அல்லி 14
அம்மன் கோவில் பூசாரி நீலகண்டனின் உதவியுடன், அத்திப்பட்டு வளாகத்திலேயே பெரிதாய் இருந்த அவரது அம்மன் சந்நிதானத்தில் ஓங்கி வளர்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தது ஓமகுண்டம். அம்மனை அழைத்து குறி சொல்வதில் வல்லுநரான உமைபாலன் அந்த ஓமத்தீயை வளர்த்திருக்க, அருகே பயபக்தியுடன் நின்றிருந்தார்கள் அஸ்வத்தாமனும் நீலகண்டனும். ‘இன்றாவது ஒரு திடமான முடிவு தெரிந்து விட வேண்டுமே..’ என்ற ஏக்கம் அஸ்வத்தாமனுக்கு. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகங்களாய்க் கடந்து கொண்டிருந்தது அவருக்கு.
கிட்டத்தட்ட இரு மணி நேரங்கள் கடந்த பின்னரும் பூஜை தொடர்ந்து கொண்டிருக்க, சற்று மனம் விட்டுத் தான் போனது அவருக்கு. பொதுவாக இரண்டு மணி நேரத்திற்குள் அம்மன் குறி சொல்வதற்கு எழுந்தருளி விடும் என்று நேற்றையதினம் உமைபாலன் சொல்லி இருந்ததால், கடந்த இரு மணி நேரங்களாக மனதில் இருந்த நம்பிக்கை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்திருந்தது. முதல் நாளைப் போலவே, முழுதாக மூன்று மணி நேரங்களின் முடிவில் பூஜையிலிருந்து எழுந்தார் உமைபாலன்.
அம்மன் சந்நிதானத்தில் விழுந்து வணங்கி விட்டு வந்தவரின் முகம் எக்கச்சக்க வேதனையை சுமந்திருந்தது.
“பொதுவா நான் அழைச்சு, அம்மா குறி சொல்லறதுக்கு வராம இருந்ததே இல்ல பூசாரி ஐயா… ஆனா நேத்தும் இன்னைக்கும் விதிவிலக்கு… இதுக்கு என்ன காரணம்னு நினைச்சு நினைச்சு நேத்து ராத்திரி முழுக்க தூங்கவே இல்லை நான்… ஆனா இன்னைக்கு தான் அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரிஞ்சுது…”
“என்ன காரணம் ஐயா..?” வேகமாய் கேட்டார் அஸ்வத்தாமன்.
“உங்க கோவில்ல இருக்கிற அம்மன் கட்டுக்குள்ள இருக்கா…”
“என்ன..?” அதிர்ந்து போய் கேட்டார் நீலகண்டன்.
“ஆமாங்க… உங்க கோவில்ல இருக்கிற அம்மன் மட்டும் இல்லை. இந்த ஊருக்குள்ள இருக்கிற அத்தனை தெய்வங்களும் கட்டுக்குள்ள தான் இருக்கு… அதுல உங்களோட கோவில் முருகனும் உள்ளடக்கம்” என அஸ்வத்தாமனைப் பார்த்து வேதனையாய் சொல்ல, இரு பூசாரிகளாலும் எதுவுமே பேச இயலவில்லை. இப்படி ஒரு காரணத்தை அஸ்வத்தாமன் கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்கவும் இல்லை. அந்த ஏக்கத்தில் இருந்து முதலில் வெளிவந்தது நீலகண்டன் தான்.
“நீங்க எப்படீங்க ஐயா இவ்வளவு உறுதியா சொல்றீங்க..?”
“வழமையா நம்ம பூஜை செய்ய ஆரம்பிச்சுட்டா, சம்பந்தப்பட்ட தெய்வம் எப்போ மனநிறைவாகுதோ அப்பவே குறி சொல்லுறதுக்கு வந்துடும்… இது ஒவ்வொருத்தங்களோட பூஜை முறைக்கு ஏத்த மாதிரி வேறுபடும். எனக்கு ரெண்டு மணி நேரங்கறது வழமை. நான் நேத்து முருகர் கோவில்ல பூஜை செய்தப்போ அம்மன் குறி சொல்றதுக்கு வரல… அம்மனுக்கு துணையா எப்பவுமே எழுந்தருள்ற சிவனும் எழுந்தருளல… சம்பந்தப்பட்ட சாமிகள் வர முடியாத நிலைமையில, கருப்பர் முனியப்பர் மாதிரியான தெய்வங்கள் வழிகாட்டியா வந்து… ‘இது தான் பிரச்சினை, இப்படி பண்ணீங்கன்னா சரியாகிடும்..’னு நம்பிக்கை குடுத்துட்டு போகும்… அதுவும் நேத்து நடக்கல… அப்ப எனக்கு எதுவுமே புரியல… அங்க இருந்து வந்ததுக்கப்புறமும் மனசு ஆறவே இல்லை… ராத்திரி பூரா நான் தூங்கவும் இல்லை… இன்னைக்கு காத்தால இங்க வரதுக்கு முன்னாடி தான் எங்க குருநாதருக்கு ஃபோன் பண்ணி விசயத்தை சொன்னேன்… அவர் சில முறைகள் சொல்லி, அந்த முறைகள் மூலமா சிறு தெய்வங்களை கூப்பிட்டு பாக்க சொன்னாரு… அந்த சிறு தெய்வங்களும் உதவிக்கு வரலன்னா, அந்த ஊருக்குள்ள எந்த தெய்வமும் உயிர்ப்போட இல்லைன்னு அர்த்தம்னு சொன்னாரு…”
“…”
“இதுல கவலை என்னன்னா, ‘அப்படி ஒட்டுமொத்த தெய்வத்தையும் கட்டுக்குள்ள வச்சு யாரும் பூஜை பண்ண மாட்டாங்க… அதுலாம் ரொம்ப பெரிய பூஜை… அதை செய்ற அளவுக்கு தைரியமோ திறமையோ இந்தக் காலத்து ஆளுங்க கிட்ட கிடையாது… அதனால ஏதாவது ஒரு தெய்வத்தை தான் கட்டுக்குள்ள வச்சிருப்பாங்க… கண்டிப்பா சிறு தெய்வமாவது உன்னோட உதவிக்கு வரும்’னு நம்பிக்கை குடுத்து தான் அனுப்பிச்சாரு எங்க குருநாதர்… ஆனா அதையெல்லாம் தாண்டி இங்க பிரச்சினை இவ்வளோ பெருசா இருக்கும்னு நினைக்கல நான்…”
“இப்போ என்ன பண்ணறது ஐயா..?”
“உண்மைய சொல்லணும்னா இதுல உங்களுக்கு உதவுற அளவுக்கு எனக்கு சக்தி கிடையாது… நான் என்னோட குருநாதர் கிட்ட பேசறேன்… கண்டிப்பா அவரு உங்களுக்கு உதவுவார்…”
“கொஞ்சம் சீக்கிரமா பண்ணுங்க ஐயா…”
“கண்டிப்பா… இன்னைக்கே நான் அவர்கிட்ட பேசிடறேன்…”
“ரொம்ப நன்றிங்க ஐயா…”
உமைபாலன் விடைபெற்று அங்கிருந்து கிளம்ப, நீலகண்டனும் அஸ்வத்தாமனும் ஒருவரை ஒருவர் கவலையாக ஏறிட்டு கொண்டார்கள்.
✯✯✯✯✯
ஏற்காடு
‘கலைமகள் கலைக்கூடம்’ என தனக்குள் மீண்டும் ஒருமுறை சொல்லிய இனியா, “இவங்க டீச் பண்ண இதே ஸ்கூல்ல தான் எங்க அக்கா பொண்ணு நர்த்தனாவும் படிக்கிறா சார்…”
“ஓஓ அப்படிங்களா மேடம்..? பாப்பாவுக்கு அவங்கள பத்தி ஏதாவது தெரிஞ்சிருக்குமா… சின்னப் பிள்ளைங்களோட அப்சர்வேஷன் எப்பவும் அதிகம் தானே..? நம்ம பாப்பா கிட்டவும் ஒரு வார்த்த கேட்டு பாக்கலாமா..?”
“ஷ்யூர்…” என்றவள் தமக்கையைக் கூப்பிட்டு, நர்த்தனாவை அழைத்து வரச் செய்தாள்.
நர்த்தனா உள்ளே வந்ததும், “உனக்கு இந்த ஆன்டிய தெரியுமா ம்மா..?” என நேரடியாக விடயத்திற்கு வந்தாள் இனியா.
“இவங்க ஆன்டி இல்ல… எங்களோட தமிழ் டீச்சர்… எனக்கு ரொம்ப பிடிக்கும்… டீச்சர் எங்களுக்கு அடிக்கவே மாட்டாங்க… சாக்கி எல்லாம் வாங்கி தருவாங்க… யார டீச்சருக்கு ரொம்ப பிடிக்கும்னு கிளாஸ்ல எல்லாரும் சண்டை போடுவோம் தெரியுமா…”
“ஓஓ அப்படியா..?” என குழந்தையை கிள்ளி செல்லம் கொஞ்சியவள், “சமத்துக் குட்டிக்கு வேற என்ன தெரியும் டீச்சர் பத்தி..?” என்றாள் தொடர்ந்து.
“ஏன் கேக்கற..? ரொம்ப நாள் டீச்சர் ஸ்கூலுக்கு வராததால அவங்கள புடிச்சு ஜெயில்ல போடப் போறியா..? அவங்க பாவம்… அப்படில்லாம் பண்ணிடாத என்ன..?”
“இல்லம்மா… ஜெயில்லலாம் போட மாட்டேன்… அவங்க குட் டீச்சர் தானே..? அதனால அவங்க கஷ்டப்பட்ற மாதிரி சித்தி நடந்துக்க மாட்டேன்… சரியா..?”
“ம்ம்…”
“இப்போ சொல்லுங்க… டீச்சர பத்தி வேற என்ன தெரியும் நர்த்துக் குட்டிக்கு..?”
“எனக்கு தெரியாதே வேற எதுவும்…” என இயலாமையாய் கைகளைக் காண்பித்து உதடு சுழித்தவள், “ஹான்… அன்னைக்கு ஒருநாள் டீச்சர், சுலோச்சனா டீச்சர் கிட்ட ஏதோ சொல்லி அழுதுட்டிருந்தாங்க… என்னனு தெரியல எனக்கு…” என்றாள் பெரிய மனிதத் தோரணையில்.
“சரிம்மா… சித்தி பாத்துக்கிறேன்…”
“டீச்சர் எப்போ ஸ்கூலுக்கு வருவாங்க..?”
“கூடிய சீக்கிரம் வந்திடுவாங்கம்மா..” என நர்த்தனாவின் நெற்றியில் முத்தமிட்டு அவளை கீழே இறக்கியவள், தமக்கையை அழைத்து அவளை அனுப்பி வைத்தாள்.
வாசுதேவனை நோக்கி திரும்பிய இனியா, “அப்படீன்னா அந்த சுலோச்சனா டீச்சர் கிட்ட விசாரிச்சா எதாவது தெரிய வரும்னு நினைக்கிறேன் சார்…” என்றாள் ஏதோ ஒரு நூல் கிடைத்து விட்ட திருப்தியுடன்.
“ஆக்சுவலி இந்த கேஸோட ஆரம்பத்துல அவங்க வீட்டு ஆளுங்க கிட்டவும், ஸ்கூல் என்வயர்ன்மென்ட்ல இருக்கற ஆளுங்க கிட்டவும் தரோவா விசாரிச்சோம் மேடம்… அப்படி அந்த சுலோச்சனா மிஸ் கிட்ட விசாரிச்சப்ப, தென்றல் கொஞ்ச நாளாவே பராநார்மல் ஆக்டிவிட்டி பத்தி சொல்லி கவலைப்பட்டதா சொன்னாங்க… அதைத் தான் நம்ம பாப்பாவும் பாத்திருக்கும்னு நினைக்கிறேன் மேடம்…”
“ஓஓ.. இந்த மாதிரியான நம்பிக்கைகள் தான் ரொம்ப பெரிய விசயங்களுக்கு அடித்தளமா இருக்கு.. இல்லையா வாசுதேவன் சார்..?” என்றாள் இனியா ஏதோ ஒரு பலத்த யோசனையுடன்.
“கிராமத்து ஜனங்க கிட்ட அந்த நம்பிக்கை கொஞ்சம் இருந்திட்டு தான் இருக்கு மேடம்… நீங்க சொல்ற மாதிரி அது பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கலாம்… எனக்கு தெரியல…”
“ஓகே லெட்ஸ் ஸீ… பை த வே மிஸ்டர் வாசுதேவன் சார், எனக்கு எந்த கேஸ் எடுத்தாலும் அதுல ஆரம்பத்தில இருந்து இறுதி வரை நானே டைரக்டா இன்வால்வ் ஆகி இன்வெஸ்டிகேட் பண்ணி தான் பழக்கம்… ஹோப் யூ அன்டர்ஸ்டான்ட்…”
“நோ ப்ராப்ளம் மேடம்… உங்க ஸ்டாட்டர்ஜி (strategy) பத்தி ஆல்ரெடி கேள்விப்பட்டிருக்கேன்… பட் சேர்ந்து வேலை செய்றதுக்கான வாய்ப்பு இப்ப தான் கிடைச்சிருக்கு…”
“தாங்க் யூ சோ மச் சார்… நீங்க கலெக்ட் பண்ண டீடெய்ல்ஸும் எனக்கு ஷேர் பண்ணிடுங்க… ஃபர்தரா என்ன பண்ணறதுன்னு யோசிக்கலாம்… உங்களுக்கு ஓகேன்னா இன்னைக்கு ஈவ்னிங் அந்த சுலோச்சனா மிஸ்ஸ அவங்க வீட்டுக்கு போய் பாக்கலாமா..?”
“ஷ்யூர் மேடம்…” என்றதுடன் வாசுதேவன் அங்கிருந்து கிளம்பி விட, ‘மிஸஸ் இளந்தென்றல் பேரெழிலன்’ என அவளது பெயரை ஒருமுறை தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள் இனியா.
✯✯✯✯✯
அத்திப்பட்டு
இரவு பத்தரை மணி
பெரியாத்தாவின் நாள் காரியங்கள் முடிவடைந்து மூன்று நாட்கள் ஆகி இருந்தன. வந்திருந்த உறவினர்களும் கிளம்பிச் சென்றிருக்க, அல்லியும் ரத்னாவும் தனித்து விடப்பட்டிருந்தார்கள் அங்கே. ஓடி ஓடி வேலை செய்திருந்த களைப்பில் தம்மை மறந்து தூங்கி இருந்தனர் இருவரும்.
திடீரென ஏதோ அருட்டுவது போல் இருக்க, படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள் அல்லி. அருகே ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள் ரத்னா. ரத்னா அப்படித்தான். ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டால், அவளை எழுப்புவது கொஞ்சம் சவாலான விடயம் தான். ஆனால் இந்த நேரத்தில் அவளது உறக்கம் அல்லிக்கு ஏனோ நிம்மதியைத் தான் கொடுத்தது.
வெளியில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்ட வண்ணம் இருக்க, காதுகளை கூர்மையாக்கி அது என்ன சத்தம் என்பதை கண்டறிய முனைந்தாள் அல்லி. ஆனால் அதற்கு பலன் தான் கிட்டவில்லை. வெளியில் கேட்பது என்ன சத்தம் என்றும் ஊகிக்க முடியவில்லை, அது வீட்டின் முன்புறம் இருந்து கேட்கிறதா அல்லது வீட்டிற்கு பின்புறத்தில் இருந்து கேட்கிறதா என்பதையும் கண்டறிய முடியவில்லை அவளால்.
மெல்ல படுக்கையில் இருந்து எழுந்தவளின் பார்வை தன்னிச்சையாக தோட்டப்புறம் திரும்பியது. கண்ணுக்கு தட்டுப்பட்ட பலா மரத்தை விட, முழுமையாக எரிந்து சரிந்திருந்த அந்த தென்னை மரம் தான் அவளது திகிலை இன்னும் கூட்டியது. ‘ச்சே… ஆத்தாவோட நாள் காரியங்களை பாத்துட்டு, இந்த மரத்தை அப்புறப்படுத்தற வேலையை கவனிக்காமலே போய்ட்டேனே… நாளைக்கு முதல் வேலையா, ஆளுங்களை கூப்பிட்டு இதை க்ளீன் பண்ணிடணும்...’ என தனக்குள் நினைத்துக் கொண்டு திரும்பினாள் அல்லி.
இன்னமும் சத்தம் கேட்டு கொண்டே இருக்க, மெல்ல மெல்ல நடந்து முன் வராந்தாவுக்கு வந்திருந்தாள் அவள். இப்போது தான் கொஞ்சமே கொஞ்சம் தெளிவாக கேட்கிறது அந்த சத்தம். ‘ம்ம்ம் ம்ம்ம்’ என ஏதோ உறுமுவது போன்ற, கேட்க சகிக்காத சத்தம் அது. ஏனோ, இவ்வளவு நேரமாய் மனதில் தோன்றியிராத பயம் இப்போது தான் லேசாய் கவ்விப் பிடிக்கிறது அவள் மனதை. சுற்றும் முற்றும் ஒருமுறை வேகமாக நோட்டம் விட்டவள், ‘இங்க நிக்க வேணாம்… சீக்கிரமா போய் ரத்னாவை எழுப்பிக்கிட்டு சாமியறைக்கு போய் படுத்துக்கலாம்…’ என நினைத்து கொண்டே திரும்ப போக, அவளுக்கு அருகில் கேட்பது போல் இருந்தது அந்த உறுமல் சத்தம்.
தாள முடியாத பயத்துடன் அவள் வலது புறம் திரும்பிப் பார்க்க, அளவிலிருந்து சற்று தொலைவில் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தார் பெரியாத்தா..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.