Episode 18

ஶ்ரீ துர்க்கா | 04 Jan 2026 | Share

அல்லி 18

அத்திப்பட்டு கிராமமே நிசப்தத்தில் மூழ்கி இருந்தது. அநேகமாக எல்லோருக்கும் மூன்றாம் ஜாமத்தை நெருங்கி இருந்த சமயம், வாசலில் நின்று கொண்டு, முன்னால் பரந்து சென்றிருந்த வீதியைப் பார்த்த வண்ணம் அரைகுறை தூக்கத்தில் கண்கள் சொருகினார் விஜயா. அவ்வப்போது அவரது பார்வை அறையிலிருந்த கடிகாரத்தை தொட்டு மீள, அதுவோ நேரம் அதிகாலை இரண்டைத் தொட்டிருந்தது.

‘விடியக்காலை ஒண்ணரை மணிக்குலாம் வந்திடுவோம்னு சொன்னாங்களே.. இன்னும் காணோம்…’ என நினைத்தவர், உள்ளே சென்று கைப்பேசியை எடுத்துக் கொண்டு வந்தார். அதில் ‘அம்ருதா’ என பெயரிடப்பட்டிருந்த எண்ணுக்கு அழைப்பு விடுவிக்க, அதுவோ இணைப்பை ஏற்படுத்தாமலேயே கட் ஆனது. ‘என்னாச்சு… கவரேஜ் நல்லா தானே இருக்கு…’ என‌ எண்ணியபடியே மீண்டும் அழைப்பு விடுக்க இப்போதும், கால் கனெக்ட் ஆகாமலேயே கட் ஆனது. 

‘லேன்ட் லைன்ல இருந்து கால் பண்ணி பாக்கலாம்…’ என முடிவுக்கு வந்து, விஜயா எழும்பவும் சொல்லி வைத்தது போல் அத்தனை மின்குமிழ்களும் பணி நிறுத்தம் செய்து கொண்டன.

‘ப்ச்… இது ஒண்ணு… இந்த கிராமத்துல எப்ப கரெண்ட் போகும், எப்ப திரும்ப வரும்னு ஒரு அறிவித்தலும் கிடையாது…’ என தனக்குள் சலித்துக் கொண்டவர், மீண்டும் திரும்பப் போக தூரத்தில் ஓவியம் போல் ஒரு பெண்ணுருவம் மெல்லிய நிலவொளியில் தெரிந்தது. 

‘என்னோட அம்ருதா மாதிரி இருக்கே… ஆனா அப்பா கூட வராம இந்த நேரத்துக்கு தனியா வந்திருக்காளா என்ன…? அவளே வர்றதா சொல்லி இருந்தாலும் அவர் அப்படி அவளை தனியா விட்டிருக்க மாட்டாரே…’ 

ஏகப்பட்ட கேள்விகள் உள்ளுக்குள் சுழன்றாலும், “அம்ருதா…” என அழைத்த படியே அந்த பெண்ணை நோக்கி நடந்தார் விஜயா. 

சற்று முன்னோக்கி செல்ல செல்ல தான் அவள் தனக்கு முதுகு காட்டி நின்றிருப்பதே தெரிந்தது விஜயாவுக்கு. “அம்ருதாம்மா…” என உள்ளிறங்கிய குரலில் மெல்ல அழைத்தவருக்கு ஆள் மனது எதையோ அடித்து சொல்ல, அதை கவனிக்கும் மனநிலை தான் களவாடப்பட்டிருந்தது அங்கே. இன்னும் நான்கு அடியில் அந்தப் பெண்ணை எட்டி விடும் தூரத்தில் இருக்க, அவர் மேல் விழுந்தது நிழலொன்று. 

மெல்ல திரும்பி பார்த்தவருக்கு, ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. எதிரே விரித்த தலையுடன், ஒரு மார்க்கமாக அவரைப் பார்த்து சிரித்தபடி நின்றிருந்தது சாட்சாத் நம் பெரியாத்தாவே தான்‌. 

“ஆத்..தா…” 

தன்னிச்சையாக விஜயாவின் உதடுகள் முணுமுணுக்க, பக்கவாட்டாக நின்று கொண்டு அந்தப் பெண்ணையும் ஆத்தாவையும் மாறி மாறிப் பார்த்தார் அவர்‌. இப்போது தான் அந்தப் பெண் இவரை நோக்கி திரும்பி இருந்தாள். அவளை எங்கேயோ பார்த்திருந்த ஞாபகம் விஜயாவுக்கு, ஆனால் எங்கு என தான் மட்டுப்படவில்லை. 

இருவரும் விஜயாவை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க, நொடியில் விகாரமாகிப் போய் இருந்த அந்த பெண் உருவத்தையும், ஆத்தாவையும் பார்த்து மூர்ச்சையாகிப் போனார் அவர். சட்டென மூளையில் மின்னல் வெட்டியது போல் ஓர் உணர்வு தோன்ற, “நீ தென்றல் தா..னே…” என்றபடி நினைவிழந்து சரிந்தவருக்கு, தூரத்தில் தனது கணவனும் மகளும் வந்து கொண்டிருப்பது மெல்லிய கோட்டு வடிவமாய்த் தெரிந்திருந்தது. 

                   ✯✯✯✯✯✯

“ஐயா, எதுவுமே பேசாம இப்படியே அழுதுட்டு இருந்தா என்ன பண்றது..? நீங்க அவசரமா பாக்கணும்னு சொல்லி உங்க பக்கத்து வீட்டுக்காரங்க வந்து என்கிட்ட சொன்னதால தான் நான் இங்க வந்திருக்கேன்… உங்களால பேச முடியலன்னா பரவால்ல… உங்க உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியும்… ஆனா, இவ்வளவு அவசரமா என்னை வர சொன்னதுக்கு ஒரு வேலிட் ரீசனாவது சொல்லணும் இல்ல நீங்க..?”

என்ற இன்ஸ்பெக்டர் பூங்குன்றனின் பார்வை, சற்றுத் தள்ளி மாலைகளுடன் கிடத்தப்பட்டிருந்த விஜயாவின் வெற்றுடலை தொட்டு மீண்டது. அவர் அருகில் நின்று விசும்பிக் கொண்டிருந்தாள் அம்ருதா. கிட்டத்தட்ட அத்திப்பட்டு கிராமமே அங்கு தான் குழுமி இருந்தது. 

விஷேஷங்களிலும் சரி, துக்க நிகழ்வுகளிலும் சரி இப்படி ஒரு ஒற்றுமையை கிராமப் புறங்களில் தான் பார்க்க முடியும் என்று அந்த நேரத்திலும் எண்ணி வியக்காமல் இருக்க‌ முடியவில்லை பூங்குன்றனால்.

‘இந்தப் பொண்ணு தானே அன்னைக்கு நான் இளந்தென்றலோட ஃபோட்டோ காட்டினப்போ வீஸிங் வந்து கஷ்டப்பட்டுச்சு…’ என தன்னிச்சையாக நினைத்தபடியே, அம்ருதாவை தோளோடு சேர்த்து அணைத்து தேற்றிக் கொண்டிருந்த அல்லியிடத்தில் பதிந்து மீண்டது அவரது பார்வை. ஒரு கணம், ஒரே ஒரு கணம் அவரைத் திரும்பிப் பார்த்து, திக்கென்று அதிர்ந்து மீண்டு கொண்டாள் அல்லி. நல்லவேளையாக அந்த நேரத்தில் பூங்குன்றன் அவளைப் பார்க்கவில்லை. 

அழுது அழுது ஓய்ந்த நிலையில், “சாரி சார்…” என மூச்சிறைக்க சொல்லியபடி எழுந்த சித்தார்த்தன், “கொஞ்சம் அப்படி தனியா வர்றீங்களா..?” என சற்றுத் தள்ளி பூங்குன்றனை அழைத்துச் சென்றார். அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு கேட்காத தொலைவில் நின்று கொண்டதை உறுதிப் படுத்திக் கொண்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தார் அவர். 

“உங்க நேரத்தை வீணடிச்சதுக்கு முதல்ல மன்னிப்பு வேண்டிக்கறேன் சார்… நான் சித்தார்த்தன்… அதோ ஹால்ல மாலையும் கழுத்துமா அசையாம கிடக்கிறாளே விஜயா… அவளோட புருஷன் தான் நான்…” என்றவர், பீறிட்டு வந்த அழுகையை ஒரு பெருமூச்சினுள் அடக்கிக் கொண்டு தொடர்ந்தார்.

“நானும், எங்க பொண்ணு அம்ருதாவும் ரெண்டு நாளைக்கு முன்னாடி அம்ருதாவோட ப்ராஜெக்ட் விசயமா சென்னைக்கு போயிருந்தோம்… நாங்க அங்க இருந்து ரிட்டர்ன் பஸ் எடுத்தப்போ விஜயாவுக்கு கால் பண்ணி சொன்னோம்… விடியக்காலைல ஒண்ணரை மணிக்குலாம் வந்துடுவோம்னு நினைச்சு தான் அவளுக்கு டைம் சொன்னோம்… ஆனா ட்ராஃபிக்… ப்ளஸ் அந்த நேரத்துக்கு ஆட்டோ கிடைக்கல… இந்த மாதிரி பிரச்சினைகளால இன்னும் அரைமணி நேரம் லேட் ஆகிடுச்சு…” என்று இந்த இடத்தில் நிறுத்தியவர், “சார் கொஞ்சம் இப்படி வர்றீங்களா..?” என பூங்குன்றனை அழைத்துச் சென்று ஒரு இடத்தை சுட்டிக் காட்டினார்.

“இதோ… இந்த இடம் தான் சார்… இந்த இடத்துல தான் என்னோட விஜயா…” என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் விசும்பினார். 

“கொஞ்சம் தண்ணி தரட்டுமா ஐயா..?” என்ற பூங்குன்றனுக்கு, “வேணாம் சார்…” என பதிலளித்தவர், தன் நெஞ்சை தானே நீவி விட்டுக் கொண்டு தொடர்ந்தார். 

“நான் தான் சார் முன்னால வந்துட்டு இருந்தேன்… அம்ருதா என் பின்னால வந்துட்டு இருந்தா… தூரத்துல இருந்து பாக்கிறப்போ என் விஜயா பக்கத்துல கருப்பா ரெண்டு நிழல் உருவங்கள் காத்துல பறந்துட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது… அப்போ பவர் கட் சார்… அதனால தெளிவா எதையும் அவதானிக்க முடியல என்னால… என்ன ஏதுன்னு ஊகிச்சு ஓடி வர்றதுக்குள்ள என்னோட விஜயா… என் கண்ணு முன்னாடியே…” குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் சித்தார்த்தன். பூங்குன்றன் தான் யோசனையாக அவர் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

“சார்… நான் பிறந்ததுல இருந்து இந்த ஊருல தான் வாழ்ந்துட்டு இருக்கேன்… சத்தியமா சொல்றேன்… ரொம்ப வயசு மூத்தவங்க, இயற்கையான மரணம் அடைஞ்சவங்க தான் இங்க ஏராளம்… அதோட தொடர்ச்சியான மரணங்கள் நம்ம ஊருக்குள்ள நடந்ததே இல்லை… நாங்க சாமியா வழிபட்ட லக்ஷ்மி… அதுக்கப்புறம் பெரியாத்தா… இப்ப என்னோட மனைவி… இந்த மூணு பேரும் இறந்தது தற்செயலான விசயமா எனக்கு தெரியல சார்… இதுக்குள்ள ஏதோ ஒரு மர்மம் ஒளிஞ்சிருக்கு, நம்மளுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒண்ணு ஊடுருவி இருக்குன்னு தோணுது… ‘அது’ அடுத்த ஒருத்தங்கள பலி எடுக்கிறதுக்கு முன்னாடி, தயவு செஞ்சு ஏதாவது நடவடிக்கை எடுத்து அவங்கள காப்பாத்துங்க சார்… ப்ளீஸ் சார்…” அழுகையினூடே சொல்லி இருந்தாலும், தெளிவாக பூங்குன்றனுக்கு புரியும் வகையில் சொல்லி இருந்தார் சித்தார்த்தன். 

ஒருவாறு சித்தார்த்தனை தேற்றி, அவருக்கு நம்பிக்கை அளித்து, அம்ருதாவிற்கும் ஒரு சில ஆறுதல் வார்த்தைகள் அளித்து பூங்குன்றன் அங்கிருந்து கிளம்பும் போது கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் கழிந்திருந்தன. அதன் பின்னர் தான் விஜயாவை கொண்டு சென்று அடக்கம் செய்யும் பணிகள் ஆயத்தமாகி இருந்தன. 

ஜீப்பில் சென்று கொண்டிருந்த பூங்குன்றனின் முகம் ஆழமான சிந்தனையைத் தத்தெடுத்திருந்தது. சித்தார்த்தன் சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. உண்மையில் பூங்குன்றனுக்கும் இந்த பேய் பிசாசுகள் மேல்  கொஞ்சம் நம்பிக்கை உண்டு தான். ஆனால் ஒரு போலீஸ் அதிகாரியாக அப்படி ஒரு கோணத்தில் இந்த கேஸை அணுக முடியுமா என்றால், இல்லை என்று தான் தோன்றியது. மேலிடத்தில் அதற்கு அனுமதி வழங்க மாட்டார்கள். முதலில் வேறு ஒரு கோணத்தில் இந்த கேஸை அணுகிப் பார்த்து, அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அமானுஷ்ய விடயத்தையும் அதில் நுழைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தவர், ஸ்டேஷனை நோக்கி வண்டியை விட்டார்.

ஸ்டேஷனுக்கு வந்த பின்னரும் கூட, வேறு விடயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை பூங்குன்றனால். சித்தார்த்தன் சொன்ன வார்த்தைகளே அவர் மனதை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது. பூங்குன்றன் இங்கு மாற்றலாகி வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆயிற்று.‌ இன்று வரை இப்படி ஒரு பிரச்சினை இங்கு வந்ததில்லை. அவ்வளவு ஏன், அவரது இருபது வருட போலீஸ் வாழ்க்கையில் எங்குமே இப்படி ஒரு வழக்கை சந்தித்ததில்லை அவர். எப்படியும் சித்தார்த்தன் எழுத்து மூலமாக தனது பிரச்சினையை சொல்லாதவிடத்து பூங்குன்றனால் மேற்கொண்டு எதையும் செய்ய இயலாது. விஜயாவின் காரியங்கள் முடிந்த கையுடனே ஸ்டேஷனுக்கு வந்து எழுத்து மூலம் தனது வழக்கை பதிவு செய்வதாக சொல்லி இருந்தார் சித்தார்த்தன். 

அவர் வரும் வரைக்கும் அமானுஷ்யம் தொடர்பான விடயங்களை இணைய தளத்தில் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் பூங்குன்றன். ஆவி, பேய் இதெல்லாம் உண்மை என்று கூறும் மக்கள் ஒருபுறமும், இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை, பண மோசடி வேலை என்று சொல்லும் மக்கள் ஒருபுறமும் சரிவிகித சமனாக கலந்து காணப்பட்ட பதிவுகளில் குழம்பித் தான் போனது மனது. ‘போலீஸ் இன்வெஸ்டிகேஷன்ஸ் ஆன் சூப்பர்நேச்சுரல் பவர் இன் ரியல் கேஸ் ஹிஸ்டரி (அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணை வழக்குகள்)’ என சர்ச் செய்து பார்த்தவர், சுவாரசியமாக ஏதாவது வழக்கு இருக்கிறதா என ஸ்காரல் செய்து கொண்டு வந்தார். 

ஒரு இடத்தில் அவரது பார்வை நிலை குத்திப் போக, ‘இவங்க இனியா மேடம் தானே..? இவரு பராசைக்காலஜி ஸ்பெஷலிஸ்ட் ரிஷிகேஷ்… இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இப்படி ஒரு கேஸ்ல இன்வால்வ் ஆகி இருக்காங்களா என்ன..?’ என தனக்குள் நினைத்துக் கொண்டே அதில் காட்டப்பட்டிருந்த ஒரு செய்தியைத் திறந்தார் பூங்குன்றன். 

“The Dark side of an American Social entrepreneur, is revealed after the involvement of two Tamilnadu specialists… (அமெரிக்க சமூக ஆர்வலர் ஒருவரின் இருண்ட பக்கம், இரண்டு தமிழ்நாட்டை சேர்ந்த வல்லுநர்களின் தலையீட்டுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது)”

என்றதைத் தொடர்ந்து செய்திகள் விரிய ஆரம்பித்திருக்க, அந்த ‘தமிழ்நாடு’ என்பதிலேயே பூரித்துப் போனது பூங்குன்றனுக்கு. ஒட்டுமொத்த செய்தியையும் படித்து முடித்தவருக்கு இனியாவின் மேலும் ரிஷிகேஷ் மேலும் தனி மரியாதையே உருவாகி இருந்தது. தனது இந்த வழக்கில் கூட அவர்களது உதவி கிடைக்கலாம் என எண்ணியவருக்கு, ஏதோவொரு பற்றுதல் கிடைத்து விட்ட திருப்தி. 

தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பிராந்தியத்தில் அமைந்திருந்த ஏற்காட்டிற்கும், பெயரிட்டு காட்ட முடியாத அளவுக்கு சிறு கிராமமாக இருந்த அத்திப்பட்டுக்கும் இடையில் கண்ணுக்கு தெரியாமல் பலமான முடிச்சு ஒன்று விழ ஆரம்பித்திருந்தது..! 

                    ✯✯✯✯✯✯

                                  -அல்லி மலரும்…

    No comments yet.