அல்லி 30
அத்திப்பட்டு
வாழ்க்கையில் முதல் தடவையாக அத்திப்பட்டை மிதித்திருந்த இன்ஸ்பெக்டர் பூங்குன்றனின் மனைவி கயல்விழி, இனி எப்போதும் அந்த கிராமத்தை ஏறெடுத்தும் பார்க்க முடியாத மனநிலையில் சோர்ந்து விழுந்திருந்தாள். அழுது அழுது ஓய்ந்து போய் இருந்தவளை ஆற்றுப் படுத்தவே முடியாமல் திண்டாடிப் போனார் அன்பழகன்.
என்னதான் தங்கை என்று அவளை விளித்து இருந்தாலும், அணைத்துக் கூட ஆறுதல் சொல்ல முடியாத நிலைமை அவருக்கு. இந்த நேரத்தில் அவரது மனைவியும் இங்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது, கயல்விழியைத் தோள் கொடுத்து தேற்ற ஒரு உறவாவது அங்கு இருந்திருக்கும். பெண்கள் அத்தனை பேரையும் அங்கிருந்து அனுப்பி இருக்க, அவளுக்கு உறுதுணையாக ஆண்கள் மட்டுமே அங்கு இருந்து கொண்டார்கள். கூடவே அவளுக்கு வலிப்பு வந்திருந்ததால் அவரது குடும்ப மருத்துவர் மூலம் நியமிக்கப்பட்டிருந்த ஆண் தாதி ஒருவரும் அவளுடன் உறுதுணையாக நின்று கொண்டார்.
ஊருக்குள் தகவல் சொல்லக் கூட திராணி இல்லாது, வலிப்புக்கான மருந்தை எடுத்துக் கொண்ட உடன் அவதி அவதியாக கிளம்பி இந்த தாதியுடன் இங்கே வந்து சேர்ந்திருந்தாள் கயல்விழி. ஆசை ஆசையாய் காதலித்து கரம் பிடித்த கணவன், இனி இல்லை என்பதை ஏற்க மறுத்தது மனது.
என்னதான் ஊருக்குள் அசமாத்தமான ஆத்மாக்களின் நடமாட்டம் இருப்பதாக சொல்லி இருந்தாலும், அதையே பிரதானமாக எடுத்துக் கொண்டு பூங்குன்றன் பற்றி விசாரிக்காமல் இருக்க முடியாதே போலீஸ் அதிகாரிகளால்..? நல்லவேளையாக, அனுபவம் மிக்க பெரியவர்கள் அந்த இடத்தில் நின்றிருந்ததால் குற்றவியல் தடயங்கள் எதிலும் கை படாமல், க்ரைம் சீன் கலையாமல் பார்த்துக் கொண்டார்கள்.
அதைத் தகர்த்து, இன்ஸ்பெக்டரை தொட்டு தன் மடிமேல் கிடத்தி நடைமுறையை மீறி நடந்து கொண்டது என்னமோ அன்பழகன் தான். பூங்குன்றனை அந்த நிலையில் பார்த்த போது ஏனோ அவரால் அவரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதனால் தான் மாஜிஸ்திரேட் அந்த இடத்திற்கு வந்த போது நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார் அவர்.
“இது அன்நேச்சுரல் டெத் மிஸ்டர் அன்பழகன்… படிச்சவர் தானே நீங்க, எவ்ளோ காலமா போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல வர்க் பண்ணறீங்க… ஒரு க்ரைம் சீனை எப்படி பாதுகாக்கணுங்கற விவஸ்தை கொஞ்சம் கூட இல்லையா உங்களுக்கு… மக்களை கைட் பண்ண வேண்டிய நீங்க, அவங்க சரியா இருக்கிற இடத்தில கூட நீங்க சரியா இல்லாம போய்ட்டீங்களே..? ஐம் சாரி டூ சே மிஸ்டர் அன்பழகன், இந்த கேஸ் எப்படியும் விசாரணைக்கு வரும்… அப்படி வரும்போது மே பீ, இந்தக் கொலையைப் பண்ணது நீங்க தான் எங்கிற கோணத்துல கூட கேஸ் நகரலாம்… முடிஞ்ச அளவுக்கு உங்களே சேஃப் பண்ணிக்கிறதுக்கான ஆதாரங்களை சேர்த்துக்கோங்க…” என பொரிந்து தள்ளியவர், இன்ஸ்பெக்டரின் உடலை நோக்கி நகர்ந்து கொண்டே ஜெயந்தனை அழைத்தார்.
ஓடி வந்து விறைப்பாய் நின்று சல்யூட் அடித்து விட்டு, “சொல்லுங்க சார்…” என்றார் ஜெயந்தன் பணிவாக.
“ஜி.ஹெச் டாக்டர் மிஸ்டர் தாமோதரனையும், ஃபாரன்ஸிக் சீஃப் மிஸ்டர் ஜனரஞ்சன் அன்ட் கோ வையும் கூப்பிட சொல்லி இருந்தேனே… தகவல் சொல்லியாச்சா அவங்களுக்கு..?”
“ஆமா சார்… சொல்லியாச்சு… இன்னும் அஞ்சு நிமிஷத்துல அத்திப்பட்டை ரீச் பண்ணிடுவோம்னு சொல்லி இருக்காங்க…”
“குட்… அதிக நேரமா இங்க பாடியை வச்சிருக்க முடியாது, ரொம்ப சேதப்பட்டு இருக்கு… இப்பவே கொஞ்சம் கொஞ்சமா டீ காம்பாஸ் ஆகி மணக்க ஆரம்பிக்குது… இல்லையா..?” என்றபடியே தனது கர்ச்சீபை எடுத்து மூக்கை லேசாகப் பொத்திக் கொண்டார் மாஜிஸ்திரேட் பத்மநாதன்.
உண்மையும் அது தான், கொஞ்சம் கொஞ்சமாக பூங்குன்றனின் உடல் மணக்க ஆரம்பித்து இருந்தது தான். ஆனால் அவரைப் பார்த்து மூக்கைப் பொத்தும் எண்ணம் இல்லை ஜெயந்தனுக்கு. இவர்களைப் பொறுத்தவரை பூங்குன்றன் இவர்களுக்கு கீழ் பணி புரியும் யாரோ ஒரு உத்தியோகத்தர் தான், ஆனால் ஜெயந்தனுக்கு அப்படி இல்லையே..? ஜெயந்தனுக்கு மாத்திரம் அல்ல, அந்த ஸ்டேஷனில் பணி புரியும் அத்தனை பேருக்கும் ஒரு உடன் பிறவா சகோதரன் போல தானே இருந்தார் பூங்குன்றன்..?
வெளியே விறைப்பாக காட்டிக் கொண்டாலும், உள்ளே மொத்தமாய் தகர்ந்து போய் இருந்தது ஜெயந்தனுக்கு. முதல் நாள் முழு மனிதனாக நின்றிருந்தவர், அடுத்த நாள் காலையிலேயே இப்படி உயிரற்ற உடலாய் கிடைப்பார் என்று கற்பனையில் கூட நினைத்திருக்கவில்லை அவர். எல்லாம் சடுதியாக நடந்து முடிந்தது போல் ஒரு தோற்றப் பிரமாணம் அவருள். மாஜிஸ்திரேட் சொல்வது போல், இனி அன்பழகனை இந்த வழக்கில் இருந்து வெளியில் கொண்டுவர வேறு ஆதாரங்களை சேர்த்தாக வேண்டும். நினைக்கவே தலை சுற்றியது ஜெயந்தனுக்கு.
ஏதேதோ எண்ணங்களில் அவர் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்க, மருத்துவர் தாமோதரனும், உதவியாள் ஒருவரும், ஃபாரன்ஸிக் சீஃப் ஜனரஞ்சனும் அவர் குழுவிலான உதவியாளர்கள் இருவரும் அங்கே ஆஜராகி இருந்தார்கள்.
மாஜிஸ்திரேட் நேரே சென்று அவர்களை அழைத்துக் கொண்டு பூங்குன்றனின் உடல் இருந்த இடத்திற்கு வந்தார். அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த டாக்டர் தாமோதரன் யோசனையாய் புருவத்தை சுருக்கினார்.
“பாடி ஆல்ரெடி டீகாம்பாஸ் ஆக ஸ்டார்ட் ஆகிட்டு சார்… ஆன் த ஸ்பாட் போஸ்ட் மோர்ட்டம் (On the spot post mortem) செய்யறது தான் நல்லது… உங்களோட அனுமதி இருந்தா நான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வசதியா இருக்கும் சார்…”
“கண்டிப்பா டாக்டர்… நான் இப்பவே உங்களுக்கு ரிட்டன் ஆர்டர் (Written order) தயார் பண்ணி வச்சுட்டேன்… அன் நேச்சுரல் டெத் ரிப்போர்ட்ல (Un natural death report) CrPC Section 174 இற்கு கீழ ஆல்ரெடி வழக்கு பதிவு பண்ணிட்டோம்… அதனால நீங்க தாராளமா உங்க நடைமுறைகளை மேற்கொள்ளலாம்…” என எழுத்து மூலமான அனுமதியை அவர்களிடம் வழங்கினார் மாஜிஸ்திரேட் பத்மநாதன்.
அதைக் கையில் வாங்கிய உடனேயே வேலையைத் தொடங்கி விட்டார் டாக்டர் தாமோதரன். தடயவியல் நிபுணர்களும் தங்கள் வேலையை ஆரம்பித்திருக்க, சற்று தள்ளி தலைகுனிந்து நின்றிருந்த அன்பழகனைப் பார்வையால் எரிக்க முயன்றபடியே இங்கு ஜனரஞ்சனிடம் மெதுவாக ஆரம்பித்தார் பத்மநாதன்.
“ரஞ்சன் சார், இதுல ஒரு சின்னப் பிரச்சினை நடந்திடுச்சு…” என்றவரை ஏறிட்டு, பார்வையாலேயே ‘என்ன..?’ என வினவினார் ஜனரஞ்சன்.
“வந்து, நம்ம இன்ஸ்பெக்டரும் சப்-இன்ஸ்பெக்டரும் ரொம்ப க்ளோஸ்… அதனால தான் இன்ஸ்பெக்டர் இப்படி ஒரு நிலைமைல இருக்கறத பொறுத்துக்க முடியாம சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஓடி வந்து அவரை டச் பண்ணிட்டார்…”
“வாட்..?” என ஜனரஞ்சன் சத்தமாக கேட்க, மாஜிஸ்திரேட்டே ஒருமுறை ஆடித்தான் போய் விட்டார். மூச்சு காட்டாமல் பத்மநாதன் நின்றிருக்க, அவரே தொடர்ந்தார்.
“சார், க்ரைம் சீன்ல கை போடக் கூடாதுங்கறது பொது மக்களுக்கே நாங்க அறிவுறுத்தி இருக்கற ஒரு விசயம்… அப்படி இருக்க ஒரு போலீஸ் ஆபீஸர் இதை பண்ணிட்டு நின்னுட்டு இருக்கறது அழகா சொல்லுங்க..? சாரி சார், எங்களால எதுவுமே பண்ண முடியாது… நாங்க எவிடென்ஸ் கலெக்ட் பண்ணி ரிப்போர்ட் குடுக்கறோம்… அதை கோர்ட்ல சப்மிட் பண்ணறப்போ லாயர வச்சு வாதாட சொல்லுங்க…” என்றவர், ‘இது தான் முடிவு’ என்பதைப் போல திரும்பிக் கொண்டார்.
ஒரு போலீஸ் உயர் அதிகாரியிடம் பேசுவதற்கான பயம் கிஞ்சித்தும் இல்லை ஜனரஞ்சனிடம். அது, இத்தனை வருட காலமாக அவர் கட்டிக் காப்பாற்றிய தொழில் நேர்மையா அல்லது இந்த துறையில் தமிழ்நாட்டிலேயே முன்னணியில் அவர் தான் இருப்பதால் உண்டான கர்வமா என்பது அவருக்கே வெளிச்சம்.
மனதிற்குள் அன்பழகனை வசைபாடிக் கொண்டே பதில் பேசாமல் நின்றிருந்தார் மாஜிஸ்திரேட் பத்மநாதன். ஆனால் அன்பழகனை விட்டுத் தரவும் அவ்வளவு மனதில்லை அவருக்கு. நேர்மையான போலீஸ் ஆபீஸர், இத்தனை வருட அனுபவத்தில் எந்த ஒரு கறுப்புப் புள்ளியும் இல்லை அன்பழகனுக்கு. அப்படிப்பட்டவரை தவறே செய்யாமல் தண்டிப்பதற்கு மனதில்லை அவருக்கு. ஆனால் எதற்கும் ஆதாரம் வேண்டுமே..? ‘அது அன்பழகனின் பிரச்சினை ‘ என்று எளிதில் விட்டுவிட முடியவில்லை பத்மநாதனால்.
தீவிரமான ஜனரஞ்சனின் தேடுதல் வேட்டையில் அன்பழகனின் கைரேகையும் பத்திரமாக அடங்கிக் கொண்டது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்களின் முடிவில் போஸ்ட் மோர்ட்டமும் முடிந்திருக்க, தடயவியல் நிபுணர்களும் தமது வேலையை செவ்வனே நிறைவு செய்து கொண்டிருந்தார்கள்.
“சார், போஸ்ட் மோர்ட்டம் முடிஞ்சுது… இன்னும் மூணு நாளைக்குள்ள ரிப்போர்ட் குடுத்துடுவோம்… அதுக்கப்புறம் தான் என்ன விசயம்னு தெரிய வரும்… இப்போதைக்கு சொல்லணும்னா கொலை நடந்து கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகி இருக்கும்… மத்தபடி சிவியரான ஆயுதம் எதுவும் யூஸ் பண்ணல… தலையை கையால பிடிச்சு இழுத்து போஸ்டோட ஃபோர்ஸ் புல்லா மோதி இருக்காங்க… இதுல ஆச்சரியப்படற மாதிரியான ஒரு விசயம் இருக்கு சார்… ஆனா அதை ரிப்போர்ட முழுசா ரெடி பண்ணி, ஒரு தடவ க்ராஸ் செக் பண்ணிட்டு சொல்லறேன்…”
“சரிங்க டாக்டர்…”
“ஃபாரன்ஸிக் ரிப்போர்ட் வர எப்படியும் ஒரு வாரம் ஆகும்னு நினைக்கறேன் சார்… அதுக்குள்ள உங்க சப் இன்ஸ்பெக்டர சேஃப் ஆகறதுக்கான ஆதாரங்களை கலெக்ட் பண்ணிக்க சொல்லுங்க… நாங்க வரோம்…” என்றவர் தனக்குரிய பாணியில் நிமிர்ந்த நடையுடன் கிளம்பி விட்டார்.
அவர்கள் கிளம்பியதும் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது பத்மநாதனுக்கு.
“மிஸ்டர் அன்பழகன்…”
அவர் அழைக்க, வேகமாக அவரிடத்தில் வந்தார் அன்பழகன்.
“இன்ஸ்பெக்டர் பூங்குன்றனோட பாடியை புதைக்கறதுக்கான ஏற்பாடுகளை முன்னாடி நின்னு பாத்துக்கோங்க… பாடி சில வேளை ரீ போஸ்ட் மோர்ட்டம் பண்ணணும்னா புதைக்கறது தான் கரெக்டா இருக்கும்… இப்போ அவங்க போஸ்ட் மோர்ட்டம் பண்ணிட்டதால ஓரளவுக்கு பயம் குறைவா தான் இருக்கு அவரை பாக்க… இந்த கிராமத்துல கொஞ்சம் தைரியமான அம்மாக்க இருப்பாங்க இல்ல… அவங்கள்ல ஒண்ணு ரெண்டு பேரை துணைக்கு கூப்பிட்டு, இன்ஸ்பெக்டர் பூங்குன்றனோட மனைவியை கைத்தாங்கலா பிடிச்சுட்டு அவங்க ஊர் வரைக்கும் போயிட்டு வர சொல்லுங்க… பூங்குன்றனோட ஊர்வலம் முடிஞ்சதும், அவங்க குடும்பம் எந்த இடத்தை விரும்புறாங்களோ அந்த இடத்துல வச்சு அவருக்கு இறுதி மரியாதை செஞ்சுடலாம்…”
“சரிங்க சார்…”
அதன் பின்னர் துரித கதியில் எல்லாம் நடைபெற, அத்திப்பட்டு ஊருக்குள் சற்று வயதாக இருந்த இரு பாட்டிகளையும், ஆண்கள் சிலரையும் அழைத்துக் கொண்டனர் போலீஸ் உத்தியோகத்தர்கள். ஏற்கனவே குழுமி இருந்த போலீஸ் அணியும் தயாராகிக் கொள்ள அத்தனை பேரது மாலை மரியாதைகளை சுமந்து கொண்டு, தனது இறுதிப் பயணத்திற்கு தயாரானார் இன்ஸ்பெக்டர் பூங்குன்றன்..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.