அல்லி 17
ரிஷிகேஷ் சொல்வதை ஒரு ஸ்டேட்மென்டாக வாசுதேவன் எழுதிக் கொள்ள, அவர் கூறும் விடயங்களை உன்னிப்பாகப் கேட்டுக் கொண்டிருந்தாள் இனியா. அதே சமயம் அவள் கையிலிருந்த ரெக்கார்டர் அவர் சொல்வது அனைத்தையும் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தது.
“ஆன்மாக்கள் என்றாலே தீமை தான் செய்யும்னு இங்க நிறையப் பேரோட மனசுல ஒரு அபிப்பிராயம் இருக்கு, ஆனா அது உண்மை கிடையாது. நல்லது செய்யற ஆன்மாக்களும் இந்த உலகத்துல இருக்கு, நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஆன்மாக்களும் இருக்கு… அதே சமயம், இந்த ரெண்டு கேட்டகரியும் சேராம ஹாம்லெஸான ஆன்மாக்களும் இருக்கு… ஒருத்தங்கள ஒரு ஆன்மா தொடருதுன்னா அதுக்கு என்ன காரணங்கறதை சம்பந்தப்பட்ட பர்சன் சொல்லற விசயங்களை வச்சே நம்ம கண்டுபிடிக்கலாம்… அப்படி அவங்க சொல்லற சிம்டம்ஸ் கைகுடுக்காத பட்சத்துல பராநார்மல் சைக்காலஜிஸ்ட்ஸ் அவங்களோட முறைகளை யூஸ் பண்ணி அதை கண்டு பிடிப்பாங்க… உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி ஒரு எக்ஸாம்பிள் சொல்லணும்னா ஓஜா போர்ட்… சம்பந்தப்பட்ட ஆன்மாவையே நேரடியா வரவழைச்சு, அவங்க சம்பந்தப்பட்ட விசயங்களை அவங்ககிட்டவே கேட்டு அறியற முறை தான் இந்த ஓஜா போர்ட்… சரி நான் உங்களோட விசயத்துக்கு வர்றேன்… நான் கேக்கற கேள்விகளுக்கு நீங்க கொஞ்சம் பதில் சொல்லணும்…”
“ஷ்யூர் சார்…”
“காணாமப் போன பொண்ணோட பெயர் என்ன..?”
“இளந்தென்றல்… மிஸஸ் இளந்தென்றல் பேரெழிலன்…” தெளிவாய் பதிலளித்தாள் இனியா.
“வயசு..?”
“இன்னைக்கு தேதிக்கு பாத்தா இருபத்தாறு வயசு நாலு மாசம்…”
“ஓஓ… ரொம்ப சின்னப் பொண்ணா இருக்காளே…”
“ஆமா சார்… சின்னப் பொண்ணு தான்…”
“ம்ம்… அவ அந்த ஸ்பிரிட்டை உணர்ந்ததா சொல்லி இருக்கால்ல..? அதப் பத்தின உணர்வு எப்படி இருந்திச்சுன்னு சொல்லி இருக்காங்களா..?”
“இல்ல சார்… அப்படி அவ எதையும் உணரலயா, இல்லன்னா அவ உணர்ந்ததை மொத்தமா வெளியில சொல்லாம விட்டுட்டாளா, அதுவும் இல்லன்னா அவ சொன்னதை இவங்க யாரும் சரிவர கிரகிக்காததுனால நம்ம கிட்ட சொல்லாம இருக்காங்களான்னு எதுவும் தெரியல சார்… ஸ்டேட்மென்ட் பிரகாரம், விக்டிமோட அம்மாவும் சரி அப்பாவும் சரி… கருப்பா, நிழல் மாதிரி ஒரு உருவத்தை பார்த்ததா தான் சொல்லறாங்களே தவிர, அது பத்தி வேற எந்த விபரமும் அவங்களுக்கு தெரியல…”
“ஓஓ… அவங்க காணாம போனதுக்கப்புறம் அந்த உருவத்தை யாராவது பாத்தாங்களா..?”
“இரண்டு பேருமே பாக்கலன்னு தான் சொல்லி இருக்காங்க…”
“அப்படின்னா… என்னோட அனுபவத்தை வச்சு நான் யோசிக்கிறது என்னன்னா, ரெண்டே ரெண்டு விசயங்கள் தான் இதுக்கு காரணமா இருக்க முடியும்… ஒண்ணு, அந்தப் பொண்ணு காணாமப் போறதுக்கு ‘அது’ தான் காரணமா இருந்திருக்கணும்… விச் மீன்ஸ் அவளை அந்த ஆத்மா தான் ஏதாவது பண்ணி இருக்கணும்… இல்லன்னா அவளுக்கு ஏதோ ஆகப்போகுதுங்கிறத ‘அது’ முன்கூட்டியே வார்ன் பண்ண வந்திருக்கணும்…”
“முதல் கான்செப்ட் ஓகே சார்… பட் ரெண்டாவது விசயம் கொஞ்சம் புரியலையே..?”
“சில பேருக்கு அவங்க இறக்கப் போறாங்க ங்கிறதை முன்கூட்டியே அறிவிக்கற மாதிரி சில அமானுஷ்ய விசயங்கள் நடக்கிறது உண்டு… இது மாதிரி, சில பேருக்கு ஏதாவது உயிரிழப்பை தரக்கூடிய அளவுக்கு பிரச்சினை வரப்போகுதுன்னா அதுல இருந்து விலகி இருக்கணும்னு வார்னிங் மாதிரி இந்த ஆத்மாக்களோட நடமாட்டம் அவங்கள சுத்தி அமையலாம்… அதை தான் சொன்னேன்…”
“ஓஓ… அப்படின்னா தென்றலுக்கு வந்தது எந்த மாதிரியான உணர்வுன்னு கண்டுபிடிக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா..?”
“அந்த ஆத்மாவோட நடமாட்டம் தென்றல் அந்த இடத்துல இல்லாம போனதுக்கப்புறமும் இருந்திச்சுனா கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு… இல்லன்னா கொஞ்சம் கஷ்டம் தான்…”
“அப்படின்னா நம்ம அந்த முறைல ஒரு தடவ ட்ரை பண்ணி பாக்கலாமா ரிஷி சார்…”
“ஷ்யூர், ஓஜா போர்ட் மூலமா ட்ரை பண்ணி பார்க்கலாம்… பட் அதுக்கு அவங்க பேரண்ட்ஸ் பூரண ஒத்துழைப்பு கொடுக்கணும்… அப்படின்னா மட்டும் தான் நம்மளால அதை நடைமுறைப்படுத்த முடியும்… இது முழுக்க முழுக்க அவங்க வீட்டுல வச்சு தான் பண்ண முடியும்…”
“பொண்ணு காணாமப் போன வருத்தத்துல இருக்கவங்க… கண்டிப்பா ஒத்துழைப்பாங்க… நான் அவங்க கிட்ட பேசிக்கறேன் சார்… இன்னைக்கு லேட்டாகிடிச்சு… நாளைக்கு மார்னிங் அவங்க வீட்டுக்கு போய் ஓஜா போர்ட் யூஸ் பண்ணி பாக்கிறதுன்னா ஓகேவா உங்களுக்கு..?”
“இல்லம்மா… ஆத்மாக்களோட நடமாட்டம் இருள் சூழ்ந்த இடங்கள்ல தான் ரொம்ப அதிகமா இருக்கும்… அதனால இப்ப கிளம்பறதுன்னா கூட எனக்கு ஓகே தான்…”
“ஒய் நாட்..?” என்றவள், வாசுதேவனின் சம்மதத்தை அறிய வேண்டி திரும்பிப் பார்த்தாள். அவரும் சம்மதமாகத் தலையசைக்க, அவர்களது மகிழுந்து ரிஷிகேஷையும் சுமந்து கொண்டு மீண்டும் தென்றல் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தது.
✯✯✯✯✯✯
“தென்றல் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதுங்களா மேடம், போன வேகத்திலேயே திரும்பி வந்திருக்கீங்க..?” என்ற தெய்வீகாவின் குரலில் ஆர்வமும் ஏக்கமும் ஏகத்துக்கும் கொட்டிக் கிடந்தது. அதைப் பார்த்த இனியாவுக்கே கொஞ்சம் தர்மசங்கடமாகித் தான் போனது. ஆனால், ப்ரொஃபெஷ்னல் மோடுக்கு வந்து விட்டால், இந்த உணர்வுகளுக்கு இடம் தரக் கூடாது என்பதற்காக, வழமையான நிமிர்வுடனேயே பதில் சொன்னாள் அவள்.
“தென்றல் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக தான்மா இவ்வளவு போராட்டமும்… இவர் மிஸ்டர் ரிஷிகேஷ், பராநார்மல் சைக்காலஜி ஸ்பெஷலிஸ்ட்…” என்க, அவரைப் பார்த்து நமஸ்கரித்தார் தெய்வீகா.
“நீங்க உங்க வீட்டுல ஒரு உருவத்தை பார்த்ததா சொன்னீங்கல்ல..? அதப் பத்தி மேற்கொண்டு தெரிஞ்சுக்கிறதுக்காகத் தான் கையோட இவங்களயும் அழைச்சுட்டு இங்க வந்திருக்கோம்…”
“சரிங்க மேடம்… எங்களால முடிஞ்ச எல்லா உதவியையும் கண்டிப்பா நாங்க உங்களுக்கு செய்வோம்… எனக்கு என் பொண்ண மட்டும் கண்டுபிடிச்சு குடுத்துடுங்க மேடம் ப்ளீஸ்…” கையெடுத்துக் கும்பிட்டார் தெய்வீகா. ஏற்கனவே அழுது அழுது தீர்த்திருந்ததில், கண்ணீர் வற்றி குரலும் வரண்டு விட்டிருந்தது.
“நிச்சயமா ம்மா… அதுக்காக தானே இவ்வளவு போராட்டமும்…” என்றவள், தெய்வீகாவின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு, அவரது கணவரிடமும் ஒரு வார்த்தை சொல்லப் பணித்து விட்டு ரிஷிகேஷ் தனது வேலையைத் தொடங்குவதற்கான முன்னாயத்தங்களை செய்ய அவருடன் கிளம்பி விட்டாள்.
மாடியில் அமைந்திருந்த தனி அறை அது. தென்றலுக்கென பார்த்து பார்த்து வடிவமைத்திருந்தார் தெய்வேந்திரன். சுவரெங்கும் தென்றலின் கை வண்ணத்தில் வரையப்பட்டிருந்த சித்திரங்களைப் பார்த்த போது நிச்சயம் அவள் எவ்வளவு பெரிய திறமைசாலி என நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை இனியாவால்.
“இந்த இடம் ஓகேவா ரிஷி சார்..?” என்ற இனியாவிடம், “பர்ஃபெக்ட்” என்றார் ரிஷிகேஷ்.
“சம்பந்தப்பட்ட பர்சனோட மெமரிஸ் நிறைஞ்சிருக்கிற தனி இடம், எப்பவுமே நம்ம பராநார்மல் ஆக்டிவிட்டீஸ்க்கு பெஸ்ட் மிஸஸ் இனியா. மிஸ்டர் வாசுதேவன் கீழ அந்த அம்மா கூட பேசிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்… அவரையும், அந்த அம்மாவையும் மேல கூப்பிடுங்க… நம்ம ப்ராஸீஜரை ஸ்டார்ட் பண்ணிடலாம்…”
“வித் இன் ஏ மினிட் சார்…” என்றவள், அடுத்த ஐம்பதாவது செக்கனில் இருவரையும் அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்திருந்தாள்.
“உங்க ஹஸ்பன்ட் கோவிலுக்கு போனதா சொன்னீங்க இல்லம்மா… இன்னும் வரல… இப்போ திரும்பி வர்ற நேரமா..? அவங்க வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டாங்கன்னா நம்ம ஓஜா போர்ட் யூஸ் பண்ணறதுல அர்த்தம் இல்லாம போய்டும்…” என்றார் ஏற்காடு இன்ஸ்பெக்டர் வாசுதேவன் எச்சரிக்கையாக.
“இல்ல சார்… வழமையா இன்னேரத்துக்கு வந்துடுவாங்க… ஆனா இன்னைக்கு தென்றல் விசயமா யாரையோ பாத்து பேசிட்டு வர்றதா சொன்னார்… எப்படியும் எட்டரை ஒம்போது ஆகும்… அதுக்குள்ள நம்ம வேலை முடிஞ்சுடும் இல்ல..?” தயக்கமாக இழுத்தார் தெய்வீகா. இனியாவும் வாசுதேவனும் கேள்வியாய் ரிஷிகேஷை பார்க்க, கட்டை விரலை உயர்த்தி காட்டியவர், சைகையால் அனைவரையும் வட்டமாக அமர வைத்தார்.
நடுவில் பலகை போன்றதொரு அமைப்பை வைத்தவர் அதைப் பற்றி விளக்கலானார்.
“இது தான் ஓஜா போர்ட். இதுல பாருங்க… A-Z ஆங்கில எழுத்துக்கள் இருக்கு… 0-9 நம்பர்ஸ் இருக்கு… இந்த இடத்துல யெஸ் ஆர் நோ (Yes/No) ஆப்ஷன்ஸ் இருக்கு… அப்பறம் ஹலோ, குட் பாய், தாங்க்ஸ் இந்த மூணு வார்த்தைகளும் இருக்கு…” ரிஷிகேஷ் சொல்ல சொல்ல, அந்த ஓஜா போர்டை பார்வையால் துழாவியபடியே அவர் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர் மற்ற மூவரும். யாரிடத்திலும் துளியேனும் பயமில்லை.
ரிஷிகேஷ் இந்த துறையில் ஊறிப் போய் இருந்ததனால் பயத்தை தொலைத்திருக்க, இனியாவும் வாசுதேவனும் தமது தொழில் நிமித்தம் விறைப்பாய் நின்றிருந்தனர். தெய்வீகாவுக்கோ மகள் கிடைத்து விட்டால் மட்டும் போதும் என்ற மனநிலை. அவர்கள் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருக்க, ரிஷிகேஷ் தொடர்ந்தார்.
“இதோ கையில குட்டியா ஒரு கருவி வைச்சிருக்கேன்ல, இத பிளாஞ்செட் (Planchette)னு சொல்லுவாங்க… நம்ம எல்லாரும் கையை இது மேல வச்சு தான் ஒவ்வொரு கேள்வியா கேட்க போறோம். எப்படின்னா, முதல்ல இந்த அறையில எந்த வெளிச்சமும் அளவுக்கதிகமாக இருக்கக் கூடாது… ஒரேயொரு மெழுகுவர்த்திய மட்டும் ஏத்தி வச்சு தான் நம்ம செயற்பாட்டை ஆரம்பிக்க போறோம். ‘இங்க யாராவது இருக்கீங்களா..? நாங்க உங்க கிட்ட பேசலாமா..? எங்களுக்கு உதவி செய்வீங்களா..?’ இந்த மாதிரி மரியாதையா தான் பேசணும் அவங்க கூட… அவங்க ஹெல்ப் பண்ணினா அதுக்கு நன்றி சொல்லணும், நமக்கான கேள்விக்ள எல்லாம் முடிஞ்சு அவங்களை திருப்பி அனுப்பும் போது கண்டிப்பா ‘குட்பாய்’ சொல்லித் தான் அனுப்பிக்கணும்… அத மறந்துட்டோம்னா அந்த ஆத்மா இங்கேயே நிலையா தங்கிடறதுக்கு வாய்ப்பு இருக்கு… ஆனா இதுல ஒரு விசயம் என்னன்னா, இதெல்லாம் ஒரு ஆத்மா இங்க இருந்தா தான் சாத்தியப்படும்… அப்படி இல்லன்னா பிளாஞ்செட் நகராது…”
“ஓஓ… ‘இங்க யாராவது இருக்கீங்களா ன்னு கேக்கும் போது ‘நோ’ ன்னு கூட இன்டிக்கேட் பண்ணாதா..?”
“இல்லம்மா… பண்ணாது… யாராவது ஒருத்தங்க பிளாஞ்செட்டை மூவ் பண்ணா தானே நம்மளுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்… இங்க யாருமே இல்லன்னா பிளாஞ்செட் மூவ் ஆகாது… சோ அதுக்கப்புறம் நம்ம கொஞ்ச நேரம் உக்காந்து பாத்துட்டு, அப்புறமும் எந்த மாற்றமும் இல்லன்னா நம்ம அதுக்கு மேல இந்த மெதட்ட கன்டினியூ பண்ணறதுல பிரயோசனம் இல்லை… ‘குட்பாய்’ சொல்லிட்டு எந்திரிக்க வேண்டியது தான்…”
“எந்த மாற்றமும் இல்லன்னா கூட ‘குட்பாய்’ சொல்லிட்டு தான் எந்திரிக்கணுமா..?”
“ஆமா… ஏன்னா சில வேளை ஒரு ஆத்மா இங்க அவெய்லபிளா இருந்து, அது நம்ம இருக்கும் வரை தன்னை வெளிப்படுத்திக்காம இருந்துட்டு, நம்ம கிளம்பறப்போ வெளிப்படுத்த ஆரம்பிச்சுதுன்னா சிக்கலாகிடும்… அதனால நம்ம ப்ராஸெஸ் முடியும் போது கண்டிப்பா ‘குட்பாய்’ சொல்லணும்…”
“ஓஓ… ஓகே…”
“நம்ம வேலை முடியுற வரைக்கும் யாரும் பிளாஞ்செட்ல இருந்து கையை எடுக்க கூடாது… சரியா… எல்லாம் தெளிவா புரிஞ்சுதுன்னா, நம்ம லைட் ஆஃப் பண்ணி, மெழுகுவர்த்தியை ஏத்தி வச்சுட்டு வேலையை ஆரப்பிச்சுடலாம்…”
“ஷ்யூர் சார்… எல்லாம் தெளிவா புரிஞ்சுது…” என்றார் வாசுதேவன், மூவரது உள்ளங்களையும் படித்தவராக.
“தாட்ஸ் குட்… அப்ப எல்லாருக்கும் ஓகேன்னா லைட் ஆஃப் பண்ணிடலாம்…” என்றதும், தெய்வீகா எழுந்து சென்று அந்த லைட்டை அணைத்து விட்டு வந்தார். சட்டென்று இருள் சூழ்ந்து கொண்டது அவ்விடத்தை. இவ்வளவு நேரமாய் நிலைத்திருந்த தைரியம், ரிஷிகேஷை தவிர் மற்ற மூவருக்குமே கொஞ்சமாய் ஆட்டம் காண ஆரம்பித்தது. போலீஸாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே..!
மெழுகுவர்த்தியை ஏற்றி ஒருபுறம் வைத்தவர், மூவரது கைகளையும் தனது கரத்தின் மேல் வைக்க சொல்லி விட்டு, முதலாவது கேள்வியை கேட்டார்.
‘இங்க யாராவது இருக்கீங்களா..?’
நால்வரும் வரப் போகும் பதிலுக்காக காத்திருக்கலானார்கள்.
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.