Episode 11

ஶ்ரீ துர்க்கா | 16 Dec 2025 | Share

அல்லி 11

சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள் தென்றல். கஷ்டப்பட்டு தான் வாங்கி இருந்த டீச்சிங் அப்பாயின்மென்டை அப்போது தான் தென்றலிடம் ஒப்படைந்திருந்தான் எழில். அதைப் பார்த்ததில் இருந்து தலை கால் புரியவில்லை அவளுக்கு. 

“இது என்னோட எத்தனை நாள் கனவு தெரியுமா எழில்..? எவ்ளோ நாள் இப்படி ஒரு வேலை எனக்கு கிடைக்கணும்னு ஏங்கி இருக்கேன் தெரியுமா..? நீ எனக்கு எப்படிப்பட்ட ஹேப்பினஸ் குடுத்திருக்கன்னு உனக்குப் புரியாது எழில்… உன்னோட கையால இந்த அப்பாயின்மென்ட் வாங்கணும்னு தான் இத்தனை நாள் தள்ளிப் போய் இருந்திருக்கு… நிஜமாவே நீ எனக்கு கிடைச்ச ரொம்ப பெரிய பொக்கிஷம்… லவ் யூ டா… லவ் யூ ஏ லாட்…”

எழிலனின் இரு கன்னங்களையும் பற்றி, மாறி மாறி அவனுக்கு முத்த மழை பொழிந்து கொண்டே, உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தாள் தென்றல்.

“கோவிலுக்கு போயிட்டு வந்து தான் இந்த அப்பாயின்மென்ட உன் கையில தரணும்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்… உன்னோட அப்பா அம்மாகிட்டவும் விசயத்தை சொல்லணும்ல..? இப்படியே அவங்க கிட்ட போய்ட்டு வந்துடலாமா..?”

“போலாம்… ஆ..னா…”

“ஆனா‌ என்ன..?”

“அவங்க இதை விரும்ப மாட்டாங்கன்னு தோணுது…”

“கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும்… ஆனா நீ வேலைக்கு போய் ஹாப்பியா இருக்கும் போது, ‘இப்போ தான் நம்ம பொண்ணு மனசே நிறைஞ்சு போய் இருக்கு… இனிமே தான் அவ அவளோட வாழ்க்கையை வாழப் போறா’ன்னு நினைச்சு அவங்க சந்தோசப்படுவாங்க… சோ டோன்ட் வொர்ரி… நம்ம பாத்துக்கலாம்…”

என்றவன், அவளை அழைத்துக் கொண்டு அவளது வீட்டிற்கு வந்தே விட்டிருந்தான்.

விடயத்தை சொன்னதும் தெய்வீகா முகத்தில் அத்தனை சந்தோஷம்.‌ ஆனால் தெய்வேந்திரனுக்கு தான் அது அவ்வளவு உவப்பானதாக இல்லை. பிள்ளையை கைக்குள்ளேயே வைத்து கிளி போல் வளர்ந்திருந்தவருக்கு, அவள் கொஞ்சம் கொஞ்சமாக கை நழுவி போவதைப் போல ஒரு உணர்வு. சரி, தவறுக்கு அப்பால் எழில் மீது கொஞ்சம் பொறாமை உணர்வு முன்பிருந்தே உண்டு தான் அவருக்கு. பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளையின் மொத்த அன்புக்கும் சொந்தக்காரன் அவன் அல்லவா..? அப்படி இருக்க, இன்று அவள் மேல் மொத்தமாய் தன் உரிமையை இழந்து விட்ட உணர்வு தெய்வேந்திரனுக்கு. ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ‘அபியும் நானும்’ பட பிரகாஷ்ராஜ் மாதிரித் தான் நம் தென்றலின் தந்தை. 

திருமணம் முடித்து அனுப்பி விட்டால், பிள்ளையின் முடிவுகளில் தந்தை அவ்வளவாக செல்வாக்கு செலுத்த முடியாது தான் போல. சற்று நேரம் மெளனமாய் சிந்தித்தவர், “சரிம்மா… உனக்கு ஒரு விருப்பம்னா அதுக்கு இனிமேலும் நான் தடை சொல்ல முடியாது இல்லையா..? நீ சந்தோஷமா நிம்மதியா இருந்தாலே அப்பாவுக்கு போதும்டா…” என்று சொல்லி வாழ்த்தி அனுப்பி வைத்தார் அவளை.

அடுத்த நாளே வேலைக்கு சென்று நின்றிருந்தவளை, விசித்திரமாகத் தான் பார்த்து வைத்தார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ‘கல்யாணமான ரெண்டு நாள்லயே உன் தொல்லை தாங்காம இங்க அனுப்பிச்சு விட்டுட்டானாம்மா உன் புருஷன்..?’ என்பது போல் பார்த்தவரின் எண்ணப் போக்கை அறியாமல், கண்களாலேயே அந்த பள்ளியை அளவெடுத்தபடி சந்தோஷமாக நின்றிருந்தாள் தென்றல்.

“இப்போ தானேம்மா கல்யாணம் ஆச்சு… நீ உன் ஹஸ்பன்ட் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு, ஒன் மன்த்ல வந்து ஜாய்ன் பண்ணிக்கிட்டாலே போதும். நான் எழில் கிட்ட எல்லாம் டீடெய்லா சொல்லித்தானே அனுப்பிச்சேன்… அத்தோரிட்டிக்கு பதில் சொல்லணும்னு தான் அப்பாயின்மென்ட்ல இன்னைக்கு டேட் மென்ஷன் பண்ணி இருக்கோம்மா… மத்தபடி நியூலி மேரிட் கேர்ள், கொஞ்ச நாள் கழிச்சு தான் ஜாய்ன் பண்ணிக்குவாங்கன்னு சொன்னா அவங்க புரிஞ்சுப்பாங்க… இதெல்லாம் அவன்கிட்ட சொன்னனே..?” என யோசனையாக முகத்தை தேய்த்தார் அவர்.

“அச்சோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்… எனக்கு டீச்சிங் ரொம்பப் பிடிக்கும்… அதனால தான் அவங்க ட்ரை பண்ணி இந்த வேலையை வாங்கிக் குடுத்தாங்க… நான் தான் ஒரு ஆர்வத்துல இன்னைக்கே வந்து ஜாய்ன் பண்ணிட்டேன்…”

“சரிம்மா…‌ உங்க ரெண்டு பேர் பிரைவசிக்கும் கஷ்டம் இல்லன்னா சரி… உனக்கு டீச்சிங் எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு எழில் சொன்னான்… அதனால இப்போதைக்கு பிரைமரி செக்ஷன்ல ரெண்டு கிளாஸ் போட்டு குடுக்கறேன்… உன்னோட பர்ஃபாமன்ஸ் பாத்து செக்கன்டரி செக்ஷன்ஸ்க்கு ப்ரொமோட் பண்ணுறேன்…”

“ஷ்யூர் சார்… கண்டிப்பா என்னோட பெஸ்ட நான் குடுப்பேன்… தாங்க் யூ சார், தாங்க் யூ சோ மச்…”

“வித் ப்ளெஷர் ம்மா…”

அவர் விஷ் செய்து அனுப்ப, ஒரு துள்ளலுடன் நடந்து தனது வகுப்பிற்கு சென்றாள் தென்றல். முதலில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க தான் அவளைப் பணித்திருந்தார் தலைமை ஆசிரியர். அங்கிருந்த வாண்டுகளைப் பார்த்ததுமே அவளது மகிழ்ச்சி இரட்டிப்பானது. இயல்பாகவே தென்றலுக்கு குழந்தைகளிடத்தில் ஒட்டுதல் அதிகம். இங்கு இத்தனை குழந்தைகளுடன் வேலை செய்வது என்றால், செக்கன்டரி கிளாஸ் தராமல் விட்டாலும் பரவாயில்லை என்று தான் தோன்றியது அவளுக்கு. 

“மிஸ் நீங்க தான் எங்களுக்கு தமிழ் டீச்சரா..?” என்று ஆர்வமாய் கேட்டது ஒரு குழந்தை.

“ஆமா… இன்னைல இருந்து நான் தான் உங்களுக்கு தமிழ் டீச்சர்…”

“ஹைய்யா.. சூப்பர்… உங்களுக்கு முன்னாடி இருந்த சார எங்களுக்கு புடிக்கவே இல்ல தெரியுமா..? ரொம்ப அடிப்பாரு… அவரைப் பாத்தாலே எங்களுக்கு பயம்மா இருக்கும்…”

கண்களை விரித்து, நெளிவு சுளிவுகளுடன் பாவனையாய் சொல்லி இருந்தது அந்த வாண்டு.

“அப்படிலாம் சொல்லக்கூடாது ம்மா… சார் ஏன் அடிக்கறாரு, நீங்க நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்னு தானே..?”

“இல்ல… கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு அடிச்சு, இங்க காயமே வந்திடிச்சு தெரியுமா..?” என்ற அந்த குழந்தைப் பெண், தன் காலில் ஏற்பட்டிருந்த சிறு கோடான காயத்தை காண்பிக்க நிஜமாகவே பதறித் தான் போனது தென்றலுக்கு. குழந்தையிடம் அந்த ஆசிரியரை விட்டுக் கொடுக்காமல் பேசி விட்டாலும், ‘வெறும் எட்டே எட்டு வயதான பிள்ளைக்கு இப்படி அடித்திருக்க வேண்டாம்’ என்று தான் எண்ணத் தோன்றியது அவளுக்கு. அவ்வளவு பெரிதான காயம் எல்லாம் இல்லை. ஆனால் இத்தனை நாட்களாய் தழும்பு இருக்கிறது என்றால், அது நிச்சயம் குழந்தைக்கு நன்கு வலித்திருக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது. ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், தான் அந்தக் குழந்தைகளிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதை மட்டும் நன்கு மனதில் ஏற்றிக் கொண்டாள் அவள்.

முதலில் வகுப்பை கலகலப்பாக மாற்ற வேண்டி, நகைச்சுவை நாடகம் ஒன்றுடன் தனது ஆசிரியப் பயணத்தை இனிதே ஆரம்பித்திருந்தாள் தென்றல்.

                       ✯✯✯✯✯

“அப்போ இந்த துணி மூட்டையை நீ இங்க போடலயா..?” என்றாள் ரத்னா நம்ப மாட்டாமல்.

“இ..ல்..ல…”

“சரி விடு… யாராவது எடுக்கிறப்போ தவறுதலா விழுந்திருக்கும்… அவசரத்துல திரும்ப எடுத்து வைக்காம போய் இருப்பாங்க… இதுக்கு போய் ஏதோ பேய பாத்த மாதிரி நின்னுட்டிருக்க… குரலும் தழதழக்குது…” என்றபடியே ரத்னா, அந்த துணிகளை எடுத்து அடுக்கப் போக, சடாரென்று அவளைப் பிடித்து பின்னே இழுத்தாள் அல்லி.

“தொ..டா..த ரத்னா…” என்றவளுக்கு இப்போதும் குரலில் தெளிவில்லை. கிட்டத்தட்ட தொண்டைத் தண்ணீர் வற்றிய நிலையில் நின்றிருந்தாள் அவள். ரத்னா தான் இவள் இழுத்த இழுப்புக்கு பயந்து போய், வாய்க்கு வந்தபடி அவளைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

“உன்னோட ஒரே இம்சையா போச்சு அல்லி எனக்கு… ஒண்ணு நீ இதெல்லாத்தையும் ஒழுங்கா எடுத்து வை…‌ இல்லன்னா என்னை எடுத்து வைக்க விடு…” என்றவள் மீண்டும் அதை ஒழுங்கு படுத்தப் போக, “அது அந்தப் பொண்ணோட ட்ரெஸ் ரத்னா…” என்றாள் அல்லி அழுத்தமாக, ஆனால் இறுகி விட்ட குரலில்.

“எந்..தப் பொண்..ணோட.. ட்ரெஸ்..?” என்ற ரத்னாவுக்கு அதற்கான பதில் தெரிந்தும் இருந்தது, அந்தப் பதில் அவளது அடி வயிற்றில் குளிரையும் பாய்ச்சியது.

“அது தா..ன் ரத்னா… யாரு என்னன்னே தெரியாம ஒரு பொண்ணை கொண்டு வந்து நம்ம வீட்டுக்குள்ள புதைச்சு, நமக்கான புதைகுழியை‌ நானும் ஆத்தாவும் தயார் பண்ணிக்கிட்டமே..? அந்தப் பொண்ணோட ட்ரெஸ்…”

“அது எ..ப்படி இங்..க..?” என ரத்னா தன்னிலை இழந்து கேட்ட கேள்விக்கு விரக்தியாய் சிரித்தவள், “அவளே வீட்டுக்குள்ள வந்துட்டா… அவ போட்டிருந்த ட்ரெஸ் வர்றதுக்கு என்ன..?” என்றாள் வேதனையாய். 

“என்ன அல்லி பண்ணப் போறோம் இப்போ..?”

“இந்த வீட்டுக்கு சாந்தி செய்யாம நம்ம ரெண்டு பேரையும் நிம்மதியா இருக்க ‘அது’ விடாது ரத்னா… உயிரோட இருக்கவும் விடாது… நம்ம அம்மன் கோவில் பூசாரி ஐயா நீலகண்டன் இருக்காருல்ல..? ‌அவரக் கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லி, என்ன பண்ணறதுன்னு கேக்கலாம்… அவர் என்ன சொல்றாரோ அது படி செய்யலாம்… அது நான் ஜெயிலுக்கு போறதா இருந்தாலும் சரி தான்…”

“இதுக்கு வேற வழியே இல்லையா அல்லி..?” உடைந்து விட்ட குரலில் கேட்டாள் ரத்னா.

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இல்லை… என்ன ஆனாலும் சரி, ஆத்தாவ இழந்தது மாதிரி உன்னையும் இழந்துட மாட்டேன் ரத்னா. நீயும் இல்லன்னா இந்த உலகத்துல நான் வாழ்றதுக்கு எந்தப் பிடிமானமுமே இல்லாம போய்டும்… அந்த நிலை வர்றதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்…”

“உன்னை விட்டா எனக்கும் கூட யாருமே இல்ல அல்லி… என்ன பண்ணறதுன்னாலும் அதையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணி நடந்துக்கோ… போலீஸ்ல போய் சரண்டர் ஆகறதுன்னா ஆகு, ஒண்ணும் பிரச்சினை இல்லை… ஆனா அடுத்த நிமிஷமே, இந்த விசயத்துல நானும் தான் உடந்தையா இருந்தேன்னு சொல்லி போலீஸ்ல நானுமே சரண்டர் ஆகிடுவேன்… அத மட்டும் நல்லா உன் மரமண்டையில ஏத்திக்கோ…” என்றவள் விடுவிடுவென்று அந்த அறையிலிருந்து வெளியேற, அவளைத் தொடர்ந்தாள் அல்லி.

ஆத்தாவின் இழப்புக்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் அங்கேயே தங்கிக் கொள்ள, அவர்கள் இருக்கும் தைரியத்தில் ஓரளவுக்கு பயம் குறைந்திருந்தது என்னமோ உண்மைதான். ஆனால் இது இப்படியே நிலைத்திருக்கப் போவதில்லையே..? இன்னும் ஒன்றோ இரண்டு நாட்கள் தான். அதன் பின் அவரவர் தத்தம் பாடுகளைப் பார்த்துக் கொண்டு செல்ல, இவர்களும் வழமையான தனிமைக்கு திரும்பத் தானே வேண்டும்..? 

அல்லியும் ரத்னாவும் மீண்டும் அந்த அறைக்குள் வரும்போதும் அந்த துணிகள் அங்கேயே தான் இறைந்து கிடந்தது. நல்ல வேளையாக அறையைப் பூட்டிக்கொண்டு சென்றிருந்ததால் யாரும் அறைக்குள் நுழைந்திருக்கவில்லை. ஆனால் கையால் தொடாமல், அந்தத் துணிகளை எப்படி அப்புறப்படுத்துவது? அப்படியே எடுத்தாலும் அதை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்க முடியாதே? 

“இதையெல்லாம் என்ன பண்றது அல்லி..?” என கலக்கமாய் கேட்டாள் ரத்னா. 

“நா..ன் கிளீன் பண்றேன் ரத்னா… எப்படியோ நான் ஒரு தடவ அத தொட்டுட்டேன் தானே..?” என்றவள், ரத்னா அவளைத் தடுக்க முன்னமே பாய்ந்து அதைத் தொடப்போக, சட்டென்று எழுந்து முகத்தில் அறைந்த அந்தத் துணி ஜன்னல் வழியே காற்றோடு காற்றாக கலந்து செல்வதை துடிக்க மறந்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அல்லியும் ரத்னாவும்..!

                                – அல்லி மலரும்…

    No comments yet.