அல்லி 32
ஏற்காடு
சாதாரண முட்புதர் என நினைத்து உள்நுழைந்த இனியாவுக்கும் வாசுதேவனுக்கும், அவர்களுக்கு முன் இதற்குள் நுழைந்தவர்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை.
“என்ன சார், இதென்ன அவ்ளோ பெரிய காடா..? நம்மளுக்கு முன்னாடி வந்தவங்க எங்க போனாங்கன்னே தெரியலையே…”
“ஆமா மேடம்… இந்த ஏரியாவுல முள்ளு புதர்னு இருக்கிறது தெரியும்… அதை க்ளீன் பண்ண சொல்லி ‘க்ரீன் இன்டியா (Green India)’ நடவடிக்கையும் சமீபத்துல முன்னெடுத்து இருக்கோம்… ஆனா இந்த இடம் இவ்வளோ விஸ்தாரமா இருக்கும்னு நினைக்கல மேடம் நானும்…”
“ம்ம்… அதனால தான் அந்த அம்மா ரொம்ப பயந்துக்கிட்டே வந்திருக்காங்க போல… கண்டிப்பா இப்போ நம்மளோட ஹெல்ப் அவங்களுக்கு தேவையா இருக்கும்… நீங்க இந்தப்பக்கம் போய் பாருங்க வாசு சார்… நான் எதிர்ப்பக்கமா போய் பாக்கறேன்…”
“ஷ்யூர் மேடம்…” என வாசுதேவன் ஒரு புறம் நகர, அடுத்த பக்கத்தை நோக்கி கிளம்பி விட்டாள் இனியா.
அத்தனை அடர்த்தியாய் தாறுமாறாக வளர்ந்து ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு நின்றிருந்தன சில முட்செடிகள். ஓங்கி உயர்ந்து வளர்ந்து வானை முட்டும் அளவிற்கு நின்றிருந்தன சில சமண்டலை மரங்கள்.
அத்தனை மரங்களையும் பிரம்மிப்பாகப் பார்த்தபடியே மெல்ல அந்தப் பாதை வழி நடந்த இனியாவின் கரங்களை சில முட்கள் நன்கு பதம் பார்த்துக் கொண்டன. ஓவர் கோட் அணிந்திருந்தாலும் அதைத் தாண்டியும் ஆங்காங்கே கீறல் பட்டு இரத்தம் கசியத் தான் செய்தது இனியாவுக்கு. ‘மற்றைய பக்கத்தில் வாசு தேவனுக்கும் இப்படித் தான் இருக்கும் போலும்’ என எண்ணிக் கொண்டாள் அவள்.
கொஞ்ச தூரம் நடந்த பின்னர் திரும்பிப் பார்த்தால் சற்று தலை சுற்றத் தான் செய்தது இனியாவுக்கு. இதே நேருக்கு சென்று தேடினால் தேவலாம் தான், ஆனால் கொஞ்சமேனும் இங்கோ அங்கோ நகர்ந்து விட்டால் பாதையை சரியாக மட்டுப் பிடிப்பது கடினம். இப்படி ஒரு இடம் தமது வட்டாரத்தில் இருப்பதே தெரியாமல் இருந்திருந்தது சற்று குற்ற உணர்வையும் தந்தது அவளுக்கு. அந்த உணர்வு அவளது நடையிலும் சற்று தளர்வைக் கொண்டு வந்தது.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் நடந்திருப்பாள். ம்ஹூம் ஆள் அரவமே இல்லை அவ்விடத்தில்.
‘இந்த இடத்தை நம்பி இப்படி தனியா வர்றது சரியா..?’ என நினைத்த மாத்திரத்தில், அவசர அவசரமாக பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை சரி பார்த்துக் கொண்டன அவளது விரல்கள். அதற்கு மேல் அந்தப் பாதையில் நடப்பது அவ்வளவு உசிதம் இல்லை என்று தோன்ற, அதன் பின்னர் அடி எடுத்து வைக்காது வாசுதேவனுக்கு அழைக்கும் நோக்குடன் தனது மொபைலை எடுத்தாள் இனியா.
சரியாக அந்த நேரத்தில் நூறு ஆயுசாக வந்து சேர்ந்தது வாசுதேவனின் அழைப்பு. இனியா அழைப்பை ஏற்று, ‘ஹலோ…’ என்ற வார்த்தையை உதிர்க்க முன்னரே அவசர அவசரமாக காதில் வந்து விழுந்தது வாசுதேவனின் வார்த்தைகள்.
“மேடம் சீக்கிரம் இந்தப் பக்கம் வாங்க… அந்தப் பையனை தேட வேண்டாம்… இப்போ தான் அவனோட அம்மாவும், ஊர் ஆளுங்களும் அந்தப் பையனை அழைச்சுட்டு போறதை நான் பாத்தேன்… சீக்கிரம் நீங்க இங்க வாங்க…”
“இதோ வந்துட்டே இருக்கேன் சார்…” என தனக்கும் தொற்றி விட்ட பரபரப்புடன் சொன்னவள், எதிர்த் திசையில் திரும்பி வேக எட்டுக்களை எடுத்து வைத்தாள்.
ஓட்டமும் நடையுமாக வந்தும் வாசுதேவனை அடைய அவளுக்கு இருபது நிமிடங்கள் தேவைப்பட்டன. உண்மையில் அத்தனை பெரிய வட்டாரம் தான் அது. அங்கு வந்து சேர்வதற்குள்ளாகவே பாதை சரியா, தவறா என ஏகப்பட்ட குழப்பங்கள் இனியாவினுள்.
“என்னாச்சு சார்… ரொம்ப பதற்றமா பேசுனீங்க… ஏதாவது பிரச்சனையா…”
“ஆமா மேடம்… இப்படி வாங்க…” என அவளை அழைத்துக் கொண்டு அந்த புதர்களையும், பெரு மரங்களையும் மெல்ல விலக்கியபடி தாண்டி நடந்தவர் குறிப்பிட்ட ஒரு இடத்தை கை காட்ட அந்த இடத்தைப் பார்த்து அதிர்ச்சியில் விரிந்தன இனியாவின் உருண்டை விழிகள்.
இருவரும் கிட்டச் சென்று பார்க்க, பாதி கிழிந்தும் கிழியாமலும் சற்றே நிறம் மங்கிப் போய் மரம் ஒன்றில் சிக்கி பறந்து கொண்டிருந்தது சேலை ஒன்று. சற்று இளம் பச்சையும் நீலமும் கலந்த மாதிரியான அந்த சேலையைப் பார்த்து சட்டென மின்னல் வெட்ட திரும்பி வாசுதேவனை பார்த்தாள் இனியா.
‘ஆம்’ என்பதாய் கண்களை அழுந்த மூடித் திறந்தவர், “இது கெஸ் மட்டும் இல்லை மேடம்… இந்த சேலையை போட்டோ எடுத்து மிஸ்டர் எழிலுக்கு வாட்ஸப் பண்ணி கூட கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்… தென்றல் காணாம போன அன்னைக்கு கட்டியிருந்த சேலை இது தானாம்..!”
“ஓஓ… அப்படீனா எழில் இப்போ வர்றாங்களா இங்க..?”
“ஆமா மேடம்… ஃபோன் பேசறப்பவே கிளம்பிட்டாங்க… வெளிய எங்கேயோ போய் இருந்தாங்க போல… இப்போ இங்க தான் வந்துட்டிருக்காங்க…”
“சரி சார்… மத்தபடி போலீஸ் டிப்பார்ட்மென்ட்க்கு தகவல் சொல்லியாச்சா..?”
“இன்னும் இல்லை மேடம்… உங்க கிட்ட ஃபர்ஸ்ட் சொன்னதுக்கப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்… அவசரத்துல எழிலுக்கு தான் வாட்ஸ்அப் பண்ணிட்டேன்…”
“பரவால்ல சார்… ப்ரொஸீஜர் அது தானே..? சீக்கிரம் மாஜிஸ்திரேட்க்கும் டிஎஸ்பிக்கும் தகவல் சொல்லிடுங்க… ஃபாரன்ஸிக் ஆளுங்களையும் கூப்பிட்டுக்கலாம்…”
“ஷ்யூர் மேடம்…” என அவளில் இருந்து சற்றுத் தள்ளி சென்றவர், ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தார்.
“மேலிடத்துக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன் மேடம்… ஃபாரன்ஸிக் பீப்பிளும், போலீஸ் ஃபோர்ஸூம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க…”
“சரி சார்…”
அவர்கள் அந்த இடத்தை சுற்றி வரப் பார்த்து விட்டு, பேசிக் கொண்டிருக்கும் போதே கேட்டது போலீஸ் ஜீப்பின் சைரன் ஒலி.
“வந்துட்டாங்கன்னு நினைக்கறேன் மேடம்… நான் போய் கூட்டி வரேன்…” என்றவர் இனியாவின் அனுமதியுடன் வெளியேற, சற்று அண்மையில் சென்று அந்த சேலையைப் பார்த்த வண்ணம் இருந்தாள் இனியா. அதன் ஒருமுனை மரமொன்றில் சிக்கியிருக்க, மறுமுனை பிடிமானம் இன்றி காற்றில் பறந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே திட்டு திட்டாய் இரத்தமும் படிந்து உறைந்து போய் இருக்க, அதிலிருந்து லேசான மெட்டல் வாடையும் வந்து கொண்டிருந்தது. அருகில் சென்று நோட்டம் விட்டாலும், கவனமாக சாட்சியங்கள் எதுவும் கலையாமல் பார்த்துக் கொண்டாள் அவள். அப்படியே அந்த இடத்தில் நின்று சுற்று முற்றும் பார்த்தவளின் பார்வை சற்றே சுருங்கியது.
போலீஸ் உத்தியோகத்தர்கள் காடு மாதிரி இருந்த அந்த இடத்தை தனிமைப்படுத்தி அதனுள் பொதுமக்கள் யாரும் நுழையாதவாறு பார்த்துக் கொண்டார்கள்.
வாசுதேவன், வந்திருந்த தடயவியல் நிபுணர்களை அழைத்துக் கொண்டு உள்ளே வர, அதற்கு ஏதுவாக அந்த முட்புதர்களை ஓரளவு வெட்டி அகற்றி உதவினார்கள் இரு போலீஸ் உத்தியோகத்தர்கள். எல்லாவற்றுக்கும் முதலே சொல்லி, தக்க ஏற்பாட்டுடன் தான் அவர்களை அங்கே அழைத்திருந்தார் வாசுதேவன்.
அவர்கள் அங்கு வந்து சேர்ந்த போதும் கூட அதே நிலையில் தான் இருந்தது தென்றலின் சேலை. தடயவியல் நிபுணர்கள் அந்த இடத்தை சுற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து இருக்க, இனியாவை அங்கு காணாது திகைத்தார் வாசுதேவன்.
அவர் அவளைப் பற்றி எண்ணியபடி இருக்க, அவளிடமிருந்தே அழைப்பு வந்தது அவருக்கு.
“சொல்லுங்க மேடம்…”
“சார், நானும் நீங்களும் தென்றலோட சேலையை பாத்தோம் இல்ல..? அந்த மரம் இருந்த அதே நேருக்கு முன்னோக்கி வாங்க… சீக்கிரம்…”
“சரிங்க மேடம்… ஒண்ணும் பிரச்சினை இல்லையே..?”
“எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை சார்… நீங்க இங்க வந்தா உங்களுக்கே புரியும்…”
“சரிங்க மேடம்…” என இணைப்பைத் துண்டித்தவர், அவள் சொன்ன உடனேயே முன்னோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார். ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தவர் இனியா ஓர் இடத்தில் தேங்கி நிற்பதைப் பார்த்து அவள் அருகில் வந்தார்.
“என்னாச்சு மேட…” என கேட்க வந்தவர், முன்னிருந்த அந்த பெரிய கட்டிடத்தைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றார்.
“இது என்ன இடம்னு தெரியுதா சார்..?”
“மேடம் இது நம்ம ‘கலைமகள்’ ஸ்கூல் தானே..? என்றார் வாசுதேவன் ஆச்சரியம் விலகாதவராய்.
“ஆமா சார்… இப்படி ஒரு என்ட்ரன்ஸ் இந்த ஸ்கூலுக்கு இருக்குங்கிறத பத்தி நம்மகிட்ட மூச்சு கூட விடல பாத்தீங்களா..?”
“அதான் மேடம். நம்ம ஸ்கூல சுத்தி வரப் பாத்தப்போ நம்ம கண்ணுலயும் இந்த என்ட்ரன்ஸ் சிக்கலயே..?”
“இல்ல சார்… உள்ள இருந்து பாத்தா யாருக்கும் தெரியாத மாதிரி தான் சுவர் எழுப்பி இந்த பாதையை மறைச்சிருக்காங்க… எதுக்கு இப்படி இந்த என்ட்ரன்ஸ முள்வேலி போட்டு மூடி வச்சிருக்காங்கன்னு தான் தெரியல… ஆனா இந்த இடத்துல ஒரு ஆள் போற அளவுக்கு வேலியை நகர்த்தி இருக்காங்க… இந்த கேட்டோட பூட்டு எப்படி இருக்குன்னு பாருங்க சார்… ரொம்ப பழசாகி துருப்பிடிச்சு போய் இருக்கு… ஆனா அந்த பூட்டை யாரோ உடைச்சு இருக்காங்க…”
“மே பீ அது தென்றலா இருக்குமா மேடம்…?”
“இல்லை சார்… என்னோட கருத்துப்படி அது தென்றலா இருக்க வாய்ப்பு இல்லை… ஏன்னா ஏதோ ஒரு அவசர நிலைமைல தான் தென்றல் இந்தப் பக்கம் வந்திருக்கணும்… மே பீ யாராவது துரத்தும் போது ஓடி வந்திருக்கலாம்… இல்லன்னா தன்னோட மானத்தை தற்காத்துக்கிறதுக்காக ஓடி வந்திருக்கலாம்… அப்படி அவசரமா வர்றவளுக்கு இந்த முள்வேலியை பிரிச்சு, பூட்டை உடைச்சு உள்ள போறதுக்கு எல்லாம் அவகாசம் இருந்திருக்காது இல்லை சார்…”
“சரி தான் மேடம்…”
“எழிலன் வந்துட்டாங்களா..?”
“நான் இங்க வரும்போது அவங்க வந்திருக்கல… ஆனா இந்நேரத்துக்கு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் மேடம்…”
“சரி… நம்ம இந்த இடத்தை இன்னும் கொஞ்சம் பாத்துட்டு கிளம்பலாம்… ஃபாரன்ஸிக் வந்துட்டாங்க தானே, இல்லையா..?”
“வந்துட்டாங்க மேடம்…”
“அப்போ அவங்கள இந்த இடத்தையும் வந்து பாக்க சொல்லுவோம்… இந்த இடத்தை க்ரைம் சீனா அறிவிச்சு, சீல் பண்ணிடுங்க சார்… சீன் ஆஃப் க்ரைம் பாக்கும் போது, எல்லாமே பிளான் பண்ணாம எதேச்சையா நடந்த மாதிரி தான் தோணுது… இதனால குற்றவாளியோ இல்லன்னா பாதிக்கப்பட்டவங்களோ கண்டிப்பா நம்மளுக்கான தடயத்தை ஏதோ ஒரு விதத்துல விட்டுட்டு தான் போய் இருப்பாங்க… நல்ல தரோவா அனலைஸ் பண்ணுவோம்… கண்டிப்பா நம்மளுக்கான எவிடென்ஸ் இங்க கிடைக்கும் சார்…”
“நிச்சயமா மேடம்… இப்போ தான் இந்த கேஸுக்கான பிடிமானமே கிடைக்க ஆரம்பிக்குது… கூடிய சீக்கிரம் குற்றவாளியை நெருங்கிடுவோம்னு நம்பறேன் மேடம்…”
வாசுதேவன் ஆணித்தரமாக சொல்ல, இனிமையாய் புன்னகைத்துக் கொண்டாள் இனியா..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.