அல்லி 12
அத்திப் பட்டு
“யாரோ ஒரு குறி சொல்லறவர கூட்டிட்டு வர கோவில் கமிட்டி சம்மதம் தந்திடிச்சுன்னு சொன்னீங்கல்ல..? அவர்கிட்ட பேசிப் பாத்தீங்களா… எப்ப வரேன்னு ஏதாவது சொன்னாரா..?”
திண்ணையில் படுத்திருந்து யோசனையில் ஆழ்ந்திருந்த அஸ்வத்தாமன் ஐயாவிடம் தன்மையாய் கேட்டிருந்தார் அவரது மனைவி சரஸ்வதி.
“பேசிட்டேன் சரசு… ரெண்டு நாள் முன்னாடியே வர வேண்டியது… நம்ம பெரியாத்தா தான் இறந்திடிச்சு இல்ல..? அதோட நாள் காரியங்கள பாக்கற வேலையில எனக்குத் தான் கொஞ்சம் நேரமில்லாம போச்சு… ஆனா நாளைக்கு காலையில கண்டிப்பா வந்திடுவேன்னு சொல்லிட்டாரு… அவர் சொன்ன பொருள்லாம் கூட ரெடி பண்ணி வச்சுட்டேன்…”
“அப்புறம் என்ன..? ஃப்ரீயா விடுங்க… இப்பவும் எதையோ யோசிச்சு குழப்பிட்டு இருக்கீங்க மாதிரியே இருக்கு எனக்கு…”
“ம்ம்… எல்லாம் சரி தான்… ஆனா அதுல ஒரு சின்னப் பிரச்சினை… அந்த குறி சொல்லுற சாமி இருக்காருல்ல..? அவரு அம்மனை தான் வழிபடுறது வழமை. ஆனா நம்ம கூப்பிட்டு இருக்கிறது நம்மளோட முருகர் கோவிலுக்கு…”
“அதுனால ஏதாச்சும் பிரச்சினையா..?”
“இல்ல… அது பிரச்சினை இல்லை… எந்த சாமியும் எந்த சந்நிதிலயும் மனம் நிறைஞ்சு கூப்பிட்டா சங்கமம் ஆகும்னு அவரு சொன்னாரு… ஆனா, எனக்கென்னமோ மனசுக்கு ஒரே நெருடலா இருக்கு… நாளைக்கு நம்ம முருகரோட சந்நிதில அம்மன் வந்து சங்கமம் ஆகாதுன்னு மனசுக்குள்ள தோணிட்டே இருக்கு…”
“முருகரோட அனுக்கிரகம் உங்களுக்கு நிறைஞ்சு இருக்கு… இதனால பின்னாடி நடக்கப் போற சில விசயங்களை அவர் உங்களுக்கு முன்னாடியே உணர்த்துறதுண்டு… அதனால உங்களோட இந்தக் கருத்தை எதிர்த்து நான் எதுவுமே பேசல… ஆனா, அம்மன் அப்படி வரலைன்னா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க..?”
“நம்ம அம்மன் கோவில் பூசாரி ஐயா நீலகண்டன் இருக்காருல்ல..? அவரோட சம்மதத்தோட அங்க வச்சு பூஜை பண்ணிப் பாக்கலாம்னு இருக்கேன்… அது அவரோட சொந்தக் கோவில்… அதுனால அவரோட முடிவு முழுமனசா இருந்திச்சுன்னா திருப்பணிக் குழுவும் அதுக்கு ஒத்திசைவா தான் நடந்துக்கும்…”
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… நீங்க எல்லாத்துக்கும் அந்த நீலகண்டன் ஐயா பின்னாடி நின்னுட்டு இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல… இந்த ஊருல என்ன விசேஷம்னாலும் உடனே அவரை தான் கூப்பிடறாங்க… பெரியாத்தாவோட காரியத்தில கூட தலைமை பூசாரியா அவர்தான் நின்னு எல்லாத்தையும் நடத்திட்டு இருக்கார்… என்னதான் நம்ம ஊர், நம்ம ஜனங்கன்னு நீங்க பார்த்தாலும் இவங்க நம்மள அந்த இடத்துல வைக்கலன்னு தோணுது எனக்கு…”
“என்ன பேசுற சரசு நீ..? இவங்கலாம் நம்ம ஜனங்க தான்… இப்ப பாரு, நம்ம பிள்ளைக்கும் தான் லண்டன்ல மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி அனுப்பிச்சு வச்சோம்… அவ எப்பவாச்சு இருந்திட்டு தான் நம்ம கூட பேசவே செய்றா… அதனால அவ நம்ம பிள்ளை இல்லன்னு ஆகிடுவாளா..? அவளோட சூழ்நிலை அதுன்னு நம்ம புரிஞ்சு தானே நடந்துக்கிறோம்..? அதே மாதிரித்தான் நம்ம ஜனங்களும்… நீலகண்டன் ஐயாவுக்கு என்னை விட வயசு குறைவு தான்னாலும், அவங்களுக்கு அனுபவம் ஜாஸ்தி. அதுவுமில்லாம நம்ம தாய்மொழில பூஜை செய்றாரு அவரு… அதைத் தானே ஜனங்க விரும்புவாங்க..?”
“…”
“நம்ம முருகர் தமிழ் கடவுள் சரசு… நானும் தமிழ்ல கத்துக்கிட்டு பூஜை பண்ணட்டுமான்னு கேட்டேன். ஆனா கமிட்டி ஒத்துக்கல… இலங்கைல செல்வச்சந்நிதின்னு ஒரு முருகர் கோவில் இருக்கு… அங்க வாய் கட்டி தான் பூஜை பண்ணுவாங்க… ஏன்னா அங்க இருக்கற யாருக்குமே மந்திரம் சொல்லத் தெரியாது. முருகனே நேரடியா வந்து, தனக்கு பூஜை செய்ய சொல்லிக் கேட்டதா அந்தக் கோவிலுக்கு ஒரு தனி வரலாறே இருக்கு… நம்ம அத்திப்பட்டுல யாருக்குமே புரியாத சமஸ்கிருத மொழியில நம்ம பூஜை செய்யறத விட, எல்லாருக்குமே புரிஞ்ச தமிழ் மொழியில பூஜை செய்யறத அவங்க ஆதரிக்கிறாங்க… இதுல என்ன தப்பு இருக்கு சொல்லு..?”
“…”
“நம்ம எல்லாருமே கடவுளோட தொண்டர்கள் சரசு… எனக்கான அந்தஸ்துன்னு எதுவும் வேண்டாம் எனக்கு… என்னோட வேண்டுதல் எல்லாம், என்னோட வாழ்க்கை நிறைவடைஞ்சு நான் இந்த பூமி வாழ்க்கையை முடிச்சதுக்கப்புறம் என் அப்பன் முருகனோட காலடியில நிரந்தர இளைப்பாறுதல் வேணுங்கிறது மட்டும் தான்… எனக்கான இடத்தை அவன் குடுத்தா போதும்மா…” என நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்தவர், அடுத்த நாளைக்கான சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்.
✯✯✯✯✯
“இன்னைக்கு ஸ்கூல் எப்படி போச்சு தென்றல்..? உனக்கு பிடிச்சிருக்கா.. பசங்க, கூட வேலை பாக்கற டீச்சர்ஸ், ஹெச்.எம் எல்லாரும் ஓகேவா..?”
“ஹைய்யோ எழில்… அத ஏன் கேக்குற..? இன்னைக்கு செம்ம சூப்பரா போச்சு என் டே… நான் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத பர்சன் தானே..? அதனால இன்னைக்கு பிரைமரி செக்ஷன்ல ரெண்டு கிளாஸ் தான் குடுத்தாங்க… மூணாம் வகுப்புக்கும், நாலாம் வகுப்புக்கும் தான் கிளாஸ் எடுத்தேன்… சரியான வாலுங்க எழில் அந்தக் குழந்தைங்க… ஒருத்தரை ஒருத்தர் கிள்ளுறதும், சண்டை போட்டுக்கறதும், கோபப்பட்டு நான் அடிக்கப் போனேன்னா ‘மிஸ்… மிஸ்… ப்ளீஸ் மிஸ்’னு கெஞ்சறதும், ‘ரொம்ப அழகா இருக்கீங்க மிஸ்..’னு சொல்லி என்னை கொஞ்சறதும்… செம்ம ஜாலி தெரியுமா..?”
“ஆக மொத்தத்துல அங்க நீ பாடமே நடத்தல..?”
“பாடம் நடத்தாம எப்படி..? அதிலலாம் ரொம்ப ஸ்ரிக்டா தான் இருந்தேன்… பக்கத்து கிளாஸ் சுலோச்சனா மிஸ் கூட என்னை ரொம்பப் பாராட்டினாங்க தெரியுமா..?”
“என்னன்னு..?”
“நான் ரொம்ப நல்லா பாடம் நடத்துறேன்னு… பிள்ளைங்களுக்கு போரடிக்காத மாதிரி இன்ட்ரெஸ்டிங்கா கிளாஸ கொண்டு போறேனாம்… சீக்கிரமே எனக்கு செக்கன்டரி கிளாஸும் குடுத்துடுவாங்கன்னு சொன்னாங்க… ஆனா எனக்கு இந்தக் குட்டிப் பசங்களோட இருக்கத்தான் பிடிச்சிருக்கு தெரியுமா..? போட்டி பொறாமை கிடையாது… வஞ்சகம் கிடையாது… நாளைய பத்தின எந்தக் கவலையும் கிடையாது… ரொம்ப சந்தோஷமா இருக்காங்க… அவங்க கூட இருக்கும் போது எனக்குமே எந்தக் கவலையும் தெரியல… நிம்மதியா இருந்தேன்…”
“ஏனாம்… இல்லன்னா மட்டும் இந்த எழிலனோட பொண்டாட்டிக்கு என்ன கவலையாம்..?”
“கவலைன்னு சொல்ல முடியாது…”
“அப்புறம்..?”
“கொஞ்சம் பயம்னு சொல்லலாம்…”
“என்ன பயம்..?”
“ஆல்ரெடி உன்கிட்ட சொன்னது தான்… கொஞ்ச நாளாவே யாரோ ஒருத்தங்க என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்கிற மாதிரியே ஃபீலாகுது… மனுஷங்க மாதிரி இல்ல, இது… இது வேற ஏதோ… ரொம்ப பயமா இருக்கு எழில்…” என்றபடியே அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் தென்றல். உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.
சில நாட்களாகவே அவளும் இதை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறாள். அவனும் அவளை அமைதிப்படுத்த என்ன என்னவோ செய்து பார்த்து விட்டான், ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். இதற்கு மேல் அவளை எப்படி சமாளிப்பது என்று அவனுக்கு தெரியவே இல்லை.
“தென்றல் ம்மா…” என அவளது தாடையைப் பற்றி நிமிர்த்தியவன், கலங்கிய அவள் விழிகளை மிருதுவாய்த் துடைத்து விட்டான்.
“நம்ம ரெண்டு பேரும் உன்னோட ஜாதகத்தை ஒரு ஜோசியர் கிட்ட காமிச்சு, என்ன பிரச்சினைன்னு பாக்கலாமா..?”
“அதான் அப்பா பாத்தாங்களே..?”
“அது அவங்க மட்டும் போய் பாத்துட்டு வந்ததும்மா… நம்ம ஒரு தடவை போய் பாத்துட்டு வரலாம்… அப்படீன்னா ஏதாவது தோஷம் இருக்கா, பரிகாரம் எதுனாச்சு பண்ணனுமா..? எல்லாம் கம்ப்ளீட்டா தெரிஞ்சுக்கிட்டு வரலாம்… வீட்டுக்காரவங்க எல்லாத்தையும் நம்ம கிட்ட சொல்லிட்டு இருக்க மாட்டாங்க இல்ல..?”
“ம்ம்…”
“உள்ளூர்ல வேணாம்… வெளியூர்ல யாராவது ஜோசியத்துக்கு பேர் போனவங்க இருக்காங்களான்னு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு சொல்றேன்… நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போய் பாத்துட்டு வரலாம்…”
“சரி…”
“அப்புறம் ஒரு முக்கியமான விசயம்…”
“என்ன..?”
“இந்த மாதிரி ஒரு பிரச்சினை இருக்கிறதையோ, இதுக்காக நம்ம ஒரு ஜோசியரைப் பார்க்கப் போறதப் பத்தியோ உங்க வீட்டுல யாருக்கும் சொல்லி வைக்காத… அவங்க பயந்திடுவாங்க…”
“சரி…”
“வீட்டுக்காரங்களுக்கு மட்டும் இல்லை… ஸ்கூல்ல கூட யாருக்கும் இதப் பத்தி சொல்லி வைக்காத… எப்படியும் ரெண்டு நாள்ல அந்த சுலோச்சனா மிஸ் உன் ஃப்ரெண்ட் ஆகிடுவாங்க… அவங்க மாதிரி இன்னும் நாலு பேர் வருவாங்க… யாரு கிட்டவும் நம்ம பர்சனல் எல்லாம் சொல்லிட்டு இருக்காத… சரியா..?”
“ம்ஹூம்… யாரு கிட்டவும் இதப் பத்தி மூச்சுக் கூட விட மாட்டேன்… போதுமா..?”
“தாட்ஸ் மை கேர்ள்…” என்றவன் அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
✯✯✯✯✯
“எத்தனை நாளா உனக்கு இந்த பிரச்சினை இருக்கு..?”
“இப்ப கொஞ்ச நாளா தான் மிஸ்…”
“உன் ஹஸ்பன்ட் கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டியா..?”
“ம்ம்… யாராவது ஜோசியக்காரங்க கிட்ட ஜாதகத்தை குடுத்து பாக்கலாம்னு சொன்னாரு… உள்ளூர் பக்கமா இல்லாம, வெளியூர்ல பாத்துட்டு வரலாம்னு சொன்னார்…”
எழிலிடம் சமத்துப் பிள்ளையாகத் தலையாட்டி விட்டு, இரண்டே நாட்களில் அவன் சொன்ன அத்தனையையும் சுலோச்சனா டீச்சரிடம் ஒப்புவித்திருந்தாள் தென்றல். அவள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளா விட்டாலும் தென்றலுக்கு கொஞ்சம் உளறு வாய் தான். தென்றலிடம் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, அவளுக்கு பதிலளித்தார் சுலோச்சனா.
“சரி… உன் ஹஸ்பன்ட் சொல்லற மாதிரி முதல்ல ஜாதக தோஷம் ஏதாவது இருக்கான்னு பாரு… அப்படி ஏதாவது இருக்குன்னா அத நிவர்த்தி செஞ்சுடுங்க… சப்போஸ் அப்படி எதுவும் இல்லன்னா, சைக்காலஜி ஸ்பெஷலிஸ்ட் இருப்பாங்க இல்ல..? அவங்க கிட்ட நம்ம ஏதாவது சஜெஷன் கேட்டுக்கலாம்…”
“இது சைக்காலஜி சம்பந்தப்பட்ட பிரச்சினைன்னு சொல்றீங்களா மிஸ்..? அப்படீன்னா நான் சைக்காலாஜிக்கலி அன்ஸ்டேபிளா..?” என்று கண் கலங்கினாள் தென்றல்.
“அப்படில்லாம் எதுவும் இல்லை… நீ படிச்ச பொண்ணு, அதனால இத ஸ்போட்டிவா எடுத்துப்பனு தான் நான் சொன்னேன்… சைக்காலஜிஸ்ட கன்சல்ட் பண்ணற எல்லாரும் மன நலம் பாதிக்கப்பட்டவங்க கிடையாது தென்றல். உனக்கு இந்த தாட்ஸ் எதனால வருது..? அந்த கருப்பு புகை உன்னோட கற்பனையா… இல்லன்னா நிஜமாவே அந்த மாதிரி ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு தான் நான் அவங்கள பாக்கலாம்னு சொன்னேன்… அதுவுமில்லாம நம்ம எல்லாருக்குள்ளயுமே சைக்காலஜிக்கல் இல்னெஸ் ஒரு குறிப்பிட்ட பர்சன்டேஜ்ல இருக்கு… அது, ஒவ்வொரு தனி நபருக்குமே வேறுபட்ட விதங்கள்ல வெளிப்படும்… உனக்கு எப்படின்னு தெரிஞ்சுக்கிறதுக்காக மட்டும் தான் நான் சைக்காலஜிஸ்ட கன்சல்ட் பண்ண சொன்னேன்…”
“சரிங்க மிஸ்… நீங்க சொன்னதும் நான் ரொம்ப பயந்துட்டேன்… சாரி, தப்பா எடுத்துக்காதீங்க…”
“இல்லடா… அதுலாம் ஒண்ணும் இல்லை… நீ ஓகேவாகி நிம்மதியா இருந்தாலே போதும் எனக்கு… என்னமோ தெரியல, பாத்த உடனேயே உன்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு… சொன்னேனே, என் பொண்ணு இப்போ உயிரோட இருந்திருந்தா உன் வயசு இருந்திருக்கும்னு… மே பீ அது ஒரு காரணமா இருக்கலாம்… நானுமே எனக்கு தெரிஞ்ச ஜோசியக்காரங்க யாராவது வெளியூர்ல இருக்காங்களானு பாக்கறேன்… எப்படின்னாலும் நீ நிம்மதியா இருந்தா போதும் எனக்கு…”
“ரொம்ப சந்தோஷம் மிஸ்… உங்க கிட்ட மனசு விட்டு பேசினதே ரொம்ப ஆறுதலா இருக்கு…” என அவரது தோள்களில் சாய்ந்தவளை, ஆதரவாய்த் தடவிக் கொடுத்தார் சுலோச்சனா.
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.