Rani Govindh | 04 Nov 2025
Episode 20
பார்ட்டிக்கு போவதை பற்றி யோசித்தபடியே இளமதி வீடு வந்து
சேர்ந்தாள். வழக்கமாக இளமதி எப்பொழுது வருவாள் என்பது போல காத்திருக்கும் மரகதம்
இன்றோ இளமதி வீட்டிற்குள் நுழைந்தும் கூட அவளை கண்டுகொள்ளாமல் டிவி பார்த்து
கொண்டிருந்தார். அதற்கு காரணம் காலையில் இளமதி சேகர் விசயத்தில் அவள் அம்மாவை
கண்டபடி பேசியது தான். மரகத்திற்கு அது மறக்கவில்லை, ஆனால் காலையில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து
கொண்டிருக்கும் இளமதிக்கு அது எப்படி நினைவில் இருக்கும்.
சோர்வாக பேக்கை வைத்தவள் பார்டிக்கு செல்வதை பற்றி
அம்மாவிடம் எப்படி கூறுவது என யோசித்தபடி “என்னம்மா, அதிசயமா இருக்கு, இந்நேரத்துக்கு சமையல் வேலை பார்த்துட்டு இருப்ப, இன்னைக்கு என்னனா டிவி
பார்த்துட்டு இருக்க” என்று பேச்சை கொடுத்தாள்.
இளமதி பேசியும் கூட அவளை பார்க்காத மரகதம் “நன்றிகெட்ட
பிள்ளைங்கள பெத்துட்டு பொழுதனைக்கும் வடிச்சி கொட்டினா மட்டும் என்ன வந்துட போகுது, நான் தான் மோசமான அம்மா
ஆச்சே, நான் டிவி
தானே பார்ப்பேன்” என காலையில் நடந்ததை மனதில் வைத்து கொண்டு கோபமாக பதில்
கூறினாள்.
“நான் என்ன பேசறேன், நீ என்ன பேசிட்டு இருக்க” என கேட்டவளுக்கு அப்பொழுது
தான் நினைவுக்கு வந்தது.
“போச்சி, காலைல பேசினதுக்கு தான் அம்மா செம கோபத்துல இருக்கு போலயே, இளமதி எப்படியாவது
சமாதானபடுத்து” என நினைத்து கொண்டு அவள் அம்மாவின் அருகில் அமர்ந்தாள்.
“சாரிம்மா, எதோ கோபத்துல அப்படி பேசிட்டேன், நான் வேணும்னே அப்படி பேசுவனா சொல்லு, உன் பொண்ணு தான, என்ன மன்னிக்க மாட்டியா?” என கெஞ்சலாக கூறினாள். ஆனால் மரகதமோ அசைந்து
கொடுப்பதாக இல்லை.
“சரி இப்போ உனக்கு என்ன, நான் கல்யாணம் பண்ணிக்கணும், அவ்ளோ தானே, சரி பண்ணிக்கறேன்” என இளமதி கூறவும் மரகதம் ஷாக்காகி அவளை பார்த்தார்.
“நிஜமாவாடி”
“நிஜமா தான், ஆனா ஒரு கண்டிஷன்” எனவும் மரகதத்திற்கு புஸ்சென்று ஆனது.
“ஆரம்பிச்சிட்டியா, சும்மா போடி”
“ஐயோ அம்மா, நான் சொல்றத கேளு, இந்த முறை
நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கறேன், நீ யார சொன்னாலும் சரி நான் கல்யாணம் பண்ணிக்கறேன்” என்றதும் மரகதம்
நம்பிக்கையாக அவளை பார்த்தார்.
“சரி உன் கண்டிஷன் என்ன?”
“எனக்கு ஒரு வருஷம் டைம் வேணும்”
“ஒரு வருஷமா, எதுக்கு”
“என்னம்மா புரியாம பேசற, இந்த வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, அவங்கள அம்போன்னு
விட்டுட்டு கல்யாணம் பண்ணிட்டு போக சொல்றியா, எப்படியும் ஒரு வருஷத்துல வெண்ணிலா படிப்பு
முடிஞ்சிரும், அவ
வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா போதும், ஓரளவுக்கு சமாளிச்சிரலாம், அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கறேன்” என நம்பும் விதமாக இளமதி கூறவும்
மரகதம் கோபம் தணிந்தது.
“அப்போ சேகர் தம்பிக்கிட்ட பேசிரட்டுமா?”
“ஒரு வருஷத்துக்கு பிறகு தான் எந்த முடிவும் சொல்ல
முடியும்னு சொல்லு, ஒரு வருஷம்
வெயிட் பண்றதுன்னா பண்ணட்டும்” எனவும் இதுவே மரகதத்திற்கு போதுமானதாக இருந்தது, முகம் மலர்ந்தார்.
“சரிடி, நான் உனக்கு காபி போட்டு கொண்டு வரேன், நீ உட்காரு” என
எழுந்திரிக்க போனவரை “ஒரு நிமிஷம் உட்காரும்மா, நான் உன்கிட்ட முக்கியமான விசயம் சொல்லணும், அது வந்து, நான் இன்னைக்கு ஒரு
பார்ட்டிக்கு போக வேண்டியது இருக்கு” என்றாள்.
மரகதம் புரியாமல் இளமதியை பார்த்தார். “என்ன பார்ட்டி, எதுக்கு நீ அங்க
போகணும்?”
“அது எங்க கம்பெனிக்கு பைல் பண்ணி கொடுக்கற சி.ஏ
பார்ட்டி ஏற்பாடு பண்ணிருக்காரு, எங்கள கூட இன்வைட் பண்ணாரு, நானு சுமதி அக்கா லக்ஷ்மி மேடம் எல்லாருமே போகலாம்னு முடிவு பண்ணிருக்கோம், அங்க போனா பெரிய பெரிய
ஆளுங்கள தெரிஞ்சி வச்சிக்கலாம், நாளைக்கு நமக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா அவங்ககிட்ட கேட்க முடியும்ல” என
இளமதி பாதி உண்மை பாதி பொய்யாக கூறி முடித்தாள்.
இளமதியை நம்பாமல் பார்த்த மரகதம் “பரவால்லையே என்
பொண்ணுக்கு இப்போ தான் புத்தி வேலை செய்யுது, இப்படி எங்கயாவது போக வாய்ப்பு கிடைச்சா நான் போக
மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு உட்கார்ந்திருப்ப, இப்போ நீயே போறேன்னு சொல்ற, சரி எப்போ போகணும்” என ஆர்வமாக கேட்டார்.
“அது இப்போ தான்மா”
“இந்நேரத்துக்கா, மணி ஏற்கனவே ஏழரை ஆகுது, இதுக்கு மேல எப்போ கிளம்பி போவ”
“அம்மா இது நைட்டு நடக்கற டின்னர் பார்ட்டி, போயிட்டு சீக்கிரமா
வந்துடலாம், பார்ட்டி
முடிஞ்சதும் சாரு அவரு டிரைவர விட்டு எங்கள டிராப் பண்ணிடறதா சொல்லிருக்காரு, நான் போயிட்டு வரேன்மா”
என பாவமாக கேட்டாள்.
இளமதி மேல் மரகத்திற்கு தான் அலாதி நம்பிக்கை ஆயிற்றே, இளமதி எப்பொழுதும் தவறு
செய்ய மாட்டாள் எனும் நம்பிக்கை இருக்கவும் “சரிடி, கிளம்பு.. ஆனா எப்போவும் மாதிரி வேர்த்து
வடிஞ்சிக்கிட்டு போகாத, நல்ல
துணியா போட்டு போ” என்று கூறி விட்டு மரகதம் காபி போட சென்றார்.
போக பெர்மிஷன் கிடைத்த வர சந்தோசம் என இளமதி அறைக்குள்
செல்ல அடுத்த நொடி வெண்ணிலா வேகமாக அறைக்குள் வந்து கதவை சாத்தினாள்.
“அக்கா நீ பார்ட்டிக்கு போறயா, நிஜமாவாக்கா” என ஆர்வமாக கேட்கவும் “உனக்கு எப்படி
தெரிஞ்சது” என இளமதி புரியாமல் கேட்டாள்.
“இவ்ளோ நேரம் நீயும் அம்மாவும் பேசினதை கேட்டுட்டு தான்
இருந்தேன்”
“ஆமா, அழகி எங்க”
“அவ மாடில பிள்ளைங்களோட விளையாடிட்டு இருக்கா, நீ
சொல்லுக்க,
பார்ட்டிக்கா போற”
“ஆமாடி, இப்போ அதுக்கு என்ன”
“அப்போ நான் தான் உன்ன ரெடி பண்ணி விடுவேன்” என்ற
வெண்ணிலா அவள் சொன்ன மாதிரியே இளமதிக்கு பார்த்து பார்த்து புடவை கட்டி விட்டு
லேசாக மேக்கப் எல்லாம் போட்டு விட்டாள்.
ப்ளேக் கலர் க்ளிட்டரிங் புடவையில் இளமதியின் அழகு
மெருகேறி தான் இருந்தது.
“நல்லா இருக்கா வெண்ணிலா, எனக்கு ஒரு மாதிரி
இருக்கு”
“அதெல்லாம் நல்லா தான் இருக்கு, நீ இப்போ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா, சரி இந்த லிப்ஸ்டிக்
கொஞ்சம் போட்டுக்கோ” என ரெட் கலர் லிப்ஸ்டிக் வாய்க்கு அருகில் வெண்ணிலா கொண்டு வர
இளமதி அதை தடுத்தாள்.
“போட்ட மேக்கப்பே போதும், எனக்கு நேரம் ஆச்சி நான் கிளம்பறேன், நீ ஒழுங்கா படிக்கற
வேலைய பாரு” என்றவள் அவளின் ஹேன்ட்பேக்கை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
“அம்மா நான் கிளம்பறேன்” என்று வந்த இளமதியை பார்த்த
மரகதம் தன் கண்ணையே நம்ப முடியாமல் ஆச்சரியமாக பார்த்தார்.
“அம்மாடியோ, என் பொண்ணு எவ்ளோ அழகு, இரு மதி” என்றவர் இளமதியின் காதுக்கு பின்னால் திருஷ்டி போட்டு வைத்தார்.
இளமதிக்கு இதெல்லாம் புதிதாக தான் இருந்தது, அவளுக்கே கொஞ்சம்
வெக்கமாகி போக “சரிம்மா, எனக்கு
நேரம் ஆச்சி, நான்
கிளம்பறேன்” என்று வாசல் வரை சென்று விட்டாள்.
“ஏய் சாப்ட்டுட்டு போ” என மரகதம் கத்த “பார்ட்டிலயே நல்ல
சாப்பாடு சாப்ட்டுக்கும்மா அக்கா” என்றாள் வெண்ணிலா.
ஒருவழியாக இளமதி பஸ்ஸில் ஏறி பார்ட்டி நடக்கும்
இடத்திற்கு அருகில் வந்து சேர்ந்து விட்டாள். ஆனால் வீட்டில் இருந்து கிளம்பியதில்
இருந்து எல்லாரும் தன்னையே ஒரு மாதிரி ப பார்ப்பது போல் அவளுக்கு தோன்றியது.
அவ்வபோது முகத்தை கையால் துடைத்து புடவையை சரி பார்த்து கொள்வதே வேலையாக செய்து கொண்டிருந்தாள்.
பார்ட்டி நடக்கும் ஹாலுக்கு அருகில் வந்து விட்டவள்
“இப்படி போனா லாயர் சார் தப்பா நினச்சிப்பாரா, இவ்ளோ பிரச்சனைய வச்சிக்கிட்டு உனக்கு இந்த மேக்கப்லாம்
தேவையான்னு நினச்சிகிட்டா, பேசாம
திரும்பி போய்டலாமா, என்ன
பண்றதுன்னு புரிலையே” என இளமதி ஹோட்டலுக்கு வெளியில் நின்று கொண்டிருக்க அவள்
போனுக்கு லாயரின் அசிஸ்டன்ட் விஷ்வாவின் நம்பரில் இருந்து கால் வந்தது.
“இவரு வேற கூப்டறாரே, இப்போ என்ன பண்றது” என யோசித்தபடியே காலை அட்டென்ட்
செய்தாள்.
“ஹெலோ சார்”
“நீங்க எங்க மேடம் இருக்கீங்க, சார் உங்கள பத்தி இப்போ கூட கேட்டாரு, நீங்க வந்ததும்
அவருக்கு இன்பார்ம் பண்ண சொன்னாரு”
“அது, நான் வந்துட்டேன் சார், ஹோட்டலுக்கு வெளிய தான் இருக்கேன்”
“அப்படியா, சரி நீங்க என்ட்ரன்ஸ் வந்துடுங்க, நானே வந்து உங்கள கூட்டிட்டு வரேன்” என கூறி விட்டு
விஷ்வா காலை கட் செய்தான்.
இதற்கு மேல் இங்கிருந்து போக முடியாது என இளமதிக்கு
புரிய அவள் என்ட்ரன்ஸ்க்கு சென்றாள்.
அதே நேரம் பார்ட்டிக்கு அஜய் வரவும் அஜயிடம் ராமமூர்த்தி
வந்தார்.
“எங்க அஜய், இன்னும் விக்ரம காணோமே, உன் கூட வருவாருன்னு நினச்சேன், வந்துடுவாரு தான”
“எஸ், அங்கிள்..
அதுக்குள்ளே ஒரு இம்பார்ட்டன்ட்
வொர்க் வந்துடுச்சி, கொஞ்ச
நேரத்துல வந்துடுவான், ஆமா தாரா
எங்க, விக்ரம்
வந்தா தாராவும் வந்திருப்பாங்களே” என பேச்சை திசை திருப்பும் எண்ணத்தில் கேட்டான்.
“தாராவும் வரேன்னு தான் கிளம்பினா, வினோத் தான் சும்மா
இல்லாம அவள டீஸ் பண்ணி அவள டென்ஷன் பண்ணிட்டான், கோவிச்சிக்கிட்டு வர மாட்டேன்னு வீட்லயே இருக்கா”
“தாரா பிடிவாதத்த பத்தி தான் தெரியுமே, ஆமா வினோத் எங்க
காணோம்”
“ஒரு இம்பார்டன்ட் க்ளைண்ட் மீட்டிங்க்ல
மாட்டிக்கிட்டான், பிசினஸ்
பண்ணாலே இதானே பிரச்சனை”
“அங்கிள் நீங்க மட்டும் என்ன, கோர்ட்டுக்கு போனா நீங்க அங்கேயே லாக் ஆகிடுவிங்க தானே, எல்லா ப்ரொபஷனும்
அப்படி தானே” என ஏதேதோ பேசி விக்ரமை பற்றி கேள்வி கேட்பதை தடுத்து வைத்தான் அஜய்.
அதற்குள் ராமமூர்த்தியிடம் வேறு ஒருவர் பேச வர அஜய்
விட்டால் போதும் என்று நைசாக நழுவி கொண்டான்.
“அஜய், இதுக்கு மேல இங்க இருந்த இவருக்கு பதில் சொல்லியே ஹார்ட் அட்டாக்
வந்துரும், இந்த
விக்ரம் இன்னும் என்ன பண்றான், போன் வேற எடுக்க மாட்டேங்கறானே, ஒருவேள ஹோட்டல்ல இன்னுமும் அந்த பொண்ணோட, போச்சி, அப்படி மட்டும் இருந்தா அவனோட சேர்ந்து எனக்கும் சங்கு ஊதிருவாங்க, இங்க நின்னு டென்ஷன்
ஆகிட்டு இருக்கறதுக்கு பதிலா நேரா ஹோட்டலுக்கு போய் அவன கூட்டிட்டு வந்துடலாம்” என
நினைத்து கொண்டவன் ராமமூர்த்திக்கு தெரியாமல் அங்கிருந்து vip டோர் வழியாக கிளம்பி
போனான்.
அஜய் இந்த பக்கமாக அங்கிருந்து கிளம்பி போகவும் இளமதி
விஷ்வாவோடு பார்ட்டிக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
“என்ன இது, இவ்ளோ பேர் இருக்காங்க, லேடீஸ்லாம் எவ்ளோ மாடர்னா அழகா இருக்காங்க, நான் என்னனா இப்படி ஒரு ட்ரெஸ்ல கொஞ்சம் கூட செட் ஆகாம
வந்திருக்கேன், ஐயோ
கடவுளே, இன்னைக்கு எப்படி தான் சமாளிக்க போறேனோ” என இளமதி பதட்டமாகி கொண்டிருக்க
“நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க மேடம், நான் சார் ப்ரீ ஆனதும் நீங்க வந்துட்டீங்கன்னு இன்பார்ம் பண்ணறேன், அப்புறம் அவர போய்
பார்க்கலாம்” என கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
இப்பொழுது இளமதி தனியாக அந்த பணக்கார கூட்டத்திற்கு
நடுவில் மாட்டி கொண்ட பாவப்பட்ட ஜீவன் போல் பயந்து போய் நின்று கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகம் மாதிரி போய் கொண்டிருக்க இளமதியின் பயமோ
அதிகரித்து கொண்டிருந்தது.
பயத்தில் இருக்கும் இளமதிக்கு பார்ட்டியில் ஏதேனும்
விபரீதம் நேருமா?
அஜய் விக்ரமன் இளமதி மூவரும் ஒரே நேரத்தில் சந்திக்கும்
சந்தர்ப்பம் ஏற்படுமா?
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
No comments yet.