அல்லி 31
ஏற்காடு
வாசுதேவன் கொடுத்திருந்த அத்தனை தகவல்களையும் ஆழமாக ஆராய்ந்து கொண்டிருந்தன இனியாவின் கூர் விழிகள்.
கடந்த ஆறு மாத காலங்களாக அந்த எண்ணிற்கு உள் வந்திருந்த அழைப்புகள், அந்த எண்ணிலிருந்து வெளிச் சென்றிருந்த அழைப்புகள், கால் டியூரேஷன் அத்தனையும் ஒன்று விடாமல் அப்டேட் செய்திருந்தார்கள்.
“கடந்த ஆறு மாத காலத்துல அந்தப் பொண்ணோட ஃபோனுக்கு மொத்தமா பத்தே பத்து கால் தான் சார் வந்திருக்கு… அதுலயும் எல்லாம் இன்கமிங் தான், அவுட் கோயிங் எதுவும் இல்லை… முதல் நாலு கால்ஸும் ரவீந்திரன்னு அவ அப்பாவோட பேர்ல வந்து இருக்கு… குறிப்பா கடைசி ரெண்டு மாசத்துல அவளுக்கு வந்த ஆறு கால்ஸ்ல மூணு கால்ஸ் நம்மளோடது மத்த ரெண்டு கால்ஸ் அவளோட க்ளாஸ் டீச்சர் ஶ்ரீமதியோடது… ஒரே ஒரு கால் மாத்திரம் தென்றலோடது… அதுவும் தென்றல் காணாம போறதுக்கு ரொம்ப நாள் முன்னாடி தான் பேசி இருக்காங்க… ஆரக்ஷாவோட ஸ்டேஜ் ப்ரோக்ராமுக்கு கிட்டின டேட்டும் இல்லை… அதுக்கும் முன்னாடி தான் பேசி இருக்காங்க…”
“ஆமா மேடம்… நானும் அதை நோட் பண்ணேன்… அப்படி அந்த ஒரே ஒரு கால்ல அவங்க என்னதான் பேசி இருப்பாங்க… ஸ்கூல்ல வேற யாருக்கும் தெரியாம, இந்த ரிலேஷன்ஷிப்பை சீக்ரெட்டா மெய்ன்டெய்ன் பண்ணிக்கிட்டதுக்கு என்ன காரணம்.. ஆரக்ஷாவோட குடும்பம் எங்க போச்சு… நம்ம கூட கொஞ்சம் முன்னாடி பேசுன பையன் சொன்னது உண்மைன்னா, அவ ஃபோன் ரோட்டோரத்துல கிடந்திருக்கு… அதை அவங்களே மிஸ் பண்ணிட்டாங்களா, இல்லன்னா வேணும்னே தான் ஸ்விட்ஜ் ஆஃப் பண்ணி போட்டாங்களா, இல்லன்னா யாராவது திருடப் போய் பிரச்சினை ஆச்சா, அதுவும் இல்லன்னா அந்த ஆரக்ஷா பொண்ணையும் கடத்திட்டாங்களா… இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருக்கு மேடம் எனக்குள்ள… ஆனா இதுல இன்னும் ஒரு விசயமும் இருக்கு மேடம், தென்றலும் ஆரக்ஷாவும் அடிக்கடி ஃபோன்ல பேசிக்கல… தென்றல் ஸ்கூலுக்கு வந்த மூணு மாசத்துல, லாஸ்ட் டூ மன்த்ஸ்ல ஒரே ஒரு வாட்டி தான் ஆரக்ஷாவுக்கு கால் பண்ணி இருக்கா… அதே நேரம் ஆரக்ஷா தென்றலுக்கு ஒரு தடவ கூட கால் பண்ணல… அப்படி பார்த்தா இது அவ்ளோ சீரியஸ் பாண்ட் இல்லையோ, ஏதாவது தேவைக்காக மட்டும் பேசி பழகி இருப்பாங்களோன்னும் நினைக்கத் தோணுது மேடம்…”
“ம்ம்… நீங்க சொல்லற மாதிரி கூட இருக்கலாம் சார்… தென்றலோட கால் ஹிஸ்டரி எடுக்கறதுக்கு திரும்ப முயற்சி பண்ணி பாக்க சொன்னோம் இல்ல..? கன்ட்ரோல் ரூம்ல இருந்து சாதகமான தகவல்கள் ஏதாவது கிடைச்சுதா..?”
“இல்லை மேடம்… எத்தனை வாட்டி ட்ரை பண்ணினாலும் தென்றலோட இன்கம்மிங்ஸ் அன்ட் அவுட்கோயிங்ஸ ட்ரேஸ் அவுட் பண்ண முடியலன்னு தான் சொல்லிட்டு இருக்காங்க…”
“தென்றலோட ஃபோன் லாஸ்ட் லொக்கேஷன் கண்டுபிடிக்க முடிஞ்சுதுன்னா, அவங்களோட கால் ஹிஸ்டரியை ஏன் கண்டுபிடிக்க முடியாம இருக்கு சார்..?”
“இந்த மாதிரியான சந்தர்ப்பங்கள் அமையறது ரொம்ப ரொம்ப குறைவு தான் மேடம்… ஆனா சில வழக்குகள்ல இந்த சிக்கல் இருக்குன்னு தான் எக்ஸ்பர்ட்ஸ் சொல்றாங்க…”
“என்ன காரணங்களால அப்படி கண்டுபிடிக்க முடியாம போகும்னு சொன்னாங்களா..?”
“சொன்னாங்க மேடம்… லொக்கேஷனை ட்ராக் பண்ணறதும், கால் ஹிஸ்டரியை கண்டுபிடிக்கறதும் வேற வேற சிஸ்டம்ஸ்… டவர் மூலமாவோ அல்லது ஜிபிஎஸ் மூலமாவோ ஒரு ஃபோனோட லொக்கேஷன் கண்டுபிடிச்சிடலாம்… பட் அந்த மொபைலோட கால் ஹிஸ்டரி கண்டுபிடிக்கணும்னா சர்வீஸ் ப்ரொவைடர் ரெக்கார்ட் கிளியரா இருக்கணும்னு சொன்னாங்க… அப்படி எல்லாம் சரியா அமைஞ்சாலும் அந்த ஃபோனோட சிம்ம ஃபோன்ல இருந்து ரிமூவ் பண்ணி இருந்தாலும் இந்த மாதிரி ஹிஸ்டரி கிடைக்கிறது கஷ்டமா இருக்கும்னு சொல்லறாங்க… பட் கோர்ட் ஆர்டர் இருந்தா, சர்வீஸ் ப்ரொவைட் பண்ணவங்க கிட்ட இருந்து அந்த டீடெயில்ஸ் எடுத்துக்கலாம்னு சொல்லுறாங்க மேடம்…”
“அப்போ நம்ம அதைத் தான் பண்ணணும் சார்… பொதுவா கால் ரெக்கார்ட்ஸ் மூணு மாசம் டூ ஆறு மாசம் அளவில தான் வச்சிருப்பாங்க… அதுக்குள்ள நம்ம கோர்ட் ஆர்டர் எடுத்து அந்த ஹிஸ்டரியை எடுத்துக்கணும்… பரவால்ல, அத நான் பாத்துக்கறேன்… இப்போ இந்த விசயத்துக்கு வருவோம்… இன்னைக்கு நம்ம கூட பேசின அந்தப் பையன் அந்தோனியார் சர்ச் வட்டாரத்துல இருந்து தான் பேசி இருக்கான் எங்கிறத இந்த கால் ஹிஸ்டரியே உறுதிப் படுத்துது இல்லையா..?”
“ஆமா மேடம்… ஆனா அதுக்கப்புறம் அவன் எங்க போனான், என்ன ஆனான்னு எதுவும் தெரியல… நம்ம இன்ஃபார்ம் பண்ணி அடுத்த அஞ்சு நிமிஷத்துக்குள்ள எல்லாம் மிஸ்டர் தமிழ் அங்க ஆஜராகிட்டார் மேடம்… அதுக்குள்ள அவங்க அங்க இருந்து, யார் கண்ணுலயும் படாம கிளம்பி போறது இம்பாஸிபிள்”
“அப்படின்னா வேணும்னே நம்மள திசை திருப்ப பாக்கிறாங்கன்னு நினைக்கிறீங்களா சார்..?”
“உறுதியா சொல்ல தெரியல மேடம்… ஆனா 99 சதவீதம் அவங்க நம்மள திசை திருப்ப நினைக்கிறாங்கன்னு தான் தோணுது…”
“ஹூம்… சார், வந்து காரை எடுங்க… நாம ஒரு திரும்ப ஒரு தடவை ‘கலைமகள்’ ஸ்கூலுக்கு போலாம்… அங்க இருந்து தென்றல் நடந்து வீட்டுக்கு வர்ற பாதை இருக்குல்ல..? அந்தப் பாதை வழியா நடந்து வந்து பாக்கலாம்… முதல்ல இன்வெஸ்டிகேட் பண்ணும் போது மிஸ்ஸான ஏதாவது விசயங்கள் கூட இந்த தடவை தட்டுப் படறதுக்கு வாய்ப்பு இருக்கு… அதுவும் இல்லாம நாம கார்ல தானே அந்த இடத்தை ஃபாலோ அப் பண்ணிட்டு வந்தோம்… மே பீ நடந்து வரும்போது நம்மளோட பார்வைக் கோணம் மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு… இன்னைக்கு எதுவும் கண்டுபிடிக்க முடியலன்னா இதே மெதட்ட நாளைக்கு மார்னிங்கும் ட்ரை பண்ணி பாக்கலாம்…”
“சரிங்க மேடம்…” என்ற வாசுதேவன், மறுதலிக்காமல் வண்டியை கிளப்பினார். மாலை நேரம் மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக இரவு நேரத்தை தொட்டிருந்ததால் பள்ளியில் வாட்ச்மேன் மட்டும் தான் நின்றிருந்தார். ஏற்கனவே இனியாவும் வாசுதேவனும் அங்கு வந்து சென்றிருந்ததால், சட்டென ஓடி வந்து வாயில் கதவை திறந்தார் அவர். காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, அவரிடம் விடயத்தை சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள் இருவரும்.
இருவரும் மூச்சு பேச்சு எதுவும் இன்றி பாதையைத் தான் ஆராய்ந்தபடி நடந்து கொண்டிருந்தார்கள். அந்த மெளனத்தை முதலில் கலைத்தது வாசுதேவன் தான்.
“மேடம் நம்ம பாதி வழி தான் கடந்து வந்திருக்கோம்னு நினைக்கறேன்… இப்பவே பத்து நிமிஷம் ஆச்சு, இங்க இருந்து இன்னும் பத்து நிமிஷம் நடந்தா தான் தென்றலோட வீட்டுக்கு போய் சேர முடியும்… இருபது நிமிஷம் நடந்து தான் வீட்டுக்கு போய் சேரணும்னு தென்றலுக்கு எந்த வேண்டுதலும் இல்லையே… அதுக்கு ரீசனா அவங்களுக்கு வாக்கிங் ரொம்ப பிடிக்கும்னு சொல்றாங்க… அதை என்னால அவ்ளோவா ஏத்துக்க முடியல மேடம்… அதுவுமில்லாம அன்னைக்கு நாலரை மணி வரைக்கும் இந்த என்வயர்ன்மென்ட்ல தான் தென்றல் இருந்திருக்கா… அவளைத் தேடி எழில் மூணரை மணி வாக்கில வந்ததா சொல்றாரு…. அப்போ அவரு கண்ணுல படாம தென்றல் எங்க போய் இருப்பா..? எனக்கு என்ன தோணுதுன்னா, தென்றல் காணாம போனதுல அவ குடும்பத்துக்கு அதாவது மிஸ்டர் எழிலனுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு…”
வாசுதேவன் கூறியதைக் கேட்ட இனியாவின் முகம் யோசனையில் சுருங்கியது.
“இப்ப வரைக்கும் எனக்கு அவர் மேல அவ்ளோவா சந்தேகம் வரல சார்… ஆனா, நம்ம யாரையும் நம்ப முடியாது இல்லையா..? நீங்க சொல்றது போல பாக்கிறதுன்னா அவர் மேல ஒரு சந்தேக கண்ணை வச்சுக்கலாம்… அவங்களை கண்காணிக்கிறதுக்கு ஒரு ஸ்பையை கூட வச்சுக்கலாம்… ஆனா அவர் வீட்டை விட்டு வெளியவே வர்றது இல்லை போலயே… வேலையைக் கூட ரிசைன் பண்ணிட்டதா தானே நமக்கு விசாரணைல தெரிய வந்திருக்கு… சரி பாக்கலாம்… எல்லாம் ஒரு கெஸ் தானே…”
இவர்கள் பேசிக் கொண்டே செல்ல, கண்களில் கண்ணீருடன் பதைபதைத்து ஓடி வந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவர் பின்னே இரண்டு மூன்று இளம் வயதினரும் வந்து கொண்டிருக்க, “என்னாச்சு..?” என அவர்களை விசாரித்தார் வாசுதேவன்.
“என் பையனுக்கு ஆறு வயசு சார்… ஒண்ணாவது படிக்கிறான்… ஒவ்வொரு நாளும் நான் வாங்கிக் குடுக்கிற பென்சிலை தொலைச்சுட்டு வீட்டுக்கு வர்றான்னு இன்னைக்கு கொஞ்சம் அடிச்சிட்டேன் சார்… அதுக்குன்னு கோபத்துல போய் வெளிய நின்னுக்கிட்டான்… அது வழமை தான்ங்கிறதால நான் பெருசா கண்டுக்கல… இப்போ பாத்தா என் பையன காணோம் சார்… பயந்து போய் வெளிய ஓடி வந்து பாத்தப்போ தான் குல சாமி மாதிரி பக்கத்து வீட்டுப் பொண்ணு ஒண்ணு வந்து, ‘ஆன்டி, க்ருஷ் காட்டுப் பக்கமா போறான்… சீக்கிரம் போய் கூட்டிட்டு வாங்கன்னு சொன்னுச்சு… அதான் இந்தப் பசங்களயும் கூட்டிக்கிட்டு ஓடி வந்துட்டு இருக்கேன் சார்…”
நிதானமாக நின்று பதில் சொல்லும் அளவிற்கு பொறுமை இல்லை அவரிடம். ஆனால் இவர்களது தோற்றத்தை வைத்தே போலீஸ் என்பதை கண்டு கொண்டு பதில் அளித்தார் அந்த பெண்மணி.
“காடா… இங்க எந்தப் பக்கம் காடு இருக்கு..?”
“இதோ, இது தான் சார்…” என அவர்களுக்கு வலது புறம் இருந்த வளாகத்தை சுட்டிக் காட்டினார் அந்த யுவதி. உண்மைக்கும் மரங்கள் எல்லாம் அடர்த்தியாக வளர்ந்து பார்க்க பயங்கரமாகத் தான் இருந்தது அந்தப் புறம். சற்று பெரிய பரப்பும் தான். ஆனாலும் ‘காடு’ என்று சொல்வது அபத்தமாகத் தோன்றியது இனியாவுக்கு.
“எதும்மா, இது தான் நீங்க சொல்லற காடா..?” என்றவள் குரலில் சற்றுக் கேலியும் இழைந்தோடியது தான்.
“மேடம்… உங்களுக்கு பார்க்கிறதுக்கு ரொம்ப சாதாரணமா தெரியுது… உள்ள போய் பார்த்தீங்கன்னா தான் தெரியும் இந்தக் காடு உங்கள எப்படி சுத்தல்ல விடும்னு… பெரியவங்களே இந்தப் பக்கம் வரப் பயப்படுவோம்…” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மற்றவர்கள் உள்ளிறங்கி தேட ஆரம்பித்து விட்டார்கள். அந்தப் பெண்ணும் அதற்கு மேல் அவர்களிடம் நின்று வாதாடிக் கொண்டிருக்காமல் அந்த முட்புதர்களுக்குள் நுழைந்து கொண்டாள். சிறிது நேரத்தில் அவர்களது பார்வைப் புலத்தில் இருந்து மறைந்தும் இருந்தாள்.
“மேடம், நாங்களும் இதுல இப்போ இன்வால்வ் ஆகிறது தான் கரெக்ட்… இல்லன்னா இந்த சின்ன விசயத்தை ஊதி ஊதி, போலீஸ்காரங்களுக்கு பொது மக்கள் மேல அக்கறையே இல்லைங்கற மாதிரி திரிச்சு விட்டிடுவாங்க…”
“நீங்க சொல்றது சரி தான் சார்… ஆனா பாருங்க, உள்ள இறங்கி அஞ்சு பத்து நிமிஷத்துல எல்லாம் அந்த குட்டிப் பையனை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துடலாம்… அது அவங்களுக்கும் தெரியும்… இருந்தாலும் நீங்களும் நானும் இதுக்குள்ள நுழைஞ்சே ஆகணும்னு நினைப்பாங்க அவங்க… சரி வாங்க, போய் ஒரு பார்வை பாத்துட்டு வந்துடலாம்…”
இருவரும் தென்றலின் நினைப்பை சற்று நேரம் கிடப்பில் போட்டு விட்டு அந்த முட்புதர்களுக்குள் உள் நுழைந்தனர். ஒரே ஒரு நிமிடம் மாத்திரம் உள்நோக்கி நடந்திருந்த இருவரது பார்வைகளும் ஒரு முறை அதிர்ச்சியில் சந்தித்துக் கொண்டன..!
✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.