அல்லி 2
“மழை பெய்றதால இப்படி ஒரு விசயம் நடந்ததுக்கான தடயம் கூட வெளில தெரியாம அழிஞ்சிடும் ஆத்தா. நீ போய் குளி... நான் அந்த துணி மூட்டையை இழுத்துட்டு வந்த பாதையை அலசி விட்டுட்டு வந்து குளிக்கறேன். இங்க நடந்த எதுவும் ரத்னாவுக்கு தெரிய வேண்டாம்… சும்மாவே பயந்தவ அவ… இப்படியும் ஒண்ணுன்னு சொன்னா, இந்தப் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டா…”
“சரிடா… நான் போய் தலைக்கு குளிச்சுட்டு வரேன்…”
“ம்ம்…”
அவர் குளிக்க சென்று விட, இங்கு இடத்தை துப்புரவு செய்ய ஆரம்பித்தாள் அல்லி. காரிடாரில் கிளீன் செய்யும் போது, அனுமாரையோ அம்மனையோ நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு தென்பில்லை அவளுக்கு. யாரேனும் இப்போது அவளைப் பார்த்தால், ‘அவளுக்கென்ன… வழமை மாதிரி தானே இருக்கிறாள்..?’ என்று தான் எண்ணத் தோன்றும். ஆனால், அவளது உள்ளக் குமுறலை அவள் மாத்திரமே அறிவாள். இன்றைக்கு நடந்த சம்பவம் முற்றிலும் புதிது அவளுக்கு. பெரியாத்தாவுக்கும் இப்படி ஒரு சம்பவம் புதிது தான் என்றாலும், ஒரு தாதியாக பணி புரிந்ததில் எத்தனை எத்தனையோ உயிரிழப்புகளைப் பார்த்தவர் தான் அவர். அதனால் தான் அவராலும் கொஞ்சமேனும் தெளிவாக இருக்க முடிகிறது போல. அல்லது, அவரும் இவளுக்காகத் தான் நடிக்கிறாரோ என்னமோ அவர் தான் அறிவார்.
பெரியாத்தா குளித்து முடித்து வருவதற்குள், அல்லி அறையை சுத்தப்படுத்தி முடித்திருந்தாள். ஆனால் மனம் இன்னும் சலனமுற்று தான் கிடந்தது. அவர் குளியலறையைத் திறந்து வெளியே வர, இவள் உள்ளே நுழைந்து கொண்டாள். ஆடைகளைக் களைந்து குளியல் உடைக்கு மாறியவள், களைந்த உடைகளைத் தோய்த்து முடித்த பின் ஷவரின் கீழ் நின்றாள். தலையை நனைத்த குளிர் நீர், உடலை நனைத்து இறங்க மனம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆசுவாசம் அடைவது போல் தான் தோன்றியது.
இந்த நாள் பெரியாத்தாவிற்கும் இவளுக்கும் இத்தனை மோசமாய் அமையும் என்று இருவருமே நினைத்திருக்கவில்லை. நல்ல வேளையாக ரத்னா இங்கே இல்லை. அவள் மட்டும் இருந்திருந்தால் ஒன்று, அவள் கத்திய கத்தலில் இப்போது ஊரே கூடி இருந்திருக்கும். இல்லை என்றால், அடுத்து ஒரு குழி அவளுக்காக தோண்ட வேண்டியது இருந்திருக்கும். அப்படி நினைத்த மாத்திரத்திலேயே சிரிப்பு வந்தது அல்லிக்கு. அல்லியும் ரத்னாவும் கூடப் பிறக்காத சகோதரங்கள். அப்படித்தான் அவர்கள் இருவரது உறவும். இவள் நிமிர்ந்த, வீரமான பெண் என்றால் ரத்னா அப்படியே நேர் எதிர்.
குளித்து முடித்து அல்லி வெளியே வர, சாமியறையில் இருந்து சாம்பிராணி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. அது நிறைவான ஒரு உணர்வை தந்தது அல்லிக்கு. வீடு முழுவதும் சுகந்த மணம் பரவ, திடீரென்று ஒரு ஒவ்வாமை மணம் நாசியை நெருடியது. குடலைப் புடுங்கும் அளவுக்கு நாற, ஓடிச் சென்று சாமியறைக்குள் நுழைந்து சாம்பிராணி வாசத்தை முழுமையாக உள் நிறைத்தாள் அல்லி. அதன் பின்னர் தான் கொஞ்சமாவது மூச்சு விடக் கூடிய மாதிரி இருந்தது அவளுக்கு. பெரியாத்தா எந்த மாற்றமும் இல்லாமல், அமைதியாகக் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார். ஆனால், முழுமையாய் அவரால் தியானத்தில் லயித்திருக்க முடியவில்லை என்பதை, மூடி இருந்த கண்களுக்குள் அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்த கரு விழிகளே காட்டிக் கொடுத்தன.
இன்றைய சம்பவம் அவர்களது எத்தனை நாள் தூக்கத்தை காவு வாங்கும் என நினைத்த போதே மலைத்தது அல்லிக்கு. மனது வேறு விடாமல் கிடந்து அடித்துக் கொண்டிருந்தது, இது இத்துடன் முடியப் போவதில்லை என்று.
கொஞ்சம் கொஞ்சமாய் பொழுது புலர்ந்து, அக்கம்பக்கத்து வீட்டினரும், வாகனப் போக்குவரத்துகளும் சகஜ நிலைமைக்கு வந்திருந்தது. ஆனால் அல்லிக்கோ பெரியாத்தாவுக்கோ சகஜ நிலைமை என்பது இனி எட்டாக்கனி தான் போல.
வயிறு சத்தம் போட்டு, ‘என்னையும் கொஞ்சம் கவனி’ என்று கெஞ்ச தான் சமைக்க வேண்டும் என்பதே நினைவுக்கு வந்தது அல்லிக்கு. அரைகுறை மனதாய் வழிபாட்டை முடித்துக் கொண்டவள், விபூதியை தரித்துக் கொண்டு பெரியாத்தாவை திரும்பி பார்த்தால் அவர் இன்னும் தியானத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. ‘இந்த இரும்பு மனுஷிக்கு இன்னைக்கு பசிக்க கூட செய்யாது போல…’ என மனதிற்குள்ளேயே வைந்து கொண்டவள், சாமியறையில் இருந்து வெளிப்பட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
ஃப்ரிட்ஜில் வைத்திருந்த கடலைக் கறியை எடுத்து சூடாக்கியவள், அதற்கு இதமாக இடியாப்பத்தை தயார் செய்தாள். சமைத்து முடிக்கும் தருவாயில் தான் சாமியறையில் இருந்து வெளிப்பட்டார் பெரியாத்தா.
“என்னாத்தா, சாமியையும் கையோட கூட்டிக்கிட்டு வந்துட்ட போல..?” என இவள் கிண்டல் செய்ய, வழமையாக ஒரு கதைக்கு நூறு பதில் சொல்லும் பெரியாத்தாவிடம் இப்போது மெளனம் மாத்திரம் தான் எஞ்சி இருந்தது. ஏதாவது பேசி, கொஞ்ச நேரமாவது நடந்து முடிந்த சம்பவத்தை நினைக்காமல் இருக்கலாம் என்று தான் அவளும் பார்க்கிறாள், ஆனால் அதற்கு பெரியாத்தாவும் ஒத்துழைக்கவில்லை, அவளாலும் அளவுக்கு மிஞ்சி இயல்பாய் இருப்பதாய் நடிக்க முடியவில்லை.
ஆத்தாவிற்கு சுகர் ஃப்ரீ தேநீர் போட்டுக் கொண்டு, தனக்கு சர்க்கரை சற்று அளவாய் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தாள் அல்லி. தனது அறையில் அமர்ந்திருந்த பெரியாத்தாவின் கைகளில் வழமை போல தவழ்ந்திருந்தது அன்றைய செய்தித் தாள். ஆனால், அன்றாடம் அதில் பதிந்திருக்கும் கவனம் மட்டும் சற்று தடம் மாறி, பார்வை நொடிக்கு ஒரு முறை அவரது அறையின் ஜன்னல் வழி வெளியே தெரிந்த பலா மரத்தை தழுவி மீண்டு கொண்டிருந்தது. இவள் தேநீரை கொண்டு சென்று வைத்த சத்தத்தில், தூக்கிவாரிப்போட திரும்பியவர் நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப் படுத்தினார்.
“நான் தான் ஆத்தா… நான் தான்… பயப்பிடாத…” என்றபடியே அவரிடத்தில் வந்த அல்லி, ஆசுவாசமாய் அவருக்கு நெஞ்சை நீவி விட்டாள்.
“ரொம்ப பயமா இருந்தா ஜன்னல மூடி விடட்டுமா ஆத்தா..? அங்க பாக்காத நீ… இல்லன்னா மத்த ரூம்ல போய் இருக்கலாமா..? உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்… இங்கேயே இருந்தா இன்னிக்கு நைட் தூங்கவும் மாட்ட நீ…”
“உன்..னால எப்படி அல்லி இயல்பா இருக்க முடியுது..? இல்லன்னா… எனக்காக நடிக்கிறியா..? என்னால கொஞ்சம் கூட கவனத்தை திசை திருப்பவே முடியல… என்னோட சர்வீஸ்ல எத்தனையோ பொணங்கள பாத்தவ நான்… ரத்தமோ, உயிரிழப்போ எனக்கு புதுசு இல்ல… ஆனா இது… யாரு அல்லி இப்படி பண்ணி இருப்பா..? எதுக்கு நம்ம வீட்டுக்கு முன்னாடி இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்காங்க..? ஊருக்குள்ள நான் கெளரவமா வாழ்றது பிடிக்காம யாராச்சும் பண்ணி இருப்பாங்களா..?”
“நானும் அதையே தான் யோசிச்சுட்டு இருக்கேன் ஆத்தா… நேத்து நான் போகும் போது இப்படி எந்த மூட்டையுமே நம்ம வீட்டு வாசல்ல இல்ல… நீ நைட்டு வாசல் கதவை சாத்தும் போது ஏதாச்சும் வித்தியாசமா பாத்தியா..?”
“அப்படி எதுவும் ஞாபகம் இல்லை எனக்கு… இந்த மாதிரி எதுவுமே இருக்காத மாதிரி தான் தோணுது…”
“ம்ம்… ஹான்… ஒரு விசயத்தை நம்ம மறந்தே போய்ட்டோம் ஆத்தா…”
“…”
“அந்த பொண்ணோட துணியில இருந்த ரத்தம் முழுசா உறையாம இருந்திச்சு இல்ல..? நீ கூட அரை மணி நேரத்துக்கு முன்னம் தான் அந்த ரத்தம் வெளியேறி இருக்கணும்னு சொன்னியே..?”
“ஆமாடி… ஆனா, அந்தப் பொண்ணோட முகம், உடம்பு எல்லாத்தையும் வச்சு பாத்தா அரை மணி நேரத்துக்கு முன்னால செத்த மாதிரி தெரியல… நாடி புடிச்சு பாத்திருந்தேன்னா, தோராயமா எவ்ளோ நேரத்துக்கு முன்னாடி இறந்திருக்கான்னு ஓரளவுக்கு ஊகிச்சிருப்பேன்… எங்க, அந்த நேரத்து பதட்டத்துல என்ன பண்றதுன்னே தெரியாம போச்சு எனக்கு…”
“ம்ம்…”
“மழை வேற நிக்காம பெஞ்சுட்டே இருக்கு… இந்த ரத்னா வேற இன்னைக்கு எத்தனை மணிக்கு இங்க வந்து சேருவான்னு தெரியல. இன்னிக்கு நீ இங்கேயே தங்கிக்கோயேன் அல்லி..? ரத்னா சும்மாவே பயந்தவ… அவ கிட்ட இந்த விசயத்தை சொல்ல முடியாது. எனக்கு வேற ரொம்ப பயமா இருக்கு… நீயும் கூட இருந்தா ஸ்ட்ரென்த்தா இருக்கும்…”
“நானும் அதான் யோசிச்சேன் ம்மா… ஒரு, அஞ்சாறு நாளைக்கு நான் இங்கையே தங்கிக்கறேன்… நீ கொஞ்சம் ஓகே ஆனதும் நான் வழமையான ரொட்டீனுக்கு வர்றேன்…”
“சரிடா…”
“ரத்னா ஏதாவது சொல்லிட்டு போனாளா..? ஈவ்னிங் ஆகும்னா நான் போய் பிக்கப் பண்ணிட்டு வரணும் இல்ல..?”
“என்கிட்ட சொல்லிட்டு போனா நான் ஏன் யோசிச்சுட்டு இருக்கப் போறேன்..? நீ கால் பண்ணி கேளு என்னன்னு…”
“சரித்தா…” என்ற கையோடு அல்லி ரத்னாவுக்கு அழைக்க, ரிங் போனது… போனது… போய்க் கொண்டே இருந்தது.
✯✯✯✯✯
ஏற்காடு
அளவான உயரத்திற்கு வளர்ந்து, மணிகளின் பாரம் தாங்காமல் தலை கவிழ்ந்து நின்றிருந்த கதிர்களுக்கு மத்தியில் எழிலனின் கை பிடித்து நடந்து கொண்டிருந்தாள் தென்றல். கண் எட்டும் தூரம் எங்கிலும் பசுமையாய் பரந்திருந்தன வயல் வெளிகள். வீசிய இளங்காற்றுக்கு அசைந்தாடிய கதிர்களில் கவனத்தை பதித்திருந்தவளின் உடலும் உள்ளமும் நிம்மதியில் நிறைந்திருந்தது.
“எங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு இவ்வளோ சீக்கிரம் நல்ல முடிவு சொல்லுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை எழில்… என்னதான் உன்னை அவங்களுக்கு நல்லாவே தெரியும்னாலும், இது ரொம்பப் பெரிய விசயம்ல… அதுவுமில்லாம, எந்த பேரண்ட்ஸ் தான் லவ்வுக்கு உடனேயே ஓகே சொல்லி இருக்காங்க..? அதனால நம்மளும் ரொம்ப ஸ்ட்ரகிள் பண்ண வேண்டி இருக்கும்னு நினைச்சேன்… ஆனா, உன்னை பத்தி விசாரிச்ச பத்து நாள்லயே, எங்கப்பா மனசார சொல்லிட்டாரு, நீதான் எங்க வீட்டு மருமகன்னு…”
“கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடி… அம்மா என்னை பத்தி எதுவும் சொல்லலயா..?”
“நீ வேற… அவங்களுக்கு நான் சொன்ன விதத்துலயே உன்னை பிடிச்சிடிச்சு. ஆனா அப்பாவுக்காக தான் பாத்துட்டு இருந்தாங்க… இப்ப அப்பாவே உன்னை பத்தி விசாரிச்சு சொன்னதுக்கு அப்பறம் மேடம் எப்போ கல்யாணம்னு கேட்டுட்டு இருக்காங்க…”
“இப்ப கூட மாப்பிள்ளை ரெடி தான்… பொண்ணு ரெடியா..?” எனக் கேட்டு, சில்மிஷமாய் கண்ணடித்து அவளைத் தன் புறம் இழுத்துக் கொண்டான் எழிலன்.
“பொண்ணுலாம் அவ்ளோ ஸ்பீட் கிடையாது…” என சிணுங்கி அவனிடமிருந்து விலகியவள், “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் எழில்…” என்றாள் கண்கள் நிறைய கனவோடு.
“ரெண்டு வீட்டுலயும் முழுமனசா ஓகே சொல்லிட்டாங்க… இனி என்ன பிரச்சினைடா..? சீக்கிரமா அவங்கள நாள் பாக்க சொல்லிடலாம்…” என மென்மையாய் அவள் முன் நெற்றியில் முத்தமிட்டான் எழில். அந்த முத்தம் கொடுத்த சிலிர்ப்புடன் வாகாய் அவனுடன் ஒன்றிக்
கொண்டாள் தென்றல்..!
– அல்லி மலரும்...
No comments yet.