Episode 16

ஶ்ரீ துர்க்கா | 03 Jan 2026 | Share

அல்லி 16

தனக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த பெரியாத்தாவைப் பார்த்து விக்கித்துப் போனாள் அல்லி. கொஞ்சம் முன்னர் இருந்த தூக்க கலக்கம், தொலைதூரமாகிப் போய் இருந்தது. 

‘இங்க என்ன ஆத்தா பண்ணற, எந்திரிச்சு வந்து உள்ள படு…’ என்று சொல்லக் கூட சற்று முன்னர் வாய் வந்தது தான். ஆனால், ‘ஆத்தா தான் செத்திடுச்சு இல்ல..?’ என அவள் உள்ளத்திற்கு உறைத்த நேரம், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் அல்லி. திரும்பிப் போகவும் கால்கள் ஒத்துழைக்கவில்லை. ரத்னாவை அழைக்கும் அளவிற்கு தைரியமும் இல்லை, விருப்பமும் இல்லை. அந்த நேரத்தில் கூட, ‘கடவுளே! ரத்னாவைப் பத்திரமாப் பாத்துக்கோ…’ என அவசர அவசரமாக வேண்டிக் கொண்டது மனது. 

வேண்டிக் கொண்டு அவள் கண்ணிமைத்த நேரம், பெரியாத்தாவின் உருவம் அவளை நோக்கி திரும்பி இருந்தது. மெல்ல மெல்ல அடியெடுத்து நடந்து வந்த அவரது உருவம், அவளை நெருங்கும் தருவாயில் படீரென கீழ் வானில் தோன்றியது சிவப்பு நட்சத்திரம் ஒன்று. அதைத் தொடர்ந்து படீரென்று மின்னல் வெட்ட, “ஆஆ” என அலறிய பெரியாத்தாவின் உருவம், “விடமாட்டான்… உங்க யாரையும் உயிரோட விடமாட்டான்… இந்த ஊரையே பலி எடுக்கிற வரைக்கும் அவன் ஓய‌ மாட்டான்…” என கதறிக் கொண்டே அவளை நோக்கி வேகமாக ஓடி வந்து, நொடியில் மறைந்து போனது. 

அவர் மறைந்த பின்னரும் கூட சுய நினைவுக்கு வர நிறைய நேரம் எடுத்தது அல்லிக்கு. முதலில் உடலில் உயிர் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள் அவள்‌. திரும்பி படுக்கைக்கு செல்லாமல் திக்பிரம்மை பிடித்தது போல உணர்வற்று நின்றிருந்தவளை, தன் பலம் கொண்டு உலுக்கியது கரமொன்று. அதில் சட்டென உதறிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ரத்னா. 

“என்ன அல்லி பண்ணிட்டு இருக்க இங்க..? பக்கத்துல உன்னை காணோம்னு எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா நான்..? “

“இல்ல..ம்மா… இங்க… ஏதோ சத்தம் கேட்டு…”

“தயவு செஞ்சு எதையாவது சொல்லி என்னை பயமுறுத்தாத அல்லி… என்னனாலும் வரும்போது பாத்துக்கலாம்…” கூறியபடியே அல்லியின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு விடுவிடுவென்று முன்னேறினாள் ரத்னா. 

படுக்கையில் விழுந்து விட்ட பிறகும் கூட பெரியாத்தாவின் முகமும், அந்த கோப வார்த்தைகளும் மனக்கண் முன் வந்து இம்சித்தது அல்லியை.

“விடமாட்டான்… உங்க யாரையும் உயிரோட விடமாட்டான்… இந்த ஊரையே பலி எடுக்கிற வரைக்கும் அவன் ஓய‌ மாட்டான்…”

”அவன்’ னா யாரு..? இந்த ஊரை பலி எடுக்கிற அளவுக்கு யாருக்கு நம்ம மேல கோபம் இருக்கும்..? பெரியாத்தா இத சொல்லி வார்ன் பண்ண தான் வந்திச்சா..?’ என நினைத்த மாத்திரத்தில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள் அல்லி. பெரியாத்தாவின் கண்களில் தெரிந்த வெறி, கால்களில் இருந்த வேகம், பற்களை நறநறத்த விதம் எல்லாம் நிச்சயமாக அவளை எச்சரித்து, பாதுகாப்பாக இருக்க வைப்பதற்காக வந்ததாக தோன்றவில்லை அவளுக்கு. 

அவளைக் காவு வாங்கும் எண்ணம் மட்டும் தான் அவரிடத்தில் வியாபித்திருந்ததாக தோன்றியது அல்லிக்கு. அந்த நினைவே அவளுக்குள் ஒரு குளிரைப் பரப்பியது. பக்கத்தில் படுத்திருந்த ரத்னாவை இறுகக் கட்டிக் கொண்டு, அவளுள் முகம் புதைத்து, கொஞ்ச நேரம் இந்த உலகத்தை மறக்க நினைத்தாள் அல்லி. பதிலுக்கு ரத்னாவும் அவளை அரவணைத்துக் கொள்ள, மெல்ல மெல்ல கண் அயர்ந்தாள் அவள்.

                     ✯✯✯✯✯

ஏற்காடு

சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது இனியாவும் வாசுதேவனும் பயணித்துக் கொண்டிருந்த பென்ஸ். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்து, வாசுதேவன் கொடுத்திருந்த ஃபைலை புரட்டிக் கொண்டிருந்தாள் இனியா. 

போலீஸ் தரப்பினர் எடுத்திருந்த தரவுகளும், அவள் சற்று முன்னர் தெய்வீகாவிடம் சேகரித்திருந்த தகவல்களும் நகலெடுத்தது போல் அப்படியே ஒரே மாதிரியாக இருந்தது‌. ஆனால் ஒரே ஒரு தகவல் மாத்திரம் அவளிடம் அதிகமாகப் பெயர்ந்திருந்தது‌. இனம்புரியாத ஒரு உருவத்தை தெய்வீகாவும் பார்த்ததாக சொல்லி இருந்தது தான் அது. உண்மையில் அந்த விபரத்தை அவர்கள் வேண்டுமென்று மறைத்திருப்பார்கள் என்று தோன்றவில்லை இனியாவுக்கு. ஆனாலும் சின்னதாய் அதில் ஒரு சந்தேகப் புள்ளியை வைத்துக் கொண்டாள் அவள். 

தெய்வீகாவின் தரப்பு விசாரணையில் அவர் வீட்டிற்கு ஒரே பெண் என்பதும், சொத்து விவகாரங்கள் எதுவும் இல்லை என்பதும் ஊர்ஜிதமானதில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் ‘அவர் பக்கத்தால் பிரச்சினை வந்திருக்கக் கூடுமோ..?’ என்ற எண்ணத்தை தளர்த்தி வைத்திருந்தாள் இனியா.

“இந்த சூப்பர் நேச்சுரல் பவர் பத்தி உங்களோட ஒப்பீனியன் என்ன மிஸ்டர் வாசுதேவன்..?” 

அவ்வளவு நேரமாய் நிலவி இருந்த அமைதியைக் குலைத்து, வாசுதேவனிடம் வினவினாள் அவள்.

“உண்மையை சொல்லணும்னா நான் அதை நம்பறேன் மேடம். அறிவியல் ரீதியா பார்த்தாலும் சரி, ஆன்மீக ரீதியா பார்த்தாலும் சரி, எந்த ஒரு விசயத்துக்கும் எதிரான விசயம் ஒண்ணு இருக்கிறதா தானே சொல்றாங்க. நம்ம வழிபட்ற சாமி உண்மைன்னா, அவங்களுக்கு எதிராக இருக்கற பேய்களும் உண்மையா தான் இருக்கணும் ங்கிறது என்னோட அபிப்பிராயம்…”

“ஓஓ… அப்படின்னா அந்தப் பொண்ணு காணாமப் போனதுக்கு, இந்த மாதிரி ஏதாவது நெகட்டிவ் எனர்ஜி காரணமா இருக்க முடியும்னு நினைக்கறீங்களா நீங்க..?”

“கண்டிப்பா இது தான் காரணம்னு உறுதியா சொல்ல முடியல… பட் அது ஒரு காரணமா இருக்குமோன்னு எனக்கும் தோணுது தான் மேடம்…”

“சரி… நேரா போய் லெஃப்ட்ல கட் பண்ணுங்க… அப்பறம் ஸ்ட்ரெய்டா போனா, ஒரு பென்ட் இருக்கு… அதுல திரும்பி மூணாவது வீட்டுல கார நிறுத்துங்க… நம்ம இந்த விசயத்தை கிளாரிஃபை பண்ணிடலாம்…”

“ஷ்யூர் மேடம்… பை த வே, அங்க யார் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?”

“தாராளமா… மிஸ்டர் ரிஷிகேஷ் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா..?”

“ஆமா மேடம்… ரொம்ப காலம் முன்னாடி பராநார்மல் சைக்காலஜில இந்தியாவில நம்பர் ஒன் பர்ஸன் அவர்… ஆனா அப்புறம் என்னாச்சுன்னு தெரியல, முழுசா அந்த ஃபீல்டுல இருந்து பின்வாங்கிட்டார்னு கேள்விப்பட்டேன்…”

“ம்ம்… அவங்க கிட்ட தான் இப்போ போய்ட்டு இருக்கோம் நம்ம…”

“வா..ட்..?” 

அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது இன்ஸ்பெக்டரின் குரலில்.

“மிஸ்டர் ரிஷிகேஷ் ஏற்காட்டுலயா இருக்கார்..?”

“ம்ம்… இப்போ ரெண்டு வருஷமா அவர் இங்க தான் இருக்கார்… அதுக்கு முன்னாடி அமெரிக்காவில இருந்தார்…”

“ஓஓ…” என்றவர், ‘இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்..?’ என கேட்கத் துடித்த நாவை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். 

அடுத்த இரண்டு நிமிடங்களில் முன்னாள் பராநார்மல் சைக்காலஜி ஸ்பெஷலிஸ்ட் ரிஷிகேஷ் வீட்டின் முன் நின்றிருந்தது அவர்களது மகிழுந்து. ஹார்ன் அழுத்தி ஒலி எழுப்பிய வாசுதேவனை ‘வேண்டாம்’ என்பதை சைகை காட்டி, காரிலிருந்து இறங்கச் சொன்னாள் இனியா. தானும் காரிலிருந்து இறங்கியவள், வீட்டின் உயரத்தையும் தாண்டி பிரம்மாண்டமாய் அமைந்திருந்த அந்த வாசல் கேட்டின் முன்பு நின்றிருந்தாள்.

“என்ன மேடம் கேட்டே இவ்வளோ பெரிசா இருக்கு..?” என்று வாயைப் பிளந்தார் வாசுதேவன்.

“யாரோட டிஸ்டர்பன்ஸும் இல்லாம இருக்கணும்னு அவரே அவருக்கு போட்டுக்கிட்ட வேலி இது… நீங்க ஹார்ன் பண்ணீங்க இல்ல..? அது அவருக்கு கேட்டிருக்கிறதுக்கு ஒரு துளி சதவீதம் கூட வாய்ப்பு இல்லை… ஏன்னா அவர் வீட்டுக்கு சவுண்ட் ப்ரூஃப் ரூம்ஸ் தான் செட் பண்ணி இருக்கார்…”

“ஓஓ… அப்படின்னா எப்படி நம்ம இப்போ உள்ள போறது மேடம்… கேமரா ஏதாவது வச்சிருக்காரா..?” என்று கேட்டபடியே, சிசிடிவி எதுவும் கண்ணுக்கு தென்படுகிறதா என பார்வையால் துழாவினார் வாசுதேவன். 

“கேமரா லாம் கிடையாது சார்… ஒன்லி சிஸ்டம் தான்… இந்த வாசல் கேட்ட ஆக்ஸஸ் பண்ணறதுக்கு ஒரு வழி இருக்கு… இதோ இங்க ஒரு பார்கோர்ட் ஒண்ணு போட்டிருக்காங்க இல்ல..?” என்று கேட்டின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த சிறிய பார்கோட் குறியீட்டை காட்டினாள் இனியா.

“ஆமா மேடம்…”

“இத நம்ம ஃபோன் கேமரா மூலமா படமெடுக்கும் போது, ஒரு ஆப் ஒண்ணு ஓப்பனாகி பாஸ்வேர்ட் கேக்கும்…‌ பாஸ்வேர்ட் சரியா குடுத்துட்டோம்னா கேட் தன்னால ஓப்பன் ஆகிடும்…” என்றபடியே தனது கேமராவில் அந்த பார்கோட்டை படம் பிடித்தாள் இனியா. 

“என்ன மேடம் இவ்வளோ ப்ராசீஜரா இருக்கு… என்னதான் பிரச்சினையாம் அந்த மனுஷனுக்கு..?” என்று ஆச்சரியத்தில் வாய் பிளந்தவரைப் பார்த்து, மெளனமாக சிரித்தாள் இனியா.‌ அந்த நொடி வாயில் கதவும் இரண்டாக பிரிந்து வழிவிட, இன்னும் ஆச்சரியம் கூடிப் போனது வாசுதேவனுக்கு.

“உங்களுக்கு இந்த கேட்ட ஓப்பன் பண்ணறதுக்கான பாஸ்வேர்ட் தெரியுமா மேடம்..?” 

“ம்ம்…” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல், இன்ஸ்பெக்டரை அழைத்துக் கொண்டு உள்நுழைந்தாள்.

கதவில் இனியாவின் ஃபிங்கர் பிரின்டை கொடுத்து விட்டு காத்திருக்க, ‘கம்மின்’ என்ற குரலைத் தொடர்ந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர் இருவரும்.

“வெல்கம் பேக் மிஸஸ் இனியா வில்லியம்ஸ்…” என பல நாள் பழகியவரைப் போல் உரிமையாக அழைத்துக் கொண்டு வந்த ரிஷிகேஷ், ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தார். அதன் பிரதிபலிப்பாக ஆங்காங்கே அவரது தலை முடிகள் வெள்ளையாய் நீட்டிக் கொண்டிருந்தன. 

“க்ளாட் டூ மீட் யூ எகெய்ன் சார்…” என பதிலுக்கு புன்னகைத்தவள், அவர் கை காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து வாசுதேவனும் அமர்ந்த பின் மெல்லமாக விடயத்தை ஆரம்பித்தாள் இனியா. 

“சாரி சார்… ஒரு அவசரமான விசயத்துக்காக உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணாமலயே வர வேண்டியதா போச்சு…”

“இட்ஸ் ஓகே ம்மா… காரணம் இல்லாம வர மாட்டீங்கன்னு தெரியும்‌… சொல்லுங்க…”

“எனக்கு சூப்பர் நேச்சுரல் பவர் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்…”

“அது பத்தி சொல்லணும்னா நிறைய சொல்லிட்டே போகலாம்… குறிப்பா உங்களுக்கு என்ன தேவைன்னு சொன்னீங்கன்னா நான் அதப் பத்தி டீடெய்லா சொல்ல வசதியா இருக்கும்…”

“ஆக்சுவலா நாங்க ரெண்டு பேரும் இப்போ ஒரு கேஸ்ல இன்வால்வ் ஆகி இருக்கோம்… ஒரு பொண்ணு மிஸ்ஸிங் கேஸ்…”

“மை காட்… கடவுள் அந்த பொண்ணுக்கு துணை நிற்கட்டும்… சொல்லுங்க… இந்த கேஸ்ல நான் ஏதாவது ஹெல்ப்‌ பண்ண முடியும்னு நினைக்கிறீங்களா..?”

“ஆமா சார்… அதுக்காக தான் இங்க வந்திருக்கோம்… விசயம் என்னன்னா, அந்தப் பொண்ணு காணாமப் போறதுக்கு கொஞ்ச காலம் முன்னாடி தான் அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்கு…‌ அவளும் சரி அவளோட வீட்டுக் காரவங்களும் சரி ஏதோ ஒரு சூப்பர் நேச்சுரல் பவரை அவ கூட இருக்கற மாதிரி ரியலைஸ் பண்ணின மாதிரி சொல்லி இருக்காங்க…‌ எனக்கு அதப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்…”

“கண்டிப்பா…‌ அவங்க சொல்ற விசயங்கள் உண்மையா இருக்கற பட்சத்துல, அவங்களுக்கு அப்படி தென்பட்டதுக்கான சில காரணங்களை என்னால முன்வைக்க முடியும்…” என்று அவர் ஆரம்பிக்க, அவர் சொல்லப் போகும் விடயங்களைக் கவனிக்கும் நோக்குடன் ஆழமாய்‌ அவரைப் பார்த்திருந்தனர் இனியாவும்‌ வாசுதேவனும்.

                         ✯✯✯✯✯✯

                                     – அல்லி மலரும்…

    No comments yet.