Episode 36

ஶ்ரீ துர்க்கா | 04 Mar 2026 | Share

அல்லி 36

ஏற்காடு

சத்யசீலனும் அவரது குழுவினரும் வந்திருக்க, மெல்ல அந்த இரும்புக் கேட்டை திறந்து கொண்டு உள்நுழைந்தனர் அனைவரும். முதல் ஆளாக சத்யசீலன் உள்நுழைய, அதனைத் தொடர்ந்து அவரது குழுவினரும் இறுதியாக இனியாவும் முன்னோக்கி நகர்ந்தனர். 

சுற்றி எங்கிலும் முள்வேலி அமைத்து, அதன் உட்புறமாக மரவேலி ஒன்றை கட்டமைத்து இடையில் மதில் எழுப்பி இந்த இரும்பு கேட்டை இணைத்திருந்தார்கள். அதன் உட்புறமாக ஆளை மிஞ்சிய அளவுக்கு சுவர் எழுப்பி இந்தப் பாதையை மறைத்திருந்தார்கள். இங்கிருந்து சற்று தள்ளி நின்று பார்த்தால் ‘கலைமகள்’ பள்ளியின் ஒரு பகுதி நன்றாகவே புலப்படும். ஆனால் பள்ளியின் உள் நின்று பார்த்தால் சுற்றி எங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும் சுவர் மாத்திரம் தான் தெரியுமாறு வடிவமைத்திருந்தார்கள். 

‘யாரு இந்த மாதிரிலாம் செட் அப் பண்ணி இருப்பாங்க..?’ என தனக்குள் யோசித்தவாறே, ஃபாரன்ஸிக் ஆஃபீஸர்ஸ் அவர்களது வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அந்த இடத்தில் குட்டி நடை போட்டாள் இனியா.

ஒரு பெரிய விருட்சமும், ஒரு துருப்பிடித்த குழாய்க் கிணறும் தவிர பெரிதாக வேறொன்றும் இல்லை அங்கே. இனியா நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் போதே பாடசாலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்க, தன்னிச்சையாக திருப்பி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள் அவள்.

அதே நேரம் “மேடம் இங்க பாருங்க…” என சற்றே சத்தமாய் இனியாவை அழைத்தார் சத்தியசீலன். 

“என்ன சார்…” என்றபடியே அவர்கள் அருகில் வந்தாள் அவள்.

“இந்தக் கல்லைப் பாருங்க…”

இனியா அந்த கல்லை அவதானமாக பார்த்தாள். சற்றுத் தூரத்திலிருந்து எறிந்திருக்க வேண்டும், ஓரிடத்தில் கொஞ்சம் அழுத்தமாகப் பட்டு தேய்த்தபடி நகர்ந்திருந்தது அந்த கல். 

“யாரோ எறிஞ்ச மாதிரி இருக்கு…”

“ஆமா மேடம்…”

“அதுல ஏதாவது கைரேகை இருக்கா..?”

“அங்க தான் மேடம் சிக்கலே… இந்த கல்லுலயும் எந்தக் கைரேகையும் இல்லை…”

“ஓஓ…” என்ற இனியா, அவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியேறினாள். சற்று நேரம் கழித்து மீண்டும் வந்தவளது கையில் கிட்டத்தட்ட அதே அளவுக்கு ஒரு கல் அமர்ந்திருந்தது. 

அந்தக் கல்லைப் புரியாமல் பார்த்த சத்யசீலனுக்கு, “கவலைப்படாதீங்க சார்… க்ரைம் சீன்ல இருந்து எடுக்கல…” என புன்னகைத்துக் கொண்டே பதிலளித்தாள் அவள்.

“எதுக்கு மேடம் இந்த கல்லு..?”

“சின்ன ஒரு டெஸ்டிங் சார்… நீங்க காட்டுற கல்லு இந்த இடத்துல விழுந்து இப்படியே தேய்ச்சுட்டு போயிருக்கு இல்லையா..?” என அந்த திசையை காண்பித்தாள் அவள்.

“ஆமா மேடம்…”

“அப்படின்னா இந்த மரத்துப் பக்கமா நின்னு தான் கல்லை எறிஞ்சுருக்காங்க…”

“ஹான்ட்ரட் பர்சன்‌ட் மேடம்…”

“அதனால தான்… அண்ணளவா அதே வெய்ட் இருக்கக் கூடிய இந்தக் கல்லை கொஞ்ச தூரத்துல நின்னு எறிஞ்சு பாக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்… சும்மா கூட அவங்க எறிஞ்சிருக்கலாம்… ஆனா சின்ன சின்ன விசயங்கள்ல கூட நம்மளுக்கு சாட்சியங்கள் கிடைக்கலாம் ங்கிறதால ட்ரை பண்ணி பாக்கலாம்…”

“சரி தான் மேடம்…”

“ஆனா இத நீங்களும் பண்ணிக் காமிக்கணும் சார்… ஏன்னா ஆளோட பலம், அவங்களோட வெய்ட்டை பொறுத்து டிஸ்டன்ஸ் மாறலாம் இல்லையா..? ஆனாலும் குறிப்பிட்ட ரேடியன்ஸ்க்கு உள்ள தான் இருக்கும்… சோ ஒரு ட்ரை குடுத்து பாக்கலாம்…”

அதன்படியே முயற்சி செய்து பார்த்தாள் இனியா. அதே போல் சத்தியசீலனையும் அவர்களது குழுவையும் வைத்து பரிசோதித்து, ஒரு குறிப்பிட்ட ரேஞ்சை தயார் செய்து வைத்துக் கொண்டாள் அவள். அவள் குறித்து வைத்த ரேஞ்சினுள் அகப்பட்டது அந்த குழாய்க்கிணறு.

ஆச்சரியமாக அதனை பார்த்தவள், “சார் இந்த சர்வீஸ் பிட் (Service pit) இருக்குல்ல… அத திறக்க முடியுமான்னு ஒருக்கா பாருங்க…”

“சரிங்க மேடம்…”

என்றவர், முதலில் அந்த குழாய்க்கிணற்றையும் அதனுடைய சர்வீஸ் பிட்டையும் நன்கு ஆராய்ந்த பின்னர், கையுறையை அணிந்து கொண்டு இனியா கொடுத்திருந்த கல்லினால் அடித்து அதனை திறந்தார். திறந்தவுடன் குப்பென நாசியைத் தாக்கியது துர்நாற்றம். சட்டென தன் கைக்குட்டையை எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டாள் இனியா. சத்தியசீலனுக்கோ வாந்தி எடுக்காத குறைதான். அவர்கள் அனைவரும் அந்த நிலைமையில் இருந்து சகஜமாக வருவதற்கு ஐந்து நிமிடங்கள் எடுத்தன. அப்படி இருந்தும் அதிலிருந்து ஒவ்வாத மணம் ஒன்று பரவிக் கொண்டு தான் இருந்தது.

“என்ன மேடம், இப்படி நாறுது…  மூடியோட ஃபிட்னஸ் பார்க்கும் போது கண்டிப்பா கொஞ்ச நாள் முன்னாடி ஓப்பன் பண்ணி திரும்ப மூடின மாதிரி தான் இருக்கு… அப்படி இதுக்குள்ள என்னத்த தான் போட்டு மூடி இருப்பாங்க..?”

“தெரியலையே சார்… தென்றலை மர்டர் பண்ணி டிஸ்பாஸ் பண்ணி இருப்பாங்களோன்னு நினைச்சா, ஆள் போற அளவுக்கும் இந்த குழாய் இல்லை, ரொம்ப ஒடுக்கமா இருக்கு…”

“அதான் மேடம்…”

“சார், இந்த குழாய் ரொம்ப நாளா ஓப்பன் பண்ணாம இறுக்கமா இருந்ததால அந்த கல்லை யூஸ் பண்ணி தானே இதை திறந்திருக்காங்க…”

“ஆமா மேடம்…”

“அப்படின்னா அந்த கல்லோட எந்த ஸ்பெஸிமனும் ஏன் நமக்கு இங்க கிடைக்கல…”

“அவங்க கவர் யூஸ் பண்ணிட்டு தான் இந்த வேலையை பார்த்திருக்காங்க மேடம்… அதனால திரும்ப மூடியை மூடும் போது கல்லோட தடயங்கள் அதுல இருந்து அழிஞ்சிருக்கதுக்கான வாய்ப்புகள் அதிகம்… அதோட கல்லை எறியும் போது அது மண்ணுல தேய்ஞ்சுட்டே போய் இருக்கதுனால அதுலயும் நமக்கு ஸ்பெஸிமன் எதுவும் கிடைக்கல… அதனால தான் இவ்வளோ டெஸ்ட்‌ பண்ணி இதை கண்டுபிடிக்க வேண்டியதா போச்சு நமக்கு…”

“ஓஓ… சரி தான்…”

அவர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே வாசுதேவனும் சம்பவ இடத்திற்கு வந்து விட்டார். 

“பாதையை கிளீன் பண்ணி இருக்கதையும், போலீஸ் ஃபோர்ஸையும் பாத்து தான் நான் சரியான வழியில உள்ள வந்தேன் மேடம்… மத்தபடினா இந்த இடம் நம்மள சுத்தல்ல விட்டிடும்னு தான் நினைக்கிறேன்… ஒரே மர்மக் காடா இருக்கும்‌ போலயே…” என கூறிக் கொண்டே பார்வையை சுழற்றினார் அவர். 

“ஆமா சார்… கவனமா இருக்கணும்… அதனால தான் தென்றலும் தப்பிக்க முடியாம இதுக்குள்ள மாட்டிக் கிட்டா போல… அப்படின்னா இந்த இடம் அந்த கிட்னாப்பர் ஆர் கில்லருக்கு நல்லா பழக்கப்பட்ட இடமா தான் இருக்கணும்… ஏன்னா, தென்றலோட சேலையைத் தவிர மத்த எந்த இடத்துலயும் அவங்களோட கைரேகை இல்லை… தென்றலோட சேலைல இருக்கறது கூட அவங்களோட கைரேகைன்னு இன்னும் ஊர்ஜிதமா தெரியல… உங்க டிப்பார்ட்மென்ட்ல இருக்கற ரெண்டு போலீஸ் ஆபீஸர்ஸ் கிட்ட சொல்லி நல்லா விசாரிக்க சொல்லுங்க சார்… இந்த இடம் யார் யாருக்குலாம் அத்துப்படின்னு நம்மளுக்கு தகவல் கிடைக்கும்… அதை வச்சு ஆக்கியூஸ்ட நெருங்கிடலாம்னு நினைக்கறேன்…”

“சரி மேடம்…”

தடயவியல் நிபுணர்கள் தம் சேவைகளை முடித்துக் கொண்டு கிளம்ப, வாசுதேவனை அழைத்துக் கொண்டு முன் வாசல் வழியாக பள்ளியினுள் நுழைந்தாள் இனியா.

நேரே தலைமை ஆசிரியரின் அறைக்கு வந்தவள் அவரது அனுமதியுடன் உள் நுழைந்தாள்.

“வணக்கம் மேடம், தென்றல் மிஸ் பத்தியோ காணாமப் போன அந்த பொண்ணு… அவ பேர் என்ன, ஹான் ஆரக்ஷா… அந்தப் பொண்ணு பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா..?”

“ஆனாலும் ரொம்பத்தான் அக்கறை சார் உங்களுக்கு…” என போலியாக மெச்சிக் கொண்டவள், “இந்த கேஸ்ல தான் இப்போ டீப்பா இன்வால்வ் ஆகி இருக்கோம்… கூடிய சீக்கிரம் குற்றவாளியை கண்டுபிடிச்சிடுவோம்… பை த வே, உங்ககிட்ட சில விசயங்களை கேட்டு க்ளாரிஃபை பண்ண தான் நாங்க இப்போ இங்க வந்தோம்…”

“சொல்லுங்க மேடம்…” என்றவரின் உணர்வுகளை படிக்க முயன்றபடியே ஆரம்பித்தாள் இனியா.

“இந்த ஸ்கூலுக்கு பின்னாடி, ஸ்கூல் சுவர்ல இருந்து கொஞ்சம் பிரிச்ச மாதிரி ஒரு கேட் இருக்கே… அது உங்களுக்கு தெரியுமா..?”

“தெரியும் மேடம்…”

“ஓஓ…‌ எதனால அந்த கேட்ட அப்படி ரொம்ப பாதுகாப்புக்கு மத்தியில‌ பூட்டி வச்சிருக்காங்க…”

“அது ஒரு சபிக்கப்பட்ட பாதை மேடம்…‌ அதனால தான் அப்படி பூட்டி வச்சிருக்காங்க…”

“சபிக்கப்பட்ட பாதையா..? நீங்க இதப் பத்தி நேத்து நாங்க என்கொயர் பண்ணினப்போ சொல்லவே இல்லையே..?” என்றாள் இனியா வாசுதேவனைத் திரும்பி புரியாமல் பார்த்தபடியே.

“சாரி மேடம்…‌ இன்டென்ஷனலா மறைக்கல… அப்படி ஒரு பாதை இருக்கிறது இங்க பாதிப் பேருக்கு தெரியாது… தெரிஞ்ச சிலருக்கும் ரொம்ப காலம் புழக்கத்தில இல்லாம அது மறந்தே போச்சு… அதனால தான் சொல்லல மேடம்…”

அவரிடம் கோபப் பட்டு பிரயோசனம் இல்லை என்பதால் அமைதி காத்தாள் இனியா.‌

“சரி… அதை ஏன் சபிக்கப்பட்ட பாதைன்னு சொல்லி மூடி வச்சிருக்கீங்க..?” என வாசுதேவன், இனியா விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

“ஏன்னா அந்த பாதையை யூஸ் பண்ணறவங்க நிறையப் பேர் அகால மரணம் அடைஞ்சிருக்காங்க சார்…‌ இதெல்லாம் ரொம்ப காலம் முன்னாடி நடந்தது. நீங்கலாம்‌ அப்போ பிறந்திருக்க கூட மாட்டீங்கன்னு நினைக்கறேன்…”

“ஓஓ… இந்த மாதிரி ஒரு இடம் இருக்கிறதா எங்களுக்கு இதுவரைக்கும் யாரும் சொன்னதே இல்லையே மேடம்…” என்றபடி திரும்பி இனியாவைப் பார்த்த வாசுதேவனை இடைமறித்தார் தலைமை ஆசிரியர்.

“சொல்லி இருக்க மாட்டாங்க சார்… ஏன்னா இதுலாம் அந்தக் காலத்து கதை… அப்பவே பூஜை எல்லாம் பண்ணி, அந்த இடத்துல இறந்தவங்க அத்தனை பேருக்கும் சாந்தி செஞ்சு, இறந்து போனவங்களோட குடும்பத்தவங்களோட இரத்தத்தையும் ஒரு உருவ பொம்மை மேல விட்டு, அந்த பொம்மையை அருகில இருந்த ஒரு குழாய்க்கிணத்துல போட்டு மூடிட்டாங்க மேடம்… முன்னாடி ஊர் மக்கள் அத்தனை பேருக்கும் தண்ணியை வாரி இறைச்சுட்டு இருந்த கிணறு அது. ஆனா அன்னைக்கு பூஜை பண்ணி மூடிட்டு, முன்னால முள்வேலி போட்டு க்ளோஸ் பண்ணின இடம் தான் மேடம்… அதுக்கப்புறம் யாருமே அந்தப் பக்கம் போகல… ஸ்கூல்ல இருந்து சுவர் எழுப்பி அந்த இடத்தை ஸ்கூல்ல இருந்து பிரிக்கற ப்ராஸஸ்லயே இன்னும் ஒரு உயிரை காவு வாங்கிடிச்சு அந்த இடம்… ஏணியில நின்னு சுவருக்கு வெள்ளைப் பூச்சு பூசிட்டு இருந்தவர் எப்படி விழுந்தார்னு யாருக்கும் தெரியல… விழுந்த விழுவையில முள்ளந்தண்டு உடைஞ்சு, இரண்டு நாள் கோமாவுல இருந்து இறந்துட்டார்… அதுக்கப்புறம் வேலையை முழுசா முடிக்கிறதுக்கு உள்ளூர்க்காரங்க யாரும் வரல… வெளியூர்ல இருந்து ஆட்களை வரவழைச்சு தான் கம்ப்ளீட்டா வேலை செஞ்சு முடிச்சாங்க… அதுக்கப்புறம் போலீஸும் தற்காலிகமாக அந்த இடத்தை தடை செஞ்ச பகுதியா அறிவிச்சது… ஆனா மக்களை பொறுத்தவரைக்கும் அது நிரந்தரமா தடை செய்யப்பட்ட பகுதியா தான் பாக்கறாங்க… அன்னைல இருந்து இன்னை வரைக்கும் யாரும் அந்த இடத்துக்குள்ள போறதில்லை மேடம்… அந்த இடமும் இப்போ காடு மாதிரி ஆகிடிச்சு…”

“ஓஓ… இதெல்லாம் ஊர் மக்கள் சொல்லி நீங்க கேள்விப்பட்டது தானா..?”

“நான் வெளியூர்ல படிச்சிருந்தாலும்‌ உள்ளூர்க்காரன் தான் மேடம்… அது மட்டுமில்லாம, ஒரு உருவ பொம்மையை தயாரிச்சு அதுல இறந்தவங்களோட சொந்தக்காரங்க இரத்தத்துல நனைச்சதா சொன்னேன் இல்ல..? அன்னைக்கு இரத்தம் கொடுத்தவங்கள்ல நானும் ஒருத்தன்…”

“ஓஓ மை காட்… உங்களோட குடும்ப உறவும் அந்த பாதைல இறந்து போனாங்களா என்ன..?”

“ஆமா மேடம்… என் தங்கச்சி… அவ எப்பவுமே அவளுக்குன்னு ஒரு குட்டி குடம் வச்சிருப்பா… அதுல தண்ணி எடுத்துட்டு வந்து தனக்கு மட்டும் வச்சுக்குவா… நாங்க யாராவது தொட்டா ரொம்ப சண்டை போடுவா… அப்படி ஒரு நாள் தண்ணி எடுக்க போனவ திரும்பி வரவே இல்லை மேடம்… என்ன ஏதுன்னு பதறிப் போய் வந்து பார்த்தா…”

பழைய நினைவுகளில் சற்றுக் கண் கலக்கியவர் மீண்டும் தொடர்ந்தார்.

“கழுத்தில கையில லேசான நகக்கீறலோட பொணமா கிடந்தா மேடம் என் தங்கச்சி… கண்டிப்பா அது யாரோ கெட்டவங்க பண்ணின வேலை தான்னு சொல்லி ரொம்ப போராடினோம்… அப்போ நம்மளுக்கு வசதியும் குறைவு… ஆனாலும் தங்கச்சிக்காக போராடினோம்… பட் நோ யூஸ்… அடுத்தடுத்து நிறைய மரணங்கள் அந்த இடத்தை சுத்தி நடக்க ஆரம்பிச்சதும், இது ஏதோ துஷ்டசக்தியோட வேலைன்னு அந்த இடத்தையும் ரெஸ்ட்ரிக்ட் பண்ணிட்டாங்க… அவ்ளோ தான் மேடம்… அதுக்கப்புறம் இன்னைக்கு வரை அந்த இடத்துல மனுசங்க நடமாட்டம் இல்லை…”

“அந்த துஷ்டசக்தி விசயம் உண்மைன்னு நீங்க நம்பறீங்களா..?”

“சத்தியமான உண்மை மேடம்… செத்துப்போன யாரோட உடம்பிலயும் எந்த ரேகையும் இல்லை… ஆனா காயங்கள் தாராளமாகவே இருந்திச்சு… மனுசங்களால அப்படி பண்ண முடியுமா..? அந்த நேரம் கேஸை விசாரிச்ச இன்ஸ்பெக்டர் சரவணகுன்றன் மேடம்… ரொம்ப நேர்மையான மனுஷன் அவர்… இப்போ ஒரு டூ மன்த்ஸ் முன்னாடி கூட அவரை பார்த்தேன்… அவரோட பையன் கூட இன்ஸ்பெக்டரா தான் வேலை பாக்கறாராம்…”

“ஓஓ… 

பையன் பேர் என்ன..?”

“பூங்குன்றன்..!”

                     ✯✯✯✯✯✯ 

                                     – அல்லி மலரும்…

    No comments yet.