அல்லி 33
ஏற்காடு
உயரமாக நடப்பட்டிருந்த அந்த மரக்கம்பத்தில் தற்காலிக மின்னிணைப்பு செய்திருக்க, அந்த இடத்தையே ஒளி மயமாக்கிக் கொண்டிருந்தது அந்த ட்ரிப்பிள் கன் லைட்.
அத்தனை இருட்டிலும் தடயவியல் நிபுணர்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க, ஒரு ஓரமாக நின்றபடி தென்றலின் சேலையையே வெறித்துக் கொண்டிருந்தான் எழில். தென்றலுக்கு முதன் முதலாக அவன் பரிசளித்திருந்த சேலை அது. அதனாலேயே அவளுக்கு அத்தனை பிரியம் அதன்பால்..! அதனால் தானே வருடங்கள் கழிந்து பின்னரும் புதிது போல் அத்தனை கவனமாய் பாவித்திருக்கிறாள் அதனை..?
‘எங்ஙேனும் ஓரிடத்தில் அவள் உயிரோடு இருந்தாலே போதுமானது’ என்ற எழிலனின் அவா கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து, யதார்த்தத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தது.
இங்கு, ‘கலைமகள்’ பள்ளியின் சொல்லப்படாத நுழைவாயிலில் நின்று கொண்டு தன் வாட்ச்சை திருப்பி மணி பார்த்தாள் இனியா.
“சார், டைம் எட்டரை ஆகிடுச்சு… ஃபாரன்ஸிக் ஆஃபீஸர்ஸ் அவங்க வேலையை முடிச்சுட்டாங்கன்னா இனி நம்ம கிளம்பலாம்... இந்த இடத்துக்கு வர்றதுக்கு நம்ம வந்த ஒரு வழியை தவிர, வேற பாதை இருக்கற மாதிரி தெரியல… ஆனாலும் இந்த தனி என்ட்ரன்ஸ் இருக்கற இடத்துக்கும் செப்பரேட்டா ஒரு போலீஸ் ஃபோர்ஸ் போட சொல்லிடுங்க… நாளைக்கு நம்ம இங்க வரும்போது சின்ன குண்டூசி கூட இடம்பெயர்ந்திருக்காத அளவுக்கு டைட்டா இருக்கணும் பாதுகாப்பு…”
“ஷ்யூர் மேடம்… நான் இப்பவே ஏற்பாடு பண்ணிடறேன்…” என்றவர், சொன்னது போலவே ஏற்பாடு செய்தும் விட்டார்.
மேலும் ஒரு மணித்தியாலத்தை செலவழித்த பின்னர், அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தி இருந்த போலீஸ் குழுவை தவிர மீதமிருந்த அத்தனை பேரும் அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள்.
எழிலனை ஒரு போலீஸ் அதிகாரியின் துணையுடன் அனுப்பி வைத்து விட்டு, தடயவியல் நிபுணர்களிடம் ஒரு சில சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே வாசுதேவனுடன் புறப்பட்டிருந்தாள் இனியா.
✯✯✯✯✯✯
அத்திப்பட்டு
பூங்குன்றனின் உடல் தக்க மரியாதையுடன் அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தது. அவரது இறுதிக் காரியங்களை ஜெயந்தனோடு சேர்ந்து முன்னின்று பார்த்துக் கொண்டார் அன்பழகன்.
குடும்பத்தினர் அனைவரதும் கண்ணீரை மாலையாக்கிக் கொண்டு, தனது சொந்த ஊரிலேயே அடக்கமாகிக் கொண்டார் பூங்குன்றன். அன்பழகனின் மனைவியும் மகனும் கூட அங்கு வந்திருந்தனர்.
“எவ்ளோ வேகமா எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு இல்ல சார்… பூங்குன்றன் சாருக்கு இப்படி ஒரு நிலைமைன்னா, அதை என்னால ஏத்துக்கவே முடியல… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்…”
வேலை அனைத்தையும் முடித்துக் கொண்டு கொஞ்சமே கொஞ்சம் அமைதியாகி இருக்கும் போது, அன்பழகனிடம் கமறிய குரலில் சொல்லி இருந்தார் ஜெயந்தன்.
“சார் இப்படி தனியா ஊருக்குள்ள போவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை ஜெயா… இப்போ தான் நினைவுக்கு வருது, நேத்து நைட் சார் என்கிட்ட ஏதோ முக்கியமான விசயத்தை பத்தி பேசணும்னு சொன்னாங்க… நேர்ல தான் சொல்லணும்னு சொன்னாங்க, ஆனா எதைப் பத்தினு ஒரு ஹின்ட் கூட குடுக்கல… ஒரு வேளை இதை பத்தி தான் ஏதும் பேச வந்திருப்பாங்களோன்னு இப்ப தான் தோணுது எனக்கு…”
“இருக்கலாம் சார்… ஏதாவது முக்கியமான விசயத்தை பூங்குன்றன் சார் கண்டுபிடிச்சாங்களா என்னனு தெரியல… அவர் பேச நினைச்ச விசயமும் மண்ணோட மண்ணா அவருக்குள்ளயே புதைஞ்சு போயிடுச்சே சார்…”
“கண்டுபிடிக்கணும் ஜெயா… கண்டிப்பா சாரோட சாவுக்கு காரணமானவங்கள கண்டுபிடிக்கணும்…”
“ஒரு வேளை சாரோட சாவுக்கு காரணம் ஒரு அமானுஷ்யமா இருந்தா..?”
“அப்படின்னா கூட அதை நம்ம கண்டுபிடிச்சு தான் ஆகணும் ஜெயா… ஆதாரம் இல்லாம எதையும் நிரூபிக்க முடியாது நம்மளால… அந்த ஊருக்குள்ள அந்நிய சக்தி ஒண்ணு உலவிட்டு இருக்கறத சிசிடிவி ஃபூட்டேஜ் ஆதாரத்தோட நிருபிக்க முடியும், ஆனா பூங்குன்றன் சாரோட இறப்புக்கு ‘அது’ தான் காரணம்னு நிரூபிக்க நமக்கு சாட்சியங்கள் வேணும். தவிரவும், சாரோட சாவுக்கு அந்த அமானுஷ்யம் தான் காரணம்னு நம்மளுக்குமே உறுதியா தெரியாதே…”
“புரியுது சார்… நம்ம இந்த விசயத்தை பத்தி மாஜிஸ்திரேட் கிட்ட சொல்லிப் பாக்கலாமா சார்..? அவங்க சப்போர்ட் பண்ணினா நம்மளால கொஞ்சம் ஈஸியா மூவ் ஆகிக்க முடியும்…”
“சொல்லிப் பாக்கலாம் ஜெயா… ஆனா நம்புவாங்களா என்னனு தெரியல… எப்படியும் இன்னைக்கு இரவு தான் நம்ம அத்திப்பட்டுக்கு திரும்பறதா இருக்கும்… பத்மநாதன் சார் ஸ்டேஷனுக்கு வந்துட்டு தான் கிளம்புவார்னு நினைக்கிறேன்… அப்படி அவர் ஸ்டேஷனுக்கு வரும்போது இந்த விசயத்தை பத்தி பேசி பாக்கலாம்…”
“சரிங்க சார்…”
அன்பழகன் சொன்னதன்படி அன்று இரவு தான் இழப்பு வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு கிளம்பினார்கள் போலீஸ் உத்தியோகத்தர்கள். தன்னால் அங்கு தங்கி விட முடியா விட்டாலும் கூட, மனைவியை கயல்விழிக்கு துணையாக இருத்தி விட்டு மகனை மட்டும் உறவினர் ஒருவருடன் வீட்டுக்கு அழைத்து செல்ல வழி செய்திருந்தார் அன்பழகன்.
அனைவரும் ஸ்டேஷனுக்கு வந்து சேர்த்திருந்தார்கள். வந்ததும் வராததுமாக அன்பழகனிடம் ஆரம்பித்தார் மாஜிஸ்திரேட் பத்மநாதன்.
“மிஸ்டர் அன்பழகன், நீங்க இன்ஸ்பெக்டர் பூங்குன்றனோட ஃபேமிலி கூட ரொம்ப அட்டாச்ட்னு இன்னைக்கு அங்க இருந்த கொஞ்ச இருந்த நேரத்திலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன்… ஆரம்பத்துல உங்க மேல ரொம்ப கோபம் வந்தது உண்மை தான், ஆனா அவங்க எல்லாரும் சொல்லற மாதிரி இந்த கொலைல நீங்க சம்பந்தப்பட்டிருக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்…”
“ரொம்ப நன்றி சார்…”
“ஆனா சட்டத்துக்கு நம்மள நிரூபிக்கிறதுக்கு ஆதாரம் வேணும்… ஃபைனல் போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட் குடுக்கும் போது அதுல எந்த டைமுக்குள்ள கொலை நடந்திருக்குங்கிறத மென்ஷன் பண்ணி இருப்பாங்க… அந்த டைம்ல நீங்க பூங்குன்றனோட இல்லைங்கிறதுக்கான ஆதாரத்தை நம்ம காமிச்சுட்டாலே போதுமானது… நேத்து நைட் நீங்க ஸ்டேஷன்ல தான் இருந்தீங்களா..?”
“இல்ல சார்… என் ஒய்ஃபும் பையனும் ஒரு பஸ் ஆக்ஸிடன்ட்ல மாட்டிக்கிட்டாங்க… அதனால அவங்கள பாத்துக்கிறதுக்காக ஹாஸ்பிட்டல்ல தங்கி இருந்தேன்…”
“ஓஓ… அப்படின்னா நீங்க அங்க ஹாஸ்பிட்டல்ல தங்கி இருந்ததுக்கான ஆதாரங்களை நம்ம கலெக்ட் பண்ணிக்கலாமே… சிம்பிளா உங்க மேல விழப்போற கறையை துடைச்சுடலாம்… கவலைப்படாதீங்க…”
“சரிங்க சார்… ரொம்ப தேங்க்ஸ் சார்…”
“ம்ம்… ஆனா இன்ஸ்பெக்டர் பூங்குன்றனோட இறப்புக்கு என்ன காரணம்னு நம்ம கண்டுபிடிக்கணும்… அதனால தான் இன்னைக்கு ஜெயா தலைமையிலான ஒரு க்ரூப்பை அத்திப்பட்டுக்குள்ள அனுப்பி, சந்தேகத்துக்கு இடமான ஆளுங்க யாரோடதும் நடமாட்டம் அங்க இருக்கான்னு கண்காணிக்க சொல்லலாம்னு இருக்கேன்…”
“ஐயையோ சார்…”
தன்னை மறந்து கத்தி இருந்தார் அன்பழகன்.
“என்னாச்சு மிஸ்டர் அன்பழகன், ஆர் யூ ஓகே..?”
“இல்ல சார்… இதப் பத்தி நானே உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன்… நம்ம அத்திப்பட்டு கிராமத்துக்குள்ள பெயர் சொல்ல முடியாத ஒரு அமானுஷ்ய உருவத்தோட நடமாட்டம் இருக்கிறதை நானும் பூங்குன்றன் சாரும் ரியலைஸ் பண்ணி இருக்கோம் சார்… அதுக்கு ஆதாரமா காருண்யா எங்கிற ஒரு பொண்ணு வீட்டுல கிடைச்ச சிசிடிவி ஆதாரங்கள் பூங்குன்றன் சாரோட ஃபோன்ல இருக்கு சார்… ஓஓ மை காட், சாரோட ஃபோன் ஃபாரன்ஸிக் கையில போயிடுச்சு இல்ல..? ஆனாலும் மிஸஸ் காருண்யாவோட சிசிடிவி ஆதாரங்களை எடுத்தா அதை என்னால உங்களுக்கு ப்ரூவ் பண்ண முடியும் சார்…”
“வாட் த ஹெல் ஆர் யூ டாக்கிங் மிஸ்டர் அன்பழகன்..? இன்ஸ்பெக்டர் இறந்ததுல உங்களுக்கு சித்தம் பிசகிடுச்சா என்ன… எந்தக் காலத்துல இருக்கீங்க நீங்க..? வேணாம், உங்க மேல நான் நல்ல மரியாதை வச்சிருக்கேன்… அதை தயவு செஞ்சு இந்த மாதிரி எல்லாம் பேசி கெடுத்துக்காதீங்க…”
“சார் ப்ளீஸ், நான் சொல்லறத கொஞ்சம்…”
“இன்னைக்கு ரவுண்ட்ஸ்க்கு நீங்க போக வேண்டாம்… இப்ப ஏதோ அறியாமையால பேசிட்டீங்கன்னு இதை நான் சொல்லல… நீங்க அவங்க கூட போய், மிஸ்டர் பூங்குன்றனோட சாவுக்கு யாரு காரணமோ அவங்க மூலமா இவங்க யாருக்காவது ஏதாவது ஆகிடுச்சுனா, ஆட்டோமேட்டிக்கா திரும்ப உங்க மேல சந்தேகப் புள்ளியை வைப்பாங்க… அது வேணாம்னு தான் ஜெயந்தன் தலைமைல ஒரு ஸ்குவாட்டை அத்திப்பட்டுக்குள்ள அனுப்பி வைக்கலாம்னு நினைச்சேன்… நானே இதை ஹேண்டில் பண்ணிக்கறேன், நீங்க இதுக்குள்ள வராதீங்க…”
“சார் ப்ளீஸ் சார், நீங்க நம்ம அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்தியோட மோதணும்னு நினைக்கறீங்க… இது உயிர் சம்பந்தப்பட்ட விசயம் சார்…”
“மிஸ்டர் அன்பழகன், உங்களுக்கு தான் அவங்க உயிர் மேல அக்கறை இருக்கற மாதிரி பேசாதீங்க… உங்களை விட அவங்களுக்கு ஒண்ணுனா பதில் சொல்ல வேண்டிய இடத்துல நான் இருக்கேன்… அத மறந்துடாதீங்க…”
“சாரி சார்… கூட கூட பேசறேன்னு நினைக்காதீங்க… நீங்க கடவுளை நம்பறீங்க தானே சார். கடவுளை நம்ம கண்ணால காணலங்கிறதால அவரு உண்மை இல்லைன்னு ஆகிட மாட்டாரே… அது மாதிரி தான் சார் இந்த அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட விசயமும்…”
“ஸ்மார்ட்டா பேசறதா நினைப்பா..? கடவுளை நம்பற யாரும் அவர் நேர்ல வந்து என்னை காப்பாத்தினார்னு சொன்னா நம்பறதில்லை அன்பழகன்… நீங்க, கூட கூட பேசறதா நான் நினைக்கல, ஆனா நீங்க அதை தான் பண்ணறீங்க…”
“சார் நான்…”
“இங்க நீங்க மாஜிஸ்திரேட்டா இல்லன்னா நான் மாஜிஸ்திரேட்டா..?”
“நீங்க தான் சார்…”
“தெரிஞ்சா சரி…” என்ற பத்மநாதன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் கிளம்பி விட்டார்.
கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கழித்து, ஒரு குட்டி போலீஸ் குழு அத்திப்பட்டுக்குள் இறங்க தயாராய் நின்றிருந்தது. ஜெயந்தனிடம் கூட அன்பழகன் எவ்வளவோ பேசிப் பார்த்தார், “மாஜிஸ்திரேட் உத்தரவு சார்… நான் எதுவும் சொல்ல முடியாதே..? சரி சார், டைம் ஆச்சு… நான் கிளம்பறேன்…” என சிம்பிளாக முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார் ஜெயந்தன்.
தாவி வந்து ஜீப்பில் ஏறியவர், தனது குழுவினருடன் கிளம்ப தயாராகி விட்டார். அவர் ஏறியதும் கிளம்ப தயாரானது வாகனம். ஓட்டுநர் வண்டியை ஸ்டார்ட் செய்ததும் திரும்பி ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனை பார்த்தார் ஜெயந்தன். சற்று தூரத்தில் அன்பழகன் நின்றிருப்பது தெரிய, கையசைத்து விடை பெற்றுக் கொண்டார் அவர். மெல்லிய குலுக்கலுடன் அத்திப்பட்டின் உட்புறத்தை நோக்கி நகர ஆரம்பித்தது ஜீப்.
ஏதோ அன்று தான் புதிதாக அந்த கட்டிடத்தை பார்ப்பது போல, போலீஸ் ஸ்டேஷன் கண்களுக்கு புள்ளியாய் தெரிந்து, பார்வைப் புலத்தில் இருந்து மறையும் வரை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார் ஜெயந்தன். முதல் நாள் பூங்குன்றனுக்கு இருந்த அதே மனநிலை..! பூங்குன்றன் பார்த்த அதே பார்வை..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.