Episode 23

ஶ்ரீ துர்க்கா | 20 Jan 2026 | Share

அல்லி 23

ஏற்காடு 

இவ்வளவு நேரமும் சற்று பொறுமையாய் விசாரித்துக் கொண்டிருந்த இனியாவின் முகத்தில் இப்போது கடுமை வந்திருந்தது. அவள் அருகில் வாசுதேவன் அமர்ந்திருக்க, அவர்களுக்கு முன் ‘கலைமகள் கலைக்கூடம்’ தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியரும், பத்தாம் வகுப்பிற்கு கல்வி கற்பிக்கும் அத்தனை ஆசிரியர்களும், அந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் தலைகுனிந்து நின்றிருந்தனர்.

எல்லோரையும் ஏறெடுத்து ஒரு முறை பார்த்தவள், “யாரோ ஒரு பொண்ணு… ஸ்கூலுக்கு வந்தா என்ன, வராமப் போனா உங்களுக்கு என்ன… இல்ல..?” 

அத்தனை காட்டமாக அவள் கேட்க, பதில் சொல்லும் தைரியம் தான் யாருக்கும் இல்லை அங்கே. 

“ஏன் மிஸ், நீங்க தானே இவங்களுக்கு க்ளாஸ் டீச்சர்… உங்க ஸ்டூடன்ட் ஒருத்தங்க ரொம்ப நாள் ஸ்கூலுக்கு வரலன்னா என்ன ஏதுன்னு விசாரிக்க வேண்டாமா..? ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல… ஒரு கிழமையா அந்தப் பொண்ணு ஸ்கூலுக்கு வரல… நீங்க அதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கிறதுக்கோ, அந்தப் பொண்ண கான்டாக்ட் பண்றதுக்கோ என்ன ஸ்டெப்ஸ் எடுத்தீங்க… சொல்லுங்க..?”

இனியா அளவுக்கு கடுமை காட்டாது விட்டாலும், வாசுதேவனும் கண்டிப்பாகத் தான் கேட்டிருந்தார்.

இப்போது கொஞ்சமாக வாயைத் திறந்தார் அவர்களது வகுப்பாசிரியையான ஶ்ரீமதி.

“இங்க ஒவ்வொரு க்ளாஸ் ஸ்டூடன்ட்ஸ் க்கும் அட்டென்டன்ட்ஸ் ரெஜிஸ்டர் மெய்ன்டெய்ன் பண்ணுவோம் சார்… அந்த ரெஜிஸ்டர்ல அந்த ஸ்டூடன்டோட அட்ரெஸ், ஃபோன் நம்பர் அப்படின்னு எல்லா டீடெய்ல்ஸும் இருக்கும்… அப்படி அதுல இருந்த கான்டாக்ட் நம்பரை எடுத்து நான் ஆரக்ஷாவுக்கு கால் பண்ணிணேன் சார்… பட் அவங்க ஃபோன் நாட் ரீச்சபிள்னு வந்துச்சு…‌ ரெண்டு மூணு வாட்டி ட்ரை பண்ணி பாத்தேன்… அவங்க யாரும் ஆன்ஸ்வர் பண்ணல…”

“ஒரு ரெஸ்பான்ஸிபிள் பர்சனா ரிப்ளை பண்ணுங்க மிஸ்… கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, உங்களுக்கு புரியணும்னு தான் சொல்றேன்… இப்போ உங்க பொண்ணு ஒரு க்ளாஸ்க்கு போயிருக்கா… வழமையா வர்ற டைமுக்கு வரல… சரி ஃப்ரண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சுட்டு லேட்டா வருவா, கடைக்கு போயிருப்பா, மே பீ க்ளாஸ் லேட்டா முடிஞ்சிருக்கலாம் அப்படி இப்படின்னு நினைச்சு உங்கள நீங்களே மேக்ஸிமம் ஒரு ஒன் அவர் சமாளிப்பீங்களா… அதுவே அதிகம் தான்… என்னாச்சோ ஏதாச்சோன்னு உள்ளுக்குள்ள பதறாது… அதுவே இன்னும் ஒரு மணி நேரம் கடந்திச்சுன்னா..? எவ்வளோ தேடுவீங்க..? திரும்பவும் உங்க பொண்ண பாக்கற வரை உங்க உயிர் உங்ககிட்ட இருக்காதுல்ல..? உங்க பொண்ணு மாதிரி தானே இந்தப் பொண்ணும்…‌ நீங்க க்ளாஸ் டீச்சர்னா இவங்க எல்லாரும் உங்க குழந்தைங்க தானே மிஸ்..? உங்கள நம்பி தானே ஒவ்வொரு பேரண்ட்ஸும் தங்களோட குழந்தைங்கள ஸ்கூலுக்கு அனுப்பறாங்க…”

வாசுதேவன் பேசப் பேச தலைகுனிந்து நின்றிருந்தார் கல்யாணி. அவ்வளவு பேசியும் ஆற்றாது வாசுதேவனே தொடர்ந்தார்.

“நான் இந்த மிஸ்ஸ மட்டும் சொல்லல… அவங்க க்ளாஸ் டீச்சர்ங்கிறதால தான் அவங்கள மட்டும் மெய்னா பாத்து சொன்னேன்… ஆனா இந்த வார்த்தைகள் ஒவ்வொண்ணும் உங்க எல்லாருக்குமே பொருத்தமானது தான். யாருக்காவது அந்தப் பொண்ணப் பத்தி தெரிஞ்சுக்கணுங்கற அக்கறை கொஞ்சமாச்சும் இருந்திச்சா… ஏம்மா, இத்தனை பிள்ளைங்கள் படிக்கறீங்களே, கூடப் படிக்கிற பொண்ணு ரொம்ப நாளா க்ளாஸ் வரலன்னா என்ன ஏதுன்னு கேக்கிறதில்லையா..?” ஆதங்கமாய் கேட்டார் வாசுதேவன். ஏனோ, இந்த அலட்சியத்தை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ‘எப்படிப் போனால் நமக்கென்ன..?’ என்று கூடவே இருக்கும் ஒரு உயிரை யாராலும் விட்டுவிட முடியுமா என்ன..? இவர்களால் முடிந்திருக்கிறதே..! நினைக்க நினைக்க ஆற்றவில்லை அவருக்கு.

“சா..ர்..” 

ஒரு மாணவி தயக்கமாக அழைக்க, எல்லோரது கவனமும் அவள் மேல் குவிந்தது.

“ம்ம் சொல்லும்மா…” என்றவருக்கு, அவளாவது அந்த ஆரக்ஷாவின் வீடு வரைக்கும் சென்று விசாரித்திருக்க மாட்டாளா என்ற நப்பாசை தான்.

“சார் நான் பானுமதி… ப்ரைமரில இருந்து இங்க தான் படிக்கிறேன்… ஆரக்ஷா இடைவகுப்புல எங்க கூட வந்து சேர்ந்துக்கிட்ட பொண்ணு தான்… அவ ரொம்ப ரிசர்வ் டைப் சார்… யாரு கூடவும் சேர் மாட்டா, யார் கிட்டவும் பேச மாட்டா, எங்க கூட சேர்ந்து சாப்பிட மாட்டா, விளையாட மாட்டா…‌ நம்ம எல்லார்கிட்டயும் இருந்து தள்ளியே இருப்பா… அவ்ளோ நல்லா படிக்கற பொண்ணும் கிடையாது… எதுலயும் அவ ஒரு இன்டிமசி காட்டினது கிடையாது… இன்னும் சொல்லப் போனா, அந்த குட்டிப்பாப்பா சொல்லிச்சு இல்ல, ‘அந்த அக்கா நல்லா பாட்டு பாடுவாங்க’ன்னு… அவ நல்லா பாடுவான்னே எங்களுக்கு அந்த ஒரு ப்ரோகிராம்ல தான் தெரியும்… அன்னைக்கு நாங்க எல்லாரும் கை குடுத்து அவள விஷ் பண்ணோம்… உலக அதிசயம் மாதிரி, அன்னைக்கு தான் அவ சிரிச்சதையே நாங்க பாத்தோம் சார்… அதுக்கப்புறம் அவ வழமை மாதிரியே ஆகிட்டா… நாங்களும் அவ்ளோ அட்டாச் ஆகல… இதுதான் சார் அவள நாங்க தேடிப் போகாததுக்கு காரணம்… மே பீ அவ அவளோட ஊருக்கு கூட போய் இருக்கலாம்… அவ தான் எங்க கிட்ட சொல்லிட்டு போற ரகம் கிடையாதே..?”

“சரி… அவ இன்டிமேட்டா பேசல… நீங்க எல்லாரும் எத்தனை வாட்டி இன்டிமேட்டா அவ கூட பழக ட்ரை பண்ணிணீங்க..?” என்றாள் இனியா அந்த பானுமதியை அளவிடும் பார்வையுடன்.

“கிட்டத்தட்ட ஒன் மன்த்தா ட்ரை பண்ணி இருப்போம் மேடம்… செட் ஆகல… அதனால…”

“அதனால அப்படியே விட்டுட்டீங்க… இல்லையா..?”

‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள் அந்த மாணவி. அவளுக்கு பதில் சொல்லும் நோக்குடன் இனியாவே தொடர்ந்தாள்.

“உங்க கூட படிக்கிற பொண்ணு அவ்ளோ சைலண்டா இருக்கான்னா கண்டிப்பா அதுக்கு பின்னாடி ஏதாவது பெரிய காரணம் இருக்கும்… அது என்னன்னு தெரிஞ்சுக்க தோணலயா உங்களுக்கு..? அதுல இருந்து அவள வெளிய கொண்டு வரணும், அவளும் நம்மள்ல ஒருத்தியா, நம்மள மாதிரி ஹேப்பியா இருக்கணும்னு நினைக்கலயா நீங்க… ஃப்ரண்ட்ஸ்குள்ள இறங்கிப் போறதுல தப்பில்லையே… அவ்ளோ அழகா அந்தப் பொண்ணால பாட முடியுதுன்னா, அதை விட அழகா அவளால பேசவும் முடியும்னு உங்கள்ல ஒருத்தருக்கு கூடவா தெரியாம போச்சு… ஒரு நல்ல நண்பனால சக மனுஷனை எந்த உயரத்துக்கும் கொண்டு போக முடியும்… அதுக்கான சின்ன முயற்சியைக் கூட நீங்க எடுக்கலங்கறது தான் இங்க வருத்தப்பட வேண்டிய விசயம்… உங்களை நீங்களே செல்ஃப் அனலைஸ் பண்ணி திருத்திக்கோங்க…” என்றவள், பத்தாம் வகுப்பின் வகுப்பாசிரியையான ஶ்ரீமதியைப் பார்த்து, “நீங்க அந்தப் பொண்ணோட அட்ரஸையும் ஃபோன் நம்பரையும் கொஞ்சம் எழுதிக் குடுங்க மிஸ்… மத்தத நாங்க பாத்துக்கிறோம்…” என ஆணையிடும் தொனியில் சொன்னாள்.

அவர் அதை ரெஜிஸ்டரில் பார்த்து எழுதிக் கொடுத்த கையுடன், “உங்க எல்லோரோட கோ-ஆப்பரேஷனுக்கு ரொம்ப நன்றி…” என சொல்லிக் கொண்டு கிளம்பியும் விட்டாள்.

“என்ன மேடம், அந்தப் பொண்ணு ஆரக்ஷா பத்தி நீங்க ரொம்ப யோசிக்கிற மாதிரி இருக்கு…”

ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்து கார் ஓட்டிக் கொண்டிருந்த வாசுதேவன் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த இனியாவைப் பார்த்து கேட்டார்.

“ஆமா சார்… சின்னப் பொண்ணு அவ… அவளுக்கு ஏதோ பெரிய பிரச்சினை இருந்திருக்கு… அதை சொல்றதுக்கு சரியான பர்ஸன் கிடைக்காதது தான் அவளுக்கு இவ்ளோ தூரம் க்ளாஸ்மேட்ஸ் கிட்ட டிஸ்டன்ஸ் கொண்டு வந்திருக்கு… அவளை ஒட்டுமொத்தமா சேர்ந்து எல்லாரும் கண்டுக்காம விட்டுட்டாங்களேன்னு தான் ஆதங்கமா இருக்கு எனக்கு…”

என்னதான் இனியா வேலை விடயத்தில் சொந்த உணர்வுகளை மூட்டை கட்டி வைத்திருந்தாலும், பத்தாம் வகுப்பு மாணவி என்னும் போது அவளை குழந்தையாகத் தான் எண்ணத் தோன்றியது. தென்றலை காணவில்லையே என்ற வருத்தம், அவளைக் கண்டு பிடிக்க வேண்டுமே என அவர்களுக்கு இருந்த ஆர்வம், அதில் பாதி கூட ஆரக்ஷாவுக்காக இல்லை என்பதை இனியாவால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

“அந்தப் பொண்ணுக்கு கால் ரீச் ஆகலையா மேடம்..?”

“இல்ல சார்… ரெண்டு வாட்டி ட்ரை பண்ணேன்… நாட் ரீச்சபிள்னு தான் வருது… அவங்க லொக்கேஷன் ரீச் ஆக இன்னும் எவ்ளோ நேரம் இருக்குன்னு மேப் காட்டுது..?

“அஞ்சே அஞ்சு நிமிஷம் மேடம்…” என்றவர் லாவகமாக காரை செலுத்த, சரியாக ஐந்து நிமிடங்களில் அந்த பிரம்மாண்டமான வீட்டின் முன் வந்து நின்றிருந்தது அவர்களது மகிழுந்து. காரிலிருந்து இறங்கி, லொக்கேஷனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தாள் இனியா. அதற்குள் காரை கொண்டு சென்று வசதியாக நிறுத்தி விட்டு வந்தார் வாசுதேவன்.

அதே சமயம் வீட்டு வாசல் கதவை திறந்து எட்டிப் பார்த்தார் ஒரு பெரியவர். 

“வணக்கம் ஐயா… நான் இனியா, க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர்… இவங்க இன்ஸ்பெக்டர் வாசுதேவன்… நாங்க ரெண்டு பேரும் ஒரு கேஸ் விசயமா மிஸ் ஆரக்ஷாவ பாத்துட்டு போலாம்னு வந்தோம்…”

“ஆரக்ஷா..?” என கேள்வியாய் இழுத்தார் பெரியவர். “அப்படி யாரும் இங்க இல்லையேம்மா… வந்து என்னன்னா, நாங்களே இங்க குடி வந்து கிட்டத்தட்ட ஒரு கிழமை தான் வரும்… மே பீ அவங்க அதுக்கு முன்னாடி இங்க இருந்திருக்கலாம், இல்லன்னா இந்த சரவுண்டிங்ல வேற எங்கேயாவது இருக்கலாம்…” என்றார் அவரே தொடர்ந்து.

“வீட்டோட நம்பர் இது தான் ஐயா குடுத்திருங்காங்க…”

“ஓஓ… அப்படின்னா நமக்கு முதல் அவங்க இங்க இருந்திருக்கலாம்…”

“ஓஓ… ஓகே… அவங்கள பத்தின டீடெயில்ஸ் தெரியணும்னா யார கான்டாக்ட் பண்ணணும் ஐயா…?”

“மன்னிக்கணும் ம்மா… எனக்கு இந்த வீடு புரோக்கர் ஒருத்தர் மூலமா தான் கிடைச்சது… அவங்களுக்கு முன்னாடி இங்க யார் இருந்தாங்கன்னு தெரியாததா தான் சொன்னார் என்கிட்ட பேசும் போது… வேணும்னா நான் அவரோட நம்பர் தரேன்… நீங்க அவங்களோட கான்டாக்ட் பண்ணி பாத்தா, மே பீ இந்த பில்டிங் ஓனர் மூலமா உங்களுக்கு ஏதாவது தெரிய வரலாம்… ட்ரை பண்ணி பாக்கறீங்களா..?”

“ஷ்யூர்… நம்பர குடுங்க ஐயா…” என்றவள் ‘நன்றி’ கூறி அதைப் பெற்றுக் கொண்டு காருக்கு வந்தாள். 

அந்த இடத்தில் நின்று கொண்டே பெரியவர் கொடுத்திருந்த எண்ணுக்கு அழைத்து பேச, இதற்கு முன் இங்கு இருந்தவர்களைத் தெரியவே தெரியாது என்று அடித்து சத்தியம் செய்தார் மறுமுனையில் இருந்தவர். பின்னர் அவரிடம் பெற்றுக் கொண்ட தகவல்களைக் கொண்டு வீட்டு ஓனரைத் தொடர்பு கொண்டாள் இனியா. 

இரண்டு ரிங்களில் அழைப்பு ஏற்கப்பட, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, ஒரு சில விடயங்களை அவருக்குத் தெளிவு படுத்தி விட்டு தொடர்ந்தாள் இனியா. 

“இதுக்கு முன்னாடி உங்க வீட்டுல குடியிருந்த அந்த ஆரக்ஷாங்கற பொண்ணு இப்போ எங்க குடி இருக்காங்கன்னு தெரியுமா உங்களுக்கு..?”

“தெரியாதுங்க மேடம்… நான் வீடு வாடகைக்கு விட்றதோட சரி… மத்தபடி அவங்க பர்சனல் விசயங்கள் எதுவும் கேட்டுக்கிறதில்லை… அதைப் பத்தி விசாரிச்சு சொல்ல எனக்கு அங்க ஆளுங்களும் கிடையாது, ஏன்னா நான் கனடா வந்து ஆறு வருஷமாச்சு…”

“ஓஓ… ஓகே.. அவங்க யார் மூலமா இந்த வீட்டுக்கு குடி வந்தாங்க… ஐ மீன், அவங்களுக்கு வீடு தேவைனு யாராவது புரோக்கர் மூலமா தகவல் வந்திச்சா உங்களுக்கு..?”

“இல்ல மேடம்… நான் ஃபேஸ்புக்ல போட்டிருந்த போஸ்ட் பாத்து அவங்களே டைரக்டா கான்டாக்ட் பண்ணி தான் பேசினாங்க…” 

“ஓஓ… டைரக்டா கான்டாக்ட் பண்ணி பேசினா கூட, அவங்கள பத்தி எதுவும் விசாரிக்காம வீடு தருவீங்களா என்ன..?”

“நான் முன்னாடியே சொன்ன மாதிரி எனக்கு அங்க விசாரிச்சு சொல்ல யாரும் கிடையாதுங்க மேடம்… எனக்கு வீட்டை கவனமா பாத்துக்கிட்டா சரி… மத்தபடி அவங்க பர்சனல் விசயங்கள்ல நான் இன்வால்வ் ஆகறதில்லை…”

“ஓஓ ஓகே… ஆரக்ஷா வீட்டுக்காரங்க உங்கள கான்டாக்ட் பண்ண ஃபோன் நம்பர் கொஞ்சம் குடுக்க முடியுமா..?”

“ஷ்யூர் மேடம்… நான் வாட்ஸப் பண்றேன்…”

“ஓகே… அப்படியே நீங்க ஃபேஸ்புக்ல போட்ட போஸ்டயும் கொஞ்சம் அனுப்பிச்சுடுங்க…”

“ஷ்யூர் மேடம்…”

“தாங்க்யூ… தாங்க்ஸ் ஏ லாட் ஃபார் யுவர் வேல்யூபிள் டைம்… நான் வேற ஏதும் தேவைனா கால் பண்ணறேன்…”

“ஓகே மேடம்…” என்றதோடு அழைப்புத் துண்டிக்கப்பட, யோசனையாய் நிமிர்ந்து வாசுதேவனைப் பார்த்தாள் இனியா. 

                       ✯✯✯✯✯✯

                                     – அல்லி மலரும்…

    No comments yet.