைத்தபடியே அங்கு வந்து சேர்ந்திருந்தாள் ரத்னா.
அவள் அழைத்ததில் மெல்ல தலையை திருப்பி சுயநினைவுக்கு வந்தாள் அல்லி.
“சொல்லு ரத்னா…”
“காணமேனு பாத்தேன்…” என்றவள், அவள் அருகில் நாற்காலியை தூக்கி வைத்து அமர்ந்தாள்.
“ம்ம்…” என்றதுடன் மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்து விட்ட அல்லியை ஏக்கமாய்ப் பார்த்தாள் ரத்னா.
“நம்மளுக்கு அந்த பழைய லைஃப் திரும்ப கிடைக்கவே கிடைக்காதா அல்லி..?” என்றதற்கு விரக்தியாக ஒரு புன்னகை மாத்திரம் பதிலாக வந்தது.
“அல்லி..!”
“ம்ம்…”
“நான் ஒண்ணு சொல்லவா..?”
“ம்ம்…”
“இது என்னோட அஸெம்ஷன் மட்டும் தான்… உண்மையா பொய்யானு தெரியல…”
“முதல்ல விசயத்தை சொல்லும்மா… மத்தத அப்புறம் பாத்துக்கலாம்…”
“என்னன்னா, செத்துப்போனா இல்ல தென்றல்..?”
“ம்ம்…”
“அவளோட போட்டோவ நீ பாத்தியா..?”
“அவளை நான் நேர்லயே பார்த்திருக்கேனே ம்மா… அதுவும் செத்துப் போனதுக்கு அப்பறமா…” விரக்தியாய் ஒரு புன்னகை அரும்பியது அல்லியிடத்தில்.
“அப்போ சரியா கவனிச்சிருக்கற மனநிலையில நீ இருந்திருக்க மாட்ட… அதுவுமில்லாம எல்லா விசயமும் எல்லா நேரத்திலயும் நம்ம அட்டென்ஷன் எடுத்துக்கிற இடத்துல இருக்காது… அதனால தான் போட்டோ பத்தி கேக்கறேன்…”
“சும்மா ரெண்டு தடவை பாத்தேன்… அவ்ளோ டீப்பா எல்லாம் இல்லை…”
“ஆனா நான் ரொம்ப டீப்பா பாத்தேன்…”
“அதனால ஏதாவது பிரயோசனம் இருக்கா என்ன..?” கொஞ்சமாய் எரிச்சல் எட்டிப் பார்த்தது அவளிடம்.
“அத நீ தான் சொல்லணும்…”
“ப்ச்… புரியற மாதிரி சொல்லுடி…”
“அந்த தென்றலோட கழுத்துல ஒரு செய்ன் போட்டிருந்தா… அதோட டாலர்ல என்ன இருந்திச்சு தெரியுமா..?”
“என்ன இருந்திச்சு..?”
“சிவப்பு நட்சத்திரம்…’
“சிவப்பு நட்சத்திரமா..?”
“ஆமா… நான் நல்லா சூம் இன் சூம் அவுட் லாம் பண்ணி பாத்துட்டேன்… ஹான்ட்ரட் பர்சன்டேஜ் ஷ்யூரா அது எங்க இல்லத்தால எக்ஸிபிஷன் வச்ச அன்னைக்கு, நீ உன் கைப்பட செஞ்சு தாமரை அம்மாக்கு ஸ்பெஷலா ப்ரசன்ட் பண்ணின செய்ன் தான்…”
“ஏன், அத மாதிரி ஒரு செய்னை வேற யாராலயும் செய்ய முடியாதா என்ன..?”
“செய்யத் தெரிஞ்சா யாரு வேணாலும் செய்யலாம்… ஆனா எல்லாரும் அது பின்னாடி அல்லிப் பூவை வரைய மாட்டாங்க இல்ல..? அப்படியே வரைஞ்சாலும், அதோட பெட்டல்ஸ்ல அவங்களுக்கு முக்கியமான ரெண்டு பேரோட பெயரான ஆர் அன்ட் கே எழுதி இருக்க மாட்டாங்க இல்ல..? அப்படியே எழுதி இருந்தாலும் அதுக்கு நடுவில குட்டியா ஹாஃப் மூன் (Half moon) போட்டிருக்க மாட்டாங்க இல்ல..?”
ரத்னா சொல்ல சொல்ல வேகமாக அந்த போட்டோவை வாங்கி பார்த்தாள் அல்லி. அந்த டாலர் செய்ன் அதிகளவில் பக்கவாட்டாக திரும்பி இருக்க, ரத்னா சொன்ன அத்தனை விடயங்களும் கனகச்சிதமாக இருந்தது அந்த டாலரில். பார்த்தவுடன் தெரியும் அளவிற்கு இல்லா விட்டாலும், சற்று உற்றுப் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
“ஆனா நம்ம உள்ளூருக்குள்ள மாத்திரம் தானே எக்ஸிபிஷன் செஞ்சோம்… அதுலயும் நான் சேல் பண்ணின செய்ன் எல்லாமே வித்தியாசம்… இந்த செய்ன் ஒண்ணே ஒண்ணு செஞ்சு தாமரை அம்மாக்கு மட்டும் தானே குடுத்தேன்..?”
“ஆமா… அப்படின்னா தாமரை அம்மா மூலமா தான் இந்த செய்ன் வெளிய போய் இருக்கணும்… இல்லன்னா வேற ஏதாச்சு வாய்ப்பு இருக்கான்னு தெரியல… தாமரை அம்மா கிட்ட கேட்டா சொல்லுவாங்க… ஆனா தென்றல பத்தி எதுவும் கேக்காம, செய்ன் பத்தி மட்டும் கேக்கணும்…”
“ம்ம்… ஆமா, இத ஏன் நீ இத்தனை நாளா என்கிட்ட சொல்லல..?”
“உண்மையை சொல்லணும்னா பெரியாத்தா இறந்த அன்னைக்கு தான் நான் இந்த விசயத்தை கவனிச்சேன்… அப்புறம் ஆத்தா இறந்தது, உன்மேல நான் கோபப்பட்டது அப்படி இப்படின்னு எதிர்பாராத சம்பவங்கள் நிறையவே நடந்து போச்சு… இன்னைக்கு தான் இத சொல்ல சரியான சந்தர்ப்பம் அமைஞ்சது…”
“ஹூம்…” பெருமூச்சொன்றை வெளியேற்றினாள் அல்லி.
✯✯✯✯✯✯
பூசாரி ஐயா சிவபுருஷோத்தமன் முன் ஆளுக்கொரு தேநீர் கோப்பையுடன் அமர்ந்திருந்தனர் இனியாவும் வாசுதேவனும்.
“காரணம் இல்லாம என்னைத் தேடி வந்திருக்க மாட்டீங்கன்னு தெரியும்… சொல்லுங்க மேடம்..?” அவராகவே ஆரம்பித்திருந்தார்.
“இந்த ஊரோட எல்லைக்கு அருகில ஒரு ஸ்கூல் இருக்கு. ‘கலைமகள் கலைக்கூடம்’னு ஒரு தனியார் பள்ளி, அது ஐயாவுக்கு நல்லாவே தெரியும். அதோட பின்புறத்தில ஒரு பெரிய கேட்… ரொம்ப வருஷமா க்ளோஸ் பண்ணியே இருக்கு… அதோட வரலாறும் மத்த எல்லாரையும் விட ஐயாவுக்கு நல்லா தெரியும் ங்கிறது எங்களோட அபிப்பிராயம். அதப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காகத் தான் இவ்வளோ தூரம் வந்திருக்கோம் ஐயா…”
“ஒரு காலத்துல ஊர் மக்களோட அதிகமான போக்குவரத்து நடந்துட்டு இருந்த பாதை மேடம் அது… எதிர்பாராத விதமா நிறைய துர்மரணங்கள் நடந்து போச்சு… அதனால தான் அந்த ஆத்மாக்கள் சாந்தி அடையற விதமா பூஜை செய்து, அந்த பாதையை மொத்தமா மூடிட்டோம் நாங்க… அங்க இருந்த குழாய்க்கிணத்துல தான் நாங்க மொத்தப் பேருமே தண்ணி எடுத்துட்டு இருந்தோம்… அதுக்கப்புறம் அதுவும் இல்லாம போச்சு… இப்ப அப்படி ஒரு இடம் இருக்கிறதே யாராவது சொன்னா தான் ஞாபகத்துக்கு வருது…”
“ஹூம்… அந்தக் குழாய்க்கிணத்துக்குள்ள தான் ஏதோ சாந்திலாம் செஞ்ச தண்ணிய ஊத்தி மூடினதா சொன்னாங்க… அதப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா..?”
“ஆமா மேடம்… இறந்தவர்களோட ஆத்மா சாந்தி அடையணுங்கறதுக்காக அந்த குடும்பத்தை சார்ந்தவங்களோட இரத்தத்தை எடுத்து, ஒரு உருவ பொம்மை செஞ்சு அது மேல விட்டு, ஒரு சில மூலிகை மருந்துகளையும் சேர்த்து தண்ணில கரைச்சு அதுக்குள்ள விட்டு மூடினோம் மேடம்… அப்படின்னா அந்த இடத்துக்குள்ளவே சம்பந்தப்பட்ட ஆத்மாக்கள் சிறைப்பட்டு இருக்குங்கிறது எங்க நம்பிக்கை. இதுலாம் என்னோட குருஜி சத்யானந்தசுவாமிகள் கிட்ட இருந்து தான் நான் கத்துக்கிட்டேன்…”
(நம்ம ‘காரிருள் காரிகை’ல வந்த அதே சாமியார் தான் இந்த சத்யானந்தசுவாமிகள்)
“சத்யானந்தசுவாமிகளா..? அவர் இப்பவும் உயிரோட இருக்காரா..?”
“இல்லை மேடம்… அவங்க ஜீவசமாதி அடைஞ்சுட்டாங்க… அவங்களுக்குலாம் சாவுங்கிறது கிடையாது… கடவுளோட அடியில சரணாகதி மட்டும் தான்…”
“ஓஓ…” என்ற இனியா சற்றே சிந்தனையில் ஆழ்ந்து விட,
“எதுக்காக சாந்தி செய்யும் போது மூலிகைகள் சேர்த்துக்கிட்டீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ஐயா..?” என்றார் வாசுதேவன்.
“பொதுவாகவே சாந்தி செய்யும் போது மூலிகைகள் சேர்க்கிறது வழக்கம் தான் சார்… அது ஆன்மீக பலன் அதிகரிக்குறதுக்கு வழி வகுக்கும்… அதோட சுற்று சூழலும் கொஞ்சம் சுத்தமாகும்… இதனால வேப்பிலை தர்ப்பை குங்கிலியம் மாதிரியான பொருட்களை ஆத்ம சாந்திக்காக பயன்படுத்துவோம்…”
“அப்படின்னா அதனால தான் அந்த சர்வீஸ் ஃபிட்டை திறக்கும் போது பேட் ஸ்மெல் வந்திருக்குன்னு நினைக்கறேன் சார்… இந்த மூலிகைகள் எல்லாம் ரொம்ப வருஷமா தண்ணில ஊறி அழுகிப் போய் தான் அந்த கெட்ட மணம் வந்திருக்கு போல…”
இடை மறித்து இனியா சொல்ல, அதை ஆமோதிப்பது போல் வாசுதேவன் தலையசைக்க அவர்கள் இருவரையும் விழியகல பார்த்திருந்தார் சிவபுருஷோத்தமன்.
“சார், மேடம்… நீங்க ரெண்டு பேரும் எந்த சர்வீஸ் ஃபிட் பத்தி பேசறீங்க… நான் திறக்கவே கூடாதுன்னு சொல்லி இரத்த பூஜை பண்ணி மூடி வச்ச அந்த குழாய்கிணத்தோட சர்வீஸ் ஃபிட் பத்தி பேசலையே..?” என்றவருக்கு, ‘அப்படி இருக்கக் கூடாதே’ என்ற எண்ணம் மிதமிஞ்சி இருந்தது.
“அதப் பத்தி தான் ஐயா பேசறோம்… அந்த சர்வீஸ் ஃபிட்டை இப்போ கொஞ்ச நாள் முன்னாடி யாரோ ஓப்பன் பண்ணி இருக்காங்க… அதான் நாங்க இன்னைக்கு…”
“வாட்..?” தான் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளிக் கொண்டு அதிர்ச்சியாய் எழுந்திருந்தார் பூசாரி சிவபுருஷோத்தமன்..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.