Episode 24

ஶ்ரீ துர்க்கா | 29 Jan 2026 | Share

அல்லி 24

அத்திப்பட்டு 

பூங்குன்றன், அன்பழகன், காருண்யா மூன்று பேரும் பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“சித்தார்த்தன் ஐயா சொன்னது சரிதான்.‌ என்னதான் அவர் சொன்னதை நான் நம்பினாலும், ஏதாவது ஒரு விதத்துல அது அவரோட பிரம்மையா இருக்குமோன்னு கூட தோணுச்சு… ஆனா தான்யாவும் அதையே சொன்னப்ப தொண்ணூறு வீதம் அத நம்ப தோணுச்சு… இப்ப ஹான்ட்ரட் பர்சன்டேஜ் ஷ்யூரா, நம்ம ஏரியா ஹான்டட்னு (haunted) தெரியுது. இதுக்கு அடுத்த நடவடிக்கை என்னனு நம்ம கூடிய சீக்கிரமே முடிவு பண்ணணும் அன்பு…”

“ஆமா சார்… நான் விசாரிச்சு பாக்கிறேன், இந்த மாதிரி மீடியம் கூட கான்டாக்ட் பண்றவங்க, பேய் விரட்டறவங்க… அப்படிப்பட்ட ஆளுங்க யாராவது இருக்காங்களான்னு தேடிப் பாக்கறேன்… அடுத்த பிரச்சினை வர்றதுக்குள்ள நம்ம இதுக்கொரு முடிவு கட்டியாகணும் சார்… அதே நேரம் இதை மேலிடத்துக்கு எப்படி புரிய வைக்கறதுன்னும் யோசிக்கணும்…”

இருவரும் தங்களுக்குள் பேசி விட்டு, காருண்யாவையும் தனியாக இருக்க வேண்டாம் என எச்சரித்து விட்டு கிளம்பினர். 

மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைய ஆரம்பித்திருந்தது அவர்களது ஜீப். செல்லும் வழியில் அன்பழகனுக்கு கால் வர, அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தார் அவர். சாலையில் கவனத்தை பதித்து வண்டியை செலுத்திக் கொண்டிருந்த பூங்குன்றனுக்கு அவர் பேசுவது அரைகுறையாக காதில் விழுந்தது. முழுமையாகப் புரியா விட்டாலும், அன்பழகன் பதற்றமாகப் பேசியதிலிருந்து ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் புரிந்தது. ஐந்து நிமிடங்கள் கழித்து ஃபோனை வைத்து விட்டு கவலையாய் பூங்குன்றனை ஏறிட்டார் அன்பழகன். 

“என்னாச்சு அன்பு… ஆர் யூ ஓகே..?”

“இல்ல சார்… ஐம் நாட் ஓகே… வீட்டுல இருந்து தான் கூப்பிட்டு இருந்தாங்க சார்… என் பையன் ரொம்ப நாள் என்னைப் பாக்கலன்னு அடம் பிடிச்சானாம்… அவனை என்ன பண்ணியும் சமாதானப்படுத்த முடியாம பையனைக் கூட்டிக்கிட்டு, என் பொண்டாட்டி ஊருல இருந்து கிளம்பி இருக்கா… வர்ற வழில அவங்க வந்த பஸ் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சாம் சார்…”

“அச்சச்சோ… உன்னோட ஒய்ஃபும் பையனும் நல்லா இருக்காங்க தானே… பஸ்ல இருந்தவங்க சேஃப் தானே..? யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையே…” என்ற பூங்குன்றனையும் பதற்றம் தொற்றி இருந்தது. 

“எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு தான் சார் சொல்றாங்க… ஆனா எனக்கு என்னமோ பயமா இருக்கு… இவளுக்கு கால் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டேங்கறா… அதுவும் இல்லாம, அவங்க நிஜமாவே சேஃபா இருக்காங்கன்னா என் பொண்டாட்டி முதல்ல எனக்கு தான் சார் கால் பண்ணி விசயத்தை சொல்லி இருப்பா… மனசே சரியில்லை சார்… இந்த நாளே புடிக்கல எனக்கு…”

“அன்பு..! ரொம்ப யோசிக்காத நீ… அவங்க பத்திரமா தான் இருப்பாங்க… உன்னோட நல்ல மனசுக்கு கடவுள் அவங்கள நல்லா தான் வச்சுக்குவார்… ஒண்ணு பண்ணலாம்… நான் ஸ்ட்ரெய்டா உன்னை கொண்டு போய் பஸ் ஸ்டான்ட்ல இறக்கி விடறேன்… நீ ஊருக்கு கிளம்பு… அங்க போய் அவங்க கிட்ட ரீச் ஆகிட்டு எனக்கு கால் பண்ணு… இங்கேயே இருந்தா நீயும் நிம்மதியா இருக்க மாட்ட, எனக்குமே உன் ஃபேமிலிய நினைச்சு ரொம்ப யோசனையா இருக்கும்… யார் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லிக்கிறேன்… நீ ஊருக்கு கிளம்பு…” என்றவர், அன்பழகனின் பதிலையும் எதிர்பாராமல் பஸ் நிறுத்தத்தை நோக்கி வண்டியைத் திருப்பினார்.

அன்பழகனும் எதுவும் பேசவில்லை. அவருக்குமே இப்போது ஊருக்கு சென்று மனைவியையும் மகனையும் பார்த்தால் தான் மனது ஆறும் என்று தோன்றியது. பேருந்து நிறுத்தத்திற்கு கொண்டு வந்து வண்டியை நிறுத்தியவர், சரியான வண்டியைப் பார்த்து அன்பழகனை ஏற்றி விட்டார். கான்டாக்டருடன் பேசி அவனை சரியான இடத்தில் இறக்கி விடும்படி கூறியவர், எத்தனை மணிக்கு பஸ் இங்கிருந்து கிளம்பும், எத்தனை மணிக்கு ஊருக்கு சென்று சேரும் என எல்லா விபரங்களையும் கேட்டுக் கொண்டு அன்புவிடம் வந்தார்.

“அன்பு, இப்போ மணி பத்தரை… பதினொரு மணிக்கு தான் பஸ் கிளம்புமாம், உங்க ஊருக்கு போய் சேர முக்கால் மணி நேரம் கணக்கு சொன்னாங்க… எதுவும் யோசிக்காத சரியா..? உன் ஒய்ஃபும் குழந்தையும் பத்திரமா இருப்பாங்க… இந்தா, டைரக்டாவே உன்னை பஸ் ஸ்டான்ட்கு கூட்டிட்டு வந்துட்டேன்ல… இந்தப் பணத்தை இப்போதைக்கு வச்சுக்கோ… ஏதும் தேவைனா தயங்காம கேளு, நான் ஜீ பே பண்ணிடறேன்…”

“சார்… இதெல்லாம் எதுக்கு சார்… என்கிட்ட பணம் இருக்கு… இவ்ளோ தூரம் என்னை கன்சிடர் பண்ணி யோசிக்கிறதே போதும் சார்…”

“பரவால்ல வச்சுக்கோ… சாரி, இங்க இருக்கிற பிரச்சினைகளால என்னால உடனே உன்கூட கிளம்ப முடியல… பட் கண்டிப்பா நான் அவங்கள வந்து பாப்பேன்… சின்னு கிட்ட சொல்லி வை, ‘அங்கிள் கூடிய சீக்கிரமே உன்னை வந்து பாப்பாங்க’ன்னு…”

“சரிங்க சார்… நீங்களும் சேஃபா இருங்க… இங்க ஒரு புதுப் பிரச்சினை கிளம்பி இருக்கிற நேரம் பாத்து, உங்களை தனியா விட்டுட்டு போற மாதிரி ஃபீல் ஆகுது…”

“ச்சே, குழந்தையா நானு… முதல்ல போய் உன் பொண்டாட்டி புள்ளைய பாரு… நான் இங்க கவனிச்சுக்கறேன்…”

“ம்ம்…”

சற்று நேரம் அங்கிருந்து விட்டு, பேருந்து கிளம்பிய பின்னர் தான் திரும்பினார் பூங்குன்றன்.‌ அன்பழகன் ஊருக்கு சென்று, அவரது குடும்பத்தினர் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்லும் வரை இவருமே ஒரு நிலையில் இருக்கப் போவதில்லை. நேரே ஸ்டேஷனுக்கு வந்தவர், முதலில் சென்று கைகால்களை அலம்பி விட்டு வந்தார். பசி வயிற்றைக் கிள்ளியது. இன்று காலையிலேயே ஊருக்குள் சென்றிருக்க, காலை உணவைக் கூட இன்னும் எடுத்திருக்கவில்லை. 

தனது சாப்பாட்டு பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வந்தவர், மேஜையில் அமர்ந்து அதை உண்ண ஆரம்பித்தார். வழமையாக அன்புவும் அவரும் ஒன்றாக அமர்ந்து தான் உணவருந்துவார்கள், இன்று தனிமையில் உண்பது என்னவோ போல் இருந்தது. அன்பழகன் இன்னும் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லையே என்ற எண்ணம் வேறு தோன்ற, பசி இருந்தும் சாப்பிட மனம் வரவில்லை அவருக்கு. அதற்கு மேல் உணவு உள்ளே இறங்காதிருக்க பாதியிலேயே எழுந்து கொண்டவர், ஸ்டேஷனுக்கு வெளியே நின்றிருந்த நாய் ஒன்றிற்கு மீத உணவை வைத்து விட்டு வந்து தனது நாற்காலியில் கண்மூடி அமர்ந்தார். கண்களுக்குள் விம்பமாய் வந்து நின்றது அந்த கருப்பு உருவம்..!

மனது ஒரு மாதிரி சஞ்சலமாக இருந்தது. அதற்கு காரணம், ஊருக்குள் ஊடுருவி விட்டிருந்த புது பிரச்சினையா அல்லது அன்பழகனின் குடும்ப பிரச்சினையா அல்லது அதையும் தாண்டி வேறு ஏதேனும் ஒன்றா..? எதுவும் தெரியவில்லை அவருக்கு. சற்று நேரம் படுத்தால் தேவலாம் போல் இருந்தது. ஆனால் சப் இன்ஸ்பெக்டரும் ஸ்டேஷனில் இல்லாத போது, ஆன் டியூட்டி டைமில் பக்கத்திலிருந்த அவரது குவாட்டர்ஸ்க்கு சென்று தூங்குவது அவ்வளவு உவப்பானதாக இல்லை அவருக்கு. கொஞ்ச நேரம் இழுத்துப் பிடித்து சமாளித்தவர், அதற்கு மேல் முடியாமல் நாற்காலியில் இருந்து எழுந்தார்.

ஸ்டேஷனில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள் ஜெயந்தனை அழைத்தார் அவர்.

“சொல்லுங்க சார்” என்றபடியே நிமிர்ந்த நடையில் வந்து சல்யூட் அடித்தார் ஜெயந்தன். 

“காலையிலேயே வேலைக்கு கிளம்பினது கொஞ்சம் ஸ்ட்ரெஸா… ஒரு மாதிரி டயர்டா இருக்கு…‌ அன்புவும் ஒரு பர்ஸனல் விசயமா ஊருக்கு போய்ட்டார்… நான் கொஞ்சம் குவாட்டர்ஸ்க்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்… ஸ்டேஷனோட ரெஸ்பான்ஸிபிளிட்டிய நீங்க பாத்துக்கறீங்களா..?”

“கண்டிப்பா சார்… நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு வந்து ஜாய்ன் பண்ணிக்கங்க… அதுவரைக்கும் நான் மேனேஜ் பண்ணிக்கறேன்…”

“தாங்க் யூ சோ மச்…” 

குவாட்டர்ஸ்க்கு வந்தவர், போலீஸ் உடையை களைந்து குளியல் ஒன்று போட்டு விட்டு சாதாரண உடைக்கு மாறினார். அதன் பின்னர் வந்து கட்டிலில் விழுந்தது தான் தெரியும். மீண்டும் பூங்குன்றன் எழும்பிய போது மணி பிற்பகல் ஏழாகி விட்டிருந்தது. ‘அம்மாடியோவ், இவ்ளோ நேரமாவா தூங்கினோம்..? பொறுப்பான போலீஸ் உத்தியோகத்தரா நடந்துக்கோ பூவு‌…’ என தன்னைத் தானே நொந்தபடி ஓடிப்போய் மீண்டும் ஒரு குளியலைப் போட்டார் பூங்குன்றன். 

                      ✯✯✯✯✯✯

பெரிய பெரிய மூச்சுகளாக வாங்கியபடி ஆழமாய்க் குழி தோண்டிக் கொண்டிருந்தாள் அல்லி. அருகில் வியர்த்து விறுவிறுக்க, சுற்றும் முற்றும் யாரேனும் வருகிறார்களா என நோட்டம் விட்டபடி அல்லியைத் துரிதப் படுத்திக் கொண்டிருந்தாள் ரத்னா. இடை இடையில் அவளும் மண்வெட்டியை வாங்கி இரண்டு மூன்று முறை கொத்தி, குழியை விரிவுபடுத்தினாள். கிட்டத்தட்ட ஒரு ஆளைப் புதைத்து விடக் கூடிய அளவுக்கு விஸ்தாரமான குழி அது. 

“போதும்னு நினைக்கறேன் ரத்னா…” என்ற அல்லி, நின்று நிதானித்து சற்றே இழுத்து மூச்சு விட்டாள். 

“சரி… வா, நீ கை ரெண்டையும் பிடி… நான் காலைப் பிடிச்சு தூக்கறேன்…”

“ம்ம்…”

சற்று தள்ளி நடந்து வந்திருந்தவர்கள், குப்புற விழுந்து கிடந்த அந்த உருவத்தை மெல்ல புரட்டினார்கள். 

                    ✯✯✯✯✯✯

உலுக்கிப் போட்டபடி கண்களைத் திறந்தார் பூங்குன்றன். திறந்திருந்த ஷவரிலிருந்த தண்ணீர் அவர் தலையிலிருந்து முகத்தை நனைத்து உடலை தீண்டி மீண்டு கொண்டிருந்தது. சற்று முன்னர் தூக்கத்தில் அரைகுறையாக கண்டிருந்த கனவு, இப்போது தான் தெளிவாக அவர் மூளைக்கு புலனாக ஆரம்பித்திருந்தது‌. 

அல்லியும் ரத்னாவும் சிரமப்பட்டு புரட்டிப் போட்ட அந்த உருவம், அவர்களது பெரியாத்தா..! கடைவாயில் ரத்தம் வழிந்திருக்க, ஒரு மாதிரி கோணிய நிலையில் இறந்திருந்தார் அவர்.‌ அவர் இறந்து எத்தனையோ நாட்களின் பின் ஏன் இப்படி ஒரு கனவு வந்தது என்று தெரியவில்லை பூங்குன்றனுக்கு. ஆரம்பத்தில் இருந்து அல்லியையும் ரத்னாவையும் அவர் சந்தித்த ஒவ்வொரு நொடிகளாக நினைவு கூர்ந்து பார்த்தார் அவர். 

முதல் தடவை அவர் அவளைப் பார்த்தது தென்றல் தொடர்பான விசாரணையின் போது தான். நன்றாக நினைவுபடுத்தி அந்த தருணத்தை நினைவுக்கு கொண்டு 

வந்தார் பூங்குன்றன். முதலில் அவள் சாதாரணமாக தான் இருந்தாள், அந்த போட்டோவை அவர் காட்டுவார் என கொஞ்சம் கூட‌ எண்ணி இருக்கவில்லை போலும். அந்த போட்டோவில் இருந்த பெண்ணை பார்த்த பின் தான் அவளுக்கு மூச்சிறைக்க ஆரம்பித்திருந்தது. அன்று தென்றல் காணாமல் போனது தொடர்பான வழக்கை அவ்வளவு ஆழமாக விசாரிக்க நினைத்திருக்கவில்லை பூங்குன்றன். சம்பந்தமே இல்லாத ஏற்காட்டுக்கும் அத்திப்பட்டுக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றியது. அந்த அலட்சியம் தான் இன்று இத்தனை தொலைவுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறதோ..? 

‘ஒரு வேளை, நாம் நினைப்பது போல் அந்த அல்லியும் ரத்னாவும் அவ்வளவு நல்ல பெண்கள் கிடையாதோ… அவர்களிடம் வெளியில் வராத ரகசியங்கள் ஏதேனும் புதைந்து கிடக்கிறதோ… அந்தி நேரத்துல மலர்றதால அல்லி ஒண்ணும் வெளிச்சத்துக்கு வராம போய்டறதில்ல… இவங்க கிட்ட என்னமோ மர்மம் இருக்கு… நாம நினைக்கற மாதிரி சாதாரணப்பட்டவங்க இல்லை அவங்க…’ 

முதல்முறையாக, அந்த சந்தேகம் விதையாக விழுந்த கணத்திலேயே வேர் விட ஆரம்பித்திருந்தது பூங்குன்றனுக்கு..! 

      

              ✯✯✯✯✯✯

                                     – அல்லி மலரும்…

    No comments yet.