அத்தியாயம்-12
வீட்டில் ஆளாளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருக்க விசித்ரா அறைக்குள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது..
டம்மென்று லிப்ஸ்டிக்கை மேசை மீது வீசிய மீரா “அக்கா நீ என்ன தான் நெனச்சிட்டு இருக்க? ஹேர் ஸ்டைல் பண்ண வேண்டாம்… கம்மல் பெருசா போட வேணாம்.. செயினும் சாரிக்கு ஏத்த மாதிரி போட வேண்டாம்.. வளையலும் ஒன்னே ஒன்னு போதும்.. முகத்துல பவுடர் தவிர எதுவுமே போடக் கூடாது.. என்ன தான் நினைச்சுட்டு இருக்கேன் நீ” என்று எரிச்சலுடன் கத்தினாள்.
“ஏய் அவர் தான் சிம்பிளா ரெடி ஆனா போதும்னு சொன்னாரு”, அப்பாவியாக சொன்னாலும் முகம் வெட்கத்தில் ஜொலித்தது..
அவளை முறைத்த மீரா “சிம்பிளா… பேசாம நைட்டியோட போய் நின்னுடேன்.. ரொம்ப எளிமையா இருக்கும்ல” என்ற மீராவின் எரிச்சல் குரலில் அறையை கடந்து சென்ற காளிதாஸ் “என்ன சத்தம் பாப்பா ரெடியா?” கதவருகில் நின்று உள்ளே எட்டிப் பார்க்காமல் கேட்டான்
“ம்ம் ரெடி அண்ணா.. நீங்க ஒரு நிமிஷம் உள்ள வாங்களேன்”, என்று விசித்ரா சொல்ல காளிதாஸ் உள்ளே வந்தான்..
“என்ன பாப்பா” என்றவன் விழிகள் மீராவை தொட்டு மீண்டது
“இவள் மேகப் மேகப்னு அலையுறாள்.. நீங்க சொல்லுங்க நான் நல்லா தானே இருக்கேன்” என விசித்ரா சிரித்த முகமாக கேட்டாள்..
“உனக்கு என்ன குட்டி மதுரை மீனாட்சி அம்மன் மாதிரி கொள்ளை அழகா இருக்க.. பேய்க்கு பேய் மாதிரி மேக்கப் போட்டால் தான் பிடிக்கும்.. நீ அதையெல்லாம் கேட்காதே.. இப்படியே ரொம்ப லட்சணமா இருக்க” என்றவன் மீராவை முறைத்து விட்டு வெளியேறி இருந்தான்..
“யாரு டா பேய்.. நீ தான் டா பிசாசு” என்று கத்தினாள் மீரா..
“என்னோட எளிமை தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னாரு டி.. இதுவே போதும் நல்லா தான் இருக்கு” என்றாள் விசித்ரா..
‘மீரா மா மத்த பொண்ணுங்க மாதிரி இல்லாம நீ சிம்பிளா இருக்கிறது தான் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணுது டி..” என்று அன்று ஒரு நாள் காதலுடன் பேசி அவள் கன்னத்தில் வினோத் முத்தமிட்டது நினைவு வந்து போனது..
அவசரமாக அந்த நினைவை ஒதுக்கியவள் அக்கா அறியாமல் அவள் விழியோரம் தேங்கிய கண்ணீரை சுண்டி விட்டுக் கொண்டு “சரி காஜல் மட்டும் போட்டுக்கோ” என்றவள் அக்காவின் விழிகளுக்கு அஞ்சனம் தீட்டினாள் மீரா..
“சூப்பர் நீ சிம்பிளா இருந்தாலும் தேவதை மாதிரி இருக்க அக்கா” என்ற அக்காவின் கன்னம் கிள்ளி கொஞ்சியபடி அவளை தலையில் மல்லிகை சரத்தை சூட்டி விட்டவள் “வா ஒரு செல்பி எடுத்துக்கலாம்” என்று அக்காவுடன் சில பல செல்ஃபிகளை எடுத்துக் கொண்டாள்…
மீரா துள்ளலுடன் ஏதோ ஒன்று பேசிக் கொண்டிருக்க விசித்ரா கையை பிசைவதும் உதட்டை கடிப்பதுமாக படபடப்புடன் இருந்தாள்..
அவளின் கைகளை பற்றிய மீரா “அக்கா போனில் உருகி உருகி காதலிச்சிட்டு நேரில் பார்க்க இவ்ளோ பயமா” என்று சிரிப்புடன் கேட்டாள்
“இதெல்லாம் உனக்கு நடக்கும் போது புரியும்.. அவர் கூட போனில் பேசினாலும் அவரை முதல் முறையாக நேரில் பார்க்க போறேன்.. அதுவே ஒரு மாதிரி பயமாவும் இருக்கு சந்தோஷமாவும் இருக்கு.. இது என்ன மாதிரி உணர்வுன்னு என்னால சொல்லவே முடியல.. இதுக்கு முன்ன இப்படி எல்லாம் நான் இருந்ததே இல்ல டி”
சிரித்த மீரா “சரி சரி ரிலாக்ஸா இரு.. அதெல்லாம் அவரை பார்த்ததும் படபடப்பு எல்லாம் போய் முகம் முழுக்க சந்தோஷத்தில் மினுமினுக்கும்..”
“ஏய் மீரா என்ன மேக்கப் எல்லாம் முடிஞ்சுதா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.. சமையல் அறைக்குள்ள காபி போட்டு வச்சிருக்கேன்.. கப்ல ஊத்தி கொண்டு வந்து அக்கா கையில் கொடுத்துட்டு ஸ்னாக்ஸ் தட்டுல போட்டு வச்சிருக்கேன்.. அதையும் எடுத்துட்டு வந்துடு.. கவனமா எடுத்துட்டு வரனும்.. கீழே போட்டுடாதே கவனம்.. நாங்க போய் வந்தவங்களை கவனிக்கிறோம்” என்று சொல்லிச் சென்று இருந்தார் ஆனந்தி..
“சரி மா.. அக்கா நீ இரு வந்துடுறேன்” மாப்பிள்ளை வீட்டார் உள்ளே வரும் முன்பே சமையல் அறைக்குள் புகுந்து இருந்தாள் மீரா..
விசித்ரா ஆர்வம் தாங்க முடியாது ஜன்னல் அருகில் ஓரமாக நின்று கூடத்தின் உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் நபர்களில் தன்னவன் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தவள் கண்களில் சிக்கினான் அவளவன்..
அழகாக வேட்டி சட்டை அணிந்து வந்து இருந்தான்.. மெரூன் வண்ண சட்டையும் வெள்ளை வேட்டியும் அவனின் மாநிறத்திற்கு அத்தனை எடுப்பாக இருந்தது.. ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடல் வாகுடன் சிரித்த முகமாக அனைவரின் மரியாதையையும் இருக்க கை கூப்பி ஏற்றுக் கொண்டு சுற்றி இருந்தவர்களுடன் பணிவும் கனிவும் கலந்து பேசி கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க காதல் மனதில் வெள்ளம் போல பெருகி ஆர்ப்பரித்தது..
அவனின் இந்த அழகை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது.. அவசரமாக தனது போனை எடுத்தவள் அவனை புகைப்படம் எடுத்து கொண்டு இருக்கும் சமயம் அவனும் ஜன்னலோரம் திரும்பிப் பார்த்து இருக்க சட்டென்று ஃபோனை நெஞ்சோடு அணைத்து கொண்டு பின்னால் நகர்ந்து சுவற்றில் சாய்ந்தவள் நாக்கை கடித்து சிரித்து கொண்டாள்..
சமையலறையில் இருந்து காப்பி தட்டுடன் வெளியே வந்த மீரா மாப்பிள்ளை எங்கே என்று தேட அவள் கண்களுக்கு அவளை சுற்றி இருந்த சொந்த பந்தங்களும் மட்டுமே தெரிந்தனர்..
‘ப்ச்ச் இப்படி சுத்தி நின்னுட்டு இருந்தா எப்படி பார்க்கிறது?’ என்று உதட்டை சுழித்தவள் காபியை பத்திரமாக விசித்ரா அறைக்குள் எடுத்து வந்தாள்..
“அக்காஆ அங்க என்ன தெரியுதுன்னு பாத்துட்டு இருக்க.. மாப்பிள்ளையை சுத்தியும் அத்தனை பேரு நிக்கிறாங்க.. அங்க இருந்து பார்த்தால் ஏதாவது தெரியுதா என்ன?” காபி கப்பை மேசையில் வைத்தவள் விசித்ரா அருகில் வந்து நின்றாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் தெரிஞ்சது டி இப்ப எல்லாரும் மறச்சிட்டாங்க” என்ற விசித்ரா மீரா பக்கம் சோகமாக திரும்பினாள்
“சரி விடு எப்படியும் காலம் முழுக்க பாத்துட்டே தானே இருக்க போற.. அதுக்குள்ள என்ன அவசரம் அவள்” தோளில் இடித்து கிண்டலாக சிரித்தாள்
வெட்கத்துடன் தலை குனிந்த விசித்ராவுக்கு கண்கள் ஜன்னல் வழியே தான் இருந்தது
“ஏய் அங்க பாரு இப்போ எல்லாரும் உட்கார்ந்துட்டாங்க.. இப்போ நல்லா தெரியுறாரு” என்று விசித்ரா கூற
மீரா ஆவலுடன் அவள் அருகில் வர குறுக்கே வந்த ஆனந்தி “எருமை என்ன ஆடிட்டு இருக்க? சித்ரா கையில் காப்பியை கொடுத்து அழைச்சிட்டு வா”
“சரி மா” கடுப்பாக முகம் சுருக்கியவள் மாப்பிள்ளையை பார்க்கும் வேலையை விட்டுவிட்டு தனது அக்காவின் புடவை மற்றும் அலங்காரம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக் கொண்டாள்..
“ஓகே சூப்பர் வா வெளிய கொண்டு வந்து தரேன்” என்றவள் கூற விசித்ராவை கோமதி ஆனந்தி முன்னே அழைத்து கைகளை பிசைந்தபடி நடந்து செல்ல மீரா காஃபியை கொட்டி விட கூடாது என காப்பி தட்டை பார்த்தபடியே தலைகுனிந்து அவர்களுக்கு சற்று இடைவெளி விட்டு வந்தாள்.
“எல்லாருக்கும் வணக்கம் சொல்லு மா” என்று ஈஸ்வரன் கூறினார்..
அனைவரையும் நிமிர்ந்து பார்த்து வணக்கம் சொல்லிய விசித்ரா இதழ்களில் இருந்த புன்னகை சுருங்கி போனது மாப்பிள்ளையின் அதிர்ந்த முகம் கண்டு.. ‘ஏன் இப்படி பார்க்குறாரு’ என அவள் யோசித்து கொண்டு இருந்தாள்..
“மீரா வா” என்று மெல்ல அறையின் கதவருகில் வந்து கொண்டு இருந்த மீராவை அழைத்த ஆனந்தி “சித்ரா அந்த காப்பியை வாங்கிக் கொடு மா” என்றார்..
சித்தியின் குரலில் யோசனையில் இருந்து வெளியை வந்தவள் தன் அருகில் வந்து நின்ற மீரா கையில் இருந்த காப்பி தட்டை வாங்க கை நீட்டிய நேரம் காப்பி தட்டு மீரா கையில் இருந்து நழுவி விழுந்து இருக்க அவளின் மை விழிகள் அதிர்ந்து விரிந்து சிவந்து கலங்க தயாராக இருந்தது..
“ஹேய் மீரா பாத்து”
“பாத்து மா” பல குரல்கள் ஆனால் எதுவும் அவள் காதில் விழவில்லை..
அதே அதிர்ச்சி மாறா முகத்துடன் சொந்தங்களுக்கு நடுவில் அமர்ந்து இருந்த மாப்பிள்ளை ஆடாமல் அசையாமல் மீராவை பார்த்து கொண்டு இருந்தான்..
விசித்ரா தன் தங்கையின் இந்த செயலில் பதறியவள் அவள் மேல் காப்பி பட்டு விட்டதா என பார்த்து கொண்டு இருந்தாலே தவிர அவளின் அதிர்ந்த முகத்தை பார்க்கவில்லை..
“என்ன இது அபசகுணமா?” என்று மாப்பிள்ளையின் தாய் ரமணி முகத்தை சுழித்தார்..
“ஏன் மீரா கண்ணை எங்க வச்சுட்டு வர?” என்று ஆனந்தி அவள் கையை அழுத்தி பிடித்து பல்லை கடித்தார்
ஆனால் எதுவும் அவள் காதில் விழுந்தது போல தெரியவில்லை.. அதிர்ச்சி மாறா விழிகளுடன் நின்று இருந்தாள்.
அந்த விழிகளின் தாக்கம் தாள முடியாமல் தலை குனிந்து கொண்டான் மாப்பிள்ளை..
கோமதி சிதறிய காப்பி கப்பை எடுத்து விட்டு சுத்தம் செய்ய வந்திருந்த உறவினர் ஒருவர் அனைவருக்குள் காபி போட சமையலறைக்குள் புகுந்து இருக்க ஈஸ்வரன் சந்திரன் இருவரும் வந்திருந்தவர்களிடம் பேசி திசைமாற்றி இருந்தனர்..
“மீரா காலில் ஏதாவது பட்டிருக்க போது.. வா பாக்கலாம்” என்ற விசித்ரா மீராவை உள்ள அழைத்து போக முனைந்தாள்..
“சித்ரா நீ அங்க போய் மாப்பிள்ளை முன்னாடி உட்காரு..”, விசித்ராவை அழைத்து வந்து மாப்பிள்ளை முன்பு அமர வைத்த ஆனந்தி “ஏய் நீ உள்ளே வா டி” என்று பல்லை கடித்த படி தன் மகளை அறைக்குள் இழுத்து வந்தவர் அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்து இருந்தார்..
அந்த அடியின் வீரியம் கூட உணர முடியாத அளவிற்கு இடிந்து போய் நின்று இருந்தாள் மீரா..
“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு மீரா.. வந்திருக்கவங்க முன்னாடி இப்படியா காபி தட்டை கீழே போடுவ??.. சும்மாவே எதுல குறை கண்டுபிடிப்பாங்க பிடிக்கலாமோன்னு இருப்பாங்க சொந்தக்காரர்கள் எல்லாரும்.. நீ பண்ணியதை பெரிய அபசகுணம் அது இதுன்னு பேசி விசித்ராவை தான் குறை சொல்லுவாங்க.. அவங்க போக வரைக்கும் வெளிய வந்திராதே” என்று அவள் வாடி கிடந்த முகத்தை கூட கவனிக்காது அவள் காபியை கொட்டிய கோபத்தில் கத்திவிட்டு வந்திருந்தார் ஆனந்தி..
ஆனந்தி மீராவை எப்படி நிற்க வைத்து விட்டு சென்றாரோ அதே நிலையில் அதே இடத்தில் இடிந்து போய் நின்று இருந்தார்.. என்ன ஒரே ஒரு மாற்றம், அவள் கண்ணில் கண்ணீர் தாரைதாரையாக கொட்டிக் கொண்டிருந்தது..
வீட்டில் இருந்தவர்களும் சரி வந்திருந்தவர்களும் சரி மீரா மற்றும் அந்த மாப்பிள்ளையின் முகவாட்டத்தை பெரிதாக யாரும் கவனிக்கவில்லை.. இருவரை தவிர ஒருவன் மாப்பிள்ளையாக வந்த வினோத் மற்றொருவன் காளிதாஸ்!
No comments yet.