அல்லி 22
அத்திப்பட்டு
மறுநாள் பொழுது புலர்ந்திருந்த நிலையில் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார் பூங்குன்றன். மனம் ஏனோ அமைதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. ‘இன்று யாருக்கேனும் ஏதேனும் ஆகி இருக்குமோ..?’ என்ற பதற்றமும் அவரை அலைக்கழிக்கத் தான் செய்தது. முதல் நாள் விஜயாவின் இழப்பில் இருந்து இன்னமும் மீண்டிருக்கவில்லை அவர்.
காலைக்கடன்களை முடித்துக் கொண்டு டியூட்டிக்கு வந்தவர், முதலாவதாகவே ஜீப்பை எடுத்துக் கொண்டு விஜயா வீட்டிற்கு தான் வந்திருந்தார். பக்கத்தில் அவருடன் அன்பழகனும் தொற்றி இருந்தார்.
காலையிலேயே வீட்டிற்கு வந்திருந்தவர்களை, முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் வரவேற்றனர் அம்ருதாவும் சித்தார்த்தனும். அந்த சிரிப்பைத் தாண்டிய வலி பூங்குன்றனுக்கும், அன்பழகனுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது.
“கவலைப்படாதீங்க ஐயா… கண்ணுக்கு தெரியாத சக்தியோட மோதணும்னு முடிவாகிடிச்சு… பரவாயில்லை, என்னோட உயிரைக் குடுத்தாவது இன்னொரு உயிர் போக விடாம தடுக்கணும்னு சங்கல்பம் எடுத்திருக்கேன்… உங்களோட இழப்பு எங்களால ஈடு செய்ய முடியாதது, பட் அதுக்கான பதில் ஏதோ ஒரு விதத்துல உங்களுக்கு வந்து சேரும்… இந்த ஆறுதலையும், நம்பிக்கையையும் உங்களுக்கு தந்துட்டு போகணும்னு தான் முதல்ல உங்க வீட்டுக்கு வந்தோம்… காலையில இருந்தே இந்த கேஸ் தொடர்பான என்கொயரிய ஆரம்பிச்சுடலாம்னு நானும் அன்புவும் முடிவு பண்ணி இருக்கோம்… லெட்ஸ் ஹோப் ஃபார் த பெஸ்ட்…”
“ரொம்ப ரொம்ப நன்றி சார்… உங்கள மாதிரி பாதுகாவலர்கள் எங்க ஊருக்கு கிடைச்சது நாங்க செஞ்ச புண்ணியம்… என்னோட மனைவிய என்னால திரும்ப கொண்டு வர முடியாது, ஆனா இன்னொரு உயிர் போக விடாம தடுத்துட்டோம்னா அவ சாவுக்கு அர்த்தம் கிடைச்சுடும் சார்…”
“கண்டிப்பா ஐயா… சரி நாங்க கிளம்பறோம்… நல்ல செய்தியோட உங்க கிட்ட வந்து பேசுறோம்…”
“வாங்க சார்…” என நம்பிக்கையாய் அவர்களை அனுப்பி வைத்தார் சித்தார்த்தன்.
அங்கிருந்து கிளம்பி பூங்குன்றனும் அன்பழகனும் நேரே வந்து சேர்ந்தது தான்யா வீட்டுக்கு தான்.
அதிகாலையிலேயே சித்தார்த்தன் வீட்டிலிருந்து கிளம்பி இருக்க வேண்டும், இன்று தான்யாவின் தந்தையும் அங்கு தான் இருந்தார். ஏற்கனவே முதல் நாள் நடந்திருந்த விடயங்களை அவருக்கு மனைவியும் மகளும் சொல்லி இருந்ததால், இன்றைய இவர்களின் வருகை எதற்காக என்று சொல்லாமலேயே புரிந்தது அவருக்கு.
“வணக்கம் சார், வாங்க…” என இவர்களை வரவேற்றவருக்கும், தங்கள் கிராமத்தில் இப்படி ஒரு புது பிரச்சினை துளிர் விட்டிருப்பதும், அது ஒரு உயிரைக் காவு வாங்கியதும் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அதை விட அப்படி ஒரு விடயத்தை தன் மகள் கண்ணால் கண்டு விட்டது, மகளுக்கு ஏதேனும் பிரச்சினையை உருவாக்கி விடுமோ என்ற கிலியையும் தந்தது.
“வணக்கம் ஐயா…” என பதிலுக்கு வணக்கம் வைத்த பூங்குன்றன், “நாங்க தான்யா கிட்ட கொஞ்சம் பேசணும்னு வந்தோம்…” என்றார் தணிவாக.
“தான்யா இங்க வாம்மா…” என மகளை அழைத்தவர், பூங்குன்றனிடம் பேசும்படி கண்ணால் சைகை காட்டினார்.
“சொல்லுங்க சார்…”
“நீங்க நேத்து மொட்டை மாடியில நின்னு தானே அந்த உருவத்தை பார்த்ததா சொன்னீங்க… மொட்டை மாடியில நீங்க நின்னுட்டிருந்த எக்ஸாட்டான இடத்தை ஒருக்கா எங்களுக்கு காட்ட முடியுமா..?”
“எனக்கு அங்க நின்னு அந்த உருவத்தை பாத்ததுல இருந்து மொட்டைமாடிக்கு போகவே ரொம்ப பயமா இருக்கு சார்…”
“நாங்க தான் கூட இருக்கமே ம்மா… கூடவே உங்க அப்பா அம்மாவும் இருப்பாங்க… தைரியமா வாங்க…”
அதற்குப் பிறகும் தயங்கியவளை, ஒருவாறு சமாதானப்படுத்தி, தாய் தந்தையரையும் உடன் அழைத்துக் கொண்டு மாடிக்கு ஏறினர் பூங்குன்றனும் அன்பழகனும்.
“இதோ… இந்த இடம் தான் சார்…” என குறிப்பிட்டு ஓரிடத்தை காட்டியவள், அதே வேகத்திலேயே வந்து தந்தையின் கை அணைவில் நின்று கொண்டாள்.
அவள் சுட்டிக் காட்டிய அந்த இடத்தில் நின்று பார்த்தனர் பூங்குன்றனும் அன்பழகனும். சித்தார்த்தன் வீட்டை மாத்திரம் அல்ல, அந்த வளவை சுற்றி இருந்த ஒரு சில வீடுகளை தாராளமாகவே பார்க்க முடிந்தது அவர்களுக்கு. தான்யா சொன்னது போலவே, விஜயா விழுந்து கிடந்ததாக சொல்லப் பட்ட அந்த இடமும் நன்றாகவே புலப்பட்டது. இன்னும் சொல்லப் போனால், அந்த இடத்திற்கும் இவள் நின்றிருந்த இடத்திற்குமான இடைவெளி சற்றுக் குறைவாக இருப்பது போல் தான் தோன்றியது. அப்படிப் பார்த்தால் நிச்சயம் தான்யா பாவம் தான், சின்னப் பெண். வெகுவாகவே பயந்து போய் இருப்பாள்..!
சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றிய அன்பழகனின் விழிகள் சட்டென பிரகாசமாகின.
“சார் அங்க பாருங்க…” என அவர் கைகாட்டிய திசையில் பொருத்தப் பட்டிருந்தது சிசிடிவி ஒன்று.
“வாவ் க்ரேட் ஜாப் அன்பு… பை த வே, அது… மிஸஸ் காருண்யாவோட வீடு தானே..?” என அன்பழகனைப் பார்த்து கேட்டவர், அதை உறுதிப்படுத்த வேண்டி தான்யாவை பார்த்தார்.
“ஆமா சார்… அது காருண்யா அக்காவோட வீடு தான்…”
“ஃபைன்… ரொம்ப நன்றிம்மா… நேத்து நாங்க விசாரணைக்கு வந்திருந்தப்ப இங்க வீடுகள்ல இருந்தவங்க நிறையப் பேர் பர்சனலா பழக்கமானாங்க… அதுல மிஸஸ் காருண்யாவும் ஒருத்தங்க… நாங்க இப்போ அங்க போய் சிசிடிவி செக் பண்ண போறோம்… ஃபர்தரா ஏதாவது இன்ஃபர்மேஷன் வேணும்னா உங்க கிட்ட வர்றோம்…” என அவர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர் பூங்குன்றனும் அன்பழகனும்.
வீட்டிற்கு வந்த இருவரையும் புன்னகை முகமாக வரவேற்றார் காருண்யா.
“ஆச்சரியமா இருக்கு ம்மா… வழமையா போலீஸ் ட்ரெஸ்ஸ பாத்தா யாருன்னாலும் பயப்படுவாங்க, இல்லன்னா முகத்தை சுழிப்பாங்க… ஆனா நீங்க அன்பா வரவேற்கிறீங்க…” என்றபடியே உள்ளே காலடி எடுத்து வைத்தார் அன்பழகன்.
“முன்னாடி நானும் அப்படித்தான் சார்… ஆனா, உங்க ரெண்டு பேரையும் பாத்ததுக்கு அப்பறம் என்னோட கண்ணோட்டம் டோட்டலா மாறிடிச்சு… போலீஸ் டிப்பார்ட்மென்ட் மேல இருக்கிற மரியாதை அதிகமாகிடிச்சு… அதுவுமில்லாம நம்ம விஜயாவை கண்டுபிடிக்கிறதுக்காகன்னா நாங்க எவ்ளோ சப்போர்ட் வேணும்னாலும் குடுப்போம் சார்…”
“ரொம்ப நன்றி ம்மா… மிஸஸ் விஜயாவை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா..?”
“பிடிக்குமாவா..? நானும் அவங்களும் அவ்ளோ க்ளோஸ் சார்… நான் இந்த ஊருக்கு புதுசா வந்திருந்தப்ப எனக்கு முதல்ல பழக்கமானது விஜயா தான்… ரொம்ப நல்லவங்க சார் அவங்க… என்னை ஒரு குழந்தை மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாங்க… பக்கத்துல ஒரு கடைக்கு போய்ட்டு வரணும்னா கூட நானும் அவங்களும் சேர்ந்து தான் போயிட்டு வருவோம்… எனக்கு உடம்புக்கு முடியாத நாள்ல எல்லாம் அவங்களே சமைச்சு எடுத்துட்டு வந்து என்னை சாப்பிட வச்சுட்டு தான் கிளம்புவாங்க… அதெல்லாம் நினைச்சா ரொம்ப கவலை சார்… கஷ்டப்பட்டு மனசை திசை திருப்பிக்கிட்டு இருக்கேன் நான்…”
“உங்களோட வலி எங்களுக்கு புரியுதும்மா… கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைச்சுடும்னு நம்பறோம்… பை த வே, ஒரு ஹெல்ப் கேட்டு தான் இங்க வந்தோம் ம்மா…”
“ஷ்யூர் சார்… என்னால ஆன எல்லா உதவியையும் நான் செய்ய தயாரா இருக்கேன்…”
“ம்ம்… உங்க வீட்டுக்கு வெளியே ஃபிக்ஸ் பண்ணி இருக்கற சிசிடிவி ஃபூட்டேஜஸ் ஒரு தடவை பாக்க முடியுமா ம்மா..?”
“சிசிடிவி…” என இழுத்தவர், “பாக்கலாம் சார்… ஆனா ஏன்னு தெரிஞ்சுக்கலாமா..?”
“தாராளமா… விஜயா இறந்து போன விவகாரத்துல அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்திகள் ஏதும் இன்வால்வ் ஆகி இருக்கிறதா புகார் வந்திருக்கதா சொல்லி, எல்லாரையும் எச்சரிக்கை பண்ணி இருந்தோம்ல..?”
“ஆ..மா…”
“விஜயா இறந்து கிடந்த இடத்தை மிஸ்டர் சித்தார்த்தன் ஸ்பாட் அவுட் பண்ணி காட்டினாங்க… அந்த இடம் உங்க கேமரா ரேஞ்சுக்குள்ள வர்ற மாதிரி தோணுச்சு… அதான்…”
“ஓஓ அப்படீங்களா சார்… அப்போ தாராளமா பாருங்க… ஆனா அதுல ஒரு சின்னப் பிரச்சினை சார்… என்னன்னா விஜயா இறந்ததா அவங்க சொன்ன நேரத்துல பவர் கட்… அதனால அந்த டைம்ல நடந்த எதுவும் கேமரால ரெக்கார்ட் ஆகி இருக்காது…”
“மை காட்… பேக்கப் எதுவும் இல்லையா பவர் ஃபெய்லியருக்கு…”
“ம்ஹூம்…” என இயலாமையாய் உதடு சுழித்த காருண்யாவுக்கும் உதவ முடியவில்லையே என்ற கவலை தான்.
“ஊப்ஸ்… பரவால்லம்மா, நீங்க ஃபூட்டேஜஸ் காட்டுங்க… நான் யூஸ்புல்லா ஏதாவது இருக்கான்னு பாத்துக்கிறேன்…”
“சரிங்க சார்…” என்ற காருண்யா, தனது லேப்டாப்பில் ஃபூட்டேஜ் ஆக்ஸஸ் எடுத்துக் கொடுக்க, முந்தைய தினம் அதிகாலை இரண்டு இரண்டரை மணி அளவில் நடைபெற்ற காட்சிகளை தேர்ந்தெடுத்து ஓட விட்டார் அன்பழகன்.
சரியாக இரண்டு மணிக்கெல்லாம் வாசலில் அமர்ந்திருந்து உள்ளே எட்டி எதையோ பார்த்த வண்ணம் யோசனையாக அமர்ந்திருந்தார் விஜயா. பின்னர் ஏதோ நினைத்தவராக எழுந்து உள்ளே சென்று விட்டு, திரும்பி வந்தவரின் கையில் அலைபேசி இருந்தது. அதே நேரம், காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தாள் தான்யா. இரண்டு வியூக்களையும் ஒரே நேரத்தில் கேமரா காட்டினாலும் கூட, அவர்கள் இருவரும் நின்றிருந்த ஸ்தானங்களில் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க முடியாது என்பதை ஊகிக்க முடிந்தது பூங்குன்றனுக்கும் அன்பழகனுக்கும்.
ஃபோனில் எதையோ தேடிய விஜயா, அதைக் காணாதது போல் ஏமாற்றமாக நிமிர்ந்தார். அவரது முகத்தில் பயமும் ஏக்கமும் குழப்பமும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தது. பின்னர் எதையோ நினைத்து உள்ளே போக எத்தனித்தவர் திரும்பிய அதே நேரம், மொட்டை மாடியில் நின்றிருந்த தான்யா எதையோ பார்த்து பயப்படுவது அப்பட்டமாகத் தெரிய, அதே நேரத்தில் சொல்லி வைத்ததைப் போல அணைந்தன அனைத்து மின்குமிழ்களும். சட்டென்று இருள் சூழ்ந்தது போல் கருப்பாகியது காருண்யாவின் லேப்டாப் திரை.
“சார் நீங்க அதைப் பாத்தீங்களா..?” பயத்துடன் கத்தினார் அன்பழகன்.
“எதை… எனக்கு எதுவும் தெரியலையே…” என்ற பூங்குன்றன் காருண்யாவைப் பார்க்க, அவளுக்கும் அதே உணர்வு தான்.
“சார்… பாத்துட்டு இருந்தப்ப எனக்கு எதுவும் தெரிஞ்ச மாதிரி இல்லை… ஆனா சீன்ஸ் மூவ் ஆனதுக்கு அப்பறம் தான் க்ளிக் ஆகுது… கொஞ்சம் இருங்க சார் நான் ரீவைன் பண்ணி போட்டுக் காமிக்கறேன்…” என்ற அன்பழகன் மெல்ல மெல்லமாக டைமரை இழுத்து பின்னால் விட்டு பாஸ் செய்திருந்த வீடியோவை ப்ளே செய்ய, தடதடத்து துடிக்க ஆரம்பித்திருந்தது காருண்யாவின் இதயம். ஆனாலும் உன்னிப்பாக திரையைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள் அவள்.
வீடியோ, தான்யா மொட்டை மாடிக்கு வந்த நேரம், விஜயா மொபைலை எடுத்துக் கொண்டு வந்ததில் இருந்து மறுபடியும் ஓட ஆரம்பித்திருந்தது. கைப்பேசியில் எதையோ பார்த்த விஜயா பின்னர் ஏதோ ஒன்றை நினைத்தவராக எழுந்து திரும்பப் போக, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மீண்டும் டைமரை கொஞ்சம் இழுத்து விட்ட அன்பழகன் அதை ப்ளே செய்து, விஜயா திரும்பப் போன இடத்தில் சடுதியாக பாஸ் (pause) செய்தார்.
வீடியோவை சூம் (zoom) செய்தவர், மிகக் கரையாக நின்றிருந்த அந்த உருவத்தை கைகாட்ட, ஒட்ட வைத்த கருப்பு நிறத்தில், கரும்புகை போல கேமராவுக்கு பக்கத்தோற்றத்தைக் காட்டியபடி நின்றிருந்தது ‘அது’..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.