அல்லி 28
அத்திப்பட்டு
ஊர் மொத்தமும் அங்கே தான் கூடி இருந்தது.
“ஏன் ப்பா, விவகாரம் தான் பெருசுன்னு தெரியும் இல்ல… பொம்பள புள்ளைங்கள பாத்து வீட்டுக்கு அனுப்பி வச்சுடுங்கப்பா… ராசு வா… நானும் நீயும் போய் ஒவ்வொரு புள்ளங்களையும் அதுங்க வீட்டுல விட்டுட்டு வந்துடலாம்…”
“சரிங்க சின்னையா… ஏலே, பொம்பள புள்ளைங்கலாம் சட்டுப்புட்டுன்னு கிளம்பி வாங்க… ரொம்ப பயந்தவங்களா இருந்தா, தனியா உங்க வீட்டுல நின்னுக்காதீங்க… வீட்டுக்கு போய் தலைக்கு குளிச்சுட்டு உங்க சிநேகித பிள்ளைங்க அல்லது உறவுக்காரங்க கூட சேர்ந்து தங்கிக்கோங்க… நாங்க இந்தப் பிரச்சினைக்கு காரணம் யாரு, என்னன்னு பாத்து விவகாரத்தை முடிச்சு வச்சுட்டு வரோம்…”
என அந்த ராசு எனப்பட்டவரும் எழுந்து கொள்ள, இருவரும் சேர்ந்து அத்திப்பட்டு கிராமத்தின் பெண்களை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.
பயம், கவலை, இயலாமை, ஒவ்வாமை என பலவித உணர்வு வெளிப்பாடுகள் அங்கே. உடல் மட்டும் தனியாகப் பெயர்ந்திருக்க, பக்கத்தில் இருந்த போஸ்டிலும் மணல் மேட்டிலும் ரத்தம் சகதியாய்த் தெறித்திருக்க, அடையாளம் காட்டப்படவே முடியாத முகத்துடன் அநியாயமாக உயிர் இழந்திருந்தார் இன்ஸ்பெக்டர் பூங்குன்றன். போட்டிருந்த காக்கிச்சட்டையும், அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயரும், அவரது உடல் கட்டமைப்பும் தான் அவர் யார் என்பதை அங்கிருந்த மக்களுக்கு அறியத் தந்திருந்தது.
மொத்தமாய் இரண்டு முறை வாந்தி எடுத்த பின், கலவர முகத்தோடு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் ரத்னா. கண்டு விட்ட காட்சியில் உடல் இன்னுமே நடுங்கிக் கொண்டிருக்க, அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு திரும்பி நடந்த அல்லியின் மனதில் ஏகப்பட்ட யோசனைகள்.
“ச்சே… நல்ல மனுஷன் ப்பா அந்த இன்ஸ்பெக்டர் சார்… அவருக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை வரும்னு நான் நினைச்சு கூட பாக்கல… இதெல்லாம் சாதாரண மனுஷ சக்தி செய்யற வேலை கிடையாது… இது நம்மளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட வேற ஏதோ ஒண்ணு… அதைத் தான அந்த மனுஷன் நேத்து முழுக்க இந்த ஊருக்குள்ள சொல்லிட்டு இருந்தாரு… சித்தார்த்தன் அண்ணா கூட, விஜயா அக்கா இறந்ததுக்கு காரணம் ஏதோ அமானுஷ்யம் எங்கிற மாதிரி சொன்னாங்களாம்… அந்த தான்யா பொண்ணு கூட, அப்படி ஏதோ ஒரு உருவத்தை பாத்த மாதிரி சொல்லி இருக்கு… ஆனா நம்மள்ல நிறையப் பேர் அதை நம்பவே இல்லை… இப்ப அதைக் கண்டு பிடிக்க வந்த இன்ஸ்பெக்டரயே அது காவு வாங்கிடிச்சே… அப்போ நாங்கல்லாம் எம்மாத்திரம்..?” என கவலையாக சொல்லிக் கொண்டு பக்கத்தில் நடந்த கலா அக்காவை கவனித்தும் கவனிக்காத மாதிரி நடந்து கொண்டிருந்தாள் அல்லி.
“ஆமா க்கா… நேத்து எங்க வீட்டுக்கு வந்து அந்த இன்ஸ்பெக்டர் அண்ணா சிசிடிவி செக் பண்ணி பார்த்தாங்க… நானே அந்த உருவத்தை என் ரெண்டு கண்ணால பாத்தேன்…” என்ற காருண்யாவுக்கு பயத்தில் இப்போதும் உடல் உதறியது.
“இதை நீ என்கிட்ட சொல்லவே இல்லையே… அப்படின்னா நீ அங்க தனியா இருக்காத காரு… வந்து எங்க வீட்டுல தங்கிக்கோ… அந்த தான்யா பொண்ணு இருக்குல்ல..? அதையும் அது வேலை செய்யற ஊருக்கே பத்திரமா கொண்டு போய் விட்டுட்டு வர சொல்லிடலாம்… ஏங்க பிள்ளைங்களா…” என அல்லியையும் ரத்னாவையும் பார்த்துக் குரல் கொடுத்தார் கலா அக்கா.
“ம்ம்… சொல்லுங்க அக்கா…” என அல்லி பதில் அளிக்க, ரத்னாவோ அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையிலேயே இல்லை.
“இன்னைக்கு நீங்களும் கூட எங்க வீட்டுக்கு வந்து தங்கிக்கோங்க… வயசுப் பிள்ளைங்க, இந்த மாதிரி பிரச்சினை நடந்துட்டு இருக்கற நேரத்துல தனியா இருக்காதீங்க… அல்லி, பாரு சின்னப் பிள்ளை எவ்வளோ பயந்துக்கிட்டு உன்கூட ஒட்டிக்கிட்டு வருதுன்னு. பெரியாத்தா இருந்திருந்தா பத்து பேருக்கு சமம்… எங்க, எல்லாம் நம்ம நேரம்…” என இழுத்து ஒரு பெரு மூச்சு விட்டவர், “சரி சரி… அதெல்லாம் இப்போ பேச வேண்டாம்… தலைக்கு குளிச்சுட்டு சீக்கிரம் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து சேர்ந்திடுங்க…” என முடிவாகவே சொன்னார்.
அல்லிக்கு அதில் அவ்வளவாய் உடன்பாடு இல்லை என்றாலும், ரத்னாவைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கு தலையாட்டி வைத்தாள்.
ஜெயந்தன் தலைமையிலான குழு ஒன்று அத்திப்பட்டுக்குள் இறங்கி இருந்தது. அன்பழகன் இன்னும் ஊரில் இருந்து வந்து சேர்ந்திருக்காததால், அதற்கு அடுத்த பதவியில் இருந்த ஜெயந்தன், தானே முன் வந்து பொறுப்பேற்று பூங்குன்றனை தக்க மரியாதையோடு அழைத்து செல்வதற்கு வந்திருந்தார். அங்கு பூங்குன்றன் இருந்த நிலைமையை பார்த்தவருக்கு உணர்வுகள் அத்தனையும் மரத்துப் போயிற்று.
தன் கீழ் பணி புரியும் ஊழியர்களுக்கு மதிப்பளித்து நடக்கும் ஒரு அதிகாரி கிடைப்பது வரம். அதில் பூங்குன்றனுக்கு எப்போதும் தனித்துவமான இடம் உண்டு. அங்கிருக்கும் அத்தனை பேருக்கும் அவர்பால் அப்படி ஒரு மரியாதை..! அப்படிப்பட்ட மனிதரை, இப்படி ஒரு கோலத்தில் பார்க்க பார்க்க அறவே முடியவில்லை ஜெயந்தனுக்கு.
“ஐயோ சார்…!”
என்ற அலறல் சத்தம் கேட்டு, அனைவரும் அந்தப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார்கள். தான் வந்திருந்த பைக்கை ஸ்டான்ட் இட்டு நிறுத்தக் கூட அவகாசம் எடுத்துக் கொள்ளாமல், அப்படியே சரித்துப் படுத்தி விட்டு வேகமாக அவ்விடத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன்.
இன்ஸ்பெக்டரின் தலையற்ற உடலைத் தூக்கி தன் மடியில் கிடத்திக் கொண்டவர், “கடவுளே..! இது என்ன கொடுமை… நீங்க ஏன் சார் தனியா இந்த ஊருக்குள்ள வந்தீங்க… இங்க இவ்வளோ பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சும், ராத்திரி நேரத்துல ஏன் சார் இங்க வந்தீங்க… ஊருல மாசமா இருக்கற கயல் அக்கா கிட்ட நான் என்னனு சொல்லி சார் சமாதானப் படுத்த போறேன்… என் பையனை பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு, உங்க குழந்தையைப் பத்தி கவலைப்படாமலே போய்ட்டீங்களே சார்… இப்போ நான் என்ன சார் பண்ணுவேன்..?”
குழந்தைப் பிள்ளை போல அன்பழகன் கதறிக் கதறி அழுத காட்சி பார்ப்போரை உருக்குலைய வைத்தது. கூடவே, ‘போலீஸ் என்றாலும், அவர்களும் சாதாரண மனிதர்கள் தான்’ என்பதை அங்கிருக்கும் அத்தனை பேருக்கும் இன்னொரு முறை ஆணித்தரமாக அடித்து சொன்னது.
அன்பழகன் கதறிக் கொண்டிருக்க, பக்கத்தில் வந்து அவரை ஆதரவாய்த் தாங்கிக் கொண்ட ஜெயந்தனின் விழிகளும் தாமாகவே கண்ணீரை சொரிந்தன.
“சா..ர்… இன்ஸ்பெக்டர் சாரோட ஃபோன்… அந்தப் பக்கமா விழுந்திருந்திச்சு… எடுத்துட்டு வந்தேன்… அவங்க ஒய்ஃப் அவரை கூப்பிட்டுகிட்டே இருக்காங்க சார்…” என கைகள் நடுங்க பூங்குன்றனின் மொபைலை அன்பழகனிடம் நீட்டினார் ஜெயந்தன்.
மிஸ்ட் காலில் ‘கயல்’ என சேவ் செய்யப்பட்டிருந்த அந்த எண்ணை பார்த்ததும் ஏதேதோ ஞாபகங்கள் அன்பழகனுக்கு. முதல்முறையாக இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு சென்றிருந்த போது, கயல்விழி பேசிய பத்து வார்த்தைகளில் ஒன்பது வார்த்தை பூங்குன்றனைப் பற்றி தான் இருந்தது.
“அண்ணா..! இவரு வேலை வேலைன்னு இருந்து உடம்ப கவனிக்காம விட்டிடுவாரு… நீங்க கொஞ்சம் கூடவே இருந்து அவர பாத்துக்கறீங்களா..? அங்க கொஞ்சம் ரிசர்வான இடத்துக்கு தான் உங்க ரெண்டு பேருக்கும் போஸ்டிங் போட்டிருக்காங்க… என்னாலயும் நினைச்ச நேரத்துக்கு எல்லாம் அவங்கள வந்து பாக்க முடியாது… உங்கள தான் நம்பி இருக்கேன்… அதிகமா எதுவும் பண்ண வேணாம், சாப்பிடாம டியூட்டின்னு சுத்திட்டு இருந்தாருன்னா ஜஸ்ட் எனக்கு ஒரு மிஸ்ட் கால் குடுங்க போதும்…”
என்று அன்பழகனிடம் வேண்டிக் கொண்டவள், “ஏங்க, அண்ணாவயும் உங்கள நம்பித் தான் அந்த ஏரியாவுக்கு அனுப்பி வச்சிருக்காங்க… ஒழுங்கு மரியாதையா அவர கவனமா பாத்துக்கோங்க…” என பூங்குன்றனையும் அதட்டி தான் அனுப்பி வைத்திருந்தாள்.
அவள் சொல்லி விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக, இஷ்டப்பட்ட நேரம் எல்லாம் மிஸ்ட் கால் கொடுத்து பூங்குன்றனை மாட்டி விடுவார் அன்பழகன். ஒரு நாள் தவறுதலாக அவளுக்கு சென்றிருந்த அழைப்பை துண்டித்த போது கூட, தவறே செய்யாமல் அப்பாவியாய் அவளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது என்னமோ பூங்குன்றன் தான். அப்படியெல்லாம் இருந்து விட்டு, இன்று இன்ஸ்பெக்டர் தொலைதூரமாகி விட, அன்பழகனுக்கு தான் தலைகால் புரியவில்லை.
சரியாக அந்த நேரம் பார்த்து மீண்டும் பூங்குன்றனின் ஃபோன் தனது ரிங்க்டோனை வெளிவிட, அதை எடுத்துப் பார்த்தால் திரையில் ஒளிர்ந்தது ‘கயல்’ என்ற பெயர். நொடியில் கன்றி சிவந்து போனது அன்பழகனின் முகம். அழைப்பை ஏற்காது விட்டாலும் பயந்து போவாள். அது சரி, எல்லாம் தலைகீழாக நடந்து முடிந்த பின்னர் அவள் பயந்தால் என்ன, பயப்படக் கூடாது என நினைப்பதால் தான் பயன் என்ன..? பூங்குன்றனை தரையில் கிடத்தி விட்டு, சற்றுத் தள்ளி வந்து அழைப்பை ஏற்றார் அன்பழகன்.
“ஹ..லோ…”
குரல் சற்று அடைந்திருந்தது அவருக்கு.
“அண்ணா…”
“ம்ம்… சொல்லும்மா…”
“இவங்க எங்க அண்ணா போனாங்க… நைட்டு ஃபோன் பண்ணாங்க, சின்ன மனஸ்தாபத்துனால சரியா அவங்க கூட பேசல நான்… அதான் மனசு கேக்காம இன்னைக்கு காலைல இருந்து ட்ரை பண்ணிட்டே இருக்கேன், எடுக்க மாட்டேங்கறாரு… வழமையா என்ன தான் பிஸியா இருந்தாலும், ஃபோனை அட்டென்ட் பண்ணி ஒரு வார்த்தை சொல்லிட்டு தான் வைப்பாங்க… இன்னைக்கு என்னடான்னா…”
“தங்கச்சி… நீ கொஞ்சம் கிளம்பி இங்க ஊருக்கு வர முடியுமாம்மா..?”
“அண்..ணா… என்..னாச்சு.. அவங்களுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே…”
“…”
சொல்லலாமா? வேண்டாமா? என்ற இரு தரப்பட்ட மனப் போராட்டத்துக்கு மத்தியில் தான் அவளைக் கிளம்பி வரவே சொல்லி இருந்தார் அன்பழகன். அப்படி சொல்ல முடிந்த போதும், பூங்குன்றன் இனி என்றுமே திரும்பி வரப் போவதில்லை என்பதை சொல்லும் அளவுக்கு தைரியம் இல்லை அவருக்கு.
“அண்ணா, நீங்க பேசாம இருக்க இருக்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு… ஏதாவது பேசுங்க ப்ளீஸ்… நீங்க முதல்ல அவருகிட்ட ஃபோனை குடுங்க… அவரோட குரலயாவது நான் கேட்டுக்கிறேன்…”
“இல்லம்மா…”
என்றவர் உடைந்து அழ ஆரம்பிக்க, மறுமுனையில் மூச்சே காட்டாமல் நடுங்கும் கரங்களால் அலைபேசியைப் பற்றியபடி நின்றிருந்தாள் கயல்விழி.
“ம்மா… பூங்குன்றன் சார் இறந்துட்டாரும்மா…” என்றவர் தொடர்ந்தும் அழ, மறுமுனை இன்னும் மெளனமாக தான் இருந்தது.
“ஹலோ… கயல்… ஹலோ…” என அன்பழகன் கூப்பிட கூப்பிட, அதை கேட்பாரற்று தூரமாய் அந்த அலைபேசி விழுந்திருக்க, அதிர்ச்சியில் நிலத்தில் விழுந்திருந்த கயல்விழிக்கு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்திருந்தது.
– அல்லி மலரும்…
No comments yet.