அல்லி 13
அத்திப்பட்டு
முருகர் கோவில் மூலஸ்தானம் திறக்கப்பட்டிருக்க, இடப்புறத்தில் ஏற்றப்பட்டிருந்த குத்து விளக்கின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது மூலமூர்த்தியான முருகப் பெருமானின் வேலாயுதம்..! காண்பவர் யாராக இருந்தாலும், அவர்களது மனதை நிறைத்து விடக் கூடிய காட்சி தான் அது. ஆனாலும், அது நம் பூசாரி அஸ்வத்தாமனின் மனதை நிறைக்கப் போதுமானதாக இல்லை என்பது தான் கவலைக்குரிய விடயம்..!
முன்பெல்லாம் இந்த தீப ஒளியைப் பார்த்திருந்தால், எத்தனை நாள் பொழுது வேண்டுமென்றாலும் கடந்திருப்பார் அவர். ஆனால் இப்போது சில நாட்களாக அந்த உணர்வுக்குப் பஞ்சமாகிப் போனதும் அப்பனின் திருவிளையாடல் தான் போலும்..! சிந்தனை வயப்பட்டு கோவில் தூணில் சாய்ந்திருந்தவர், அரவம் கேட்டு கவனம் கலைந்து திரும்பினார். கோவிலுக்குள் வந்து கொண்டிருந்தவரைப் பார்த்து சட்டென ஒரு பவ்யம் தொற்றிக் கொண்டது அஸ்வத்தாமனை.
“வாங்க ஐயா… வாங்க…” என வாய் நிறைய வரவேற்றார் எதிரில் இருந்தவரை.
“வணக்கம் பூசாரி ஐயா… தயவு செஞ்சு தாமதத்துக்கு மன்னிக்கணும்…”
“கடவுளே..! அதெல்லாம் ஒரு பிரச்சினை கிடையாதுங்க ஐயா… என்னோட வேண்டுதலை ஏற்று இவ்வளோ தூரம் வந்ததுக்கு நான் தான் நன்றிக்கடன் பட்டிருக்கணும்…”
“இது என்னோட கடமை பூசாரி ஐயா… சரி, நான் சொன்ன பொருட்கள் எல்லாம் தயார் நிலையில இருக்கா..?”
“இருக்குங்க ஐயா… எதுக்கும் நீங்க ஒரு தடவ சரியா இருக்கான்னு பாத்துட்டீங்கன்னா, சரியான நாழிகைக்கு பூஜையை ஆரம்பிச்சுடலாம்…”
“கண்டிப்பா…” என்றவர், அங்கிருந்த பொருட்களை ஒருமுறை நோட்டம் விட்டதன் பின்னர், தான் கொண்டு வந்திருந்த மரப் பலகையில் வெள்ளைத் துணி ஒன்றை விரித்து, அதன் மீது அமர்ந்தார். பெரியதும், அதை விட சற்று சிறியதுமான இரு வெள்ளிக் குடங்களை வெளியில் எடுத்தவர், பூஜைக்கு தயார் செய்வது போல அவற்றை தனித்தனியே நூல் பந்தால் சுற்றினார். அந்தக் குடங்களின் கழுத்து மட்டம் வரைக்கும் நீர் நிரப்பியவர், இரண்டின் வாய்ப்பகுதிகளிலும் இரு தேங்காய்களை கவிழ்த்து வைத்தார். ஏழு மாவிலைகள் சகிதம் இரு குடங்களிலும் வைத்தவர், தேங்காய்ப் பழத்திலும், குடங்களிலும் மூன்று இடங்களில் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்தார்.
“இதுல பெரிய கலத்தை சிவனாகவும், சின்ன கலத்தை சக்தியாகவும் நினைச்சு வழிபட போறோம் பூசாரி ஐயா… பெரிய குடத்தில சிவனும், சின்ன குடத்தில அம்மனும் சஞ்சரிச்சதுக்கு அப்பறம் தான் நம்மளுக்கு தேவையான பதில்கள் நமக்கு கிடைக்கும்… அம்மா நம்ம முன்னாடி வந்து அசரீரி வடிவில அருள்வாக்கு சொல்லும் போது, உங்களுக்கு தேவையான கேள்விகளை நீங்க கேட்டுக்கலாம்… அம்மன் நம்ம முன்னால வர்றதுக்கு, சிவனோட அருள் கண்டிப்பா நமக்கு வேணும்… இதெல்லாம் ஏன் இப்பவே விளக்கமா சொல்லி வச்சுக்கிறேன்னா, பூஜை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் உங்க கிட்ட அநாவசியமா எதுவும் பேச மாட்டேன்… நீங்களும் இடையில எதுவும் என்னை கேக்க கூடாது… நான் கேக்கற பொருட்களை மட்டும் என் கையில எடுத்துக் குடுத்துட்டு இருந்தீங்கன்னா போதும்…”
“சரிங்க ஐயா…”
அதன் பின்னர் இரு குடங்களுக்கும் சேர்த்த மாதிரி பூ மாலை அணிவித்தவர், ஓம குண்டம் ஒன்றை உருவாக்கி பூஜையை ஆரம்பித்து விட்டார். அவரது வாய் மந்திரங்களை முணுமுணுத்த வண்ணம் இருக்க, சிவனையும் சக்தியையும், மூல மூர்த்தியான அவர்களது மைந்தனையும் மனதார வழிபட ஆரம்பித்திருந்தார் அஸ்வத்தாமன்.
ஏறத்தாழ மூன்று மணி நேரமாக தடல்புடலாக பூஜை நடைபெற்று முடிய, ஏமாற்றமாய் நிமிர்ந்து அஸ்வத்தாமனை பார்த்தார் அந்த குறி சொல்பவர்.
“என்னாச்சுங்க ஐயா..?”
“இல்ல… வழமையா நான் பூஜை செஞ்சா, ரெண்டு மணி நேரத்துக்குள்ள அம்மா கலசத்துல இறங்கிடுவாங்க… இன்னைக்கு மூணு மணி நேரமாகியும் வரல… அதுதான் ஏன்னு தெரியல…”
“ஏதாவது பிரச்சினையா இருக்குங்களா ஐயா..?” என்றார் அஸ்வத்தாமன் உள்ளிறங்கி விட்ட குரலில்.
“அப்படித்தான் தோணுது… ஆனா இது நீங்க பயந்த மாதிரி உங்க ஊருக்குள்ள ஏதோ தீய சக்தி புகுந்ததுனால வந்த பிரச்சினையா தெரியல எனக்கு… இந்தக் கோவிலோட மூலமூர்த்தி முருகர் மேல இருக்கிற பிரச்சினையாவும் தெரியல… இது வேற ஏதோ…”
“வேற ஏ..தோ ன்னா..? புரியலைங்களே ஐயா… ரொம்ப பயமா இருக்கு எனக்கு…”
“பூசாரி ஐயா, ‘யாமிருக்க பயமேன்?’ அப்படின்னு வாய் நிறைய சொல்லுறவன் முன்னாடி நின்னுக்கிட்டு, நம்ம அஸ்வத்தாமன் ஐயாவே ‘பயம்’ ங்கிற வார்த்தையை பயன்படுத்தலாமா..? என்ன ஆனாலும் பாத்துக்கலாம்… எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணணுமே..?”
“சொல்லுங்க ஐயா…”
“இந்த ஊருக்குள்ள இருக்கற அம்மன் கோவில் ஏதாவது ஒண்ணுல நம்ம பூஜை பண்ணறதுக்கு ஏற்பாடு பண்ணித் தர முடியுமா உங்களால..?”
“கண்டிப்பா ஐயா… நான் முன்னாடியே அம்மன் கோவில் பூசாரி ஐயா ஒருத்தவங்ககிட்ட இதப் பத்தி பேசி இருந்தேன்… தேவைப்பட்டா, அவங்க கோவில்ல பூஜை பண்ணிக்கலாம்னு அவங்க சொல்லி இருந்தாங்க… என்ன நேரம் ங்கிறத மாத்திரம் தெளிவா சொல்லிட்டோம்னா அவங்க அந்த நேரத்துல மக்கள் கோவிலுக்கு வராம இருக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணித் தர்றதா சொன்னாங்க…”
“ம்ம்… நல்லதாப் போச்சு… அப்படின்னா நாளைக்கு இந்த நேரத்துக்கு அவங்க கோவில்ல பூஜை பண்ணறது ஓகேவான்னு கேட்டு சொல்லுங்க எனக்கு… அப்படி அவங்களுக்கு ஓகேன்னா, நாளைக்கும் இந்த பொருள் எல்லாம் ஒழுங்கு பண்ணிட்டு கூப்பிடுங்க பூசாரி ஐயா… நான் வரேன்…”
“சரிங்க ஐயா… உங்க காணிக்கை…” என அஸ்வத்தாமன் இழுக்க, “உங்களுக்கு தெளிவான பதிலை சொல்லிட்டு, அதுக்கப்புறம் என்னோட காணிக்கையை நான் எடுத்துக்கறேன்…” என்றவர், அவரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார்.
✯✯✯✯✯
ஏற்காடு
இனியாவை அவ்வளவு நேரமாய்க் காத்திருக்க வைக்காமல், அடுத்த சில நிமிடங்களிலேயே அவளது வீட்டிற்கு, அந்த வழக்கு பற்றிய விபரங்களுடன் ஆஜராகி விட்டார் இன்ஸ்பெக்டர் வாசுதேவன்.
“வாங்க சார்… உங்களைத் தான் பாத்துட்டு இருந்தேன்…”
“குட்மார்னிங் மேடம்…” என விஷ் செய்து, புன்னகைத்தபடியே உள் நுழைந்தார் வாசுதேவன்.
“குட்மார்னிங் சார்…”
“இந்த கேஸ்ல உங்க கூட சேர்ந்து வர்க் பண்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் மேடம்…” என்றபடியே, தான் கொண்டு வந்திருந்த லேப்டாப்பை ஆன் செய்தார் அவர். பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைந்தவர், குறிப்பிட்ட அந்த ஃபைலை ஓப்பன் செய்தார். அந்த ஃபைலுக்கும் தனி பாஸ்வேர்ட் கேட்க, அதற்குரிய இரகசிய குறியீட்டை அழுத்தி உள் நுழைந்தவர், இனியாவுக்கும் அந்த ஃபைலுக்கான பாஸ்வேர்டை சொல்லி வைத்தார்.
கோப்பினுள் நுழைந்த உடன் திரையில் தோன்றியது இளம்பெண்ணின் புகைப்படம் ஒன்று.
“இவங்க தான் மேடம் காணாமப் போன பொண்ணு… பேரு…” என அவர் ஆரம்பிக்கவும், “சித்தி…” என கூவியபடி ஓடி வந்து அணைத்துக் கொண்டது குழந்தை ஒன்று. அதில் சற்று தடுமாறியவள், கண்களால் லேப்டாப்பை மூடச் சொல்லி வாசுதேவனைப் பணித்தாள்.
“நர்த்தனா, உனக்கு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் சித்தியோட ஆஃபீஸ் ரூமுக்குள்ள போகக் கூடாதுன்னு..?” எனக் கண்டித்தபடியே அந்தக் குழந்தையின் பின்னோடு வந்து சேர்ந்தாள் யுவதி ஒருத்தி.
“குழந்தையை ஏன் திட்டற… நீ தான அவ இங்க வராம பாத்துட்டு இருந்திருக்கணும்..?” என்று உடன் பிறந்தவளைப் பார்த்து சற்று குரல் உயர்த்தியவள், “நர்த்துக் குட்டி, நீங்க சமத்துப் பொண்ணுல்ல..? அம்மா கூட வெளிய போய் இருங்க கொஞ்ச நேரம்… சித்தி இந்த ஆங்கிளோட ஒரு மீட்டிங் முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடறேன்…” என்றாள் குழந்தையிடம் கனிவாய்.
அதே நேரம், “சாரி சார்… என்னோட சைட் மிஸ்டேக் தான்…” என்றாள் மன்னிப்பு வேண்டும் தோரணையில் வாசுதேவனிடம். குழந்தையிடம் அதிகாரமாய் பேச முடியா விட்டாலும், தன் தமக்கையின் மேல் அவ்வளவு கோபம் வந்தது இனியாவுக்கு. இந்த நேரத்தில் இவர்களை அவள் இங்கே எதிர்பார்த்திருக்கவில்லை. அவளைப் பொறுத்த வரையில் அவளது வேலைக்கு யார் இடையூறு விளைவித்தாலும், அத்தனை கோபம் வரும் அவளுக்கு. மீண்டும் ஒருமுறை அவரிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டவள், குழந்தையைத் தூக்கி தமக்கையிடம் கொடுத்து அனுப்பினாள்.
மீண்டும் வந்து அவள் அமர, நர்த்தனா வெளியே பேசிக் கொண்டு சென்றது அரைகுறையாக அவள் காதில் விழுந்தது.
“எங்களுக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும் தெரியுமா..? எங்க வகுப்பில எல்லாருக்கும் பிடிக்கும்… கொஞ்ச நாளா ஸ்கூலுக்கு வரலைன்னு சொன்னேனே..? எங்களுக்கு அந்த மிஸ் அடிக்கவே மாட்டாங்க அம்மா… ஆமா, சித்திக்கு எப்படி தெரியும் அந்த மிஸ்ஸ..?”
“சித்திக்கு தெரியும்னு சொன்னாங்களா..?” என தமக்கை கேட்டுக் கொண்டே, அவள் காதில் விழாத தொலைவுக்கு நர்த்தனாவை அழைத்துச் சென்றிருக்க, “சாரி சார்… இவங்க இந்த நேரத்துக்கு வருவாங்கன்னு நான் நினைக்கல… நீங்க கன்டினியூ பண்ணுங்க… இனி எந்த இடையூறும் வராது…”
“ஷ்யூர் மேடம்… குழந்தை தானே..? பரவால்ல, விடுங்க…” என்றவர், மீண்டும் தனது மடிக்கணினியை உயிர்ப்பித்து, அந்த ஃபோல்டரை திறந்தார்.
“இவங்க தான் மேடம் காணாமப் போன பொண்ணு… பேரு இளந்தென்றல்... வயசு 26… கல்யாணம் பண்ணிட்டாங்க… ஹஸ்பன்ட் நேம் பேரெழிலன்… இந்தப் பொண்ணு ‘கலைமகள் கலைக்கூடம்’ங்கிற தனியார் பள்ளில டீச்சரா வர்க் பண்ணி இருக்காங்க… இப்போ ஜாய்ன் பண்ணி மூணு மாசத்துக்குள்ள தான் ஆகி இருக்கும்… ஹஸ்பன்ட் விலேஜ் அட்மினிஸ்ரேட்டர்… இரண்டு பேரும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க… கல்யாணமும் இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடி தான் நடந்திருக்கு… அதாவது அவங்க டீச்சரா வர்க் பண்ண ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடித் தான் கல்யாணம் ஆகி இருக்கு…”
“அப்படியா… வர்க்ல அவ்ளோ சின்சியரா அந்தப் பொண்ணு..?” ஆச்சரியமாகக் கேட்டாள் இனியா.
“ஆமா மேடம்… விசாரிச்ச வரைக்கும் அப்படித்தான் சொல்றாங்க… அந்த வேலை கூட அவங்களோட ஹஸ்பன்ட் வாங்கிக் குடுத்தது தானாம்… இந்தப் பொண்ணுக்கு டீச்சிங் ரொம்ப பிடிக்கும்னு அவங்க கல்யாணப் பரிசா இந்த வேலையை வாங்கிக் குடுத்திருக்காங்க…”
“ஓஓ… அந்தப் பையன பத்தி விசாரிச்சீங்களா..?”
“ஆமா மேடம்… தங்கமான பையனாம்… கோபம் கொஞ்சம் அதிகமா வரும்னு சொன்னாங்க… மத்தபடி கேரக்டர் பத்தி எந்தக் குறையுமே சொல்ல முடியாதாம்…”
அந்த ‘கோபம் கொஞ்சம் அதிகமா வரும்’ என்ற வார்த்தைகளை இனியா மனதினுள் அடிக்கோடிட்டு வைத்த அதே சமயம்,
“தென்றல்..! நீ எங்க தான்டி போன..? என்னை ஏன்டி தனியா அலைய விட்ட..? உன்னோட எழில் ரொம்ப பாவம்டி… சரியா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு… உன்னைப் பாக்காம பச்ச தண்ணி கூட இறங்க மாட்டேங்குதும்மா… என்கிட்ட வந்துடேன்… நான் உன்னை நல்லா பாத்துப்பேன்டா… என்கிட்ட வரலன்னா கூட பரவால்ல, எங்கயாவது ஒரு இடத்துல உயிரோட இருந்துடும்மா… அது போதும் எனக்கு…” என பினாத்திக் கொண்டிருந்தான் எழில்.
அதே நேரம், அல்லி வெட்டிய ஆழக் குழியில், உயிரற்ற உடலாய் மீளாத் துயில் கொண்டிருந்தாள் தென்றல்..!
– அல்லி மலரும்…
No comments yet.