அல்லி 27
அத்திப்பட்டு
வேகவேகமாக காக்கி உடைக்கு மாறி, நாலு கால் பாய்ச்சலில் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார் பூங்குன்றன். அவருக்கு வாசலிலேயே எதிர்ப்பட்ட ஜெயந்தன், “அன்பழகன் சார் உங்களுக்கு கால் பண்ணினாங்களாம் சார்… பட் நீங்க பிக்கப் பண்ணலன்னு சொன்னாங்க…”
“ஓ மை காட், இதை எப்படி மறந்தேன்…” என தலையில் தட்டிக் கொண்ட பூங்குன்றன், மொபைலை கையில் எடுத்தார். அன்பழகனிடமிருந்து ஆறு அழைப்புகள் தவற விடப்பட்டிருந்தன. “ஆறு வாட்டி கால் பண்ணி இருக்கான், ஏதும் அவசரமான்னு தெரியல…” என வாய்க்குள்ளேயே சொல்லிக் கொண்டு, பதிலுக்கு அழைத்தார் அவர். கால் போய்க் கொண்டிருந்ததே தவிர, எடுப்பார் யாரும் இல்லை.
“சார், இடையில பேசறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… அன்பழகன் சார் உங்களுக்கு கால் பண்ணி பாத்து ரீச் ஆகலன்னதும் எனக்கு கால் பண்ணாங்க… நான் விசயத்தை சொன்னதும், “ஓகே, மார்னிங்கே ப்ரெக்ஃபாஸ்டும் இல்லாம டியூட்டி ஸ்டார்ட் பண்ணிட்டதால சாருக்கு களைப்பா இருக்கும்… அவர டிஸ்டர்ப் பண்ணல நான்… இங்க எல்லாமே ஒண்ணும் பிரச்சினை இல்லை… வைஃபும் பையனும் நல்லா இருக்காங்க… பஸ் ஆக்சிடன்ட்ல மாட்டுப்பட்ட இன்னும் சில பேர் சீரியஸ் கன்டிஷன்ல இருக்காங்க… அவங்க கூட இருந்து ஹெல்ப் பண்ணிட்டு நாளைக்கு வந்து டியூட்டில ஜாய்ன் பண்ணிக்கறேன்னு சார் கிட்ட சொல்லிடுங்க”ன்னு சொன்னாரு… அப்போ தான் அவங்க ஃபேமிலியும் அந்த ஆக்சிடன்ட் ஆன பஸ்ல போய் இருந்திருக்காங்கன்னே எனக்கு தெரியும்…”
“சாரி ஜெயந்தன்… நான் உங்ககிட்ட சொல்லி இருக்கணும்… அப்போத பேசுற அளவுக்கு பொறுமையா நான் இருக்கல… அதான் சொல்லல… ரியலி சாரி…”
“ச்ச பரவால்ல சார்… நீங்க வழமை மாதிரி ஓகேவா இருந்திருந்தா அப்படி பண்ணி இருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்…”
“ரொம்ப நன்றி ஜெயந்தன்… பை த வே, இவ்ளோ நேரம் நீங்க பொறுப்பெடுத்துட்டு இருந்தது ரொம்ப பெரிய விசயம்… நீங்க போய் ரெஸ்ட் எடுங்க… நான் இனி ரெஸ்பான்ஸிபிளிட்டிய டேக் ஓவர் பண்ணிக்கிறேன்…”
“சரி சார்…” என்ற ஜெயந்தன் விடைபெற்றுக் கொண்டு கிளம்பவும், அன்பழகன் அழைக்கவும் சரியாக இருந்தது.
“ஹலோ அன்பு…”
“ஹான், சொல்லுங்க சார்… அப்போத ரொம்ப டயர்ட் ஆகிட்டிங்க போல… ரெஸ்ட் எடுக்க போயிருக்கதா ஜெயா சொன்னாரு…”
“ஆமா அன்பு… ஏதோ மனசே சரி இல்லாம இருக்கு… அதனால தான் எந்த வேலையும் செய்ய முடியல என்னால… அங்க நிலவரம் எப்படி..?”
“எவ்ரிதிங் ஃபைன் சார்… அப்போத ஒண்ணு ரெண்டு பேர் கொஞ்சம் சீரியஸ் ஸ்டேஜ்ல இருக்கதா சொல்லி ஐசியூவில வச்சிருந்தாங்க… இப்போ அவங்க கிரிட்டிக்கல் சிட்சுவேஷன தாண்டிட்டாங்கன்னு நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க… பையனும் வைஃபும் சேஃப் தான்… பையனுக்கு சின்னதா கால்ல காயம்… மருந்து போட்டிருக்காங்க… பயப்படும்படியா யாருக்கும் எதுவும் இல்லை…”
“தாங்க் காட்… சாரி அன்பு, நான் உன்னோட போனுக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன், அப்படியே தூங்கிட்டேன்… எந்திரிக்க ஏழு மணி ஆகிடிச்சு… அதுக்குள்ள ஏதேதோ யோசனைகள்… அதுதான் பேச முடியல…”
“பரவால்ல சார்… ஐ கேன் அன்டர்ஸ்டான்ட்…”
“ம்ம்… நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விசயத்தை பத்தி டிஸ்கஸ் பண்ணணும் அன்பு… ஆனா அது ஃபோன்ல பேசற விசயம் இல்ல… நாளைக்கு நீ நேர்ல வா, எல்லாம் சொல்லறேன்… நாளைக்கு உன்னால வர முடியுமா, டைம் தேவைன்னா பரவால்ல… மேலிடத்துக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன்னா சரி தானே…”
“இல்ல சார்… நாளைக்கு நான் வந்திடுவேன்… கண்டிப்பா நாளைக்கு டிஸ்கஸ் பண்ணிக்கலாம் சார்… நானும் நீங்க சொல்லப்போற முக்கியமான விசயத்துக்காக வெய்ட் பண்ணறேன்…”
“சரி அன்பு… நீ பாரு, நம்ம நாளைக்கு பேசிக்கலாம்… குட் நைட்…”
“ஷ்யூர் சார், குட் நைட்…”
அழைப்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் கூட, யோசனையில் இருந்து விடுபட முடியவில்லை பூங்குன்றனால். அந்த அல்லியையும் ரத்னாவையும் அவ்வளவு எளிதில் நம்பி இருக்க கூடாது என்ற ஆதங்கமே அவரது நிம்மதியைக் குலைத்தது. அவர் கண்ட காட்சியை வெறும் கனவு தான் என்று ஒதுக்கி விட முடியவில்லை அவரால்.
ஒரு வேளை இந்த ‘கரும்புகை’, ‘உருவம்’, ‘சூப்பர் நேச்சுரல் பவர்’ பற்றிய பயம் இதெல்லாம் அல்லியினதும் ரத்னாவினதும் ஏற்பாடு தானோ என்றும் எண்ணத் தோன்றியது. ‘த்ரீ டீ ப்ராஜெக்ஷன் மெதட்டில் ஏதாவது உருவாக்கி இருப்பார்களா..? அந்த அளவுக்கு அவர்களுக்கு அறிவு இருக்கிறதா…’ என ஏகப்பட்ட கேள்விகள் அவரை வண்டாக குடைந்தன.
அலை பாய்ந்த மனதை அமைதிப்படுத்த வேண்டி, தன் மனைவிக்கு அழைத்தார் அவர். பத்து செக்கன்கள் காத்திருப்பின் முடிவில் காந்தமாய் கவர்ந்திழுத்தது குரலொன்று.
“சொல்லுங்க…”
“லவ் யூ டி…” என்றது தான் தாமதம், கெக்கப்பெக்கே என அளவுக்கு அதிகமான சிரிப்பு சத்தம் மறுமுனையில். அடுத்து ஒரு இருபது வினாடிகளுக்கு எந்த பதிலும் இல்லை மறுமுனையில்.
“என்னங்க… இன்னைக்கு நைட் டியூட்டிங்கறதால கால் பண்ண மாட்டேன்னு சொன்னீங்க… நீங்க கால் பண்ணவும், ஏதோ தேவைக்காக பேசறீங்கன்னு அசால்டா ஸ்பீக்கர்ல போட்டுட்டு இருக்கேன் நான்… இப்படி காலை வாரீட்டீங்களே…”
“ஏன்டீ, காதலிச்சு கல்யாணம் பண்ணின பொண்டாட்டிக்கு லவ் யூ சொன்னது ஒரு குத்தமாடி..?”
“நீங்க சொல்லுவீங்க… எல்லார் முன்னாடியும் எனக்கு தானே வெக்கமா போச்சு…”
“ஆமா, கேக்கணும்னு நினைச்சேன்… அது என்ன அவ்ளோ குரல் கேக்குது வீட்டுக்குள்ள… உன்னோட ரிலேட்டிவ்ஸ் வந்திருக்காங்களா என்ன..?”
“யோவ்…” என மறுமுனை எகிற, சட்டென சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கைப்பேசியின் வால்யூமை குறைத்தார் பூங்குன்றன். ஆனால் அந்தப் பக்கமோ இன்று இவரைப் பதம் பார்த்து விடும் நோக்கத்துடன் சரமாரியாக தாக்கத் தொடங்கி இருந்தது.
“நீயெல்லாம் ஒரு புருஷனாய்யா..? உனக்கெல்லாம் எதுக்கு காதல், எதுக்கு கல்யாணங்கறேன்…”
“ஹலோ… கயல்விழி தானே பேசறது..?”
“கயல்விழி தான்டா… உன் பொண்டாட்டி தான் பேசறேன்… என்னோட ரிலேட்டிவ்ஸ் மட்டுமில்ல, உன்னோட ரிலேட்டிவ்ஸும் தான் வந்திருக்காங்க வீட்டுக்கு… எதுக்குன்னு சொல்லு..?”
“அது வந்து… குழந்தை பிறக்கிறதுக்கு டாக்டர் இன்னும் ரெண்டு நாள்ல டேட் குடுத்து இருக்காங்க இல்ல… அதனால வந்திருப்பாங்க…” தட்டு தடுமாறி, ஒருவாறு கண்டுபிடித்து விட்டதால் தப்பித்துக் கொண்டார் பூங்குன்றன். இதனால் மறுமுனை கொஞ்சம் ஆசுவாசமடைந்திருந்தது.
“ம்ம்… நாளைக்கு லீவ் சொல்லிட்டீங்க தானே என்ன..?”
“வந்தும்மா… லீவு… கயலு… என்னன்னா… நான் நாளையின்னைக்கு வந்தா போதாதா உனக்கு…”
கால் கட் ஆனதற்கான சத்தம் வர, ‘நல்லவேளை திட்டாம ஃபோன வச்சுட்டா…’ என தன்னைத் தானே சமாதானப்படுத்திய மனதை கேவலமாகப் பார்த்து வைத்தது மனசாட்சி. ‘முதல்ல நல்லா தானே பேசுனா… அப்பறம் ஏன் கேவலமா திட்டுனா..?’ என தப்பே செய்யாத குழந்தை போல, வஞ்சகம் இல்லாமல் தனக்குள் ஒரு கேள்வியையும் கேட்டு வைத்துக் கொண்டார் பூங்குன்றன்.
எங்கெங்கோ அலைபாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து மீண்டும் அத்திப்பட்டு கிராமத்தில் கொண்டு வந்து நிறுத்தினார் அவர். நாளைக்கு, தான் கண்ட கனவைப் பற்றியும் அதன் மூலம் தான் எடுத்து வைத்திருக்கும் ஒரு சில முடிவுகள் பற்றியும் அன்பழகனுடன் பேச வேண்டும் என தீர்மானம் செய்து கொண்டார். அதற்குள் இன்று ஏதேனும் ஒரு உயிர் காவு வாங்கப்பட்டு விடுமோ என்ற பயம் மெல்லமாய் மனதை ஊடறுத்தது.
‘பேசாம இன்னைக்கு நம்ம ஒரு தடவ ஊருக்குள்ள ரவுண்ட்ஸ் போய்ட்டு வந்தா என்ன..?’ என்றது ஒரு மனது. ‘போகவே போகாதே..’ என ஆழ்மனது அடித்துச் சொன்னது பாவம் அப்போது அவர் காதிற்கு எட்டாதது தான் கொடுமை. இரு மனப் போராட்டங்களுக்கு மத்தியில், கடைசியாக போவதென முடிவு செய்து கொண்டு கிளம்பி விட்டார் பூங்குன்றன்.
ஜீப்பை எடுத்துக் கொண்டு சென்றால், எங்கே அதன் சத்தம் யாருடைய தூக்கத்தையும் கெடுத்து விடுமோ என்று எண்ணி, ஸ்டேஷனில் இருந்த ஒரு ஏட்டையாவின் சைக்கிளை வாங்கிக் கொண்டு கிளம்பினார் அவர். ஏனோ கிளம்பும் போது, என்றுமே இல்லாமல் இன்று அலாதியாய் அந்த போலீஸ் ஸ்டேஷனை பார்த்து கொண்டே இருக்கலாம் போல ஒரு எண்ணம் தோன்றியது. ‘என்னடா, வழமையை விட அழகா இருக்கிற மாதிரி இருக்கு…’ என தனக்குள்ளேயே வியந்து கொண்டவர், சைக்கிளை மிதித்தார்.
சொற்ப நேரத்திலேயே ஊருக்குள் வந்திருந்தவர், ஒவ்வொரு வீட்டுப் பாதையையும் சைக்கிளிலேயே சுற்றி வந்தார். அதில் பிரதானமாக உள்ளடங்கி இருந்தது அல்லியின் வீடு தான். நேரம் ஒன்பது மணியைத் தொட்டிருக்க, பெரும்பாலான வீடுகளில் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சப்தம் அடங்கி, வீட்டில் சுடர் விட்டுக் கொண்டிருந்த மின் குமிழ்கள் ஒவ்வொன்றாக அணைந்த போது நேரம் பத்தைத் தொட்டு விட்டிருந்தது. அதுவரைக்கும் அங்கே தான் சுற்றிக் கொண்டிருந்தார் பூங்குன்றன். வீசிக் கொண்டிருந்த காற்று என்னமோ சுகந்தமாகத் தான் இருந்தது, ஆனால் அதை அனுபவிக்கும் மனநிலை தான் இல்லை அவரிடத்தில்.
கிட்டத்தட்ட மொத்த மின்குமிழ்களும் அணைந்திருந்த நிலையில் சற்றுத் தள்ளி அமைந்திருந்த ஸ்ட்ரீட் லைட் மாத்திரம் பிரகாசமாக சுடர் விட்டுக் கொண்டிருந்தது. சட்டென ஒரு நொடியில் அதுவும் அணைந்து போக, பகீரென்றானது பூங்குன்றனுக்கு. மெல்ல கண்களை இருட்டுக்கு பழக்கப் படுத்திக் கொண்டு பார்த்திருந்தவருக்கு, அந்த லைட் போஸ்டின் கீழ் யாரோ நின்றிருப்பது போல் தெரிந்தது.
‘முன்னே சென்று பார்க்கலாமா..?’ என நினைத்த மாத்திரத்திலேயே அந்த எண்ணத்தைக் கை விட்டு, ‘பேசாமல் திரும்பிச் சென்று விடலாம்’ என்ற எண்ணத்தில் சைக்கிளைத் திருப்ப எத்தனித்தவர் டயர் இரண்டும் பஞ்சராகி இருந்ததை அப்போது தான் கவனித்தார். ‘ஏதோ சரியில்லை’ என சர்வ நிச்சயமாய் புரிந்து போயிற்று அவருக்கு. கிட்டத்தட்ட அவரது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதை ஆழ்மனது பறை சாற்ற, முடிந்த வேகத்தில் அன்பழகனுக்கு தகவல் சொல்லி விட நினைத்து அவருக்கு அழைத்தார் பூங்குன்றன். அழைப்பு செல்லாமலேயே துண்டிக்கப்பட, இரண்டு முறை முயற்சி செய்து பார்த்து பின் அதை கை விட்டார் அவர்.
சட்டென்று ஒரு உத்தி தோன்ற, கைப்பேசி கேமராவில் வீடியோவை ஆன் செய்து, முன்னின்ற உருவத்தை நோக்கி உயர்த்தினார் பூங்குன்றன். ஆனால் அங்கு எதுவுமே இல்லாமல் இருக்க, திகைத்துப்போய் கேமராவை இறக்கி விட்டு பார்க்க எதிர்பாரா நொடியில் சடாரென்று வந்து கண்முன் இறங்கியது பெயர் சொல்ல முடியாத ஒரு உருவம். காலையில் அட்டைக் கருப்பாக கண்டிருந்த அந்த உருவத்தை, இத்தனை சீக்கிரத்தில் நேரில் பார்ப்போம் என எண்ணி இருக்கவில்லை அவர்.
பூங்குன்றன் பயத்தில் திரும்பி ஓட எத்தனிக்க, அவர் தலையைப் பிடித்து முடிந்தளவு வேகத்தில் அருகிலிருந்த போஸ்டரில் மோதியது ‘அது’. சிதறு தேங்காய் போல் தலை வெடித்துச் சிதற, அக் கணத்திலேயே பூங்குன்றனின் உயிர் அவரிடமிருந்து பிரிந்திருந்தது.
கடைசி நொடியில், நிறைமாத கர்ப்பிணியாய் தலை நிறைய மல்லிப்பூ சூடி, நெற்றி நிறைந்த குங்குமத்துடன் கயல்விழியின் புன்னகை முகம் மனக் கண்ணில் தோன்ற, அவளிடம் மன்னிப்பை யாசிக்கக் கூட அவகாசம் இல்லாது அவசர அவசரமாய் அவரது வாழ்க்கை அகாலமாய் முடிவுற்றிருந்தது..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.