Episode 35

ஶ்ரீ துர்க்கா | 03 Mar 2026 | Share

அல்லி 35

அத்திப்பட்டு 

விடிந்திருந்தது. 

தடயவியல் நிபுணர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்க, ஸ்பாட் போஸ்ட் மோர்ட்டமை முடித்துக் கொண்டு மீளாப் பயணத்திற்கு ஏதுவாக அந்த ஐந்து உடல்களும் கிடத்தப்பட்டிருந்தன. சுற்றிலும் போலீஸார் காவலுக்கு நின்றிருக்க, பீதி படர்ந்த முகத்துடன் அத்திப்பட்டின் மொத்தக் குடும்பமும் அங்கே தான் ஆஜராகி இருந்தது. 

“போலீஸ்காரங்களுக்கே இந்த கதின்னா நாம எல்லாம் எப்பிடிடி இந்த கிராமத்துல இருக்கிறது..?”

“அதான்டி…‌ எம் பொண்ணு சென்னைல வேலை பாத்துட்டு இருக்கான்னு சொன்னேன்ல..? அவ எங்க எல்லாரையும் அங்க வர சொல்லி இருக்கா… நாளைக்கு மதியம் கிளம்பிடுவோம்டி…”

“என்னடி அமானுஷ்யம் அது இதுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க… இத்தனை வருஷமா இங்க இருக்கோம்… இப்பிடி எப்பவுமே ஆனதில்லையே..?”

“ஆமாடி… நேத்து செத்துப் போன ஒரு போலீஸ்காரரு பதினேழாம் நம்பர் வீட்டுக்கு பக்கத்துல யாரோ நடந்து திரியற மாதிரி இருக்குன்னு சொல்லி இருக்காருடி… அங்க தான் இவங்க இறந்தும் இருக்காங்க… சம்பவ இடத்துலயே எல்லா விசயங்களையும் முடிச்சுட்டு தான் இந்தப் பக்கமா கொண்டு வந்து கிடத்தி இருக்காங்க…  இன்னுமே இவங்க இறந்த இடத்தை சுத்தி நோ என்ட்ரி போட்டிருக்காங்கன்னு கலா சொன்னா…”

“ஓஓ… பதினேழாம் நம்பர் வீடுன்னா… அது நம்ம பெரியாத்தா வீடுல்ல..?”

“ஆமாடி… அல்லியும் ரத்னாவும் தான் பாவம்… ரொம்ப பயந்திருப்பாங்க… இரவுக்கே போலீஸ்காரங்க எல்லாம் வந்து, யாரையும் வீட்டை விட்டு வெளிய வர வேணாம்னு சொல்லிட்டாங்கல்ல… அவங்க வந்ததுனால கொஞ்சம் நிம்மதியா இருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்…”

“சரி தான்டி… பேசாம அந்த ரெண்டு புள்ளைங்களையும் நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்கலாமான்னு பாக்கறேன்… அப்படின்னா கொஞ்சம் தைரியமா இருப்பாங்கன்னு தோணுது…”

“ஆமா… நீயும் தனியா தானே இருக்க..? உனக்கும் ஒத்தாசையா இருக்கும்…” என இவர்கள் இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது இடைமறித்தார் இன்னொருவர்.

“ஏன்டி வேதா, அந்தப் பொண்ணுங்க ரெண்டையும் கூப்பிட்டு உன்கூட வச்சுக்க போறியா என்ன..?”

“எனக்கு ஆசை தான் கமலாக்கா அவங்கள என்கூட வச்சுக்கணும்னு… ஆனா அவங்களுக்கு அது வசதிப்படுமான்னு தெரியலையே…”

“கேட்டுப்பாரு… அல்லி தான் தகதிமிதா ன்னு குதிப்பா… ஆனா ரத்னா ரொம்ப நல்ல பொண்ணு… அவ எடுத்து சொல்லி அல்லிக்கு புரிய வைச்சிடுவா…”

“ம்ம்…” என எதையோ தீவிரமாக யோசித்த வேதா, அந்த முடிவை அடியோடு கைவிட்டார். ஆனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. 

“டீ கமலா, உனக்கு விசயம் தெரியுமா..?” என்றபடியே அவர்களோடு வந்து இணைந்து கொண்டார் இன்னொரு வயதான பெண்மணி.

“சொல்லுங்க ராதாக்கா…”

“இந்த போலீஸ்காரங்க எல்லாரையும் வெட்டி பரிசோதிச்சு பாத்திச்சுது இல்ல ஒரு டாக்டர் தம்பி..?”

“ஆமா… போஸ்ட் மோர்ட்டம் பாத்தாங்க…”

“அது என்னமோ கிடக்குது போ… அந்தத் தம்பி என்ன சொல்லி இருக்குது தெரியுமா..?”

“என்னவாம் க்கா..?”

“இது ஏதோ செய்வினை சூனியம் சம்பந்தப்பட்ட விசயமா இருக்கமோன்னு சொல்லி இருக்கு… அதுக்கு ஏதோ ஒரு பேரு சொல்லுவாங்களே இங்கிலிசில…”

“ப்ளாக் மேஜிக்கா..?”

“ஆங் அதான் அதான்…” என அவர்களது பேச்சு தொடர, அந்த ‘ப்ளாக் மேஜிக்’ என்ற வார்த்தையிலேயே இருண்டு போனது வேதாவின் முகம்..!

                        ✯✯✯✯✯✯

ஏற்காடு

நேரத்துடனேயே அந்த இடத்திற்கு வந்து விட்டாள் இனியா. முதல் நாள் இரவில் காவலுக்கு வைத்திருந்த அத்தனை போலீஸ் உத்தியோகத்தர்களும் கண் விழித்து தமது கடமையை செவ்வனே நிறைவேற்றி இருந்தார்கள். இதனால் அவர்களது பணி நேரத்தை மாற்றி, அடுத்த ஒரு குழுவை அங்கு அனுப்பி வைத்திருந்தது மேலிடம்.

வாசுதேவனை வேறு ஒரு வேலையாக அனுப்பி வைத்திருந்தவள், தான் மாத்திரம் இங்கு வந்திருக்க காவலுக்கு நின்றிருந்த போலீஸ் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு யாரும் இல்லை அங்கே. 

ஓரளவிற்கு அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக அந்த இடத்தை முந்தைய தினமே சுத்தம் செய்திருந்தார்கள். முதல் நாள் சென்று வந்த பாதையை மனதில் கொண்டு பயணித்தவள், இறுதியாக நேற்றைய தினம் பார்த்திருந்த இரும்பு கேட் முன்பு வந்து நின்றாள். அதன் பூட்டு உடைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்க, அதற்கு முன்பிருந்த முள்வேலியும் ஆள் நுழையும் அளவிற்கு பெயர்க்கப் பட்டிருந்தது. அப்படி பெயர்க்கப் பட்டிருந்த இடத்தில் அநேகமான இரத்தமும் படிந்திருந்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் ஃபாரன்ஸிக் ஆபீஸர் சத்யசீலனுக்கு அழைத்தாள் இனியா.

“குட்மார்னிங் மேடம்… சொல்லுங்க…”

“குட்மார்னிங் சார்… நேத்து ப்ளட் சாம்பிள்ஸ் கிடைச்சுது இல்ல..? அதப் பத்தி கேக்க தான் சார் கால் பண்ணேன்… எதாவது க்ளூ கிடைச்சுதா..?”

“பேஸிக் இன்ஃபர்மேஷன் தான் கிடைச்சிருக்கு மேடம்… தென்றலோட சேலையில இருந்து கிடைச்ச இரத்த மாதிரியும் AB நெகட்டிவ்… அந்த முள் வேலில இருந்து கிடைச்ச மாதிரியும் AB நெகட்டிவ்.‌ மோஸ்ட்லி ரெண்டுமே தென்றலோடதா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம் மேடம்… இன்னும் மூணு நாள்ல அந்த ரிசல்ட் என்னனு நமக்கு தெரிய வந்துடும்… கூடவே இன்னும் ரெண்டு விசயம் இருக்கு மேடம்…”

“ம்ம்… சொல்லுங்க சார்…”

“தென்றலோட சேலை இருந்திச்சு இல்ல..?”

“ஆமா…”

“அதுல ரெண்டு பேரோட கைரேகை பதிஞ்சு இருக்கு மேடம்…”

“க்ரேட்… அப்படீன்னா அந்த ரெண்டாவது கைரேகைக்கு உரிய ஆள் தான் கிட்னாப்பராவோ இல்லன்னா கில்லராவோ இருக்க வாய்ப்பு இருக்கு…”

“ஆமா மேடம்… தொண்ணூறு சதவீதம் அதுக்கான சான்ஸஸ் இருக்கு…”

“ம்ம்… ரெண்டாவது விசயம்..?”

“அந்த முள்வேலிய பிரிச்சு உள்ள போறப்போ ஒரு பெரிய இரும்பு கேட்டோட பூட்டு உடைச்சு இருந்திச்சு இல்ல..?”

“ஆமா… அது முன்னாடி தான் நான் இப்போ நின்னுட்டு இருக்கேன்…”

“ஃபைன்… அது பக்கத்துல ஒரு, மீடியம் சைஸ் கல் இருக்கா..?”

“ஆமா இருக்கு சார்…”

“ம்ம்… அந்த கல்லை தான் பூட்டை உடைக்கிறதுக்கு பயன்படுத்தி இருக்காங்க…”

“ஓஓ… அப்படின்னா அந்த கல்லுல கூட இரத்தம் தோய்ஞ்சு இருக்கணுமே… இதுல சின்னதா ப்ளட் ஸ்பாட் கூட இருக்கற மாதிரி தெரியலையே..‌‌.” என்றாள் இனியா அந்தக் கல்லின் அருகே அமர்ந்து அதனை பார்வையால் தீவிரமாக ஆராய்ந்தபடி.

“அங்க தான் மேடம் ஒரு டர்னிங் பாயிண்ட் இருக்கு… அந்தக் கல்லுல எந்த கைரேகையும் இல்லை… ஆனா பூட்டுல இருந்த, வெற்றுக் கண்ணுக்கு தெரியாத சில ஸ்பெஸிமன்ஸோட இந்த கல்லோட நேச்சர் நிறைய நிறைய ஒத்துப் போகுது… இதை நல்லா அனலைஸிஸ் பண்ணி தான் சொல்லறேன் நான்…”

“அப்படின்னா எப்படி சார் அதுல கைரேகை இல்லாம போகும்..?”

“மே பீ அந்த டைம்ல அவங்க க்ளவுஸ் ஏதாவது அணிஞ்சிருந்து இருக்கலாம் மேடம்…”

‘அப்படின்னா அந்த வேலியை பிரிச்சதும், பூட்டை உடைச்சதும் ஒரே ஆள் இல்லையா..?’ என எண்ணிக் கொண்டே “ஓஓ” என்றாள் இனியா.

“ம்ம்… மேடம், இன்னைக்கு அந்த பூட்டை திறந்து உள்ள போய் பாக்கலாம்னு முடிவு பண்ணி இருந்தோம் இல்ல… நான் இன்னும் அரைமணி நேரத்தில ரெடியாகி என் டீமோட அங்க வந்துடறேன் மேடம்…”

“ஷ்யூர் சார்… பை த வே உங்ககிட்ட இன்னொரு விசயம் கேக்கணும்னு நினைச்சேன்…”

“சொல்லுங்க மேடம்…”

“ஒருத்தங்களோட கைரேகையை வச்சு அவங்களோட ஜென்டரை (பாலினம்) கண்டுபிடிக்க முடியாதா..?”

“முடியாது மேடம்… தோராயமா ஒரு கணிப்பு மட்டும் பண்ணலாமே தவிர எக்ஸாட்டா இது தான்னு சொல்ல முடியாது…”

“ஓஓ ஓகே சார்… இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்கூல் ஸ்டார்ட் ஆகிடும்னு நினைக்கிறேன்… அது ஒண்ணும் பிரச்சினை இல்லை, நம்ம மேனேஜ் பண்ணிக்கலாம்… நம்ம இந்தப் பக்கம் நிக்கறது ஸ்கூலுக்குள்ள இருக்கற யாருக்கும் தெரியப் போறது இல்லை… நீங்க சீக்கிரம் வந்தீங்கன்னா நம்ம இன்னும் டீப்பா இந்த கேஸ்ல மூவ் பண்ணலாம்…”

“ஷ்யூர் மேடம்… இதோ கிளம்பிட்டேன்…”

“சரிங்க சார்…”

என இனியா சத்யசீலனின் அழைப்பை துண்டிக்கவும், வாசுதேவனின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது. 

“ஹலோ சொல்லுங்க சார்… போன விசயம் என்னாச்சு..?”

“எழில் கொஞ்சம் சீரியஸ் கன்டிஷன்ல தான் இருக்காரு மேடம்… ஹெவியா வீஸ் ஆகிட்டு இருக்கு… ஆவி புடிச்சு பாத்தும் சரியாகாம இப்ப ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க…”

“ஓஓ… பாவம் தான் சார் அந்தப் பையன்…”

“ஆமா‌ மேடம்… அப்புறம் அந்தப் பொண்ணு ஆரக்ஷாவோட அப்பா நம்பர ட்ரேஸ் அவுட் பண்ணி பாத்தேன் மேடம்… அவங்க நம்பரும் ஆரக்ஷா காணாம போன அன்னைல இருந்து இன்ஆக்டிவ் தான்… அவங்களோட கால் ஹிஸ்டரி கூட ஆரக்ஷாவுக்கு மட்டும் கூப்பிட்டுருந்த மாதிரி தான் அவுட்கோயிங்ஸ் காட்டுது… ஆரக்ஷாவோ அவளோட அப்பாவோ ஒரே ஒரு சூப்பர் மார்க்கெட் போய் எல்லா திங்க்ஸும் வாங்கிக்கிற மாதிரி தான் தகவல் கிடைச்சுது… அந்த சூப்பர் மார்க்கெட்க்கு போய் சிசிடிவி கூட செக் பண்ணி பாத்துட்டேன் மேடம்… நோ யூஸ்… அவங்க யாருகிட்டவும் எந்த பேச்சும் வளத்துக்கல… அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பாத்துட்டு வந்திருக்காங்க…”

“ஆரக்ஷாவோட அம்மாவ பத்தி விசாரிச்சீங்களா..?”

“ஆமா மேடம்…‌ அவங்கள வெளிய பாக்கிறதே அபூர்வமாம்… அப்படியே வந்தாலும் யாரையும் ஏறெடுத்துக் கூட பாக்க மாட்டாங்களாம்…”

“சரி தான்… ஆங் சார் ஆரக்ஷா அவங்க அப்பா, ரெண்டு பேரோட சிம்மும் எந்த இடத்துல ரெஜிஸ்டர் ஆகி இருக்குனு பாத்தீங்களா..?”

“பாத்தேன் மேடம்… சென்னைல தான் ரெஜிஸ்டர் பண்ணி இருக்காங்க…”

“எப்போனு டேட் செக் பண்ணீங்களா…?”

“ஆமா மேடம்… மிஸ்டர் ரவீந்திரனோடது கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு முன்னாடி எடுத்த சிம்… ஆரக்ஷாவோடது இப்போ ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் எடுத்திருக்காங்க…”

“ஓஓ…‌ ஏதோ அன்டர்கவர் ஆபரேஷன்ல இருக்கற மாதிரி முகத்தைக் காட்டிக்கிட்டே பழகி இருக்காங்க பாருங்களேன் சார்…” கேலியாக சிரித்தாள் இனியா. 

“அதத் தான் மேடம் நானும் யோசிச்சேன்…”

“ம்ம்… அந்த ரெண்டு சிம்மும் ரெஜிஸ்டர் பண்ணின ஐடி ப்ரூஃப் கிடைச்சுதா…”

“எடுத்துட்டேன் மேடம்… இப்போ பேங்க் அவர் ஸ்டார்ட் ஆச்சுன்னா அங்க போகலாம்னு இருக்கேன் அவங்களோட டெப்பாசிட், மணி வித் ட்ராவல் (Money withdrawal) பத்தின விபரங்களை க்ராஸ் செக் பண்ணறதுக்கு…”

“குட் ஜாப் சார்… இங்கேயும் எனக்கு சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைச்சுருக்கு… நீங்க நேர்ல வாங்க நான் எல்லாம் சொல்றேன்…”

“சரி மேடம்… ஆஸ் சூன் இஸ் பாஸிபிள், நான் அங்க வந்திடறேன்…”

“ஷ்யூர் சார்…” என்றவள் ஃபோனை கட் செய்து விட்டு, ஃபாரன்ஸிக் ஆபீஸர் சத்யசீலனின் வருகைக்காக காத்திருக்கலானாள்..!

                        ✯✯✯✯✯✯

                                        – அல்லி மலரும்…

    No comments yet.