Episode 29

ஶ்ரீ துர்க்கா | 03 Feb 2026 | Share

அல்லி 29

அத்திப்பட்டு 

“ச்சே… எங்க ஊருக்கு நல்லது பண்ண வந்த இன்ஸ்பெக்டருக்கு இப்படி ஆகிடுச்சே… அதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…”

“ஆமாடி… அவரோட மனைவி இப்போ மாசமா இருக்காங்களாம்…‌ அவங்களுக்கும் அவங்க குழந்தைக்கும் யாரு பதில் சொல்லப் போறாங்களோ, முத்துமாரியம்மா உனக்கு தான் வெளிச்சம்…”

“யாரு தொட்ட வினைனு தெரியல அஞ்சு… நம்ம ஊரைப் போட்டு பாடா படுத்துது… யாராவது சாமியாரைக் கூப்பிட்டு ஊருக்கே சாந்தி செய்யணும்…‌”

“எதுக்கு வேற யாரையோ கூப்பிடணும்… நம்ம நீலகண்டன் ஐயாவே போதுமே..?”

“ஏன்டி, இந்த ஊருல தான‌ இருக்க..? உனக்கு விசயமே தெரியாதா… நீலகண்டன் ஐயாவும், அஸ்வத்தாமன் ஐயாவும் ஏதோ கோவில் விவகாரமா வெளியூர் போயிருக்காங்களாம்… திரும்பி வர ரொம்ப நாள் ஆகுமாம்… இல்லன்னா நம்ம விஜயாவோட கடைசிக் காரியங்களை எதுக்கு வெளியில இருந்து யாரையோ கூப்பிட்டு செய்யணும்..?”

“ஓஓ… அப்படியா சங்கதி..? நான் நினைச்சேன் ஏதோ பர்சனல் பிரச்சினையால தான் நீலகண்டன் ஐயாவையோ அல்லது அஸ்வத்தாமன் ஐயாவையோ சித்தார்த்தன் கூப்பிடலன்னு…”

“ம்கூம்… சித்தார்த்தன் யாரு கூட தான்டி மனஸ்தாபம் வச்சிருக்கான்… எல்லார் கூடவும் அனுசரிச்சு நடந்துக்கிற ஆள் தானே அவன்…”

“அது உண்மை தான்…”

பலதரப்பட்ட குரல்கள் அவர்களை சூழ்ந்திருக்க, எதையும் முகம் கொடுக்க திராணி இல்லாமல் கூனி குறுகி அமர்ந்திருந்தார்கள் அல்லியும் ரத்னாவும்.

“என்னம்மா ரத்னா, இன்ஸ்பெக்டர் சார அப்படி ஒரு கோலத்துல பாத்து ரொம்ப பயந்து போயிட்டியா..? சின்னப் பொண்ணுங்க நீங்க, எதுக்காக பிரச்சினைனு தெரிஞ்சும் இழவு நடந்த அந்த இடத்துக்கு வந்தீங்க..? சரி பயப்படாத… இன்னைக்கு நீங்க இங்கேயே தங்கிக்கலாம்… நம்ம எல்லாரும் ஒண்ணா தங்கி இருக்கதால ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட்டா இருக்கும்…”

என்ற வாணிக்கு, எந்த பதிலையும் சொல்லும் மன நிலையில் ரத்னா இல்லை. இதனால் அவரது உரையாடலை தன் பக்கம் திருப்பிக் கொண்டாள் அல்லி. 

“சாரி ஆன்டி… நான் தான், இன்ஸ்பெக்டர் சார் இறந்துட்டார்ங்கிற விசயத்தை கேள்விப்பட்டு ரத்னாவை அங்க கூட்டிட்டு போனேன்… அப்போல இருந்தே அவ அப்செட்டா தான் இருக்கா…”

“நினைச்சேன், நீ தான் துடுக்குத்தனமா ஏதாவது பண்ணி வச்சிருப்பன்னு… உன்னோட தற்துணிவுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு அல்லி… இந்த இழப்புக்கு எல்லாம் காரணம் ஒரு உயிர் இல்லாத ஆன்மா எங்கிற மாதிரி பேசிக்கிறாங்க… அதை கண்டுபிடிக்கறேன், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன்னு விதண்டாவாதமா எதையாவது நினைச்சு நட்ட நடு ராத்திரில தனியா எங்கேயாவது போயிடாத சொல்லிட்டேன்… ரத்னா ம்மா, கொஞ்சம் அவள கவனமா பாத்துக்கோ என்ன…”

என‌ அவர் சொன்னதற்கும் மெளனமாக ஒரு தலையசைப்பு மாத்திரமே ரத்னாவிடம். 

“ஆன்டி, இந்த நீலகண்டன் ஐயா எங்க போயிருக்காங்கன்னு தெரியுமா உங்களுக்கு..?” என‌ கேட்ட அல்லியை, சடாரென திரும்பி குத்தும் பார்வை பார்த்தாள் ரத்னா.‌ 

“ஹே… உனக்கு விசயமே தெரியாதா..? இப்ப தான இவங்க எல்லாரும் அவரையும், அஸ்வத்தாமன் ஐயாவையும் பத்தி பேசிட்டு இருந்தாங்க… உனக்கு கேக்கலயா… அவங்க ரெண்டு பேரும் ஏதோ விவகாரமா வெளியூர் போயிருக்காங்களாம்… என்ன விவரம்னு யாருக்கும் தெரியல…”

“ஓஓ…” என்ற அல்லியின் முகத்தில் ஏமாற்றம் பரவ, ரத்னாவின் முகத்தில் நிம்மதி பரவியது. 

எப்படி என்றாலும் இந்தப் பிரச்சினை எல்லாம் ரத்னாவுக்கும் தீர வேண்டும் தான், ஆனால் எதற்காகவும் அல்லியை இழக்க அவள் தயாராக இல்லை. அதே நேரம், அவர்களது சுயநலம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கும் என்பது ஆனானப்பட்ட அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..! 

                   ✯✯✯✯✯✯

ஏற்காடு

இந்த முறை இனியாவையும் வாசுதேவனையும் அதிக நேரம் காக்க வைக்காமல் அழைப்பு ஏற்கப்பட்டது. 

“ஹலோ…”

“ஹலோ…‌ நான் க்ரைம் ப்ராஞ் ஆபீஸர் இனியா பேசறேன்… அது ஆரக்ஷாவோட வீடு தானே..?”

“க்ரைம் பிராஞ்சா..?” என மறுமுனை வாயைப் பிளந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. 

“பயப்படாதீங்க சார்… ஒரு விசயத்தை தெரிஞ்சுக்கிறதுக்காக மட்டும் தான் கால் பண்ணோம்… மத்தபடி எந்த பிரச்சனையும் இல்லை…” என இனியா சொன்னதும் தான் மறுமுனை ஆசுவாசம் அடைந்தது. 

“மேடம் நான் ஆனந்தன் பேசறேன்… இந்த ஃபோன் ரோட்டோரமா விழுந்து கிடந்திச்சு மேடம்…‌ நான் இந்த வழியா வர்றப்போ ஃபோன் ரிங்காகி சத்தம் கேட்டுச்சா, ஃபோனுக்கு சொந்தக்காரங்க யாரோ பேசறாங்க போலன்னு நினைச்சு தான் கால் அட்டென்ட் பண்ணேன் தகவல் சொல்றதுக்கு… மத்தபடி எனக்கு எதுவும் தெரியாதுங்க மேடம்…”

“ஓஓ…‌ பை த வே மிஸ்டர் ஆனந்தன், நீங்க இப்போ எங்க இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?”

“நான் ஏற்காடுல ஒரு அந்தோனியார் கோவில் இருக்குல்ல… அங்க இருந்து தான் பேசறேன் மேடம்…”

“அந்தோனியார் சர்ச்சா..?” என்றவள், வாசுதேவனிடம் திரும்பி “சார், இங்க‌ இருந்து அந்தோனியார் சர்ச் எவ்ளோ தூரத்துல இருக்கும்..?” என்றாள்.

“கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் தூரம் பாக்கலாம் மேடம்…”

“ஓஓ… அந்த இடத்துக்கு கிட்டவா நம்ம ஸ்டேஷன்ல வர்க் பண்ணற போலீஸ்காரங்க யாராவது இருக்காங்களா..?” 

“தமிழ் இருக்காரு மேடம்… அவருக்கு அந்த அந்தோனியார் சர்ச் பக்கம் தான்…”

“ஓகே… இப்போ போய் இந்த ஃபோன மிஸ்டர் ஆனந்தன் கிட்ட இருந்து வாங்கிக்க அவரால முடியுமா..?”

“கண்டிப்பா மேடம்…”

“மேக் ஷ்யூர்…” என்றவள், மீண்டும் லைனுக்கு வந்தாள்.

“மிஸ்டர் ஆனந்தன்…”

“லைன்ல தான் இருக்கேன் மேடம் சொல்லுங்க…”

“ஒரு டூ மினிட்ஸ் மட்டும் லைன்ல வெய்ட் பண்ணறீங்களா..?”

“சரிங்க மேடம்…” என இழுத்தார் ஆனந்தன்.

“என்னாச்சு, உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா..?”

“ஆமா மேடம்… ஆனா பரவால்ல நான் வெய்ட் பண்ணறேன்… ஏதோ சீரியஸான விசயம் போய்ட்டு இருக்குன்னு புரியுது… ரெண்டு நிமிஷம் தானே… பரவால்ல…”

“தாங்க் யூ…”

அவர்கள் காத்திருக்கும் நேரத்திலேயே, தமிழ் என்பவருக்கு அழைத்து விடயத்தை கூறி எல்லாவற்றையும் தெளிவு படுத்திக் கொண்டிருந்தார் வாசுதேவன்.

“எக்ஸ்கியூஸ் மீ மேடம்…”

“ம்ம் சொல்லுங்க சார்…”

“தமிழ் இப்போ அவங்க வீட்டுல தான் இருக்காராம்… அந்தோனியார் சர்ச்சுக்கு போய் அந்த மொபைலை வாங்கிக்கிறதுல எந்த ஆட்சேபனையும் இல்லைங்கற மாதிரி சொன்னார்…”

“தட்ஸ் க்ரேட்…” என்றவள், லைனில் இருந்த ஆனந்தனை அழைத்தாள். உடன் அவரும் அட்டென்ஷனுக்கு வந்தார்.

“சொல்லுங்க மேடம்…”

“இப்போ அங்க ஒரு போலீஸ் ஆபீஸர் வருவார்… அவர் கிட்ட உங்க கையில இருக்கற‌ மொபைலை கொஞ்சம் குடுத்து விடறீங்களா ப்ளீஸ்…”

“மேடம்… நான் கொஞ்சம் எர்லியா கிளம்பணும்னு…” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டதாய் ஒலி எழுப்பியது இனியாவின் மொபைல். 

மறுபடியும் ஆரக்ஷாவின் எண்ணுக்கு அவள் அழைப்பு விடுக்க, முன்பை போலவே மொபைல் ஸ்விட்ச் ஆஃபில் இருப்பதாக அறியத் தந்தது அந்த ரெக்கார்டட் வாய்ஸ். 

“என்னாச்சு மேடம்… பேசிட்டு இருக்கும் போதே கட் ஆகிட்டு…” என்றபடியே ஸ்பீக்கரில் போட்டிருந்த இனியாவின் மொபைலை பார்த்தார் இன்ஸ்பெக்டர் வாசுதேவன்.

“அதான் எனக்கும் தெரியல சார்… மே பீ சார்ஜ் இல்லாம கட் ஆகிட்டா தெரியல… ஆனா நாம இதுக்கு மேல தாமதிக்க முடியாது… நீங்க இப்பவே மிஸ்டர் தமிழுக்கு கால் பண்ணி அந்த சர்ச்சுக்கு போய் என்னாச்சுன்னு கொஞ்சம் சீக்கிரம் பாக்க சொல்லுங்க… நாங்களும் அங்க தான் வந்துட்டு இருக்கோம்னு அவருக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க…”

“சரிங்க மேடம்…” என்றவர், மீண்டும் தமிழுக்கு அழைத்து தகவலைக் கடத்தி விட்டு, அவர்களது மகிழுந்தை திருப்பி அந்தோனியார் சர்ச்சுக்கு விரட்டினார். 

இவர்கள் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் போதே, இன்ஸ்பெக்டர் வாசுதேவனுக்கு அந்த  தமிழ் என்பவரிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. 

“ஹலோ தமிழ்…”

“சார்…”

“சொல்லுங்க தமிழ்… ஸ்பாட்டுக்கு போயிட்டீங்களா, எவிடென்ஸ் கலெக்ட் பண்ணியாச்சா..?”

“சார் நான் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன்…‌ ஆனா இங்க யாரும் இருக்கற மாதிரி தெரியல சார்… சர்ச் ஃபுல்லா தரோவா செக் பண்ணிட்டு தான் உங்களுக்கு தகவல் சொல்றதுக்கு கால் பண்ணேன்…”

“யாரும் இல்லையா… ஆனந்தன்னு யாரும் இல்லன்னு சொல்றீங்களா, ஆர் சர்ச்ல யாருமே இல்லைன்னு சொல்றீங்களா..?”

“சர்ச்லயே யாரும் இல்லைங்க சார்… வெளிய பெரிய பூட்டு தான் தொங்குது… பக்க வாட்டுல இருக்கிற ஜன்னல் வழியா உள்ள பாத்தேன்…‌ உள்ளயும் யாரும் இல்லை… ஆள் நடமாட்டம் இருக்கிறதுக்கான அறிகுறியே இங்க இல்லை…”

“என்ன‌ தமிழ் சொல்லுறீங்க… இப்ப தானே அந்த ஆனந்தன் அங்க இருக்கிறதா சொல்லி பேசிட்டு இருந்தாரு…” என‌ அவர்கள் பேசிக் கொண்டிருக்க, இடை புகுந்தாள் இனியா.

“என்னாச்சு சார்..?”

“மிஸ்டர் தமிழ் அந்த சர்ச்ல தான் இருக்காங்களாம் சார்… ஆனா அங்க‌ யாரும் இல்லைன்னு சொல்றாரு…”

“அப்படியா… இப்ப தானே மிஸ்டர் ஆனந்தன் அங்க இருந்து பேசுறதா சொன்னாரு..?”

“அதான்‌ மேடம் எனக்கும் ஒரு குழப்பமா இருக்கு…”

“இப் யூ டோன்ட் மைன்ட், மிஸ்டர் தமிழுக்கு வீடியோ காலுக்கு வர சொல்லறீங்களா..?”

“இதோ, உடனேயே கூப்பிடுறேன் மேடம்…’ என சொன்ன மாதிரி உடன் அழைத்தும் விட்டார் வாசுதேவன். 

வீடியோ காலில் பார்த்த போதும் அங்கு அவர்களுக்கு உருப்படியாக எதுவும் சிக்கவில்லை. அக்கம் பக்கத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிப் போய் இருந்தது அந்த இடம்‌. மூன்று பேரது போலீஸ் மூளையும் அருகில் ஏதாவது சிசிடிவி இருக்கிறதா என தேடிப் பார்த்து, இல்லாமையில் சுணங்கியது. 

“தமிழ் சார், நீங்க ஸ்பாட்ல இருந்து கிளம்புங்க… நாங்க மேலதிகமா ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேட்டுக்கறோம்… ரொம்ப நன்றி நாங்க கூப்பிட்ட உடனேயே அவெய்லபிள் ஆனதுக்கு…”

“அது என்னோட கடமை மேடம்… என்ன தேவைன்னாலும் யோசிக்காம எனக்கு கால் பண்ணிடுங்க…”

“ஷ்யூர் சார்…”

“சரிங்க மேடம், நான் கிளம்பறேன்… சார், நான் வரேன்… நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்றேன்…”

“ரொம்ப நன்றி தமிழ்…”

“வித் ப்ளெஷர் சார்…” என்றதோடு அழைப்பை நிறைவு செய்து கொண்டார் தமிழ். 

“வாசு சார், கன்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ணி ஆரக்ஷாவோட நம்பர் குடுத்து ட்ரேஸ் அவுட் பண்ண சொல்லுங்க… என்ன டைம் ஆன் ஆகி இருக்கு, ஆன் ஆனதுக்கு அப்பறம் அந்த போனுக்கு வந்த இன் கம்மிங் கால்ஸ், அந்த போன்ல இருந்து பண்ண அவுட் காயிங் கால்ஸ் எல்லாம் சம்பந்தப்பட்ட டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணுங்க…”

“சரிங்க மேடம்…” என்றவர், அடுத்த முப்பது நிமிடங்களில் ஒட்டுமொத்த தரவுகளுடன் ஆஜராகி இருந்தார். 

                      ✯✯✯✯✯✯

                                     – அல்லி மலரும்…

    No comments yet.