Episode 34

ஶ்ரீ துர்க்கா | 02 Mar 2026 | Share

அல்லி 34

அத்திப்பட்டு

சுற்றிலும் கருமையாக படர்ந்திருந்த இருட்டை ஆங்காங்கே நாட்டப்பட்டிருந்த லைட் போஸ்ட்க்கள் விரட்டி அடித்துக் கொண்டிருந்தன. போதாக்குறைக்கு ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் குறைந்தது நான்கு மின்குமிழ்களாவது ஒளியை வாரி இறைத்துக் கொண்டிருந்தன. ஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியபடி அத்திப்பட்டினுள் நின்றிருந்தனர் போலீஸ் உத்தியோகத்தர்கள். அவர்கள் அனைவரையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார் ஜெயந்தன். 

மனதில் அன்பழகன் சொல்லி இருந்த அமானுஷ்ய மேட்டர் சற்று குறுகுறுப்பை ஏற்படுத்தி இருந்தது. விஜயாவின் வீடியோவை அவர் பார்த்திருக்கா விட்டாலும், அன்பழகன் சொல்லி இருந்ததன் படி ஒரு திரைப்படமாக அது மனதில் பதிந்திருந்தது. 

இதனால் திடீரென மின்சாரம் தடைப்பட்டு மின் குமிழ்கள் அணைந்தால், நான்கு நான்கு பேராக் குழுக்களாகி நிற்கச் சொல்லி இங்கிருந்த அத்தனை பேரையும் அலர்ட் எச்சரிந்திருந்தார் அவர். யாரையும் தனிமையில் நிறுத்தி விடக் கூடாது என்பதற்கான ஏற்பாடு அது. அதே போல், மின்சாரம் தடைப்பட்ட பின்னர் ஏதேனும் நடமாட்டம் தெரிந்தால், அவர்களாக முடிவெடுத்து நடந்து கொள்ளாமல், வாக்கிடாக்கியில் தனக்கு தகவல் சொல்ல சொல்லியும் அறிவித்திருந்தார் ஜெயந்தன். தற்காலிகமான மின் வசதிகளுக்காக ஒரு சில மின்சூள்களையும் எடுத்து வந்திருந்தார்.

கிட்டத்தட்ட இரவு பத்து பத்தரை மணி வரைக்கும் ஊருக்குள் எல்லாம் சாதாரணமாக தான் இருந்தது. பத்தே முக்காலில் இருந்து பதினொரு மணி வாக்கில் ஒவ்வொரு வீட்டின் மின்குமிழ்களும் அணைக்கப்பட்டு, தெரு வெளிச்சம் மட்டுக்கு வந்திருந்தது. 

திடீரென ஓர் அசாதாரண சூழல் உருவாகி விட்டதாய் ஒரு மாயை ஜெயந்தனுக்குள். எந்த நேரத்திலும், யாரிடம் இருந்தும் அழைப்பு வரலாம் என்பதற்காக தனது வாக்கிடாக்கியை தயார் நிலையில் வைத்திருந்தார் அவர். எதிர்பார்த்தது போலவே திடீரென கரகரத்தது அவரது வாக்கிடாக்கி.

“சார்… நான் அர்ஜுன் பேசறேன்… இங்க பதினேழாம் நம்பர் வீட்டுக்கு பக்கத்துல யாரோ நடந்து திரியற மாதிரி இருக்கு… நானும் இன்னும் நாலு பேரும் ஒண்ணா தான் நின்னுட்டு இருக்கோம்… நீங்க வர்றீங்களா சார்..?”

“இதோ வந்துட்டே இருக்கேன் அர்ஜுன்…” என்றவர் அடுத்த கணமே கிளம்பி இருந்தார். 

அடுத்து அடுத்து ஒருவர் பக்கத்தில் ஒருவராய் நின்றிருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும், ஆனால் அவர்களது போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை போதாது இருப்பதால் நினைத்தது போல் எதையும் செய்ய முடியவில்லை ஜெயந்தனுக்கு. ஆனால் ஓரளவுக்கு எட்டி விடும் தொலைவில் தான் அவர்களை ஒழுங்குபடுத்தி நிறுத்தி இருந்தார் அவர். 

வேகமாக நடந்து வந்தவர் சொற்ப நிமிடங்களில் அர்ஜுன் குழுவை அடைந்திருந்தார். 

“அதோ அங்க தான் சார்… அந்த வீட்டுக்கு பக்கத்துல எந்த வெளிச்சமும் இல்லை பாருங்க… வெளிச்சம் இல்லாத அந்த இடத்துல தான் யாரோ நடமாடுற மாதிரி இருந்திச்சு…” என மெல்ல கையைக் காட்டி சொன்னார் அந்த அர்ஜுன் என்பவர். 

அவர்களையும் அழைத்துக் கொண்டு, தான் தலைமை பொறுப்பை ஏற்று முன்னோக்கி நடக்க ஆரம்பித்தார் ஜெயந்தன். அதே நேரம் தொடர்பில் இருந்த மற்றவர்களையும் வாக்கிடாக்கியில் அலர்ட் செய்து கொண்டார் அவர். 

மெல்ல நடந்து அந்த வீட்டை அடைந்தவர்களுக்கு அவ்வளவு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை‌. ஐந்து நிமிடங்கள் அந்த இடத்தை சல்லடை போட்டவர்கள் எதையும் காணாது திரும்ப, அவர்கள் கண் முன்னே நின்றிருந்தது அது! 

இப்போது ஜெயந்தன் பின் நின்றிருக்க, மற்றையவர்கள் தான் முன் நின்றிருந்தார்கள். இது தமது கடைசி நொடியாகவும் இருக்கக் கூடும் என நினைத்த ஜெயந்தன், வரட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாக்கிடாக்கியில் படபடவென பொரிந்தார். 

“ஹெட் கான்ஸ்டபிள் ஜெயந்தன் பேசறேன்… நாங்க பதினேழாம் நம்பர் வீட்டுக்கு பக்கத்துல நின்னுட்டிருக்கோம்…”

அவர் பேசப் பேசவே, மற்றவர்களை தள்ளிக் கொண்டு வேகமாக அவரிடத்தில் வந்தது அவரது முடியைக் கொத்தாகப் பிடித்து தூக்க, சடாரென தன் வாக்கிடாக்கியை அர்ஜுனிடம் எறிந்தார் அவர்.

அதை சரியாக கைப்பற்றிக் கொண்டிருந்த அர்ஜுன், “இங்க பெயர் சொல்ல முடியாத அமானுஷ்ய உருவம் ஒண்ணு எங்க முன்னாடி நின்னுட்டு இருக்கு… எங்களுக்கு என்ன ஆனாலும் இந்த செய்தியை மாத்திரம் ஸ்டேஷன்ல சேர்த்துடுங்க…”

அதைத் தொடர்ந்து எத்தனையோ “சார்… சார்…” என்ற குரல்கள் வாக்கிடாக்கியில்.‌ ஆனால் பதில் குரல் தான் அவர்களுக்கு கிட்டவில்லை. 

கிட்டத்தட்ட அடுத்த அரை நிமிடங்களில் எல்லாம் மொத்த போலீஸ் குழாமும் அந்த இடத்தில் கூடி விட்டிருந்தது. அவர்களுக்கு காணக் கிடைத்ததெல்லாம் ஆங்காங்கே சிதறி இருந்த உயிரற்ற உடல்கள் தாம்..!

அர்த்த ராத்திரியில் அத்திப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் பறக்க, முதல் ஆளாக அரக்கப்பரக்க வந்து சேர்ந்தார் அன்பழகன். அவரைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் வந்து சேர அந்த இடமே சற்று அமர்க்களப்பட்டது. அதில் மீண்டும் ஓரிரு வீடுகளில் மின் குமிழ்கள் ஒளிர ஆரம்பிக்க, அங்கிருந்து கொண்டே சில தலைகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தன. 

பேச்சற்ற நிலையில் சிலையாய் சமைந்து போய் நின்றிருந்தார் மாஜிஸ்திரேட் பத்மநாதன். அன்பழகனுக்கு வேதனையும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது. அத்தனை தடவை கெஞ்சியும், எத்தனையாக எடுத்து சொல்லியும் கேட்காமல் இத்தனை உயிர்களை அநாதரவாக விட்டுவிட்டாரே என நினைக்க நினைக்க இயலாமையில் வேதனை படர்ந்தது அவரிடத்தில்.

“சாரி மிஸ்டர் அன்பழகன்…” என்றபடியே தலையில் கை வைத்தபடி அருகில் இருந்த கல்லில் அமர்ந்து விட்டார் பத்மநாதன். 

“நாலு நாள் இந்த கிராமத்துல தங்கி இருந்து சில விசயங்களை நேரடியா அப்சர்வ் பண்ணிட்டு போகலாம்னு வந்தது ஒரு குத்தமா..? இந்த மாதிரியே நடந்துட்டு இருக்கு… இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்… மிஸ்டர் அன்பழகன், ஃபாரன்ஸிக் ஆபீஸர் மிஸ்டர் ஜனரஞ்சன், சீஃப் டாக்டர் மிஸ்டர் தாமோதரன் ரெண்டு பேரையும் உடனடியா சம்பவ இடத்துக்கு அஸெம்பிள் ஆக சொல்லிடுங்க…”

“சரிங்க சார்…” என்ற அன்பழகன் குமுறும் மனதுடனே, அவர்களுக்கு தகவல் சொல்ல கிளம்பி விட்டார். 

“சார்..!” 

அன்பழகன் அந்த பக்கம் செல்ல, இங்கு பத்மநாதனிடம் ஆரம்பித்தார் ஒரு போலீஸ் அதிகாரி.

“சொல்லுங்க..?”

“சாகிறதுக்கு முன்னாடி ஜெயந்தன் சார் வாக்கிடாக்கியில பேசினாங்க… ஏதோ ஒரு அமானுஷ்ய உருவம் அவங்க முன்னாடி நின்னுட்டு இருக்கதாவும், அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு காரணம் அந்த உருவம் தான்னும் சொன்னாங்க… இதை நாங்க எல்லாருமே கேட்டோம்…” என்க அவர்கள் எல்லோரும் ஆமோதிப்பது போல் தலையசைத்தார்கள். 

“அதுவுமில்லாம அவர் பேசிட்டு இருக்கும்போதே ஏதோ பிரச்சினை போல, பாதி விசயத்தை அர்ஜுன் சார் தான் சொன்னாங்க… அதுக்கப்புறம் நாங்க எவ்வளவோ கூப்பிட்டும் அவங்க பேசல… உடனவே இங்க வந்துட்டோம்… ஆனா அதுவே டூ லேட்னு வந்ததுக்கு அப்புறம் தான் புரிஞ்சுது…”

“ஊப்ஸ்…” பெருமூச்சொன்றை வெளியேற்றினார் பத்மநாதன்‌.

“சார் இன்னொரு விசயமும் சொல்லணும்… அதுக்கு இது சரியான இடமான்னு தெரியல…” என இழுத்தார் இன்னொரு போலீஸ் உத்தியோகத்தர். 

“ம்ம்… சொல்லுங்க…”

“பூங்குன்றன் சாரை அன்பு சார் எதுவும் பண்ணி இருக்க மாட்டாங்க சார்… அந்த வழக்கு மாஜிஸ்திரேட்டான உங்ககிட்ட தானே வரும்… எனக்கு ஜனரஞ்சன் சார் எதுக்காக, ‘கோர்ட்ல ஆதாரங்களை சமர்ப்பிக்கிறோம், முடிஞ்சா அவரை சேஃப் பண்ணிக்க பாருங்க’ன்னு உங்ககிட்ட சொன்னாருன்னு புரியல சார்…”

“ஏன்னா நீதிமன்றத்துல மனசாட்சி பேசறத விட ஆதாரங்கள் தான் பேசும்னு அவருக்கு தெரியும்… அதனால மறைமுகமா என்னை எச்சரிக்கற விதமா சொன்னது அது… அதனால தான் நானுமே, இன்னொருத்தங்க தான் கேஸ டீல் பண்ண போறாங்க எங்கிற மாதிரியே அன்பழகனுக்கும் புத்தி சொல்லிட்டு விட்டுட்டேன்… இப்போ இந்த அஞ்சு பேரும் இறந்ததுக்கும் மிஸ்டர் அன்பழகனுக்கும் சம்பந்தம் இல்லாததுனால தான், இன்ஸ்பெக்டர் பூங்குன்றனோட கேஸ் பத்தி இதுக்குள்ள கொண்டு வந்து பேசறீங்கன்னு நினைக்கிறேன்… பரவாயில்லை, ஸ்டேஷன்ல எல்லாரும் இப்படி ஒற்றுமையா இருந்தா நல்லம் தான்… ஆனா இப்ப பிரச்சினை அது கிடையாது இல்ல..?”

“சாரி சார்…”

அரை மணி நேரம் கழித்து அவர்கள் அழைத்திருந்த அத்தனை குழுவும் அங்கு சங்கமித்திருந்தது‌. அடுத்து துரித கதியில் அத்தனை உடல்களும் பரிசோதிக்கப்பட, இப்புறம் நின்று தனது வழுக்கைத் தலையில் முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டிருந்தார் பத்மநாதன்‌. அவரைக் கண்ட மாத்திரத்தில் மரியாதை நிமித்தம் வந்து பேச்சு கொடுத்தனர் எஸ்பியும் டிஎஸ்பியும்.

“சார், நீங்க எங்க சார் இங்க..?”

“அத்திப்பட்டு கிராமத்துல கொஞ்ச காலமா அசாதாரண சூழ்நிலை நிலவுறதா பேசிக்கிட்டாங்க… சரி நம்ம ஜுரிஸ்டிக்ஷன்ல தான வருது, என்னனு நம்மளே கொஞ்சம் நேரடியா பாத்துட்டு வரலாம்னு சாதாரணமா தான் இங்க வந்தேன் சார்… பாத்தா இவ்வளோ பெரிய பிரச்சினை இங்க போய்க்கிட்டு இருக்கு… நேத்து இன்ஸ்பெக்டர், இன்னைக்கு இந்த போலீஸ் உத்தியோகத்தர்கள்… நாளைக்கு நானோ நீங்களோ..? இங்க என்ன நடக்குதுனு எனக்கு ஒண்ணுமா புரியல சார்…”

“சார், ஃபாரன்ஸிக் எக்ஸ்பர்ட் ஜனரஞ்சன் சார் டீல் பண்ணற கேஸ் இது… கண்டிப்பா நம்மளுக்கான க்ளூ அவர்கிட்ட இருந்து கிடைக்கும்… நம்ம சைட்ல இருந்து இத்தனை பேர் இழந்திருக்கோம்னு நினைக்கும் போது தான் சார் ரொம்ப வருத்தமா இருக்கு… அத்தனை பேரும் சின்சியரான போலீஸ் ஆஃபீஸர்ஸ்… இந்த ஊருக்குள்ள என்னென்னமோ நடக்குதுனு நாங்களும் கேள்விப்பட்டோம் சார்‌..‌. ஆனா இப்போ அமானுஷ்யம் ன்னு புதுசா ஒரு புரளிய கிளப்பி விட்டுருக்காங்க…”

“அது புரளி இல்லையோன்னு எனக்கு தோணுது எஸ்பி சார்…” என்றார் இடைமறித்து பத்மநாதன்.

“அப்படின்னா நீங்களும் இந்த கதையை நம்பறீங்களா சார்..?”

“அது நிஜம்ங்கிறதுக்கு இருபது போலீஸ் உத்தியோகத்தர்கள் சாட்சியமா இருக்காங்களே சார்… செத்துப்போன இந்த அஞ்சு பேர் கூட அதுக்கு ஆதாரம் தான்… இவங்க பேசி, முப்பது செக்கனுக்குள்ள மத்த போலீஸ்காரங்க இந்த இடத்துல ஆஜராகி இருக்காங்க, அதுக்குள்ள சாதாரண மனுஷனால அஞ்சு பேர கொல்ல முடியுமா சொல்லுங்க..?”

“நீங்க சொல்லறத என்னால நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல சார்…”

“இன்னைக்கு ஒரு… நாலைஞ்சு மணித்தியாலத்துக்கு முன்னால நானும் உங்களோட மனநிலைல தான் சார் இருந்தேன்… சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் சொல்லும் போது கூட நான் நம்பவே இல்லை. ஆனா அப்போ நான் நம்பி இருந்தா இப்போ இத்தனை உயிரும் போயிருக்காது சார்… நான் சொன்ன பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச முடியாம தான் அவங்க இங்க வந்தாங்க… ரொம்ப மனவருத்தமா இருக்கு… குற்ற உணர்ச்சியா இருக்கு… எப்படி இதுல இருந்து மீண்டு வரப்போறேன்னு தெரியல…”

பத்மநாதன் புலம்பிக் கொண்டு இருக்கும் போதே, டாக்டர் தாமோதரன் அவர்களிடம் வந்தார்.

“சொல்லுங்க டாக்டர்..?”

“சார், ஃபைனல் போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட் வரதுக்கு முன்னாடி என்னோட கெஸஸ் நான் பொதுவா முன் வைக்கிறது இல்லை… ஆனா இந்த கேஸ்ல அப்படி சொல்லாம இருந்தா தப்பாகிடுமோன்னு தோணுது… தெளிவா சொல்லிக்கிறேன் இது என்னோட கெஸ் மட்டும் தான்… உண்மை என்னன்னு ஃபைனல் போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட் வந்தா மட்டும் தான் தெரியும்…”

“பரவாயில்லை டாக்டர் எதுவா இருந்தாலும் சொல்லுங்க… நீங்க சொல்லற சின்ன தகவல் கூட எங்களுக்கு ரொம்ப பெரிய ஹெல்ப்பா இருக்கும்னு உங்களுக்கே தெரியுமே…”

“என்னன்னா, ஒருத்தங்கள அவ்ளோ ஃபோர்ஸா இழுத்து போஸ்ட்ல மோதி தலையை சிதற வைக்கிறதுங்கிறது சாதாரணமான விசயம் இல்லை… இன்ஸ்பெக்டர் சார் அவ்ளோ வீக்கான ஆளும் கிடையாது. அது வேற விசயம்… நான் சொல்ல வந்தது என்னன்னா அவ்வளவு கொத்தா முடியைப் பிடிச்சு இழுக்கும் போது, பிடிச்ச இடத்துல முடி சிக்குப்பட்ட மாதிரியோ, ஒரு சில முடிகள் உடைஞ்ச மாதிரியோ இல்லன்னா ரஃப் ஆன மாதிரியோ இருக்கும்… ஆனா பூங்குன்றன் சாரோட தலைல அப்படி எந்த ஒரு மாற்றமும் தெரியல… அப்பவே இது சாதாரண மனுஷங்க செஞ்ச வேலை மாதிரி தெரியலயேன்னு தோணுச்சு… அன்னைக்கு அதை உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சு அப்பறம் கன்ஃபர்ம் பண்ணாம சொல்ல வேணாம்னு விட்டுட்டேன்… ஆனா இன்னைக்கு பாருங்க, அந்த சுரேஷ்னு ஒருத்தரோட இடது பக்க மார்பில ஆழமா கிழிச்சிருக்குல்ல..? கிட்டத்தட்ட இதயம் வெளிய தெரியற அளவுக்கான ஆழம் அது… ஆனா எந்த ஒரு கூரான ஆயுதமும் அவங்க யூஸ் பண்ணல… நகத்தால கிழிச்ச மாதிரி இருக்கு… மொத்தம் அஞ்சு பேர் வித்தியாசமான முறைகள்ல இறந்துருக்காங்க… ஆனா இதெல்லாம் முப்பது செக்கனுக்குள்ள நடந்திடுச்சுன்னு சொல்றீங்க… ஸ்பாட் போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்டும் அவங்க அஞ்சு பேரும் இறந்தது ஒரே டைமுன்னு தான் காட்டுது… ஃபைனல் போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட் வந்தா தான் மீதி என்னனு தெரியும்… ஒரு ஆளால ஒரே இடத்துல இருக்கற அஞ்சு பேர ஒரே நேரத்துல கொல்லறது சாத்தியமா..? அதுவும் இறந்தவங்க சாதாரண ஆட்கள் இல்லை… வெல் ட்ரெய்ன்ட் போலீஸ் ஆஃபீஸர்ஸ்… கண்டிப்பா இது மனுஷனோட வேலை கிடையாது… இது வேற ஏதோ…”

“வேற ஏதோன்னா நீங்க எப்படி மீன் பண்ணறீங்க டாக்டர்..?”

“மே பீ ப்ளக் மேஜிக்..!”

                       ✯✯✯✯✯✯

                                   – அல்லி மலரும்…

    No comments yet.