அல்லி 19
ஏற்காடு
கிட்டத்தட்ட இங்கு அமர்ந்து இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகி விட்டது. இனியா, வாசுதேவன், தெய்வீகா மூவரது முகங்களும் ஏமாற்றத்தில் கூம்பிப் போய் இருந்தது. ‘குட்பாய்’ சொல்லி, செயல்முறையை முடித்துக் கொண்டு எழுந்தார் ரிஷிகேஷ்.
“பிளாஞ்செட் நகரவே இல்லை… அப்படின்னா இங்க எந்த ஆத்மாவும் இல்லன்னு தானே அர்த்தம் ரிஷி சார்..?”
“அப்படின்னு உறுதியா சொல்ல முடியாது மிஸஸ் இனியா… இங்க எந்த ஆத்மாவும் இல்லாம இருக்கலாம்… அல்லது இங்க இருக்கற ஆத்மா பேச விரும்பாம இருக்கலாம்… ரெண்டுக்குமே வாய்ப்பிருக்கு…”
“ஓஓ… அதுக்கு ஏதாவது ஸ்பெஸிபிக்கான ரீசன் இருக்குமா..?”
“இருக்கலாம்மா… ஆனா மீடியம் கான்டாக்ட் பண்ணாம அதை நம்ம கண்டுபிடிக்கிறதுங்கறது முடியாத காரியம்… இதுக்கு வேற நிறைய மெதட்ஸ் இருக்கு… ஆனா அதுலாம் உங்க டிப்பார்ட்மென்டுக்கு அப்பாற்பட்ட விசயம்னு உங்களுக்கே நல்லா தெரியுமே ம்மா…”
“சரி தான் சார்… உங்க வேல்யூபிள் டைமை எங்களுக்காக ஒதுக்கினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி… நாங்க ஃபர்தரா போலீஸ் இன்வெஸ்டிகேஷன கன்டினியூ பண்ணறோம்… ஏதாவது தேவைன்னா நான் உங்கள அப்ரோச் பண்ணலாம் இல்ல…”
“நான் இப்போ ஃபீல்டுல இல்ல… ஒட்டுமொத்தமா விலகிட்டேன்னு எல்லாருக்குமே தெரியும்… இப்போ நான் இந்த பராநார்மல் ஆக்டிவிட்டீஸ்ல இன்வால்வ் ஆகிறதில்லை… ஆனா மிஸஸ் இனியாவுக்கு மட்டும் அதுல விதிவிலக்கு… உங்களுக்கு எந்த நேரத்துல என்னோட உதவி தேவைப்பட்டாலும் தாராளமா என்னை அணுகலாம்…”
“ரொம்ப நன்றி சார்… வாங்க, நாங்களே உங்கள ட்ராப் பண்ணிடறோம்…”
“ஃபைன்…”
தெய்வீகாவிடம் சொல்லிக் கொண்டு புறப்படும் தருவாயில் தெய்வேந்திரனும் வீட்டுக்கு வந்துவிட, அவரிடமும் ஃபார்மலான என்கொயரியை முடித்துக் கொண்டு கிளம்ப இரவு எட்டரை ஆகி இருந்தது. ரிஷிகேஷை ட்ராப் செய்து விட்டு, இனியாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு வாசுதேவன் திரும்பிய போது நேரம் ஒன்பதரையைத் தொட்டிருந்தது. அவளை இறக்கி விட்டு கிளம்பியவருக்குள் எண்ணற்ற கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. அதில் முதலாவது, இனியாவிற்கு ரிஷிகேஷ் தரும் முக்கியத்துவம் தான். ஏனோ, அதை அறியும் ஆர்வம் ஒன்று வாசுதேவன் மனதில் ஆழமாய் வேர் விட்டிருந்தது.
இனியா குளித்து முடித்து வந்த போது, அவளுக்கு சுடச்சுட சப்பாத்தி ரெடி ஆகி இருந்தது. கூடவே அவளுக்கு பிடித்தமான உருளைக்கிழங்கு பிரட்டல். ஆறுதலாக அரை மணி நேரம் செலவழித்து ரசித்து ருசித்து உண்பவளை வாஞ்சையாய்ப் பார்த்த வண்ணம் இருந்தார் சுகிர்தா.
அவள் உண்டு முடிக்கும் வரை பொறுமை காத்தவர், “உனக்கு கஷ்டமா இல்லையா இனியா ம்மா..?” என்றார் ஏக்கமாக.
அமைதியாகத் திரும்பி அவரைப் பார்த்தவள், “எதுக்கு..?” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“நான் எதை பத்தி கேக்குறேன்னு உனக்கு தெரியும்…”
“ம்மா… நானும் வில்லியமும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க… அவனை பிரிஞ்சு இருக்கிறது ரொம்ப கஷ்டம் தான் எனக்கு… ஆனா இது நிரந்தர பிரிவில்லையே..? அவன் வேலை விசயமா அமெரிக்கா போய் இருக்கான்… டைமிங் வித்தியாசம் ப்ளஸ் எனக்குமே இப்ப ஒரு கேஸ்ல ரொம்ப டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டி இருக்கிறதுனால நானும் அவனும் பேசிக்கிறது ரொம்ப குறைவு… அவ்வளவு தான் ம்மா… சில ரிலேஷன்ஷிப் கான்வர்ஷேஷனே இல்லாம இருந்தா கூட ரொம்ப ஸ்பெஷல் தான்ம்மா… என்ன ஒண்ணு, அதுக்கு அவன் கேட்ட காலம் தான் ரொம்ப அதிகமாப் போச்சு…” என பெருமூச்சு விட்டவள், “பட் வீ லவ் ஈச் அதர் ம்மா… அந்த லவ் தான் என்னை இந்த காலகட்டத்தை தாண்டி நகர வைக்குது… அவன் சீக்கிரம் வந்திடுவான்… நீ யோசிக்காம போய் தூங்கு… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சுட்டு வந்து படுக்கறேன்…” என செல்லமாய் அவரது முடியைக் கோதி விட்டு எழுந்தாள். சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து விட்டு வந்தவள், அன்னையை படுக்கைக்கு அனுப்பி வைத்து விட்டு தன் தனி அறைக்கு வந்தாள்.
லேப்டாப்பை ஆன் செய்தவள், ஸ்கிரீனில் தெரிந்த வில்லியம்ஸின் புகைப்படத்தைப் பார்த்து மென்னகை ஒன்றை சிந்தி விட்டு தென்றலின் ஃபைலுக்கு வந்தாள். சற்று முன்னர் வில்லியம்ஸை பார்த்த போது குழந்தையாக இருந்த அவள் வதனம், இப்போது சீரியஸ்னெஸ்க்கு மாறி இருந்தது.
தென்றல் சம்பந்தமான விசாரணைகளை தொகுத்து ஆராய்ந்தவளுக்கு, தெய்வீகாவோ தெய்வேந்திரனோ பொய் சொன்னது போல் தெரியவில்லை. இத்தனை வருட சிபிசிஐடி அனுபவத்தில், மற்றவர்களின் முகபாவனையைக் கொண்டே அவர்களது உணர்வைப் படிக்கத் தெரிந்தவள் அவள். நாளைய தினம் பேரெழிலனைப் பார்த்து பேசி விட்டு, அப்படியே தென்றல் கல்வி கற்பித்த பள்ளிக்கும் ஒருமுறை சென்று பார்த்து விட்டு வரலாம் என நினைத்தவள் லேப்டாப்பை அணைத்து விட்டு வந்து அன்னை அருகில் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பொழுது புலர்ந்திருந்தது. எழிலை சந்திக்க பத்து மணிக்கு செல்லலாம் என வாசுதேவனுக்கு சொல்லி இருந்தவள், சரியான நேரத்திற்கு தயாராகி நின்று கொண்டாள். இருவரும் சேர்ந்து எழில் வீட்டிற்கு வந்த போது, வாயில் திண்ணையில் அமர்ந்து தூரத்தில் தெரிந்த தென்னந்தோப்பை வெறித்துக் கொண்டிருந்தான் எழில்.
வாசுதேவனின் போலீஸ் உடையை பார்த்தவன், மரியாதை நிமித்தம் எழுந்து நின்று “வாங்க சார்..” என்றான். முதல் தன்னை விசாரிக்க வந்த போலீஸ் உத்தியோகத்தர் தான் அவர் என்பதை உணரவே சற்று நேரம் எடுத்தது அவனுக்கு.
“மேடம் கிரைம் பிராஞ்ச் ஆபீஸர்… உங்களை விசாரணை பண்றதுக்காக வந்திருக்காங்க… எனக்கு கொடுத்த அதே ஆதரவை மேடத்துக்கும் தருவீங்கன்னு நம்பறேன்…” என உரையாடலை ஆரம்பித்து வைத்தார் வாசுதேவன்.
“ஷ்யூர் சார்… என்னோட தென்றல் கிடைக்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பண்ண தயாரா இருக்கேன் மேடம்… தேடாத இடமில்லை, பாக்காத ஆக்களில்லை… இதுக்கு மேல என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல மேடம்…”
“கவலைப்படாதீங்க மிஸ்டர் எழிலன்… கேஸ் ரொம்ப ஸ்லோவா தான் போய்ட்டு இருக்கு… ஏன்னா இதுல தென்றலுக்கு எதிரின்னு சொல்லிக்க யாருமே இல்லைன்னு சொல்லறாங்க… அதனால கண்ணுக்கு தெரியாத எதிரி தான் இதை பண்ணறாங்களா, இல்லன்னா கண்ணு முன்னாடியே இருக்கிற யாராவது டபுள் ஆக்டிங் குடுத்துட்டு இருக்காங்களாங்கறது கேஸோட போக்கில தான் தெரியும்…”
“ஹூம்… சரி தான் மேடம்… உள்ள வாங்க, உக்காருங்க…”
இருக்கையில் அமர்ந்த கையுடனே நேரடியாக விடயத்திற்கு வந்தாள் இனியா.
“நீங்களும் தென்றலும் லவ் மேரேஜ் தானே..?”
“ஆமா மேடம்…”
“எவ்ளோ வருஷ லவ்..?”
“நாலு வருஷம் மேடம்… ரீசன்டா தான் பேரண்ட்ஸ் பர்மிஷனோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம்…”
“நாலு வருஷ லவ்னு சொல்றீங்க… ரீசன்டா தான் வீட்டுக்கு தெரியப்படுத்தி இருக்கீங்க… நீங்களும் தென்றலும் ஒரே ஊர்… யாருக்கும் உங்க மேல முன்னாடியே சந்தேகம் வரலையா..?”
“இல்ல மேடம்… நாங்க ரெண்டு பேரும் எங்க லவ்வ ஊருக்குள்ள வெளிப்படுத்திக்கிட்டது குறைவு… அப்படியே வெளிய போறதுன்னாலும் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தள்ளி ஒரு வயல் இருக்கு… அது என்னோட சொந்தக்காரங்களோட வயல்தான்… கண்காணிக்கற பொறுப்ப நான் ஏத்துக்கிட்டிருக்கதால, அந்தப் பக்கமா போகும்போது சம்டைம்ஸ் நானும் அவளும் மீட் பண்ணிப்போம்… மத்தபடி அதிகமா ஃபோன் கான்வர்ஸேஷன் தான்…”
“ஓஓ… பை த வே, தென்றலோட ஃபோனும் அவ காணாம போன அன்னைக்கே தொலைஞ்சு போயிடுச்சு இல்லையா..?”
“ஆமா மேடம்…”
“ஃபோனோட லாஸ்ட் சிக்னல் ஸ்கூல் காம்பவுண்ட்ல தான் காட்டுதுன்னு கேஸ் ஹிஸ்டரில இருக்கு… பட் எக்ஸாட்டா எந்த ஸ்பாட்னு தெரியல… தெர்மல் ட்ரான் (Thermal drone) கூட ட்ரை பண்ணி பார்த்திருக்காங்க… பட் நோ யூஸ்… இது பத்தி உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..?”
“தென்றலுக்கு வர்க்கிங் டைம்ல ஃபோன் யூஸ் பண்றது பிடிக்காது மேடம்… அதனால ஸ்கூல் காம்பவுண்ட்ல மோஸ்ட்லி ஆஃப்ல தான் வச்சிருப்பா… திரும்ப ஸ்கூல் விட்டு கிளம்பும் போது தான் ஆன் பண்ணுவா… அப்படி அவ ஆன் பண்ணப்போ கிடைச்ச சிக்னல் தான் இவங்களுக்கு லாஸ்ட் அப்டேட்டா காட்டி இருக்குன்னு நினைக்கிறேன்…”
“இல்ல… தென்றல் ஸ்கூல் விட்டு வெளிய வந்ததுக்கான ஆதாரங்கள் எல்லாம் சிசிடிவி ஃபூட்டேஜ் மூலம் கிடைச்சிருக்கு மிஸ்டர் எழிலன்… அவங்க ஸ்கூல் விட்டு வெளியே கிளம்பறது ஸ்கூல் கேமராவிலயே தெளிவா பதிவாகி இருக்கு… ப்ளஸ் அந்த டைம்ல அவங்க ஃபோன்ல ஏதோ பாத்துக்கிட்டு தான் வெளிய கிளம்பி இருக்காங்க… அப்போ டைம் சரியா ரெண்டு பத்து… ஆனா அவங்களோட லாஸ்ட் சிக்னல் அப்டேட் ஸ்கூல் காம்பவுண்ட்ல காட்டறது நாலரை மணிக்கு… ரெண்டு பத்துக்கு எல்லாம் ஸ்கூல் விட்டு கிளம்பின தென்றல் வீட்டுக்கு வந்து சேரல… இடையில எந்த இடங்கள க்ராஸ் பண்ணினானு கூட தெளிவா ஐடென்டிஃபை பண்ண முடியல… ஏன்னா இது கிராமப்புறங்கறதால அவ்ளோ சிசிடிவி வசதிகள் இங்க இல்லை… ஒரேயொரு மளிகைக்கடையில மாத்திரம் தெளிவான ஃபூட்டேஜ் கிடைச்சுது… அதுல இருக்கிறதுபடி பாத்தா தென்றல் அந்த இடத்தை க்ராஸ் பண்ணல… அன்ஃபார்ச்சுனேட்லி அந்த மளிகைக் கடைக்கும் ஸ்கூலுக்கும் இடையில கணிசமான தூரம் இருக்கு… அந்த கேப்ல தான் ஏதாவது நடந்திருக்கணுங்கறது எங்களோட கெஸ்… அப்படியே நடந்திருந்தாலும், அவ ஃபோன் எப்படி மறுபடியும் ஸ்கூலுக்குள்ள போச்சுங்கறது அடுத்த கேள்வி… இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கு இந்த கேஸ்ல… பட் கண்டிப்பா எங்களோட பெஸ்ட நாங்க குடுப்போம்…
“தாங்க் யூ மேடம்… தென்றல் தான் என்னோட உலகம்… நாங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கல… தயவு செஞ்சு என் தென்றல கண்டுபிடிச்சு குடுத்துடுங்க மேடம், காலம் பூரா உங்களுக்கு நன்றியோட இருப்பேன்…” என கண்கலங்கியவனைப் பார்க்க, ஏனோ வில்லியம்ஸின் நினைவு வந்தது இனியாவுக்கு. பொதுவாகவே, வேலை நேரத்தில் இந்த சென்டிமென்ட் எல்லாம் ஓரம் கட்டி வைப்பவள் தான் என்றாலும், வில்லியம்ஸின் சிறு தூர பிரிவே அவளுக்கு இத்தனை கனமானதாக இருக்க, காதலித்து கரம் பிடித்தவளுக்கு என்ன ஆனதென்றே தெரியாத எழிலனின் நிலை இன்னமும் மோசம் என்பது சொல்லாமலே புரிந்தது அவளுக்கு.
“கண்டிப்பா எழில்… மேடம் கிட்ட வந்த எந்த கேஸூம் தீர்வு கிடைக்காம போனதில்ல… உங்க மனைவியோட மிஸ்டரிஸும் கண்டிப்பா வெளியில வரும்… கொஞ்சம் தைரியமா இருக்கப் பாருங்க…” என்று வாசுதேவனும் அவர் பங்குக்கு சில நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து விட்டு வெளி வர, மீண்டும் அவர்கள் இருவரையும் சுமந்து கொண்டு தென்றலின் பள்ளி வளாகத்திற்கு கிளம்பியது வாசுதேவனின் மகிழுந்து.
“ஏன் மேடம், இந்த தென்றல் பொண்ணு இருக்கால்ல..?”
காருக்குள் நிலவிய நிசப்தத்தை கலைத்தார் வாசுதேவன்.
“ம்ம்…”
“கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… அவ இப்போ உயிரோட இருப்பான்னு தோணுதா உங்களுக்கு..?”
“மனசு அவ உயிரோட இருக்கணும்னு சொல்லுது வாசுதேவன் சார்… ஆனா இன்ஸ்டிங்ட் அவ இப்போ உயிரோட இருக்கறதுக்கு வாய்ப்பே இல்லன்னு சொல்லுது…”
என இனியா சொன்ன அதே நேரம், அடுத்த உயிரைக் காவு வாங்கும் வெறியோடு அத்திப்பட்டிற்குள் காற்றோடு காற்றாக கலந்து உலா வந்து கொண்டிருந்தாள் தென்றல்..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.