அல்லி 15
ஏற்காடு
இளந்தென்றல் வீடு
மெல்ல மெல்ல முன்னிரவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது அந்தி மாலை நேரம். கிட்டத்தட்ட நான்கு மணிக்கே அந்த ஏரியாவுக்கு வந்து விட்டிருந்தார்கள் இனியாவும் வாசுதேவனும். சுற்றுப் புறத்து ஆட்களையும், அந்த இடம் மொத்தத்தையும் ஓரளவு பார்வையால் அலசிக் கொண்டு இங்கு வந்து சேர அவர்களுக்கு இத்தனை நேரமாயிற்று. நல்ல வேளையாக, வாசுதேவன் ஃபார்மல் உடையில் வந்திருக்காததால் அது அவ்வளவாக மக்கள் யாரையும் பாதிக்கவில்லை.
உத்தியோகபூர்வமான அறிமுகத்துடன் ஆரம்பமானது அவர்களது உரையாடல்.
“வணக்கம் அம்மா… நான் இனியா, ஃப்ரம் க்ரைம் பிராஞ்ச். இவர உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும், இன்ஸ்பெக்டர் வாசுதேவன்… நாங்க ரெண்டு பேரும் உங்க பொண்ணு மிஸஸ் இளந்தென்றலோட கேஸ டீல் பண்ணிட்டு இருக்கோம்… உங்க சப்போர்ட் எங்களுக்கு கிடைச்சுதுன்னா கூடிய சீக்கிரம் உங்க பொண்ண கண்டுபிடிச்சு குடுத்துடுவோம் ம்மா… உங்களால முடிஞ்ச முழு ஆதரவையும் எங்களுக்கு தருவீங்கன்னு நம்பறோம்…”
கண்களில் கண்ணீர் கோடாய் வழிய, அவள் சொன்ன அத்தனைக்கும் சம்மதமாய் தலையாட்டினார் தெய்வீகா.
“பை த வே, உங்க ஹஸ்பன்ட் எங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?”
‘ஹூம்’ என பெருமூச்சொன்றை வெளியேற்றிக் கொண்டு பேசலானார் தெய்வீகா.
“தென்றல் காணாம போனதில இருந்து அவரு இப்படி தான் மேடம்… ஏதாவது கோவில் குளம்னு போய் நாள் முழுக்க இருந்திட்டு வருவார்… இன்னைக்கு நம்ம வீட்டுக்கு பக்கத்தில இருக்கற காளி அம்மன் கோவிலுக்கு போறதா சொன்னார்…”
“ஓஓ ஓகே… உங்க ஹஸ்பன்ட் இப்போ எங்க வர்க் பண்றாங்க..?”
“அவர் முன்னாடி புடைவைக்கடை ஒண்ணு வச்சிருந்தார் மேடம்… அப்புறம் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததால அத அப்பிடியே வித்துட்டு, வீட்டுல சும்மா தோட்ட வேலைகள் பாத்துட்டு இருக்கார்…”
“ஓகே… தோட்ட வருமானம் உங்களுக்கு போதுமானதா இருக்கா குடும்பத்தை கொண்டு நடாத்த..?”
“இவங்க வழியால வந்த பரம்பரை சொத்து நிறையவே இருக்கு மேடம்… வேலை செஞ்சு தான் சம்பாதிக்கணும்னு எந்த அவசியமும் இல்லாததுனால அவரு வேலையை விட்டது எங்க குடும்பத்தை அவ்வளவா பாதிக்கல... இந்த தோட்ட வேலைகள் கூட, அவருக்கு சும்மா உக்காந்திருக்க போரடிக்குதுன்னு ஆரம்பிச்சது தான்…”
‘பரம்பரை சொத்து நிறைய இருக்கு’ என்ற அவரது வார்த்தைகளை மனதில் குறித்துக் கொண்டு அடுத்த கேள்வியைத் தொடுத்தாள் இனியா.
“ம்ம்… தென்றலோட அப்பாவுக்கு எத்தனை சகோதரர்கள் இருக்காங்க..?”
“ஒரே ஒரு அண்ணன் மட்டும் தான் மேடம்… அவரும் மேரி பண்ணி ஃபாரின் போய் அங்கேயே செட்டில் ஆகிட்டார்…”
“ஓகே… அவங்களோட பரம்பரை சொத்த ரெண்டு மகன்களுக்கும் சரிசமமா தான் பிரிச்சு குடுத்தாங்கங்களா ம்மா..?”
“இல்ல மேடம்… தான் ஃபாரின்லயே செட்டில் ஆகிட்டதால முழு சொத்தையும் தம்பி பேர்லயே எழுதிக்க சொல்லிட்டார் இவங்களோட அண்ணன்… அதனால ஒரே ஒரு தோட்டக்காணியை தவிர மத்த அத்தனை சொத்தையும் இவங்க பேருக்கு தான் எழுதி வச்சாங்க…”
“அந்த தோட்டக்காணி மட்டும் ஏன் அவங்களுக்கு குடுத்தாங்க..? ஏதாவது ஸ்பெஸிபிக் ரீஸன் இருக்கா..?”
“ஆமா மேடம்… எங்க வீட்டுக்காரரும் சரி அவங்க அண்ணனும் சரி, ரொம்ப ஹெல்பிங் மைன்ட்… அந்த தோட்டக் காணியை மட்டும் தன் பேருக்கு வாங்கி, ஏதோ ஒரு ஆஃபனேஜ்கு குடுத்தாங்க அவங்க அண்ணா…”
“ஓகே ம்மா… உங்க வீட்டுக்காரருக்கு தொழில்முறை எதிரிங்க யாராவது இருக்காங்களா..?”
“அச்சோ அப்படில்லாம் யாரும் கிடையாது மேடம்… இவர் மேல எல்லாருக்கும் ரொம்ப மரியாதை இருக்கு… எதிரிங்கன்னு யாரும் கிடையாது…”
“இப்பல்லாம் முகத்து முன்னாடி சிரிச்சு, முதுகு பின்னாடி குழி வெட்டுற கூட்டம் தான் அதிகமா இருக்கு ம்மா… கொஞ்சம் கேர்ஃபுல்லாவே இருங்க… பை த வே, நான் இன்னொரு முக்கியமான விசயத்தை பத்தி உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன்… போலீஸ் விசாரணைல ஏதோ சூப்பர்நேச்சுரல் பவர் பத்தி உங்க ஹஸ்பன்ட் சொல்லி இருந்தாங்க இல்லையா..? அதப் பத்தி உங்களால டீடெய்லா சொல்ல முடியுமா..?”
இனியா அப்படி ஒரு கேள்வியைக் கேட்டது தான் தாமதம், முகம் முழுவதும் இருண்டு, பயத்தில் வரண்டு போனது தெய்வீகாவுக்கு. கண்கள் கலங்கி, எப்போதும் கண்ணீரை உகுக்கத் தயாராகி இருந்தன. அப்படி இருந்தும் தன்னைத் திடப்படுத்தி கொண்டு பேசத் தான் முனைந்தார் அவர்.
“அ..த.. அவரு மட்டும் இல்லம்மா, நானுமே கூட ரியலைஸ் பண்ணி இருக்கேன்…”
“வாட்..? நீங்களும் அந்த சூப்பர் நேச்சுரல் பவர ரியலைஸ் பண்ணி இருக்கீங்களா..? இத போன தடவை போலீஸ் விசாரணையப்போ சொன்னீங்களா நீங்க..?”
“சரியா ஞாபகம் இல்லங்க மேடம்… அந்த என்கொயரி தென்றல் காணாம போனதா நாங்க கம்ப்ளைன்ட் பண்ணின அன்னைக்கு நடந்திச்சு… அப்போ நானோ என் ஹஸ்பன்டோ கொஞ்சம் கூட பேசற மனநிலைல இருக்கல… அதனால என்னென்ன விசயங்கள் சொன்னோம், என்னென்ன விசயங்கள் சொல்லலன்னு எதுவுமே நினைவில இல்ல எனக்கு…”
“ஓஓ... இட்ஸ் ஓகே… இப்போ அதப் பத்தி கொஞ்சம் டீடெய்லா சொல்றீங்களா..?”
“கண்டிப்பா மேடம்… நம்ம தென்றலோட கல்யாணத்துக்கு நாலைஞ்சு நாள் முன்னாடின்னு நினைக்கிறேன். கல்யாண வேலையை பகிர்ந்து செய்றதுக்கு எத்தனை பேர் இருந்தாலும், நானும் இவரும் நிறைய வேலைகளை நாங்களே இழுத்துப் போட்டு செஞ்சுட்டிருந்த நேரம் அது… என்ன இருந்தாலும் அவ எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு இல்லையா..? அதனால வீட்டுக்கு உதவி ஒத்தாசைக்கு வந்தவங்க தூங்கினதுக்கப்புறம் கூட நானும் இவரும் தூக்கத்துக்கு போக மாட்டோம்… அப்படி ஒரு நாள் தான், நானும் இவரும் வேலையை முடிச்சுட்டு படுக்கப் போறதுக்கு முன்னாடி தென்றல பத்தி பேசிட்டே இருந்தோம்… தென்றல் எப்பவுமே அம்மாச் செல்லம் தான். அவள பாக்காம இருக்கவே முடியாதுன்னு ரொம்ப நேரமா ஃபீல் பண்ணிட்டு இருந்தேன் நான்… என்னை சமாதானப்படுத்த முயற்சி பண்ணி நல்ல திட்டு வாங்கிக்கிட்டார் தென்றலோட அப்பா… அதனால முகத்த தூக்கி வச்சுக்கிட்டு, “நீ என்னமோ பண்ணு… நான் போய் படுக்கறேன்”னு சொல்லி படுக்கைக்கு போயிட்டார் அவர். அதுக்கு அப்புறம் ரொம்ப நேரமாகியும் எனக்கு தூக்கம் வரல… சரி தூக்கம் தான் வரலயே… ஒரு வாட்டி தென்றலை போய் பாத்துட்டு வந்துடலாம்னு நினைச்சு தான் எந்திரிச்சு போனேன்… ஆ..னா.. அங்க…”
என்ற தெய்வீகாவின் முகம் அப்பட்டமான பயத்தை வெளிக் காட்டியது. உடலில் சட்டென ஒரு நடுக்கம் தொற்றிக் கொண்டது.
“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ் ம்மா…” என்ற இனியா வாசுதேவனிடம் இருந்த வாட்டர் பாட்டிலை வாங்கி, “தண்ணி குடியுங்க…” என்று சொல்லி அவரிடம் தந்தாள். அதை சட்டென்று வாங்கி, மடக் மடக்கென ஒரே மூச்சில் குடித்து முடித்தார் தெய்வீகா. தண்ணீர் இறங்கிய பின் தான் கொஞ்சமே கொஞ்சம் ஆசுவாசமானது அவருக்கு. சற்று நேரம் எடுத்துக் கொண்டவர், தானாகவே தொடர்ந்தார்.
“அன்..னைக்கு தான் அத நான் ஃபர்ஸ்ட் டைம் பாத்தேன் மேடம்… தென்றல் பக்கத்துல உக்காந்திருந்திச்சு… உடம்புலாம் கருப்பா, புசு புசுனு முடி வச்ச மாதிரியா இல்லன்னா புகை மூட்டம் மாதிரியான்னு சரியா சொல்ல தெரியல எனக்கு… அப்படி ஒரு உருவம் மேடம் அது... சத்தியமா சொல்றேன் அன்னைக்கு நான் கத்தின கத்து இந்த எட்டுப்பட்டி கிராமத்துக்கும் கேட்டிருக்கணும்… ஆனா பொட்டு சத்தம் கூட வெளில வரல… கொஞ்ச நேரத்துல எல்லாம் அது காத்தோட காத்தா கலந்து காணாமப் போயிடிச்சு… ஆனா எனக்கு தான் சுத்தமா நினைவே இல்லை… தென்றலை தட்டி எழுப்பி, திருநீறு வச்சுட்டு, எங்க ரூமிலேயே படுக்க வச்சுட்டேன்… எதுக்குன்னு கேட்டா… அம்மாவுக்கு வந்த கனவு சரியில்ல, அதனால தான் இப்படி பண்ணறேன்னு சொல்லி இவங்க ரெண்டு பேரையும் நம்ப வச்சிட்டேன்…”
“சரி… அப்புறம் எப்படி தென்றலோட அப்பாவுக்கு அந்த உருவத்தை பத்தி தெரிய வந்துச்சு..?”
“நான் அந்த உருவத்தை பாத்த மறுநாள், எங்க மூணு பேருக்குள்ளயும் கான்வர்ஸேஷன் கொஞ்சம் கம்மியா தான் இருந்திச்சு… நான் இவங்க ரெண்டு பேர் கூடவும் சரியா பேசல… முதல் நாள் சரியா தூக்கம் இல்லாததுனால தான் அப்படி நானாவே எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டேனோனும் தோணுச்சு… அப்பறம் ரெண்டு நாள் போனதும், நானே என்னை தேத்திக்கிட்டு சரியாகிட்டேன்…”
“அப்படி ஒரு உருவத்தை பாத்தத பத்தி யார் கிட்டவும் ஷேர் பண்ணிக்கலயா..?”
“இல்ல… கல்யாண நேரத்துல அவங்கள குழப்ப எனக்கு மனசு வரல. தவிரவும், அந்த உருவம் என்னோட கற்பனைனு நினைச்சு நானே என்னை தேத்திக்கிட்டதுனால யார் கிட்டவும் சொல்ல தோணல…”
“ஓஓ… அப்போ உங்க ஹஸ்பன்ட் எப்போ அந்த உருவத்தை பாத்ததா சொன்னார்..?”
“தென்றலுக்கு கல்யாணமாகிற அன்னைக்கு… விடியக்காலைல மூணு மணிக்குள்ள இருக்கும்னு நினைக்கிறேன்… தென்றல் வீட்டு வாசலுக்கு வெளியே நின்னுட்டிருந்தா… கல்யாணம் ஆகப் போற பொம்பளப் புள்ளக்கு இந்த நேரத்துல இங்க என்னடி வேலைன்னு அவளோட ஃப்ரண்ட் அவள அழைச்சுட்டு வந்து என்கிட்ட விட்டுட்டு போனா… நானும் பதிலுக்கு தென்றல கொஞ்சம் திட்டினேன் தான்… அப்புறம் அவளுக்கு திருஷ்டி கழிச்சு வாசல்ல கொண்டு போய் எரிச்சுட்டு வர்றப்போ தான் மறுபடியும் அ..த பார்த்தேன்…”
மீண்டும் உடல் நடுங்க ஆரம்பித்தது தெய்வீகாவுக்கு.
“கொஞ்சம் பதட்டப்படாம தைரியமா இருங்க ம்மா… நாங்க இருக்கோம் உங்க கூட… நீங்க சொல்லற ஸ்டேட்மென்ட்ஸ வச்சு தான் தென்றல கண்டுபிடிக்க முடியும்… ஹோப் யூ அன்டர்ஸ்டான்ட்…”
“புரியுது மேடம்… ‘அது’ நம்மளுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தின்னு அன்னைக்கு எனக்கு நிச்சயமா உணர முடிஞ்சது… அதுக்கப்புறம் தான் ஓடி வந்து அத என் ஹஸ்பன்ட் கிட்ட ஷேர் பண்ணிட்டேன்… அந்த டைம்ல அவர் தனியா தான் இருந்தார். அவர்கிட்டவும் ஏதோ ஒரு பதற்றம் தெரிஞ்சுது… என்னன்னு கேட்டா, அன்னைக்குத் தான் அந்த உருவத்தை அவருமே பாத்திருக்கார்… கொஞ்ச நேரத்தில தென்றலோட கல்யாணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்ணறதுன்னு தெரியல எங்களுக்கு… சொன்னா நம்ப மாட்டீங்க மேடம், அன்னைக்கு தென்றலுக்கு தாலி கட்டி முடிஞ்ச கையோடவே எங்க குடும்ப ஜோசியர போய் பாத்தோம்… இது எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்… அவர் தான் தென்றலுக்கு ஆயுள் குறைபாடு இருக்க வாய்ப்பு இருக்கும்னும், குழந்தை பெத்துக்கிறதை கொஞ்சம் தள்ளி வச்சுக்கவும் சொன்னாங்க…”
“சோ… அக்காடிங் டூ யுவர் ஸ்டேட்மென்ட், தென்றலுக்கு கல்யாண ஏற்பாடுகள் பண்ணினதுக்கப்புறம் தான் இதெல்லாம் ஆரம்பிச்சிருக்கு இல்லையா..?”
“அப்படித் தான் நினைக்கறேன் மேடம்…”
“சரிம்மா… நீங்க மனசை தளர விடாதீங்க… நாங்க இப்போதைக்கு கிளம்பறோம், கண்டிப்பா மறுபடியும் திரும்பி வருவோம்… இது என் கார்ட்… இத வச்சுக்கோங்க… ஏதாவது அவசரம்னா ஆர் ஏதாவது இன்ஃபர்மேஷன் சொல்லணும்னா உடனே எனக்கு கால் பண்ணுங்க… சரியா..?” என்று அவர் கைகளில் தனது விசிட்டிங் கார்டை திணித்தாள் இனியா.
“சரிங்க மேடம்…” என கூறி, அந்த கார்டை தெய்வீகா பெற்றுக் கொண்டதும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள் வாசுதேவனும் இனியாவும்.
இருவரும் கிளம்பி வந்திருந்த மகிழுந்தை இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஓட்ட, பின்னிருக்கையில் அமர்ந்திருந்து, வாசுதேவன் கொடுத்திருந்த ஃபைலை திருப்பிக் கொண்டிருந்தாள் இனியா. இன்று அவர்களது விசாரணையில் தெய்வீகா சொல்லி இருந்த அத்தனை விடயங்களுமே, போலீஸ் தரப்பு விசாரணையிலும் கிளியர் ஸ்டேட்மென்டாக கொடுக்கப்பட்டிருந்தது. தெய்வீகாவும் அந்த சூப்பர் நேச்சுரல் பவரை உணர்ந்தது மாத்திரம் அதில் மிஸ் ஆகி இருந்தது. அது உண்மையில் தெரியாமல் தவற விடப்பட்டதா, அல்லது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்பதை வழக்கின் போக்கு தான் சொல்ல வேண்டும்…
.
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.