Episode 3

ஶ்ரீ துர்க்கா | 30 Nov 2025 | Share

அல்லி 3

இந்த அரை மணி நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் ரத்னாவுக்கு அழைத்து விட்டாள் அல்லி. பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

“என்னாத்தா எடுக்கவே மாட்டேங்கிறா..? இவ நார்மலா அப்படி ஃபோன் அட்டென்ட் பண்ணாம இருக்க‌ மாட்டாளே..?” என்ற அல்லியின் முகம் முழுவதும் கலவர ரேகைகள். அவளது கலக்கம் பெரியவரையும் தொற்றிக் கொள்ள, “பேசாம ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துட்டேன்டா..?” என்றார் யோசனையாய்.

“சரித்தா…” என்றவள், மழைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டு புறப்பட்டு விட்டாள். கிட்டத்தட்ட அரை மணி நேர பயணம். ரத்னா கற்பிக்கும் ஆச்சிரமம் வந்திருந்தது. ‘விவேகானந்தர் இல்லம்’ என்ற பெயர் பலகையைத் தாண்டி தனது பைக்கை கொண்டு சென்றவள், கரையில் அதை நிறுத்தி விட்டு உள்நுழைந்தாள். நன்கு பரிச்சயமான இடம் என்பதால், எந்த வித தயக்கமும் இன்றி உள்ளே சென்றவள், நேரே பொறுப்பாளரின் அறைக்குள் நுழைந்தாள்.

“ஹே அல்லி..! வா வா… வாட் ஏ ப்ளசன்ட் சர்ப்பிரைஸ்… எத்தனை நாள்‌ ஆச்சு உன்னைப் பாத்து..?” என்ற தாமரைச்செல்வியைப் பார்த்து அமைதியாய் புன்னகைத்தாள் அவள்.

“என்னடா அதிசயமா இருக்கு..? வழமையா ஒரு வார்த்தைக்கு பதிலா பத்து வார்த்தை பேசுற என்னோட செல்லப் பொண்ணு இன்னைக்கு அமைதியா நின்னுட்டிருக்கு…” என அவரே சொல்லவும் தான், தன்னுடைய மாற்றத்தை அல்லியே கவனித்தாள். இவரிடம் பரவாயில்லை, ஆனால் வெளியில் யாரிடமும் தன்னுடைய பதற்றத்தை வெளிக்காட்டி விடக்கூடாது என அவ்விடத்திலேயே நினைத்துக் கொண்டாள் அவள்.

“வந்து ம்மா… நம்ம ரத்னா கால் பண்ண, கால் பண்ண ஆன்ஸ்வர் பண்ணல… அதான்… பெரியாத்தா என்னை அனுப்பிச்சு விட்டுச்சு அவளைப் பாத்துட்டு வர சொல்லி…”

“அதானே பாத்தேன்… சோணையன் குடுமி சும்மா ஆடாதுன்னு சொல்லுவாங்க… அப்போ இன்னைக்கும் காரணமா தான் இங்க வந்திருக்க… எங்கள எல்லாம் பாத்துட்டு போகணும்னு நினைச்சு வரல நீ… இல்ல..?” என்றார் ஆதங்கமாய் தாமரைச்செல்வி. பாவம், அவருக்கும் இவளது நிலைமை தெரியாதே.

“இல்லம்மா… வந்து…”

“அத விடு… ரத்னா இன்னைக்கு பசங்கள வயல்வெளி காட்ட கூட்டிட்டு போறேன்னு சொன்னா… கூடவே நம்ம தீபாவும் போயிருக்கா… மே பீ ஃபோன் சைலண்ட்ல போட்டிருக்காளா தெரியல… நம்ம முருகர் கோவில் இருக்குல்ல..? அதுக்கு பக்கத்துல இருக்கிற வழமையான வயல் பக்கமா தான் போயிருக்காங்க… நீ வேணா என்னன்னு போய் ஒருக்கா பாரேன்…”

“சரிங்கம்மா… நான் வரேன்… ஒருநாள் ஆறுதலா வந்து, உங்களையும் நம்ம பசங்களையும் மீட் பண்றேன்…” என்ற கையோடு வேகமாய்த் திரும்பி விட்டாள் அல்லி.

அடுத்த ஐந்து நிமிடங்களில் எல்லாம் அந்த வயல்வெளிக்கு வந்து சேர்ந்து விட்டாள் அவள். தூரத்திலிருந்து பார்க்கும் போதே பிள்ளைகள் எல்லாம் ஓடித் திரிந்து பரவசமாக விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு பக்கம் தீபா நின்று அவர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க, ரத்னாவை அங்கே காணவில்லை. வண்டியிலிருந்து இறங்கியது பாதி, இறங்காதது பாதியாக வயல்வெளிக்குள் ஓடினாள் அல்லி. இவள் ஓடி வருவதைப் பார்த்து, தீபாவே ஒரு கணம் பயந்து தான் போனாள்.

“அல்லி என்னாச்சுடி..? எதுக்கு இப்படி ஓடி‌ வர்ற..?” என பதறியபடி வந்து அவள் வினவ, “ரத்னா எங்கடி..?” என்றாள் அல்லி சுற்றும்முற்றும் பார்வையால் அவளைத் தேடிய படி.

“முருகர் கோவில்ல தண்ணி எடுத்து வரப் போய் இருக்கா…”

“எப்ப போனா..?”

“கொஞ்சம் நேரத்தோடவே போய்ட்டா… எப்படியும் சாமி கும்பிட்டு தானே வருவா..? அதான் நான் இவங்கள பாத்துட்டு நின்னுட்டிருக்கேன்…”

“சரி இரு… நான் வரேன்…” என்றவள், முருகர் கோவிலை நோக்கி எட்டி நடை போட்டாள். தண்ணீர் குழாயடியில் ரத்னா இல்லை. இதனால் கால்களை கழுவிக் கொண்டு பிரகாரத்தினுள் நுழைய காலடி எடுத்து வைத்தவள், சட்டென நின்றாள். பொதுவாக அவர்கள் வழக்கத்தில் இழப்பு வீடுகளுக்கு சென்றால், அந்த நாளில் கோவிலுக்கு செல்வதில்லை. அல்லிக்கு பெரிதாக இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட, இன்று ஏதோ ஒருவித பயம் அவளை சூழ்ந்திருந்தது.‌

அதையும் தாண்டி ரத்னா அவளது‌ நினைவில் நிழலாட, “அப்பா முருகா, எல்லாமே நீதான்…” என வாய் விட்டே அவரிடம் சரணடைந்தவள், கோவிலினுள் நுழைந்தாள். உள் பிரகாரத்தை சுற்றி வருகையில் கண்களில் தென்பட்டாள் ரத்னா. அங்கிருந்த அம்மன் சிலை ஒன்றின் முன்னால் கண்மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள் அவள். ரத்னாவுக்கு அம்மன் பால் ஒரு தனி அன்பு உண்டு. அது அல்லிக்கும் தெரிந்திருந்தபடியினால், தனது கோபத்தைக் கட்டுப்படுத்தி சற்றே அமைதி காத்தாள் அவள். ரத்னாவைக் காணாமல் பயந்து போய் இருந்தவளுக்கு, கண்டவுடன் அந்த பயம் எல்லாம் கோபமாய் மாறி இருந்தது. சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள் அல்லி.

சில செக்கன்கள் முடிவில், ரத்னா கண்களைத் திறந்து பிரார்த்தனையில் இருந்து எழுந்தாள். அப்படியே பிரகாரத்தை சுற்றிக் கொண்டு மீண்டும் மூலஸ்தானத்திற்கு வந்தவள் பின்னோடே, அல்லியும் வந்து சேர்ந்திருந்தாள். ரத்னா தரிசித்து முடிக்கும் வரை அமைதி காத்தவள், அவள் வழிபட்டு முடித்து திரும்பியவுடன் வள்ளென பாய்ந்தாள்.

“ஏன்டி ரத்னா..! அறிவில்லை உனக்கு..?” என்ற அல்லியைப் பார்த்து தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியவள், “ஹே அல்லி.. என்னடி இந்தப் பக்கம்..?” என்றாள் அதிசயித்து.

“ம்ம்… ஓங்கி ஒரு எட்டு விட்டேன்னா அரைப் பரலாங்கு தள்ளிப் போய் விழுவ நீ…”

“ஏன்டி இந்தக் குழந்தை கிட்ட எரிஞ்சு விழுற..?”
அப்பாவிக் குழந்தையாய் முகத்தை வைத்து, கண்களை சிமிட்டியபடி கேட்டாள் ரத்னா.

“ஃபோன எங்கடி வச்சுருக்க..?”

“ஃபோன்…” என்று அப்போது தான் நினைவு வந்து தேடியவள், “ஹான்… அத தீபாட்ட குடுத்துட்டு வந்துட்டேன்டி… கோயிலுக்கு தண்ணி எடுக்க வந்தேனா… என்கிட்ட ஹேண்ட்பேக் இல்லையா… அதனால கையில ஃபோன கொண்டு திரிய கஷ்டமா இருந்திச்சா… அதான் அத சைலண்ட்ல போட்டு தீபாட்ட குடுத்துட்டு வந்துட்டேன்…”
மறைமுகமாக ஹேண்ட்பேக்கிற்கு ஐஸ் வைத்தாள் அவள்‌.

“எவ்ளோ நேரமாச்சு இங்க வந்து..?”

“அது… எப்படியும் ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்னு நினைக்கிறேன்…”

“நான் இப்போ ஒண் அவர்க்கு முன்னாடி உனக்கு கால் பண்ணேன்… ஆனா நீ ஆன்ஸ்வர் பண்ணலயே..? கிட்டத்தட்ட அரை மணி நேரமா ட்ரை பண்ணி பாத்து, நீ ஆன்ஸ்வர் பண்ணலங்கவும் பயந்து போய் ஓடி வரேன் நான்… நீ என்னடான்னா, கேஷூவலா இங்க நின்னு கதை பேசிட்டு இருக்க…” என்றவளுக்கு ரத்னாவை அடித்து விடும் அளவிற்கு ஆத்திரம் தான். ஆனால் இருக்கும் இடம் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“ஒண்‌ அவர்க்கு முன்னாடி ஃபோன் என் கைல தானே இருந்திச்சு..?” என யோசனையாய் இழுத்தாள் ரத்னா.

“சாமி கும்பிட்டு முடிச்சுட்டியா..?”

“ஓ யெஸ்…”

“அப்போ கிளம்பு…” என்றபடி அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு நடந்தாள் அல்லி.

“இப்போ எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிருக்க..?”

“ஒண்ணுல்ல…”

“அப்போ ஏதோ இருக்கு…”

“…”

“என்னனு சொல்லு அல்லி..?”

“ப்ச்… நசநசக்காம வா ரத்னா…”

“இப்போ எதுக்கு என்கிட்ட எரிஞ்சு விழற…? ஏதாவது அவசரமா கால் பண்ணியா..?”

“இல்ல…”

“வழமையா ஒரு தடவ தானே கால் பண்ணுவ..? சப்போஸ் நான் எடுக்கலன்னா கூட, ‘பிஸியா இருக்கா போல..’ அப்படின்னு ஃப்ரீயா தானே விடுவ… இன்னைக்கு என்ன தொடர்ந்து அரை மணி நேரம் கால் பண்ணி இருக்க..? பயந்து போய் தேடிட்டுலாம் கூட வந்திருக்க… ஏதாவது பிரச்சினையா அல்லி..?”

அவள் கேட்கத் தான் அல்லிக்கே அந்த வித்தியாசம் புரிகிறது. ரத்னா சொல்வது போல், உண்மையாகவே அவளுக்கு தொடர்ந்து கால் செய்யும் பழக்கம் இல்லை தான். ‘ஏதோ வேலையாக இருப்பதால் தானே அழைப்பை ஏற்காது இருக்கிறார்கள்..? அவர்களது வேலை முடிந்து, அலைபேசியை எடுத்துப் பார்க்கும் போது அவர்களே திரும்ப அழைப்பார்கள் தானே..?’ என்று தான் வழமையாக யோசிப்பாள். இன்றைய நாளின் ஒரேயொரு சம்பவம் அவளது ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் தலைகீழாக மாற்றி இருந்தது. அவளே அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க நினைத்தாலுமே கூட, அவளையும் அறியாமல் அது வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

“என்னடி பேசாம வர்ற..?”

“உன்னை விட‌ நாலு வயசு பெரியவடி நான்… இந்த ‘டி’ போட்டு பேசுற வேலை, பேர் சொல்லி கூப்பிடுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்…” என்று, இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்ள அரும்பாடு பட்டாள் அல்லி. அதை ரத்னாவும் உணர்ந்து தான் இருந்தாள். பொதுவாக தன்னிடம் எதையும் மறைக்காத அல்லி, எதையோ ஒன்றை மறைக்கிறாள் என்றால் அதற்கு தகுந்த காரணம் ஏதாவது இருக்கும் என்று ரத்னாவுக்கு தெரியும். ஆனால், அந்தக் காரணம் அல்லிக்கு எந்தக் கஷ்டத்தையும் தராமல் இருந்தால் போதும் என்பதே அவளது பிரார்த்தனை. தான் அவளைக் கண்டு கொண்டதைத் தெரியப்படுத்தாமல், பதிலுக்கு தானும் அல்லியை சீண்டினாள் ரத்னா.

“ஏன்டி… கோவிலுக்கு போனது தான் போன… ஒரேயடியா சாமிகிட்ட போயிட்டியோன்னு நினைச்சுட்டேன் நான்…”
ரத்னா வந்ததுமே படபடவெனப் பொரிய ஆரம்பித்திருந்தாள் தீபா.

“ஏன் க்கா… ஒரு அரை மணி நேரம் தானே..?” என இவள் பாவமாய் இழுக்க, “எதே… அரை மணி நேரமா..? சரியா ஒண்ணரை மணி நேரம் ஆச்சு… எங்க, முருகரை உன் கையோடவே கூட்டிக்கிட்டு வந்துட்டியா..?” என்றபடி விளையாட்டாய் எட்டி அவள் பின்னால் பார்த்தாள் தீபா.

அதைக் கேட்டு அல்லிக்குமே அதிர்ச்சி தான். “ஏன்டி, ஒண்ணரை மணி நேரமாவாடி சாமி கும்பிட்ட நீ..?” என்றவளைப் பார்த்து வஞ்சகம் இல்லாமல் இளித்து வைத்தாள் ரத்னா.

“ஸ்ஸபா… நல்ல முகூர்த்தத்துல தான் பெத்து வச்சிருக்காங்க உன்னை…”

“நான்‌ என்ன பண்ண..? எல்லா வேண்டுதலும் உனக்காகவும் பெரியாத்தாவுக்காகவும் தான் தெரிஞ்சுக்கோ…”

“ஆமாமா… இவ்ளோ நேரமா நீ எங்களுக்காக தான் ப்ரே பண்ணி இருப்ப… நீ சொல்லிட்டாலும், அதை நான் நம்பிட்டாலும்…” என்று கழுத்தை வெட்டி திருப்பிக் கொண்டாள் அல்லி.

“நிஜமா தான்டி… இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் நினைச்சு தான் கும்பிட்டு வந்தேன். இன்னைக்கு காலைல மூணரை மணிக்கு ஒரு கனவு கண்டேனா… அந்தக் கனவு ரொம்ப பயங்கரமா இருந்திச்சா… நான் ரொம்ப பயந்துட்டேனா… நேத்து ராத்திரி இங்கேயே தங்கிட்டதால பெரியாத்தாவ வேற பாக்க முடியலயா… அதான் மனசே சரியில்லை… இப்போ கோவிலுக்கு போய் வந்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சமாச்சு நிம்மதியா இருக்கு…”

“அப்படி என்னங்க கனவு கண்டீங்க மேடம்..?”

“அதுவா… விடியக்காலைல நீ பெரியாத்தா வீட்டுக்கு வர்ற… உன் பின்னாடியே ஏதோ ஒண்ணு தொடர்ந்துக்கிட்டு வருது… ஆனா உனக்கு அது தெரியல… நீ வீட்டுக்குள்ள நுழையற… அந்த உருவத்துனால உள்ள நுழைய முடியல… வாசல்லயே நின்னுடிச்சு… நம்ம தான் ஹால்ல அனுமார் அப்பாவையும், கண்ணகி அம்மாவையும் சிலை வச்சிருக்கோம்ல..? அது அந்த சிலைகளை பாத்து மொறைச்சிட்டே நிக்கற மாதிரி இருக்கு… உள்ள போய் ஏதோ பேசுன நீ, திரும்ப வாசல் தாண்டி வர்ற… ‘அது’ உன்னையும் பாத்து மொறைக்குது… ஆனாலும் உன்னோட கண்ணுக்கு தெரியல. உன் பின்னாடியே பெரியாத்தாவும் வர்றாங்க. அவங்களுக்கும் எதுவும் தெரியல… கொஞ்ச நேரம் எதுவுமே இல்லாம, அப்படியே எல்லாம் பிளாங்கா இருக்கு… அதுக்கப்புறம் நீயும் பெரியாத்தாவும் ஒரு துணி மூட்டையை உள்ள தூக்கிட்டு வர்றீங்க…” என்றது தான் தாமதம், திக்கென அதிர்ந்து அவளைப் பயத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் அல்லி..!

                                     – அல்லி மலரும்…

    No comments yet.