அல்லி 20
அத்திப்பட்டு
சித்தார்த்தன் கொடுத்திருந்த வாக்குமூலத்தை கவனமாக வாங்கிப் படித்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் பூங்குன்றன். ஏற்கனவே அவரிடம் சொல்லி இருந்த தகவல்கள் தான், ஆனாலும் திரும்ப திரும்ப படித்தால் அதில் ஏதேனும் விபரங்களை கண்டறிய முடியுமா என்று தேடியது அவரது போலீஸ் மூளை.
சில முறைகள் படித்துப் பார்த்தவர், சப்இன்ஸ்பெக்டர் அன்பழகனையும் அழைத்துக் கொண்டு சித்தார்த்தன் வீட்டுப் பக்கமாக வந்தார். விசாரணை சித்தார்த்தனின் பக்கத்து வீட்டில் இருந்து ஆரம்பித்தது.
வாசலில் ஹார்ன் சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த பெண், போலீஸ் உடையைப் பார்த்ததும் பயந்து தான் போனாள்.
“வணக்கம் அம்மா… நான் இன்ஸ்பெக்டர் பூங்குன்றன்… இவங்க சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன்… எங்களை பாத்து நீங்க பயப்பிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை… ஒரு கேஸ் விசயமான ஃபார்மல் என்கொயரிக்கு தான் நாங்க வந்தோம்… நீங்க கொஞ்சம் கோ-ஆப்பரேட் பண்ணினா போதும்…” என்றதும் தான் அந்தப் பெண் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் படபடப்பு அடங்கியது.
“சாரி சார்… பொதுவா இந்த ஏரியாவுக்குள்ள போலீஸ்காரங்க வர்றது குறைவு… இன்னிக்கு விஜயாவோட இழப்பில இருந்தே நாங்க இன்னும் மீண்டு வராத சந்தர்ப்பத்துல டக்குனு உங்கள பாத்ததும் ரொம்ப பயம் வந்திடுச்சு… முதல்ல உள்ள வாங்க சார்… உக்காருங்க…” என்றவர், நாற்காலியை எடுத்துப் போட ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டனர் இருவரும்.
“நீங்களும் உக்காருங்கம்மா…” என்றவர், அந்த பெண் அமர்ந்த கையுடன் ஆரம்பித்தார்.
“உங்க பேர் என்னம்மா..?”
“நர்மதா…”
“ஓகே… நான் நேரடியாவே விசயத்துக்கு வர்றேன்… இன்னைக்கு விடியக்காலைல தானே பக்கத்து வீட்டு விஜயாம்மா இறந்தாங்க..?”
“ஆமாங்க சார்… கிட்டத்தட்ட இரண்டரை மணி இருக்கும்னு சொன்னா அம்ருதா…”
“ம்ம்… அவங்க இறந்ததா சொல்லப்படற அந்த டைம்ல உங்களுக்கு ஏதாவது சத்தம் கேட்டுச்சா… இல்லன்னா நீங்க எதையாவது வித்தியாசமா உணர்ந்தீங்களா..?”
“என்ன பிரச்சினைன்னா அது நம்ம ஆழ்ந்த நித்திரைல இருக்கற டைம் சார்… வழமையா வேலை எல்லாம் முடிச்சுட்டு படுக்கவே பதினொரு மணி ஆகிடும்… அதுக்கப்புறம் படுத்தேன்னா காலைல ஆறு மணிக்கு அலாரம் அடிக்கற வரை என்ன ஆனாலும் முழிப்பு வராது சார் எனக்கு… அதனால அந்த டைம்ல ஏதாவது வித்தியாசமா நடந்திருந்தா கூட அதை நான் உணர்ந்து இருக்கிறதுக்கு வாய்ப்பு இல்லை… சாரி சார்…”
“ஓஓ ஓகேம்மா பரவால்ல… அது கொஞ்சம் அன்யூசுவல் டைம் தான்… பட் சில பேர் இருப்பாங்கல்ல, சின்ன சத்தம் கேட்டாலும் எந்திரிச்சிருப்பாங்க… சில பேர் இயற்கை உபாதைகளுக்காக அந்த நேரத்துல வெளிய வந்திருக்கலாம்… இன்னும் சிலர் வேலையை முடிச்சுட்டு லேட்டா படுக்கைக்கு போயிருக்கலாம்… இந்த மாதிரி யாராவது இருந்தா நம்ம கேஸ்கு சப்போர்டிவ்வா இருக்கும்னு தான் விசாரிச்சிட்டிருக்கோம்… அதோட சூட்டோட சூடா இன்னைக்கே விசாரணையை ஆரம்பிச்சுட்டா, ஏதாவது ஜஸ்ட் லைக் தட்னு நடந்த விசயங்கள் கூட மெமரில இருக்கும் இல்லையா..? அதுவும் இல்லாம, ஒரு பர்சன் எதுவுமே இல்லன்னு நினைச்சு சொல்லற சின்ன பாயிண்ட் கூட நம்ம கேஸுக்கே திருப்புமுனையா அமையலாம்… பாப்போம்… சாரிம்மா உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு… நாங்க வரோம்…”
“அதெல்லாம் பிரச்சினை இல்லை சார்… ஒண்ணு கேக்கலாமா..? விஜயா சாவுல ஏதாவது மர்மம் இருக்கா… எதுக்கு கேக்கறேன்னா, ஒரு உயிரிழப்பு சம்பந்தமா எங்க ஊர்ல என்கொயரி நடக்கிறது இது தான் ஃபர்ஸ்ட் டைம்… அதான்…”
ஒருமுறை அன்பழகனை திரும்பி பார்த்தவர் பின் அந்த அம்மாவிடம் திரும்பி, “விஜயாம்மா இறந்தது கொலையா இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்காங்கம்மா… அதனால தான் இந்த என்கொயரி…”
“என்னது கொலையா..?” நெஞ்சில் கைவைத்து திக்கென அதிர்ந்தார் நர்மதா.
“அம்மா… கொஞ்சம் பதட்டப்படாம இருங்க… இது ஜஸ்ட் ஒரு ஊகம் தான்… மேற்கொண்டு விசாரிச்சா தான் எதையும் சொல்ல முடியும்… அதே நேரம், நீங்களும் வீட்டுல உங்க பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கோங்க… உங்க வீட்டுக்காரர் எங்க..?”
“பக்கத்துல தான் சார்… விஜயா வீட்டுல அவளோட ஹஸ்பன்டுக்கு துணையா இருக்கார்…”
“சரிம்மா… ஒண்ணு, நீங்களும் அங்க போய் இருந்துக்கோங்க… இல்லன்னா அவங்கள இங்க வர சொல்லி தங்கிக்கோங்க… தனியா இருக்காதீங்க… நாங்க வரோம்…”
என்றவர்கள் கிளம்ப, பதற்றத்துடன் தலையாட்டி வைத்தார் நர்மதா.
ஒவ்வொரு வீடாக விசாரித்து வரும்போது அல்லி வீடும் அதில் உள்ளடங்கியது. போலீஸ் உத்தியோகத்தர்களை பார்த்ததும் அல்லி பயப்பட்டாளோ இல்லையோ, ரத்னா மிரண்டு தான் போனாள். ஆனால், நல்லவேளையாக அதுவும் பூங்குன்றனின் கருத்தில் தவறாகப் பதியப்படவில்லை. காரணம், அவர்களைப் பார்த்து எல்லோரும் அதே உணர்வு வெளிப்பாட்டைத் தானே காட்டி இருந்தார்கள்? அதனால் இதை மட்டும் பிரத்தியேகமாக கருத்தில் எடுக்கத் தோன்றவில்லை அவருக்கு. அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னது அல்லி தான்.
“நீங்களே பேசிட்டு இருக்கீங்களே… அவங்க எதுவும் பேச மாட்டாங்களா..?” என ரத்னாவை பார்வையால் தொட்டுக் காட்டினார் அன்பழகன்.
“அவ ரொம்ப பயந்த சுபாவம் சார்… அவளோட வாயாடித்தனம் முழுக்க என்கிட்ட தான், மத்தபடி அவ பேசறது ரொம்ப கம்மி…” என்றவளுக்கு, ரத்னாவை பேச விடும் எண்ணம் துளியும் இல்லை.
“சரி… நீங்க அன்னைக்கு எதையும் வித்தியாசமா ஃபீல் பண்ணல ஓகே… மத்த நாட்கள்ல கூட எந்த ஸ்ட்ரேஞ்சஸும் தெரிஞ்சதில்லையா உங்களுக்கு..?” என்ற கேள்வி அல்லியைக் கொஞ்சம் ஆட வைத்தது.
‘இவர் ஆத்தாவை பார்த்தது பத்தி கேக்கிறாரோ..? அந்த விசயம் இவருக்கு எப்படி தெரியும்… யாரு சொல்லி இருப்பாங்க… வேற யாராவது பாத்திருப்பாங்களா ஆத்தாவை… இல்லன்னா செத்துப்போன அந்த தென்றலை யாரும் பாத்திருப்பாங்களா..?’ என நினைத்த வண்ணம் இருக்க, “மிஸ் அல்லி..” என அவளை கலைத்தார் பூங்குன்றன்.
“ஹான் சார்… நீங்க கேட்டதை பத்தி தான் சார் யோசிச்சேன்… நான் இத்தனை நாள்ல அப்படி எதையும் வித்தியாசமா ஃபீல் பண்ணல… உண்மைய சொல்லணும்னா, வித்தியாசம்னு நீங்க எதை கேக்கறீங்கன்னும் எனக்கு புரியல…” என அப்பட்டமாய் ஒரு பொய்யை அள்ளி விளாசினாள் அவள்.
“ம்ம்… சரி பாக்கலாம்… நாங்க கிளம்பறோம்… ஏதும் தேவைப்பபட்டுச்சுனா திரும்ப வரோம்…” என்றவருக்கு, ‘சென்றால் காணும்’ என்ற கணக்கில் விடை கொடுத்து அனுப்பினாள் அல்லி.
‘இந்தப் பொண்ணு வழமையானவங்க மாதிரி இல்லாம, கொஞ்சம் அளவுக்கு அதிகமா பதற்றத்தோட இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுதே…’ என முதன்முதலாக ஒரு சந்தேகம் எழுந்தது பூங்குன்றனுக்கு.
“சாரி சார்… நாங்க அப்படி எதையும் வித்தியாசமா ஃபீல் பண்ணல…”
“அன்ஃபார்ச்சுனேட்லி நோ சார்…”
“இல்ல சார்… அன்னைக்கு அந்த நேரத்துல பவர்கட்… இந்த ஏரியாவுல பவர்கட்ங்கிறது கொஞ்சம் ரெகுலரா நடக்கற விசயம் தான்… சோ புதுசா எதுவும் தெரியல சார் எனக்கு…”
இப்படி ஒவ்வொரு வீடுகளிலும் ஒரே பதிலையே வித்தியாசமான மாடியூலேஷனில் கேட்டு கேட்டு சலித்துப் போய் இருந்தவருக்கு, ஒரு வீட்டில் இருந்து மாத்திரம் சற்று வித்தியாசமான பதில் ஒன்று கிடைத்திருந்தது.
“ஆமா சார்… நான் கொஞ்சம் ஸ்ட்ரேஞ்சா ஃபீல் பண்ணேன் இன்னைக்கு…”
“வாட்…? என்ன வித்தியாசம்னு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமாம்மா..?”
“ஷ்யூர் சார்…” என்றவள் தயங்கி தயங்கி ஆரம்பிக்க, “கொஞ்சம் இரும்மா… உன்னோட வாய்ஸ் நோட்ட நான் பதிவு பண்ணிக்கறேன்… உன்னோட நேமும் சொல்லி அதுக்கப்புறம் டீடெய்ல்ஸ் சொல்லும்மா…” என்ற அன்பழகன் ரெக்கார்டரை ஆன் செய்து வைக்க, அந்தப் பெண் பேச ஆரம்பித்தாள்.
“என்னோட பேர் தான்யா சார்… சென்னைல இருக்கிற ‘பீப்பிள்ஸ் ட்ரஸ்ட்’ பேங்க்ல ஸ்டாஃபா வர்க் பண்றேன்… நாலைஞ்சு நாள் சேர்ந்த மாதிரி லீவ் கிடைக்கிறப்பலாம் என்னோட சொந்த ஊரான அத்திப்பட்டுக்கு வந்திடுவேன்… அப்படி இன்னைக்கு வீட்டுக்கு வந்து சேர விடியக்காலை பன்னெண்ணு மணி ஆகிடிச்சு… அப்பாவோட தான் வீட்டுக்கு வந்தேன்… நான் ஃப்ரெஷ் ஆகி சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் அம்மாவும் அப்பாவும் கூட இருந்துட்டு, அப்பறம் படுத்துட்டாங்க… எனக்கு தூக்கம் வராததுனால சும்மா காத்து வாங்கலாம்னு மொட்டை மாடிக்கு போனேன்… அப்..போ தான்… அ..த…” இதுவரை பிசிறில்லாமல் இருந்த அவளது குரல் இப்போது சற்று குழற ஆரம்பித்தது.
“என்னாச்சு தான்யா..?” என அன்பழகன் அதிர்ச்சியாக கேட்க, “நான் அத பாத்தேன் சார்…” என்றவளது குரல் மீண்டும் அப்பட்டமான பயத்தைக் காட்டியது.
“என..க்கு அந்த அனுபவம் ஃபர்ஸ்ட் டைம் சார்… அப்..படி ஒரு உருவத்தை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை… ஒரு மா..திரி… அட்டைக் கருப்பா… பாக்கவே பயங்கரமா இருந்திச்சு… அதோட முகம்னு சொல்லிக்கிறதுக்கு எதுவும் தெரியல… முதுகு காட்டி நின்ன மாதிரி தான் இருந்திச்சு… நான் பாத்துட்டு இருக்கும் போதே பவர் ஃபெய்லியர்… சட்டுன்னு வந்து முன்னாடி நின்னுடுமோங்கற பயத்துல, தட்டுத்தடுமாறி ஓடிப்போய் என் பேக்ல வச்சிருந்த விபூதியை எடுத்து பூசிக்கிட்டு சத்தமில்லாம படுத்துட்டேன்… அதுக்கப்புறம் என்னை அறியாம தூங்கி, காலைல எந்திரிச்சப்போ தான் விஜயா ஆன்டி இறந்துட்டாங்கன்னு தெரியும் எனக்கு…”
“நீங்க இந்த விசயத்தை பத்தி யார்கிட்டவும் ஷேர் பண்ணிக்கலயா..?”
“இல்ல சார்… எனக்கு அது உண்மையா இல்லை என்னோட பிரம்மையான்னே தெரியல… ஆனா… ஆனா இன்னைக்கு விஜயா ஆன்டி இறந்து கிடந்த இடத்தை அம்ருதா காட்டினப்போ என்னால தாங்கிக்கவே முடியல… எக்ஸாட்டா நான் அந்த உருவத்தை பார்த்த அதே இடத்துல அவங்க இறந்திருக்காங்க… எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம், எனக்கே உறுதியா தெரியாத ஒரு விசயத்தை பத்தி யார் கிட்டவும் பேச இஷ்டமில்லை எனக்கு… ஆனா இப்ப நீங்க கேக்கவும், எதையும் என்னால மறைக்க முடியல… அதனால தான் நீங்க என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்லைன்னு எல்லாத்தையும் சொல்லிட்டேன்…”
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது பூங்குன்றனும் அன்பழகனும் மாத்திரம் இல்லை, அவளது பெற்றோரும் தான்.
“அப்பவே கேட்டேன் சார்… நீ நார்மலா இல்லை, என்னன்னு சொல்லு சொல்லுன்னு கேட்டேன்… படுபாவி வாயவே தொறக்கல… இப்ப என்னென்னவோ உளர்றாளே… இவரு வேற விஜயா வீட்டுல அவங்க குடும்பத்தவங்களுக்கு ஒத்தாசையா தங்கறேன்னு சொல்லிட்டாரு… இவள வச்சுக்கிட்டு தனியா நான் என்ன பண்ணுவேன் சார்..?” என்று புலம்ப ஆரம்பித்தார் தான்யாவின் அன்னை.
“அம்மா… பதற்றப்படாதீங்க… இங்க நிறைய ஆம்பளைங்க விஜயாம்மாவோட குடும்பத்துக்கு உறுதுணையா அங்க தான் தங்கிக்கறாங்க… நீங்க லேடீஸ் எல்லாரும் சேர்ந்து ஒருத்தர் வீட்ட ஒருத்தர் தங்கிக்கோங்க… இரவு நேரத்துல யாரும் தனியா வெளிய வராதீங்க… நாங்க சீக்கிரம் இந்தப் பிரச்சினைய ஒரு முடிவுக்கு கொண்டு வர்றோம்…” என்ற பூங்குன்றன், மறுநாள் உயிரோடு இருக்கப் போவதில்லை என்பதை பாவம் அப்போது அவர் அறிந்திருக்கவில்லை..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.